ஆயிரக்கணக்கில் கடந்து செல்கின்றனர். அன்றாடம் நடந்தபடி, மிதிவண்டிகளில், லாரிகளில், பேருந்துகளில் அல்லது கிடைக்கும் எந்த வாகனத்திலும் ஏறி வருகின்றனர். சோர்வு, அயற்சி, வீட்டை அடைய வேண்டும் என்ற கவலை மட்டுமே கைத்துணை. அனைத்து வயது ஆண், பெண், குழந்தைகளும் நடக்கின்றனர்.
இம்மக்கள் ஹைதராபாத் அல்லது அதற்கும் அப்பாலில் இருந்து கிளம்பி, மும்பை குஜராத் அல்லது விதர்பா, மேற்கு மகாராஷ்டிரா போன்ற பிரதேசங்களுக்குச் செல்கின்றனர். அல்லது பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற கிழக்குப் பகுதி பிராந்தியங்களுக்கு நடக்கின்றனர்.
ஊரடங்கால் வருமானமும், வாழ்வாதாரமும் இல்லையென்றான நிலையில் கோடிக்கணக்கானோர் நாடெங்கும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் கிராமத்திற்கு குடும்பத்தினருடனும் உறவுகளுடனும் திரும்பிச் செல்கின்றனர். பயணம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஊருக்குப் போய்விடுவது நல்லது எனக் கருதுகின்றனர்.
நாட்டின் புவியியல் மையமான நாக்பூரைக் கடந்தே பலரும் செல்கின்றனர். இயல்பான நேரங்களில் நாக்பூர், நாட்டின் முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றாக உள்ளது. அதனைக் கடந்து மக்கள் இப்படிச் செல்வது பல வாரங்களாக தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகள் பேருந்துகள், ரயில்கள் மூலம் புலம் பெயர்ந்தவர்களை அழைத்துச் செல்ல தொடங்கியும் இது தொடர்கிறது. ஆனால் இருக்கை கிடைக்காத ஆயிரக்கணக்கானோர் தங்களது நெடுந்தூர, வீடு நோக்கிய பயணத்தை கிடைக்கும் பாதையில் மேற்கொள்கின்றனர்.
தந்தைமார்கள் தனது உடைமைகளை தோளில் சுமந்தபடியும், இளம் தாய்மார்கள் உறங்கும் தங்களது குழந்தைகளைத் தோளில் சுமந்தும் ஹைதராபாத்திலிருந்து நாக்பூருக்கு நடக்கின்றனர்.
அவர்களில்: 40களில் வெப்பநிலை கொதிக்கும் நிலையில் வாடகை மோட்டார் சைக்கிளில் இளம் தம்பதியினர் பிறந்து 44 நாள் ஆன கைக்குழந்தையுடன் ஹைதராபாத்திலிருந்து கோரக்பூர் நோக்கி விரைகின்றனர்.
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த முப்பத்தி நான்கு இளம்பெண்கள் திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அகமதாபாத்தில் பயிற்சி பெற்றுவிட்டு வீட்டிற்குச் செல்ல முயற்சிக்கின்றனர்.
ஐந்து இளைஞர்கள் அண்மையில் வாங்கிய மிதிவண்டிகளுடன் ஒடிசாவின் ராயகாடா மாவட்டம் நோக்கி செல்கின்றனர்.
நாக்பூரின் வெளிவட்டச் சாலையில் நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் தேசிய நெடுஞ்சாலை 6, 7 வழியாக தினமும் வருகின்றனர். பல்வேறு மையங்களில் அவர்களுக்கு உணவும், சுங்கச் சாவடிகளை சுற்றி தங்குமிடத்தையும் மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடிமக்கள் குழுக்கள் இணைந்து செய்கின்றன. வெய்யில் நேரத்தில் அத்தொழிலாளர்கள் ஓய்வெடுத்துவிட்டு மாலையில் தங்களின் பயணத்தைத் தொடங்குகின்றனர். அன்றாடம் பல்வேறு மாநில எல்லைகளில் அவர்களை இறக்கி விடுவதற்கு மகாராஷ்டிரா அரசு இப்போது பேருந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எனவே இப்போது நடந்து செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. வீட்டிற்கு பாதுகாப்பாக சென்றுவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் கோரிக்கை.
ஹைதராபாத்திலிருந்து லாரி மூலம் வந்திறங்கிய தொழிலாளர்கள் குழுவினர் நாக்பூரின் புறநகரில் உணவு, உறைவிடத்தை நோக்கி நடக்கின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் வீடுகளை நோக்கி நடக்கின்றனர்- மே மாத வெயிலிலும் பல கிலோ மீட்டர்களைக் கடந்து செல்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் நாக்பூர் நகரம், மக்கள் குழுக்களாக நடந்து செல்வதை, வீடு நோக்கி அனைத்து திசைகளில் இருந்தும் வருவதை காண்கிறது.
நாக்பூரின் புறநகரான பஞ்சாரி அருகே உணவு, உறைவிடம் நோக்கி நடக்கும் ஆண்கள்; ஐதராபாத்திலிருந்து வரும் அவர்கள் பணிக்காக புலம் பெயர்ந்தவர்கள்.
நாக்பூரின் புறநகரான பஞ்சாரி கிராமத்தில் அன்றாடம் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர், அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர்.
நாக்பூர் நகர நெடுஞ்சாலை அருகே பாலத்தின் நிழலில் உணவு, குடிநீர் எடுத்துக் கொள்கின்றனர்.
சோர்வடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுடன் அவர்களின் கிராமங்கள், குடும்பங்களை நோக்கி பயணத்தைத் தொடங்கும் லாரி.
இந்த லாரியில் கால் வைக்கும் அளவிற்கு கிடைத்த இடத்தில் பயணத்தை தொடங்குவோர்.
பலர் வேறு லாரியில் இடம்பிடிக்க ஓடுகின்றனர். இந்த இடம், தேசிய நெடுஞ்சாலை 6, 7ஐ இணைக்கும் நாக்பூரின் வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே உள்ளது.
கோடைக் காலத்தில் 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலை நிலவும் நேரம் இது.
வெயில், பசி, கூட்டம், களைப்பு போன்றவற்றையும் தாண்டி குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கையே அவர்களை தாக்குப்பிடிக்கச் செய்கிறது.
மும்பையிலிருந்து ஒடிசா நோக்கி மூன்று ஆண்கள் புதிதாக வாங்கிய மிதிவண்டியில், வேறு வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு பயணத்தை தேர்வு செய்துள்ளனர்.
நெடுஞ்சாலைகள் அல்லது முக்கிய சாலைகளில் மட்டும் நடக்கவில்லை, வயல்கள், காட்டுப் பாதைகளிலும் அவர்கள் செல்கின்றனர்.
தங்களுக்கு நெருக்கடி வந்துவிட்ட இந்த நேரத்தில், தாங்கள் கட்டமைத்த நகரங்களை விட்டு, தங்களுக்கு கொஞ்சமாவது ஆதரவளித்த நகரங்களை விட்டுப் புறப்படுகின்றனர்.
தமிழில்: சவிதா