குலாம் மொஹி-உத்-தின் மிர்ரின் 13 ஏக்கர் ஆப்பிள் தோட்டத்தில் 300 முதல் 400 ஆப்பிள் மரங்கள் உள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் 3,600 பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டியிலும் 20 கிலோ ஆப்பிள்கள் வழக்கமான உற்பத்தியாக இருக்கும். “ஒரு பெட்டியை 1000 ரூபாய் விற்பனை செய்வோம். இப்போது ஒரு பெட்டிக்கு 500 முதல் 700 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது” என்று கூறுகிறார்.
பட்காம் மாவட்டத்தின் க்ரெம்ஷோரா கிராமத்தின் 65 வயது மிர்ரைப்போலவே, காஷ்மீரின் பல ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் கடுமையான வருமான இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். ஆப்பிள் வணிகம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி, சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்ட பிறகு, மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியபிறகு இந்த நிலைதான் நிலவுகிறது.
காஷ்மீர் பொருளாதாரத்தில் இத்தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜம்மு – காஷ்மீரில் 164,742 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. 2018 – 2019 ஆண்டில், 1.8 மில்லியன் (18,82,319) மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டது (காஷ்மீர், தோட்டவளத்துறை இயக்குநரகத்தின் தரவு ) ஜம்மு காஷ்மீர் அரசின் தோட்டவளத்துறை, தோட்டத்துறையில் 3.3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது. 8000 கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை இத்தொழிலின் மதிப்பு இருப்பதாக தோட்டவளத்துறை இயக்குநர் அய்ஜாஸ் அஹ்மத் தெரிவிக்கிறார்.
கூடுதலாக, காஷ்மீர் முழுவதும் தோட்டவேலைக்காக பல பணியாளர்கள் இதை நம்பி வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இங்கிருந்த அரசியல் சூழ்நிலையின் காரணமாக அவர்களும் சென்றுவிட்டார்கள். அக்டோபர் மாதத்தில், உள்ளூர் அல்லாத 11 பேர், பணியாளர்களாகவும், ட்ரக் ஓட்டுநர்களாகவும் இருந்தவர்கள், போராளிகள் என்று நம்பப்படுபவர்களால் கொல்லப்பட்டார்கள். நாட்டுக்குள் காஷ்மீரி ஆப்பிள்களின் போக்குவரத்தை இது மேலும் கடினமாக்கியது.
காஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதை போக்குவரத்துக்கு உட்படுத்துவது அனைவருக்கும் கடினமானது. பொதுப் போக்குவரத்து, பேருந்துகள் மற்றும் பங்கு டாக்சிகள் எல்லாம் இன்னும் இயங்கவில்லை.
ஆப்பிள் தோட்ட உரிமையாளர்களிடம் நேரடி வணிகம் செய்யும் வணிகர்கள், ஒரு பெட்டிக்கு 1,400 முதல் 1,500 ரூபாய் விலை வைத்து டெல்லிக்கு அனுப்புகிறார்கள். அரசின் மூலமாக மண்டி மூலமாக வாங்கும் பிற வணிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், சிலர் அரசுக்கு ஆப்பிள்களை விற்பனை செய்யக்கூட்டது என்னும் போஸ்டர் ஒட்டப்படுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். (இதைச் செய்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை)

பட்காமின் க்ரெம்ஷோரா கிராமத்தில் வசிக்கும் ஆப்பிள் தோட்ட உரிமையாளரான குலாம் மொஹி-உத்-தின்-மிர், வழக்கமான ஆண்டு வருமானத்தில் பாதியைத்தான் சம்பாதித்திருக்கிறார். மாநிலத்தின் தோட்ட வேளாண்மையின் மதிப்பு 8,000 முதல் 10,000 கோடி ரூபாய். காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியிலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதை நம்பியுள்ளது


காஷ்மீரின் மையப்பகுதியில், பட்காம் மாவட்டத்தின் முனிபபி கிராமத்திற்கு அக்டோபர் மாதத்தின் நடுவின் சென்றபோது, 200 குடும்பங்கள் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்களாக இருப்பதை அறிந்துகொண்டேன். ஆப்பிள்கள், பேரிக்காய்கள் ஆகியவற்றை பறித்தவுடன் காஷ்மீரில் இருந்து டெல்லியின் சந்தைகளுக்கு ஜூலை முதல் நவம்பர் வரை அனுப்புகிறார்கள்


எழுத்து வழியாக இல்லாமல் நம்பிக்கையின் பொருட்டு வாய்வழி ஒப்பந்தங்களாக நடைபெறுவதுதான் ஆப்பிள் வணிகம். அதுதான் இங்கு வழக்கம். மார்ச் முதல் ஏப்ரல் வரை, பூக்கும் நிலையை மதிப்பிட்டு, உற்பத்தியின் யூகத்தைக் கணக்கிட்டு ஆப்பிள் தோட்ட உரிமையாளர்களிடம் முன்பணத்தைத் தருகிறார்கள் வணிகர்கள். பழங்களை அறுவடை செய்யும் நேரம் வரும்போது, வணிகர்கள் வந்து வாங்கிக் கொள்கிறார்கள். தற்போது இருக்கும் இந்த சிக்கலான நிலையில், காஷ்மீரின் ஆப்பிள் வணிகம் பாதிப்படைந்துள்ளது


பெயர் சொல்ல விரும்பாத 32 வயதான வணிகர் ஒருவர், “என்னுடைய எல்லா வேலையும் மொபைல் ஃபோனிலேயே முடிந்துவிடும். தோட்டத்துக்கு வரவைப்பதற்காக பணியாட்களை அழைப்பது, பழங்களை வகை பிரிப்பது மற்றும் ஒருங்கிணைக்கும் மையங்களுக்கு பேசுவது, டெல்லியில் இருக்கும் வணிகத் தொடர்புகளுக்குப் பேசுவது, ட்ரக் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்துக்காக பேசுவது என அனைத்து வேலைகளும் தடைபட்டுவிட்டது. தொலைபேசி இணைப்புகள் இல்லாததால், அன்றாட வேலைகள் கூட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்

பணியாளர், தஹிர் அஹ்மெத் பாபா, முந்தைய வருடங்களில் தற்காலிகமான வேலைகளுக்காக இந்தியா முழுவதும் பயணித்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இப்போது காஷ்மீருக்கு வெளியில் செல்வது பாதுகாப்பற்றதாகத் தோன்றுவதாகச் சொல்கிறார்


ஆப்பிள் பறிப்பவர்களும் அதை பெட்டிகளில் அடைத்து அனுப்புபவர்களும் 40 முதல் 50 சதவிகிதம் கூலி குறைவாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். 500 முதல் 600 ரூபாய் சம்பாதித்தவர்கள் ஒரு நாளைக்கு 250 முதல் 300 வரை மட்டுமே சம்பாதிக்கிறார்கள்

அப்துல் ரஷீத், பட்காமில் இருக்கும் தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் ஆகஸ்ட்டில் இருந்தே அவருக்கான ஊதியத்தைப் பெறவில்லை. பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால் அவருக்கு ஊதியமில்லை. “என்னைப் போன்று வேலை செய்து வாழ்பவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? இங்கு இந்த வேலைகளுக்கு வந்தால் சம்பாதிக்கலாம் என்றுதானே வந்தோம்” என்கிறார்.

பட்காமின் ஹுரூ கிராமத்தில் இன்னொரு பள்ளியில் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார் பஷீர் அஹ்மத். அவருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஊதியம் கிடைக்கவில்லை. ஆப்பிள் தோட்டத்துக்கு வந்தால் ஊதியம் கிடைக்கும் என நம்பி வந்திருக்கிறார். “இந்த தொழிலில் எனக்குப் பழக்கமில்லை - பிச்சை எடுப்பதைப்போல இருக்கிறது” என்கிறார். “இந்த மரங்களில் ஏறி பழங்களை பறிப்பது ஆபத்தாக உள்ளது. வேறு வழி இல்லாததால் இந்த வேலைகளைச் செய்கிறோம்” என்கிறார்

பசித் அஹ்மத் பட், டேராடூனில் இருக்கும் கல்லூரியில், கடந்த ஜூன் மாதம் விலங்கியல் பட்டம் பெற்றிருக்கிறார். இந்த நிலையற்ற சூழ்நிலையில் எங்கும் வேலை கிடைக்கவில்லை என்கிறார். அவருடைய அப்பா வைத்திருக்கும் தோட்டத்தில், ஆப்பிள் பறிக்கும் தொழிலாளர்களுக்கு உதவிசெய்து கொண்டிருக்கிறார்

பல காஷ்மீரி வணிகர்கள், டெல்லியில் இருப்பவர்கள் குறைவான விலையில் ஆப்பிள்களைத் தருமாறு வற்புறுத்துவதாகக் கூறுகிறார்கள். அதனால் இவர்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அதிகாரப்பூர்வமான திட்டங்கள் வழியாக உற்பத்தியை மண்டிகள் மூலமாக கொள்முதல் செய்துகொள்வதாக தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். ஸ்ரீநகருக்கு புறநகரில் இருக்கும் மண்டிகளும் மூடப்பட்டுவிட்டன. போராட்டங்களின் காரணமாகவும், (ஊரடங்கு அல்லது ஹட்தால்) போராளிகளின் தாக்குதல் காரணமாகவும், அடையாளம் தெரியாத துப்பாக்கி வைத்திருப்பவர்களின் மீதான பயம் காரணமாகவும் அரசின் மண்டிக்கும் உற்பத்தி செல்வதில்லை
தமிழில்: குணவதி