வலது கரத்தில் வாளையும், இடது கரத்தில் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்தபடி கம்பீரமாக குதிரை மீது அமர்ந்திருக்கும் வீர நங்கை வேலு நாச்சியாரின் சிலை, தமிழக குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் இடம் பெற்ற  பிரபலமான ஒன்று.  இந்திய விடுதலைக்குப் போராடிய வ.வ.சிதம்பரனார், சுப்ரமணிய பாரதி, மருது  சகோதரர்களுடன், அவரது சிலையும் அந்த வாகனத்தில் இடம் பெற்றிருந்தது.

'இந்திய விடுதலைப் போரில் தமிழகம்', என்னும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த வாகனம் , தில்லியில்  நடைபெற இருந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கெடுப்பதற்காகப்  பரிந்துரைக்கப் பட்டிருந்தது.  ஆனால், இதை மத்திய அரசின் ' வல்லுநர் ' குழு நிராகரித்தது. மறுபரிசீலனை  செய்யும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் வைத்த வேண்டுகோள் செவிசாய்க்கப்படவில்லை.  பின்னர் இவ்வாகனம் தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம் பெற்றுப் பிரபலமடைந்தது

அந்த வாகனத்தை நிராகரிக்க, மத்திய அரசின் 'வல்லுநர்' குழு சொன்ன காரணங்களுள் ஒன்று, 'அந்த வாகனத்தில் இடம் பெற்றிருந்த பலரை, இந்தியப் பொதுமக்களுக்குத் தெரியாது', என்பதாகும்.  அந்தக் கருத்தை முற்றிலுமாக மறுத்திருப்பார்.  சிவகங்கைச் சீமையை ஆண்ட வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர். அவருக்கும் தனக்கும், தனிப்பட்ட  தொடர்பு இருப்பதாக நம்புகிறார் அக்‌ஷயா.

'11 ஆம் வகுப்பு படிக்கையில்,  பள்ளியில் நடந்த நாட்டிய நாடகத்தில், நான் வேலு நாச்சியாராக நடித்தேன்.. அது என் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது', என்கிறார் அவர்.

'அது வெறும் நடிப்பும் நடனமும் மட்டுமல்ல.. வேலு நாச்சியாராக நான் நடித்த போது, பாடல் வரிகளின் வழியே வெளிப்பட்ட அவர் ஆளுமையின் வலிமையையும் தைரியத்தையும் என்னால் உணர முடிந்தது'   முறைப்படி செவ்வியல் நடனம் பயின்றிருந்த அக்ஷயாவுக்கு அன்று உடல் நிலை சரியில்லை.. அந்த நாட்டிய நாடகத்தில் பங்கு கொள்ள முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனாலும் பங்கு பெற்றார்..

மேடையிலிருந்து இறங்கி வருகையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது..  அன்று அவர் பங்குபெற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.. கையில் குளுகோஸ் ஊசியுடன் மேடையேறி  பரிசைப் பெற்று வந்தார்.  அது அவருக்கு பெரும் தன்னம்பிக்கையைத் தந்தது. அதன் பின்னர் தைரியம் கூடி, பைக் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக் கொண்டார்.

Tamil Nadu's tableau for the Republic Day parade, with Rani Velu Nachiyar (left), among others. The queen is an inspiration for Akshaya Krishnamoorthi
PHOTO • Shabbir Ahmed
Tamil Nadu's tableau for the Republic Day parade, with Rani Velu Nachiyar (left), among others. The queen is an inspiration for Akshaya Krishnamoorthi
PHOTO • Shabbir Ahmed

வீர மங்கை வேலுநாச்சியார் சிலை இடம் பெற்ற தமிழக அரசின் குடியரசு தின விழா வாகனம். வேலுநாச்சியார் அக்‌ஷயாவின் இன்ஸ்பிரேஷன்

தன் குடும்பத்தின் முதல் பட்டதாரி அக்ஷயா. இன்று  அவர் ஒரு தொழில் முனைவர். தொழில் புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்துபவர்.. தன்னம்பிக்கைப் பேச்சாளர்

அக்‌ஷயாவின் வயது 21 மட்டுமே.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு அருகில் உள்ள அரியப்பம்பாளையம் என்னும் ஊரில், தன பெற்றோர், தம்பி, அத்தை, பச்சைக் கிளிகள், நாய் சகிதம் வசித்து வருகிறார்.   தமிழக வரைபடத்தில், அந்த ஊர் இன்று  ஒரு சிறு புள்ளி மட்டுமே.  இளங்கலை நிர்வாகவியல் படித்த அக்‌ஷயா, என்றேனும் ஒரு நாள், தன் ஊரை இந்தியா முழுதும் அறியப்படும் ஒன்றாக மாற்றும் கனவுகளில் இருக்கிறார்.

தமிழகத்தில், கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் நகரங்களை உள்ளடக்கிய கொங்குப் பகுதி நெடிய தொழில் முனைப்பு வரலாறு கொண்டது. பத்தாம் வகுப்பு கூட படிக்காத, வேளாண் நிலமற்ற பெற்றோருக்கு மகளாகப் பிறந்த அக்‌ஷயா இந்த நீண்ட பாரம்பரியத்தின் புதிய வரவு.

2021 அக்டோபரில், பாரி (PARI) யின் சார்பாக அக்க்ஷயாவைச் சந்தித்த போது, `என் வயது, சில சமயங்களில் சாதகமாக இருக்கிறது; சில சமயங்களில் பாதகமாகவும்`, எனச் சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் அக்‌ஷயா. மஞ்சள் உழவர் திருமூர்த்தியின் தோட்டத்துக்குச் சென்று விட்டு, வீடு திரும்பி, டீ, பஜ்ஜி சகிதமாக, அக்‌ஷயாவுடன் பேசிக் கொண்டிருந்தோம். அது மறக்க முடியாத சந்திப்பாக மாறிப்போனது. முகத்தில் விழும் முடிக்கற்றைகளைப் பின் தள்ளிவிட்டு, தன் அழகிய கனவுகளைத் தெளிவாக விவரித்தார்.

`கனவுகளை இன்றே செயல்படுத்துவதே, அவற்றை அடையும் வழி`, என்பது அவரது விருப்பமான மேற்கோள்களில் ஒன்று. தன்னம்பிக்கைப் பேச்சாளாராக கல்லூரி மேடைகளில் பேசும் போது, இதை அடிக்கடி உபயோகிக்கிறார். அது அவர் தன் வாழ்வில், தொழிலில் கடைபிடிக்கும் ஒன்று. அவரது வணிக முனைப்பான `சுருக்குப்பை ஃபுட்ஸ்`, அவ்வாறுதான் பிறந்தது. சுருக்குப்பை என்பது நம் மூதன்னையர், காசு பணத்தைச் சேமித்து, பத்திரமாக இடுப்பில் செருகி வைத்திருக்கும் ஒன்று.  `சுருக்குப்பை`, பாரம்பரியம், சேமிப்பு, நிலைத்திருப்பு முதலியவற்றின் அடையாளம்

இதை அவர் தொடங்கியது எதிர்பாராதது அல்ல. கல்லூரியில் படிக்கும் போதே, அவரும் நண்பர்களும் இணைந்து, `உளியின் உருவம் ட்ரஸ்ட்`, என்னும் தன்னார்வல முனைப்பை உருவாக்கியிருந்தார்கள்.  `எங்களைப் போன்ற சிற்றூர்களில் வசிக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்ட, மாணவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. எங்கள் நோக்கம், 2025 ஆண்டுக்குள் 2025 தலைவர்களை உருவாக்குவதே`, என்கிறார் அக்‌ஷயா.. மிகப் பெரும் இலக்கு. கேட்டவுடன் மலைப்பாக இருந்தது. ஆனால், அதுதான் அக்‌ஷயா

Akshaya in Thiru Murthy's farm in Sathyamangalam. She repackages and resells the turmeric he grows
PHOTO • M. Palani Kumar

மஞ்சள் உழவர் திருமூர்த்தியின் தோட்டத்தில் அக்‌ஷயா. திருமூர்த்தி உற்பத்தி செய்யும் மஞ்சளை வாங்கி லேபிள் செய்து விற்கிறர் அக்‌ஷயா

கல்லூரியில் படிக்கும் போதே தொழில் முனைவராக வேண்டும் என முடிவெடுத்திருந்த அக்‌ஷயாவுக்கு, கொரொனா லாக்டவுன் பெரும் தடையாக வந்தது. அவரது தொழில் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் தடைகளை உருவாக்கியது. அப்போதுதான், அருகில் உள்ள உப்புப் பள்ளம் கிராமத்தில் வசித்து மஞ்சள் உற்பத்தியாளரும், தொழில் முனைவருமான திருமூர்த்தியைச் சந்தித்தார். திருமூர்த்தி, அக்‌ஷயாவின் பெற்றோர் நடத்தி வந்த வீட்டுச் சாமான்கள் விற்கும் கடையின் கஸ்டமர். நண்பரும் கூட. `எங்க அப்பா  முன்னாடி ரேடியோ, கேஸட் கடை நடத்திகிட்டு இருக்கறப்போ இருந்தே இவரைத் தெரியும்`, என்கிறார் அக்‌ஷயா.

`அங்கிள்`, என அக்‌ஷயா அழைக்கும் திருமூர்த்தி, மஞ்சளை மதிப்புக்கூட்டி, நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்துவரும் வெற்றிகரமான தொழில் முனைவர்.  அவரிடம் இருந்து மஞ்சளை வாங்கி, பாக் செய்து நாமும் விற்றாலென்ன என யோசித்தார் அக்‌ஷயா.  `எடுத்துப் பண்ணுங்க`, என அவரது யோசனையை ஆதரித்தார் திருமூர்த்தி.  `அங்கிள் என்னை ரொம்பவும் உற்சாகப்படுத்தினார்`, எனப் புன்னகைக்கிறார் அக்‌ஷயா. `சுருக்குப்பை ஃபுட்ஸ்`, அப்படித்தான் பிறந்தது.

தனது நிறுவனத்தின் பொருட்களுடன், அவர் பங்கு கொண்ட முதல் வணிகப் பொருட்காட்சி அவருக்குப் பெரும் நம்பிக்கையைத் தருவதாக இருந்தது. `Tan Food 21 Expo’, என்னும் அந்த வணிகக் கண்காட்சி, 2021 ஆண்டு ஃபிப்ரவரி மாதம் மதுரையில் நடந்தது. 2000 க்கும் மேற்பட்டவர்கள் அவரது கடைக்கு வந்து போனார்கள். அந்தப் பொருட்காட்சியில் கிடைத்த பின்னூட்டங்கள் வழியாகவும், பின்னர் சந்தை ஆய்வுகள் வழியாகவும், தான் உருவாக்கும் பொருள்களுக்கு நல்ல ப்ராண்டிங்க் மற்றும் பேக்கிங் அவசியம் என்பதை உணர்ந்தார்.

`நவீனமான வடிவமைப்புடன், புதுவகையான பேக்கிங்குடன் இருப்பதால், நுகர்வோர், எங்கள் ப்ராண்டுடன் தங்களை எளிதில் அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்.  அன்றுவரை, மஞ்சள் தூள் ப்ளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தது. காகித ஸேஷெக்களில் பேக் செய்யப்பட்டு, சுருக்குப்பையுடன் இதை யாரும் பார்த்திருக்கவில்லை.

பெரும் நுகர் பொருள் நிறுவனங்களோ அல்லது தனித்துவமாக இயங்கும் இயற்கை அங்காடிகளோ கூட, இந்த எளிமையான வழியை யோசிக்கவில்லை.. சுருக்குப்பையில் ஒரு வெற்றியைக் கண்டடைந்தார் அக்‌ஷயா. மேலும் முன்செல்ல முடிவெடுத்தார்.

தன் தொழிலை முன்னெடுக்கப் பலரிடம் ஆலோசனை பெற்றார். அதில் முக்கியமானவர், `பாட்டன் சூப்பர் ஃபுட்ஸ்;, என்னும் நிறுவனத்தை நடத்தி வரும் டாக்டர்.எம்.நாச்சிமுத்து மற்றும் ஷண்முக சுந்தரம்.  மதுரை வேளாண் வணிக உருவாக்க நிறுவனம் (Madurai Agri Business Incubation Forum  MABIF) என்னும் நிறுவனம், `சுருக்குப்பை’, க்கு அரசு முத்திரை அங்கீகாரத்தையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணைய ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற உதவியது. இந்தப் பயணத்தில், அக்‌ஷயா, தன்முனைப்புப் புத்தகங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் வாசித்த புத்தகம், `Attitude is Everything’.

Akshaya's Surukupai Foods products on display in Akshaya Home Appliances, the store owned by her parents
PHOTO • M. Palani Kumar

அக்‌ஷயாவின் பெற்றோரின் கடையான `அக்‌ஷயா ஹோம் அப்பளையன்ஸ்; ஷெல்புகளில், `சுருக்குப்பை ஃபுட்ஸ்`, பொருட்கள்

அவருக்கு நமது கல்வியமைப்பின் மீது கடுமையான விமரிசனங்கள் உள்ளன. `எனது இளங்கலை நிர்வாகவியல் படிப்பு, எப்படி ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது என்பதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. தொழில் நடத்தத் தேவையான அடிப்படை வங்கிச் செயல்பாடுகளை, வங்கியில் கடன் வாங்குவது எப்படி என்பது போன்ற வழிகளை ஏன் எனது இளங்கலை நிர்வாகவியல் கல்வி சொல்லிக் கொடுப்பதில்லை?  எனது பேராசிரியர்களுக்கும், துறைத் தலைவர்களுக்கும் ஏன் இது போன்ற விஷயங்களில் அனுபவ அறிதல்கள் இல்லை?`, எனக் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்

தன் வழிமுறைகளின் செயல்திறனை மேம்படுத்த, தினமும், தான் செய்ய வேண்டிய செயல்களை முறையாகப் பட்டியலிட்டுக் கொள்கிறார். ` செயல் திட்டங்களை எனது நாட்குறிப்பேட்டில் எழுதிக் கொள்வேன். செய்து முடிக்கப்பட்டவைகளை அடித்து விடுவேன். செய்ய முடியாமல் போன விஷயங்களை, அடுத்த நாள் மீண்டும் எழுதிக் கொள்வேன்.. இது எனக்கு ஒரு குற்றவுணர்வை உருவாக்கி, செய்யத் தவறிய செயலை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது`, என்கிறார்.

தன் செயல்கள் வழியே பணம் சம்பாதித்து, தனது முதுநிலைப் படிப்பின் மூன்று பருவங்களுக்கான கட்டணத்தைக் கட்டியுள்ளார். முதுநிலைக் கல்விக்காக, அவர் தேர்ந்தெடுத்துள்ள படிப்பு மிகவும் சுவாரஸ்யமானது. `அஞ்சல் வழிக் கல்வி மூலம், முதுநிலை சமூக உழைப்பு (Masters in Social work) படிச்சிட்டிருக்கேன். ஒவ்வொரு செமஸ்டருக்கும் 10000 கட்டணம். தவிர, 5000 தேர்வுக்கட்டணம். அப்பா, மொதல்ல ஐந்தாயிரம் கொடுத்தார். அதுக்கப்பறம் எல்லாமே என் பணம்தான்`, எனச் சொல்லும் அக்‌ஷயாவின் குரலில் பெருமிதம் இழையோடுகிறது.  10000 முதலீட்டில் இதுவரை அவர் ஈட்டிய 40000 லாபம் சம்பாதித்துள்ளார். அதிலிருந்து தன் கல்விக் கட்டணத்தைக் கட்டியுள்ளார்.

அவரிடம் இருந்து பொருட்களை வாங்குவோர், அவற்றை மொத்தமாக வாங்கிக் கொள்கிறார்கள். வாங்குவோரின் தேவைகளுக்கேற்ப அவர் தன் பொருட்களை வடிவமைக்கிறார். அவர் உருவாக்கிய பொருட்களில், மிக அதிகம் விற்பனையாவது, இயற்கை மஞ்சள் பொருட்கள் அடங்கிய திருமண அழைப்பிதழ் பரிசுப் பொருள்தான்.  இதை அவர்தான் முதலில் உருவாக்கியுள்ளேன் எனச் சொல்கிறார். மஞ்சள் தூள் பேக், நாட்டு ரக கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய், கீரை விதைகள் கொண்ட 5 கிராம் பேக்குடன் கூடிய ஒரு `நன்றி` அட்டை. அத்துடன் ஒரு அழகிய சுருக்குப்பை.. இதுதான் அவர் வடிவமைத்து வெற்றிகரமாக விற்பனையாகும் பரிசுப் பொருள்.

`திருமணத்துக்கு உறவினர்களையும், நண்பர்களையும் அழைக்க நேரில் செல்கையில், திருமண வீட்டார், அழைப்பிதழுடன், இந்தப் பரிசையும் சேர்த்துக் கொடுக்கிறார்கள். மங்கலகரமான, உடல் நலனும், இயற்கை நலனும் நாடும் பரிசு இது`, என்கிறார் அக்‌ஷயா. அதிக விலையுள்ள, வித்தியாசமான பரிசுகளை விரும்புபவர்களுக்கு, அதிக மஞ்சள் தூளை அழகிய கண்ணாடிக் குடுவைகளில் பொதிந்து தருகிறார். அவரிடம் பொருட்களை வாங்கியவர்கள் மற்றவர்களிடம் சொல்வதைக் கேட்டு, மேலும் அவருக்கு ஆர்டர்கள் வருகின்றன. அண்மையில், 400 ரூபாய் விலையுள்ள 200 பரிசுப் பொருட்களை வடிவமைத்துக் கொடுத்தேன் என்கிறார்.

Left: Akshaya with a surukupai, or drawstring pouch, made of cotton cloth. Right: The Surukupai Foods product range
PHOTO • M. Palani Kumar
Left: Akshaya with a surukupai, or drawstring pouch, made of cotton cloth. Right: The Surukupai Foods product range
PHOTO • M. Palani Kumar

இடது: பருத்தித் துணியில் உருவாக்கப்பட்ட `சுருக்குப்பையுடன்`, அக்‌ஷயா. வலது: `சுருக்குப்பை ஃபுட்ஸ்`, பொருள் வகைகள்

சத்தியமங்கலத்தில் அவரைச் சந்தித்த சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். `பேங் மானேஜர் கூப்பிடுகிறார்.. மறுபடியும் கூப்பிடறேன்;, என அழைப்பைத் துண்டித்தவர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அழைத்தார்.  தன் தொழிலுக்காக வங்கியில் கடன் கேட்டிருந்ததாகவும், அதைப் பற்றி நேரில் ஆய்வு செய்ய வங்கி மேலாளர் வந்திருந்ததாகவும் சொன்னார். அவருக்கு அரசு வங்கி ஒன்று 10 லட்சம் வங்கிக் கடன் அனுமதி கொடுத்துள்ளது. கடனுக்காக வங்கியை அணுகி, தேவையான படிவங்களைத் தானே நிரப்பி, வங்கி அதிகாரிகளிடம் தன் தொழிலை விளக்கி, 9% வட்டியில், வங்கிக் கடனைப் பெற்றுள்ளார் அக்‌ஷயா. இந்தப் பணத்தில், மிக நவீனமான முறையில், சுத்தமாக மஞ்சள் தூள் அரைத்து, பேக் செய்யும் ஒரு இயந்திரத்தை வாங்க உள்ளார். இதன் மூலம், தன் தொழிலை விரைவாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளார்.

`என்னிடம் ஒரு டன் மஞ்சள் தூளுக்கான ஆர்டர் உள்ளது. எனவே, மஞ்சளை வணிகர்களிடம் இருந்தது வாங்கினேன்`, என்கிறார் அக்‌ஷயா.  `இதை அரைத்துப் பேக் செய்யும் மெஷின் சிக்கலானது. கல்லூரியில், விளம்பரங்களை வடிவமைப்பது எப்படின்னு கத்துக்கிட்டேனே ஒழிய, இந்த ஆட்டோமேட்டிக் மெஷின்கள்ல இருக்கற சென்சர்களைப் பத்தி ஒன்னும் தெரியாது. பேப்பர் ரோல சரியா வைக்கலன்னா, மொத்த பேட்சுமே வேஸ்டாயிரும்`.

இயந்திரங்கள் மூலம் என்னென்ன விஷயங்கள் தப்பாகப் போகும் எனப் பட்டியலிடுகிறார். ஆனாலும், அதை உபயோகிப்பதே, தன் தொழிலை விரிவாக்கும் என்பது அவரது நம்பிக்கை.  இரண்டு பகுதி நேர உதவியாளர்களின் உதவியுடன், மிக விரைவில் மாதம் 2 லட்சம் வணிக அளவை எட்டி விடும் நம்பிக்கையுடன் இருக்கிறார். தன் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டக் கிடைத்த லாபத்தை விட அதிகமான லாபத்தையும் தரும் என்பது அவரது கணிப்பு.

வேளாண் வணிக அமைப்பு  ஆண் மேலாதிக்கம் நிறைந்த சமூக வெளி. அக்‌ஷயாவின் தொழில், லாபம் என்னும் தனிநபர் நலனைத் தாண்டி, வணிக வேளாண் சங்கிலிகளின் பாரம்பரிய அமைப்பை மாற்றக் கூடிய ஒன்று.

`இம்முறையில், மஞ்சள் விளையும் இடத்திலேயே பதப்படுத்தப்படுகிறது. மதிப்புக் கூட்டப்படுகிறது. இது மிகப் பெரிய விஷயம்`, என்கிறார் உஷா தேவி வெங்கிடாச்சலம்.  இவர், காங்கயத்தில், `க்ருஷி ஜனனி`, என்னும் சமூக நலன் நாடும் நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். இது, வேளாண் சூழலை மீட்டுருவாக்கி அதை லாபகரமாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

`உணவு வணிகச் சங்கிலியில் மிகப் பெரும் பிரச்சினையே அதன் செயல்பாடுகள், ஓரிடத்தில் குவிந்து விடுவதுதான். அமெரிக்காவில் விளையும் ஆப்பிள், தென் ஆப்பிரிக்காவில் பாலீஷ் செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது. கொரோனாப் பெருந்தொற்றுக்குப் பின்னான காலத்தில், இது இனிமேலும் சாத்தியமில்லை. இது போன்ற உணவுப் பொருள் போக்குவரத்து, சுற்றுச் சூழலை எப்படிச் சிக்கலாக்குகிறது என்பதை உணர்ந்தால், இது எவ்வளவு பெரும் பிரச்சினை என்பது புரியும்`, என நமக்கு விளக்குகிறார் உஷா.

The biodegradable sachets in which Akshaya sells turmeric under her Surukupai Foods brand. She says she learnt the importance of branding and packaging early in her entrepreneurial journey
PHOTO • Akshaya Krishnamoorthi
The biodegradable sachets in which Akshaya sells turmeric under her Surukupai Foods brand. She says she learnt the importance of branding and packaging early in her entrepreneurial journey
PHOTO • Akshaya Krishnamoorthi
The biodegradable sachets in which Akshaya sells turmeric under her Surukupai Foods brand. She says she learnt the importance of branding and packaging early in her entrepreneurial journey
PHOTO • Akshaya Krishnamoorthi

அக்‌ஷயாவின், `சுருக்குப்பை ஃபுட்ஸ்`, பொருட்கள் மக்கக் கூடிய காகித ஸேஷக்களில் பேக் செய்யப்படுகின்றன. பொருளைப் ப்ராண்ட் செய்வது, தனித்துவமாக பேக் செய்வது போன்றவற்றின் முக்கியத்துவத்தை, தொழில் தொடங்கிய போதே கற்றுக் கொண்டேன் என்கிறார் அக்‌ஷயா

அக்‌ஷயாவின் நீண்ட காலத் தொழில் திட்டங்கள், சுற்றுச் சூழல் போன்ற பெரும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமா எனத் தெரியாது.. ஆனால், மஞ்சள் சாக்லேட், மஞ்சள் சிப்ஸ் என அவரது புதுமையான ஐடியாக்கள், வழக்கமான வணிகத்தில், மாறுதல்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. இவை பெரிதாக வளரும் சாத்தியங்கள் கொண்டவை என அக்‌ஷயா எண்ணினாலும், குறைந்த பட்சம் உள்ளூர் வணிகத்தில் மாற்றங்களைச் செய்யும் என நம்பலாம்.

மஞ்சள் சாக்லேட், சிப்ஸ் போன்ற பொருட்கள் ஒரு சில நுகர்வோர் மட்டுமே வாங்கும் உயர் விலைப் பொருளாக இருக்குமே என்னும் என் சந்தேகத்திற்கு, `அதை வாங்கவும் ஆட்கள் இருப்பாங்க`, எனப் பதில் சொல்கிறார். `பெப்சி, கோக்னு வாங்கற மக்கள், நன்னாரி சர்பத்தையும், பன்னீர் சோடாவையும் வாங்கறாங்க.. அதே மாதிரி, இதுவும் வெற்றிகரமா மாற வாய்ப்புகள் இருக்கு. மேலும் இது உடலுக்கும் நல்லது`, என்கிறார் உறுதியாக

அடுத்த சில வருடங்களில், கிராமப்புரங்கள் செழிப்பாக வளரும்.. அதற்கான பொருட்களை நாம உருவாக்க வேண்டும். அது நுகர்வோரின் வாங்கு சக்திக்கேற்ப, சிறு சிறு அளவாக இருக்க வேண்டும் என்கிறார் அக்‌ஷயா.. `250 கிராம் இயற்கை பூசு மஞ்சள் தூள் 165 ஆகுது.. நான், ஒரு சின்ன பேக்கட்டா, ஒரு முறை மட்டும் உபயோகிக்கிற மாதிரி செய்யறேன்`, என்கிறார்.

தன் பெற்றோரின் கடையில் இருக்கும் தட்டிலிருந்து ஒரு சுருக்குப்பையை எடுத்து நம்மிடம் காட்டுகிறார் அக்‌ஷயா.  அதைப் பிரித்தால், உள்ளேன் 6 கிராம் மஞ்சள் தூள் பாக்கட்டுகள் 12 உள்ளன. `இது 120 ரூபாய்.. ஆனா, வாங்க முடியாதவங்க ஒரு பாக்கட் 10 ரூபாய்னு வாங்கலாம்`, என்கிறார் அக்‌ஷயா. இந்த பேப்பர் பாக்கட்டுகள், ஈரப்பதம் செல்லாமலிருக்க உள்ளே ஒரு சிறு மெழுகுப் பூச்சு கொண்டவை. எளிதில் மக்கக் கூடியவை.

இந்தப் பொருளை உருவாக்கித் தயாரித்துத் தருபவர் திருமூர்த்தி. அவரிடமிருந்து வாங்கி, லேபிள் செய்து விற்கிறார் அக்‌ஷயா.. `சின்ன பாக்கட்ங்கறதால, இதுல வேஸ்டாகறது குறையும். ஈரப்பதம் அணுகாது. பத்து ரூபாய்ங்கறது கட்டுபடியாகற விலை.. கஸ்டமர்ஸ் இத ட்ரை பண்ணிப்பாப்பாங்க`, என்கிறார். வாய் மூடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். `எப்போதுமே இதே  எனர்ஜியோடதான் இருப்பேன்`, எனச் சிரிக்கிறார்.

அவரின் தொழில் முயற்சிகளுக்கு, பெற்றோர் ஆதரவாக இருக்கிறார்கள்.  அவர்களின் வீட்டு உபயோகச் சாமான்கள் விற்கும் கடைகளில் அக்‌ஷயாவின் பொருட்கள் விற்கப்படுகின்றன.  அக்‌ஷயாவின் முடிவுகளுக்கு அவரது பெற்றோர் தொடர்ந்து ஆதரவும், மரியாதையும் கொடுத்து வருகிறார்கள்.

“I always have energy,” she says, laughing
PHOTO • M. Palani Kumar

` அதிக எனர்ஜிதான்.. எப்பவுமே,` எனச் சிரிக்கிறார் அக்‌ஷயா

சில வருடங்களுக்கு முன்பு, தன் குல தெய்வம் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்ட போது, பலரும் அதை விமரிசித்தார்கள். ஆனால், அக்‌ஷயாவின் பெற்றோர், `நீ அழகா இருக்கே`. ந்னு சொல்லி, அவர் பக்கம் நின்றார்கள். `தொடர்ந்து எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.. அதனாலத்தான் அடிச்சிகிட்டேன். அப்போ, இந்த முடியை கேன்சர் நோயாளிகளுக்குக் கொடுத்திருக்கலாம்.. முடியாம போச்சு.. ஆனா, மொட்டை அடிச்சிகிட்டது எனக்கு பெரும் தன்னம்பிக்கையக் கொடுத்துச்சு`, என்கிறார்.  `என்னோட அடையாளம் என் முடியில்லைன்னு புரிஞ்சிகிட்டேன்..  நான் எப்படி இருந்தாலும், எங்கப்பாம்மாவுக்கு பிடிக்கும்.. அதனால, பிரச்சினையே இல்ல`.

அக்‌ஷயாவின் பெற்றோர் அவரின் கனவுகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர் வகுப்பில் உடன் படித்த 60 பெண்களில், பலருக்குத் திருமணமாகி விட்டது. `கொரொனா லாக்டௌன்கறதால, பல பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டங்க.. சிலர் வேலைக்குப் போறாங்க.. ஆனா, யாருமே தொழில் தொடங்கல`.

அக்‌ஷயாவின் வெற்றி இந்த நிலையை மாற்றும் என நம்புகிறார் உஷா தேவி.  `சிறு கிராமத்தில் பிறந்த பெண், வெளியே வந்து ஒரு தொழிற்சாலையை உருவாக்கி, தொழிலை உலகெங்கும் எடுத்துச் செல்லும் இலக்கை வைத்துச் செயல்படுவது, பெரும் உத்வேகத்தை உருவாக்கக் கூடிய ஒன்று. இது மற்றவர்களுக்கு குறிப்பாக அவர் வயது இளைஞர்களுக்கு வழிகாட்டும்`, என்கிறார்

அக்‌ஷயாவின் அடுத்த இலக்கு, எம்.பி.ஏ படிப்பது. `எல்லாரும் படிச்சிட்டு தொழில் ஆரம்பிப்பாங்க.. நான் நேர்மாறாச் செய்யறேன்`. முதுநிலைக் கல்வி, அவருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறார். தன் ஊரில் இருந்தது கொண்டே, அவருக்கான ஒரு ப்ராண்டை வெற்றிகரமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறார். தனக்கென ஒரு இணைய தளத்தை உருவாக்கியுள்ளார். இன்ஸ்டாக்ராம், லிங்ட் இன் போன்ற தளங்களில், தனது ரெசிப்பிகளை, ஹேஸ்டாக்குகளைப் பிரபலப்படுத்தி வருகிறார் (உதாரணமாக #turmericlatte). உழவர் உற்பத்தி நிறுவனங்களுடனும், ஏற்றுமதியாளர்களுடனும் தொடர்பு கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார்.  `என் போன்றவர்கள் உழவர் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப் படுத்துவோம். உழவர்கள் அந்தக் கவலையை விட்டு விட்டு, உற்பத்தியில் கவனம் செலுத்த முடியும்`, என்கிறார். நிலம், சந்தை, வீடு என்னும் மூன்று புள்ளிகளையும், இடைவெளியில்லாமல் இணைப்பதே நோக்கம்.

`எங்கள் பொருட்கள் வாங்கும் நுகர்வோர், அதன் தனித்துவத்தால் ஈர்க்கப்படுவார்கள். எங்கள், `சுருக்குப்பை`, அவர்கள் வீட்டில் இருப்பது, எங்கள் ப்ராண்டை அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். திரும்பவும் எங்கள் பொருட்களை வாங்குவார்கள்`, என்கிறார் நம்பிக்கையுடன். `நம் பொருட்கள் உருவாகும் கதையை நாம் எப்படி நம் நுகர்வோருக்குச் சொல்கிறோம் என்பதே மிக முக்கியம். அதன் வெற்றி, தமிழ்நாட்டின் மஞ்சளையும், மஞ்சள் பொருட்களையும் உலகெங்கும் கொண்டு செல்லும்`, என விரிகிறது அக்‌ஷயாவின் கனவு.

இந்த ஆய்வு, அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டு ஆய்வு நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.

அட்டைப் படம்: எம். பழனி குமார்

தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி

Aparna Karthikeyan
aparna.m.karthikeyan@gmail.com

Aparna Karthikeyan is an independent journalist, author and Senior Fellow, PARI. Her non-fiction book 'Nine Rupees an Hour' documents the disappearing livelihoods of Tamil Nadu. She has written five books for children. Aparna lives in Chennai with her family and dogs.

Other stories by Aparna Karthikeyan
Translator : Balasubramaniam Muthusamy

The son of a small farmer, Balasubramaniam Muthusamy studied agriculture and rural management at IRMA. He has over three decades of experience in food processing and FMCG businesses, and he was CEO and director of a consumer products organisation in Tanzania.

Other stories by Balasubramaniam Muthusamy