பஜார்திகாவின் குறுகலானத் தெருக்களின் விசைத்தறி சத்தங்களுக்கு நடுவே வாசிம் அக்ரம் இயங்கிக் கொண்டிருக்கிறார். 14 வயதிலிருந்து அவர், பல தலைமுறைகள் பழமையான அதே இரண்டு மாடி சிமெண்ட் வீட்டில்தான் நெசவு வேலை செய்து கொண்டிருக்கிறார். பனாரஸ் புடவைகள் நெய்யும் அவர்களின் குடும்ப வழக்கம் அது.

அவரின் தாத்தாவும் பாட்டனாரும் கைத்தறிகளில் வேலை பார்த்ததாக சொல்கிறார். ஆனால் அவரின் தலைமுறை, விசைத்தறி கற்றுக் கொண்டது. “2000மாம் வருடத்திலெல்லாம் இங்கு விசைத்தறி வந்து விட்டது,” என்கிறார் 32 வயது வாசிம். “நான் பள்ளிக்குச் சென்றதில்லை. தறிகளில் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டேன்.”

வாரணாசியின் பஜார்திகா பகுதியில் வசிக்கும் 1000 நெசவாளர் குடும்பங்கள் இணைந்து நெசவாளர் சமூகமாக வேலை பார்க்கின்றனர். உணவுப்பொருட்கள், கடன்கள், வேலைகள் முதலிய விஷயங்களைப் பெறுவதில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கின்றனர். அனைவருக்கும் வேலை கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.

மார்ச் 2020-ல் ஊரடங்கு தொடங்கியதும் தறிகளின் சத்தம் ஓய்ந்தது. தறி ஓட்டுபவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. புடவை ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன. பட்டறைகள் மூடப்பட்டன. “என்னுடைய மொத்த சேமிப்பும் ஊரடங்கின் முதல் 2-லிருந்து 4 மாதங்களில் காலியாகி விட்டது என்கிறார் வாசிம். “நான் (மாநிலம் நடத்தும்) நெசவாளர்கள் சேவை மையத்துக்குச் சென்று எங்களுக்கென ஏதேனும் அரசுத் திட்டம் (அந்த சூழலுக்கு) இருக்கிறதா எனக் கேட்டேன். எதுவுமில்லை.”

காணொளி: ‘மானியத்தை அரசு ஏதும் செய்ய வேண்டாமென விரும்புகிறோம்’

2020ம் ஆண்டின் ஊரடங்கு தளர்த்தப்பட தொடங்கியதும் வாரணாசியில் ஒரு கட்டுமான வேலையில் சேர்ந்தார் வாசிம். தினக்கூலி 300லிருந்து 400 ரூபாய் வரைக் கிடைக்கும். பஜார்திகாவின் பிற நெசவாளர்களும் வேறு வேலைகள் செய்யத் தொடங்கினர். சிலர் வாடகை ரிக்‌ஷாக்கள் ஓட்டினர். 2021ம் ஆண்டின் ஊரடங்கு நேரத்திலும் அவர்களுக்கு அதே நிலைதான் ஏற்பட்டது. “நாங்கள் தொழிலாளர்களாகவும் ஆட்டோ ஓட்டுநர்களாகவும் வேலை செய்கிறோம்,” என சில மாதங்களுக்கு முன் அக்ரம் கூறினார். “எத்தனை நாட்கள் இப்படி நீடிக்கும் எனத் தெரியவில்லை.”

அக்ரமின் சிறியப் பட்டறையில் மூன்று விசைத்தறிகள் தரைதளத்தின் இரண்டு அறைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவரின் 15 உறுப்பினர் கொண்ட கூட்டுக் குடும்பம் முதல் தளத்தில் வசிக்கிறது. “முதலில் ஊரடங்கால் எங்களின் வேலை நின்றது. பிறகு மூன்று மாதங்கள் (ஜூலையிலிருந்து அடிக்கடி) எங்களின் தறிகள் ஓரடி தண்ணீரில் இருந்தன,” என்கிறார் அவர். சற்று உயரமான மேடையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு தறியை மட்டும்தான் அவர் இயக்க முடியும்.

ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதம் வரையும் சாக்கடையுடன் கலந்த மழை நீர் பஜார்திகாவின் வீடுகள் மற்றும் பட்டறைகளின் தரைதளங்களில் நிரம்பிவிடும். தரைமட்டத்துக்கும் சற்று கீழே நிற்கும் விசைத்தறி கால்கள் மூழ்கிவிடும். “தறியை இயக்கினால் நாங்கள் இறந்து விடுவோம். ஏதேனும் செய்யும்படி அனைவரிடமும் கேட்டு விட்டோம். ஒருவர் கூட எங்களைப் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் அக்ரம்.

“நீர் வடிவதற்காக காத்திருப்போம். பல வருடங்களாக இதுதான் நிலை. புகார் செய்துவிட்டோம். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சினைதான்,” என்கிறார் 35 வயது குல்ஜார் அகமது. சில வீடுகள் தள்ளி வாழும் அவருக்கு ஆறு விசைத்தறிகள் இருக்கின்றன.

Weavers and powerloom owners (l to r) Guljar Ahmad, Wasim Akram, Riyajudin Ansari: 'Because of Covid we will take some time to recover. But if the subsidy is removed there is no way we can survive'
PHOTO • Samiksha
Weavers and powerloom owners (l to r) Guljar Ahmad, Wasim Akram, Riyajudin Ansari: 'Because of Covid we will take some time to recover. But if the subsidy is removed there is no way we can survive'
PHOTO • Samiksha
Weavers and powerloom owners (l to r) Guljar Ahmad, Wasim Akram, Riyajudin Ansari: 'Because of Covid we will take some time to recover. But if the subsidy is removed there is no way we can survive'
PHOTO • Samiksha

நெசவாளர்களும் விசைத்தறி உரிமையாளர்களும் (இடதிலிருந்து வலது) குல்ஜார் அகமது, வாசிம் அக்ரம், ரியாஜுதின் அன்சாரி: ‘கோவிட்டால்  நிலைமை சரியாவதற்கு கொஞ்ச காலம் ஆகும். ஆனால் மானியம் இல்லாமல் போனால், நாங்கள் பிழைக்கவே முடியாது’

பஜார்திகாவின் நெசவாளர்களுக்கும் தறி உரிமையாளர்களுக்கும் இன்னொரு பிரச்சினையும் வந்தது. கடந்த வருடத்தின் ஊரடங்குக்கும் முன்னமே பிரச்சினை வந்து விட்டது. நெசவாளர்கள் மானியவிலையில் பெற்று வந்த மின்சாரத்தை உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்துவிட்டு புதிய வர்த்தகக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது.

“புதியக் கட்டணத்துக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஜனவரி 1, 2020-ல் வெளியிடப்பட்டது,” என்கிறார் நெசவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான சுபெர் அதில். “அதற்குப் பிறகு கோரக்பூர், வாரணாசி, கான்பூர், லக்நவ் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பிற பகுதிகளிலிருந்தும் எங்களின் பிரதிநிதிகள் புதியக் கட்டணத்தை எதிர்க்க ஒருங்கிணைந்தனர். அதற்கான முயற்சியில் நாங்கள் இருந்தபோது, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஜூன் 2020-ல் ஊரடங்கு தளர்த்தப்படத் தொடங்கியதும் மீண்டும் நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்தோம். ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாள் போராட்டம் நடத்தினோம்.  லக்நவ்வைச் சேர்ந்த அதிகாரிகள் உத்தரவை ரத்து செய்து விடுவோம் என உறுதி அளித்தனர். ஆனால் நடக்கவில்லை. எனவே நாங்கள் மீண்டும் செப்டம்பர் 1, 2020 அன்று போராட்டம் நடத்தி எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் கோரினோம். அதற்கு பதிலாக ஊடகத்தில் அதிகாரிகள் உத்தரவை ரத்து செய்வதாக அறிக்கை கொடுத்தனர். எங்களுக்கு எழுத்துப்பூர்வமான ஆவணம் எதையும் வழங்காததால், மின்சார வாரியம் புதிய கட்டணம் விதிக்கிறது. மின்சாரத்தைத் துண்டிக்கிறது. இதனால் பிரச்சினை நேர்கிறது.”

மானியக் கட்டணம் ஒரு தறிக்கு 71 ரூபாய் மாதத்துக்கு எனத் தொடங்குகிறது. மாதக் கட்டணமாக 700லிருந்து 800 ரூபாய் வரை குல்ஜாருக்கு வந்தது.. பிப்ரவரி 2020லிருந்து புதியக் கட்டணமாக 14,000-லிருந்து 15,000 ரூபாய் வரை வருகிறது. பிறருக்கும் இதே அளவுக்கு அதிகக் கட்டணம்தான்.. பலர் கட்டணம் கட்ட மறுத்துவிட்டனர். சிலர் தறிகளை இயக்கத் தொடங்க பாதிப் பணம் கட்டினர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்ச் 2020ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான தறிகளின் இயக்கம் நின்றது. அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தது. “மின்சார வாரியத்துக்கு நான் பலமுறை சென்றேன்,” என்கிறார் குல்ஜார். ஜூன் 2021லிருந்துதான் அவருக்கும் பிற நெசவாளர்களுக்கும் மற்றும் தறி உரிமையாளர்களுக்கும் மானியக் கட்டண முறை திரும்பியது.

“வேலையில்லாத நேரத்தில் உயர்ந்தக் கட்டணத்தைக் கட்டி எப்படி நாங்கள் வியாபாரம் நடத்துவது?” எனக் கேட்கிறார் 44 வயது ரியாஜுதின் அன்சாரி. அக்ரம் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி வசிக்கும் அவர், ஏழு விசைத்தறிகள் கொண்டப் பட்டறை வைத்திருக்கிறார்.

In the Bazardiha locality of Varanasi, over 1,000 families live and work as a community of weavers (the photo is of Mohd Ramjan at work), creating the famous Banarasi sarees that are sold by shops (the one on the right is in the city's Sonarpura locality), showrooms and other outlets
PHOTO • Samiksha
In the Bazardiha locality of Varanasi, over 1,000 families live and work as a community of weavers (the photo is of Mohd Ramjan at work), creating the famous Banarasi sarees that are sold by shops (the one on the right is in the city's Sonarpura locality), showrooms and other outlets
PHOTO • Samiksha

வாரணாசியின் பஜார்திகா பகுதியில் வசிக்கும் 1000 நெசவாளர் குடும்பங்கள் இணைந்து நெசவாளர் சமூகமாக (முகமது ரம்ஜான் வேலைபார்க்கும் புகைப்படம்) வேலை பார்க்கின்றனர். அவர்கள் உருவாக்கும் பிரபலமான பனாரஸ் புடவைகள் பிறகு கடைகளுக்கும் (வலதுபக்கம் இருக்கும் கடை சோனார்புரா பகுதியில் இருக்கிறத்), ஷோரூம்களுக்கும் பிற கடைகளுக்கும் விற்கப்படுகின்றன

ஜூன் 2020ல் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது நெசவாளர்களுக்கு பெரிய அளவில் புடவை ஆர்டர்கள் கிடைக்கவில்லை. அக்டோபர் மாதத்திலிருந்துதான் கொஞ்சம் சூடு பிடிக்கத் தொடங்கியது. “பனாரஸ் புடவை பனாரஸில் மட்டும் விற்கப்படும் புடவை அல்ல. தசரா, தீபாவளி மற்றும் திருமணக் காலங்களில் பிற மாநிலங்களுக்கும் அவை அனுப்பப்படுகின்றன. யாருமே கொண்டாட்டத்தில் இல்லாதபோது எங்களுக்கு எப்படி வியாபாரம் கிடைக்கும்?” என்கிறார் ரியாஜுதின் கடந்த வருட விற்பனையைக் குறித்து.

வேலைகள் வரத் தொடங்கியதும் இரண்டாம் ஊரடங்கு ஏப்ரல் 2021ல் அறிவிக்கப்பட்டது. “கோவிட் இரண்டு முறை வந்தது. ஆனால் பட்டினி இந்த வருடத்தின் இரண்டாம் ஊரடங்கில்தான் அதிகம்,” என்கிறார் அன்சாரி. அவரின் பகுதியில் இருந்த குடும்பங்கள் நகைகளை விற்றதாகவும் கடன்கள் வாங்கியதாகவும் நியாயவிலைக் கடைகளை சார்ந்திருந்ததாகவும் தன்னார்வ நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றதாகவும் சொல்கிறார்.

ஆகஸ்ட் 2021-ல்தான் நிலைமை இயல்புக்கு திரும்பியது. எனினும் விலை குறைந்துவிட்டது. “ஒரு புடவை 1,200 ரூபாய் வரை (ஊரடங்குக்கு முன்) விற்கப்பட்டது. இப்போது அது வெறும் 500-600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நெசவாளர்களுக்கான பங்கைக் கொடுத்துவிட்டால், வெறும் 200, 300 ரூபாய்தான் எங்களுக்கு மிஞ்சும்,” என்கிறார் குல்ஜார். அவருக்கும், ரியாஜுதின் போல், 30-40 புடவைகளுக்கான வேலைகள் (கடை முகவர்களிடமிருந்தும் ஷோரூம்களிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும்) மார்ச் 2020 வரை கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது வெறும் 10 ஆர்டர்கள் வரைதான் வருகின்றன. அதுவும் குறைந்த விலைக்குதான் வருகின்றன.

“புதியக் கட்டணத்தை ரத்து செய்து எந்த எழுத்துப்பூர்வமான உத்தரவும் அரசிடமிருந்து வரவில்லை,” என்கிறார் குல்ஜார். “சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு அவர்கள் புதியக் கட்டணத்தை அமல்படுத்தினால் என்ன செய்வது? இந்த வேலையை எங்களால் தொடர முடியாது. கோவிட் வந்ததால், நாங்கள் சரியாவதற்கு நாளாகும். மானியம் இல்லாமல் போனால், எங்களால் பிழைக்கவே முடியாது.”

முகப்புப் படம்: வாரணாசியின் சார்நாத் பகுதியில் ஒரு நெசவாளர் விசைத்தறியில் வேலை பார்க்கிறார் (புகைபப்டம்: சமிக்‌ஷா)

தமிழில் : ராஜசங்கீதன்

Samiksha

Samiksha is a Varanasi-based freelance multimedia journalist. She is a 2021 recipient of the Mobile Journalism Fellowship of non-profit media organisations Internews and In Old News.

Other stories by Samiksha
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan