பசந்த் பிந்த் வீட்டுக்கு வந்து சில நாட்கள்தான் ஆகின்றன. விவசாயத் தொழிலாளரான அவர் கடந்த சில மாதங்களாக பாட்னாவின் வயல்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஜெஹனாபாத் மாவட்டத்தில் அவரது வீடு இருக்கும் சலெமன்பூர் கிராமத்திலிருந்து பாட்னாவுக்கு சில மணி நேரங்கள் தூரம்தான்.
சங்கராந்தி விழா ஜனவரி 15, 2023-ல் முடிந்த அடுத்த நாள் தனது தினக்கூலி வேலைக்கு அவர் திரும்ப வேண்டும். பிகாருக்கு ஒன்றாக செல்வதற்காக பிற ஊழியர்களை அழைக்க அருகாமை கிராமம் சந்தரியாவுக்கு அவர் சென்றார். அந்த தொழிலாளர் குழுவுக்கு நிச்சயம் வேலை கிடைத்திருக்கும்.
அங்கு சிலருடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது காவலர்களையும் கலால் துறை அதிகாரிகளையும் கொண்ட வாகனம் வந்தது. அவர்கள், பிகார் மதுவிலக்கு மற்றும் கலால் (திருத்த) சட்டம் 2016 -ன்கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட மதுவுக்கு எதிரான படையைச் சேர்ந்தவர்கள். “பிகார் மாநில எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு மது விலக்கு மற்றும் போதை விலக்கு ஆகியவற்றை அமல்படுத்தி, உறுதிபடுத்துவது” அவர்களின் பணி.
காவலர்களை பார்த்ததும் மக்கள் ஓட ஆரம்பித்தனர். பசந்தும் ஓடத் தொடங்கினார். ஆனால்,”என் காலுக்குள் உலோகம் வைக்கப்பட்டிருப்பதால் வேகமாக ஓட முடியாது,” என்கிறார். ஒரு நிமிடம்தான். “என் சட்டையை யாரோ பிடித்து வண்டிக்குள் போட்டனர்,” என்கிறார் 27 வயது நிரம்பிய அவர்.
படையில் இருந்தவரிடம் தன்னிடமும் தன் வீட்டிலும் மது இருக்கிறதா என சோதனை செய்து பார்க்க சொன்னார் அவர். ஆனால் அவர்கள் செய்யவில்லை. “காவலர்கள் கலால் இலாகாவில் விடுவித்து விடுவதாக சொன்னதும்,” அவர் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்.
ஆனால் பசந்தும் மதுவிலக்கு படையும் காவல் நிலையத்தை அடைந்ததும், ஏற்கனவே 500 மிலி மதுபானத்தை அவரிடம் கண்டெடுத்ததாக காவலர்கள் குறிப்பெழுதியிருந்ததை தெரிந்து கொண்டார். மது கொண்டிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தண்டனை ஐந்து வருட சிறை. முதல் முறை குற்றமிழைப்பவர்கள் 1 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
“இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நான் வாக்குவாதம் செய்தேன். அவர்களை துப்பு துலக்க சொன்னேன்.” அவரின் கோரிக்கைகள் பொருட்படுத்தப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டார் பசந்த். “என் குடும்பத்தில் எவரும் மது விற்றதில்லை என நீதிபதி அய்யாவிடம் சொன்னேன். என்னை விடுவிக்குமாறு கூறினேன்.” துப்பறியும் அதிகாரியை நீதிமன்றம் அழைத்தது. ஆனால் அவர் இன்னொரு ரெய்டில் இருப்பதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக பசந்த் கூறுகிறார். பிறகு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். நான்கு நாட்கள் சிறையில் கழித்த பிறகு ஜனவரி 19, 2023-ல் உறவினர்கள் கொடுத்த பிணையில் விடுவிக்கப்பட்டார். நிலத்தையும் உறவினரின் மோட்டார் சைக்கிளையும் அவரது தாய் அடகு வைத்திருந்தார்.
*****
ஜெஹனாபாத் மாவட்டத்தில் மொத்தம் ஆறு காவல் நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் ஹுலாசாகஞ்ச், பாலி மற்றும் பரபார் சுற்றுலா ஆகிய மூன்று காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 501 முதல் பதிவு அறிக்கைகளில் 207 முசாகர் சமூகத்தினர் மீது பதிவாகியிருக்கிறது. மாநிலத்தின் விளிம்பு நிலைச் சமூகங்களிலேயே ஏழ்மை அதிகமாக இருக்கும் சமூகம் அவர்கள்தான். மிச்ச வழக்குகளில் அதிகமாக பிந்த் மற்றும் யாதவ் சமூகத்தினர் மீது பதியப்பட்டிருக்கிறது. இரு சமூகங்களும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களாக அம்மாநிலத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
“கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் தலித்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், குறிப்பாக முசாகர்கள்,” என்கிறார் விளிம்பு நிலை சமூகங்களுக்கு சட்ட உதவி வழங்கும் தொண்டு நிறுவனமான LAW அறக்கட்டளையின் நிறுவனரான பிரவீன் குமார். “குப்பத்துக்குள் காவல்துறை நேராக சென்று, எந்த ஆதாரமுமின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொண்டு சென்று சிறைகளில் அடைக்கின்றனர். வழக்கறிஞர் வைக்குமளவுக்கு வசதி அவர்களுக்கு இருக்காது. எனவே மாதக்கணக்கில் சிறையில் இருக்கின்றனர்,” என்கிறார் அவர்.
பசந்தின் கிராமமான சலெமன்பூரில் 150 குடும்பங்கள் (2011 கணக்கெடுப்பு) இருக்கின்றன. சிலருக்கு மட்டும்தான் சொந்தமாக நிலம் இருக்கிறது. மற்றவர்கள் தினக்கூலி வேலையை சார்ந்திருக்கின்றனர். மொத்த மக்கள்தொகையின் 1242 பேரில் பிந்த், முசாகர், யாதவ், பாசி மற்றும் இஸ்லாமியக் குடும்பங்களே அதிகம்.
“இது என் வீடு. என்னை கொஞ்சம் பாருங்கள். என்னை பார்த்தால் மது விற்பவன் போலத் தெரிகிறதா? என் மொத்த குடும்பத்திலும் ஒருவர் கூட அப்படி செய்ததில்லை,” என்கிறார் தன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த கோபத்துடன் பசந்த். அரை லிட்டர் மதுவை வைத்திருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டதை குறித்து கேள்விப்பட்ட அவரின் மனைவி கவிதா தேவி கேட்கிறார், “அவர் குடித்ததே இல்லை. அவர் ஏன் மது விற்கப் போகிறார்?” என
குடும்பத்தின் செங்கல் மற்றும் ஓலை வீடு 30 அடி அகல கால்வாய் கரையில் இருக்கிறது. கால்வாய்க்கு குறுக்கே போடப்பட்டிருக்கும் இரு மின்சாரக் கம்பங்கள் பாலமாக பயன்படுகிறது. மழைக்காலத்தில் நீர் அதிகமாக இருக்கும்போது அந்த கம்பங்களை பயன்படுத்துவது ஆபத்தாகக் கூட முடியும். அவர்களின் எட்டு வயது மகன் அரசுப்பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறான். மூத்த மகளுக்கு ஐந்து வயதாகிறது. அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருக்கிறார். இளைய குழந்தைக்கு இரண்டு வயதாகிறது.
“மதுவிலக்கு எப்படி எங்களுக்கு பயன்படும் என புரியவில்லை,” என்கிறார் 25 வயது கவிதா. “(தடையால்) நாங்கள் பிரச்சினையை அனுபவிக்கிறோம்.”
தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் ஒரு நீண்ட கடினமான செலவு மிகுந்த ஒரு சட்டப்போராட்டத்தை பசந்த் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். “பணக்காரர்களுக்கு வீட்டு வாசலுக்கே மது வந்து விடும். அவர்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்,” என்கிறார் அவர் மனம் கசந்து.
ஏற்கனவே வழக்கறிஞர் கட்டணமாகவும் பிணைக்கும் 5,000 ரூபாய் வரை பசந்த் செலவு செய்திருக்கிறார். இன்னும் அதிக செலவு இருக்கும். வேலையும் இல்லை. வருமானமும் கிடையாது: “நான் வேலைக்கு செல்வதா அல்லது நீதிமன்றத்துக்கு செல்ல நேரம் கழிப்பதா?”
*****
“என் பெயரை எழுத வேண்டாம். நீங்கள் பெயரை வெளிவிட்டால் எனக்கு காவல்துறையால் பிரச்சினை வரும். குழந்தைகள் வேறு எனக்கு இருக்கின்றன,” என்கிறார் சீதா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கவலை தோய்ந்த முகத்துடன்.
ஜெஹனாபாத் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள முசாகரி குக்கிராமத்தில் குடும்பம் இருக்கிறது. அவர்கள் முசாகர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலத்தில் மகாதலித்தாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் அச்சமூகம் வறிய சமூகங்களில் ஒன்று.
கணவரான ராம்புவால் மஞ்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீதான மதுவிலக்கு சட்ட வழக்குகள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும் சீதா தேவி பயத்தில் இருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ராம்புவால் மஞ்சியிடம் மது இருந்ததாக மதுவிலக்குச் சட்டத்தின்படி குற்றஞ்சாட்டப்பட்டதாக சீதா தேவி கூறுகிறார். “எங்கள் வீட்டில் மதுவே கிடையாது. ஆனால் காவலர்கள் அவரை அழைத்துச் சென்று விட்டனர். நாங்கள் மது செய்வதும் கிடையாது, விற்பதும் கிடையாது. என் கணவர் குடிக்கக் கூட மாட்டார்.”
ஆனால் முதல் தகவல் அறிக்கையின்படி, “நவம்பர் 24, 2021 அன்று காலை 8 மணிக்கு காவலர்கள் இலுப்பை மற்றும் கரும்புச்சாற்றால் செய்யப்பட்ட 26 லிட்டர் நாட்டு சாராயத்தை கைப்பற்றினர்.” மேலும் ராம்புவால் சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றதாகவும் ஒரு மாதம் கழித்து அவரை டிசம்பர் 24, 2021 அன்று வீட்டில் ரெய்டு செய்து கைது செய்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டிருக்கிறது.
கணவர் சிறையிலிருந்த ஒரு வருடம் பெரும் கஷ்டத்தை சீதா தேவி அனுபவித்தார். 18 வயது மகளையும் 10 மற்றும் 8 வயதுகள் நிறைந்த இரு மகன்களையும் அவர் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. ராம்புவாலை பார்க்க அவர் சிறைக்கு செல்லும்போதெல்லாம் இருவரும் அழுதிருக்கின்றனர். ”எப்படி சமாளிக்கிறோம், என்ன சாப்பிட்டோம் எனக் கேட்பார். என் குழந்தைகள் பற்றி கவலைப்பட்டார். என் கஷ்டத்தை சொல்லத் தொடங்குகையில் அவர் உடைந்து விடுவார். நானும் அழுது விடுவேன்,” என்கிறார் சீதா கண்ணீரை மறைக்க முயன்றபடி.
தனக்கும் குழந்தைகளுக்கும் உணவு பெற அவர் விவசாயக் கூலியாக பணியாற்றினார். அண்டை வீட்டாரிடமிருந்தும் கடன் பெற்றார். “என் பெற்றோர் குத்தகை விவசாயிகள். அவர்கள் எங்களுக்கு அரிசியும் பருப்பும் கொடுத்தனர். சில உறவினர்கள் உணவு தானியமும் அனுப்பினார்கள்,” என்ற அவர் சற்று அமைதியாகிவிட்டு தொடர்கிறார், “எனக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் இருக்கிறது.”
ஐந்து சாட்சிகளில் காவலருக்கு துப்பு கொடுப்பவரும் மது காவலரும் இன்னொரு காவலரும் ரெய்டு நடத்திய படையைச் சேர்ந்த இருவரும் இருக்கும்போது தவறான கைது என நிரூபிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ராம்புவாலின் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது, அவரது வீட்டில் மது கண்டுபிடிக்கப்படவில்லை என இரு சாட்சிகள் கூறி விட்டனர். மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களில் முரண் இருந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது.
நவம்பர் 16, 2022 அன்று ஜெஹனாபாத்தின் மேல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ராம்புவால் மஞ்சியை எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.
“சிறையிலிருந்து வரும்போது அவர் ஒல்லியாக இருந்தார்,” என்கிறார் சீதா தேவி.
வெளியே வந்த 10 நாட்களில் ராம்புவால் வேலை தேடி ஜெஹனாபாத்துக்கு இடம்பெயர்ந்தார். “இரண்டு மூன்று மாதங்களுக்கு அவர் நன்றாக உண்ண வேண்டுமென நினைத்தேன். ஆனால் காவல்துறை அவரை மீண்டும் கைது செய்யவிடுமென அவர் பயந்தார். எனவே அவர் சென்னைக்கு சென்றுவிட்டார்,’ என்கிறார் 36 வயது மனைவி.
ஆனால் கதை முடியவில்லை.
ராம்புவால் ஒரு வழக்கிலிருந்துதான் விடுவிக்கப்பட்டார். 2020ம் ஆண்டில் இரண்டு வழக்குகள் அவர் மீது அச்சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டன. மதுவிலக்கு மற்றும் கலால் துறை தரவின்படி, ஏப்ரல் 2016 தொடங்கி 2023 பிப்ரவரி 14 வரை, 7.5 லட்ச கைதுகள் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 1.8 லட்சம் பேரின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. அவர்களில் 245 மைனர்களும் அடக்கம்.
கணவரை மீண்டும் விடுவிப்பார்களா என சீதாவுக்கு சந்தேகமாக இருக்கிறது. மதுவிலக்கு ஏதேனும் ஒரு வகையில் அவருக்கு பயன்பட்டதா எனக் கேட்டபோது அவர், “எப்படி எங்களுக்கு விளக்குவீர்கள்? எல்லாவற்றையும் எங்களிடமிருந்து பறித்து விட்டார்கள்,” என்கிறார். என் மகள் வளர்ந்து கொண்டிருக்கிறாள். அவளின் திருமணம் குறித்து நாங்கள் யோசிக்க வேண்டும். எப்படி நடத்துவோமென தெரியவில்லை. பிச்சை எடுப்பது தவிர வேறு வழியில்லை,” என்கிறார்.
2021ம் ஆண்டில் ராம்புவாலின் தம்பி நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். நவம்பர் 2022-ல் தம்பி மனைவியும் இறந்தார். தன் குழந்தைகளுடன் சேர்த்து அவர்களின் குழந்தைகளையும் இப்போது சீதாதான் பார்த்துக் கொள்கிறார்.
“துயரம் நிறைந்த வானை கடவுள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார். எனவே நாங்கள் கஷ்டப்படுகிறோம்.”
இக்கட்டுரை, பிகாரின் விளிம்புநிலை மக்களுக்காக போராடிய தொழிற்சங்கவாதியின் நினைவில் அளிக்கப்படும் மானியப்பணியாக எழுதப்பட்டது
தமிழில்: ராஜசங்கீதன்