சச்சன்பூர் கிராமத்தில் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளி மற்றும் 500 மீட்டர் தொலைவில் உள்ள ரெபா மர்முவின் ‘மாற்று’ பள்ளி என இரண்டு பள்ளிக்கூடங்களுக்கு தினமும் செல்கிறார் ஒன்பது வயது ஷிலாபதி முர்மு.
ஷிலாபதியின் சண்டால் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 3 முதல் 12 வயது வரையிலான சுமார் 40 குழந்தைகள் கோடைக் காலங்களில் காலை 6 மணிக்கும், குளிர் காலங்களில் அரை மணி நேரம் தாமதமாக ரெபாவின் பள்ளிக்கு வருகின்றனர். பழைய மாணவர்கள் தரையைக் கூட்டி சுத்தம் செய்கின்றனர், தாகூர் பாடல்களை இறை வணக்கப் பாடலாக பாடுகின்றனர். ‘தீயே தத்துவ மேதையின் கல், அது என்னைத் தொடுவதால் நான் தூய்மை அடைவேன்’ – எனும் வரிகளுடன் தினசரிப் பாடங்கள் தொடங்குகின்றன. இப்பள்ளியின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகள் விளையாடிவிட்டு தூங்கும் இடமும் உள்ளது.
ரெபாடி என அனைவராலும் அழைக்கப்படும் அவர், தனது குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தில் மண் குடிசையில் 2010ஆம் ஆண்டு இப்பள்ளியைத் தொடங்கினார். 1970களில் மாநில அரசின் நில மறுவிநியோக திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திற்கு சுமார் மூன்று ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. ஆனால் இங்குள்ள நிலம் வளமையாக இல்லை. எனவே தனது நிலத்தின் ஒரு பகுதியை ரெபா கொல்கத்தாவைச் சேர்ந்த வேளாண் குழுவிற்கு குத்தகைக்கு விட்டு, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு இப்பள்ளியைத் தொடங்கினார். இப்போது அவர் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பப்பாளி போன்ற காய்கறிகள், பழங்களை சிறிதளவு நிலத்தில் விளைவித்து உள்ளூர் சந்தையில் விற்கிறார்.
குடும்பத்தின் ஓரளவு வருமானத்திலும், சண்டால் பிரிவைச் சேர்ந்த 53 வயது ரெபா சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்னா நகருக்கு மிதிவண்டியில் சென்று பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தின் பங்குரா மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்தில் அவரது இரு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து பள்ளியை நடத்த உதவுகின்றனர். அவர்களின் தாயாரின் நினைவாக லக்ஷ்மி முர்மு பிராத்மிக் வித்யாலயா என பெயரிட்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சாச்சன்பூரிலிருந்து கிட்டதட்ட 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தா நகரத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் கொஞ்சம் பண உதவி செய்துள்ளன. இதில் ரெபாடி ஆறு கான்கிரீட் தூண்கள், அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய மூன்று திறந்த வகுப்பறைகளைக் கட்டினார். அந்நிறுவனங்களில் ஒன்றின் உதவியோடு கணிதம், வங்காளம், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களை எடுப்பதற்கு இரண்டு ஆசிரியர்களை அவர் பணியமர்த்தியுள்ளார். அக்குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்த அவல் அல்லது ரொட்டி, குழம்புடன் வேக வைத்த வெள்ளை பட்டானி சாதம் என காலை உணவும், மாலையில் சிற்றுண்டியும் ரெபாடி அளிக்கிறார்.
காலை 9.30 மணியளவில் அவர்கள் வேகமாக வீட்டிற்கு ஓடிச் சென்று அரசுப் பள்ளிக்கு செல்ல தயாராகின்றனர். முன்பு சிதிலமடைந்த குடிசையாக இருந்த அப்பள்ளி இப்போது நான்கு அறைகள் கொண்ட பக்கா (நிரந்தர) அமைப்பை பெற்றுள்ளது. இங்கு அனந்தோ பாபு எனும் மூத்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே இருந்து அனைத்து மாணவர்களுக்கும் பாடங்கள் நடத்த போராடி வருகிறார். அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு குழந்தைகளை மிகவும் கவர்கிறது. இலவசமாக பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.
முர்முவின் பள்ளிக்கு மாலை 4 மணிக்கு பிள்ளைகள் திரும்பி வருகின்றனர். இருட்டும் வரை அவர்கள் விளையாடுகின்றனர். பிறகு மாலை சிற்றுண்டியை பெற்று படிக்க அமர்கின்றனர். அவர்கள் இரவு 9 மணிக்கு வீட்டிற்குச் செல்கின்றனர்.
பள்ளி மட்டுமின்றி, தனது கிராம பெண்களை ஒன்றிணைக்கும் வகையில் ரெபா முர்மு 2008ஆம் ஆண்டு சச்சன்பூர் ஆதிபாசி மஹிலா பிகாஷ் சங்கத்தையும் தொடங்கியுள்ளார். சிறிய அளவு நிலத்திலும் சிறப்பாக விளைவிக்க கொல்கத்தாவில் உள்ள மற்றொரு நிறுவனத்துடன் இச்சங்கம் இணைந்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
ஒரு ரூபாய்க்கும், 50 காசுக்கும் வேறுபாடு கண்டறிய தெரியாத காய்கறி வியாபாரியான தனது அத்தையை ரெபா நினைவுகூர்கிறார். அவரது அனுபவங்களே எழுதுதல், படித்தலின் முக்கியத்துவத்தை குடும்பத்திற்கு உணர்த்தியது. “அரசு எங்களுக்கு [பழங்குடியினர்] வேலைவாய்ப்பு அளிப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் யாரை [அவர்கள் படிக்காவிட்டால்?] பணியமர்த்துவது” என அவர் கேட்கிறார். ஒரு தலைமுறையை முறையாக வழிநடத்தினால் நல்ல காலத்தை அவர்களே சொந்தமாக உருவாக்கிக் கொள்வார்கள் என்கிறார் அவர்.

9 வயது ஷிலாபதி முர்மு தனது தோழிகளுடன் வகுப்பறையில். அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும், பிறகும் இப்பள்ளிக்கு அனைவரும் வருகின்றனர்

ஷிலாபதி தனது குடிசையின் முன் தேசியக் கொடியை ஏற்றுவது போன்று படம் வரைகிறார்

ரெபா முர்மு (நிற்பவர்) காலை உணவைப் பெறுவதற்கு (பின்னணியில்) காத்திருக்கும் தனது மாணவர்களின் ஓவியங்களை திறனாய்வு செய்வது பற்றி சிந்திக்கிறார்

குழந்தைகள் சொந்தமாக பல்வேறு விளையாட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர் – வைக்கோல் போரின் மீது ஏறி குதித்து பல்டி அடிப்பது விருப்பத்துக்குரிய விளையாட்டு. மாணவர்கள் சுதந்திரமாக வளர்வதற்கு அப்பள்ளி நல்வாய்ப்பை அளிக்கிறது

13 வயதாகும் அஞ்சலி மண்டி பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கிறார். தனது இளைய உடன்பிறப்புகளையும் கவனித்துக் கொள்கிறார்

4 வயதாகும் பாலு ஹெம்பிராம் தனது உறவினரான 11 வயது மனிகா முர்முவுடன் சேர்ந்து தினமும் பள்ளிக்குச் செல்கிறார். பள்ளிச் செல்லும் பருவம் வரும் வரை க்ரச்சில் விளையாடுகிறார்

ஆசிரியர்களில் ஒருவரான மாலா ஹன்ஸ்டாவிடம் வீட்டுப் பாடத்தை காண்பிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள். சத்னா நகரைச் சேர்ந்த மாலா பங்குரா பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். அரசு வேலைக்கான தேர்வுக்கு அவர் தயாராகி வருகிறார். ரெபாடி பள்ளியில் அவர் பெறும் ரூ.2000 இதற்கு உதவுகிறது

இன்னும் பெயர் கூட வைக்காத, கவுடியா எனும் செல்லப் பெயர் கொண்ட சிறுமி அரசு சாரா நிறுவனத்திடமிருந்து ஒரு ஜோடி ஷூக்களை பெறுகிறார்

பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்கும் ரெபா முர்மு. இங்கு அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுவதும் இப்பள்ளியை பெற்றோர்கள் ஆதரிப்பதற்கு ஒரு காரணம்

8 வயதாகும் பினடா ஹெம்பிராம் எப்போது பிரகாசமாக சிரிக்கிறார், தனது பயிற்சி புத்தகங்கள், பள்ளிப் பாடங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்

11 வயதாகும் பியாலி கிஸ்கு அல்ஜீப்ரா கற்க விரும்புகிறார். மருத்துவராக விரும்புகிறார். அவரது பெற்றோருக்கு சிறிதளவு நிலம் உள்ளது. இப்பள்ளியே பியாலியின் பெருங்கனவை அனுமதிக்கிறது

தனது சுற்றுப்புறத்துடன் சிறுமியின் சுயச்சித்திரம்

கிராமத்தில் உள்ள த்வாரகேஷ்வர் ஆற்றங்கரை மணல்வெளியில் சுற்றுலா வந்துள்ள மாணவிகள்
2017ஆம் ஆண்டிலிருந்து இக்கட்டுரை எழுதியவர், ரெபா முர்முவின் பள்ளிக்கு பேனா, பென்சில்கள், நோட்டு புத்தகங்கள், ஓவியம் வரைவதற்கான அட்டைகள், துணிகள், ஷூக்கள், புத்தகங்களை அளித்து வருகிறார். குழந்தைகளின் காலை உணவிற்கு மாதந்தோறும் நிதியுதவி அளித்து வருகிறார். முர்மு தனது வீட்டின் இரு அறைகளை பார்வையாளர்கள் தங்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளார். குழந்தைகள் வைத்துள்ள நண்பர்களும், உறவினர்களும் சச்சன்பூரில் உள்ள அப்பள்ளிக்கு சென்று தங்கி வருமாறு ஆசிரியரின் குழு வலியுறுத்துகிறது. இதனால் அவர்களின் பிள்ளைகளும் ரெபாடி மாணவர்களுடன் நட்பாகி பழகுவார்கள் என கருதுகின்றனர். “தங்கள் நகரங்களுக்கு வெளியே உள்ள அழுத்தங்களையும், இன்பங்களையும் அவர்கள் கற்க வேண்டும்.”
தமிழில்: சவிதா