“நாங்கள் இன்று பின்வாங்குவதாக இல்லை,” என்கிறார் துகாராம் வலவி. “இந்த அரசு எங்களை தாக்குகிறது. நாங்கள் விவசாயத்திற்கு 10 ஏக்கர் நிலம் கேட்டால், அவர்கள் 10 குண்டா [கால் ஏக்கர்] தான் தருகின்றனர். ஐந்து ஏக்கர் கேட்டால், அவர்கள் மூன்று குண்டா தருவார்கள். எங்கள் நிலமின்றி நாங்கள் எப்படி உண்பது? எங்களிடம் பணமில்லை, வேலையில்லை, உணவுமில்லை.”
வார்லி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 61 வயதாகும் வலவி பல்கார் மாவட்டம் வாடா தாலுக்கா கர்கான் எனும் குக்கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். பல்காரின் பல்வேறு கிராமங்களில் இருந்து பங்கேற்றுள்ள (தோராயமாக) 3,000 விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடன் அவரும் இந்த வார போராட்டத்தில் இணைந்தார்.
செப்டம்பர் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் வாடாவின் கந்தேஷ்வரி நாகாவில் ஒன்றாக நவம்பர் 26 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர், “நாட்டில் வேளாண்மையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கிலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக” சொல்லப்பட்டது. இதன்மூலம், தனியார் முதலீட்டாளர்களுக்கும், உலக சந்தைகளுக்கும் விவசாயத் துறையை திறக்க உள்ளதாக அரசு கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் முதலே ஹரியாணா, பஞ்சாப், மேற்கு உத்தர பிரதேசம் போன்ற பகுதிகளில் பரவலான போராட்டத்திற்கு இச்சட்டங்கள் வழி வகுத்தன.
ஹரியாணா, டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் சில நாட்களாக தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராடி வருவது சிறிதளவு ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது. மகாராஷ்டிராவில், நாஷிக், பல்கார், ராய்காட் வரை நவம்பர் 25-26ஆம் தேதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் குறைந்தது 60,000 பேர் பங்கேற்றனர். மாவட்டங்களுக்குள் பல்வேறு தாலுக்காக்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
வாடாவில் இந்த வாரம் அனைத்திந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) ஒருங்கிணைத்த பேரணியில் வலவி போன்றோர், நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இக்கோரிக்கைகளை சில ஆண்டுகளாகவே மகாராஷ்டிராவின் பழங்குடியின விவசாயிகள் முன் வைத்து வருகின்றனர். தனது நிலத்திற்கு உரிமை கோரி வலவி 15 ஆண்டுகளாக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி வருகிறார். “வனத்தில் வேளாண்மை செய்யும் எங்கள் கிராமத்தினருக்கு வனத்துறையினர் அநீதி இழைத்து வருகின்றனர்,” என்கிறார் அவர். “நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறோம். பிணைத்தொகை செலுத்தக் கூட எங்களிடம் பணமில்லை. எங்களைப் போன்ற ஏழைகள் எங்கிருந்து பணத்தை கொண்டு வருவது?”

மேல் இடது: துகாராம் வலவி: 'நாங்கள் இன்று பின்வாங்கப் போவதில்லை'. மேல் வலது: ராமா தர்வி: 'எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய வனத்துறையினர் அனுமதிப்பதில்லை'. கீழ் இடது: சுகந்தா ஜாதவ்: 'தெருக்களில் இறங்கி போராடும் நிலைக்கு அரசு எங்களை தள்ளிவிட்டுள்ளது.' கீழ் வலது: ஆதார் அட்டை பெறுவதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வரும் சுனிதா சர்வாரி கூறுகையில்: 'அட்டை அளிக்கும் அலுவலகத்தில் உள்ளவர்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை,' என்கிறார் அவர். 'எனக்கு எழுத, படிக்கத் தெரியாது. படிவத்தை எப்படி நிரப்புவது என தெரியவில்லை. இங்கு போ, அங்கு போ, இந்த தேதியில் வா, அந்த தேதியில் வா என்கின்றனர். நான் சோர்ந்துவிட்டேன்'
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி வாடா தாலுக்காவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். வந்தவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம், கைக்குட்டை / சிறிய துண்டு கொண்டு முகத்தை மூடியபடி வந்தனர். போராட்டக்காரர்களுக்கு சில ஏஐகேஎஸ் தன்னார்வலர்கள் முகக்கவசம், சோப்புகளை விநியோகித்தனர்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 21 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. வன உரிமை சட்டம் 2006 (எஃப்ஆர்ஏ) கடுமையாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும், பருவம் தவறிய மழைக்கு பயிர் இழப்பீடு அளிக்க வேண்டும், பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் (கோவிட்-19ஐ கருத்தில் கொண்டு), இணைய வழி வகுப்புகளை நிறுத்த வேண்டும் போன்ற பரவலான கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 உதவித்தொகை கொடுக்க வேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா 10 கிலோ ரேஷன் பொருட்கள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
“எங்கள் பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் வருமானத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் நடக்கின்றனர்,” என்கிறார் கஞ்சத் கிராமத்தைச் சேர்ந்த ஏஐகேஎஸ் செயற்பாட்டாளரான 54 வயதாகும் ராமா தர்வி. அவரது குடும்பம் இரண்டு ஏக்கர் நிலத்தில் அரிசி, சோளம், கம்பு, கோதுமை பயிரிட்டு வருகின்றனர். “நாள் முழுவதும் வேலை செய்து ரூ.200 பெறுகின்றனர். எங்களிடம் நிலம் உள்ளது, வனத்துறையினர் எங்களை பயிரிட விடுவதில்லை. கோவிட் காலத்தில் ஏற்கனவே எங்களுக்கு வேலையில்லை…”
“வன நிலங்கள் [எஃப்ஆர்ஏ] தான் எங்கள் வாழ்வாதாரம். பல ஆண்டுகளாக பயிரிட்ட நிலத்தை கோரி [உரிமையும் கூட] கோவிட் காலத்திலும் உயிரை பணயம் வைத்துப் போராடி வருகிறோம்,” என்கிறார் 50 வயதாகும் சுகந்தா ஜாதவ்; அவரது குடும்பம் அரிசி, கம்பு, உளுந்து, தானியங்களை இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடுகின்றது. பலமுறை போராட்டங்கள் செய்தும் அரசு செவி சாய்க்கவில்லை. மீண்டும் தெருக்களில் இறங்கி போராடும் நிலைக்கே அரசு எங்களை தள்ளியுள்ளது.”

நவம்பர் 26ஆம் தேதி சாலை மறியலுக்காக வாடா தாலுக்கா கந்தேஷ்வர் நாகாவை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகள்

வாடா தாலுக்கா கிராவாலி நாகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கின்றனர்

பகாரின் கரஞ்சி கிராமத்தில் விவசாய தொழிலாளியாக வேலை செய்து தினமும் 150 ரூபாய் ஈட்டும் ரேணுகா கலுராம் (வலது பக்கம், பச்சை நிற புடவை அணிந்திருப்பவர்). அவரது மூன்று குழந்தைகளும் உள்ளூர் அங்கன்வாடிக்குச் செல்கின்றனர்: இணையவழி படிப்புகளை அரசு நிறுத்த வேண்டும். இணைய வழியில் எங்கள் குழந்தைகள் எதையும் கற்பதில்லை. எங்களிடம் பெரிய கைபேசியோ, எங்கள் பகுதியில் சிக்னலோ கிடையாது'
![Left: Gulab Dongarkar, an agricultural labourer from Kanchad village: We have been sitting here since 10 a.m. It’s been very hard for us to get work during Covid. We want the government to give us at least 10 kilos of rations [instead of five, which too many did cannot access]'. Right: Janki Kangra and her 11-member family cultivate rice, jowar, bajra and millets on three acres, while battling, she said, the forest department's strictures](/media/images/06a-IMG_0792-SA.max-1400x1120.jpg)
![Left: Gulab Dongarkar, an agricultural labourer from Kanchad village: We have been sitting here since 10 a.m. It’s been very hard for us to get work during Covid. We want the government to give us at least 10 kilos of rations [instead of five, which too many did cannot access]'. Right: Janki Kangra and her 11-member family cultivate rice, jowar, bajra and millets on three acres, while battling, she said, the forest department's strictures](/media/images/06b-IMG_0800-SA.max-1400x1120.jpg)
இடது: கஞ்சட் கிராமத்திலிருந்து வந்த விவசாய தொழிலாளர் குலாப் தோங்கர்கார்: காலை 10 மணியிலிருந்து இங்கு அமர்ந்திருக்கிறோம். கோவிட் காலத்தில் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது. அரசு எங்களுக்கு குறைந்தது 10 கிலோ ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டும் [ஐந்து கிலோவிற்கு பதிலாக, அதுவும் பலருக்கு கிடைப்பதில்லை]'. வலது: ஜாங்கி காங்கிராவின் 11 உறுப்பினர்கள் கொண்ட குடும்பம் அரிசி, சோளம், கம்பு, தானியங்களை மூன்று ஏக்கர் நிலத்தில் பயிரிடுகின்றன. வனத்துறையினரின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவர் போராடி வருகிறார்

வாடா தாலுக்கா கிர்வாலி நாகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) அலுவலகத்திற்கு வெளியே நிற்கும் காவல்துறையினர்

போராட்ட களத்தில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு முகக்கவசங்கள், சோப்புகளை விநியோகிக்கும் அனைத்திந்திய கிசான் சபா உறுப்பினர்கள்


இடது: கந்தேஷ்வரி நாகாவை நோக்கி சாலை மறியல் போராட்டத்திற்கு செல்லும் சுகி வாகி எனும் கட்டட தொழிலாளர் தனது தோளில் மூன்று வயதாகும் பேரன் சாய்நாத்தை சுமந்து செல்கிறார். 'எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, ரேஷன் பொருட்களைக் கொடுங்கள்,' என்கிறார் அவர். வலது: கந்தேஷ்வரி நாகா நோக்கி நடக்கும் போராட்டக்காரர்கள்

சாலை மறியலுக்காக கிர்வாலி நாகாவிலிருந்து பல்கார் மாவட்டம் கந்தேஷ்வரி நாகா நோக்கி செல்லும் இரண்டு கிலோமீட்டர் சாலையில் விவசாயிகள்

அனைத்திந்திய கிசான் சபா உறுப்பினர் சந்து தங்குடா வாடா தாலுக்கா கந்தேஷ்வரி நாகாவில் போராட்டத்தை வழிநடத்துகிறார்

நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவை வாடா தாலுக்காவில் தாசில்தார் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் அளித்தனர்


இடது: அரிசி, கம்பு, சோளம், தானியங்களை இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கும் ஆஷா கவாரி பேசுகையில், 'பலத்த மழையால் எங்கள் பயிர்கள் அழிந்துவிட்டன. கிட்டத்தட்ட 10,000 ரூபாய்க்கான இழப்பை நாங்கள் சந்தித்துள்ளோம். எங்களுக்கு கடன் தர யாரும் தயாராக இல்லை.' வலது: பல்காரி கஞ்சட் கிராமத்தைச் சேர்ந்த தேவ் வாக் மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கோருகிறார்: 'எங்கள் வயலில் வேலையே செய்யவில்லை, ஆனால் மின் கட்டணம் மட்டும் அதிகமாக வந்துள்ளது. ஆறு மாதங்களுக்கான மின் கட்டணத் தொகையை திரும்ப பெற வேண்டும்.' கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயிகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வழி வகை செய்யும் புதிய மின்கட்டண மசோதா, 2020ஐ நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ள (ஏற்றப்பட்ட) கட்டணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராடினர்

வாடா தாலுக்கா கந்தேஷ்வரி நாகாவில் காணப்பட்ட நம்பிக்கை, வைராக்கியம் மற்றும் ஒற்றுமை
தமிழில்: சவிதா