மூங்கில் குச்சியில் வைக்கோல் சுற்றியுள்ள வால் போன்ற அமைப்பை கையில் பிடித்துக்கொண்டு சாஸ்திரிஜி ரிக்ஷாவில் ஏறுகிறார். அவருடன், அவரது குழுவில் 19 ஆண்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மூன்று ஆட்டோரிக்ஷாக்களில் நெருக்கிப்பிடித்துக்கொண்டு ஏறி அமர்ந்து, அயோத்தியாவின் பல்வேறு இடங்களில் மேடைகளில் நிகழ்ச்சி நடத்துவதற்கு விரைந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அனைவரும் முழு ஒப்பனை மற்றும் ஆடை, அலங்காரத்துடன் உள்ளனர். அவர்களுக்கு தெரியும் இந்த தசரா மாதத்தில்தான் அவர்கள் கொஞ்சம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
விநாயக் சாஸ்திரி அனுமன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவர்தான் பாடல் குழுவின் இயக்குனர் மற்றும் மேலாளர். அவர் இதை 2002ம் ஆண்டு துவக்கினார். அவர் மேடையில் நிகழ்ச்சிகள் நடத்தாத காலத்தில், 60 வயதான சாஸ்திரி அயோத்தியா ஆரம்ப பள்ளியில் ஆசிரியர் பணி செய்வார். புறநகர் பகுதிகளில் அவர்கள் குடும்பத்தினருக்கு விவசாய நிலம் உள்ளது. அவருக்கு வயலில் இருந்து வரும் வருமானத்தில் பாடல் குழுவை நிர்வகிக்கிறார். தசரா மாதத்தில், இவரது குழுவினர் ஒவ்வொரு மாலையும் அயோத்தியாவில் குறைந்தபட்சம் மூன்று மேடைகளில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இவர்களின் நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் நடைபெறும். தசரா காலத்தில் சில வாரங்களுக்கு இது அவர்களுக்கு இரவுப்பணி. ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிர் காலங்களில் அவர்கள் வாரத்தில் மூன்று முறை இந்த நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆண்டின் மற்ற நாட்களில் நிகழ்ச்சிகளே கிடையாது.
சங்கங்கள் அல்லது ஊர் குழுக்களிடம் இருந்து ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்ய சாஸ்திரி ரூ. 3 ஆயிரம் முன்பணமாக பெறுகிறார். மற்றுமொரு தொகையான ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500ஐ நிகழ்ச்சி முடிந்த பின்னர் வழங்குவார்கள். சில நேரங்களில் பேசிய மொத்த தொகையும் முன்னரே வழங்கப்படும். குழு உறுப்பினர்களுக்கு மூப்பு அடிப்படையில் ஓர் இரவுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை வழங்கப்படும். சாஸ்திரி சிறிது தொகையை பயணம், அலங்கார ஆடைகள் மற்றும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வாங்க உபயோகிப்பார். இந்த ஆடை, ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும், நிகழ்ச்சி நடைபெறாத காலங்களில், பெரிய பெட்டிகளில் வைத்து மூடப்பட்டு, உள்ளூரில் உள்ள தர்மசத்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
அயோத்தியாவின் ராமர் கதை நிகழ்ச்சி நடத்துபவர்கள், பாழடைந்த மற்றும் தூசிபடர்ந்த அரங்குகளில் எப்போதாவதுதான் நிகழ்ச்சி நடத்துவார்கள். அவர்கள் வழக்கமாக தெருமுனையில் தற்காலிக மேடை அமைத்தே, நிகழ்ச்சி நடத்துவார்கள். அதற்கு அவர்கள் திரைச்சீலைகள், பின்னணியில் மங்கலான நிலப்பரப்பு படங்கள் மற்றும் முகத்திற்கு பூசிக்கொள்ளும் பவுடரைக்கொண்டு புகை மூட்டம் ஏற்படுத்தியும் நிகழ்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்கிக்கொள்வார்கள்.
ராமாயணத்தில் உள்ள அத்தியாயங்கள் மற்றும் கதைகளை அதன் வீரியத்துடனும், ஆடம்பர தோற்றத்துடனும் செய்து காட்டுவார்கள். அதுவே ராமர் கதை நிகழ்ச்சிகளின் சாரம் ஆகும். அயோத்தியா மாறிவிட்டதைப்போல், தற்போது நிகழ்ச்சியின் சாரங்களிலும் சில மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. அவரது நிகழ்ச்சி தற்போது பெரிய அரசியல் என்பது விநாயக் சாஸ்திரிக்கு நன்றாக தெரியும். “ராமரின் பெயர் தற்போது எல்லோரும் அழைக்கும் ஒன்றாக மாறிவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.
12 வயதான அக்ஷய் பதாக் என்பவர்தான் அந்த குழுவில் உள்ள இளையவர். அவர் தனது 10 வயது முதல் சீதாவின் கதாபாத்திரத்தை அரங்கேற்றி வருகிறார். அவர் 7ம் வகுப்பு படிக்கிறார். ஆனால், மூன்றாம் வகுப்பு மாணவர் போல் தோற்றமளிக்கிறார். அவரது ஒல்லியான உடல்வாகு மற்றும் உயரத்தை பார்த்த சாஸ்திரி, அவரது தந்தையை ஏற்கனவே அறிந்திருந்ததால், அக்ஷயை நடிப்பதற்கு அழைத்துக்கொண்டார். அக்ஷயின் தந்தை உத்திரபிரதேச மாநிலம் பைசாபாத் தாலுகாவில் உள்ள பெனிப்பூர் கிராமத்தில் மதகுருவாக உள்ளார். சீதா சிறிது பலகீனமானவராக இருக்கவேண்டும். சீதா, இறுதியில் நிலத்திற்குள் செல்ல அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று சாஸ்திரி கருதுகிறார்.

தசரா காலங்களில் அவர்கள் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள், ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு ஒவ்வொரு இடமாக சென்று மேடையில் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். எனவே நேர பற்றாக்குறையை சமாளிக்க அவர்கள் தரித்திருக்கும் வேடத்துடனே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வார்கள்
ஆஜானுபாகுவான தோற்றத்துடன், இருக்கும் விஜய் ராமர் கதாபாத்திரத்தை ஏற்கிறார். அவர் எலெக்ட்ரீஷியனாக இருக்கிறார். 24 வயதான விஜய், இந்தக்குழுவினருடன் 2013ம் ஆண்டு முதல் இருக்கிறார். அவர் அயோத்தியா நகரத்தைச் சேர்ந்தவர். 52 வயதான சுரேஷ் சந்தும் அயோத்தியாவைச் சேர்ந்தவர். அவர் வால்மீகி மற்றும் ராவணா கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுரேஷ் அயோத்தியா ரயில் நிலையத்திற்கு பின்புறம் வெற்றிலைக்கடை வைத்திருந்தார். ஆனால், இப்போது அவருக்கு ராமர் கதையில் நடிப்பதில் இருந்து வரும் வருமானம் மட்டுமே அவருக்கு உள்ள ஒரே வாழ்வாதாரம்.
கதை துவங்குவதற்கு முன்னர், இரண்டு திருநங்கைகள், டாலி மற்றும் பாட்டி என்று அனைவருக்கும் பரிச்சயமானவர்கள், மேடையில் தோன்றி ராமரின் பராக்கிரமங்களை உச்சஸ்தாதியில் பாடுவார்கள். அதற்கேற்றவாறு சிம்பல், டோலக் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பவர்கள் இசைப்பார்கள். பின்னர் திரைச்சீலை விலகும். ராமர், லட்சுமணன் மற்றும் சீதா மூவரும் ஆறு, பெரிய நிலவு மற்றும் நீல மான் பின்னணியில் அமர்ந்திருப்பார்கள்.
54 வயதான கணபதி திரவேதி என்ற முதன்மை பாடகர், வால்மிகி ராமாயணத்தில் உள்ள முதல் கீர்த்தனைகளை பாடுவார். இவர் வாரணாசியில் ஒரு ஆசிரமத்தில் வசிக்கிறார். அவர் ஒவ்வொரு ஆண்டும் தசரா காலங்களில் விநாயக் சாஸ்திரியின் குழுவில் கலந்துகொண்டு பாடுவதற்காக அயோத்தியா வருகிறார். ஆண்டின் மற்ற மாதங்களில் அவர் அனாதை இல்ல மாணவர்களுக்கு கீர்த்தனைகள் பாட கற்றுக்கொடுத்து சம்பாதிக்கிறார்.
மேடையில் ஏற்றி வைக்கப்படும் விளக்கு பார்வையாளர்களை கவரும். சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். பலர் ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு வந்து காவிய மூவருக்கு ஆரத்தி எடுப்பார்கள். திரிவேதி பாடுவதை தொடர்வார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் கிடைக்கும் சில்லறைகளும், பண நோட்டுகளும் குழுவினருக்கு மிகுந்த உதவிகரமானதாக இருக்கும். சில நேரங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முழு தொகையை கொடுக்கமாட்டார்கள்.
பின்னர் ராமர், லட்சுமணன், சீதா ஆகியோர் மேடை ஏறுவார்கள். அனுமன் கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை எடுத்துக்கொள்ளும். ராவணனின் உணர்ச்சிவசப்பட்ட வசனங்கள் காற்றில் எதிரொலிப்பது பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும்.
பின்னர் உள்ளூர் தலைவர் மேடையில் தனது ஆதரவாளர்களுடன் ஏறுவார். அவர் விளக்கை வைத்து ராமருக்கு ஆரத்தி எடுப்பார். அவரது ஆதரவாளர்கள், “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், நாங்கள் அச்சத்தால் அழிந்துவிடமாட்டோம். நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீருவோம்“ என்று கத்துவார்கள். அயோத்தியாவில் நீண்ட நாட்களாக சர்ச்சையாக உள்ள இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் கூறுவார்கள்.
நிகழ்ச்சியில் நடிப்பவர்கள் மூங்கில் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கடுமையான விளக்கொளியில் இரவில் பாடுவார்கள். இந்த கடுமை. இந்த காலகட்டத்தை பிரதிபலிக்கிறது. சாலையின் மற்றொருபுறத்தில், சரயு நதி அருகில் நயா காட் பகுதியில் எரியூட்டுவதற்காக ராவணன் உருவபொம்மை அமைக்கப்பட்டிருக்கும்.

அக்ஷய் (12), ராமர் கதையில் சீதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விநாயக் சாஸ்திரியுடன் தசரா மாதத்தில் தங்கிக்கொள்கிறார். விநாயக் சாஸ்திரி, குழுவின் மேலாளார், இயக்குனர் மற்றும் அக்ஷய் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர். அவர் ஒவ்வொரு மாலையும் 3 மேடைகளில் நடிக்கிறார். மூன்றுக்கும் சேர்த்து ரூ.200 பெறுகிறார்


இடது : ராமராக நடிக்கும் விஜய் ஒரு இரவு நடிப்பதற்கு ரூ.250 பெறுகிறார். எஞ்சிய காலங்களில் அவர் எலெக்ட்ரீஷியனாக உள்ளார். அவர் பாலிவுட் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தார். தற்போது கேரளா சென்று வேலை தேட திட்டமிட்டுள்ளார். வலது : ராமர் கதை நிகழ்ச்சிகள் சில நேரங்களில் இந்து மதக்கோட்பாடுகள் குறித்த போதனைகளை இடைவெளியை நிரப்புவதற்காகஇடையிடையே செய்வார்கள். இங்கு, அதற்காக 52 வயதான சுரேஷ்சந்த் தயாராகிக்கொண்டிருக்கிறார்

விநாயக் சாஸ்திரி (நிற்பவர்) மற்றும் அவரது குழுவினர் டங்க்ஸ்ன் விளக்கு வெளிச்சத்தில் மேடை ஏறுவதற்கு தயாராக்கிக்கொண்டிருக்கிறார். நடுவில் டாலி உள்ளார், இவர் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் ராமரின் பராக்கிரமங்களை பாடுவதற்காக சாஸ்திரியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

ராமர் கதை நிகழ்ச்சி முதலில் திருநங்கைகளின் நடனத்துடனே பெரும்பாலும் துவங்கும்

வால்மீகி கதாபாத்திரம் ஏற்றுள்ள சுரேஷ், ராவணின் கதாபாத்திரத்திலும் இவரே தோன்றுகிறார்

ஒப்பனைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பசுமை நிற அறைகள் விளக்கொளியில் மஞ்சளாகத் தெரிகின்றன. அதில் ஒரு இளைஞர் தயாராகிக்கொண்டிருக்கிறார். ராமர் கதை கலைஞர்களுக்கு தனியாக ஒரு ஒப்பனை கலைஞர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு வசதியில்லாததால், தாங்களே ஒப்பனை செய்துகொள்கிறார்கள்

கண்பாத் திரிவேதி, ராமர் கதை பாடல் குழுவில் உள்ள தலைமை பாடகர்

அயோத்தியின் இருள் சூழ்ந்த இரவில், ராவணன் மேடையை நோக்கி நகர்கிறார். சரயு நதியின் நயாகாட் பகுதிக்கு தொலைவில் இல்லை

கோமாளியும் நிகழ்ச்சியில் இடம்பெறுவார். நிகழ்ச்சி நடக்கும்போது, இடையில் தோன்றி, ராவணனை கேலி செய்து, சிரிப்பு வரவைழைத்து இறுக்கமான காட்சிகளை இலகாக்குவார்

மேடையில் உள்ள இடம் பற்றாக்குறையாகத்தான் இருக்கும். அதிலும் ஒரே ஒரு மைக் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். கடுமையான சண்டைக்கு இடையில் அனுமனும், ராவணனும் அதை மாறி, மாறி அவர்களின் வசனத்தை பேசுவதற்கு பயன்படுத்த வேண்டும். அவர்கள் சிறிய மேடைக்குள்ளே இங்குமங்கும் சுற்றி வரும்போது மரத்தாலான மேடையில் ஒலியை ஏற்படுத்துவது, சண்டைகாட்சியை தத்ருபமாகக் காட்டும்

இந்த கற்பனை சண்டையின் இடையில் உள்ளூர் தலைவர் நிகழ்ச்சியை சிறிது நிறுத்தி, மேடையின் மேல் ஏறி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு, அயோத்தியில் நாங்கள் ராமர் கோயிலை கட்டியே தீருவோம். யாருக்கும் பயந்தோட மாட்டோம் என்ற முழுக்கங்களை எழுப்பும் ஒலி காற்றில் எதிரொலிக்கும்

உள்ளூர் தலைவர் மேடையில் ஏறியதும், புராண கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருப்பவர்கள் மெய் மறந்து உறைந்து நிற்பார்கள்


இடது : 10 தலை ராவணன் பாதையின் மற்றொரு புறத்தில், நிகழ்ச்சியின் நிறைவில் எரியூட்டப்படுவதற்காக காத்திருக்கிறார். ராமர், மேடையில் இருந்து இறங்கி, கூட்டத்தினரிடையே நடந்து சென்று, ராவணன் உருவ பொம்மையை நோக்கி தீயில் எரியும் அம்பை எய்வார். அதன் பின்னர் அனைத்தும் எரிந்து சாம்பலாகும். வலது : ராவணன் எரிந்து சாம்பலாகும்போது மக்கள் உணர்ச்சி பெருக்கில் கத்துகிறார்கள்

ராமர் கதையால் ஈர்க்கப்பட்டவர்கள், தீச்சுவாலைகளின் மத்தியில், பார்வையாளர்கள் யாருமில்லாத மேடைக்கு முன் குவிந்துள்ளார்கள். ராமர் கதை நடந்த மேடை எழுப்பப்பட்டுள்ள பழமையான இடமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கி புதுப்பொலிவுடன் காணப்படுகிறது

தற்காலிகமாக
அமைக்கப்பட்ட ஒப்பனை அறையில் விநாயக் சாஸ்திரி தனியாக இருக்கிறார். ராவணன் எரியூட்டப்பட்ட
உடனே அனைவரும் கலைந்து செல்கிறார்கள்
தமிழில்: பிரியதர்சினி. R.