" எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாத காரணத்தால் நாங்கள் தில்லிக்கு வர வேண்டியதாயிற்று" என்கிறார் பாரதிபாய் கோடே. இவர் 2018 மார்ச்சில் நடந்த விவசாயிகளின் குறிப்பிடத்தக்க போராட்டமான நாசிக்கிலிருந்து மும்பை வரையிலான 180 கிமீ நடைபயணத்தில் பங்கெடுத்து நடந்தவர்.
விவசாயிகள் சங்கம் மற்றும் - தொழிற்சங்கங்களின் பேரணி நடந்த செப்டம்பர் 5 க்கு முந்தைய நாள் தில்லியின் மத்திய பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நான் பாரதிபாயை சந்தித்தேன். நாசிக் முதல் மும்பை வரை நடந்த நீண்ட பயணத்தில் பங்கேற்ற 40,000 முதல் 50,000 வரையிலான விவசாயிகளைப் போலவே மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தின் கல்வான் தாலூக்காவிற்கு உட்பட்ட அவரின் கிராமமான சப்டாஷ்ரங்ககாட் கிராமத்திலிருந்து அவருடன் மற்ற பலரும் தில்லிக்கு வந்திருந்தனர்.
நில உரிமைகள், நீர்ப்பாசன வசதி, கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயம், போன்ற பல கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த முறை 26 மாநிலங்களிலிருந்து 300000 பேர் கலந்து கொண்டதில் அந்த எண்ணிக்கை அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கணக்கிட்டதை விட பல மடங்கு அதிகரித்திருந்தது. அதோடு தற்போது அந்த விவசாயிகளுடன் மற்ற பல தொழிலாளிகளும் கூட அங்கிருந்தனர். அவர்கள் அனைவரும் அகில இந்திய விவசாய சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் அறைகூவலின் பேரில் ஊர்வலத்தில் பங்கெடுப்பதற்காக தில்லிக்கு வந்திருந்தனர்.
பெரும்பாலான போராட்டகாரர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறிதளவு உணவு மற்றும் உடைகள் அடங்கிய சிறு பைகளைச் சுமந்து கொண்டு செப்டம்பர் 5 பேரணிக்கு முதல் நாளே ரயில் அல்லது பேருந்து மூலம் தில்லிக்கு வந்து விட்டனர். ராம்லீலா மைதானத்தில் அவர்கள் தங்கி படுத்துறங்க தேவையான கூடார வசதிகளும் ரூ 25க்கு உணவு கிடைக்கவும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

![The tents were named according to the states. AIKS General Secretary, Hannan Mollah said, “The [protestors] came from 26 states and nearly 3 lakh people marched in the rally.”](/media/images/02b-IMG_8771-SJ.max-1400x1120.jpg)
இந்த அரசாங்கம் எங்களுக்கு நில உரிமை தர வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்: பார்திபாய் கோடே கூறினார் ( இடது ) : ராம்லீலா மைதானத்தில் மாநில வாரியாக பெயர் குறிப்பிட்ட பிறகு போராட்டக்காரர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் (வலது )
செப்டம்பர் 5ம் தேதி காலை முதல் பெய்த மழை அவர்களின் ஆவேசத்தை குலைக்கவில்லை .போராட்டக்காரர்கள் காலை 9 மணிக்கு அவர்களின் கூடாரங்களிலிருந்து வெளியே கிளம்பி மழையில் முழுமையாய் நனைந்தபடி இன்குலாப் ஜிந்தாபாத் என கத்திக் கொண்டும் வங்கம், குஜராத்தி, கன்னடம்,மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் பல மொழிகளில் கோஷங்களை முழங்கிக் கொண்டும் பேரணியில்பங்கெடுத்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற வீதியை சென்றடையும் முகமாய் நடந்து மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தை கடந்து விட்டனர்.
"அரசாங்கம் எங்களுக்கு நீதி வழங்காவிட்டாலும் நாங்கள் அந்த நிலத்திலிருந்து வெளியேற மாட்டோம்" என்று கோலி மஹாதேவ் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் பாரதிபாய் கூறினார். ஒரு ஏக்கருக்கு குறைவான அந்த வன நிலத்தில் அவர்களது குடும்பம் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக விவசாயம் செய்து கொண்டிருக்கிறது. "நாங்கள் எங்களுக்கு நில உரிமைப் பட்டா தரும்படி இந்த அரசாங்கத்தையும் வனத்துறையையும் கேட்டுக் கொள்கிறோம். அந்த பட்டா ( உரிமை ) எங்களுடைய பெயரில் இல்லாதவரை நாங்கள் எப்படி கடன் பெற முடியும்" என்று அவர் கேட்டார். இந்த உரிமைகளும் பாதுகாப்பு அம்சங்களும் வன உரிமைச் சட்டம் 2006ல் இருக்கிறது. ஆனால் அது அமலாக்கப்படவில்லை.
"அதற்கு பதிலாக வனத்துறை அதிகாரிகள் நான்கு முறை எனது வீட்டை நாசம் செய்தனர். நான் அவர்களைக் கண்டு பயப்படவில்லை. அந்த சின்ன தகர வீட்டை இரவோடு இரவாய் நான் சீரமைத்தேன். அரசாங்கத்தைக் கண்டு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் " எனக் கேட்டார் பாரதிபாய்.
பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த உப்பாலி கிராமத்திலிருந்து 70 வயது மகர்சிங் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் வந்திருந்தார். பேரணியில் நடந்து வந்தபோது ஏற்பட்டிருந்த களைப்பின் காரணமாக சன்சான் மார்க்கத்தில் ஒரு நீலநிற துணியின் மீது அவர் அமர்ந்து கொண்டிருந்ததை நான் கண்டேன்.
சிங் அந்த வயதிலும் கூட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். கடந்த நிதியாண்டில் வெறும் 25 நாட்கள் மட்டுமே அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் " தினக்கூலியாக நிர்ணயிக்கப்பட்ட ரூ 240 க்கு பதில் எட்டு மணி நேர வேலைக்கு கூலியாக ரூ 140 மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது எனவும் சில சமயங்களில் அவர்கள் சம்பாரித்த அந்த பணத்தை கூட அரசாங்கம் அவர்களுக்கு தர (அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த ) மூன்றாண்டுகள் கூட ஆகிறது" என்றும் அவர் கூறினார்.
மகர்சிங்கின் மனைவி கர்தேவ் கௌரும் கூட நான்காண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் ஊன்றுகோல் உதவியுடன் தான் நடக்க இயலும் என்னும் நிலை ஏற்படும் வரையில் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணி புரிந்த தொழிலாளியாவார். அவர்களுடைய குழந்தைகளும் அருகிலுள்ள கிராமங்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் தொழிலாளிகளாக பணி புரிகின்றனர்." இந்த வருமானத்தைக் கொண்டு நாங்கள் எப்படி சாப்பிட முடியும் ?" என்று அவர் கேட்டார்.

இந்திரகுமாரி நேவார் ( இடது மேற்புறம் ) மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்த மதிய உணவு திட்டஊழியர் , மற்றும் மகர் சிங் ( வலது மேற்புறம் ) பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்திலிருந்து வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊழியர் , அவர்களின் ஊதியத்தில் மிதமான மாற்றமாவது தேவை என்று வந்தவர்கள், பாராளுமன்ற வீதியை நோக்கிய ஊர்வலம் துவங்கிக் கொண்டிருக்கிறது (கீழ் வரிசை )
மத்தியப்பிரதேச மாநிலத்தின் சியோனி மாவட்டத்தைச் சேர்ந்த பர்கத் மண்டலத்தில் உள்ள மராலா கிராமத்திலிருந்து வந்த இந்திரகுமாரி நேவர் போல பல மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள் தங்களுக்கு கூடுதலான சம்பள நிர்ணயிப்பைக் கோரி டெல்லிக்கு வந்திருந்தனர் . இந்திரகுமாரி மாநில அரசு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பணியாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிகிறார். "தினந்தோறும் ஐம்பது குழந்தைகளுக்கான உணவு தயாரித்து சமைத்த பாத்திரங்களைக் கழுவி வைக்க மாதம் ரூ 1000 மட்டுமே வழங்கப் படுகிறது என அவர் கூறினார். ( மலாராவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ) இந்தப் பேரணியில் கலந்து கொள்ள இயலாத அவர் கணவர் சிவப்பிரசாத் தினக்கூலி ரூ 100 பெறும் விவசாயத் தொழிலாளியாக கிராமத்தில் பணிபுரிகிறார் .
சியோனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட கணிசமான அளவிலான மதிய உணவு திட்டப் பணியாளர்கள் மாத சம்பளமாக ரூ 18000 த்தை தர வலியுறுத்தினர் .
இதே சமயத்தில் 28 வயது நிறைந்த மஹேந்தர் சௌத்திரி அவருடைய சம்பளத்தில் மிதமான மாற்றமாவது தேவை என கேட்டுக் கொண்டிருக்கிறார். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் அமாஸ் மண்டலத்தை சேர்ந்த சசூர் காப் கிராமத்திலிருந்து தில்லிக்கு வந்துள்ள அவர் ஒரு விவசாயத் தொழிலாளி. ஒரு நாளைக்கு வயலில் ஒன்பது மணி நேரம் உழைத்த பிறகு அவர் பெறும் கூலி இரண்டரை கிலோ அரிசி மட்டுமே! " நில உரிமையாளர்கள் எங்களுக்கு பணமாக கூலி தர மாட்டார்கள். அவர்கள் தருவது அரிசி மட்டுமே ! ஒரு கிலோவிற்கு சந்தை மதிப்பு ரூ 22 ஆக உள்ளபோது கிராமத்திலுள்ள கடைக்காரர்கள் எங்களிடமிருந்து கிலோவிற்கு ரூ 16 தந்து வாங்கிக் கொள்கின்றனர் " என்று அவர் கூறினார். இன்னும் கொஞ்சம் சம்பாரிப்பதற்காக அருகிலுள்ள கிராமங்களில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு அவ்வப்போது சென்று தினக்கூலியாக ரூ 150 பெற்று வேலை செய்கிறார். " 12 வயதிலிருந்து நான் ஒரு தொழிலாளியாக இருந்து வருகிறேன். எங்களின் தினக்கூலி ரூ 500 என்னும் அளவிலாவது நிச்சயம் உயர வேண்டும்".

![In order to make ends meet, Mahendar Choudhary, 28 from Chature Khap village in the Amas block of Gaya district in Bihar doubles up as a [building] construction majdoor and an agricultural labourer](/media/images/04b-IMG_9130.max-1400x1120.jpg)
பொது சுகாதார ஊழியர் மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்திலிருந்து வந்த பிரதன்ய துரேந்தர் ( இடது , மகன் விஷாலுடனும் மகள் காஞ்சனாவுடனும் வந்தவர்) மற்றும் பீகாரின் கயா மாவட்டத்திலிருந்து வந்த விவசாய மற்றும் கட்டுமான தொழிலாளி மகேந்தர் சௌத்திரி ( வலது ) இவர்களும் கூட மரியாதையான ஊதியம் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்
தில்லியில் நடந்த அந்த மிகப் பெரிய பேரணியில் மஹாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தின் மோடாலா தாலூக்காவிற்குட்பட்ட தக்லி பி ஆர். ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய பிரதன்ய துராந்தர் கூட கலந்து கொண்டார். நாடாளுமன்ற வீதிக்கு அருகிலிருந்த தால்ஸ்தாய் மார்க்கத்தின் நடைபாதையின் மீது சோர்வடைந்த நிலையில் அமர்ந்து கொண்டிருந்தார் அவர். அந்த போராட்டத்திற்கு அவளுடைய 17 வயது மகள் காஞ்சனையையும் , 11 வயது மகன் விஷாலையும் அழைத்து வந்திருந்தார்.
போலியோவால் பாதிக்கப்பட்ட அவள் கணவனுக்கு வேலையில்லை. "நாங்கள் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை . என் இரு குழந்தைகளும் மயக்கம் வருவது போல் உணர்ந்ததால் நான் அவர்களை இங்கே அமர வைத்திருக்கிறேன்" என்கிறார்.
பிரதன்யா 2010 வரை தேசிய ஊரக சுகாதார மையத்தின் கீழ் இயங்கும் அதிகாரமிக்க சமூக நலசெயற்பாட்டமைப்பின் ( ASHA ) பொதுநல ஊழியர் .நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என வலியுறுத்துவதற்காக அவர் புல்தானா மற்றும் அகோலா மாவட்டங்களை சேர்ந்த கிராமங்களிலிருந்து செயல்படும் ( ASHA ) மற்றபல ஊழியர்களையும் தன்னுடன் பேரணிக்கு அழைத்து வந்திருந்தார். பிரசவத்திற்கான ஆலோசனை தருதல் போன்ற மருத்துவ சேவைகள் மற்றும் வீடுகளில் கழிப்பிடங்கள் உருவாக்கும் பணிகள் ( தேசிய சமூக நல மையத்தின் வலைதளப் பக்கம் கூறுவது போல் ) உள்ளிட்டபொதுசுகாதாரம் ஊக்குவிப்பு சார்ந்த பணிகளில் ( ASHA ) ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் பொறுத்து வெவ்வேறு அளவிலான ஊக்கத்தொகைகளைப் பெற்றனர்.
நாசிக் முதல் மும்பை வரை நடந்த கட்டுப்பாடு மிக்க விவசாயிகள் பேரணியிலும் பிரதன்யாவும் கலந்து கொண்டார். "இந்த அரசாங்கம் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கப் போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும். அதனால் நாங்கள் தில்லிக்கு மீண்டும் திரும்ப வர வேண்டியிருக்கிறது" என்று அவர் உறுதியாக கூறினார். மாலை 4.30க்கு அந்தப் பேரணி முடிவடைந்த நிலையில் தில்லிக்கு அவர்கள் மீண்டும் வந்து போராட வேண்டியிருக்கும் என்று அவரைப் போல் பலரும் உறுதியாய்க் கூறினர்.
மனக்குறைகளுடனும் தீர்மானங்களுடனும் தில்லியில் சங்கமித்தவர்கள் : புகைப்பட தொகுப்பு .
தமிழில்: ஆர்.செம்மலர்