“நாங்கள் வேலை செய்கிறோம். அதனால் நீங்கள் உணவு உண்கிறீர்கள்“ என்று கிருஷ்ணாபாய் கார்லே கூறினார். புனே மாவட்டத்தில் உள்ள கேட் தாசில் பகுதியைச் சேர்ந்த விவசாயி. அது அரசுக்கு நினைவூட்டுகிற ஒரு வாசகம். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களையும் நிபந்தனையின்றி திரும்பப்பெற வலியுறுத்தி போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளுள் கிருஷ்ணாபாயும் ஒருவர். 2020ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நடைபெற்றுக்கொண்டிருந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர் புனேவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், பெண்கள் புனே நகரில் ஒன்றுகூடி புதிய வேளாண் திருத்தச்சட்டங்களின் பாதிப்புகள், குறிப்பாக அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர்.
இந்தியாவில் விவசாயத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடும்படியாக இருந்தாலும், குறைந்தபட்சம் 65.1 சதவீதம் பெண் தொழிலாளர்கள் விவசாயத்தில் அல்லது விவசாயப்பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்று 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களின் குடும்பத்தின் சொந்த நிலமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மத்திய அரசு பெண் விவசாயிகளை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்றுவதை விடுத்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று புனே கூட்டத்தில் கூறினர். ‘‘பெண்கள் வேலை மட்டும் செய்வதில்லை. அவர்கள் ஆண்களைவிட கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள்“ என்று ஆஷா அட்தோலே கூறினார். இவர் தாவுண்ட் தாசிலைச் சேர்ந்த விவசாயி ஆவார்.
தேசிய அளவிலான விவசாயிகளின் போராட்டத்தின் 16ம் நாளில் டிசம்பர் 11ம் தேதி இக்கூட்டம் நடைபெற்றது. “விவசாயிகள் தோட்டம்“ என்ற பெயரில் டிசம்பர் 8ம் தேதி ஒரு அமைப்பை உருவாக்கி புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி வருகின்றனர். ஸ்டிரீ முக்தி மோச்சா அந்தோலன் சம்பார்க் சமிதி என்ற 41 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெண்கள் அமைப்பு இந்தக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தது.
தலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து, தங்களின் ஒற்றுமையை காட்டும் வகையில் இருந்தாலும், கடன் மற்றும் சந்தை வசதிகள் போன்ற விவசாயிகளின் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருந்த கோரிக்கைகளையும் அவர்கள் இதில் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளுள், விவசாயிகள் மீது அவதூறு பரப்பி அவர்களை “தேச விரோதிகள்“ என்று அழைப்பதை நிறுத்த வேண்டும். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் தேசிய கமிஷன் அல்லது சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் மற்றும் பரவலாக்கப்பட்ட கொள்முதல் வசதிகள் ஆகியவற்றை செய்துதர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

புனே மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண் விவசாயிகள், டிசம்பர் 11ம் தேதி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, தேசிய அளவிலான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதிய வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்

“ஊரடங்கு காலத்திலும் வேலை செய்தது விவசாயிகளே, நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே இருந்தபோதும், காய்கறிகள், தானியங்களை விளைவித்து, உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து கொடுத்தனர்“ என்று கேட் தாசிலை சேர்ந்த கிருஷ்ணாபாய் கார்லே கூறினார்

மாவால் தாசிலை சேர்ந்த சாந்தா பாய் வார்வே ஒரு விவசாயி. “எங்கள் நிலத்தை எடுத்துக்கொள்வதற்காக பாவானா அணை எங்கள் பகுதியில் கட்டப்படுகிறது. அங்கிருந்து தண்ணீர் சின்ச்வாடில் உள்ள ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீர்ப்பாசன வசதி இல்லாமல் நாங்கள் தற்போது, மழையை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது“ என்று அவர் கூறுகிறார்


விவசாயத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும், பெண்கள் மையமாக உள்ளனர், நிலத்தை தயார்படுத்துவதில் துவங்கி, அறுவடை வரை, உணவு தயாரிப்பின் அனைத்து நிலைகளிலும் எவ்வித உதவியுமின்றி பங்களிப்பு செய்கின்றனர். விவசாய விளைச்சல் சந்தை குழுவில் 30 சதவீதம் பெண் பிரதிநிதிகள் இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், குறைவான வட்டியில் கடன் போன்ற கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தனர்

புதிய வேளாண் திருத்தச்சட்டத்திற்கு எதிராக அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று ஜீனார் தாசிலில் உள்ள மானகேஸ்வர் கிராம துணைத்தலைவர் மாதுரி கரோடே கூறினார். அவர் அகில இந்திய விவசாயிகள் சபையின் உறுப்பினரும் ஆவார். “ஊரடங்கின்போது, விவசாயக்கூலித்தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. நாங்கள் அவர்களுக்கு ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கினோம்“ என்று அவர் கூறினார்

“பெண் விவசாயிகளுக்கு புதிய வேளாண் திருத்த சட்டங்கள் தேவையில்லை. எங்களுக்கு நாங்கள் முடிவெடுக்கும் உரிமை வேண்டும். எங்கள் உரிமை கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்“ என்று தாண்ட் தாசிலைச் சேர்ந்த விவசாயி ஆஷா ஆத்தோலே கூறினார்


தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக இருந்தது. வலுவான பொது வினியோக திட்டத்தின் தேவை குறித்தும் விவசாயிகள் வலியுறுத்தினர்

“தற்போதைய சந்தை மூடப்பட்டால், என்னைப்போன்ற தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். வாழ்வதற்கு அப்போது நாங்கள் என்ன செய்வோம்?“ என்று சுமன் கெய்க்வாட் கேட்கிறார். அவர் புனே சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். அது நகரின் வேளாண் விளை பொருட்களுக்கான மொத்த விற்பனை மையமாக உள்ளது

சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம் செய்வது என விவசாயிகள் உறுதிமொழியேற்றனர். விதைகள் மற்றும் நாற்றுகளை சிறு தொட்டிகளில் விதைத்து போராட்டத்தில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பின்னர் அத்தொட்டிகளை வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்
தமிழில்: பிரியதர்சினி. R