இந்தப் பருவத்தில் குளிர் காலம் கடுமையாக இருப்பதால் அப்துல் மஜீத் வானி மகிழ்ச்சியாக இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் காஷ்மீரில் சில பகுதியில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்கும் கீழாக இருந்ததைப் போலவே இந்த வருடமும் ஏற்பட்டு அவர் உருவாக்கும் காங்ரீகளுக்கு தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் நம்புகிறார்.
55 வயதாகும் வானி, மத்திய காஷ்மீரின் படுகாம் மாவட்டத்தில், சரார் - இ - சரீப் இல் வேலை செய்து வருகிறார். ஸ்ரீநகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த நகரம் காங்ரீீயை உருவாக்கும் கலைஞர்களுக்கான மையமாக விளங்குகிறது - அது கரியால் நிரப்பப்பட்ட மண்பானை கையால் நெய்யப்பட்ட பிரம்பு கூடையுடன் இருக்கும். காஷ்மீரில் உள்ள பலர் இந்த சிறிய சூடேற்றியை அதன் கைப்பிடியை பிடித்து தங்கள் ஒரு ஃபெஹ்ரானுக்குள் (குளிர்காலத்தில் அணியப்படும் ஒரு பாரம்பரிய முழங்கால் நீள கம்பளி ஆடை) வைத்து, காஷ்மீரின் கடுமையான குளிர்காலத்தில் தங்களை சூடேற்றிக் கொள்ள முயற்சிப்பர். சில ஆய்வுகள் காஷ்மீருக்கு என்றே தனித்துவமான 'காங்ரீ புற்றுநோயைப்' பற்றி பேசுகின்றன, கங்கினை நீண்ட காலத்திற்கு உடல் அருகில் வைத்திருப்பதால் இது ஏற்படுகிறது; அது ஒரு தனிக்கதை)
சரார் - இ - சரீப் இல் உள்ள கனில் மொஹல்லாவில் வசிக்கும் 30 வயதான உமர் ஹசன் தார், "எங்கள் பகுதி பிரம்பால் முடைந்த அழகிய காங்ரீகளுக்கு பெயர் பெற்றது", என்று கூறுகிறார். கைவினைக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் காங்ரீயை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள காடுகளிலிருந்து வில்லோ மரக்குச்சிகள் கூடைகள் செய்வதற்காக சேகரிக்கப்படுகிறது அல்லது விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது, அதனை மென்மையாக வேக வைத்து, கையால் செய்யப்பட்ட கூர்மையான கருவியை (உள்ளூரில் சப்பூன் என்றழைக்கப்படும், இரண்டு தடிமனான மரக் குச்சிகளை குறுக்காக வைத்து மண் தோண்டப் பயன்படுகிறது) வைத்து சன்னமாக சீவி உரிக்கப்படுகிறது; பின்னர் ஊறவைத்தல், உலர வைத்தல் மற்றும் சாயம் ஏற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி தயார் செய்யப்பட்ட பிரம்பு பின்னர் மண் பானையை சுற்றி முடையப்படுகின்றது.
இந்த செய்முறைக்கு ஒரு வாரம் ஆகும், அதற்குள் பிரம்பு முழுவதுமாக காய்ந்திருக்கும். பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் குளிர்காலம் துவங்குவதற்கு முன்பே காங்ரீகள் தயாரிக்கப்படுகின்றன, தேவை ஏற்படுவதைப் பொறுத்து குளிர்காலத்திலும் தயாரிக்கப்படுகிறது, அது பிப்ரவரி இறுதி வரை கூட செல்லும்.
முன்னரெல்லாம் காஷ்மீரின் காங்ரீகள் வெறும் மண்பானையாக மட்டுமே இருந்தது, அது உள்ளூர் குயவர்களிடமிருந்து வாங்கப்பட்டது - இந்த வில்லோ மரத்திலான கூடை இல்லை. காலப்போக்கில் சில கைவினை கலைஞர்கள் அந்த கூடைக்கு பல்வேறு வடிவமைப்பினை கொடுக்க ஆரம்பித்து விட்டனர் அதனால் பழைய விலையை விட இது சற்று அதிகம் ஆகிவிட்டது. காங்ரீயின் ஆரம்ப விலை சுமார் 150 ரூபாய் இதனை தயாரிக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும், மிகவும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட காங்ரீயை முடைய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும், இதற்கு சுமார் 1800 ரூபாய் வரை ஆகும் என்று என்னிடம் கூறினார் மேலும் இது அவருக்கு 1000 முதல் 1200 ரூபாய் வரை லாபம் ஈட்டித் தரும் என்று கூறினார்.


இடது: படுகாம் மாவட்டத்தின் சாரார் - இ - சரீபில் ஒரு பட்டறையில் வண்ணமயமான காங்ரீயை முடைந்து கொண்டிருக்கும் 40 வயதாகும் மன்சூர் அகமது. வலது: 86 வயதாகும் காசிர் முகமது மாலிக் சாரார் - இ - சரீபில் உள்ள கனில் மொஹிலா பட்டறையில், வர்ணம் பூசப்படாத காங்ரீயை முடைந்து கொண்டிருக்கிறார்.
காங்ரீ தயாரித்தல் ஒரு பருவகால தொழில் தான் என்றாலும் இது கைவினை கலைஞர்களுக்கும், வணிகர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கு, பிரம்பை விற்கும் விவசாயிகளுக்கும் ஆண்டு முழுவதும் வாழ்வாதாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. சாரார் - இ - சரீபில் காங்ரீ தயாரிப்பாளர்கள் என்னிடம், அவர்கள் ஒவ்வொரு குளிர் காலத்திலும் தங்கள் சூடேற்றும் பானைகளை சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விற்கின்றனர், இதன் மொத்த வருவாய் ஒரு கோடி என்று கூறினர். நிலவும் கடுமையான இந்த குளிர் காலத்தில் இதன் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர். "இந்தப் பருவத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் ஏனெனில் காங்ரீகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது", என்று ஜூன் முதல் டிசம்பர் வரை உள்ள ஆறு மாத காலத்தில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறும் வானி கூறுகிறார்.
காங்ரீ தயாரிப்பில் ஆண்கள் எல்லா செயல்முறைகளைலும் பணியாற்றுகின்றனர், பெண்கள் வழக்கமாக பிரம்பை சீவும் பணியில் ஈடுபடுகின்றனர். இப்போது பட்டதாரியாக இருக்கும் நிகத் அசீஸ் (அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) "நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து இந்த சீவும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்", என்று கூறினார். பிரம்பை சீவுவது ஒரு தனி திறமை, அந்தத் திறமை இல்லை என்றால் நீங்கள் அதை உடைத்து விடுவீர்கள் மேலும் அது வீணாகிவிடும். நிகத்தைப் போலவே கந்தேர்பால் மாவட்டத்திலுள்ள உமேர்ஹேர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலர் பிரம்பை சீவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பண்டல் பிரம்பை சீவுவதற்கு சாதாரணமாக அவர்கள் 40 ரூபாய் வரை பணம் பெறுகின்றனர், மேலும் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரங்களில் ஏழு முதல் எட்டு பண்டல் பிரம்புகளை அவர்களால் சீவ முடியும்.
ஆனால் சில பெண்கள் இந்த வேலையை செய்வதை நிறுத்த விரும்புவதாக என்று கூறுகிறார்கள். "எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் நாங்கள் பிரம்பு சீவும் இந்த வேலை செய்வதால் எங்களை இழிவாக பார்க்கிறார்கள் இது ஏழை குடும்பத்தினர் செய்ய வேண்டிய வேலை என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் இகழ்வதால் நான் இதை செய்ய விரும்பவில்லை", என்று கூறுகிறார் உமேர்ஹேரைச் சேர்ந்த பர்வீனா அக்தர்.
வழக்கமாக தங்களது குடும்பத்தினருக்காக காங்ரீயில் தீயினை மூட்டித் தருவதும் பெண்கள் தான். கரி சந்தையில் இருந்து பெறப்படுகிறது - இது பெரும்பாலும் ஆப்பிள் அல்லது பாதாமை மரத்தின் எரிக்கப்பட்ட கட்டைகளில் இருந்து பெறப்படுகிறது. "காலை மற்றும் மாலையில் இந்த பானைகளை நான் தயார் செய்கிறேன். காஷ்மீர் முழுவதும் உள்ள பெண்கள் குளிர்காலத்தில் இப்பணியை செய்கின்றனர்", என்கிறார் ஸ்ரீநகர் நகரத்திலுள்ள அலி கடல் பகுதியில் வசிக்கும் 50 வயதாகும் ஹாஜா பேகம் அவர்கள். காய்கறி விற்பனையாளரான தனது கணவர் உட்பட, ஒவ்வொரு நாளும் தனது கூட்டு குடும்பத்தில் உள்ள நபர்களுக்காக சுமார் 10 காங்ரீக்களை தயார் செய்கிறார் இவர்.
பல்வேறு வெப்பமாக்கும் முறைகள் வந்திருந்தாலும் - குறிப்பாக மத்திய ஆசியப் பகுதியிலிருந்து மத்திய வெப்பமாக்கும் முறையான புகாரிகள் (மர அடுப்புகள்) - காங்ரீ தான் காஷ்மீரின் பூஜ்ஜிய வெப்பநிலையில் சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் சூடேற்றியாக, மிகவும் குறிப்பாக கிராமப்புறங்களில், இருந்து வருகிறது. எரிகின்ற கங்குகள் நீண்ட குளிர் காலத்தில் பல மணி நேரங்களுக்கு அவர்களுக்கு தேவையான வெப்பத்தை அளிக்கின்றது.

மத்திய காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்திலுள்ள உமேர்ஹேர் பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் பரூக் அகமது வானி, ஒரு ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்; இவர் விவசாயிகளிடமிருந்து மரக் கிளைகளை வாங்கி காங்ரீ தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான மரக்குச்சிகளை தயார் செய்கிறார்.

பிரம்புகளை சீவும் முன்பு உமேர்ஹேரில் உள்ள பெண்கள் கூடை முடைவதற்கான குச்சிகளை தலையில் சுமந்து செல்கின்றனர்.

உமேர்ஹேரில் 22 வயதாகும் ஆஷிக் அகமது மற்றும் அவரது தந்தையான 54 வயதாகும் குல்சார் அகமது தார் ஆகியோர் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பட்டறையில் ஒரு இரவு முழுவதும் நீரில் வெந்த பிரம்பை வெளியே எடுத்தனர். "பிரம்பை அறுவடை செய்த பின்னர் முதலில் செய்யப்படும் செயல் முறை இது தான். ஊறவைப்பது அதன் கடினமான தோலை உரிப்பதற்கு உதவும்", என்று கூறுகிறார் ஆஷிக்.

உமேர்ஹேரில் வசிக்கும் 32 வயதாகும் வாசிம் அகமது, பிரம்பை வேக வைப்பதற்கான அடுப்பில் விறகுகளை நிரப்புகிறார்.

சரார் - இ - சரீபில் வசிக்கும் 86 வயதான காசிர் முகம்மது மாலிக் 70 ஆண்டுகளாக காங்ரீ வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். "நான் இந்தக் கலையை என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று அவர் கூறுகிறார். காஷ்மீரில் மக்கள் காங்ரீ இல்லாமல் குளிர்காலத்தில் வாழ முடியாது. எனது காங்ரீக்கள் மக்களை சூடாக வைத்திருப்பதைக் காணும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.

காசிர் முகம்மது மாலிக், மன்சூர் அகமது உடன் சேர்ந்து சரார் - இ - சரீபில் உள்ள தனது பட்டறையில் காங்ரீக்கான கூடையை முடைந்து கொண்டிருக்கிறார்.

சரார் - இ - சரீப் இல் உள்ள கனில் மொஹல்லாவில் வசிக்கும் 40 வயதாகும் மன்சூர் அகமது கடந்த 25 ஆண்டுகளாக காங்ரீக்கான கூடையை முடைந்து வருகிறார். "நான் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு சாதாரண காங்ரீயை தயார் செய்வேன். உயர் தரக் காங்ரீயை தயாரிக்க எனக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும்", என்று அவர் கூறுகிறார்.

சரார் - இ - சரீப் இல் உள்ள கனில் மொஹல்லாவில் வசிக்கும், 64 வயதாகும் குலாம் நபி மாலிக், "நான் இந்தக் கலையை என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். நீங்கள் திறமையானவராக இல்லை என்றால் உங்களால் காங்ரீக்கான கைபிடியை கூட செய்ய முடியாது என்று எனது தந்தை அடிக்கடி கூறுவார். ஒரு நல்ல காங்ரீயை முடைய கற்றுக் கொள்வதற்கு எனக்கு ஒன்பது வருடங்கள் ஆனது", என்று அவர் கூறுகிறார்.
![Mugli Begum, a 70-year-old homemaker in Charar-i-Sharief, says, “I have seen my husband [Khazir Mohammad Malik] weaving kangris for 50 years and I am happy with his work. Watching him weave a kangri is as good as weaving a kangri'](/media/images/_DSC9817.max-1400x1120.jpg)
சரார் - இ - சரீபில் வசிக்கும் 70 வயதான குடும்பத் தலைவியான முகிலி பேகம் நான் எனது கணவர் காசிர் முகமது மாலிக் 50 ஆண்டுகளாக காங்ரீ முடைவதைப் பார்த்திருக்கிறேன். அவருடைய வேலையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு காங்ரீயை முடைவது நானே அதை முடைவதைப் போன்ற மகிழ்ச்சியை எனக்குத் தரும்", என்று அவர் கூறுகிறார்.

ஸ்ரீ நகரின் நவகாடல் பகுதியில் வசிக்கும் பிர்தௌசா வானி காலை வேளையில் தனது வீட்டிற்கு வெளியே உள்ள கொட்டகையில் காங்ரீயில் கரியை நிரப்பிக் கொண்டிருக்கிறா

சரார் - இ - சரீபில் உள்ள ஒரு காங்ரீ கடைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 வாடிக்கையாளர்கள் வருவர்.

ஸ்ரீநகர் நகரத்திலுள்ள ஒரு பழைய மண் வீட்டில் பனி விழுந்து கொண்டிருக்கும் வேளையில் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் சரார் - இ - சரீபில் தயாரிக்கப்பட்ட ஒரு காங்ரீ.
தமிழில்: சோனியா போஸ்