"பழமைவாத சமுதாயத்தில், பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகராக (ஆணாக) வாழ்வது மிகவும் கடினம்", என்று 52 வயதான ஓம்பிரகாஷ் சவான் கூறுகிறார், இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக 8,000 க்கும் மேற்பட்ட தசாவதார நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
தசாவதார் என்பது தெற்கு மஹாராஷ்டிரா மற்றும் வடக்கு கோவாவில் ஒரு மதரீதியிலான நாட்டுப்புற நாடக வடிவமாகும், இது குறைந்தது 500 ஆண்டுகள் பழமையானது. இது விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிய புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது - மச்ச (மீன்), கூர்ம (ஆமை), வராக (பன்றி), நரசிம்ம (சிங்க மனிதன்), வாமன (குள்ளன்), பரசுராமா, ராமர், கிருஷ்ணா (அல்லது பலராமா), புத்தர் மற்றும் கல்கி ஆகியவையே அந்த பத்து அவதாரங்கள். நாடகங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன, பல மணி நேரங்கள் நீளமானவை இந்நாடகங்கள், மற்றும் பொதுவாக பருவகால விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் இந்நாடகம் நிகழ்த்தப்படுகின்றது. பாரம்பரியமாக, இவை கோயில்களுக்குள் நடத்தப்படும் மற்றும் ஆண்கள் மட்டுமே நடிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், நெல் அறுவடை முடிந்தவுடன், தசாவதார நாடக நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்திலும், வடக்கு கோவாவின் சில பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய துவங்குகின்றனர். கோயில்கள், கிராம தெய்வத்திற்கான வருடாந்திர ஜதாராவில் (திருவிழா) நாடக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒப்பந்தங்களை வளங்குகின்றன, இங்குள்ள பார்வையாளர்கள் உள்ளூர்வாசிகளும் மற்றும் மும்பையில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோரும் ஆவர். இந்நிறுவனங்கள் சுமார் 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது - இதில் 8 - 10 நடிகர்கள், 3 இசைக் கலைஞர்கள், மற்றும் 2 சமையல்காரர்களும் உள்ளனர்- இவர்கள் ஒரு பருவத்திற்கு (அக்டோபர் முதல் மே வரை) சுமார் 200 நாடகங்களை நிகழ்த்துகின்றனர்.
சில நேரங்களில், இந்நிறுவனங்களுக்கு வீடுகளில் இவர்களின் நிகழ்ச்சிகளை நடத்த மக்களிடம் இருந்து அழைப்பு வரும், அங்கு புராண கதாபாத்திரங்கள் இருக்கும், ஆனால் கதை கற்பனையாக இருக்கும். அதே வேளையில், கோவிலில் நடக்கும் நாடக நிகழ்ச்சிகள் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட மராத்தியில் இருக்கும், அதுவே மக்களின் வீடுகளில் நடக்கும் நாடக நிகழ்ச்சிகள் உள்ளூர் மால்வானி மொழியில் இருக்கும்.
2014 ஆம் ஆண்டு முதல் யக்ஷினி தசாவதார நிறுவனம் மற்றும் பர்சேகர் நிறுவனம் ஆகிய இரண்டும் பல கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது நான் புகைப்படம் எடுத்துள்ளேன். அவர்களின் நிகழ்ச்சிகள் நள்ளிரவில் துவங்கி சூரிய உதயம் வரை நடைபெறும். மொத்த குடும்பமும் நாடகங்களைக் காண வரும், சிறு குழந்தைகள் கூட அவற்றை பார்க்க தங்கியிருப்பார்கள். இக்கலைஞர்கள் அவர்களின் மேம்பாடுகள் மற்றும் பிரபலமான கதையின் கருத்துக்கள் ஆகிய அனைத்தையும் மக்களின் முன் நாடகங்களில் நிகழ்த்திக் காட்டுகின்றனர்.

சிந்துதுர்க் மாவட்டத்தில் வெங்குர்லா நகரில் நடந்த ஜதாராவில் (திருவிழா), மக்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் படி மான்சீஸ்வரரை வேண்டுகின்றனர். அதற்கு ஈடாக அவர்கள் விளக்குகளை வாங்கி ஒரு தற்காலிக கொட்டகையில் தொங்க விடுகின்றனர். சில நேரங்களில் இந்த பெட்ரோமேக்ஸ் விளக்குகளையே தசாவதார நாடகங்களுக்கான மேடையை அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர். ஒருமுறை நாடகம் நடந்து கொண்டிருக்கையிலேயே சில பழுதான விளக்குகள் புதிய விளக்குகளால் மாற்றப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்!.

"எனது நடிப்பு மற்றும் நிகழ்ச்சியில் நான் எப்போதும் பெண்களின் கௌரவத்தை போற்றி வருகிறேன்", என்று யக்ஷினி தசாவதார நிறுவனத்தின் மூத்த நடிகரான, ஓம்பிரகாஷ் சவான் கூறுகிறார், அவர் பெண் வேடங்களில் நடிப்பதற்காக தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

மகாராஷ்டிரா - கோவா எல்லையில் உள்ள சதர்தா கிராமத்தில், நடிகர்கள் ஒருவருக்கொருவர் ஆடை அணிவதற்கு உதவுகின்றனர். அவர்களின் ஆடைகளையும் மற்றும் அலங்காரப் பொருட்களையும் தங்களுக்கு வரும் சாதாரண வருமானத்திலிருந்து - சராசரியாக, ஒரு நிகழ்ச்சிக்கு 300 ரூபாய் - அவர்கள் வாங்குகின்றனர்.

பார்வையாளர்களில் பேரார்வமுள்ள சில நபர்கள் மான்சீஸ்வரர் ஜதாராவில் ஒரு தற்காலிக உடை மாற்றும் அறையில் தயாராகிக் கொண்டிருக்கும் கலைஞர்களை எட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

ஹர்மல் (ஆரம்போல்) கிராமத்தில் நாடகத்திற்கு முன்பு போர் வீரர்களாக நடிக்கும் நடிகர்கள் சண்டை மற்றும் நடன காட்சிகளை மேம்படுத்துகின்றனர்.

பெரும்பாலான தசாவதார நிகழ்ச்சிகள் நள்ளிரவுக்குப் பிறகு துவங்கி விடியற்காலை வரை அல்லது காலை 6 மணி வரை தொடர்கின்றன. மேடையில் சொல்லப்பட்ட கதைகளால் ஈர்க்கப்பட்ட, இந்த பெண் குழந்தைகள் நாடகத்தைக் காண விழித்திருக்கிறார்கள்.

சமீர் மகாதேஷ்வர் (இடது, கிருஷ்ணராக வேடமணிந்து உடை அணிந்துள்ளார், மேலே உள்ள அட்டை படத்தின் மையத்திலும் அவர் இருக்கிறார்) யக்ஷினி தசாவதார நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் உதய் லாட் (பேய் உடையில் இருப்பவர்) சிந்துதுர்க் மாவட்டத்தில் ஷவந்வாடி தாலுகாவில் உள்ள சதர்தா கிராமத்தில், நிகழ்ச்சி யில் தங்கள் நுழைவிற்காக காத்திருக்கின்றனர்.

நடிகர்கள் ஜதாரா நடைபெறும் கிராமத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களையே தங்கள் நாடகத்தில் பயன்படுத்துகின்றனர். இங்கே அவர்கள் நாடக பாணியிலான வசனத்தை ஒரு மர மேஜையின் மீது நின்று கொண்டு வழங்குகிறார்.

சிந்துதுர்க் மாவட்டத்தின் குடால் தாலுகாவின் பிங்குலி கிராமத்தில் ஒரு திருவிழாவின்போது, ஒரு கலைஞர் தனது மேடை தோற்றங்களுக்கு இடையில், தற்காலிக கட்டமைப்பில், ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வெங்குர்லா போன்ற பெரிய நகரங்களில், நடக்கும் திருவிழா ஏராளமான மக்களை ஈர்க்கும், அதனால் தசாவதாரம் கோயில் வளாகத்துக்கு வெளியே நடத்தப்படுகிறது. அங்கு ஒரு தற்காலிக மேடை அமைக்கப்பட்டுள்ளது மேலும் கலைஞர்கள் பின் வரிசையில் இருப்பவர்களுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக மைக்குகளை பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் வருவாய் மிகக் குறைவாக இருப்பதால் நடிகர்கள் தங்கள் ஆடைகளை உருவாக்க எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துகின்றனர் - இந்த நடிகர் (இடது புறம்) அணிந்திருக்கும் கேன்வாஸ் காலணிகளைப் போல.

ஒரு தசாவதார நிகழ்ச்சியில் இன்றியமையாத கூறு 'கதையின் கருத்து', புராணக் கதையை தவிர இந்த நாடகம் அன்றாட வாழ்க்கையில் அறவியலின் முக்கியத்துவத்தையும் - சில பொழுது போக்குகளையும் வழங்க வேண்டும்.

வெங்குர்லா நகரில் தசாவதார நிகழ்ச்சியை காண கிட்டத்தட்ட 500 பேர் வந்துள்ளனர், அவர்கள் மேடையில் மூன்று பக்கங்களிலும் அமர்ந்து இருக்கிறார்கள். இந்த வகையான நெருக்கமான அரங்குகள், நிறைய நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கின்றது - விளக்குகளை நிகழ்ச்சியின் நடுப்பகுதியில் மாற்றலாம், குழந்தைகள் மேடையில் உலாவும், ஒரு நடிகர் பார்வையாளர்களுக்கு இடையே வந்து நின்று தனது வசனத்தை வழங்கலாம்... ஆகியவை.

மேம்பாடுகள் நிறைந்த ஒரு சிறந்த இரவுக்கு பிறகு, கன்கவ்லி தாலுகாவின் சிவ்தவ் கிராமத்தில், பார்வையாளர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சூரியன் உதயமாகும் நேரத்தில் தங்களது வீட்டிற்களுக்கு பயணத்தைத் துவங்குகின்றனர்.
தமிழில்: சோனியா போஸ்