“யமுனையுடன் எங்களுக்கு உறவு உண்டு. எப்போதும் நாங்கள் ஆற்றுக்கு அருகேதான் இருந்திருக்கிறோம்.”
விஜேந்தர் சிங்தான் ஆற்றுடனான தன் குடும்பத்தின் பிணைப்பை இவ்வாறு குறிப்பிடுகிறார். தில்லியின் யமுனைக்கரையின் சமவெளிகளில், மல்லா (படகோட்டி) சமூகத்தை சேர்ந்த அவர்கள் பல காலமாக தங்கி விளைவித்து வாழ்ந்திருந்தார்கள். 1,376 கிலோமீட்டர் நீள ஆற்றின் 22 கிலோமீட்டர் நீளம் தேசத்தின் தலைநகரினூடாக பயணிக்கிறது. ஆற்றின் சமவெளி பரப்பு மொத்தம் 97 சதுர கிலோமீட்டர் அளவு கொண்டது.
விஜேந்தர் போன்ற 5,000-க்கும் மேலான விவசாயிகள் 99 வருட பட்டா உரிமையை இந்த நிலத்துக்கு வைத்திருந்தனர்.
பிறகு புல்டோசர்கள் வந்தன.
ஜனவரி 2020-ம் ஆண்டின் கொடும் பனிக்காலத்தில் நகராட்சி அதிகாரிகள் அவர்களின் வசிப்பிடங்களை பயிர்களோடு சேர்த்து ஓர் உயிரியல் பூங்கா கட்டும் பணிக்காக அழித்தனர். அருகே இருந்த கீதா காலனியில் அவசரவசரமாக குடும்பத்தை இடம்பெயர்த்து வாடகைக்கு தங்க வைக்க வேண்டிய நிலை விஜேந்தருக்கு ஏற்பட்டது.
ஒரே நாளில் அந்த 38 வயது விவசாயியின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. மனைவியும் 10 வயதுக்குட்பட்ட மகன்கள் மூன்று பேரும் கொண்ட குடும்பத்துக்காக நகரத்தில் வாகன ஓட்டியாக அவர் பணியாற்றுகிறார். இந்த நிலைக்கு ஆளானது அவர் மட்டுமல்ல. வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட பிறர் பெயிண்டர்களாகவும் தோட்டக்காரர்களாகவும் காவலாளிகளாகவும் மெட்ரோ ரயில் நிலையத் தூய்மைப் பணியாளர்களாகவும் பணியாற்றும் நிலையை எட்டினர்.
“லோஹா புல் பகுதியிலிருந்து ITO பகுதி வரையிலுள்ள சாலை வரை நீங்கள் ஏகப்பட்ட கச்சோரி தின்பண்ட வியாபாரிகளை பார்க்கலாம். அவர்கள் அனைவரும் விவசாயிகள்தான். நிலம் பறிபோனபின், ஒரு விவசாயி என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார் அவர்.
சில மாதங்கள் கழித்து, மார்ச் 24 2020-ல் நாடு எதிர்கொண்ட ஊரடங்கு குடும்பத்தை இன்னும் அழுத்தத்துக்குள் தள்ளியது. விஜேந்திராவின் இரண்டாவது மகனுக்கு அப்போது வயது ஆறு. அவருக்கு பெருமூளைவாதம் இருந்தது. மாதந்தோறும் அவருக்கு மருந்துகள் வாங்குவது சிக்கலானது. யமுனாக்கரையிலிருந்து வசிப்பிடங்கள் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட 500 குடும்பங்களுக்கும் அவற்றின் வருமானத்துக்கும் அரசு எந்தவித தீர்வையும் வழங்கவில்லை.
“தொற்றுக்கு முன், காலிஃபிளவர், பச்சைமிளகாய், கடுகு, பூக்கள் போன்றவற்றை விற்று 8000லிருந்து 10000 ரூபாய் வரை எங்களால் சம்பாதிக்க முடிந்தது,” என்கிறார் கமல்சிங். அவரது குடும்பத்தில் அவரோடு சேர்த்து, மனைவி, 16 மற்றும் 12 வயதுகளில் இரு மகன்கள், 15 வயது மகள் என மொத்தம் ஐந்து பேர் இருக்கின்றனர். 45 வயதாகும் அந்த விவசாயி, தன்னார்வ குழுக்கள் கொடுக்கும் உணவை சார்ந்து ஒரு விவசாயி வாழ்வது எத்தனை துயரமானதாக இருந்தது என்பதை நினைவுகூருகிறார்.
குடும்பத்துக்கு இருந்த ஒரே ஒரு மாடு கொடுத்த பாலை விற்று வந்த பணம்தான் தொற்றுக்காலத்தில் அவர்களுக்கு இருந்த ஒரே வருமானம். மாதந்தோறும் கிடைத்த 6000 ரூபாய் அவர்களின் செலவுக்கு கட்டுபடியாகவில்லை. “என்னுடைய குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்தது,” என்கிறார் கமல். “நாங்கள் வளர்த்த காய்கறிகள் எங்களின் உணவுக்கு பயன்பட்டிருக்கும். அந்த பயிர்களை அறுவடை செய்திருப்போம். ஆனால் அவர்கள் (அதிகாரிகள்), தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணை என சொல்லி மொத்தத்தையும் அழித்து விட்டனர்,” என்கிறார் அவர்.
சில மாதங்களுக்கு முன் 2019 செப்டம்பர் மாதத்தில், உயிரியல் பூங்கா உருவாக்கும் வகையில் யமனா சமவெளிக்கு வேலியடைக்கும்படி தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஓர் அருங்காட்சியகம் கட்டப்படும் திட்டமும் கூட இருந்தது.
“வளமான நிலத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஆற்றைதான் நம்பியிருந்தனர், அவர்கள் என்ன ஆனார்கள்?” எனக் கேட்கிறார் பல்ஜீத் சிங். (உடன் படிக்க: ‘டெல்லியில் விவசாயிகள் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்’ ). 86 வயதாகும் அவர், தில்லி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். 40 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும் அவர், “உயிரியல் பூங்காக்கள் கட்டி யமுனையை வருமானத்துக்கான ஊற்றாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது,” என்கிறார்.
விவசாயிகளை கொஞ்ச காலமாகவே வெளியேறுமாறு தில்லி வளர்ச்சி ஆணையம் சொல்லிக் கொண்டிருந்தது. அதிகாரிகள் புல்டோசர்களை கொண்டு வருவதற்கு முன் பத்து வருடங்களாகவே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மீட்பு மற்றும் மீட்டுருவாக்க பணி நடத்த முடியும் என்றார்கள்.
தில்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக்கும் முயற்சியின் சமீபத்திய பலிதான் யமுனா விவசாயிகளின் காய்கறி நிலங்கள். ஆற்றங்கரை, ரியல் எஸ்டேட்டுக்காக தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. “ நகரின் வளர்ச்சி ஆணையத்துக்கு, இந்த சமவெளிகள் வளர்ச்சிக்காக காத்திருக்கும் பகுதி போல் தோன்றியதுதான் துயரம்,” என்கிறார் ஓய்வு பெற்ற வனச்சேவை அலுவலரான மனோஜ் மிஸ்ரா.
*****
உலக ‘முட்டாள்தன’ நகரத்தில் விவசாயிகள் இருக்க முடியாது. எப்போதும் இருக்க முடியாது.
70களில் ஆசிய விளையாட்டுக்கான கட்டுமானப் பணிகளில் சமவெளியின் பெரும்பகுதி விடுதிகளுக்கும் விளையாட்டரங்கமும் கட்ட எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்லுயிர் மையமாக நகரத்தின் மாஸ்டர் பிளானில் இப்பகுதி அடையாளங்காட்டப் பட்டிருந்தது கூட புறக்கணிக்கப்பட்டது. தொடர்ந்து 90களின் பிற்பகுதியில் காமன்வெல்த் விளையாட்டு கிராமம் இந்த சமவெளியில் உருவாக்கப்பட்டது. “சமவெளியில் கட்டுமானங்கள் கூடாது என்ற 2015ம் ஆண்டின் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவையும் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் மிஸ்ரா.
ஒவ்வொரு கட்டுமானமும் யமுனையின் விவசாயிகளுக்கு முடிவுரை எழுதியது. பெரியளவிலான வெளியேற்றங்கள் நிகழ்ந்தன. “ஏழைகள் என்பதால் எங்களை விரட்டுகிறார்கள்,” என்கிறார் விஜேந்தரின் 75 வயது தந்தை ஷிவ் ஷங்கர். யமுனையின் சமவெளியில் தன் வாழ்க்கை முழுவதும் விவசாயம் பார்த்தவர் அவர். தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் சமீபத்தில் வரும் வரை அவர் விவசாயம் பார்த்தார். “இந்தியாவின் தலைநகரத்திலேயே விவசாயிகள் இப்படிதான் நடத்தப்படுகின்றனர். சில பேர் வந்து செல்லக் கூடிய அருங்காட்சியகம் மற்றும் பூங்காவுக்காக விரட்டியடிக்கப்படுகின்றனர்,” என்கிறார் அவர்.
அதே நேரத்தில், இந்தியாவின் வளர்ச்சிக்காக பளபளப்பான கட்டுமானங்களை கட்ட உழைத்து அருகே இருந்த குடிசைகளில் வாழ்ந்த தொழிலாளர்களும் ஆற்றங்கரையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். விளையாட்டுக்கான வசதிகள் நிறைந்த ‘தேச மதிப்பு’ நிறைந்த பகுதிகளில் அவர்களது குடிசைகளுக்கு இடமில்லை.
”யமுனை சமவெளிகளென அடையாளப்படுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவை உங்களுக்கோ எனக்கோ சொந்தமில்லை. ஆற்றுக்குதான் சொந்தம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் (2015-ல்) உத்தரவிட்டது,” என்கிறார் தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கிய யமுனா கண்காணிப்புக் குழுவுக்கு தலைமை தாங்கும் பி.எஸ்.சஜ்வன். தீர்ப்பாயம் அதற்கான ஆணையைத்தான் பின்பற்றுகிறது.
“இங்கிருந்து வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் என்ன செய்வது?” எனக் கேட்கிறார் 75 வருடங்களாக கரையோரத்தில் விவசாயம் செய்து வாழ்ந்த ரமாகாந்த் திரிவேதி.
தில்லி சந்தைகளில் பிரதானமாக விற்பனை ஆகும் பலவகை பயிர்கள் 24,000 ஏக்கர்களில் விவசாயிகளால் விளைவிக்கப்படுபவை. ”ஆற்றின் அசுத்தமான நீரிலிருந்து விளைவிக்கப்படும் பயிர்கள் உணவாவது ஆபத்து,” என்கிற தேசிய பசுமையின் கூற்று ஷிவ் ஷங்கர் போன்றவர்களை குழப்பத்தில் தள்ளியிருக்கிறது. “பிறகு ஏன் பல பத்தாண்டுகளாக எங்களை இங்கு தங்க வைத்து நகரத்துக்கு விளைவிக்க வைத்தார்கள்?” எனக் கேட்கிறார் அவர்.
காலநிலை மாற்றம் எப்படி வாழ்வாதாரங்களை பாதிக்கிறது என்பதை பற்றி எழுத 2019ம் ஆண்டில் சென்றபோதுதான் முதன்முறையாக ஷிவ் ஷங்கரையும் விஜேந்தரையும் பிற குடும்பங்களையும் பாரி சந்தித்தது. பெருநகரம், சிறு விவசாயிகள் மற்றும் அழிந்து வரும் ஒரு நதி கட்டுரையைப் படிக்கவும்.
*****
ஐக்கிய நாடுகள் சபை யின் ஆய்வின்படி அடுத்த ஐந்து வருடங்களில் - 2028-ல் தில்லி உலகின் பிரபலமான நகராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மக்கள்தொகையும் அதிகரித்து 2041ம் ஆண்டில் 28 முதல் 31 மில்லியனாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் மக்கள்தொகை, கரைகளுக்கும் கரையின் சமவெளிகளுக்கு மட்டுமல்லாமல் நீர்நிலைக்கும் அழுத்தம் கொடுக்கும். “யமுனை ஒரு பருவகால நதி. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் 10-15 நாட்கள் மழை பொழியும்,” என்கிறார் மிஸ்ரா. குடிநீர் தேவைக்கு தலைநகரம் யமுனாவை சார்ந்திருக்கும் விஷயத்தை பற்றி பேசுகையில் இப்படி குறிப்பிட்டார் அவர். யமுனைக்கு நீர் கிடைக்கும் வழிகளில் ஒன்று நிலத்தடி நீராதாரம்.
Economic Survey of Delhi 2021-2022 குறிப்பிட்டது போல தில்லி வளர்ச்சி ஆணையம் நகரமயமாக்கலை நடத்தி முடிக்க முன்மொழிந்திருக்கிறது.
”தில்லியின் விவசாய நடவடிக்கை சரிந்து கொண்டிருக்கிறது…” என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
யமுனையை சார்ந்து வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டு வரை தில்லியில் 5,000லிருந்து 10,000 வரை இருந்தது என்கிறார் மனு பட்நகர். இந்திய தேசிய கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்துக்கான அறக்கட்டளையின் (INTACH) தலைமை இயக்குநர் அவர். அதே மக்களை கொண்டே அப்பகுதி அழகுபடுத்தப்படலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார். “மாசுபாடு குறைந்ததும் மீன் வளம் அதிகரிக்கும். நீர் விளையாட்டுகள் கொண்டு வரலாம். சமவெளியின் 97 சதுர கிலோமீட்டர் பரப்பில் தர்பூசணிகளை விளைவிக்கலாம்,” என்றார் அவர் 2019ம் ஆண்டில் பாரி அவரை சந்தித்தபோது. INTACH பதிப்பித்த Narratives of the Environment என்கிற புத்தகத்தை அவர் கொடுத்தார்.
*****
தொற்று தலைநகரை பீடித்த காலக்கட்டத்தில், வெளியேற்றப்பட்ட 200 குடும்பங்களும் அடிப்படை உணவுக்கு அலைய வேண்டியிருந்தது. 2021ம் ஆண்டின் தொடக்கம் வரை 4000லிருந்து 6000 ரூபாய் வரையிருந்த ஒரு குடும்பத்தின் வருமானம் ஊரடங்கில் ஒன்றுமில்லாமல் போனது. “நாளுக்கு இரண்டு வேளை சாப்பாடாக இருந்தது, ஒருவேளை உணவாக மாறியது. ஒரு நாளின் இரு வேளை தேநீர் கூட எங்களுக்கு ஒன்றாக குறைந்தது,” என்கிறார் திரிவேதி. எங்கள் குழந்தைகள் பசியாற, தில்லி வளர்ச்சி ஆணையம் முன்மொழிந்த பூங்காவுக்கான வேலை செய்யக் கூட நாங்கள் தயாராக இருந்தோம். அரசாங்கம் எங்களை கவனித்திருந்திருக்க வேண்டும். எங்களுக்கு சம உரிமை இல்லையா? எங்களின் நிலத்தை எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்வதற்கான வழியைத் தாருங்கள்?”
2020ம் ஆண்டின் மே மாதத்தில் உச்சநீதிமன்ற வழக்கில் விவசாயிகள் தோற்று தங்களின் குத்தகைகளை இழந்தனர். மேல்முறையீடுக்கு தேவைப்பட்ட 1 லட்ச ரூபாய் கூட அவர்களிடம் இல்லை. வசிப்பிடம் இல்லாமை அவர்களுக்கு நிரந்தரமானது.
“தினக்கூலி வேலையும் காரில் சுமையேற்றும் வேலையும் ஊரடங்கில் இல்லாமல் போனது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. அடிப்படை மருந்துகள் வாங்கக் கூட பணமில்லை,” என்கிறார் விஜேந்தர். அவரின் 75 வயது தந்தை நகரத்தில் கிடைத்த வேலைகளை செய்ய வேண்டியிருந்தது.
“முன்பே விவசாயத்தை கைவிட்டுவிட்டு வேறு வேலை நாங்கள் பார்த்திருக்க வேண்டும். பயிரில்லாதபோது உணவின் அவசியத்தையும் விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மக்கள் உணர்வார்கள்,” என்கிறார் அவர் கோபமாக.
*****
செங்கோட்டையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தானும் குடும்பமும் பிற விவசாயிகளும் வாழ்ந்த காலத்தை ஷிவ் ஷங்கர் திரும்பிப் பார்க்கிறார். அங்கிருந்துதான் பிரதமர் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். உரைகளை கேட்க தொலைக்காட்சியோ ரேடியோவோ கூட தேவைப்பட்டதில்லை என்கிறார் அவர்.
“பிரதமர் பேசும் வார்த்தைகள் காற்றிலேயே எங்களுக்கு கேட்கும்… எங்களின் வார்த்தைகள்தான் அவர்களை எட்ட முடியவில்லை.”
தமிழில் : ராஜசங்கீதன்