ஒருநாள் காலையில், ஒரு மரத்தடியில் பாதி கிழிந்த பிளாஸ்டிக் பாயின் மீது அனு அமர்ந்திருந்தார். தலை கலைந்திருந்தது. முகம் வெளுத்திருந்தது. கடந்து செல்லும் மக்கள் தூர இருந்து அவருடன் பேசுகின்றனர். மாடுகள் அருகே ஓய்வெடுக்கின்றன. தீவனம் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது.
“மழை பெய்தாலும் குடையோடு நான் மரத்தடியில்தான் அமர வேண்டும். என் வீட்டுக்குள் போக முடியாது. என்னுடைய நிழல் கூட யார் மீதும் பட்டுவிடக் கூடாது. கடவுளின் கோபத்துக்கு நாங்கள் ஆளாக முடியாது,” என்கிறார் அனு.
அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் திறந்தவெளியில் இருக்கும் மரம்தான் ‘மூன்று’ நாட்களுக்கு அவரது வீடு. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கும்போது இங்கு வந்துவிடுவார்.
“என்னுடைய மகள் ஒரு தட்டில் உணவு வைத்து சென்றுவிடுவாள்,” என்கிறார் அனு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவருக்கென தனியாக பாத்திரங்களை இந்த ஒதுக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்துகிறார். “சந்தோஷத்துக்காக இங்கு ஓய்வெடுக்க நான் வரவில்லை. வேலை (வீட்டில்) பார்க்க விரும்புகிறேன். எனினும் நம் கலாசாரத்துக்கு மதிப்பு கொடுத்து இங்கு தங்குகிறேன். எங்கள் நிலத்தில் அதிகமாக வேலை இருக்கும்போது நானும் சென்று வேலை பார்க்கிறேன்.” அனுவின் குடும்பம் அவர்களின் 1.5 ஏக்கர் நிலத்தில் ராகி விளைவிக்கிறார்கள்.
இத்தகைய தனிமை நாட்களில் அனுவே அவரின் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பழக்கத்தை அவர் மட்டும் பின்பற்றவில்லை. அவரின் 19 மற்றும் 17 வயது மகள்களும் (இன்னொரு 21 வயது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது) இதையேதான் செய்கிறார்கள். அவரின் கிராமத்தில் இருக்கும் 25 காடுகொல்லா சமூக குடும்பங்களின் பெண்களும் இதே போல்தான் தனிமைப்பட வேண்டும்.
குழந்தை பெற்ற பெண்களும் கூட கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அனு இருக்கும் மரத்தடிக்கு அருகே ஆறு குடிசைகள் சற்று விலகி அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில்தான் பிரசவமான பெண்களும் அவர்தம் குழந்தைகளும் இருக்கின்றனர். பிற நேரங்களில் அவை காலியாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் மரத்தடிகளில்தான் தனித்திருக்க வேண்டும்.
குடிசைகளும் மரங்களும் கிராமத்துக்கு பின்னால் இருக்கின்றன. கர்நாடகாவின் அரலலசண்ட்ரா கிராமத்துக்கு வடக்கு பக்கம்.
தனிமையில் இருக்கும் மாதவிடாய் கால பெண்கள் அவர்களின் இயற்கை தேவைகளுக்கு புதர்களையும் காலியாக இருக்கும் குடிசைகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அல்லது அண்டை வீட்டுக்காரர்கள் குவளையிலோ வாளியிலோ தண்ணீர் கொடுப்பார்கள்.
குழந்தை பிறந்த பெண்கள் தனிமை குடிசைகளில் குறைந்தது ஒரு மாதமேனும் தங்க வேண்டும். அவர்களில் ஒருவர் பூஜா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). வணிகவியல் பட்டப்படிப்பு படித்து 19 வயதில் திருமணமானவர். பிப்ரவரி 2021-ல் 70 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் பெங்களூருவின் தனியார் மருத்துவமனையில் அவர் குழந்தை பெற்றார். “எனக்கு அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்யப்பட்டது. என்னுடைய கணவரின் வீட்டாரும் கணவரும் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் சடங்குபடி அவர்கள் முதல் ஒரு மாதத்துக்கு குழந்தையை தொட முடியாது. என்னுடைய பெற்றோரின் கிராமத்துக்கு (அரலலசண்ட்ராவிலுள்ள காடுகொல்லா கிராமம். அவரும் கணவரும் அதே மாவட்டத்திலிருக்கும் வேறொரு கிராமத்தில் வசிக்கின்றனர்) சென்றபிறகு 15 நாட்களுக்கு நான் குடிசையில் தங்கி இருந்தேன். பிறகு இந்த குடிசைக்கு வந்தேன்,” என்கிறார் பூஜா அவரின் பெற்றோர் வீட்டுக்கு முன்னால் இருக்கும் கொட்டகையை காட்டி. வெளியே 30 நாட்கள் கழித்தபிறகுதான் அவர் குழந்தையுடன் வீட்டுக்கு சென்றார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குழந்தை அழுகிறது. குழந்தையை தாயின் சேலை கொண்டு உருவாக்கியிருக்கும் தொட்டிலில் அவர் வைக்கிறார். “அவள் (பூஜா) தனி குடிசையில் 15 நாட்களுக்கு இருந்தாள். எங்களின் கிராமத்தில் நாங்கள் கடுமை காட்டுவதில்லை. பிற (காடுகொல்லா) கிராமங்களில், பிரசவத்துக்கு பிறகு தாய் குழந்தையுடன் குடிசையில் இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கியிருக்க வேண்டும்,” என்கிறார் பூஜாவின் தாயான 40 வயது கங்கம்மா. ஆடுகளை வளர்க்கும் குடும்பம், அவர்களின் ஒரு ஏக்கர் நிலத்தில் ராகியை விளைவிக்கிறது.
பூஜா அவரின் தாய் பேசுவதை கவனிக்கிறார். அவரின் குழந்தை தொட்டிலில் தூங்கிவிட்டது. “எனக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. என்னுடைய தாய்தான் எனக்கு வழிகாட்டி. வெளியே வெயில் அதிகமாக இருக்கிறது,” என்கிறார் அவர். 22 வயதாகும் அவர் முதுகலை படிக்க விரும்புகிறார். அவரின் கணவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். ”அவரும் இந்த சடங்கை நான் பின்பற்ற விரும்புகிறார்,” என்கிறார் அவர். “அனைவரும் அதை நான் செய்ய விரும்புகின்றனர். நான் இங்கு இருக்க விரும்பவில்லை. ஆனால் நான் சண்டையிடவில்லை. நாங்கள் அனைவரும் இதைதான் செய்ய வேண்டும்.”
*****
இந்த பழக்கம் பிற காடுகொல்லா கிராமங்களிலும் இருக்கிறது. இந்த பகுதிகள் கொல்லாராடொட்டி அல்லது கொல்லாரஹட்டி என்றும் அழைக்கப்படுகிறது. காடுகொல்லாக்கள் வரலாற்றில் மேய்ச்சல் பழங்குடிகளாக இருந்தவர்கள். கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இடம்பெற்றிருக்கிறார்கள் (அட்டவணை பழங்குடிகளாக தங்களை மாற்ற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்). கர்நாடகாவில் அவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து (பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நலத்துறையை சேர்ந்த பி.பி.பசவராஜுவின் கணக்குப்படி) 10 லட்சம் வரை ( கர்நாடகாவின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் உறுப்பினர்படி) இருக்கிறது. அச்சமூகம் பிரதானமாக மாநிலத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளின் 10 மாவட்டங்களில் வாழ்வதாக பசவராஜு குறிப்பிடுகிறார்.
காடுகொல்லா கிராமத்தில் இருக்கும் பூஜாவின் குடிசையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹோசாஹள்ளி கிராமத்தில் ஜெயாம்மா அவரின் வீட்டுக்கு முன்னால் இருந்த மரத்தில் சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவரின் மாதவிடாய் காலத்துக்கான முதல் நாள் அது. சற்று பின்னால் ஒரு திறந்த சாக்கடை ஓடுகிறது. ஒரு ஸ்டீல் தட்டும் குவளையும் தரையில் அவருக்கு அருகே வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதத்த்தின் மூன்று இரவுகளும் அவர் மரத்தடியில்தான் தூங்குகிறர். மழை பெய்தாலும் அங்குதான் இருப்பதாக அவர் அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். சமையல் வேலைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன. எனினும் அருகே இருக்கும் திறந்தவெளிகளில் ஆடுகள் மேய்க்கும் வேலையை தொடர்ந்து செய்கிறார்.
“வெளியே உறங்க யார் விரும்புவார்கள்?” என கேட்கிறார். “ஆனாலும் எல்லாரும் அதை செய்ய காரணம், கடவுள் (காடுகொல்லாக்கள் கிருஷ்ணனை வழிபடுபவர்கள்) அப்படி விரும்புகிறார்,” என்கிறார் அவர். “ நேற்று மழை பெய்தபோது நான் ஒரு தார்பாலீனை பிடித்துக் கொண்டு இங்கு அமர்ந்திருந்தேன்.”
ஜெயாம்மாவும் அவரின் கணவரும் ஆடு வளர்க்கின்றனர். 20களில் இருக்கும் அவர்களின் இரண்டு மகன்களும் பெங்களூருவில் இருக்கும் ஆலைகளில் வேலை பார்க்கின்றனர். “அவர்களுக்கு கல்யாணம் ஆனால் அவர்களின் மனைவிகளும் இந்த நேரம் வரும்போது வெளியில்தான் தூங்க வேண்டும். ஏனெனில் நாங்கள் தொடர்ந்து இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம்,” என்கிறார் அவர். “நான் விரும்பவில்லை என்பதால் இந்த விஷயங்கள் மாறாது. என்னுடைய கணவரும் கிராமத்தில் வசிக்கும் பிறரும் இந்த பழக்கத்தை நிறுத்த ஒப்புக் கொண்டால், நான் இந்த நாட்களில் வீட்டிலேயே தங்கத் தொடங்கிவிடுவேன்.”
ஹோசஹள்ளி கிராமத்தின் காடுகொல்லா குக்கிராமத்தின் பிற பெண்களும் இதையேதான் செய்ய வேண்டும். “என்னுடைய கிராமத்தில், மாதவிடாய் நேரத்தில் பெண்கள் முதல் மூன்று இரவுகள் வெளியே தங்குவார்கள். நான்காம் நாள் காலையில் திரும்பி விடுவார்கள்,” என்கிறார் 35 வயது லீலா எம்.என் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அங்கன்வாடி பணியாளராக இருக்கிறார். அவரும் மாதவிடாய் நேரத்தில் வெளியில்தான் தங்குகிறார். “இது ஒரு பழக்கமாகி விட்டது. கடவுளிடம் இருக்கும் அச்சத்தால் இந்த பழக்கத்தை நிறுத்த யாரும் விரும்புவதில்லை,” என்கிறார் அவர். இரவு நேரத்தில் குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண் - சகோதரரோ, தாத்தாவோ, கணவரோ - வீட்டிலிருந்தபடி அல்லது சற்று தூர இருந்தபடி கண்காணித்துக் கொள்வார்கள்,” என்கிறார் லீலா. “நான்காம் நாளிலும் மாதவிடாய் இருந்தால் பெண்கள் வீட்டில் இருக்கலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். மனைவிகள் கணவர்களுடன் இருக்க முடியாது. ஆனால் வீட்டு வேலைகளை நாங்கள் செய்வோம்.”
ஒவ்வொரு மாதமும் வெளியே தங்குவது காடுகொல்லா கிராமப் பெண்களுக்கு வழக்கமான தண்டனையாகிவிட்டாலும் மாதவிடாய் காலத்திலும் பிரசவத்துக்கு பிறகும் பெண்களை தனிமைப்படுத்துவது சட்டப்படி குற்றம் ஆகும். கர்நாடகாவின் மனிதமற்ற தீயபழக்கங்கள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டம் 2017 (ஜனவரி 4, 2020ல் அரசால் குறிப்பிடப்பட்டது) 16 பழக்கங்களை தடை செய்கிறது. பெண்களுக்கு எதிரான பழக்கங்களான கட்டாய தனிமைப்படுத்துதல், கிராமத்துக்குள் நுழைவதை தடுத்தல், மாதவிடாய் மற்றும் பிரசவமான பெண்களை தனிமைபடுத்துதல் போன்றவையும் அவற்றில் அடக்கம். மீறுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய 1-லிருந்து 7 வருட சிறை தண்டனை கிடைக்கும்.
ஆனால் காடுகொல்லா சமூகத்தில் இருக்கும் சுகாதார மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும் கூட இப்பழக்கத்தை தொடர்வதிலிருந்து சட்டம் தடுக்கவில்லை. ஹோசஹள்ளியை சேர்ந்த சுகாதார பணியாளரான டி.ஷார்தாம்மா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் வெளியில்தான் தங்குகிறார்.
“கிராமத்தில் இருக்கும் எல்லாரும் இதை செய்கிறார்கள். நான் வளர்ந்த சித்ரதுர்காவில் (அருகாமை மாவட்டம்), இந்த பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள். ஏனெனில் பெண்கள் வெளியே தங்குவது பாதுகாப்பு இல்லை என நினைத்தார்கள். இங்கு இந்த பழக்கத்தை கடைபிடிக்கவில்லையெனில் கடவுள் சபித்துவிடுவார் என நினைக்கிறார்கள். இந்த சமூகத்தில் இருப்பதால் நானும் இதை செய்கிறேன். தனியாக என்னால் எதையும் மாற்றிவிட முடியாது. மேலும் வெளியே தங்குவதால் இதுவரை எந்த பிரச்சினையும் எனக்கு வந்ததில்லை,” என்கிறார் 40 வயது ஷார்தாம்மா.
இந்த பழக்கங்கள் அரசு பணியாளர்களின் வீட்டிலும் இருக்கிறது. ஹோசஹள்ளி பஞ்சாயத்தில் வேலை பார்க்கும் 43 வயது மோகன் எஸ். (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வீட்டிலும் இருக்கிறது. முதுகலை பட்டங்களை பெற்றிருக்கும் அவரின் சகோதரரின் மனைவி டிசம்பர் 2020ல் குழந்தை பெற்றபோது, அவர்களுக்கென கட்டப்பட்ட குடிசையில் குழந்தையுடன் இரண்டு மாதங்கள் தங்க வைக்கப்பட்டார். “குறிப்பிட்ட காலத்தை வெளியே கழித்தபிறகுதான் அவர்கள் வீட்டுக்குள் வந்தனர்,” என்கிறார் மோகன். அவரின் 32 வயது மனைவி பாரதியும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) தலையாட்டி ஆமோதிக்கிறார். “மாதவிடாய் காலத்தில் நானும் எந்த பொருளையும் தொடுவதில்லை. அரசு இந்த அமைப்பை மாற்ற நான் விரும்பவில்லை. எங்களுக்கென ஒரு அறையை வேண்டுமானால் அவர்கள் கட்டிக் கொடுக்கலாம். மரத்தடியில் உறங்குவதற்கு பதிலாக அறையை பயன்படுத்திக் கொள்வோம்.”
*****
நாளடைவில் இத்தகைய அறைகள் கட்டுவதற்கான முயற்சிகளும் நடந்தன. ஜூலை 10, 2009-ல் வந்த செய்திகளின்படி ஒவ்வொரு காடுகொல்லா கிராமத்துக்கு வெளியேயும் 10 மாதவிடாய் பெண்கள் தங்கும் வகையில் ஒரு மகிளா பவன் கட்ட கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு பல காலத்துக்கு முன்னமே ஜெயாம்மாவின் குக்கிராமத்தில் உள்ளூர் பஞ்சாயத்து, சிமெண்ட்டால் ஒரு அறையை கட்டியிருக்கிறது. குனிகல் தாலுகாவின் பஞ்சாயத்து உறுப்பினர் கிருஷ்ணப்பா ஜி.டி, அந்த அறை 50 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டுவிட்டதாக சொல்கிறார். கிராமத்தின் பெண்கள் மரத்தடிகளில் உறங்குவதற்கு பதிலாக கொஞ்ச காலம் அந்த அறையை பயன்படுத்தினார்கள். இப்போது அந்த அறை கொடிகள் பரவி பாழடைந்து கிடக்கிறது.
இதேபோல அரலலசண்ட்ராவில் இருக்கும் பாதி உடைந்த அறை பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. “நான்கைந்து வருடங்களுக்கு முன் சில மாவட்ட அதிகாரிகளும் பஞ்சாயத்து உறுப்பினர்களும் எங்கள் கிராமத்துக்கு வந்தனர்,” என நினைவுகூர்கிறார் அனு. “வெளியே தங்கியிருந்த (மாதவிடாய்) பெண்களை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். வெளியே தங்குவது பாதுகாப்பு கிடையாது என்றார்கள். அறையை விட்டு நாங்கள் வெளியேறிய பிறகு அவர்கள் கிளம்பினார்கள். பிறகு அனைவரும் அறைக்கு திரும்பி விட்டோம். சில மாதங்கள் கழித்து அவர்கள் திரும்ப வந்தார்கள். மாதவிடாய் காலத்தில் வீடுகளிலேயே தங்குமாறு சொல்லி விட்டு அறையை இடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அந்த அறை எங்களுக்கு நன்றாக பயன்பட்டது. குறைந்தபட்சம் எந்த பிரச்சினையும் இல்லாமல் கழிவறையை எங்களால் பயன்படுத்த முடிந்தது.”
2014ம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுதுறை அமைச்சராக இருந்த உமாஸ்ரீ காடுகொல்லா சமூகத்தின் இந்த நம்பிக்கைகளுக்கு எதிராக பேச முயன்றார். அதன் அடையாளமாக டி.ஹோசஹள்ளியின் காடுகொல்லா கிராமத்துக்கு வெளியே மாதவிடாய் பெண்களுக்கென கட்டப்பட்டிருந்த அறையை உடைத்தார். “உமாஸ்ரீ மேடம் மாதவிடாய் காலத்தில் வீட்டிலேயே இருக்குமாறு எங்கள் பெண்களை கேட்டுக் கொண்டார். அவர் கிராமத்துக்கு வரும்போது மட்டும் சிலர் செய்தனர். ஆனால் யாரும் பழக்கத்தை நிறுத்தவில்லை. காவலர்கள் மற்றும் கிராம கணக்காளருடன் அவர் வந்து கதவையும் அறையின் சில பகுதிகளையும் உடைத்தார். எங்களின் பகுதியை முன்னேற்றுவதாக வாக்கு கொடுத்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை,” என்கிறார் தாலுகா பஞ்சாயத்து உறுப்பினரான கிருஷ்ணப்பா ஜி.டி.
எனினும் டி.ஹோஸஹள்ளி கிராமப் பஞ்சாயத்து தலைவராக பிப்ரவரி 2021-ல் பதவியேற்ற தனலஷ்மி கே.எம் (காடுகொல்லா சமூகத்தை சேராதவர்) அறைகள் கட்டும் யோசனையை பரிசீலிக்கிறார். “பெண்களுக்கு முக்கியமான காலகட்டங்களான பிரசவத்துக்கு பிந்தைய காலம் மற்றும் மாதவிடாய் காலம் ஆகியவற்றில் வீட்டுக்கு வெளியே தங்கும் அளவுக்கு பெண்கள் குறைந்து போயிருப்பதை பார்க்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது,” என்கிறார் அவர். ”அவர்களுக்கென குறைந்தபட்சம் தனி வீடுகளையேனும் கட்ட நான் முயற்சிப்பேன். இளைய, படித்த பெண்கள் கூட இதை தடுக்க விரும்பாததுதான் இதிலிருக்கும் சோகம். மாற விரும்பாதவர்களிடம் நான் எப்படி மாற்றத்தை கொண்டு வருவது?”
அறைகள் முதலியவற்றை பற்றிய விவாதங்கள் நிறுத்தப்பட வேண்டும். “தனி அறைகள் பெண்களுக்கு உதவ முடிந்தாலும் கூட, இந்த பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்,” என்கிறார் மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை சேர்ந்த பி.பி.பசவராஜு. “காடுகொல்லா பெண்களிடம் நாங்கள் பேசி இந்த மூட பழக்கவழக்கங்களை நிறுத்துமாறு சொல்கிறோம். இதற்கு முன்னால் விழிப்புணர்வு பிரசாரங்கள் கூட செய்திருக்கிறோம்.”
மாதவிடாய் பெண்களுக்கென தனி அறைகள் கட்டுவது தீர்வாகாது என உறுதியாக கூறுகிறார் மத்திய காப்பு காவல் படையிலிருந்து ஓய்வு பெற்ற காவல் பொது ஆய்வாளரான கே.ஆர்கேஷ். அரலலசண்ட்ரா கிராமத்துக்கு அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர். “தனி அறைகள் இந்த வழக்கத்தை நியாயப்படுத்துவதாகவே அமையும். பெண்கள் அசுத்தமானவர்கள் என்கிற அடிப்படை கருத்து எந்த நிலையிலும் ஏற்கப்படக் கூடாது. அழித்தொழிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
“இம்மாதிரியான சடங்குமுறைகள் குரூரமானவை,” என்னும் அவர், “ஆனால் சமூக அழுத்தங்களால் பெண்கள் ஒருங்கிணைந்து போராட முடிவதில்லை. சமூக புரட்சிக்கு பின்தான் சதி முறை ஒழிக்கப்பட்டது. மாற்றத்தை கொண்டு வருவதற்கான உறுதி அப்போது இருந்தது. தேர்தல் அரசியலால் நம் அரசியல்வாதிகள் இந்த விஷயங்களை தொடக் கூட விரும்புவதில்லை. அரசியல்வாதிகள், சமூகப் பணியாளர்கள் மற்றும் அச்சமூகத்தை சேர்ந்த பெண்கள் சேர்ந்து இணைந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்,” என்கிறார்.
*****
அதுவரை, கடவுளின் கோபம் பற்றிய அச்சம் மற்றும் மூட நம்பிக்கைகள் புரையோடி இந்த பழக்கத்தை தக்க வைக்கும்.
“இந்த பழக்கத்தை தொடரவில்லை எனில், எங்களுக்கு மோசமான விஷயங்கள் நடக்கும்,” என்கிறார் அரலலசண்ட்ராவை சேர்ந்த அனு. “பல வருடங்களுக்கு முன்னால் தும்கூரில் ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் வெளியே தங்க முடியாது என சொன்னதால் அவரது வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்ட கதையை கேட்டிருக்கிறோம்.”
”இப்படிதான் எங்கள் கடவுள் நாங்கள் வாழ விரும்புகிறார். அடிபணிய மறுத்தால் விளைவுகளை நாங்கள் சந்திக்க வேண்டி வரும்,” என்கிறார் ஹோஸஹள்ளி கிராமப் பஞ்சாயத்தின் மோஹன் எஸ். இந்த பழக்கம் நிறுத்தப்பட்டால் என தொடரும் அவர், “ஆடுகளுக்கு நோய்கள் அதிகரிக்கும். செம்மறிகள் இறக்கும். எங்களுக்கு பல பிரச்சினைகள் நேரும். மக்களுக்கு பல நஷ்டங்கள் ஏற்படும். இந்த பழக்கம் நிறுத்தப்படக் கூடாது. நிலை மாறுவதில் எங்களுக்கு விருப்பமில்லை,” என்கிறார்.
“மண்டியா மாவட்டத்தில் ஒரு பெண் அவரின் மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்துவிட்டது,” என்கிறார் சாதனூர் கிராமத்தின் காடுகொல்லா குக்கிராமத்தை சேர்ந்த கிரிஜாம்மா. இங்கு அரசால் கட்டப்பட்ட, கழிவறையுடனான ஓர் அறையை மாதவிடாய் கால பெண்கள் பயன்படுத்துகின்றனர். கிராமத்திலிருந்து ஒரு சிறிய சந்து வழியாக அறையை அடைந்துவிட முடியும்.
கீதா யாதவ், மூன்று வருடங்களுக்கு முன், அவரின் முதல் மாதவிடாய் நேரத்தில் இங்கு தனியாக தங்க பயந்ததை நினைவுகூர்கிறார். ”நான் அழுதேன். என்னை அனுப்ப வேண்டாம் என அம்மாவிடம் மன்றாடினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இப்போது, அங்கு பெண்கள் (பிற மாதவிடாய் கால பெண்கள்) யாராவது துணைக்கு இருக்கின்றனர். எனவே நிம்மதியாக என்னால் தூங்க முடிகிறது. மாதவிடாய் காலங்களில் வகுப்புகளுக்கு சென்றுவிட்டு திரும்புகையில் நேராக அறைக்கு சென்று விடுவேன். படுக்கைகள் இருந்தால் நன்றாக இருக்கும். தரையில் தூங்க வேண்டியிருக்காது,” என்கிறார் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது கீதா. “எதிர்காலத்தில் பெரிய நகரங்களின் வேலை பார்க்க நான் சென்றாலும் தனி அறையில் தங்குவேன். எதையும் தொட மாட்டேன். இந்த பழக்கத்தை தொடர்வதை நான் உறுதிபடுத்துவேன். எங்களின் கிராமத்தில் இந்த பழக்கம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது,” என்கிறார் அவர்.
16 வயது கீதா இப்பழக்கத்தை தொடர்பவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கையில், தனிமை நாட்களில் ஓய்வெடுக்கும் வாய்ப்பு கிடைப்பதால் பெண்களுக்கு அது குறித்து புகார் சொல்ல வேண்டிய காரணம் இருப்பதில்லை என அழுத்தந்திருத்தமாக கூறுகிறார் 65 வயது கிரிஜாம்மா. “நாங்கள் வெயிலிலும் மழையிலும் வெளியே தங்கி இருக்கிறோம். புயல் அடித்த சில சமயங்களில் என் சாதியினரின் வீடுகளுக்குள் நான் நுழைய முடியாதென்பதால் பிற சாதியினரின் வீடுகளில் அடைக்கலம் தேடியிருக்கிறேன்,” என்கிறார் அவர்.”சில நேரங்களில் தரையில் கிடைக்கும் இலைகளில் வைத்து உணவு உண்டிருக்கிறோம். இப்போது பெண்களுக்கு என தனி பாத்திரங்கள் இருக்கின்றன. நாங்கள் கிருஷ்ண பக்தர்கள். இங்கிருக்கும் பெண்கள் எப்படி இந்த பழக்கத்தை பின்பற்றாமல் இருக்க முடியும்?”
“இந்த மூன்று நான்கு நாட்களின் நாங்கள் வெறுமனே அமர்ந்து, தூங்கி, உண்போம். இல்லையெனில் சமையல், சுத்தப்படுத்துதல், ஆடுகளுக்கு பின்னால் ஓடுதல் என வேலைப்பளு இருக்கும். மாதவிடாய் காலத்தில் தனித்திருக்கும்போது இந்த வேலைகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்காது,” என்கிறார் கப்பால் கிராமப் பஞ்சாயத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான 29 வயது ரத்னாம்மா.
இத்தகைய தனித்திருத்தலில் சில பலன்களை கிரிஜாம்மாவும் ரத்னாம்மாவும் கண்டாலும், இம்முறைகள் பல மரணங்களுக்கும் விபத்துகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. டிசம்பர் 2014-ல் வெளிவந்த செய்தியின்படி, தும்கூரில் ஒரு குடிசையில் தங்கியிருந்த தாயின் கைக்குழந்தை மழைக்கு பின் வந்த ஜலதோஷத்தால் உயிரிழந்திருக்கிறது. இன்னொர் செய்தியறிக்கையின்படி 2010ம் ஆண்டில் பத்து நாள் குழந்தை ஒன்றை, மண்டியாவின் காடுகொல்லா கிராமத்தில் ஒரு நாய் இழுத்துச் சென்றிருக்கிறது.
இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் முதல் குழந்தை பெற்றெடுத்த, ஹோஸஹள்ளி கிராமத்தின் 22 வயது பல்லவி ஜி இத்தகைய ஆபத்துகளை நிராகரிக்கிறார். “பல வருடங்களில் வெறும் இரண்டு, மூன்று நிகழ்வுகள்தான் எனில் அது எனக்கு பிரச்சினை இல்லை. இந்த குடிசை உண்மையில் வசதியாக இருக்கிறது. நான் ஏன் பயப்பட வேண்டும்? என்னுடைய மாதவிடாய் காலங்களில் நான் எப்போதும் வெளியே இருட்டில்தான் தங்கி இருக்கிறேன். இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல,” என்கிறார் அவர் தொட்டிலை ஆட்டிக் கொண்டே.
பல்லவியின் கணவர் தும்கூரில் இருக்கும் ஓர் எரிவாயு ஆலையில் வேலை பார்க்கிறார். ஒரு குடிசையில் குழந்தையுடன் தங்கியிருக்கும் பல்லவிக்கு சில மீட்டர் தொலைவில் இன்னொரு குடிசை இருக்கிறது. அவரை பார்த்துக் கொள்ளவென தாயோ தாத்தாவோ அங்கு தங்குவார்கள். இரண்டு குடிசைகளுக்கும் இடையில் ஒரு காற்றாடியும் விளக்கும் இருக்கிறது. இடையில் இருக்கும் திறந்தவெளியில் விறகுகளுக்கு மேல் ஒரு பாத்திரம் நீர் காய்ச்சவென வைக்கப்பட்டிருக்கிறது. குடிசைக்கு மேல் பல்லவி மற்றும் குழந்தையின் உடைகள் காய வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களும் மூன்று நாட்களும் கடந்த பிறகு தாயும் குழந்தையும் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
சில காடுகொல்லா குடும்பங்களில், தாயையும் குழந்தையையும் வீட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் ஆட்டை பலியிடும் பழக்கம் இருக்கிறது. ‘சுத்தப்படுத்தும்’ சடங்கு எப்போதும் நடத்தப்படுகிறது. குடிசை, துணிகள், தாய் மற்றும் குழந்தையின் உடைமைகள் யாவும் சுத்தப்படுத்தப்படுகின்றன. கிராமத்தின் பெரியவர்கள் தூர இருந்து இருவருக்கும் வழிகாட்டுவார்கள். பிறகு அவர்கள் பெயரிடுவதற்காக உள்ளூர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் வணங்கி உண்பார்கள். பிறகுதான் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
*****
சில வகை எதிர்ப்புகளும் இருக்கின்றன.
அரலலசண்ட்ரா கிராமத்தை சேர்ந்த டி.ஜெயலக்ஷ்மா மாதவிடாய் காலத்தில் வெளியே தங்குவதில்லை. சமூகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை முறை வற்புறுத்தியும் அவர் பணியவில்லை. அங்கன்வாடி பணியாளராக இருக்கும் அவருக்கு 45 வயது ஆகிறது. நான்கு முறை பிரசவம் முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்துவிட்டார். சுற்றுவட்டாரத்தில் இருந்த காடுகொல்லா குடும்பங்களின் கோபத்தை பொருட்படுத்தவில்லை.
“நான் திருமணம் செய்தபோது இங்கிருக்கும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கிராமத்துக்கு வெளியே சென்று சிறு குடிசைகளில் தங்குவார்கள். சில நேரங்களில் மரத்தடிகளில் தங்கினார்கள். இந்த பழக்கத்துக்கு என் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். திருமணத்துக்கு முன் இந்த முறை என் பெற்றோரின் வீட்டில் கடைபிடிக்கப்பட்டபோது கூட எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. எனவே இம்முறையை பின்பற்றுவதை நான் நிறுத்தினேன். இன்னும் பிற கிராமவாசிகளின் வசவுகளை நாங்கள் கேட்க முடிகிறது,” என்கிறார் பத்தாம் வகுப்பு வரை படித்த ஜெயலக்ஷ்மா. 19-லிருந்து 23 வரையிலான வயதுகளிலிருக்கும் அவரின் மூன்று மகள்களும் கூட மாதவிடாய் நேரத்தில் வெளியே தங்குவதில்லை.
”கிராமவாசிகள் எங்களை திட்டவும் அச்சுறுத்தவும் செய்தனர். எப்போது எங்களுக்கு கஷ்டம் வந்தாலும் சடங்கை நாங்கள் பின்பற்றாததே காரணம் என சொன்னார்கள். மோசமான விஷயங்கள் எங்களுக்கு நடக்கும் என்றார்கள். பல நேரங்களில் எங்களை அவர்கள் தவிர்த்தார்கள். கடந்த சில வருடங்களாக, சட்டத்துக்கு பயந்து, எங்களை தவிர்ப்பதை அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள்,” என்கிறார் ஜெயலஷ்மாவின் 60 வயது கணவர் குல்ல கரியப்பா. அவர் முதுகலை பயின்றவர். ஓய்வு பெற்ற பேராசிரியர். ”ஒவ்வொரு முறை கிராமவாசிகள் இந்த பழக்கத்தை பின்பற்றுமாறு என்னிடம் சொல்லும்போதும் நான் ஒரு ஆசிரியன் என்பதால் இதை பின்பற்ற முடியாது என சொல்லி இருக்கிறேன். எப்போதுமே தியாகம் செய்ய வேண்டும் என நம்புமளவுக்கு நம் பெண் குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர்,” என்கிறார் அவர் கோபமாக.
ஜெயலஷ்மாவை போலவே இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது அம்ருதாவும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) தனிமைப்படுத்தப்படும் முறையை நிறுத்த விரும்புகிறார். ஆனால் முடியவில்லை. “மேலே இருக்கும் (அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள்) யாரோ ஒருவர் எங்களின் கிராமத்து பெரியவர்களுக்கு விளக்க வேண்டும். அதுவரை என்னுடைய ஐந்து வயது மகளும் (வளர்ந்த பிறகு) இந்த முறையை பின்பற்ற வைக்கப்படுவாள். நானே அதை செய்யவும் வேண்டியிருக்கும். தனியாக என்னால் இந்த முறையை நிறுத்த முடியாது.”
கிராமப்புற பதின்வயது மற்றும் இளம்பெண்கள் பற்றிய செய்திகளளிக்கும் PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய திட்டம், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் ஒரு பகுதி ஆகும். இத்தகைய விளிம்புநிலை குழுக்களின் சூழலை சாதாரண மக்களின் வாழ்வனுபவங்களை கொண்டு ஆராய்வதற்கான முன்னெடுப்பு.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய வேண்டுமா? zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளுங்கள்
தமிழில் : ராஜசங்கீதன்