
பருவமழை மற்றும் அறுவடை காலங்களில் மகபூப்நகர் மக்கள் தங்களது சொந்த மாவட்டத்திலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். ஆனால் பருவம் இல்லாத சமயங்களிலோ அல்லது விளைச்சல் மோசமாக இருக்கும்போதோ அவர்கள் நகரத்தில் இருக்கும் கட்டுமானதளங்களில் வேலையைத் தேடி புலம் பெயர்கின்றனர்

அவர்கள் தங்களது வீடுகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேறி ஒரு புதிய மற்றும் அந்நிய நகரத்திற்கு வருகின்றனர்

தகரம் மற்றும் பிளாஸ்டிக் தாள்களை கொண்டு மிகக் குறைந்தபட்ச வசதிகளுடன் கட்டப்பட்ட சாலையோர குடிசைகள் இந்த கட்டுமான பணிகள் முடியும் வரை மும்பையில் அவர்களின் தற்காலிக வீடுகளாக செயல்படுகின்றன

தோண்டுவது , துளையிடுவது குப்பைகளை அகற்றுவது மற்றும் குழிகளை சுத்தம் செய்வதற்காக நிலத்தில் 30 அடி ஆழம் வரை இறங்குவது ஆகியவை இவர்களின் வேலைகள் ஆகும். இவை அனைத்தையும் அவர்கள் எவ்வித காப்பீடும் அல்லது விபத்து பாதுகாப்பும் இல்லாமல் செய்கின்றனர்

இந்த வேலைகளை தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான சம்பளத்திற்கு செய்து கொடுக்கின்றனர். தெலுங்கு பேசும் மேற்பார்வையாளர் அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது மற்றும் நகரின் கட்டுமான பணியிடங்களில் வேலை இருப்பதை தெரிவிக்கும் இடைத்தரகராகவும் செயல்படுகிறார்

இந்தத் தளங்களில் வேலை செய்து வரும் பெண்கள் அடிக்கடி பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்

அவர்களது சிறு குழந்தைகளை வீட்டில் தனியாக விடமுடியாது மேலும் இப்பெண்கள் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆபத்தான சிமெண்ட் மற்றும் கான்கிரீட் குவியல் தான் இந்த குழந்தைகளின் விளையாட்டு மைதானமாக மாறுகிறது. சில நேரங்களில் , வேலை பார்க்கும் இடத்தில் அல்லது மேம்பாலங்கள் அடியிலிருக்கும் வாகன நிறுத்துமிடங்களிலும் சுற்றித்திரியும் ஒன்று அல்லது இரண்டு நாய்கள் தான் அவர்களுக்கு விளையாட்டு தோழர்களாக மாறுகின்றன. மேலும் குப்பைகள் மற்றும் தூசியில் விளையாடி சோர்வடையும் போது அவர்கள் சாலை ஓரத்திலேயே தூங்கி விடுகின்றனர்

இத்தொழிலாளர்களுக்கு அவர்களின் தற்காலிக குடியிருப்புகளில் சுத்தமான குடிநீர் , கழிவறை மற்றும் மின்சாரம் ஆகியவை வழங்கப்படவில்லை

இருப்பினும் அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்கள் தங்களது ஊரில் சம்பாதிப்பதை விட அதிகம் , இதுவே அவர்களை நகரத்தை நோக்கி இழுக்கிறது
தமிழில் : சோனியா போஸ்