பாகல்கோட் - பெல்காம் சாலையில் ஒருநாள் பிற்பகல் வேளையில் S. பந்தேப்பா, நான் அவரை சந்தித்த போது தனது ஆட்டு மந்தையை வழிநடத்திச் சென்று கொண்டிருந்தார். அவர் தனது விலங்குகளுடன் சிறிது காலம் தங்குவதற்கு விளைநிலத்தை தேடிக்கொண்டிருந்தார். "எங்களது விலங்குகளின் எருவிற்கு நல்ல பணத்தைத் தரும் நில உரிமையாளர்களை கண்டுபிடிப்பதே எங்களது வேலை", என்று அவர் கூறினார். இது குளிர்காலம், குறுபா ஆடு மேய்ப்பவர்கள் தங்களது பயணத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்குகின்றனர் ஏனெனில் அப்போது தான் விவசாய வேலை மிகக் குறைவாக இருக்கும்.
அப்போது இருந்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒரே குழுவாக சேர்ந்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு செல்கின்றனர் சாதாரணமாக அவர்கள் ஒரே வழியில் தான் செல்வர் அது சுமார் 600 முதல் 800 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டிருக்கும் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர், கர்நாடகாவின் இந்த குறுபா ஆடு மேய்ப்பவர்கள், பட்டியல் ஆதிவாசி இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது ஆடுகள் தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன மேலும் ஆட்டினை மேய்ப்பவர்கள் விவசாயிகளிடமிருந்து தங்களின் விலங்குகளின் எருவுக்கு நல்ல தொகையை பணமாக பெறுகின்றனர். ஒரு 'நல்ல நில உரிமையாளரிடம்' இருந்து ஒரு நிறுத்தத்திற்கு 1,000 ரூபாயை, சில நாட்கள் தங்குவதற்கு தான் பெறுவதாக பந்தேப்பா கூறுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து ஓரளவுக்கு பணம் கிடைக்கும் பண்ணையை அடுத்த நிறுத்தத்திற்காகத் தேடி புறப்படுகிறார். கடந்த காலங்களில் உணவு தானியங்கள், வெல்லம், உடைகள் போன்ற பொருட்களையும் அவர் ஈடாக பெற்றிருக்கிறார், ஆனால் விவசாயிகளுடன் இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது இப்போது மிக கடினமாகி வருவதாகக் கூறுகிறார்.
"எங்களது குழந்தைகள் மற்றும் விலங்குகளுடன் நில உரிமையாளர்களின் நிலத்தில் வாழ்வது (இப்போது) என்பது எளிதானது அல்ல", என்று கூறுகிறார் நீலப்பா சச்தி. பெல்காம் (இப்போது பெலகாவி) மாவட்டத்தின் பலிஹொங்கள் தாலுகாவைச் சேர்ந்த, பலிஹொங்கள் - முனாவழிச் சாலையின் அருகில் இருக்கும் ஒரு பண்ணையில் நான் அவரை சந்தித்தேன், அப்போது அவர் தனது மந்தையைக் கட்டுப்படுத்த கயிற்றால் எல்லைகளை அமைத்துக் கொண்டு இருந்தார்.
குறுபா ஆயர்கள் எதிர்கொள்ளும் ஒரே மாற்றம் இது மட்டுமல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக தென் மத்திய இந்தியாவின் தக்காணப் பகுதியில், கரடுமுரடான நிலபரப்பில் வளர்க்கப்படும் அவர்களின் விலங்குகளின் கம்பளிக்கான தேவை குறைந்து வருகிறது. வலிமையான தக்காண செம்மறியாடுகள் இந்நிலத்தின் அரை வறண்ட கால நிலையை தாங்கி கொள்ளும் திறன் படைத்தவை. பல காலமாக குறுபா ஆடு மேய்ப்பவரின் வருவாயில் பெரும்பகுதி கம்பளி (மற்றும் மகாராஷ்டிராவில் கொங்கடி அல்லது ஆந்திராவில் கொங்களி என்றழைக்கப்படுகிறது) என அழைக்கப்படும் கரடுமுரடான கருப்பு கம்பளி போர்வைகள் செய்வதற்கு அதன் ரோமத்தினை வழங்குவதன் மூலம் வந்தது. இது விவசாயிகளுக்காக உற்பத்தி செய்யப்படும் விலங்கு உரத்திலிருந்து வரும் வருமானத்துடன், கூடுதல் வருமானத்தை அளித்து வந்தது. எளிதில் மற்றும் உள்நாட்டில் கிடைக்கக்கூடிய நார் என்பதால், கம்பளி ஒப்பீட்டளவில் மலிவானதாகவும் மற்றும் தேவை மிகுந்ததாகவும் இருந்தது.
இதனை வாங்குபவர்களில் பெலகாவி மாவட்டத்தின் ராம்துர்க் தாலுகாவிலுள்ள தாதிபாவி சாலாப்பூர் என்ற கிராமத்தின் நெசவாளர்களும் ஒருவர். நெசவாளர்களில் பலர் குறுபா சமூகத்தை சேர்ந்தவர்கள் தான், அவர்கள் சமூகத்திலேயே ஒரு துணைக் குழுவைச் சேர்ந்தவர்கள். குறுபாக்களுக்கு நிரந்தர வீடுகள் மற்றும் கிராமங்கள் உள்ளன மேலும் ஆயர், நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் பல என பல்வேறு துணை குழுக்களாக இருக்கின்றனர். அவர்கள் நெய்த போர்வைகள் ஒரு காலத்தில் நாட்டின் ராணுவத்தினரிடையே பிரபலமாக இருந்தது, ஆனால் அவற்றுக்கு இப்போது அதிக தேவை இல்லை. "அவர்கள் இப்போது தூங்கும் பைகளை பயன்படுத்துகின்றனர்", என்று P. ஈஸ்வரப்பா என்ற நெசவாளர் விளக்குகிறார், தாதிபாவி சாலாப்பூரில் ஒரு குழித் தறி வைத்திருக்கிறார், அதில் இன்னமும் பாரம்பரிய கருப்பு கம்பளிப் போர்வைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
"தக்காண கம்பளிக்கான தேவை குறைந்துவிட்டது, இதற்கு கலப்பு செயற்கைத் துணிகள் மற்றும் இப்போது சந்தையில் பிற வகை கம்பளிகள் மலிவான விலையில் கிடைப்பதும் ஒரு காரணமாகும்", என்று ஹவேரி மாவட்டத்திலுள்ள ரனேபென்னுர் நகரத்தில் உள்ள ஒரு கடையின் உரிமையாளரான தினேஷ் சேத் கூறுகிறார், அது தாதிபாவி சாலாப்பூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


இடது: முக்கிய சாலைகளில் நடப்பது எளிதல்ல (இங்கு, பாகல்கோட் - பெல்காம் சாலை), விலங்குகள் அடிக்கடி நோய்வாய்படுகின்றன அல்லது காயமடைகின்றன.வலது: கரடு முரடான நிலப்பரப்பு காரணமாக சாலை இல்லாத இடத்தில் நடந்து புலம்பெயர்வதிலும் சிரமம் இருக்கத்தான் செய்கின்றது. விவசாயிகளுடன் மேய்ச்சல் மற்றும் உர பந்தம் இல்லாவிட்டால் ஆயர்கள் அந்த விவசாய நிலங்களில் எந்த விதமான செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும்
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்த போர்வைகள் மற்றும் விரிப்புகளுக்கான தேவை அதிகமாக இருந்த போது நெசவாளர்கள் குறுபாக்களிடமிருந்து ஆட்டு ரோமத்தை கிலோ ஒன்றுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குவார். இப்போது அவர்கள் அதனை கிலோ ஒன்றுக்கு 8 முதல் 10 ரூபாய் வரை தான் வாங்குகின்றனர். தயார் செய்யப்பட்ட போர்வைகள் உள்ளூர் கடைகளுக்கு 600 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகின்றது, சிறிய அளவிலான விரிப்புகள் 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. ஆனால் இந்த வருமானம் ஆயர்களுக்கு மிகவும் மாறுபாடு கொண்டதாக இருக்கிறது. எனது உரையாடல்களில் இருந்து மதிப்பீடுகளின் படி சுமார் 100 விலங்குகளை வைத்திருக்கும் ஒரு குடும்பம், ஆட்டின் ரோமம், உரம் மற்றும் விலங்குகளை விற்பது ஆகியவற்றின் மூலம் ஆண்டொன்றுக்கு 70,000 முதல் 80,000 ரூபாய் வரை பெறுகின்றனர்.
ஆட்டு ரோமத்தில் இருந்து நிலையான வருமானத்தை ஈட்ட தாதிபாவி சாலாப்பூர் மற்றும் பிற கிராமங்களில் உள்ள பல குடும்பங்களை சேர்ந்த பெண்கள் இன்னமும் நூல் நூர்பது மற்றும் தக்காண ஆட்டின் ரோமத்தை நெசவு செய்வது ஆகியவற்றைச் செய்து நிலையான வருமானத்தை கொண்டு வர முயற்சித்து சுய உதவி குழுக்களை உருவாக்கியுள்ளனர். இச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் விவசாய வேலைகளிலேயே இப்போது கவனம் செலுத்துகின்றனர்.
களத்தில் நீடித்து இருப்பதற்கு குறுபாக்களும் பல மேம்பாடுகளை செய்து வருகின்றனர். பெலகாவி மாவட்டத்தின் பலிஹொங்கள் தாலுகாவைச் சேர்ந்த சம்ப்காவுன் வட்டத்தைச் சேர்ந்த மேக்கல்மாரடி கிராமத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற, குறுபா இனத்தவரான தஸ்தகீர் ஜாம்தார், சணல், தோல் மற்றும் ஆட்டு ரோமம் ஆகியவற்றை மேம்படுத்தி பைகள் மற்றும் விரிப்புகளை தயார் செய்யத் துவங்கினார். "இந்த தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் விற்கலாம். சில நேரங்களில் பெங்களூரிலிருந்து சில்லறை விற்பனையாளர்கள் வந்து சிறிய அளவிலான ஆர்டர்களையும் கொடுப்பர். ஆனால் இது நிச்சயமற்றது", என்று அவர் கூறுகிறார்.
சில ஆயர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக விலங்கின் இறைச்சி மற்றும் பாலை விற்க துவங்கிவிட்டனர். ரோமத்தை விட அதிக இறைச்சி உற்பத்தி செய்யக்கூடிய சிவப்பு நெல்லூர் மற்றும் யெல்கு, மட்கயல் போன்ற தக்காண செம்மறி ஆடுகளைத் தவிர பிற செம்மறி ஆடுகளை மாநில அரசு (கர்நாடக செம்மறி ஆடு மற்றும் கம்பளி மேம்பாட்டு கழகத்தின் மூலம்) ஊக்குவிப்பதால், சில குறுபாக்களும் இந்த இனங்களை அதிகளவில் வைத்திருக்கின்றனர். ஒரு ஆண் செம்மறிக் குட்டி இறைச்சி தொழிற்சாலையில் நல்ல தொகையைப் பெறுகிறது - சில நேரங்களில் அது 8,000 ரூபாய் வரை பெற்றுத்தருகிறது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குறுபா ஆயர் P. நாகப்பா, தும்கூர் மாவட்டம் சிரா நகரில் உள்ள செம்மறி ஆட்டு சந்தையில் ஆரோக்கியமான மூன்று மாத குட்டியை விற்பனை செய்து 6000 ரூபாய் பெற்றார். மேலும் இப்பகுதியில் ஆட்டுப்பால் தொழிலும் வளர்ந்து வருவதால், தக்காண செம்மறி ஆடுகளின் உரிமையாளர்கள் சிலர் பாலுக்காக ஆடுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடகாவில் உள்ள ஆயர் சமூகங்களுடன் பணியாற்றிவரும் ஒரு உள்ளூர் கால்நடை மருத்துவர், என்னிடம், தங்களது விலங்குகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக சில குறுபாக்கள் இப்போது தாராளமாக விலங்குகளுக்கு மருந்துகளை அளிக்கின்றனர் என்று கூறினார், பெரும்பாலும் இந்த மருந்துகளை கால்நடை மருத்துவரிடம் ஆலோசிக்காமல் வாங்குகின்றனர் மேலும் தகுதியற்ற விற்பனையாளர்களிடம் இருந்து இந்த மருந்தினை வாங்குகின்றனர்.
பாகல்கோட் - பெல்காம் சாலையில் S. பந்தேப்பா, சாதகமான விவசாய நிலங்களை தேடி வருகிறார். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் துவங்கி வடக்கு கர்நாடகாவில் பல விவசாயிகள் கரிம விவசாய நடைமுறைகளில் இருந்து விலகி வேதியல் உரங்களுக்கு மாறிவிட்டனர். இதன் விளைவாக பந்தேப்பா மற்றும் பிற மேய்ப்பர்களுக்கு உரமும் கூட ஒரு நிலையான வாழ்வாதாரமாக இனி இருக்காது, அவர்கள் ஆண்டின் பிற நேரத்தில் அதிக விவசாய வேலைகளைத் தேட முயற்சிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு மேயப்பர்களுக்கும் இடையிலான பாரம்பரிய கூட்டுறவு வீழ்ச்சியடைந்து வருவதால் சில மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகள் மற்றும் உடமைகளுடன் அதிக தூரம் புலம்பெயர்ந்து வருகின்றனர் - தரிசு நிலங்களையும், அன்பான விவசாயிகளையும் தேடி கடினமான பாதையில் எப்போதும் பயணிக்கின்றனர்.


இடது: சில குடும்பங்கள் புலம்பெயரும் போது தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் ஏற்றும் வகையில் வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர் - அவர்களது உடமைகள், குழந்தைகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஆகியவற்றை ஏற்றிக் கொள்கின்றனர். குதிரைகளைப் போன்ற பெரிய விலங்குகள், புதிய இடங்களுக்கு தனியாக கால்நடையாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன.வலது: சில குடும்பங்கள் இன்னமும் மாட்டு வண்டியில் பயணம் செய்கின்றன. பெலகாவி மாவட்டத்தின் பாராஸ்கட் வட்டத்திலுள்ள சச்சாடி கிராமத்தினைச் சுற்றியுள்ளது

பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது மந்தைகளை கவனிக்கும் பொறுப்புகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். தீபாவளிக்கு பிறகு (அக்டோபர் அல்லது நவம்பரில்) ஒன்றாகப் புலம்பெயரத் துவங்கி வசந்த காலமான (மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்) தங்களது கிராமங்களுக்கு திரும்புகின்றனர்

ஐந்து வயதாகும் விஜய் மற்றும் எட்டு வயதாகும் நாகராஜு, கூட்டத்தில் இருக்கும் போது கூட அவர்களது விலங்கை அடையாளம் கண்டுவிடுவர். 'இதுவே எனது சிறந்த நண்பன்', என்று சிரிக்கிறான் நாகராஜு


இடது: இளையவர்களான விஜய் மற்றும் நாகராஜு, அவர்களது தந்தை நீலப்பா சச்டி ஆகியோர் தங்களது குதிரையுடன் (விலங்குகள் அதிக பாரங்களை சுமக்க பயன்படுகின்றன).வலது: சாலையில் பல நாட்களைக் கழித்த பிறகு ஒரு புதிய குடியேற்றத்தில் வீட்டை அமைப்பது ஒரு முக்கியமான பணியாகும். குழந்தைகளும் இப்பணியில் ஈடுபடுவர். விஜய்க்கு ஐந்து வயது தான் ஆகிறது என்றாலும் அவர் உடனடியாக களத்தில் இறங்குகிறார்


இடது: பெலகாவி மாவட்டத்தின் பலிஹொங்கள் - முனாவழி சாலையில் ஒரு பண்ணையில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளுடன். பல விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் எருவை வாங்குவதற்கான சூழல் குறைந்து வருகிறது. வலது: வழியில் ஒரு பண்ணை நிறுத்தத்தில் குறுபா ஆயரினப் பெண்ணான காயத்ரி விமலா தனது குழந்தைக்கு உணவு சமைத்துக் கொண்டிருக்கிறார், அதே வேளையில் உணவு உண்டு கொண்டிருக்கும் தங்களது விலங்குகளின் மீதும் ஒரு கண்ணாக இருக்கிறார். கயிறு உரைகள் மந்தைகளை ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகின்றன

அடுத்த நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வரும் போது இளம் விலங்குகளை வழிநடத்துவது தான் கடினமான பணியாக இருக்கும், ஒரு பச்சிளம் குழந்தையை கவனித்துக் கொள்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை


இடது: புலம்பெயர்வு நடை பயணத்தின் போது காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகளை பாதுகாக்க மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது - இங்கே காயமடைந்த ஆடு ஒன்று வாகனத்தின் பயணிகள் இருக்கையில் அமர்த்தப்பட்டு இருக்கிறது. வலது: குறுபாக்கள் தங்களது விலங்குகளை, குறிப்பாக குதிரையை வணங்குகின்றனர் அலக்கானூர் கிராமத்தில் ஒரு மேய்ப்பர் தனது விலங்கினை வணங்கிக் கொண்டு இருக்கிறார்

சில கிராமங்களில் தக்காண செம்மறி ஆட்டு ரோமத்தில் இருந்து நல்ல வருமானத்தை உண்டாக்க முயற்சித்து சுய உதவி குழுக்களை உருவாக்கியுள்ளனர். தாதிபாவி சாலாப்பூரில், சாந்தவா பெவூர், ராட்டையை சுழற்றி கொண்டிருக்கிறார். சாவித்திரி ரோமங்களை பதப்படுத்துகிறார் அதே வேளையில் லாம்மஸ் பெவூர் ராட்டையை சுழற்றுவதற்காக தனது முறைக்கு காத்திருக்கிறார்

குழித் தறி பாரம்பரியமாக தக்காண கம்பளிப் போர்வைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஈஸ்வரப்பா மற்றும் அவரது மகன் பீரேந்திர ஆகியோர் மற்றும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நாராயண் ஆகியோர் தறியில் அமர்ந்திருக்கின்றனர்


இடது: மேக்கல்மாரடி கிராமத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற குறுபா இனத்தவரான தஸ்தகீர் ஜாம்தார், வருமானத்தை உயர்துவதற்கு, சணல், தோல் மற்றும் ஆட்டு ரோமம் ஆகியவற்றை மேம்படுத்தி பைகள் மற்றும் விரிப்புகளை தயார் செய்யத் துவங்கினார். வலது: கடை மேலாளர் தினேஷ் சேத், போர்வையின் தரத்தை சரி பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைகளில் இத்தகைய போர்வைகளின் சராசரி விலை 800 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை இருக்கின்றது சிறிய விரிப்புகள் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலை பெறுகின்றன. ஆனால் தக்காண கம்பளிக்கான தேவை சீராக குறைந்து கொண்டே வருகிறது

கால்நடைச் சந்தையில் தங்களது விலங்குகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக சில குறுபாக்கள் இப்போது தாராளமாக விலங்குகளுக்கு மருந்துகளை அளிக்கின்றனர். மைலரா, பந்தேப்பா போன்ற ஆயர்கள் தங்கள் விலங்குகளுக்கு மருந்துகளை (குடற்புழு நீக்கம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை) கொடுக்கத் துவங்கியுள்ளனர், பெரும்பாலும் இந்த மருந்துகளை கால்நடை மருத்துவரிடம் ஆலோசிக்காமல் வாங்குகின்றனர்

காக்க நாகப்பா தனது மந்தையை சிராவில் உள்ள சந்தைக்கு அழைத்துச் சென்று சில விலங்குகளை விற்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தக்காண செம்மறி ஆடுகளைத் தவிர வேறு செம்மறி ஆடுகளை மாநில அரசு ஊக்குவிப்பதால், சில குறுபாக்களும் இந்த இனங்களை அதிகளவில் வைத்திருக்கின்றனர். ஒரு ஆண் செம்மறி குட்டி இறைச்சி தொழிற்சாலையில் நல்ல தொகையைப் பெறுகிறது

தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிரா நகரில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் செம்மறி ஆட்டுச் சந்தைக்கு கொண்டு செல்ல விலங்குகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்
தமிழில்: சோனியா போஸ்