தெகட்டா கிராமத்தில் உள்ள சதோர் பாராவில் வழக்கமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை கோவிட்-19 ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால், மேற்கு வங்காளத்தின் நடியா மாவட்டத்தில் உள்ள தத்தா பாரா கிராமத்தின் திறந்தவெளி மைதானத்தில் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை செயல்படும் விதமாக தற்காலிக சந்தை திறக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் தெகட்டா பிளாக் 1-ல் உள்ளது. இந்தப் பகுதியை ‘ஹாட்ஸ்பாட்டாக’ ஏப்ரல் மாதம் அறிவித்தது மேற்கு வங்காள அரசு. சந்தையில் எடுத்த புகைப்படங்கள்:

ப்ரோசந்தோ மோண்டல், 48, காலையில் தால் பூரி விற்பனை செய்துவிட்டு மாலையில் உருளைகிழங்கு போண்டா விற்கிறார். ஆனால் ஊரடங்கில் சமைத்த தெருவோர உணவுகளை விற்பனை செய்ய தடை இருப்பதால், இப்போது காய்கறி விற்பனை செய்கிறார். தினசரி ரூ.400 வரை சம்பாதித்து வந்த இவர். தற்போது 150 ரூபாய் சம்பாதிக்கவே கடினப்படுகிறார். “காய்கறி வியாபாரத்தில் எனக்கு அந்தளவிற்கு பழக்கம் இல்லை” என்கிறார்

56 வயதாகும் காய்கறி வியாபாரியான ராம் தத்தா, சாந்தி ஹால்தரிடம் லெமன் டீ வாங்கி குடிக்கிறார். அவரது தினசரி வருமானமான ரூ.300, இப்போது பாதியாக குறைந்துவிட்டது. “முன்பும் எனக்கு அந்தளவிற்கு வியாபாரம் கிடையாது, இப்போது அதைவிட மோசம்” என்கிறார். 48 வயதாகும் சாந்தி ஹல்தர், கடந்த 20 வருடங்களாக ஜால் முறி (மேற்கு வங்காளத்தின் பிரபலமான தெருவோர உணவு) விற்பனை செய்து வருகிறார். ஆனால் தற்போது ஊரடங்கு சமயத்தில் சமைத்த உணவிற்கு தடை இருப்பதால் டீ விற்பனை செய்கிறார். இவரது தினசரி வருமானமும் ரூ.250-300 லிருந்து ரூ.100-120 ஆக குறைந்து போனது

சுகென் (இடது) மற்றும் ப்ரொசெஞ்சித் ஹல்தர் (வலது) இருவரும் சகோதரர்கள். உணவகத்தில் சமையலராக இருந்த சுகென் மாதத்திற்கு ரூ.10,000 சம்பாதித்து வந்தார். ஆனால் தற்போது தினசரி வெறும் ரூ.200 மட்டுமே அவரால் சம்பாதிக்க முடிகிறது. அதுவும் நிரந்தரம் கிடையாது. மீன் பண்ணையில் வேலை செய்யும் ப்ரொசெஞ்சித், பகுதி நேரமாக கொத்தனாருக்கு உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த இரண்டு வேலைகள் மூலமாகவும் அவரால் தினசரி 250 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. ஆனால் எப்படியும் மீன் பண்ணையிலிருந்து வீட்டிற்கு மீன் எடுத்து வந்துவிடுவார். இப்போது ஊரடங்கு காரணமாக அதுவும் நின்றுவிட்டது


இடது: 47 வயதான பிரஃபுல்லா தேப்நாத், கடந்த 23 வருடங்களாக சமபாய் க்ருஷி உன்னயன் சமிதி (ஊரடங்கு காரணமாக இப்போது மூடப்பட்டுள்ளது) சந்தையில் கிடைத்த வேலையை செய்து வந்தார். வாடிக்கையாளர்களின் பொருட்களை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் வாகனத்திலிருந்து கடைகளுக்கு சரக்குகளை சுமந்து செல்வதும் அவருக்கு பணியாக இருந்து வந்தது. இதுமட்டுமல்லாமல் மொத்த சந்தையையும் அவரே பெருக்கி சுத்தப்படுத்துவார். இதற்காக தினசரி ஒவ்வொரு காய்கறி வியாபாரிகளிடமும் இரண்டு ரூபாயும் மற்ற கடைக்காரரகளிடம் ஒரு ரூபாயும் பெறுவார். ஆனால் தற்போது தத்தா பேராவில் உள்ள மைதானத்திற்கு சந்தை மாற்றப்பட்டுள்ளதால், அவருக்கு கிடைத்து வந்த குறைவான வருமானமும் இப்போது பாதியாக குறைந்துள்ளது. இருந்தாலும் சில காய்கறி வியாபாரிகள் தேப்நாத்திற்கு காலை மற்று மதிய உணவை வாங்கி கொடுக்கின்றனர். அவர் கூறுகையில், “நான் சுத்தப்படுத்தாவிட்டால் சந்தை அழுக்காகி விடும். நான் சந்தையை சுத்தம் செய்தால் என்னுடைய பெயரை அனைவரும் தெரிந்து கொள்வார்கள். என்னைப்போல் யாராலும் வேலை செய்ய முடியாது” என்றார். வலது: ஒரு சில மணி நேரங்களே சந்தை திறந்திருப்பதால், விலை குறைவாக கிடைக்கும் என பலரும் கடைசி நேரத்தில் வாங்க வருகிறார்கள். கோகோ ராய், 50, தச்சராக இருக்கிறார். முன்பு தனது வீட்டில் வைத்து சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். இப்போது ஊரடங்கு காரணமாக சந்தைக்கு விற்பனை செய்ய வந்துள்ளார். தினசரி ரூ.400-500 வரை சம்பாதித்து வந்த இவர், இப்போது ரூ.200-250 மட்டுமே வருமானம் ஈட்டுகிறார். “எப்போதும் போலீஸ் ரோந்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டே வெளியே வருவதில்லை. இப்படியிருந்தால் நாங்கள் எப்படி காய்கறி விற்க முடியும்?” என்கிறார்

பரிமள் தலால் கடையிலிருந்து வாடிக்கையாளர்கள் காய்கறி வாங்குகிறார்கள். 51 வயதாகும் பரிமள், கடந்த 30 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறார். இதனால் மற்றவர்களை விட இவர் நம்பிக்கையோடு காணப்படுகிறார். அவர் கூறுகையில், “என்னுடைய வியாபாரத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. என்னுடைய வாடிக்கையாளர்கள் இங்கும் என்னை தேடி வருகிறார்கள்”

முட்டைகள், இஞ்சி, வெங்காயம், மிளகாய் வத்தல், பூண்டு மற்றும் இதர காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார் கார்திக் தேப்நாத். 47 வயதாகும் இவர், கடந்த 30 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறார். “என் வியாபாரம் நன்றாக செல்கிறது. புதிதாக நிறைய நபர்கள் என்னிடம் வாங்க ஆரம்பித்துள்ளார்கள்” என்கிறார்

பலரும் தாங்களே செய்து கொண்ட அவசர முகமூடியை அணிந்துள்ளார்கள். 37 வயதான பப்லு ஷைக்கும் துண்டை பயன்படுத்துகிறார். விவசாயியான இவர் பகுதிநேரமாக காய்கறி விற்கிறார்
![Left: Khakon Pramanick, 45, who sells chickens and sometimes migrates to other states to work at construction sites, is now struggling with a drop from both sources of income. Right: Bharat Halder, 62, was a mason’s helper before he started selling fish around three years ago, hoping to earn more. During the lockdown, his earnings have dropped from around Rs. 250 a day to less that Rs. 200, he says. The supply of fish is also uncertain. “Fish is no longer coming from Andhra Pradesh due to the lockdown,” he says. “So the local pond and river fish [in smaller quantities] are now sold here.”](/media/images/09a-_DSC0045.max-1400x1120.jpg)
![Left: Khakon Pramanick, 45, who sells chickens and sometimes migrates to other states to work at construction sites, is now struggling with a drop from both sources of income. Right: Bharat Halder, 62, was a mason’s helper before he started selling fish around three years ago, hoping to earn more. During the lockdown, his earnings have dropped from around Rs. 250 a day to less that Rs. 200, he says. The supply of fish is also uncertain. “Fish is no longer coming from Andhra Pradesh due to the lockdown,” he says. “So the local pond and river fish [in smaller quantities] are now sold here.”](/media/images/09b-_DSC9999-2.max-1400x1120.jpg)
இடது: காகோன் ப்ராமனிக், 45, கோழிகளை விற்பனை செய்வதோடு சில சமயங்களில் கட்டுமான வேலைகளுக்காக மற்ற மாநிலங்களுக்கும் புலம் பெயரக்கூடியவர். தற்போது இரண்டு வழிகளிலும் வருமானம் தடைபட்டதால் சிரமப்படுகிறார். வலது: பரத் ஹல்தர், 62, கொத்தனாருக்கு உதவியாளராக இருந்தவர், கடந்த மூன்று வருடங்களாக மீன் விற்பனை செய்கிறார். ஊரடங்கு காலத்தில் இவரது தினசரி வருமானம் ரூ.250-லிருந்து ரூ.200-ஆக குறைந்து போனது. இப்போது மீன் வரத்தும் அதிகமாக இல்லை. “ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் இருந்து மீன்கள் வருவதில்லை. ஆகையால் குளத்து மற்றும் ஆற்று மீன்கள் (சிறிய அளவில்) விற்பனை செய்யப்படுகின்றன
![Sridam Mondal, 62, mainly sells bananas and, at times, also a few vegetables. “The sales are very low [during the lockdown],” he says.](/media/images/10-_DSC9985.max-1400x1120.jpg)
ஸ்ரீதம் மோண்டல், 62, பெரும்பாலான சமயங்களில் பழங்களையும் சில சமயம் காய்கறிகளையும் விற்பனை செய்கிறார். “ஊரடங்கு காலத்தில் விற்பனை மிகவும் சுமாராக இருப்பதாக” கூறுகிறார்

சாது ஷைக், 56, மற்ற வியாபாரிகள் அமர்ந்துள்ள இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்துள்ளார். தனக்கு சொந்தமான நிலத்தில் விளைந்த மாம்பழங்களையும் காய்கறிகளையும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்

வெயிலை மறைக்க தற்காலிக கூரையான பிளாஸ்டிக் ஷீட்டை பயன்படுத்தாததால், 58 வயதாகும் சதானந்தா ராய், மைதானத்தின் நடுவில் குடையை வைத்துக் கொண்டு காய்கறி விற்பனை செய்கிறார். காய்கறி விற்பனை செய்வதின் மூலமே அவர் தற்போது வருமானம் ஈட்டி வருகிறார். இதன்மூலம் தினமும் அவருக்கும் 50-100 ரூபாய் கிடைக்கிறது. அவர் கூறுகையில், “சில நாட்கள் விற்பதற்கு காய்கறிகள் இல்லாததால் எல்லா நாட்களும் நான் இங்கு வர மாட்டேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எனக்கு தெரியவில்லை” என்கிறார்
தமிழில்: வி கோபி மாவடிராஜா