"இந்தப் புதிய கணக்கை நீங்கள் இங்கே தொடங்குகிறீர்கள்," என்று மிகவும் கவலைப்பட்ட தீரஜ் ரெஹுவமன்சூர் வங்கி மேலாளரிடம், "ஆனால் நான் இதை நாட்டின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இயக்க முடியுமா?" என்றார்.

சிரித்துக்கொண்டே, “நான் உங்களுக்கு ஏடிஎம் அட்டைத் தருகிறேன். அதை நீங்கள் உங்கள் சொந்த மாநிலத்திலும் நகரத்திலும், எங்கெல்லாம் ஏடிஎம் இருக்கிறதோ அங்கெல்லாம் பயன்படுத்தலாம்” என்று சஞ்சய் ஆஷ்டுர்கர் கூறுகிறார்.

"அதனால் எனக்கு என்ன பயன்?" இன்னும் கவலையுடன் கேட்கிறார் தீரஜ். “ஏடிஎம் அட்டையை எப்படி பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அது என் கைரேகையுடன் வேலை செய்யுமா?"

இப்போது வங்கி மேலாளர் கவலைப்பட வேண்டும். இது நியாயமான கேள்வி என்று அவருக்குத் தெரியும். அவர் பேசிக் கொண்டிருப்போரில் மூவர் படிக்காதவர்கள் என்று அவருக்குத் தெரியும். ரேகை முதலிய அடையாளங்கள் ஒரு நாள் அவர்களுக்கு பதில் கொடுக்கலாம். ஆனால் அவுரங்காபாத் மாவட்டத்தின் அடுல் நகரில் அத்தகைய அளவீட்டு முறைகள் எதுவும் இல்லை. ரேகை அடையாளங்கள் இருக்குமிடங்களிலும் அது பயன்படுத்தப்படுவதில்லை அல்லது பழுதாகியிருக்கிறது. உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திலோ அல்லது அவரது குடும்பம் தற்போது வசிக்கும் லக்னோவின் கிராமப்புறத்திலோ தீரஜ் ஏடிஎம்மை அணுகுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதையும் அவர் அறிவார்.

"எனக்கு காசோலை புத்தகம் கிடைத்தால், அதனுடன் என் கைரேகையையும் பயன்படுத்தலாமா, இல்லையா?" இல்லை, உண்மையில் இல்லை. இது காசோலைப் புத்தக வசதி இல்லாத சேமிப்பு வங்கிக் கணக்கு.

தீரஜ் கண்ணீர் விடும் நிலையில் இருந்தார். “எனது குடும்பத்திற்கு எப்படி பணத்தை திருப்பி அனுப்புவது? நான் அதை இங்கே கொடுத்தால் - அவர்கள் லக்னோ வரை சென்றாலும் - அவர்கள் அதை எப்படி எடுப்பார்கள்? என் பணம் அவர்களுக்குக் கிடைக்கும் வரை அவர்கள் பசியுடன் இருப்பார்கள்.”

மகாராஷ்டிராவில் உள்ள அடுலில் பணிபுரியும் ஐந்து வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 தூய்மைப் பணியாளர்களில் தீரஜ்ஜும் ஒருவர். இவருடைய அதே குடும்பப் பெயரைக் கொண்ட மற்ற நான்கு பேரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் அசாம், ஜார்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ரூ.350 வருமானம் ஈட்டுகின்றனர். இந்தச் சாதாரணத் தொகையைக் கொண்டு அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, உடைகள் போன்ற அனைத்துச் செலவுகளையும் பூர்த்தி செய்கின்றனர். நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க உத்தரவு மூலம் துண்டிக்கப்படும் வரை அவர்கள் வீட்டுக்குக் கொஞ்சம் பணமும் அனுப்ப முடிந்திருந்தது.

நாங்கள் ஸ்டேட் வங்கியின் இணை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்தின் அடுல் கிளையில் இருக்கிறோம். மேலாளர் உட்பட வங்கி ஊழியர்களின் குழு, புலம்பெயர்ந்தோருக்கானக் கணக்குகளைத் திறக்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறது. வேலை நேரம் கடந்துவிட்டது, ஆனால் துயரில் வாடும் இந்தக் குழுவிற்கு உதவ ஊழியர்கள் இன்னும் பணியில் இருக்கிறார்கள். இன்று இரவு, அவர்கள் தங்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கானத் தரவுகளை சரிபார்ப்பார்கள்.. நாளை கணக்குகள் செயல்படும். முந்தைய நாள் நாம் சென்றிருந்த உஸ்மானாபாத்தின் கூட்டுறவு வங்கிக் கிளையில் பார்த்த ஏழை வாடிக்கையாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கிலிருந்து இந்தக் கிளையின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்தது. இப்போது வங்கியில் எஞ்சியிருக்கும் வாடிக்கையாளர்கள் புலம்பெயர்ந்தோர் மட்டுமே. "அதிகப் பணிக்  காரணமாக சர்வர் செயலிழந்ததால், வழக்கமான செயல்பாடுகளை இன்று முன்னதாகவே நாங்கள் நிறுத்த வேண்டியிருந்தது" என்று ஒரு ஊழியர் விளக்குகிறார். புதிய சர்வர் வந்துவிட்டது.

PHOTO • P. Sainath

சரிபார்ப்புக்காக  அடுல் கிளை வங்கியில் காத்திருப்பு, இடமிருந்து வலமாக: ரின்கு ரெஹுவமன்சூர், நோட்டன் பாண்டா, உமேஷ் முண்டா, பப்பி துலாய் மற்றும் ரான் விஜய் சிங். அது முடிந்ததும் அவர்களின் கணக்குகள் விரைவில் செயல்படும்.  ஆனால் பயணத்தின்போது அவற்றை எவ்வாறு இயக்குவது?

"இந்தப் பணத்தை நான் பீகாரில் எங்கே இருப்பு வைக்கலாம் அல்லது எடுக்கலாம்?" என்று ரான் விஜய் சிங் கேட்கிறார். அவர் அந்த மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அக்குழுவில் அதிகம் படித்தவர். ஜாமுயில் உள்ள கே.கே.எம் கல்லூரியில் இளங்கலை வரலாறு முடித்தவர். "எந்தவொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்தும் உங்கள் கணக்கில் பணத்தை இருப்பு வைக்கலாம்" என்று அவர் கூறினார். "ஏடிஎமிலிருந்து நீங்கள் பணம் எடுக்கலாம் அல்லது எங்களின் கிளைகளில் பிற பரிவர்த்தனைகளை செய்யலாம்."

"நான் ஜமுய்யில் உள்ள கோனான் கிராமத்திலிருந்து வருகிறேன்," என்கிறார் சிங். “ஹைதராபாத் ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று பீகாரில் இருந்தால் அது பாட்னாவில் இருக்கும். அந்த ‘பிற பரிவர்த்தனைகளுக்கு’ குறைந்தது 160 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும்..

அஸ்ஸாமின் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த உமேஷ் முண்டா என்பவரும் அக்குழுவில் இருக்கிறார். மேற்கு வங்கத்தின் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்த பப்பி குமார் துலாய் மற்றும் நோட்டன் குமார் பாண்டா ஆகியோர் உள்ளனர். ரின்கு, விஜய், திலீப் மற்றும் சர்வேஷ் ரெஹுவமன்சூர் ஆகியோரும் தீரஜ் போல கஜூரியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்தம் குடும்பங்களின் கிளைகள் இப்போது லக்னோவின் கிராமப்புறங்களில் உள்ளன. லக்னோவை சேர்ந்தவர் ராம் கேவல் பிரஜாபதி. மேலும் சந்தீப் குமார் உத்தரப்பிரதேச அவுரியாவின் ஜோஹ்ரான்பூர் கிராமத்தை சேர்ந்தவர். அவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள். "ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் சம்பளம் தரும் வேலை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?" அவர்கள் கேட்கிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழிருக்கும் புலம்பெயர் தொழிலாளர் வேலை தேடி பல நாட்கள் பயணிக்க வேண்டும்..

ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு. பல கதைகள். மகாராஷ்டிரா செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளனர். ரான் விஜய் சிங் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்திலும், உமேஷ் முண்டா மத்திய பிரதேசத்திலும் பணிபுரிந்துள்ளனர். வங்காளிகளான துலாய் மற்றும் பாண்டா ஆகியோர் மூன்று மாநிலங்களில் ஒன்றாக வேலை பார்த்திருக்கின்றனர்.. இருப்பினும், இவை எதுவும் அவர்களின் முக்கிய கவலையாக இப்போது இல்லை. அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுக்கு எப்படி பணம் அனுப்புவது என்று கவலையில் இருக்கின்றனர். சிலர் வீட்டிற்குச் செல்வதா இப்போது கண்டுபிடித்த வேலையில் தங்குவதா என்ற குழப்பத்தில்  இருக்கின்றனர்.

PHOTO • P. Sainath

உத்தரப்பிரதேச அவுரியாவைச் சேர்ந்த சந்தீப் குமார் (இடது), தனக்கு 19 வயதாகிறது என்கிறார். ஆனால் இளமையாகத் தெரிகிறார். பிகாரில் உள்ள ஜமுய் நகரைச் சேர்ந்த தொழிலாளியான ரான் விஜய் சிங் (வலது) இளங்கலை வரலாறு முடித்தவர்

ஹைதராபாத்தின் ஸ்டேட் வங்கிச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெகதீஷ் பவ்தாங்கர், அவர்களின் இக்கட்டான நிலையை விளக்குகிறார்: “முழுக்க முழுக்க பரிவர்த்தனை மற்றும் இருப்புத் தொகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், பொது வங்கிச் சேவை சரிந்துவிட்டது. தபால் நிலையத்திலோ வங்கிகளிலோ அவர்கள் செய்ய வேண்டிய வழக்கமான பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளன. ஒரு வங்கியின் மற்ற எல்லா செயல்பாடுகளும் கூட முடங்கியிருக்கிறது. அனைத்து ஊழியர்களும் பரிமாற்றம் மற்றும் இருப்புப் பரிவர்த்தைகனுகளுக்கு மட்டும் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்.

"எங்களிடம் பணம் இல்லாத போது நாங்கள் எப்படி பண அஞ்சல் அனுப்புவோம்?" என்று பப்பி துலாய் கேட்கிறார். ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அரசாங்கம் அறிவித்ததும் 11 பேரின் உலகங்களும் நொறுங்கிப் போனது. புதிய 2,000 ரூபாய் நோட்டு எல்லாரின் கிண்டலுக்கும் உள்ளானது.

"யாரும் அதை விரும்பவில்லை," என்கிறார் பாண்டா. "இது அசலா அல்லது நகலா என்று சொல்வது கடினம்" என்கிறார் சிங். "அது உண்மையானது என்று நீங்கள் உணரவில்லை. எப்படியிருந்தாலும், யாரும் அதை ஏற்கவில்லை. வங்கியில் இருந்து, தான் பெற்ற சில நூறு ரூபாய் நோட்டுகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிறார் தீரஜ். இவை அதிகாரப்பூர்வமாக மீண்டும் புழக்கத்தில் விடப்பட்ட அழுக்கடைந்த நோட்டுகள். "கடைகளில் 'சுத்தமான நோட்டுகளுடன்' திரும்பி வரும்படி என்னிடம் கூறப்பட்டது."

சந்தீப் குமாரின் குடும்பம், இப்போது கான்பூரின் கிராமப்புற பகுதியில் அவுரையாவுக்கு மிக அருகில் உள்ளது. சுமார் மூன்று ஏக்கர் நிலம் குடும்பத்துக்கு உள்ளது. சுமார் 12 பேர் அதை நம்பி வாழ்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். ”மேலும் சாகுபடி முற்றிலும் முடங்கியுள்ளது. நாங்கள் எங்கள் வயல்களுக்கு தேவையான பொருட்களை சிறிய அளவில் வாங்குகிறோம். அதற்கான பணம் இப்போது யாரிடமும் இல்லை. சிறிய  நோட்டுகளை நாம் பெற முடியாது. பெரிய நோட்டுகள் நம்மிடம் இல்லை. அப்படியேச் செய்தாலும், எங்களுக்கு சில்லறைக் கிடைக்காது.”

இவர்கள் 11 பேரும் பவர் கிரிட் கார்ப்பரேஷனின் மின் துணைமின் நிலையம் அமைக்கும் பணியில் கூலி வேலை பார்க்கிறார்கள். அது ஒரு பொதுத்துறை பிரிவு. பவர் கிரிட் அவர்களை நேரடியாக பணியமர்த்தினால் அவர்கள் மிகவும் சிறப்பாக இருப்பார்கள். ஆனால் அந்தப் பொதுத்துறை நிறுவனம், அவர்கள் ஒவ்வொரு நாளும் நேரடியாகச் சம்பாதிப்பதன் பெரும் பகுதியை, ஒரு ஒப்பந்தக்காரருக்குக் கொடுத்து தங்கள் பணியாளர்களை அவர் மூலம் பயன்படுத்திக் கொள்கிறது.. கிட்டத்தட்ட  40 சதவீதம். மேலும், அவர்கள் இப்போது காசோலை மூலம் அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும். ரொக்கமாக அல்ல. அவர்களின் எல்லா பிரச்சனைகளையும் இது இன்னும் ஆழமாக்குகிறது.

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவொரு நபரால் புலம்பெயர்ந்தோர் வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மிகவும் படித்தவர். பவர் கிரிட் பொறியாளரும், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசியுமான டேனியல் கர்கெட்டா, இந்த சோர்வுற்ற, தொழிலாளர்கள் குழுவின் தலைவராக உள்ளார். வித்தியாசமான வர்க்கப் பின்னணியில் இருந்து வந்தாலும், கர்கெட்டா அவர்களின் நிலைமையை உணர்ந்ததாகத் தோன்றுகிறது. "நானும் ஒரு புலம்பெயர் தொழிலாளிதான்," என்று அவர் புன்னகைக்கிறார்.

அவருடைய பாதுகாப்பிலும் இந்த கிளையில் இருப்பது அவர்களின் அதிர்ஷ்டம்.

இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றால், அதிர்ஷ்டம் இல்லாதவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan