அந்தி வேளையில் ஆள் அரவமற்ற அந்த பூங்காவுக்குள் அவர் சென்றார். பெஞ்சில் அமர்ந்தார். நீண்ட குச்சியையும் சிறு செல்பேசியையும் அருகே வைத்தார். வருடத்தில் இரண்டாவது முறையாக பூங்கா அமைதியாக இருந்தது. குழந்தைகளும் பெரியவர்களும் மீண்டும் வீடுகளுக்குள் அடைபட்டிருந்தனர்.
சில நாட்களாக அவர் பூங்காவுக்கு வந்து கொண்டிருக்கிறார். இருள் கவிந்து தெருவிளக்குகள் எரியத் தொடங்கியதும் கிளைகளின் நிழல்கள் தரையில் படர்ந்தன. மரங்கள் கொஞ்சம் காற்று கொடுத்தது. தரையில் கிடந்த காய்ந்த சருகுகள் சுழன்று திசைதிருப்பும் நடனத்தை அளித்தன. எனினும் அவருக்குள் இருந்த இருட்டு ஆழமாக இறங்கியது. அங்கு பல மணி நேரங்களுக்கு அவர் அமைதியாக அமர்ந்திருந்தார். உள்ளே மனம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
20 வயதுகளில் இருக்கும் இளைஞருக்கு பரிச்சயமான முகம். ஆனாலும் பலருக்கு அவர் தெரியாமல் இருந்தார். அவருடைய சீருடை அவரது பணியை வெளிப்படுத்தியது. அருகே இருக்கும் ஒரு கட்டடத்தின் காவலாளி அவர். பெயர்…அதைப் பற்றி யாருக்குக் கவலை? ஏழு வருட காவலாளி வேலை. ஆனாலும் கட்டடத்தில் வசிக்கும் ஜமீந்தார்களுக்கு அவரைத் தெரியாது.
அவர் உத்தரப்பிரதேசத்தின் பந்தல்காண்டைச் சேர்ந்தவர். அங்குதான் அவருடைய தந்தை தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தியமைக்காகக் கொல்லப்பட்டார். அவரது தந்தை ஒரு கவிஞர். கதைசொல்லி. அவரது ஒரே உடைமையாக இருந்த எழுத்துகளும் புத்தகங்களும் எரிக்கப்பட்டன. உடைந்தும் கருகியும்போன குடிசைதான் மிச்சம். அதற்குள் உடைந்த ஒரு தாயும் பத்து வயது மகனும் இருந்தனர். அச்சம் அந்தத் தாயைப் பீடித்தது: மகனை அவர்கள் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது? மகனை ஓடிவிடச் சொன்னார். எத்தனை தூரத்துக்கு ஓட முடியுமோ ஓடச் சொன்னார்.
மகன் படிக்க விரும்பினான். பெரிய பூட்ஸுகளை அணிய விரும்பினான். ஆனால் அவன் அடைக்கலம் தேடிய மும்பை நகர ரயில்நிலையத்தில், காலணி துடைத்துக் கொண்டிருந்தான். கால்வாய்களை சுத்தம் செய்தான். கட்டுமானத் தளங்களில் பணிபுரிந்தான். மெல்ல ஒரு காவலாளியாக அவன் உயர்ந்தான். தாய்க்கு பணம் அனுப்ப அது போதுமானதாக இருந்தது. அவனுக்குக் கல்யாணம் செய்து பார்க்க தாய் விரும்பினார்.
தாய் ஓர் இளம்பெண்ணை தேர்ந்தெடுத்தார். பெண்ணின் நிலைகுத்திய பார்வையில் மகன் ஈர்க்கப்பட்டார். மதுனா பங்கிக்கு வயது 17. பெயரைப் போலவே இனிமையானவர். அவரை மும்பைக்கு அழைத்து வந்தார் காவலாளி. அதுவரை 10 ஆண்களுடன் நலசொபரா பகுதியின் ஒரு சிறு அறையில் தங்கியிருந்தார். மதுனா வந்தபிறகு ஒரு நண்பனின் அறையை சில நாட்கள் வாடகைக்கு எடுத்தார். எல்லா நேரங்களும் மதுனா அவருடன் நெருக்கமாக இருந்தார். நெரிசலான ரயில் பயணம், உயரமானக் கட்டடங்கள், கூட்டமான குப்பம் எல்லாவற்றையும் பார்த்த அவர் விரைவிலேயே, “இங்கு இனி என்னால் இருக்க முடியாது. என்னுடைய கிராமத்தின் தென்றலை இங்கு உணர முடியவில்லை,” என்றார். ஊரை விட்டு வந்தபோது காவலாளிக்கும் அதே உணர்வுதான்.
மதுனா கர்ப்பமானார். கிராமத்துக்குச் சென்றார். அவருடன் இருக்க வேண்டுமென காவலாளி நினைத்திருந்தார். ஊரடங்கு வந்து அவரை நிறுத்திவிட்டது. விடுமுறைக்காக மன்றாடினார். வேலை கொடுத்தவர்கள் மறுத்துவிட்டனர். ஊருக்குச் சென்றால், திரும்ப வேலை கிடைக்காது என அவருக்கு சொல்லப்பட்டது. குழந்தைக்கு அவரே தொற்றை பரப்பக் கூடும் என விளக்கினார்கள்.
அவர்களின் விளக்கத்தில் காவலாளி தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டார் (ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் கட்டடத்துக்கு காவல் இருக்க வேண்டுமென்பதுதான்). சில வாரங்களுக்குதான் அந்நிலை இருக்கும் என நினைத்தார். பணமும் முக்கியம். ஒரு குழந்தையாக அவர் ஏங்கிய விஷயங்கள் யாவும் அவரது குழந்தைக்குக் கிடைக்க வேண்டுமென விரும்பினார். கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு சிறிய மஞ்சள் ஆடை ஒன்றை சந்தையில் அவர் பார்த்தார். கடை திரும்பத் திறந்ததும் அதை வாங்க விரும்பினார். மதுனாவுக்கும் ஒரு புடவை வாங்க அவர் ஆசைப்பட்டார். அவரது அமைதியின்மையை புதுக் குழந்தை பற்றிய கனவுகள் நிரப்பின.
ஊரில் மதுனாவிடம் செல்பேசி இல்லை. இருந்தாலும் பயனில்லை. ஏனெனில் சிக்னல் இருக்காது. காவலாளி எண் எழுதிக் கொடுத்த ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்கு அருகே இருக்கும் தொலைபேசி பூத்துக்கு செல்வார். கடை அடைக்கப்பட்டிருக்கும். பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து செல்பேசியை கடன் வாங்குவார்.
வீட்டுக்கு வரக் கேட்டு கணவனிடம் மன்றாடுவார். ஆனால் அவர் மும்பையில் நகர முடியாமல் இருந்தார். சில வாரங்கள் கழித்து அவருக்கு செய்தி கிட்டியது. பெண் குழந்தை பிறந்தச் செய்தி. குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை. கணவர் குழந்தையை முதலில் பார்க்க மதுனா விரும்பினார்.
இரவில் விளக்குகளின் வெளிச்சம் குன்றியதும் பூங்காவின் பெஞ்சிலிருந்து இரவு ரோந்து செல்ல காவலாளி எழுந்தார். குடியிருப்புகளில் விளக்குகள் எரிந்தன. சில தொலைக்காட்சித் திரைகளின் வெளிச்சம் ஜன்னல்களுக்கும் வெளியே வந்தது. ஒரு குழந்தையின் சிரிப்பு கேட்டது. குக்கர்கள் ஊளையிட்டன.
ஊரடங்கு சமயத்தில் குடியிருப்புக்கு வரும் உணவுகளை பகலிரவு பாராமல் எல்லா நேரங்களிலும் அவர் எடுத்துச் சென்று கொடுத்தார். மதுனாவுக்கும் குழந்தைக்கும் போதுமான உணவு கிடைக்குமென நம்பினார். நோயுற்ற குடியிருப்புவாசிகளை அவசர ஊர்திகளுக்கு தூக்கிச் செல்ல உதவினார். நோய் அவரையும் ஒருநாள் தாக்கலாம் என்பதை மறந்திருந்தார். ஒரு சக ஊழியருக்கு தொற்று வந்ததும் அவர் வேலையை விட்டு தூக்கியெறியப் பட்டதைக் கண்டார். வேலை பறிபோய்விடும் என்கிற பயத்தில், காவலாளி அமைதியாக இருமிக் கொண்டார்.
ஒரு வீட்டுப் பணியாளர் கட்டடத்தில் வேலைக்கு செல்ல கெஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்தார். அவருடைய மகன் பலவீனமாக இருந்தான். காசநோய் இருந்தது. இருந்த சேமிப்பு எல்லாவற்றையும் கணவர் எடுத்துச் சென்றுவிட்டார். சற்று நேரம் கழித்து அந்தப் பெண் சிறு மகளுடன் தெருக்களில் பிச்சை எடுக்கும் காட்சியைக் காவலாளி கண்டார்.
காய்கறிக்காரரின் தள்ளுவண்டி உள்ளூர் ரவுடிகளால் தலைகீழக்கப்பட்டதைப் பார்த்தார். காய்கறிக்காரரின் வாழ்வும் தலைகீழாக திரும்பியது. அவர் மன்றாடினார், கூக்குரலிட்டார், வேலை பார்க்க அனுமதிக்கக் கேட்டு அழுதார். அந்த நாளின் இஃப்தார் உணவை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அவரின் குடும்பம் அவருக்காகக் காத்திருந்தது. வேலை பார்க்கும்போது அவருக்கு தொற்று ஏற்படலாம் என்றும் அவரை தாங்கள் காப்பாற்றுவதாகவும் ரவுடிகள் சொல்லிக் கொண்டிருந்தனர். வண்டியை அவர்கள் உருட்டி விட்டபோது காய்கறிகள் எல்லாமும் தெருக்களில் விழுந்தன. அவர் ஒவ்வொரு காய்கறியையும் பொறுக்கி சட்டைக்குள் வைத்துக் கொண்டார். தக்காளி அவரது சட்டையை சிவப்பாக்கியது. மொத்த காய்கறிகளும் தூக்கியெறியப்பட்டன.
குடியிருப்புவாசிகள் ஜன்னல்களின் வழியாக பார்த்தனர். செல்பேசிகளில் அக்காட்சியைப் பதிவு செய்தனர். காணொளிகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அரசை எதிர்க்கும் கோபமான பத்திகள் எழுதப்பட்டன.
கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு சிறிய மஞ்சள் ஆடை ஒன்றை சந்தையில் அவர் பார்த்தார். கடை திரும்பத் திறந்ததும் அதை வாங்க விரும்பினார். மதுனாவுக்கும் ஒரு புடவை வாங்க ஆசைப்பட்டார்
டிசம்பர் மாதத்தில் பிற காவலாளிகள் வேலைக்கு திரும்பத் தொடங்கியதும் ஒருவழியாய் கிராமத்துக்கு சென்று விடலாம் எனக் காவலாளி நம்பினார். ஆனால் நிறையப் புதியவர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தனர். அவர்களின் விரக்தியை அவர் பார்த்தார். அவர்கள் அவரைப் பொறாமையுடன் பார்த்தார்கள். ஊருக்குக் கிளம்பினால் வேலையை இழக்க நேரிடுமென தெரிந்ததும் காவலாளி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அங்கேயே இருப்பது என முடிவெடுத்தார். எல்லாமும் மதுனாவுக்காகவும் குழந்தைக்காகவும்தான். அடைக்கப்படாத கடனுக்காக ஊரின் நிலப்பிரபுவின் அச்சுறுத்தல்களையோ குறைவான உணவு உட்கொள்வதைப் பற்றியோ மதுனா புகார் கூற மாட்டாரென காவலாளிக்குத் தெரியும்.
அடுத்த ஊரடங்குக்கான செய்தி வெளியானது. அவசர ஊர்திகள் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தன. முதல் வருடத்தை விட இப்போது நிலைமை மோசமாக இருந்தது. தொற்று வந்ததால் ஒரு வீட்டிலிருந்து முதிய தந்தை ஒருவர் விரட்டப்பட்டதை அவர் கண்டார். அலறும் இளம் சிறார்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார்.
அவர் தொடர்ந்து பணியிலிருந்தார். விரைவிலேயே வீடு திரும்புவதாக மதுனாவுக்கு உறுதி அளித்தார். மதுனா ஒவ்வொரு முறையும் அழுதார். அவருக்கு பயமாக இருந்தது. “உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும். நம் குழந்தை இன்னும் அப்பாவை பார்க்கவே இல்லை.” அவரின் வார்த்தைகள் காவலாளியை துளைத்தன. எனினும் அவரின் குரல் ஆறுதலாக இருந்தது. சில நிமிட தொலைபேசி உரையாடல்கள் அவர்களுக்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது. கொஞ்சமாக பேசினாலும் தூரமாக இருக்கும் இருவரின் சுவாசத்தையும் கேட்பது இதம் தந்தது.
பிறகொரு அழைப்பு வந்தது: “எந்த மருத்துவமனையும் அவர்களை ஏற்கவில்லை. படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் இல்லை. உங்களின் மனைவியும் குழந்தையும் இறுதி நேரம் வரை மூச்சுக்கு திணறினர்,” என்றார் தந்தைக்கு ஆக்சிஜன் தேடும் பதட்டத்தில் இருந்த ஒரு கிராமவாசி. மொத்தக் கிராமமும் மூச்சுக்காற்றுக்காக கெஞ்சிக் கொண்டிருந்தது.
காவலாளியை நிலையாக வைத்திருந்த மெல்லியக் கயிறு அறுந்தது. அவரின் முதலாளி இறுதியில் அவருக்கு விடுமுறை கொடுத்தார். ஆனால் இப்போது அவர் யாரிடம் செல்வது? அவர் மீண்டும் வேலைக்கு சேர்ந்து உணவுப் பொட்டலங்கள் எடுத்துச் செல்கிறார். மஞ்சள் துணியும் புடவையும் ஒரு சிறிய பையில் பாதுகாப்பாக சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. மதுனாவும் பெயர் சூட்டப்படாத குழந்தையும் எங்கேயே எரிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வீசப்பட்டிருக்கலாம்.
தமிழில் : ராஜசங்கீதன்