அந்தக் கொடியை தாலுகா அலுவலகத்தில் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 18 அன்று பறக்க விடுவார்கள். அந்தப் பொன்னாளில் தான் 1942-ல் காஜிபூர் மாவட்டம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டது. முகமதாபாத் தாலுகா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்ற மக்கள் கூடியிருந்தார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்கள் ஷிவ் பூஜான் ராய் தலைமையில் ஷெர்பூரில் கொடியேற்ற கூடியிருந்தார்கள். முகமதாபாத்தின் தாசில்தார் கூடியிருந்த கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

காஜிபூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1௦ அன்று 129 தலைவர்களுக்குக் கைது ஆணையைப் பிறப்பித்து இருந்தது ஆங்கிலேய அரசு. அதனால் கொதித்துக் கொண்டிருந்த மாவட்டத்தில் இந்தத் துப்பாக்கிச்சூடு விடுதலைக் கனலை கொழுந்து விட்டு எரியச் செய்தது. 19-ம் தேதி அன்று ஒட்டுமொத்த காஜிபூரும் பொதுமக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தது. அம்மக்கள் மூன்று நாட்களுக்கு ஆட்சி புரிந்தார்கள்.

அக்காலத்தின் மாவட்ட ஆவணத்தொகுப்பு, “ஆங்கிலேய அரசு கடுமையான அடக்குமுறையை ஏவியது. ஒவ்வொரு கிராமம், கிராமமாகக் கொள்ளையடித்து, பொருட்களைச் சூறையாடினார்கள், தீயிட்டு கொளுத்தினார்கள்.” என்று குறிக்கிறது. அடுத்தச் சில நாட்களில் கிட்டத்தட்ட 15௦ மக்களைச் சுட்டுக் கொன்றார்கள். ஆவணங்களின் கூற்றுப்படி இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் 35 லட்சம் ரூபாயை பிடுங்கிக் கொண்டார்கள். 74 கிராமங்கள் கொளுத்தப்பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காகக் காஜிபூர் மக்கள் மொத்தமாக நாலரை லட்சம் ரூபாயை அபராதமாகச் செலுத்தினார்கள். அக்காலத்தில் அது மிகப்பெரிய தொகை.

அதிகாரிகள் ஷெர்பூரை தனியாகக் குறிவைத்து தாக்கினார்கள். ஷெர்பூரின் மிக வயதான தலித்தான ஹரி சரண் சிங் அந்தக் கொடிய நாட்களை நினைவுகூர்கிறார். “ஒரு ஈ காக்கை கூடக் கிராமத்தில் இல்லை. முடிந்தவரை மக்கள் இங்கிருந்து ஓடிவிட்டார்கள். ஆங்கிலேயரின் கொள்ளை நீண்டுகொண்டே இருந்தது.” என்கிறார். ஆனாலும், காஜிபூர் மாவட்டத்துக்கே பாடம் கற்பிக்க வேண்டும் என்று கறுவிக்கொண்டு இருந்தது ஆங்கிலேய அரசு. 1850-களிலேயே இண்டிகோ தோட்ட முதலாளிகளைத் தாக்கிய வரலாறு இந்த மாவட்டத்துக்கு உண்டு. இப்போது குண்டுகள், தடியடிகள் அவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தன...

PHOTO • P. Sainath

சில விடுதலைத் தியாகிகள் குழுக்கள் இறந்து போன தியாகிகளின் வாரிசுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது

இன்றுவரை முகமதாபாத் தாலுகா அலுவலகம் பல்வேறு அரசியல் யாத்திரீகர்களை ஈர்க்கிற இடமாக உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்திய பிரதமராக இருந்த நான்கு பேர் வந்திருக்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டில் இறந்த எட்டு தியாகிகளின் நினைவகத்தைக் கவனித்துக் கொள்ளும் கூட்டமைப்பான ஷாஹீத் ஸ்மாரக் சமிதியின் தலைவரான லக்ஷ்மன் ராயிடம் பேசினோம். “ஆகஸ்ட் 18 அன்று இங்கே வராத உத்திர பிரதேச முதல்வர்களே இல்லை.” என்கிறார். அன்று போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்த கொடியை இன்னமும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். சற்றே நிறம் மங்கியிருந்தாலும், விடுதலைப்போரின் அழியாத அடையாளமாக அது ஒளிர்கிறது. அதனை எங்களிடம் லக்ஷ்மண் காட்டுகிறார். “எந்தப் பெரிய மனிதர் இங்கே வந்தாலும் கொடியை வழிபடாமல் இருப்பதில்லை. வருகிற எல்லாப் பெரிய தலைவர்களும் கொடியை வழிபடுகிறார்கள்.” என்கிறார். .”

இந்தப் பூஜைக்களால் ஷெர்பூருக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. இறந்து போன தியாகிகளின் நினைவுகளை வர்க்கம், ஜாதி, நேரம், வர்த்தகம் எல்லாம் பங்குபோட்டுக் கொள்கின்றன. “இறந்து போனது எட்டுத் தியாகிகள் என்றாலும், பத்து நினைவக நிர்வாகக் குழுக்கள் இங்கே இருக்கின்றன.” என்கிறார் ஒரு சமூகச் சேவகர். இந்தக் குழுக்களில் சில அரசாங்க உதவியோடு அமைப்புகளை நடத்துகின்றான். இறந்து போன வீரத்தியாகிகளின் மகன்கள் (ஷாஹீத் புத்திரர்கள்) சிலரும் இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

பூஜைகளில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. 21,௦௦௦ மக்கள் வாழும் ஷெர்பூர் எனும் இந்தப் பெரிய கிராமத்தில் பெண்களுக்கு என்று ஒரு கல்லூரி இல்லை. கட்டித்தருவதாகத் தரப்பட்ட வாக்குறுதிகள் வெறும் கனவாகவே இருக்கின்றன. ஐந்தில் நான்கு பெண்கள் கல்வியறிவு பெறாத கிராமத்தில் இந்த யோசனைகள் பெரிய வரவேற்பை பெறுவதில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

எதற்காக ஷெர்பூர் தியாகங்கள் செய்தது? என்ன காரணத்திற்காக மக்கள் போராடினார்கள்? இதற்கான வெவ்வேறு பதில்கள் வந்து விழும். அந்தப் பதில்கள் உங்களுடைய சமூக, பொருளாதார நிலையைப் பொருத்தது. இறந்து போன எட்டு தியாகிகளும் பூமிஹார் ஜாதியை சேர்ந்தவர்கள். ஆங்கிலேய அடக்குமுறையைத் தீரத்தோடு எதிர்கொண்ட அவர்களின் செயல் சிலிர்க்க வைப்பது. ஆனால், இவர்களைப் போலவே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர் இழந்த ஒடுக்கப்பட்ட ஜாதி தியாகிகள் இப்படி நினைவுகூரப்படுவது இல்லை. அந்த ஆகஸ்ட் 18 க்கு முன்னும், பின்னும் பல்வேறு போர்கள் நடந்தன. ஆகஸ்ட் 14 அன்று நந்த்கன்ஜ் ரயில்வே நிலையத்தைக் கைப்பற்றியதற்காக ஐம்பது பேரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய அரசு. ஆகஸ்ட் 19-21 நாட்களில் அதைப்போல மூன்று மடங்கு மக்கள் போராட்டங்களில் கொல்லப்பட்டார்கள்

PHOTO • P. Sainath

ஷெர்பூரில் உள்ள ஒரு தியாகிகள் நினைவகம். (இடது). அந்த நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ள தகடு (வலது)

மக்கள் எதற்காக இறந்தார்கள்? “விடுதலை வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் லட்சியமாக இருந்தது. வேறொன்றும் இல்லை.” என்கிறார் முகமதாபாத் கல்லூரியின் முதல்வரான கிருஷ்ண தேவ் ராய். நிலப்பண்ணையார்களாக இருக்கும் பெரும்பான்மை பூமிஹார்களும் அப்படிதான் பார்க்கிறார்கள். ஆங்கிலேயர்கள் வெளியேறி விடுதலை வந்த கணமே விஷயம் முடிவுக்கு வந்து விட்டது.

ஷெர்பூரில் வசிக்கும் பட்டியல் ஜாதியை சேர்ந்த பால் முகுந்த் இதை வேறு விதமாகப் பார்க்கிறார். “நாங்கள் அந்தப் போராட்டத்தைக் கொண்டாடினோம். எங்களுக்கு நிலம் கிடைக்கும் என நம்பினோம்.” என்கிறார். முப்பதுகளில் நடந்த கிஷான் இயக்கம் (விவசாய இயக்கம்) ஓரளவுக்கு நம்பிக்கி தந்தது. 1952-ல் இயற்றப்பட்ட ஜமீன்தாரி முறை ஒழிப்பு மற்றும் நில சீர்திருத்த சட்டம் மீண்டும் ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தது.

அந்த நம்பிக்கை சீக்கிரமே வெறுங்கனவாகப் போனது.

இந்தக் கிராமத்தில் உள்ள 3,500 தலித்துகளும் நிலமில்லாமல் வாழ்கிறார்கள். “பயிரிடுவதற்கு நிலம் இருக்கிறதா என்பது கூட அடுத்தக் கவலை. எங்கள் வீடுகள் கூட எங்கள் பெயரில் இல்லை.” என்கிறார் உள்ளூர் தலித் சமிதியை சேர்ந்த ராதே ஷ்யாம். தலித்துகளுக்கு நிலப்பகிர்வு வழங்கப்பட்டு 35 வருடங்கள் ஆகியும் இதுதான் நிலைமை. விடுதலை சிலருக்கு தனித்துவமான லாபங்களைக் கொண்டு வந்து கொட்டியது. தாங்கள் உழுத நிலத்தின் உரிமை பூமிஹார்களுக்குக் கிடைத்தது. நிலமில்லாத ஒடுக்கப்பட்ட ஜாதியினர் அப்படியே இருக்கிறார்கள். “மற்றவர்களைப் போல நாங்கள் உழுத நிலம் எங்களுக்குச் சொந்தமாகும் என்று கனவு கண்டோம்.” என்கிறார் ஹரி சரண் ராம்

“We thought there would be some land for us,” says Bal Mukund, a Dalit who lives in Sherpur. His excitement was short-lived
PHOTO • P. Sainath

“நாங்கள் அந்த போராட்டத்தை கொண்டாடினோம். எங்களுக்கு நிலம் கிடைக்கும் என நம்பினோம்.” என்கிறார் ஷெர்பூரில் வசிக்கும் தலித்தான பால் முகுந்த். அந்த நம்பிக்கை வெறுங்கனவானது

ஏப்ரல் 1975-ல் தலித்துகளுக்கு இதுதான் உங்கள் இடம் என்று வன்முறையால் பாடம் புகட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் தீயிட்டுக் கொடுமைகள் புரிந்து 33 ஆண்டுகள் முடிவதற்குள் தலித்துகள் வாழ்ந்த பகுதிகள் கொளுத்தப்பட்டன. இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் பூமிஹார்கள். “எவ்வளவு கூலி தரவேண்டும் என்பதில் ஏற்பட்ட சச்சரவின் வெளிப்பாடு அது. எங்கள் வீடுகள் எரிந்ததற்கே எங்கள் மீதே பழி போடப்பட்ட்டது. எங்கள் வீடுகள் எரிந்து கொண்டிருந்த போது நாங்கள் பூமிஹார்களின் வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்.” என்று நினைவுகூர்கிறார் ராதே ஷ்யாம். கிட்டத்தட்ட நூறு வீடுகள் எரிந்து போயின. தலித்துகள் இந்தப் பாதகச் செயலில் விடுதலைப் போராட்ட வீரர்களின் எந்த வாரிசுகளும் ஈடுபடவில்லை என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

“பண்டித பஹுகுணா முதல்வராக இருந்தார். எங்களைக் காண வந்த அவர், “உங்களுக்குப் புதிய வீடுகளைப் புதுத் தில்லியில் கட்டித்தருவோம்.” என்றார். எங்களுடைய இந்தப் புதிய தில்லியை பாருங்கள். இந்தப் பரிதாபகரமான குடிசைப்பகுதியில் கூட இந்த வீடு எங்களுக்குச் சொந்தமானது தான் என நிரூபிக்கும் எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை. இன்னமும் கூலி உயர்வு பிரச்சினைகள் நீடிக்கின்றன. இங்கே கிடைக்கிற கூலி மிகக்குறைவாக இருப்பதால் மக்கள் கூலி வேலைக்குப் பீகார் போகிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?” எனக்கேட்கிறார் தலித் சமிதியின் தலைவரான ஷிவ் ஜெகன் ராம் .

தலித்துகள் விருப்பப்பட்டு ஆதிக்க ஜாதியினர், அதிகாரிகளோடு மோதுவதில்லை. காவல்துறை தலித்துகளை நடத்துகிற முறை ஐம்பது வருடங்களில் பெரிதாக மாறிவிடவில்லை. கரகத்பூர் கிராமத்தில் வாழும் முஷாஹர் தலித்தான தீனநாத் வன்வாசி காவல்துறையின் கடுமையான அடக்குமுறையை அனுபவித்து இருக்கிறார். “ஏதேனும் அரசியல் கட்சி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும். காஜிபூர் சிறைச்சாலை முழுக்கக் கைதிகளால் நிரம்பி விடும். ஒட்டுமொத்த சிறைச்சாலையே களேபரமாக இருக்கும். காவல்துறை என்ன செய்யும் தெரியுமா. கையில் கிடைக்கிற முஷாஹர் ஜாதியினரை காவல்துறை கைது செய்யும். ‘கொள்ளையடிக்கத் திட்டம் போட்டார்கள்’ என்று வழக்கு ஜோடிக்கப்படும். சிறையில் குவிந்திருக்கும் கைதிகளின் மலம், வாந்தி, எல்லாக் கருமத்தையும் கழுவ வேண்டும். அதற்குப் பின் விடுதலை செய்துவிடுவார்கள்.” என்று அதிரவைக்கிறார்.

Fifty years into freedom, Sherpur reeks of poverty, deprivation and rigid caste hierarchies
PHOTO • P. Sainath

விடுதலை பொன்விழா காலத்திலும், ஷெர்பூரில் வறுமை, வாய்ப்பின்மை, கடுமையான ஜாதிய அடக்குமுறைகள் புகைந்து கொண்டே இருக்கின்றன

“நான் என்னவோ ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த கதையைப் பேசவில்லை. இது இப்போதும் நடக்கிறது. இந்த அநீதியை இரண்டு வருடங்களுக்கு முன்கூடச் சந்தித்தார்கள்.” என்கிறார் ககரன் கிராமவாசியான தாசுராம் வன்வாசி. வேறு வகையான கொடுமைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தாசுராம் முதல் வகுப்பில் பத்தாவதில் தேர்ச்சி பெற்றார். அப்படி அவர் ஜாதியில் இருந்து வெகு சிலரே சாதித்து இருக்கிறார்கள். கல்லூரியில் ஆதிக்க ஜாதி ஆசிரியர்கள், மாணவர்களின் வெறுப்பு மிகுந்த இழிவான வசைகளை எதிர்கொண்டார். அவமானம் தாங்காமல் அவர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். அந்தக் கல்லூரிக்கு தலித் தலைவர் பாபு ஜெகஜீவன் ராமின் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது என்பது எவ்வளவு முரணானது?

ஷெர்பூரின் தலித் குடிசைப்பகுதியை விட்டு வெளியேறுகிறோம். நாங்கள் நடக்கும் பாதையில் சேறு, சகதியில் கால்கள் புதைகின்றன. இதுதான் தலித்துகள் வாழும் பகுதிக்கான வாயில். மழை நடைபாதையை நாசம் செய்துவிட்டது. துர்நாற்றம் அடிக்கும் சாக்கடை நடைபாதைகளை நிறைத்து நிற்கிறது. “இது தான் எங்கள் புதுத் தில்லிக்கான சாலை>” என்கிறார் ஷிவ் ஜெகன் ராம்

“தலித்துகளுக்கு எந்த விடுதலையும் கிடைக்கவில்லை. எங்களுக்குச் சுதந்திரம், நிலம், கல்வி, வேலைகள், மருத்துவ வசதிகள், நம்பிக்கை என்று எதுவுமே இல்லை. எங்களுக்கு விடுதலை என்பது அடிமைத்தனத்தின் அடுத்தக் கட்டமாகவே இருக்கிறது.”

இப்படி இவர் கதறுகையில், அங்கே தாலுகா அலுவலகத்தில் பூஜைகள் அமோகமாக நடக்கின்றன.

இக்கட்டுரை முதன்முதலில்  The Times of India நாளிதழில்  August 25, 1997 அன்று வெளிவந்தது.

இந்த தொடரில் மேலும் வாசிக்க:

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி

தமிழில்: பூ. கொ. சரவணன்

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan