சாருபாலா கலிந்தியின் கையில் இருந்த வண்ணமயமான கைக்குட்டை, ஒரு கணம் மின்னலைப் போல மின்னியது. சிவப்பு மற்றும் ஊதா நிற பாவடையும் ஜுமர் பாடலுக்கு ஏற்ப தீவிரமாக சுழன்று ஆடுகிறது. நிகழ்ச்சிக்காக கூடியிருந்த இசைக்கலைஞர்கள் ஒற்றுமையாக இசைக்கத் துவங்குகின்றனர்.
மேற்கு வங்கத்தின் அர்ஷா தாலுகாவில் உள்ள சேனபானா கிராமத்தில் - வயதானவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 80 - 90 பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், 65 வயதான, சாருபாலா விறுவிறுப்பாக நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
ஜூமர் என்ற வார்த்தை நடனக்கலைஞர்கள் அணிந்திருக்கும் சலங்கையில் இருந்து வரும் ஒலியில் இருந்து வந்த சொல் என்று கூறப்படுகிறது. இந்த நடன வடிவம் முக்கியமாக மேற்கு வங்கத்தின் தென்மேற்கு பகுதிகளிலும், ஜார்கண்ட் அருகில் உள்ள பகுதிகளிலும் பிரபலமாக உள்ளது (இதன் மாறுபட்ட வடிவம் அசாமில் நிகழ்த்தப்படுகிறது). பாரம்பரியமாக, ஜுமர் பாடல்களை இயற்றிய கவிஞர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர், மேலும் அவர்களுடைய பாடல்கள் சமூக பிரச்சனைகள் மற்றும் வறட்சி, வெள்ளம், அரசியல் மற்றும் பிற பாதிப்புகளை பற்றி பேசுகின்றன. கிருஷ்ணா மற்றும் ராதாவுக்கு இடையிலான அன்பும், ஏக்கமும், ஜுமர் பாடல்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் கருப்பொருள் ஆகும்.
சாருபாலாவின் சொந்த வாழ்க்கையே இந்தக் கருப்பொருட்களில் சிலவற்றை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள புருலியா II தாலுகாவில் உள்ள பெல்மா கிராமத்தில் வசித்து வந்தார். இவர்களது குடும்பம் கலிந்தி சமூகத்தை சேர்ந்தது, சில மாநிலங்களில் இது ஒரு பட்டியல் இனமாக வகைப் படுத்தப்பட்டுள்ளது - இவரது தந்தை மோகன் கலிந்தி, இவருக்கு 16 - 17 வயது இருக்கும் போது, அருகிலுள்ள டும்டுமி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி மற்றும் கட்டுமான தொழிலாளியான, சங்கர் கலிந்திக்கு இவரை மணம்முடித்துக் கொடுத்தார்.
சங்கருக்கு அப்போது 20 வயது இருக்கும், மேலும் அவர் கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்தார். அவர் உடல்ரீதியாக வன்கொடுமை செய்பவராக இருந்தார். அவரது கொடுமை கொடூரமாக இருந்ததால் சாருபாலா அவரை விட்டு விலகி மீண்டும் அவரது தந்தையிடமே சென்றுவிட்டார். ஆனால், மோகன் அவரை கவனித்துக் கொள்வதற்கு தன்னால் முடியாது என்றும் தான் மிகவும் எளிமையான நிலையில் இருப்பதாகவும் கூறி அவரை திரும்பிச் செல்லும்படி கூறினார். எனவே சாருபாலா வீடற்றவராக மாறினார் மேலும் சிறிது காலம் அவர் வீதிகளில் வாழ்ந்து வந்தார்.

ஒரு நிகழ்ச்சிக்கு முன்பு சாருபாலா தன்னை அலங்கரித்துக் கொள்வதற்கு ஷ்ரவன் உதவி செய்கிறார்
இங்கு தான் அவர் ஷ்ரவன் கலிந்தியைச் சந்தித்தார் (அவர்கள் இருவருக்குமே எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை). ஷ்ரவன் ஒரு ஜூமர் கலைஞர், அவர் தான் சாருபாலாவை உள்ளெடுத்துக் கொண்டார். அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் மற்றொரு நச்சினியான, விமலா சர்தாருடன் இணைந்து சாருபாலாவை ஒரு நச்சினியாக பயிற்றுவித்தது இவர் தான். காலப்போக்கில், இப்போது 75 வயதான, ஷ்ரவன் சாருபாலாவின் ரசிக்காக இருக்கிறார் - அவரது மேலாளர், முகவர் மற்றும் அவரது நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர். பவுல், பாது, சௌ, கரம் கீர்தன், துசு, கீீீர்தன் மற்றும் பல நிகழ்த்து கலைகளின் தொடர்புடைய குழுக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். மேலும் அவர் அவ்வப்போது விவசாய கூலியாகவும் பணி செய்கிறார்.
ஒரு ரசிக் என்பவர் கவிதை மற்றும் இசையில் வல்லுனராக இருப்பார். வழக்கமாக அவரும் நச்சினியும் ஒரு இணைந்த உறவில் இருப்பர், இது பெரும்பாலும் பெண்களை சுரண்டுவதாகவே இருக்கும். மற்ற ரசிக்குகளைப் போல ஷ்ரவனும் திருமணமானவரே, இவரது பெரிய குடும்பத்தில் மனைவி சரளா, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் அடங்குவர். சாருபாலாவுக்கும் இவருக்கும் ஒரு மகள் இருக்கிறார், 24 வயதான கமலா, அவருக்கு திருமணமாகிவிட்டது மேலும் அவர் உத்தரப்பிரதேசத்தில் குடிபெயர்ந்து உள்ளார்.
இந்த பெரிய குடும்பத்திற்காக சம்பாதிக்க வேண்டிய அழுத்தம் சாருபாலாவை இந்த வயதிலும் செயல்பட வைக்கிறது. இருப்பினும், ஷ்ரவனின் மனைவி சரளாவின் மரியாதையை அது அவருக்கு பெற்றுத் தரவில்லை, மேலும் அவர் இன்னும் சாருபாலாவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
சாருபாலா, மாநில அரசு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு, 1,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த நிகழ்ச்சி சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும், மேலும் சாருபாலாவால், இந்த வயதில், ஒரு மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகளை மட்டுமே செய்ய முடிகிறது. மேலும் அவர் மாநில கலாச்சார விவகார துறையைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கான உதவித் தொகையான 1,000 ரூபாயையும் பெறுகிறார்.
அக்டோபர் முதல் மே வரையிலான, ஜுமர் பருவத்தில், கிளப்புகள் அல்லது பூஜை குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் நிகழ்ச்சிகள், இரவு முழுவதும் நடைபெறும், அப்போது ஒரு நச்சினி குறைந்தது 5 மணி நேரம் பாடவும், நடனம் ஆடவும் வேண்டும். இதற்காக 5 முதல் 7 பேர் கொண்ட குழு ஒன்றுக்கு ரூபாய் 6,000 முதல் ரூபாய் 8,000 வரை வழங்கப்படுகிறது, இதனை அவர்களிடையே பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். துணை இசைக்கலைஞர்கள் டோல் (இரட்டை பக்க மத்தளம்), ஒரு மடல் (மரத்தாலான சிறிய இரட்டை பக்க மத்தளம்), ஒரு தம்சா (பெரிய கெண்டி மத்தளம்) மற்றும் ஒரு மராக்கஸ் (காய்ந்த பருப்புகளால் நிரப்பப்பட்ட சுரை கூடு) மற்றும் ஒரு ஷெஹ்னாய் ஆகியவற்றை இசைப்பர்.
சாருபாலா இந்த வேலையை தனது விதியாக ஏற்றுக்கொண்டார். "இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? கடவுள் நச்சினியாக நான் இருக்க வேண்டுமென்று என விதித்திருந்தால், நான் யார் அதை மாற்றுவதற்கு? இந்த வேலையை விட்டுச் சென்றுவிட்டால் உணவிற்கு நான் என்ன செய்வேன்?", என்று அவர் ஒரு வறண்ட புன்னகையுடன் கேட்கிறார்.

75 வயதான, ஷ்ரவன் சாருபாலாவின் மேலாளர், முகவர் மற்றும் அவரது நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவரே ரசிக்காகவும் இருக்கிறார், ரசிக் என்பவர் கவிதை மற்றும் இசையில் வல்லுனராக இருப்பார். வழக்கமாக அவரும் நச்சினியும் ஒரு இணைந்த உறவில் இருப்பர்

மேல் வரிசை: ஷ்ரவன் கலிந்தி மற்றும் சாருபாலா நிகழ்ச்சியை தொடங்க தயாராகி வருகின்றனர். கீழ் இடது: சாருபாலா தனது குழுவின் டோல் இசைக் கலைஞரும் அண்டை வீட்டுக்காரருமான, 60 வயதாகும், சேப்பு கலிந்தி மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோருடன் சேனபானாவிலுள்ள தனது வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். ஜுமர் அல்லாத பருவத்தில் சேப்பு விவசாய மற்றும் கட்டிட தொழிலாளியாக பணிபுரிகிறார். கீழ் வலது: சுருளியா கிராமத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு முன்பு சேப்பு தனது ஆடையை அணிந்து கொள்கிறார்; அவர் தனது நிதி கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நவ நாகரீகமாக இருக்கிறார், மேலும் அவர் உள்ளூரில் உள்ள மற்ற குழுக்களுக்கும் இசைக்கிறார்


இடது: ஜுமர் நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்பதில்லை என்றாலும், சாருபாலாவின் 12 வயது பேரன் மகேஷ்வர் கலிந்தி விளையாட்டிற்காக ஜுமர் உடைகளை அணிந்து கொண்டு தயாராகிறார். வலது: ஆனால், ஜுமரில் பணிபுரியும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் சிறுவயதிலிருந்தே இசைக்கக் கற்றுக் கொள்கின்றனர். இங்கே, குழு உறுப்பினரான சாந்திராமின் மகன் மங்கள், காடு கலிந்தியின் வீட்டில் டோலக்கை இசைத்துக் கொண்டிருக்கிறார். காடு, சாருபாலாவின் குழுவின் உறுப்பினர் மற்றும் அவரின் அண்டை வீட்டுக்காரர் ஆவார்

ஆடை அணிந்தாகிவிட்டது, இது நிகழ்ச்சிக்கான நேரம்: சேனபானா கிராமத்தில் தனது நிகழ்ச்சிக்காக, சாருபாலா - பைஷல், நச்சினிஷால் அல்லது அகாரா என்று அழைக்கப்படும் - நிகழ்ச்சி நடக்கும் திறந்தவெளிக்கு நடந்து செல்கிறார்

மேலும் இது ஷ்ரவன் கலிந்தியும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் நுழைவதற்கான நேரம்

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் சாருபாலா தெய்வங்களுக்கும், குருக்களுக்கும் ஒரு பிரார்த்தனை சடங்கினை செய்கிறார். அவருடன் (இடமிருந்து வலமாக) பஜன் கலிந்தி, காடு கலிந்தி (ஓரளவுக்கு தெரிபவர்) மற்றும் சரண் மகதோ ஆகியோர். இந்தக் குழுவில் பஜன் மற்றும் சரண் ஆகியோர் வழக்கமானவர்கள் அல்ல, இவர்கள் அவ்வப்போது வந்து செல்பவர்கள்

சேப்பு கலிந்தி டோலக்கையும் மற்றும் அம்ரிதோ மகதோ தம்சாவினையும் இசைக்க, அவர்களுடன் சாருபாலா கலிந்தி நடனமாடுவதை புருலியா கிராமவாசிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

சேப்பு மற்றும் அம்ரிதோ நிகழ்ச்சியில் சுழன்று ஆடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஜுமர் பருவத்தில் ஒவ்வொரு இசைக் கலைஞரும் நிகழ்ச்சி ஒன்றுக்கு 300 - 400 ரூபாய் சம்பாதிப்பர், அதேசமயம் சாருபாலா மற்றும் ஷ்ரவன் ஆகிய இருவரும் தல 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை சம்பாதிப்பர்

உயர் ஆற்றல் கொண்ட, 60 வயதான, சேப்பு கலிந்தி நிகழ்ச்சியின் தாளத்தால் எடுத்துச் செல்லப்படுகிறார்


இடது: சாருபாலா கலிந்தி ரூபாய் நோட்டுகளுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார் - சில சமயம் பத்து ரூபாய் சில சமயம் நூறு ரூபாய் கூட - இது பார்வையாளர்களால் அவரது சேலையில் குத்தப்படுகிறது. ஒரு சாதாரண நச்சினியின் நிகழ்ச்சி அன்பு, பக்தி, பிரிவினையால் ஏற்படும் ஏக்கம் மற்றும் ஆசை ஆகிய கருப் பொருட்களை கொண்டிருக்கும். ஒரு நிகழ்ச்சி அறிமுகத்துடன் துவங்கி பின்னர் பக்தி விளக்கங்களுடன் நகரும். மெதுவாக இசை முன்னேறிச் செல்லும் போது, தாளங்கள் மேலும் வீரியமடைந்து மேலும் நடனம் சிற்றின்பம் கொண்டதாகிறது. வலது: கிருஷ்ணருக்கும் ராதைக்கு ம் இடையிலான காதல் ஜுமர் பாடல்களில் மையப் பொருளாக இருக்கிறது. வழக்கமாக ரசக் கிருஷ்ணராகவும், நச்சினி ராதாவாகவும் சித்தரிக்கப்படுவர். இங்கு, சேப்பு கிருஷ்ணராக நடிக்கிறார்

ஒரு சமூக கூட்டத்தில் நச்சினிகள், ரசிக் மற்றும் இசைக் கலைஞர்கள் என அனைவரும் சேர்ந்து பல்வேறு குறைகளையும், பிரச்சனைகளையும் பற்றி விவாதிக்கின்றனர். அவர்கள் அனைவரும், மாண்பும் லோக் சமஸ்கிருதி ஓ நச்சினி உனையான் சமிதியின் ஒரு பகுதியாக சந்தித்தனர். இந்த அமைப்பு கொல்கத்தாவை மையமாகக் கொண்ட தர்பார் மகிளா சமன்வயா குழுவின் ஒரு பிரிவாகும், இது ஆண், பெண் மற்றும் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரினைக் கொண்ட குழு. அதன் செயலாளர், இந்த சமிதி 55 நச்சினிகள் மற்றும் ரசிக்குகள் மற்றும் சுமார் 4,500 இசைக் கலைஞர்களை கொண்டுள்ளது, என்று கூறுகிறார். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், சேனபானாவில் பள்ளி ஒன்றினை நடத்தி வருகிறது, அதில் ஜுமருடன் தொடர்புடைய மக்களின் குழந்தைகள் படிக்கின்றனர். சாருபாலா, இப்பள்ளியில் ஒரு தன்னார்வலராக இருக்கிறார், அங்கு, அவரது பணி நிதி திரட்ட உதவுவதும், குழந்தைகளுக்கு மதிய உணவு சமைப்பதும் ஆகும்

இடது: சாருபாலா கலிந்தி நடனமாடுவதை சக நச்சினிகளான, அருகில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் ஆர்த்தி மகதோ மற்றும் மோன்ஜுரா ஹஜ்ரா ஆகியோர் ரசிக்கின்றனர். இது பார்வையாளர்களிடமிருந்தும் கைதட்டல்களிடமிருந்தும் விலகியிருக்கும், அமைதியான நட்பின் தருணம்
இந்தப் புகைப்பட கதையின் மாறுபட்ட பதிப்பு சஹாபீடியாவில் அக்டோபர் 25, 2018 அன்று வெளியிடப்பட்டது.
தமிழில்: சோனியா போஸ்