12 வயதாகும் தம்பி ஷங்கர் லால், அருகே இருக்கும் வேப்பமரத்துக்கு தன் சைக்கிளில் கடைசி சுற்று ஓட்டி விட்டு வருவதற்காக ஃபூல்வதியா காத்துக் கொண்டிருக்கிறார். “நான் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு உடனே வந்துடுவேன்,” என்கிறார் 16 வயதான ஃபூல்வதியா. “நாளையிலிருந்து ஐந்து நாட்களுக்கு என்னால் சைக்கிள் ஓட்ட முடியாது. துணியை பயன்படுத்தும்போது கொஞ்சம் ஆபத்து நிறைந்ததாக மாறிவிடுகிறது,” என சாலையோரத்தில் நாய் ஒன்றை கொஞ்சியபடி சொல்கிறார்.
தனக்கான மாதவிடாய் சுழற்சி நாளையிலிருந்து தொடங்குமென எதிர்பார்க்கிறார் ஃபூல்வதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதற்கு முன்னிருந்ததை போல், இப்போது அவருக்கு இலவச மாதவிடாய் நேப்கின்கள் பள்ளியிலிருந்து கிடைக்காது. “மாதவிடாய் தொடங்கியதும் எங்களுக்கான நேப்கின்களை பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்வோம். ஆனால் இப்போது துணியைத்தான் நான் பயன்படுத்த முடியும்.”
சித்ரக்கூட் மாவட்டத்தில் இருக்கும் அவரின் பள்ளிக்கூடம் நாட்டின் பிற பள்ளிக்கூடங்களை போல் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருக்கிறது.
கர்வி தாலுகாவில் உள்ள தரூகா கிராமத்தில் சோனெப்பூர் என்கிற குக்கிராமத்தில் தன் பெற்றோருடனும் இரண்டு சகோதரர்களுடனும் ஃபூல்வதியா வாழ்ந்து வருகிறார். அவரின் இரண்டு சகோதரிகள் வேறு ஊர்களில் மணம் முடித்து கொடுக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு முடித்து பத்து நாள் விடுமுறையில் இருந்து பள்ளிக்கு செல்ல காத்திருந்தார். மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. கர்வி ஒன்றியத்தில் இருக்கும் ராஜ்கியா பலிகா பள்ளியில் அவர் படிக்கிறார்.
”எதற்கும் பயன்படுத்தப்படாத துணியை தேடியெடுத்து நான் பயன்படுத்திக் கொள்வேன். இரண்டாம் தடவை பயன்படுத்தும்போது துணியை நன்றாக துவைத்துவிடுவேன்,” என்கிறார் ஃபூல்வதியா. அவரின் கால் விரல்களை அலங்கரித்த நகப்பூச்சில் தூசின் கோடு இருந்தது. அநேகமாக வெறுங்காலில் நடந்ததால் ஏற்பட்டிருக்கலாம்.
ஃபூல்வதியா மட்டுமென இல்லை. உத்தரப்பிரதேசத்திலிருக்கும் ஒரு கோடிக்கும் மேலான இளம்பெண்கள் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச நேப்கின்களை பயன்படுத்துபவர்கள். எத்தனை பேர் ஃபூல்வதியா போல் இலவச நேப்கின்கள் பெறுகிறார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படி இருந்தாலும் குறைந்தபட்சம் பத்து லட்சம் இளம்பெண்களேனும் ஏழைக் குடும்பங்களிலிருந்து தற்போது இலவச நேப்கின்கள் கிடைக்காமல் இருப்பார்கள்.
ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உத்தரப்பிரதேசத்தில் படிக்கும் இளம்பெண்களின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 60 ஆயிரம் என ‘ இந்தியாவில் பள்ளிக் கல்வி ’ என தலைப்பிட்ட கல்வி திட்ட மற்றும் நிர்வாகத்துக்கான தேசிய நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. இந்த எண்ணிக்கை 2016-17ம் ஆண்டுக்கானது.
கிஷோரி சுரக்ஷா யோஜனா அரசுத் திட்டத்தின் கீழ், ஆறிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இலவச மாதவிடாய் நேப்கின்கள் பெற்றுக் கொள்ளலாம். 2015ம் ஆண்டில் இத்திட்டம் அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சரான அகிலேஷ் யாதவ்வால் தொடங்கப்பட்டது.
*****
துவைத்த பிறகு துணியை எங்கு காயப் போடுவார்? “வீட்டுக்குள்ளேயே எங்காவது யாரும் பார்க்காத வகையில் காயப் போடுவேன். என்னுடைய தந்தையும் சகோதரர்களும் பார்த்துவிடக் கூடாது,” என்கிறார் ஃபூல்வதியா. மாதவிடாய்க்கு பயன்படுத்தப்பட்ட துணியை அனைவருக்கும் தெரிந்து துவைப்பதோ சூரிய வெளிச்சத்தில் காயப் போடுவதோ எல்லா இடங்களிலும் இருப்பதை போலவே இங்குள்ள பெண்களுக்கும் வழக்கத்தில் இல்லை. அவர்களின் வீட்டு ஆண்கள் அதை பார்த்துவிடக் கூடாது என நினைக்கிறார்கள்.
துவைத்த பிறகு துணியை “வீட்டுக்குள்ளேயே எங்காவது யாரும் பார்க்காத வகையில் காயப் போடுவேன். ” என்கிறார் ஃபூல்வதியா. அனைவருக்கும் தெரிந்து துவைப்பதோ காயப் போடுவதோ வழக்கத்தில் இல்லை
“மாதவிடாய் பற்றிய புரிதல் இல்லாமலிருப்பது தவறான கருத்துகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் வழிகோலும். இயல்பான பால்யகால வாழ்க்கையை பெண் குழந்தைகளுக்கு மறுக்கவும் கூடும்” என்கிறது யுனிசெஃப் அமைப்பு.
”துவைத்து சூரிய வெளிச்சத்தில் காயப்போடப்பட்டால், மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சவென பயன்படுத்தப்படும் சுத்தமான பருத்தித் துணியே பாதுகாப்பானது. அப்போதுதான் பாக்டீரியாக்களின் தொற்று தவிர்க்கப்படும். ஆனால் பல கிராமப்புறங்களில் இது எதுவும் பொருட்படுத்தப்படுவதில்லை. பெண்ணுறுப்பில் கிருமி தொற்றுவது கிராமத்து பெண்களிடம் அதிகமாக இருக்கிறது,” என்கிறார் லக்னோவில் இருக்கும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் மூத்த பெண்மை பிணியியல் மருத்துவர் டாக்டர் நீது சிங். ஃபூல்வதியா போன்ற பெண்கள் தற்போது மாதவிடாய் நேப்கின்களுக்கு பதிலாக சுகாதாரமற்ற துணிகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஒவ்வாமையையும் நோய்களையும் தரலாம்.
“ஜனவரி மாதத்தில் பள்ளியில் எங்களுக்கு 3-லிருந்து 4 பாக்கேட்டுகள் வரை நேப்கின்கள் கொடுக்கப்பட்டது” என்கிறார் ஃபூல்வதியா. “ஆனால் அவை தீர்ந்துபோய் விட்டன.” அவரால் அவற்றை விலைக்கும் வாங்க முடியாது. குறைந்தபட்சமாக மாதத்துக்கு 60 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். குறைவான விலையில் இருப்பது ஆறு நேப்கின்களை கொண்ட பாக்கெட்தான். அதுவும் 30 ரூபாய். ஒரு மாதத்தில் அவருக்கு இரண்டு பாக்கெட்டுகள் தேவைப்படும்.
அவருடைய தந்தை, தாய் மற்றும் மூத்த சகோதரர் எல்லாரும் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். இயல்பான காலத்தில் எல்லாரும் சேர்ந்து ஒரு நாளுக்கு 400 ரூபாய் சம்பாதிப்பார்கள். “இப்போது அது குறைந்துபோய் நூறு ரூபாய் கிடைப்பதே சிரமமாகிவிட்டது. யாரும் எங்களுக்கு நிலங்களில் வேலைகளும் கொடுப்பதில்லை” என பேரனுக்கு உப்புமா ஊட்டியபடி சொல்கிறார் ஃபூல்வதியாவின் 52 வயதான தாய் ராம் ப்யாரி.
மாற்று வழிகளும் இங்கு இல்லை. “அடிப்படைத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவதிலேயே நாங்கள் தற்போது கவனம் செலுத்துகிறோம். இப்போதிருக்கும் நிலையில் உயிர்களை காப்பாற்றுவதுதான் அத்தியாவசியம்,” என்கிறார் சித்ரக்கூட் மாவட்ட மாஜிஸ்திரேட் ஷேஷ் மணி பாண்டே.
2015-16ம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி ( NFHS-4 ), இந்தியாவில் இருக்கும் 15-லிருந்து 24 வயது வரையிலான இளம்பெண்களில் 62 சதவிகிதம் பேர் மாதவிடாய்க்கு துணிகளையே பயன்படுத்துகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அது 81 சதவிகிதமாக இருக்கிறது.
மே 28-ம் தேதி அனுசரிக்கவிருக்கும் மாதவிடாய் சுகாதார நாளில் நாம் பெருமை கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை.*****
இப்பிரச்சினை பல மாவட்டங்களில் இருக்கிறது. “இந்த மாதத்துக்கான மாதவிடாய் நேப்கின்கள் ஊரடங்குக்கு ஒரு நாள் முன் எங்களுக்கு கிடைத்தது. அவற்றை பெண்களுக்கு விநியோகிக்கத் தொடங்கும் முன், பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது,” என்கிறார் லக்னோ மாவட்டத்தின் கோசைகஞ்ச் ஒன்றியத்தில் இருக்கும் சலாவுலி கிராமத்தின் ஆரம்பப் பள்ளி முதலவர் யஷோதனந்த் குமார்.
”மாணவர்களின் மாதவிடாய் சுகாதாரத்தை நான் எப்போதும் உறுதி செய்வேன். அவர்களுக்கு நேப்கின்கள் வழங்குவதோடு நில்லாமல், ஒவ்வொரு மாதமும் மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்களை கொண்டு மாதவிடாய் கால சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் கூட்டங்கள் நடத்தினேன். ஆனால் இப்போது இரண்டு மாதங்களாக பள்ளிக்கூடம் அடைக்கப்பட்டிருக்கிறது,” என தொலைபேசியில் கூறினார் நிரஷா சிங். மிர்சாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மவய்யா கிராமத்தின் பள்ளியில் முதல்வராக இருக்கிறார். “என்னுடைய பல மாணவிகள் நேப்கின்கள் விற்கும் கடைகளுக்கு கூட செல்ல முடியாதவர்கள். இன்னும் பலர் 30-லிருந்து 60 ரூபாய் வரை செலவழிக்க விரும்பவும் மாட்டார்கள்.”
சித்ராக்கூட் மாவட்டத்திலுள்ள 17 வயது அங்கிதா தேவியும் அவரின் சகோதரியான 14 வயது சோட்டியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) நிச்சயமாக அந்த அளவு பணம் செலவழிக்க முடியாது. ஃபூல்வதியாவின் வீட்டிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சித்தார கோகுல்பூர் கிராமத்தில் வசிக்கும் இரு இளம்பெண்களும் கூட துணி பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 11-ம் வகுப்பு படிக்கும் அங்கிதாவும் 9-ம் வகுப்பு படிக்கும் சோட்டியும் சித்தார கோகுல்பூரில் இருக்கும் சிவாஜி பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களின் தந்தை ரமேஷ் பகாடி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரசு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி 10000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
”இந்த மாதங்களுக்கான சம்பளம் எனக்கு கிடைக்குமா என தெரியவில்லை,” என்கிறார் அவர். “என்னுடைய வீட்டு உரிமையாளர் வாடகைக்காக என்னை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருக்கிறார்.” உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டம்தான் ரமேஷ்ஷின் சொந்த ஊர். வேலைக்காக இங்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.
மருந்தகம் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் இருப்பதாக சொல்கிறார் அங்கிதா. சாதாரணக் கடை ஒன்று 300 மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. ஆனால் அங்கு மாதவிடாய் நேப்கின்கள் விற்கப்படுவதில்லை. “ஆனால் 30 ரூபாய் செலவழித்து ஒரு பாக்கெட் வாங்கவே நாங்கள் பலமுறை யோசிக்க வேண்டும்,” என்கிறார் அங்கிதா. “நாங்கள் மூன்று பேர் இருக்கிறோம். குறைந்தபட்சம் மாதத்துக்கு 90 ரூபாயாவது ஆகும்.”
பல இளம்பெண்களிடம் நேப்கின்கள் வாங்க பணமில்லை என்பது தெளிவாகிறது. “ஊரடங்குக்கு பின்னும் கூட நேப்கின் விற்பனை அதிகரிக்கவில்லை,” என்கிறார் சித்ரக்கூட்டின் சிதாப்பூர் டவுனில் இருக்கும் மருந்தகத்தின் உரிமையாளர் ராம் பார்சயா. பிற இடங்களிலுமே அதுதான் நிலை.
மார்ச் மாதம் தேர்வுகளை முடித்தார் அங்கிதா. “நன்றாக எழுதியிருக்கிறேன். 11ம் வகுப்பில் உயிரியல் பிரிவை எடுத்துப் படிக்க விரும்புகிறேன். சில மூத்த மாணவர்களிடம் உயிரியல் புத்தகங்களை கூட கேட்டிருந்தேன். அதற்குள் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டது,” என்கிறார் அவர்.
ஏன் உயிரியல்? “லட்கியோன் அவுர் மகிளாவோன் கா இலாஜ் கருங்கி (பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நான் உதவ விரும்புகிறேன்),” என சொல்லி சிரிக்கிறார். “ஆனால் எப்படி செய்வதென தெரியவில்லை.”
முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.
இந்தியக் கிராமப்புறங்களில் இருக்கும் பதின்பருவ மற்றும் இளம்பெண்களின் நிலையை பதிவு செய்யும் PARI மற்றும் CounterMedia ட்ரஸ்ட்டின் தேசிய அளவிலான செயல்திட்டம் Population Foundation of India-வின் ஆதரவில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைச் சூழலை அவர்களின் குரல்கள் மற்றும் அனுபவங்கள் வழியே அறிவதற்கான முன்னெடுப்பு ஆகும்.
இக்கட்டுரையை மீண்டும் பதிப்பிக்க விரும்பினால், zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளவும்.
தமிழில்: ராஜசங்கீதன்