ஒன்னுபுரத்தில் மத்தியான காற்றில் கைத்தறிகளை கால்களால் மிதிக்கும்போது ஏற்படும் ஓசைகள் ஒரு லயத்தோடு ஒலித்துக்கொண்டிருந்தன. “ ஐந்து மணிக்கு வந்தீங்கன்னாதான் பட்டுப் புடவை நெய்றதை நீங்க பாக்க முடியும்” என்கிறார் 67 வயதான எம்.கே. கோதண்டபாணி. கச்சாவான, நிறம் இல்லாத நூல்கண்டுகளின் பண்டல்களாக ஒன்னுபுரத்துக்குள்ளே நுழைகிற பொருள்கள் கோதண்டபாணி உள்ளிட்ட நெசவாளர்கள் அதன் மீது வேலை செய்தபிறகு பணம் கொழிக்கும் பட்டுப்புடவைகளாக, வண்ணமயமான ஆறு கெஜம் புடவைகளாக, ஆடம்பரமான கண்ணாடி அலங்காரங்களுக்கு பின்னால், சென்னையிலும் மற்ற சந்தைகளிலும் கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தின் வடக்கு ஆரணி வட்டாரத்தில் உள்ள ஒன்னுபுரம் கிராமத்தில் உள்ள பெரும்பாலான நெசவாளர் குடும்பங்கள் நேரடியாகவோ அல்லது திருமணங்களின் மூலமாகவோ ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன. பெரும்பாலான வீடுகளில் பல தலைமுறைகளைப் பார்த்த ஒரு கைத்தறியாவது இருக்கிறது. “ எங்களது குழந்தைகள் வெளியே போய் படிப்பார்கள். ஆனாலும் நெசவுக் கலையையும் கற்றுக்கொள்வார்கள். இது எங்களது பாரம்பரியம் என்கிறார் 57 வயது தேவசேனாதிபதி. அவரது 16 வயது பையன் ஒரு பளபளப்பான பிங்க் வண்ண பட்டுப்புடவையை முடிப்பதற்கு அவர் உதவிக்கொண்டிருக்கிறார்.
பல்வேறு விதமான கூட்டுறவு அமைப்புகள் அல்லது சிறுதொழில்கள் அங்கே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஆரணி வட்டாரத்தைச் சேர்ந்த நெசவாளர் குடும்பங்கள்தான் உருவாக்கியிருக்கின்றன. அவைதான் சேலைகளை நெசவாளர்களிடமிருந்து வாங்குகின்றன. பெரிய கம்பெனிகளுக்கும் காட்சியகங்களுக்கும் அவற்றை விற்பனை செய்கின்றன. அந்த வாடிக்கையாளர்கள் மக்கள் எந்தவிதமான டிஸைன்களை விரும்புகிறார்கள் என்று கவனித்து அவற்றை நெசவாளர்களுக்குத் தந்து அதே டிஸைன்களில் சேலைகளைக் கோருகின்றனர். பாரம்பரியமான டிஸைன்களை விட நவீனமான டிஸைன்கள்தான் அதிகமாக தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து கேட்கப்படுகிறது.
இதற்கு ஏற்ப நெசவாளர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. சரஸ்வதி ஈஸ்வரன் பாவு புனைதலைச் செய்கிறார். பொதுவாக இது பெண்களால் செய்யப்படுகிறது. பெண்கள்தான் 4500 முதல் 4800 வரையான தனித் தனியான நூல்களை கைத்தறியில் அவை சேலையாக செய்யப்படுவதற்கு வசதியாக அவற்றை நிறுவுகின்றனர். குறுக்கும் நெடுக்குமாக நூல்களைப்போட்டு சேலையை நெய்வதற்கு வசதியாக தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு தறிக்கு ரூபாய் 250 என்ற கணக்கில் அவரை வேலைக்கு வைத்துக்கொள்கிற கூட்டுறவு அமைப்புகள் அல்லது நெசவாளர் குடும்பங்கள் தரும். ஒரு மாதத்தில் அத்தகைய வேலைகள் ஆறு முதல் எட்டு வரை சரஸ்வதிக்கு கிடைக்கிறது.
சாதாரணமான கலைவடிவங்களை நெய்வதற்கு பொதுவாக நெசவாளர்கள் நான்கு புடவைகளுக்கு ரூபாய் 2500 சம்பாதிப்பார்கள். “ நாங்கள் எல்லா நாட்களிலும் வேலை செய்வோம். ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி நாள்தான் எங்களுக்கு விடுமுறை” என்கிறார் சரஸ்வதி கங்காதரன். தறியிலிருந்து கண்ணை எடுக்காமல் அவர் பேசுகிறார். “ அன்னக்கி நாங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை எங்களுக்குக்கொடுத்த கடவுளுக்கு மரியாதை செய்வோம்.” என்கிறார் சரஸ்வதி. மற்ற நெசவாளர்கள் போலவே கூட்டுறவுகளிலிருந்து சேலைகளுக்கான ஆர்ட்ர்களை அவர் பெறுகிறார். அவர் ஒரு மாதத்தில் 15 முதல் 20 சேலைகள் வரை நெசவு செய்கிறார். சுமார் 10 ஆயிரம் சம்பாதிக்கிறார்.
“இதுதான் எங்களுக்கு சோறு போடுகிறது . இதை நாங்கள் விட்டுவிட விரும்பவில்லை. ஒரு நாள் நாங்கள் ஓய்வெடுத்தாலும் அது வருமான நஷ்டமாக ஆகிவிடும் என்றார். ஜெகதீசன் கோபால். அவர் தங்கச் சரிகை கொண்ட கனமான ஒரு சேலையை நெய்து கொண்டிருக்கிறார்.
இந்த போட்டோ கட்டுரையின் வேறுபட்ட வடிவம் தி பஞ்ச் இதழில் 2018 பிப்ரவரி 28 இல் வெளியானது.

பாலகிருஷ்ண குப்புசாமி பருத்தி நூலை ஒரு சர்க்காவில் நூற்கண்டுகளாக மாற்றுகிறார்.


இடது: ஒரு கிராப் சீட்டில் ஓட்டைகள் போட்டும் வரைந்தும் சேலைகளில் போடவேண்டிய கலைவடிவங்களை உருவாக்குவார்கள். கைத்தறி நெசவாளர்களுக்காக இத்தகைய வேலைகளைச் செய்து தருபவர்கள் சிலரே உள்ளனர். அவர்களில் வெங்கடேசன் பெருமாளும் ஒருவர். அவரது அப்பாவிடமிருந்து அவர் இதனை கற்றுள்ளார். பல இடங்களில் தற்போது இந்தப் பணியை கணினியும் பிரிண்டிங்கும் செய்து முடிக்கிற நவீனம் வந்துவிட்டது. ஒன்னுபுரத்தில் உள்ள நெசவாளர்களின் சமூகத்தில் சின்ன வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.


60 ஆண்டுகளுக்கு மேலாக சாகுந்தலா சர்க்காவில் நூல் நூற்கிறார். தற்போது அவருக்கு 80 வயதிருக்கலாம்.


இடது: நூல்கண்டுகளை தயாரிக்கும் சிறு தொழிற்சாலையில் சாந்தி துரைசாமி. இங்கே இயந்திரங்கள் 90 டெசிபல் அளவுக்கு சப்தம் ஏற்படுத்துகின்றன. வலது: நூல்கண்டு தொழிற்சாலையில் இன்னொரு தொழிலாளி நூற்கும் சக்கரத்தை பராமரிக்கிறார்.


வலது- வண்ணம் தீட்டுவதற்கு முன்பாக நூலை தண்ணீரில் ஊறவைக்கிறார் ஒரு தொழிலாளி. நூல்களின் நீளத்தைப் பொறுத்து அவை தனியாகப் பிரிக்கப்பட்டு சேலை செய்வதற்குத் தரப்படுகின்றன, அடர்த்தியான பிங்க், கிளிப் பச்சை உள்ளிட்ட அடர்த்தியான வண்ணங்கள் அதற்குப் பூசப்படுகின்றன. வண்ணம் பூசும் பணிக்கு 2, 3 நாட்கள் ஆகும். வண்ணம் பூசுபவர்கள் மூன்றுபேர் குழுவாக வழக்கமாக இருப்பார்கள். அப்படித்தான் அவர்கள் கூலிக்கு அமர்த்தப்படுவார்கள். ஆளுக்கு 200 ரூபாய் தினமும் கூலியாக கிடைக்கிறது. வலது- அருணாச்சலம் பெருமாள் நூலுக்கு வண்ணம் தீட்டுகிறார். 58 வயதான அவர், 12 வயது முதலாக இந்தத் தொழிலில் இருக்கிறார்.

ஒரு சேலை நெய்வதற்கு நெடுக்காகவும் குறுக்காகவும் நூல்களை அமைப்பார்கள். நெடுக்குவசத்தில் இருக்கும் நூல்களை எம்.கே. தண்டபாணி கைத்தறியில் நெய்வதற்கு வசதியாக இருக்கும் வகையில் அமைத்துக்கொண்டிருக்கிறார்.


மனோன்மணி புண்ணியகோடியும் அவரது குடும்பத்தினரும் அதிகாலையிலேயே கைத்தறிக்குத் தேவையான நெடுக்குவசத்தில் உள்ள நூல்களை அமைத்துகொண்டிருக்கின்றனர். அரிசித் தண்ணீரால் தறி கழுவிவிடப்பட்டிருக்கிறது. நூல்களைத் தனியாகப் பிரிப்பதை வேகமாகவும் சரியாகவும் செய்வதற்கு அரிசித் தண்ணீர் உதவுகிறது. நூல்களின் எண்ணிக்கையை அறிய அவை தனியாக பிரிக்கப்படுகிறது.


இடது- சரஸ்வதி ஈஸ்வரன் தறியில் நூலைப் பொறுத்துகிறார். இதை பாரம்பரியமாக ‘பாவு புனைதல்’ என்பார்கள். பொதுவாக இதைப் பெண்கள் செய்கிறார்கள். 4500 முதல் 4500 நூல் இழைகளை பெண்கள் கையாலேயே தறியில் சுற்றுவார்கள். வலது- ஜெயகந்த வீரபத்திரன் (45) கலைவடிவங்கள் இல்லாத சேலையை நெய்கிறார். அதன் பிறகு அதன் எம்ப்ராய்டரி போடப்படும். பெரும்பாலான வீடுகளில் கைத்தறிகள் தரையில் இருக்கின்றன. காலில் மிதிப்பதற்கான பெடல்களுக்காக ஒரு பள்ளம் தரையில் இருக்கிறது.


இடது- சிக்கலான டிஸைன்களை நெய்வதற்காக நிர்மலா ஒன்றுக்கும் மேற்பட்ட பல ஷெட்டில்களைப் பயன்படுத்துகிறார். வலது- மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார் தேவசேனாதிபதி ராஜகோபால்.

முழுமையாக சரிகையால் செய்யப்பட்ட சேலையை நெசவு செய்கிறார் ஜெகதீசன் கோபால். தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் சரிகையும் பட்டு நூலும் கலந்த இத்தகைய சேலைகள் இரண்டு முதல் ஐந்துகிலோ எடை இருக்கும்,

ஒரு சேலையை நெய்து முடித்துள்ள தேவசேனாதிபதி ராஜகோபால் அதனை தறியிலிருந்து எடுக்கிறார். அவரது மகன் பக்கத்தில் உள்ள ஆரணி நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அப்பாவுக்கு உதவுகிறார்.

“இதுதான் எங்களுக்கு சோறு போடுகிறது . இதை நாங்கள் விட்டுவிட விரும்பவில்லை. ஒரு நாள் நாங்கள் ஓய்வெடுத்தாலும் அது வருமான நஷ்டமாக ஆகிவிடும் என்றார். ஜெகதீசன் கோபால்.

சுந்தரம் கங்காதரனும் அவரது மகள் சுமதியும் ( போட்டோவில் மகள் இல்லை) நெசவு செய்தே வாழ்கிறார்கள்.


இடது- நரசிம்மன் தனக்கோடி (73) அரை நூற்றாண்டுக்கு மேலாக நெசவு செய்கிறார். இன்னமும் அதைத் தொடர விரும்புகிறார். வலது- “நாங்கள் வாரத்தில் எல்லா நாட்களும் வேலை செய்கிறோம்” என்கிறார் சரஸ்வதி கங்காதரன்.

தேவசேனாதிபதி கோதண்டபாணியும் அவரது மனைவி கோமதியும் நெசவு செய்து முடித்த சேலையை ஒரு பெட்டிக்குள் வைக்கின்றனர். சுத்தமான முறையில் மடித்து வைக்கப்பட்டதாக, பெட்டிகளில் போட்டு அடைத்ததாக, நெசவாளர்கள் தங்களது கூட்டுறவு அமைப்புகளுக்கு சேலைகளை அனுப்பவேண்டும்.
தமிழில் : த. நீதிராஜன்