“என் இரண்டு பெண் குழந்தைகளுக்கு வேறு வித வாழ்க்கையளிக்க விரும்புகிறேன்,” என்கிறார் விசாலாட்சி, மீனின் தோலில் உப்பு போட குனிந்தபடி. 43 வயது நிறைந்த அவர் கடந்த 20 வருடங்களாக தமிழ்நாட்டின் கடலோரத்தில் இருக்கும் கடலூர் ஓல்ட டவுன் துறைமுகத்தில் மீன் உலர்த்தும் வேலை செய்கிறார்.
“நிலமற்ற தலித் குடும்பத்தில் நான் வளர்ந்தேன். நெல் விவசாயத் தொழிலாளர்களான என் பெற்றோருக்கு உதவி செய்தேன். அவர்கள் படித்ததில்லை,” என்கிறார் அவர். 15 வயதில் விசாலாட்சிக்கு சக்திவேலுடன் மணம் முடிக்கப்பட்டது. அவர்களின் முதல் மகளான ஷாலினி இரண்டு வருடங்கள் கழித்து, கடலூர் மாவட்டத்தின் குக்கிராமமான பிமா ராவ் நகரில் பிறந்தார்.
பிமா ராவ் நகரில் விவசாயக் கூலி வேலை கிடைக்காமல், விசாலாட்சி கடலூர் ஓல்ட் டவுன் துறைமுகத்துக்கு பிழைப்பு தேடி வந்தார். 17 வயதாக இருக்கும்போது அவர் கமலவேணியை சந்தித்தார். அவர்தான் மீன் உலர்த்தும் வணிகத்தை விசாலாட்சிக்கு அறிமுகப்படுத்தியவர். அந்த வணிகம் அவருடன் அப்படியே தங்கி விட்டது.
மீன் பதனப்படுத்தப்படும் செயல்முறையின் பழைய வடிவம்தான் திறந்த வெளியில் மீனை உலர்த்துதல். உப்பு தடவுதல், புகை போடுதல், ஊறுகாய் போடுதல் எனப் பல வகைகள் மீன் உலர்த்துதலில் இருக்கின்றன. கொச்சியின் மத்திய மீன்வள ஆய்வு நிறுவனத்தின் 2016ம் ஆண்டு கடல் மீன்வள கணக்கெடுப்பின்படி, கடலூரில் இயங்கிக் கொண்டிருக்கும் 5,000 மீனவப் பெண்களில் கிட்டத்தட்ட 10% பெண்கள் மீன் உலர்த்துதல், மீன் வெட்டுதல் போன்ற வேலைகளில் இருக்கின்றனர்
மாநிலத்தில் அந்த எண்ணிக்கை அதிகம். கடல் மீன்வள நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2020-21 வருடத்தில் 2.6 லட்சம் என்கிறது மீன்வளத்துறை யின் மாநில இணையதளம்.
இப்பணியை அவர் தொடங்கியபோது, 40 வயதுகளில் இருந்த கமலவேணி மீன் வணிகம் செய்து கொண்டிருந்தார். ஏலமெடுத்தல், விற்பனை செய்தல் மற்றும் மீன் உலர்த்துதல் என எல்லா விஷயமும் செய்து கொண்டிருந்தார். அவரிடம் 20 பெண்கள் பணியாற்றினர். விசாலாட்சி அவர்களில் ஒருவர். தினசரி வேலை கடுமைதான். அதிகாலை 4 மணிக்கு விசாலாட்சி துறைமுகத்துக்கு சென்றுவிட வேண்டும். மாலை ஆறு மணிக்குதான் வீடு திரும்புவார். அவரின் ஊதியம் 200 ரூபாய். பணியாட்களுக்கு காலை உணவு கொடுக்கப்பட்டுவிடும். “கமலவேணியை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரே நாள் முழுக்க ஏலம் விடுதல், மீன் விற்றல் மற்றும் பணியாட்களை மேற்பார்வையிடுதல் போன்ற வேலைகளை செய்வார்.”
*****
2004ம் ஆண்டின் சுனாமி எல்லா இடங்களையும் போலவே விசாலாட்சியின் வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டு வந்தது. “என் அன்றாட ஊதியம் சுனாமிக்கு பிறகு 350 ரூபாயாக உயர்ந்தது. மீன் உற்பத்தியும் அதிகரித்தது.”
பெரியளவில் மீன் பிடிக்க ஏதுவாக இருக்கும் சுருள் வலை மீன்பிடிப்பு அதிகரித்ததால், மீன்வளத்துறை பெரிய வளர்ச்சியைக் கண்டது. சுருள் வலை என்பது வழக்கமாக பயன்படுத்தப்படும் மீன்பிடிப்பு உபகரணமாகும். சுருள் சுருளான வலைகளை கொண்ட உபகரணம் அது. நெத்திலி, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை பிடிக்க பயன்படுவது. 1990களில் சுருள் வலை கடலூரில் பெரும் புகழை எட்டியிருந்தது. உடன் படிக்க: ஒரு தைரியமான பெண்ணாக மாறுதல்
”நிறைய வேலை, நிறைய லாபம், நிறைய ஊதியம்,” என விசாலாட்சி நினைவுகூருகிறார். கமலவேணி வெளியே செல்லும்போதெல்லாம் ஷெட்டின் சாவியை கொடுத்து விட்டு செல்லுமளவு நம்பிக்கைக்குரிய ஊழியராக விசாலாட்சி இருந்தார். “விடுமுறை கிடையாது, ஆனால் நாங்கள் மதிப்புடன் நடத்தப்பட்டோம்,” என்கிறார் அவர்.
மீன் விலை உயர்ந்ததும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்தது. தம்பதிக்கு ஷாலினி, சவுமியா என இரு பள்ளி செல்லும் குழந்தைகள். கணவர் சக்திவேல் நீர்தொட்டி இயக்கும் வேலை செய்தார். ஆனால் அவரின் அன்றாடக் கூலியான 300 ரூபாய் போதவில்லை. பொருளாதார நிலை கடினமாக இருந்தது.
“கமலவேணி எனக்கு பிடிக்குமென்றாலும் லாபக்கணக்கின்றி நான் தினக்கூலி மட்டும்தான் ஈட்டிக் கொண்டிருந்தேன்,” என அடுத்தக் கட்டத்தை விளக்குகிறார் விசாலாட்சி.
எனவே இச்சமயம், சொந்தமாக உலர்த்தி தானே விற்கும் திட்டத்துடன் விசாலாட்சி மீன் வாங்கினார். அவரின் நோக்கம் தெரிந்ததும் கமலவேணி அவரை வேலை விட்டு அனுப்பி விட்டார். 12 வருடங்களாக பார்த்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து விசாலாட்சி அனுப்பப்பட்டார்.
மகள்களுக்கு கட்ட வேண்டிய வருடாந்திரக் கட்டணம் அவரால் கட்ட முடியாது. குடும்பம் சிரமத்தை சந்தித்தது.
ஒரு மாதம் கழித்து அவர், குப்பமாணிக்கத்தை சந்தித்தார். மீன் வணிகரான அவர் விசாலாட்சியை துறைமுகத்துக்கு திரும்பி வரச் சொல்லி, ஒரு கூடை மீனை உலர்த்தக் கொடுத்து, தன்னுடைய ஷெட்டில் ஒரு சிறு இடமும் இலவசமாகக் கொடுத்தார். ஆனாலும் வருமானம் போதவில்லை.
2010ம் ஆண்டு சொந்தமாக தொழில் தொடங்குவது என முடிவெடுத்தார் விசாலாட்சி. ஒவ்வொரு வாரத்தின் எல்லா நாட்களிலும் 2,000 ரூபாய் மதிப்பிலான மீன்களை ஓர் உள்ளூர் படகு உரிமையாளரிடம் கடனாக வாங்க ஆரம்பித்தார். இன்னும் கடினமாக அவர் உழைக்க வேண்டியிருந்தது. அதிகாலை 3 மணிக்கு துறைமுகத்துக்கு வந்து விடுவார். மீனை வாங்கி, காய வைத்து, விற்று பின் வீடு திரும்ப இரவு 8 மணி ஆகிவிடும். பெண்களுக்கான சுய உதவிக் குழு ஒன்றில் 40 சதவிகித வருடாந்திர வட்டிக்கு 30,000 ரூபாய் கடன் பெற்றார். இரண்டு வருடங்களில் அடைக்க வேண்டிய கடன். சுய உதவிக் குழுவின் வட்டிவிகிதம் அதிகமாக இருந்தாலும் தனியாரின் வட்டியை விட குறைவு.
மீன் உலர்த்த பயன்படுத்திக் கொண்டிருந்த ஷெட்டின் உரிமையாளர் குப்பமாணிக்கத்துடன் முரண்பாடு உருவானது. “பொருளாதார ரீதியிலான முரண்பாடுகள் ஏற்பட்டன. எனக்கு எவ்வளவு உதவியிருக்கிறார் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்,” என விளக்குகிறார். மாத வாடகை 1000 ரூபாய் கொடுத்து மீன் உலர்த்த சொந்தமாக ஷெட்டை எடுப்பது என்கிற முடிவுக்கு வந்தார்.
சுதந்திரமாக செயல்படுவதாலும் திறன் கொண்டு இயங்குவதாலும் சுற்றி இருப்பவர்களிடமிருந்து தொடர் வசையை விசாலாட்சி சந்தித்திருக்கிறார். கடலூரில் பட்டனவர் மற்றும் பர்வதராஜாகுல சமூகங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவை. மீனவத் தொழிலில் ஆதிக்கம் செலுத்துபவை. ஆனால் விசாலாட்சி தலித் சமூகத்தை சேர்ந்தவர். “துறைமுகத்தில் என்னை வேலை பார்க்க விட்டும் வணிகம் நடத்த அனுமதித்தும் மீனவச் சமூகத்தினர் எனக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டனர். அவர்கள் விரும்புவதையெல்லாம் சொல்வார்கள். என்னை அவை காயப்படுத்தின,” என அவர் நினைவுகூறுகிறார்.
மீன் உலர்த்தும் வேலையை அவர் தனியாக தொடங்கியபோது, அவரது கணவரும் உதவி செய்யத் தொடங்கினார். வணிகம் வளரத் தொடங்கியதும், இரண்டு பெண் தொழிலாளர்களை விசாலாட்சி பணிக்கமர்த்தி, மதியவேளை மற்றும் தேநீருடன் அன்றாடக் கூலி 300 ரூபாய் அவர்களுக்கு கொடுத்தார். மீன்களை கட்டுவதும் உலர்த்துவதும் அவர்களின் பொறுப்பு. மீன்களுக்கு உப்பு போடவும் பிற வேலைகள் செய்யவும் நாட்கூலியாக 300 ரூபாய் கொடுத்து ஒரு சிறுவனை வேலைக்கு வைத்தார்.
சுருள் வலை மீனவர்களிடம் அதிகமான மீன்கள் கிடைத்ததால், வாரத்துக்கு 8,000 முதல் 10,000 ரூபாய் வரை விசாலாட்சி வருமானம் ஈட்ட முடிந்தது.
இளைய மகள் சவுமியாவை செவிலியர் படிப்பில் சேர்த்தார். மூத்த மகள் ஷாலினி வேதியியல் பட்டப்படிப்பு முடித்தார். விசாலாட்சியின் வருமானத்தால் இரு மகள்களின் திருமணங்கள் நடந்தன.
*****
விசாலாட்சியும் பிறரும் சுருள் வலை மீன்பிடிப்பால் லாபமடைந்திருக்கலாம். ஆனால் அந்த வலை மீன் வளத்தை அழிப்பதாக சூழலியலாளர்களும் அறிவியலாளர்களும் குற்றஞ்சாட்டினர். எனவே அம்முறையை தடை செய்வதற்கு நீண்ட போராட்டம் நடந்தது. சுருள் வலை பயன்படுத்துவது 2000மாம் ஆண்டு வரை சட்டவிரோதம் என்றாலும் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. 2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசாங்கத்தின் உத்தரவு இத்தகைய பெரும் வலைகளில் மீன் பிடிக்கும் முறையை தடை செய்தது.
“நாங்கள் அனைவரும் நன்றாக சம்பாதித்தோம். இப்போது பிழைக்கவே சிரமப்படுகிறோம். அன்றாட உணவுக்கு மட்டும்தான் வழி இருக்கிறது,” என்கிறார் விசாலாட்சி தனக்கான நஷ்டங்களையும் தாண்டி மொத்த மீனவச் சமூகமும் தடையால் சந்தித்த நஷ்டங்களை குறித்து. பாதிப்படைந்த, மிச்ச மீன்களை குறைந்த விலைக்கு கொடுத்துக் கொண்டிருந்த சுருள் வலை படகு உரிமையாளர்களிடமிருந்து அவரால் மீன் வாங்க முடியவில்லை.
பதிலாக, அதிக விலைக்கு விற்கும் இழுவைப் படகுகள்தாம் மீன் வாங்க விசாலாட்சிக்கு தற்போது இருக்கும் ஒரே வழி. ஏப்ரல்-ஜுன் மாத காலத்தின் மீன்பிடித் தடை காலத்தில் இழுவைப் படகு இயங்குவது நிற்கும்போது புது மீன்களை இன்னும் அதிக விலை வைத்து விற்கும் ஃபைபர் படகுகளை அவர் நாட வேண்டிய நிலை.
மீன் கிடைக்கும் காலத்தில் வாரத்துக்கு 4,000 முதல் 5,000 ரூபாய் வரை அவர் வருமானம் ஈட்டுகிறார். காரை மற்றும் பாரை மீன்களை உலர்த்துவதும் அந்த வேலையில் அடக்கம். காரை மீன்கள் கிலோவுக்கு 150-200 ரூபாய் வருமானத்தையும் பாரை மீன் சற்று அதிகமாக 200-300 ரூபாய் வருமானத்தையும் ஈட்டித் தரும். ஒரு கிலோ கருவாடு கிடைக்க வேண்டுமெனில் விசாலாட்சிக்கு 3-4 கிலோ புது மீன்கள் கிடைக்க வேண்டும். புது காரை மீன்களின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும் பாரை மீன்களின் விலை 70 ரூபாயும் ஆகும்.
120 ரூபாய்க்கு நாங்கள் வாங்குவதை 150 ரூபாய்க்கு விற்க முடியும். சந்தைக்கு எவ்வளவு கருவாடு வருகிறது என்பதை பொறுத்தும் அந்த விலை மாறும். சில நாட்கள் நாங்கள் வருமானம் ஈட்டுவோம், பிற நாட்களில் நஷ்டம்தான்,” என்கிறார் அவர் நிலவரத்தை கூறி.
வாரத்துக்கு ஒருமுறை மீனை இரண்டு கருவாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்ல அவர் வாகனத்தை வாடகைக்கு பிடிக்கிறார். ஒரு சந்தை கடலூரிலும் இன்னொரு சந்தை பக்கத்து மாவட்டமான நாகப்பட்டினத்திலும் இருக்கின்றன. கிட்டத்தட்ட 30 கிலோ எடை கொண்ட ஒவ்வொரு பெட்டி கருவாட்டுக்கும் வாகனச் செலவு ரூ.20. மாதத்துக்கு அவர் 20 பெட்டிகள் வரை ஈட்ட முயற்சிக்கிறார்.
சுருள் வலை மீன்பிடித் தடைக்கு பிறகான மீன் விலை அதிகரிப்பு, உப்பு விலை அதிகரிப்பு, போக்குவரத்து மற்றும் மீன் கட்டும் பைகள் யாவும் அவரின் செலவை ஏற்றியிருக்கின்றன. 300லிருந்து 350 ரூபாயாக அதிகரித்த ஊழியர் ஊதியமும் அவருக்கு சுமை கூட்டியது.
ஆனால் கருவாட்டின் விலை வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஏப்ரல் 2022ல் எல்லாம் விசாலாட்சிக்கு ரூ.80,000 கடன். மீன் உலர்த்த படகு உரிமையாளரிடம் வாங்கிய கடனும் சுயஉதவிக் குழுவிடம் வாங்கிய கடனுமாக மொத்த 60,000 ரூபாய் அதில் அடக்கம்.
ஆகஸ்ட் 2022-ல் செலவை கட்டுப்படுத்த வணிகத்தை குறைக்க வேண்டி ஊழியர்களை வேலை விட்டு நிறுத்தினார் விசாலாட்சி. “மீனுக்கு நானே இப்போது உப்பு போடுகிறேன். என் கணவரும் நானும் அவ்வப்போது கிடைக்கும் உதவி கொண்டு வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறோம். நாளொன்றில் நான்கு மணி நேரம் மட்டுமே ஓய்வெடுக்க முடிகிறது,” என்கிறார் அவர்.
விசாலாட்சிக்கு ஆறுதல் ஒன்று மட்டும்தான். 26 வயது ஷாலினி மற்றும் 23 வயது சவுமியா ஆகிய இரு மகள்களுக்கும் கல்வி அளித்து மணம் முடித்து கொடுக்க முடிந்ததே அந்த ஆறுதல். ஆனால் சமீபமாக தலைகீழாக மாறியிருக்கும் அவரது வருமான நிலை கவலையளிப்பதாக இருக்கிறது.
“இப்போது நெருக்கடியாக இருக்கிறது. நான் பெரும் கடனில் இருக்கிறேன்,” என்கிறார் அவர்.
குறைந்த அளவில் விதிகளுக்குட்பட்டு சுருள் வலை மீன்பிடிப்பை அனுமதிக்க ஜனவரி 2023-ல் உச்சநீதிமன்றம் முன்வந்தது . வருமானத்தை இது மீட்டுத்தருமா என்பது விசாலாட்சிக்கு சந்தேகம்தான்.
காணொளி: Women take up diverse tasks at Cuddalore fishing harbour
யு.திவ்யாஉதிரனின் உதவியுடன்
தமிழில்: ராஜசங்கீதன்