குதாப்புரி பலராஜூ தனது ஆட்டோவின் பின் இருக்கையை அகற்றிவிட்டு சுமார் 700 கிலோ தர்பூசணியை ஏற்றுகிறார். தனது கிராமமான வேம்பஹத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோப்போலி கிராமத்தின் வேல்லிதண்டுபாது பகுதி விவசாயி ஒருவரிடம் இவற்றை அவர் வாங்கியுள்ளார்.
1 முதல் 3 கிலோ எடையிலான இந்த தர்பூசணி பழங்களை அவர் எடுத்துக் கொண்டு நல்கொண்டா மாவட்டம் நிதாமனுர் மண்டலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தலா ரூ. 10க்கு விற்பனை செய்கிறார். பழங்கள் விற்காத நேரங்களில் ஆட்டோவில் பயணிகளையும் ஏற்றிக் கொள்கிறார். கரோனா அச்சம் காரணமாக அவரை தற்போது கிராம மக்கள் உள்ளே வர அனுமதிப்பதில்லை. “சிலர் தர்பூசணியை வைரஸ் பழம்“ என்றும், தர்பூசணியுடன் வைரசை எடுத்துக் கொண்டு இங்கே வராதே என்றும்,” கூறுவதாக சொல்கிறார் இந்த 28 வயது பலராஜூ.
தெலங்கானாவில் மார்ச் 23ஆம் தேதிக்கு பிறகு கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்கு முன் அறுவடைக்கு பிறகான காலத்தில் அவர் தினமும் ரூ. 1,500 வரை ஈட்டியுள்ளார். இப்போது ரூ. 600 பெறுவதே சவாலாக உள்ளது என்கிறார். இங்கு ஜனவரியின் தொடக்கத்தில் பயிரிடப்படும் தர்பூசணி இரண்டு மாதங்கள் கழித்து அறுவடை செய்யப்படுகிறது.
விற்பனை சரிவு, மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஏப்ரல் 1ஆம் தேதி வாங்கிய தர்பூசணியை விற்றால் போதும், வெளியே போகவே பிடிக்கவில்லை என்கிறார் பாலாராஜூ. கோவிட்-19 நெருக்கடியால் தர்பூசணி சாகுபடி, சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் பல விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் அவரைப் போன்றே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்பூசணியை பறித்து, லாரியில் ஏற்றி தினக்கூலி பெறும் தொழிலை பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். ஒரு லாரியில் 10 டன் சுமையை ஏற்றும் பணியில் 7-8 பேர் கொண்ட பெண்கள் குழு ஈடுபடுகிறது. கிடைக்கும் ரூ.4000ஐ சமமாக பங்கிட்டு கொள்கிறது. பெரும்பாலான நாட்கள் இக்குழுவினர் இரண்டு அல்லது மூன்று லாரிகளில் சுமை ஏற்றி விடுவார்கள். தற்போதைய ஊரடங்கு நெருக்கடியால் தெலங்கானா நகரங்களுக்கு பழங்களின் போக்குவரத்து சரிந்துள்ளதால் அவர்களின் வருவாயும் சுருங்கிவிட்டது.
![Left: 'Some are calling it ‘corona kaya’ [melon]', says Gudapuri Balaraju, loading his autorickshaw with watermelons in Vellidandupadu hamlet. Right: The decline in the trade in watermelon, in great demand in the summers, could hit even vendors](/media/images/02a-DSC_0189-HRN.max-1400x1120.jpg)
![Left: 'Some are calling it ‘corona kaya’ [melon]', says Gudapuri Balaraju, loading his autorickshaw with watermelons in Vellidandupadu hamlet. Right: The decline in the trade in watermelon, in great demand in the summers, could hit even vendors](/media/images/02b-DSC_0005-HRN.max-1400x1120.jpg)
இடது: வேல்லிதண்டுபாது கிராமத்தில் தனது ஆட்டோவில் தர்பூசணியை ஏற்றும் குதாபுரி பாலாராஜூ சிலர் இவற்றை ’கரோனா பழம்’ எனக் கூறுவதாக சொல்கிறார். வலது: வரவேற்பு நிறைந்த கோடைக் காலத்திலும் தர்பூசணி வணிகம் சரிந்துள்ளதால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்
கிழக்கு ஐதராபாத்தின் கோதாபேட் சந்தைக்கு மார்ச் 29ஆம் தேதி வெறும் 50 லாரிகளில் மட்டுமே தர்பூசணி வந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவின் நல்கோண்டா, மகபூப்நகர் போன்ற மாவட்டங்களில் இருந்து கோதாபேட்டிற்கு அறுவடை காலங்களில் ஊரடங்கிற்கு முன் தினமும் 500-600 லாரிகள் வரும் என்கிறார் மிர்யாலகுடா வணிகர் மது குமார். ஒவ்வொரு லாரியும் சுமார் 10 டன் தர்பூசணியுடன் சென்னை, பெங்களூரூ, டெல்லி போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்கிறார் அவர். நகரங்கள், பெருநகரங்களுக்கு அவர் தர்பூசணியை மொத்த விற்பனை செய்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக தர்பூசணி மொத்த விற்பனையும் வீழ்ச்சி அடைந்தது. ஊரடங்கிற்கு முன்பு ஒரு டன் ரூ. 6,000- 7,000 வரை கொள்முதல் செய்யப்பட்ட தர்பூசணியை மார்ச் 27ஆம் தேதியன்று டன்னுக்கு ரூ. 3,000 கொடுத்து நல்கொண்டாவின் குர்ரும்போடி மண்டலத்தில் உள்ள கொப்போலி கிராமத்தின் புத்தாரெட்டி குதாவில் உள்ள போல்லாம் யாதையா எனும் விவசாயிடம் வாங்கியதாக சொல்கிறார் குமார். யாதையா பண்ணையில் வாங்கிய இரண்டு லாரி பழங்களை மிர்யலகுடாவில் உள்ள பழ வியாபாரிக்கு அவர் விற்றுள்ளார்.
மாநில தர்பூசணி விவசாயிகளின் நிலைமை ஏற்கனவே மோசமாக இருந்த சூழலில் ஊரடங்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா மாவட்டத்தின் கங்கல் மண்டல் துர்கா பல்லியைச் சேர்ந்த 25 வயதாகும் பைரு கணேஷூம் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.
அதிகளவில் மகசூல் தரும் ஹைப்ரிட் தர்பூசணி வகையை தான் கணேஷ் பயிர் செய்துள்ளார். இவை எளிதில் பூச்சிகள் தாக்கம், வெப்பநிலையால் பாதிக்கப்படும் வகையை சேர்ந்தவை. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழுதல், களை எடுத்தல், தழைகூளம் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்காக ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை செலவாகிறது. 2019ஆம் ஆண்டு கோடை காலத்தில் கணேஷ் டன் ஒன்று ரூ. 10,000க்கு விற்று சுமார் 1,50,000 வரை லாபம் ஈட்டினார்.


இடது: தெலங்கானா நகரங்களுக்குச் செல்லும் தர்பூசணி லாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் அவற்றை ஏற்றும் தொழிலாளர்களின் வருமானமும் சுருங்கியது. வலது: பசுமையான, நல்ல வடிவிலான தர்பூசணிகளையே வணிகர்கள் வாங்குகின்றனர். மற்றவை தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன அல்லது தூக்கி வீசப்படுகின்றன
மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் மூன்று கட்டங்களாக விளைவித்து இந்தாண்டும் நல்ல லாபம் பெறலாம் என்ற நோக்கில் கணேஷ் ஒன்பது ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார். ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 15 டன் தர்பூசணி அறுவடை செய்யலாம். இவற்றில் வடிவான, பெரிதான, எடை அதிகமான, சிராய்ப்புள் இல்லாத பழங்கள் சராசரியாக 10 டன் அளவிற்கு மது குமார் போன்ற வியாபாரிகளால் நகரங்கள், பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒதுக்கப்பட்ட தர்பூசணிகளை பகுதி நேர பழ வியாபாரி பாலாராஜூ போன்றோர் குறைந்த விலையில் வாங்கி கிராமங்கள், சிறுநகரங்களில் விற்கின்றனர்.
ஒரே நிலத்தில் இரண்டாவது முறையாக தர்பூசணி பயிர் செய்யும் போது சராசரி அறுவடை என்பது ஏழு டன் என குறையும், மூன்றாவது முறை செய்யும்போது மேலும் சரியும். விதைத்த 60 முதல் 65 நாட்களுக்குள் பழங்களை அறுவடை செய்யாவிட்டால் அதிகம் பழுத்து உற்பத்தி பாழாகிவிடும். நேரத்திற்கு பூச்சிக்கொல்லி அல்லது உரங்களை தெளிக்காவிட்டால் விரும்பிய வடிவம், எடை, அளவில் இருக்காது.
முழு தொகையையும் செலுத்தினால் தான் விவசாயிகளால் உரங்கள், பூச்சிக்கொல்லிகளை வாங்க முடியும். “சாத்துக்குடி, நெல் சாகுபடிக்கு கூட இவற்றை கடனாக கொடுப்பவர்கள் தர்பூசணி விவசாயிகளுக்கு மட்டும் கொடுப்பதில்லை. இவற்றில் உள்ள ஆபத்து அவர்களுக்கு நன்றாக தெரியும்“ என்கிறார் துர்கா பல்லி கிராமத்தில் 2019ஆம் ஆண்டு முதல் தர்பூசணி சாகுபடியை செய்யும் சிந்தலா யாதம்மா. தனியார் கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு எங்கும் கடன் வாங்கி கொள்ளலாம் என்கிறார்.
ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே மார்ச் மாத தொடக்கத்திலேயே தர்பூசணி விலை வீழ்ச்சி கண்டுவிட்டதாக விவசாயிகள் சொல்கின்றனர். அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டதோடு, வியாபாரிகளின் விலை நிர்ணயம், அளவற்ற விநியோகத்தால் கடுமையாக பேரம் பேசப்பட்டது போன்றவை தான் காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தர்பூசணி விவசாயம் செய்வது, சீட்டுக்கட்டு விளையாடுவதைப் போன்ற சூதாட்டம்தான் என்கின்றனர் விவசாயிகள் பலரும். ஆபத்து அதிகம் இருந்தாலும் இவற்றை பயிர் செய்வதை அவர்கள் நிறுத்துவதில்லை. இந்தாண்டு விளைச்சல் நமக்கு சாதகமாக இருக்கும் என்றே எப்போதும் நம்புகின்றனர்.


இடது: நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணேஷ் தனது முதல் மூன்று ஏக்கர் நிலத்தில் அறுவடையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார். வலது: கணேஷின் பண்ணையில் பயிரிடப்பட்டுள்ளவை அதிக முதலீடு தேவைப்படும் தீவிர கலப்பு வகையை சேர்ந்த தர்பூசணி
நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணேஷ் தனது முதல் மூன்று ஏக்கர் நிலத்தில் அறுவடையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார். பல டன் தர்பூசணிகளை பறித்து முறையாக சேகரிப்பது என்பது முடியாதது. “ஒரு லாரி பழங்களை (10 டன்) இன்னும் அறுவடை செய்யவில்லை (மார்ச் தொடக்கத்தில்) என்கிறார் அவர். டன்னுக்கு ரூ. 6,000க்கு மேல் கொடுத்து யாராவது வாங்கி கொள்வார்கள் என அவர் காத்திருக்கிறார். அதேநேரம் பழங்கள் அதிகம் பழுத்துவிட்டாலும் அவற்றின் மதிப்பு சரிவதோடு நிலைமை இன்னும் மோசமாகும்.
மார்ச் முதல் வாரத்தில் பழங்களை வாங்க வந்த வணிகர் ஒருவர் பல தர்பூசணிகளை ஒதுக்கிவிட்டார். முதல் மூன்று பழங்களை அவர் ஒதுக்கிய போது அமைதியாக இருந்த கணேஷ் நான்காவது பழத்தையும் நிராகரித்தபோது தனது நிலத்தின் பழங்களை தரம் பிரிக்கும் அந்த வணிகரின் மீது ஆத்திரமடைந்து கல் வீசி தாக்கியுள்ளார்.
“நான் பயிர்களை குழந்தையைப் போன்று கவனித்து வளர்த்து வந்தேன். நரிகளிடம் இருந்து வயலை பாதுகாக்க இரவில் கூட இங்கேயே நான் உறங்கினேன். பழம் வேண்டாம் என்றால் தரையில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். அவர் எப்படி தூக்கி எறியலாம்? அவர் வைத்துவிட்டுச் சென்றிருந்தால், அவற்றை குறைந்த விலையில் வேறு யாருக்காவது விற்றிருப்பேன்,” என்கிறார் கணேஷ். சரியான பழங்களை அந்த வணிகரிடம் வேறுவழியின்றி விற்ற அவர், ஒதுக்கப்பட்ட பழங்களை பாலாராஜூ போன்றோரிடம் விற்றுள்ளார்.
இவை அனைத்தும் கோவிட்-19 ஊரடங்கிற்கு முன்பு நடந்த சம்பவங்கள்.
வெல்லிதண்டுபாது கிராமத்தில் மார்ச் முதல் வாரத்தில் விதை நிறுவன விற்பனையாளர் ஷங்கரிடம் நான் பேசியபோது, இந்தாண்டு நல்கொண்டாவில் சுமார் 5,000 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்படும் என கணக்கு போட்டார். புத்தாரெட்டி குடா கிராமத்தில் பொல்லாம் யாதையாவிடம் மதுகுமார் டன்னுக்கு ரூ. 3,000 கொடுத்து வாங்கியுள்ளார். இதேநிலை நீடித்தால் புதிதாக தர்பூசணி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 வரை நஷ்டம் ஏற்படலாம். தனது முதல் மூன்று ஏக்கர் நிலத்தில் குறைந்தது ரூ. 30,000 வரை இழப்பு ஏற்படக்கூடும் என கணக்கிடுகிறார் கணேஷ். ஊரடங்கு காரணமாக நல்ல விலை பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கணேஷ் போன்ற விவசாயிகள் மிக மோசமான நிலையில் உள்ளனர்.


இடது: தர்பூசணி பயிர்களுடன் சிந்தலா யாதம்மாவும், அவரது கணவர் சிந்தலா பெட்டுலுவும். வலது: நான் சந்தித்தபோது தனது மூன்று ஏக்கர் நிலத்தில் பூச்சிக்கொல்லி தெளித்து கொண்டிருந்த பொம்மு சைதுலு, ‘ரூ. 1,50,000 வரை முதலீடு செய்துள்ளேன், இதை எப்படி விட்டுவிட்டுச் செல்வது? ' என்று கேட்டார்
சில சமயங்களில் சந்தையில் பழங்கள் முழுமையாக விற்ற பிறகே வியாபாரிகள் விவசாயிகளிடம் பணம் கொடுப்பதுண்டு. ஊரடங்கு காலத்தில் பணம் தருவதை ஒத்திவைப்பது என்பது அதிகளவில் உள்ளது. இதனால் நிச்சயமற்ற சூழலே உருவாகியுள்ளது.
கோவிட்-19 ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பின்னடைவுகள் இருப்பினும் கோடை மாதங்களில் தேவையும், விலையும் அதிகரிக்கும் என சில விவசாயிகள் நம்புகின்றனர்.
சிலர் செலவை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட இடைவேளையில் தேவைப்படும் உரங்களை சேர்க்காமல் நிறுத்தியுள்ளனர். எனினும் பயிர்களுக்கு நீர் தெளிப்பது, பூச்சிக்கொல்லி தெளிப்பது என தொடர்கின்றனர். குறைந்தபட்சம் ஒழுங்கற்ற பழங்களாவது பெறலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
மார்ச் 25, மார்ச் 27 என நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடு, முகவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் போன்ற காரணங்களால் பலரும் தேவைப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கூட வாங்க முடியாத சூழலில் உள்ளனர். எனினும் உள்துறை அமைச்சகம் உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள் விற்கும் கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
மார்ச் 27ஆம் தேதி நான் சந்தித்தபோது தனது மூன்று ஏக்கர் நிலத்தில் பூச்சிக்கொல்லி தெளித்து கொண்டிருந்த கொப்போல் கிராமத்தின் பொம்மு சைதுலு, “இதுவரை ரூ. 1,50,000 வரை முதலீடு செய்துள்ளேன், எப்படி பயிர்களை பாதியில் விட்டுச் செல்வது“ என கேட்கிறார்.
கணேஷின் இரண்டாவது நிலம் ஏப்ரல் இறுதியில் அறுவடைக்குத் தயாராகி விடும். மூன்றாவது நிலத்தை விதைப்பதற்கு தயார் செய்துவிட்டார்.
தமிழில்: சவிதா