திங்கட்கிழமை காலை 7 மணிக்கு மும்பையின் சஸ்ஸூன் டாக் படகுக்கரையில் மீன்களை கொண்ட படகு வந்துவிட்டதா என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் வந்தனா கோலியும் காயத்ரி பாட்டிலும்.
வீடு இருக்கும் கொலிவாடா பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரைக்கு மீன் வாங்கவென நடந்து வந்திருக்கிறார்கள். மீன்களை வாங்கி அருகே இருக்கும் சந்தையில் (செவ்வாய் மட்டும் வியாழன்களில் பல மக்கள் மீன் சாப்பிட மாட்டார்கள் என்கிறார்கள்) விற்பதுதான் வாரத்தின் ஐந்து நாட்களுக்கு அவர்களின் வேலை.
“ஞாயிற்றுக் கிழமைகளில் நல்ல வியாபாரம் நடக்கும். ஆனால் நேற்று எனக்கு லாபம் கிடைக்கவில்லை. அந்த நஷ்டத்தை எப்படியாவது நான் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த வாரம் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு சிரமம் ஆகிவிடும்,” என்கிறார் 53 வயது வந்தனா. அவரும் 51 வயது காயத்ரியும் கோலி சமூகத்தை (மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட சமூகம்) சார்ந்தவர்கள். 28 வருடங்களாக நெருங்கிய நண்பர்கள்.
படகுகள் வரத் துவங்கிவிட்டன. காத்திருந்த 40-50 பெண்கள், மீன் விற்பவர்களைச் சுற்றி குழுமத் தொடங்கினர். படகு உரிமையாளர்களுக்காக மீன்களை விற்றுக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். “அட… 200 ரூபாய்க்கு தாருங்கள்,” எனக் கேட்கிறார் வந்தனா. ஒருவழியாய் 240 ரூபாய்க்கு சிறு அளவிலான இறால்களை வாங்கினார். பல கட்ட கடுமையான பேரங்களுக்கு பிறகு 9 மணி அளவில், அவரும் காயத்ரியும் வங்கவாசி, இறால் முதலிய மீன்களை வாங்கினர். விலை நிலவரத்துக்கு ஏற்ப 7-லிருந்து 10 கிலோ வரை மீன்களை அவர்கள் வாங்குவார்கள்
வந்தனா காயத்ரியை பார்த்துக் கை காட்டுகிறார்: “வாங்கியாச்சு, கிளம்பலாம்.”
‘இங்குள்ள பெண்கள் பரிசோதனைக்கு செல்வதில்லை. வலி நிவாரணிகள் மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். மருத்துவமனைக்குச் செலவு செய்ய அவர்களிடம் பணம் இல்லை. கோவிட் பீதியால் மருத்துவர்களைச் சந்திக்க பயப்படுகிறார்கள்’
“நிறைய வாங்கியிருப்போம், ஆனால் கோவிட் எங்களின் தொழிலை மந்தப்படுத்தியிருக்கிறது,” என்கிறார் வந்தனா (வாசிக்க Mumbai fishermen: no shelter from this storm ). “முன்பு போல் மக்கள் எங்களிடம் வாங்குவதில்லை,” என்கிறார் அவர் மீன் நிறைந்த பக்கெட்டை சீதா ஷெல்காவின் தலையில் ஏற்ற உதவியபடி. சீதாவும் பிற சுமை தூக்குபவர்களும் கொலாபா மீன் சந்தைக்கு மீன் கூடைகளை சுமந்து செல்ல 40-லிருந்து 50 ரூபாய் வரை பெறுகின்றனர். அந்த நாளில் காயத்ரி தன் கூடையை, ஒரு பக்கத்து வீட்டுக்காரரின் இருச் சக்கர வாகனத்தில் வைத்து அனுப்பி விட்டார்.
“முன்பெல்லாம் என் தலையிலேயே வைத்துத் தூக்கிச் சென்று விடுவேன். ஆனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, அதிக எடையை என்னால் தூக்க முடிவதில்லை,” என்கிறார் வந்தனா. தலையில் பக்கெட்டை சீதா வைத்தபிறகு மூன்று பெண்களும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சந்தையை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர். வழியில் ஒருமுறை மட்டும் ஒரு கடையில் நின்று இரண்டு 10 ரூபாய் தாள்களைக் கொடுத்து, நொறுக்கப்பட்ட ஐஸ்கட்டிகளை கொண்ட கூடையை வாங்கிக் கொண்டார் வந்தனா.
2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டார் வந்தனா. ஓர் இரவில் நெஞ்சு வலிக்கத் தொடங்கியதை அடுத்து அவரின் கணவர் தெற்கு மும்பையிலிருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைக்கு வந்தனாவைக் கொண்டுச் சென்றார். வந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. “அறுவை சிகிச்சை நடந்ததிலிருந்து ஒரு லிட்டர் குடிநீர் குடுவையைக் கூட என்னால் தூக்க முடிவதில்லை. குனிவதும் ஓடுவதும் மிகச் சிரமம். உடல்நலம் குன்றியிருந்தாலும் குடும்பத்துக்கு நான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் அவர்.
காயத்ரியை பார்த்து, “மருத்துவமனைக்கு இவள் தினமும் டிபன் எடுத்து வருவாள். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், என் கணவருக்கும் மகனுக்கும் உணவு அனுப்பினாள். என்னைப் போலவே என் குடும்பத்தை இவளும் கவனித்துக் கொண்டது எனக்கு பெரிய ஆறுதல். இவளுக்கும் வாழ்க்கை சிரமமாகதான் இருந்தது. நாங்கள் இருவருமே ஏழைகள் என்பதால் பணரீதியாக உதவிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நாங்கள் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறோம்.”
காயத்ரி கட்டியிருந்த சேலையை சற்று இறக்கி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதற்கான தழும்பைக் காட்டினார். “என்னுடைய மகளுக்கு சிறுநீரகம் தேவைப்பட்டது. கடவுள் புண்ணியத்தில் என்னுடைய சிறுநீரகம் அவளுக்கு சரியாகப் பொருந்தியது,” என்கிறார் அவர். “ஆனால் அவள் நிறைய அவதிப்பட்டாள். வலி தாங்காமல் அழுவாள்.”
2015ம் ஆண்டின் மே மாதத்தில் காயத்ரியின் 25 வயது மகள் ஷ்ருதிகாவின் உடல்நலம் குன்றத் தொடங்கியது. குடும்பம் அவரைப் பல மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் சென்றது. எனினும் காய்ச்சல் நிற்கவில்லை. அவரின் முகம் இருண்டு போனது. கால்கள் வீங்கின. குடும்பம் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றது. சிகிச்சை போதுமான அளவில் அளிக்கப்படவில்லை என்கிறார் ஷ்ருதிகா. “ஏற்கனவே நான் முடியாமலிருந்தேன். எனவே அப்பா பிரச்சினைக்கு தீர்வு காண விழைந்தார். நாங்கள் பம்பாய் மருத்துவமனைக்குச் சென்றோம்,” என்கிறார் அவர். ஷ்ருதிகாவின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. சிறுநீரகம் மாற்றப்பட வேண்டுமென சொல்லியிருக்கின்றனர்.
மருத்துவமனையில் 10 நாள் தங்கி, பிறகு ஒரு மூன்று மாதங்கள் தொற்றுப்பரவலை தடுக்க தனியறையில் தங்கி என மொத்த சிகிச்சைக்கான கட்டணமாக 10 லட்ச ரூபாயைக் கேட்டது மருத்துவமனை. “அம்மாவும் அப்பாவும் எங்களுக்குத் தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்க வேண்டியிருந்தது. டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தேன். உறவினர்கள் எங்களுக்கு உதவினார்கள். அப்பா பணிபுரிந்தவர்களிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கினார்,” என்கிறார் ஷ்ருதிகா. தன்னார்வ தொண்டு நிறுவனத்திலிருந்தும் குடும்பத்துக்கு சிறிய அளவில் பொருளாதார உதவி கிடைத்திருக்கிறது. “அப்பா இன்னும் கடனை அடைத்துக் கொண்டிருக்கிறார்,” என்கிறார் அவர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயத்ரியும் ஷ்ருதிகாவும் கனமான பொருளை தூக்கக் கூடாது என அறிவுறுத்தியிருக்கின்றனர் மருத்துவர்கள். “பொருட்களை தூக்காமல் நான் எப்படி வேலை பார்ப்பது? என்னுடைய மகளின் மருந்துகளுக்கு மாதந்தோறும் பணம் தேவைப்படுகிறது” என்கிறார் காயத்ரி. மாதாந்திர மருந்துச் செலவு ரூ.5000. “அவள் ஒரு மாத்திரை கூட தவறவிடக் கூடாது. அவளுக்கு மிகுந்த வலி இருக்கிறது. ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க வேண்டியிருக்கிறது. சில நாட்களில் என் முதுகும் கால்களும் வலிக்கும். எனக்கு மட்டுமல்ல. பெரும்பாலான பெண்கள் வலியோடுதான் வேலை செய்கின்றனர். வந்தனாவுக்குக் கூட அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.
“இங்கிருக்கும் (கொலிவாடாவில்) பெண்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு செல்வதில்லை. வலி நிவாரணிகள் மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். மருத்துவக் கட்டணத்துக்கு அவர்களிடம் பணம் கிடையாது. மேலும் கோவிட் தொற்றினால் மருத்துவர்களைச் சந்திக்கத் தயங்குகிறார்கள். கொலிவாடாவுக்குள் ஒரு சிறு தனியார் மருத்துவ மையம் உண்டு. எப்போதும் கூட்டம் இருக்கும். அதுவும் ஊரடங்கினால் (கடந்த வருடம்) அடைக்கப்பட்டது,” என்கிறார் காயத்ரி. “எங்களின் மக்கள் நிறைய துயரத்தை அனுபவித்து விட்டார்கள். கோலிகள் பணக்காரர்களென மக்கள் நினைக்கின்றனர். எங்கள் சமூகத்திலும் ஏழைகள் இருக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் ஒரு நாளாவது நல்லபடியாக இருக்க வேண்டுமென கடவுளை நாங்கள் வேண்டியிருக்கிறோம். படகுக்கரை மூடப்பட்டது. வீட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம் கூட இல்லாமல்தான் எங்கள் நிலை இருந்தது. பருப்பு சாப்பிட்டு உயிர்வாழ்ந்தோம்.”
அவர் வசிக்கும் பகுதி குறுகலான சந்துகளையும் ஒன்று அல்லது இரண்டு மாடிகளை கொண்ட சிறுவீடுகளையும் கொண்ட பகுதி. கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் இருக்கின்றன. 4122 பேர் வசிக்கின்றனர். கொலாபாவின் ஒரு பகுதி, பாதிப்பு நிறைந்த பகுதியாக கடந்த வருடம் அறிக்கப்பட்டபோது, “யாராலும் கொலிவாடாவை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. எங்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுக்க வந்த மக்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மிகவும் கடினமான நேரமாக இருந்தது. எங்களின் உணவை குறைத்துக் கொண்டோம்,” என்கிறார் வந்தனா மார்ச் 2020க்கு பின்னான சில மாதங்களைக் குறித்து.
சந்தைகள் திறக்கப்பட்ட பிறகும், வேலையோ பணமோ இல்லாததால் இங்குள்ள பல குடும்பங்களால் காய்கறிகள் வாங்க முடியவில்லை என்கிறார் அவர். ஊரடங்குக்கு முன் வந்தனாவும் காயத்ரியும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வரை லாபம் சம்பாதித்தார்கள். அது மொத்தமும் கொஞ்ச காலத்துக்கு இல்லாமல் போனது. வருடந்தோறும் மே 21 முதல் ஆகஸ்ட் 1 வரை மீன் பிடிப்பு நிறுத்தி வைக்கப்படும். கடந்த வருட செப்டம்பர் மாதத்திலிருந்து அவர்களின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.300 என்றளவில் இருந்தது.
காலை 10.30 மணிக்கு நாங்கள் சந்தையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். இருவரும் கடை போட்டிருக்கும் பகுதியை நெருங்குகையில், காயத்ரி முன்பு வேலை பார்த்த நபர் எதிர்ப்பட்டார். வீட்டு வேலை ஏதும் கிடைக்குமா என அவரிடம் காயத்ரி விசாரித்துவிட்டு தினசரிச் செலவுகளை குறித்துப் பேசத் தொடங்குகிறார். “மாதவாடகையான 6000 ரூபாயை தவிர்த்து, நாங்கள் போட்டிருக்கும் மீன் கடைக்கான வாடகையாக ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் கொடுக்க வேண்டும். எங்களின் கணவர்களுக்கும் மகன்களுக்கும் வேலைகள் இல்லை,” என்கிறார் வந்தனா.
அவரின் கணவர் யஷ்வந்த் கோலிக்கு 59 வயது. காயத்ரியின் கணவருக்கு 49 வயது. இருவரும் படகுக்கரையில் வலைப்பின்னும் வேலை பார்த்து ஊரடங்கு தொடங்கும் வரை நாளொன்றுக்கு ரூ-200-300 சம்பாதித்தனர். வந்தனா, அவரது கணவர் தற்போது குடித்தே நேரம் கழிக்கிறார் என்றும் வேலைக்கு திரும்பவில்லை என்றும் சொல்கிறார். காயத்ரியின் கணவருக்கு இடது கையில் கடந்த ஜனவரி மாதம் அடிபட்டது. அப்போதிலிருந்து வலைப்பின்னும் வேலையை அவரால் செய்ய முடியவில்லை.
வந்தனா மற்றும் காயத்ரி ஆகியோரின் மகன்களான 34 வயது குணாலும் 26 வயது ஹிதேஷ்ஷும் உணவு நிறுவனம் ஒன்றில் உணவு கொண்டு போய்க் கொடுக்கும் வேலை பார்த்தனர். 3000-4000 ரூபாய் வரை மாத வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். ஊரடங்கினால் வேலைகள் பறிபோனது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. இந்த வருட ஜூன் மாதத்தில் ஷ்ருதிகாவுக்கு கொலாபா காலணிக் கடை ஒன்றில் வேலை கிடைத்தது. தற்போது 5000 ரூபாய் மாதவருமானம் ஈட்டுகிறார்.
சந்தையை நாங்கள் அடைந்தோம். மீன் கூடையை சுமந்து வந்ததற்காக சீதாவுக்கு பணம் கொடுக்கிறார் வந்தனா. அந்தப் பக்கம் சென்ற ஒருவரின் உதவியுடன் சீதாவின் தலையிலிருந்து கூடையை இறக்குகிறார்கள். ஒரு பெரிய தெர்மாகோல் பெட்டியை தரையில் வைத்து அதன் மேல் ஒரு மரப்பலகையை வைத்து அதன் மீது மீன்களை அடுக்கி வைக்கிறார். 11 மணி ஆகிவிட்டது. வாடிக்கையாளர்களை அழைத்து வியாபாரத்தை தொடங்குகிறார் வந்தனா.
காயத்ரியும் அவரது கடையை அமைத்துவிட்டு வாடிக்கையாளர்களை அழைக்கத் தொடங்குகிறார். மதியம் 1 மணிக்கு கொலாபாவில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை செய்வதற்காக அவர் செல்ல வேண்டும். மீன் விற்பனை வருமானம் குறைவாக இருந்ததால், சமையல் மற்றும் வீடு சுத்தப்படுத்தும் வேலைகளை செப்டம்பர் 2020லிருந்து செய்யத் தொடங்கினார் அவர். ஐந்து மணி நேர வேலைக்கு மாதம் 4000 ரூபாய் சம்பாதிக்கிறார். “ஊரடங்கின்போது ஒரு அம்மா எனக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. நான் தற்காலிகப் பணியாளர். வேறு வழியின்றிதான் இந்த வேலையைச் செய்கிறேன்,” என்கிறார் அவர், கடையை வந்தனாவின் பொறுப்பில் விட்டுவிட்டுக் கிளம்பியபடி. “இவற்றையும் அவர் விற்றுவிடுவார். நாங்கள் இப்படித்தான் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம். அவரிடம் அரிசி இல்லையென்றால் நான் கொடுப்பேன். என்னிடம் பருப்பு இல்லையெனில் அவர் கொடுப்பார்.”
வந்தனாவும் காயத்ரியும் நாற்பது ஆண்டுகளாக மீன் விற்பனையில் இருக்கின்றனர். காயத்ரி கொலிவாடாவில் வளர்ந்து, 28 வருடங்களுக்கு முன் நடந்த திருமணத்துக்கு பிறகு கொலாபாவுக்கு வந்தார். வந்தனா கொலாபாவில்தான் வாழ்கிறார்.
உயரமான கட்டடங்களைத் தாண்டி, அந்த வட்டாரத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை என்கிறார் வந்தனா. “இந்த சந்துகளில்தான் நான் வளர்ந்தேன். என் பெற்றோரும் மீன் விற்பனையில் இருந்தனர். வாழ்க்கை முழுக்க நான் கஷ்டங்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். என் மகனுக்கும், கோலி மக்களின் குழந்தைகள் எவருக்கும் என்னுடைய வாழ்க்கை வாய்க்கக் கூடாது என விரும்புகிறேன்.”
தமிழில்: ராஜசங்கீதன்