ராய்ப்பூரில் உள்ள தெலிபந்தா ரயில் நிலையத்தில் மாலை 6 மணியளவில், ராய்ப்பூர்-தம்தாரி குறுகிய தடத்தில் பயணிக்கும் ரயிலில் ஏறிய உடனேயே, எனக்கு ஒருவர் அமருவதற்கு இடம் தந்தார். நான் ஏற்றுக்கொண்டு, அவருடனான எனது உரையாடலைத் தொடங்கினேன். இந்த பயணம் தொடங்கியதில் இருந்து, இந்த ரயிலில் தினமும் பயணிக்கும் மனிதர்களுடன் எனது உரையாடலைத் தொடர்ந்தேன். என்னுடன் பயணிக்கும், சகபயணியான கிருஷ்ணகுமார் தாரக், நவ்கான்(துஹா) கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் அவரது ஊரிலிருந்து தினமும் 12 கிலோமீட்டர் தூரம், மிதிவண்டியில் பயணம் செய்து இந்த வழித்தடத்தில் உள்ள குருத் ரயில் நிலையத்தை அடைகிறார்.

இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த இவரும்,இவரைப் போன்ற பிற தொழிலாளர்களும், அதிகாலையிலே ரயிலைப் பிடித்து, தினக்கூலி வேலை தேடுவதற்காக, சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரை அடைகின்றனர். மாலையில் வெகுநேரம் கழித்தே வீட்டை அடைகின்றனர். தம்தாரி வரை செல்லும் இந்த ரயில் மற்றும் இன்னொரு ரயில் இரண்டும், சுமார் 66 கிலோமீட்டர் தூரம்வரை பயணிக்கிறது. அதற்கு ஏறக்குறைய 3 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் இந்த ரயில்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த வழித்தடத்தில் பயணிக்கிறது.

இதேவேளையில், தம்தாரி மாவட்டத்தின் பகுதிகளில், வருடத்திற்கு இருபோகம் சாகுபடியாவதால், விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவை உள்ளது என, இந்த பயணத்தில் நான் ஈடுபட்ட உரையாடலின் வாயிலாக தெரிந்துக் கொண்டேன். மேலும், இங்கு விவசாயக்கூலி குறையாக,கிட்டத்தட்ட 1௦௦ ரூபாயாக உள்ள வேளையில், ராய்ப்பூர் பகுதியில் 2௦௦ லிருந்து 250 ரூபாயாக உள்ளது. அதுமட்டுமல்லாது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் இதர பஞ்சாயத்து வேலைகளின் வழியாக கிடைக்கும் வருமானம், வேலை செய்ததற்கு அடுத்த மாதம் தான் கிடைக்கிறது. ஆனால், நகர்புறத்தில் கிடைக்கும் வருமானம் என்பது உடனடியாக கிடைத்து விடுகிறது. இதன் காரணமாகவே பலர், ஆறு மணிநேரம் ரயிலில் பயணம் செய்து ராய்ப்பூருக்கு வேலைக்கு செல்கின்றனர்.

கிருஷ்ணகுமாரிடம் அவர் எங்கிருந்து வருகிறார் எனக்கேட்டேன். அவருக்கு வயது 40க்கு மேல் இருக்கும்.  “நான் ராய்ப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன். எனது மிதிவண்டியை பான்(பாக்கு) கடையில்(குருத்தில்) விட்டு விட்டு வருவேன். இரவு சுமார் 10 மணியளவில் தான் நான் வீட்டை அடைவேன்”. என பதிலளித்தார். பான் கடை மிதிவண்டி நிறுத்தமாகவும் செயல்படுகிறது. இங்கு தினமும் 50-1௦௦ மிதிவண்டி வரை தினமும் நிறுத்தப்படுகிறது. அதற்கு ஒரு நாளைக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேலும், எவ்வளவு நிலம் நீங்கள் வைத்துள்ளீர்கள்? பயிர்களின் விளைச்சல் எவ்வாறு உள்ளது? என கேட்டபோது “ஐந்து ஏக்கர்” வைத்துள்ளதாக தெரிவித்தார். மேற்கொண்டு கூறுகையில்,”ராபி பயிர் இன்னும் வயலில் சாகுபடியில் தான் உள்ளது.(நாங்கள் சந்தித்த போது). எங்கள் விளைச்சலில் சிறிதளவு கரீப் அரிசியை விற்றுவிட்டு, சிலவற்றை எங்கள் வீட்டு தேவைகளுக்காக வைத்துக்கொள்வோம்.” என்றார். பாசன வசதி உள்ள அவரது நிலத்தில் இரண்டு போகம் சாகுபடி நடக்கிறது. சாகுபடி காலத்தின் போது அவரது மொத்தக் குடும்பத்தினரும் ஒன்றாக உழைக்கின்றனர். “நாங்கள் உரம், இடுபொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்காக 25,000 ரூபாய் முதல் 30,000  ரூபாய் வரை செலவு செய்கிறோம். எங்கள் குடும்பத்தில் 45 பேர் உள்ளனர். எனக்கு ஐந்து சகோதரர்கள், எல்லோருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி விமலா, எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்”

எனது உரையாடலுக்கு அழுத்தம் கொடுத்து: நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்? என்றேன். “நான் மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் பெற்றோர்களால் படிக்க(அதற்குமேல்) வைக்க முடியவில்லை, அதற்கு பதிலாக வேலைக்கு செல்ல கூறினர். எங்கள் பொருளாதாரச்சூழல் நன்றாக இல்லை. எனது தந்தைக்கு மூன்று மனைவிகள். முதல் தாரத்திற்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்- அதில் நானும் ஒன்று.” என்றார்.

'If we miss the train, we just go back home,' says Krishna Kumar, because a bus ticket is not affordable and Raipur is too far to reach by his bicycle
PHOTO • Purusottam Thakur

‘ஒருவேளை ரயிலை விட்டுவிட்டால்,நாங்கள் வெறுமனே வீடு திரும்பி விடுவோம்,’ என்றார் கிருஷ்ண குமார், ஏனென்றால் பேருந்து கட்டணம் மிகவும் அதிகம் மற்றும் அவரது மிதிவண்டியில் அடையும் தொலைவைவிட ராய்ப்பூர் வெகு தொலைவில் உள்ளது

பிற்படுத்தப்பட்ட வகுப்பான திமர் சாதியைச் சார்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது பாரம்பரிய தொழில் மீன்பிடித்தலாகும். இவரது மொத்தக்குடும்பமும் ஓலை வேயபட்ட கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழுள்ளவர்களுக்கான ரேஷன் அட்டை வைத்துள்ளனர். இதன் வழியாக மாதத்திற்கு 35 கிலோ அரிசியை 35 ரூபாய்க்கு பெற்றுவருகின்றனர். இது இவர்களுக்கு ஐந்து நாளைக்கும் கூட போதுமானதாக இல்லை. மேலும், இவர்களின் ரேஷன் அட்டையின் படி ஒவ்வொரு குடும்பமும(ஐந்து குடும்பங்களைக் கொண்ட கூட்டுக் குடும்பம்)இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 2௦௦ கிராம் துவரம் பருப்பு, இதேபோன்று, இரண்டு கிலோ உப்பு ஆகியவற்றைப் பெறுகின்றனர்.

“சகோதரர்களாகிய நாங்கள் நன்றாக பழகுகின்றோம். அவர்கள் சிறியவர்களாக இருந்ததில் இருந்து, அவர்களை நான் தான் வளர்த்தேன். ராஜீவ் இறந்த வருடத்திற்கு முதல் வருடம் என் தாய் இறந்தார். எனது தந்தை இறந்ததற்குப் பின்னால், மற்ற இரண்டு தாய்களும்(இரண்டு தாரங்கள்) கூட இறந்து விட்டனர். என் உடன்பிறந்தவர்கள் சிறியவர்களாக இருந்ததால்,குடும்பத்தின் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அவர்களை என்னால் படிக்க வைக்க முடியவில்லை. நான் சிறுவயதாக இருந்ததில் இருந்து நான் துன்பங்களுக்கு பழகிவிட்டேன். ஓய்வாக இருக்கவோ,மகிழ்ச்சியாக இருக்கவோ எனக்கு நேரமே இல்லை.”

ஒரு நாளைக்கு அவர் எவ்வளவு சம்பதிக்கிறார்? “250 ரூபாய். தெலிபந்தா பகுதியில் நாங்கள் வரிசையில் நிற்க வேண்டும், ஒப்பந்தக்காரர்கள் அங்கே எங்களை வேலைக்கு எடுப்பார்கள். சிலசமயம்,வேலையே இருக்காது. சிலசமயம், சரியான நேரத்திற்கு எங்களால் ராயப்பூரை அடைய முடியாது....நாங்கள் காலை ஆறு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புவோம், ரயில் 7:15 மணிக்கு புறப்படும்.” ஏன் அவர்கள் பேருந்தில் செல்லவில்லை? “அது மிகுந்த செலவுமிக்கது. தெலிபந்தாவுக்கு ரயில் கட்டணம், 15 ரூபாய்(இது ஏறும் ரயில் நிலையத்தைப் பொறுத்து மாறுபடும்) இதேவேளையில், பேருந்துக்கட்டணம் ஐம்பது ருபாய். எனவே, ஒருவேளை ரயிலை விட்டால், வீட்டை நோக்கி திரும்பச் சென்று விடுவோம்.”

ஏன் உங்கள் சகோதரர்கள் உங்களுடன் இந்த வேலையைச் செய்யவில்லை? “அவர்களை என்னோடு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஒருவேளை அவர்கள் ராய்ப்பூர் வந்தால், அவர்களும் குடி, மது அல்லது போதை பொருளுக்கு ஆளாகக்கூடும். நீங்களே பார்க்கிறீர்களே, சிலர் குடித்து விட்டு சூதாடிக் கொண்டிருக்கிறார்கள்(ரயிலில்). எனது சகோதர்கள் எங்கள் கிராமத்தில் வேலை பார்க்கின்றனர் அல்லது குருத் பகுதிக்கு வேலைக்கு சென்று தினமும் 100 ரூபாய் ஈட்டுகின்றனர்.”

Trains along the Raipur-Dhamtari stretch ply three times a day, 2.5 to 3 hours one way, carrying hundreds of daily wage workers each time
PHOTO • Purusottam Thakur

ராய்ப்பூர்-தம்தாரி வழித்தடத்தில் ஒருநாளைக்கு மூன்று முறை ரயில்கள் ஓடுகின்றன, ஒருமுறை பயணிக்க 2.5 லிருந்து 3 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது, ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான தினக்கூலிகளை ஏற்றிச் செல்கிறது

கிருஷ்ண குமாரின் ஐந்து குழந்தைகளில், மூத்த மகள் குசம் பனிரெண்டாம் வகுப்பும், இளைய மகன் கிலேஷ்வர் ஆறாம் வகுப்பும், மற்றவர்கள் இதற்கு இடைப்பட்ட வகுப்புகளும் படிக்கின்றனர். குறிப்பாக, குசம்மின் விடாமுயற்சி குறித்து அவர் பெருமைகொள்கிறார். எனினும்,இது குறித்து கூறுகையில், “அவர்கள் ஆசிரியராக, செவிலியராக, காவலராக, வழக்கறிஞராக ஆகவேண்டுமென பெரும் கனவுகளைக் கொண்டுள்ளனர். நான் கவலையடைகிறேன். நானோ ஏழ்மையான மனிதன். அவர்களை போதுமான அளவுக்கு என்னால் படிக்க வைக்க முடியாது என்று கூறுவேன். இதுகுறித்து கவலைப்பட வேண்டாம். எப்படியாவது நாங்கள் படித்து விடுவோம் என்று கூறுவார்கள்.”

கிருஷ்ண குமாருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, நான் பிரதீப் சாகுவைப் பார்த்தேன். சுமார் 18 வயதுடையவராக இருக்கக்கூடும். கையில் அலைபேசியை வைத்துக் கொண்டிருந்தபடியே, எங்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் ஜீன்சும், டீ-சர்ட்டும் அணிந்திருந்தார். ஆளற்ற இருக்கையின் கடைசியில் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

பிரதீப், அதாங் கிராமத்தில் வசித்து வருகிறார். இது இப்பகுதியின் தலைமையகமான குருத்தில் இருந்து, எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவர் எங்கிருந்து வருகிறார் என அவரிடம் கேட்டேன். பதிலளித்த அவர்,”நான் வேலைக்காக ராய்ப்பூருக்கு சென்றிருந்தேன். நான்கு நாட்களாகச் சென்று வருகிறேன். இந்த வருடம் நான் பனிரெண்டாம் வகுப்புக்குச் செல்கிறேன். வீட்டை விட்டு வெளியில் சென்று வேலைக்குச் செல்வது இதுதான் முதல் முறை.” என்றார்.

மேற்கொண்டு கூறுகையில், “எனது தந்தை குருத் மண்டியில் சுமைதூக்கும் தொழிலாளியாக உள்ளார். ஆனால், அவருக்கு உடல்நலன் சரியில்லை. எங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய வேறுயாருமில்லை.(தற்போது).” ஏனென்றால், அவரது தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால்,அவரது தாயும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார். இல்லையென்றால், தினக்கூலியாக அவர் ஒருநாளைக்கு 1௦௦ ரூபாய் ஈட்டி வந்துக்கொண்டிருந்தார். எனவே, இத்தகைய சூழலில் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை என்பது முன்னைவிட கவலைக்கிடமாக உள்ளது.

”நானும் வேலைக்கு செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன போது எனது தந்தையும், சகோதரனும் வருத்தம் அடைந்தனர். எனினும், என் தந்தை உடல்நலன் தேறும் வரை மட்டுமே வேலைக்கு செல்வேன் என்று கூறி அவர்களைச் சமாதனப்படுத்தினேன். தற்போது, என் சகோதரன் பங்கஜும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான். அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான். தேர்வுகளுக்கு இடைப்பட்ட விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்கிறான். மண்டியில் விளைபொருட்களின் மூட்டையை விநியோகிக்கிறான்,கணக்குகளைப் பார்க்கிறான். அவனுக்கு அங்கு எழுத்தராக வேலை கிடைத்துள்ளது. எனக்கும் கூட எழுத்தராக வேலை கிடைத்தது. ஆனால், அவர்கள் 3௦௦௦ ரூபாய் மட்டுமே தருவதாகக் கூறினார்கள். எனக்கு ராய்ப்பூர் செல்லும் யாராவது என்னையும் கூட அழைத்துச் செல்ல முடியுமாவென கிராமத்தார்களிடம் கேட்டேன். அங்கு ஒருநாளைக்கு 250 ரூபாய் கிடைக்கும்.”

'Usually there is no space in the bogie and people hang outside the doors', says Pradeep Sahu
PHOTO • Purusottam Thakur

‘பொதுவாக ரயில் பெட்டிக்குள் இடம் கிடைக்காது, எல்லோரும் கதவுகளுக்கு வெளியே தான் தொங்கிக்கொண்டு வருவார்கள்,’ என்றார் பிரதீப் சாகு

ராய்ப்பூரில் பணிபுரிவது,எவ்வாறு இருக்கும்? “எவ்வித பிரச்சனையும் இல்லை, ஆனால் மாணவ வாழ்க்கை தான் சிறந்தது. வேலைக்கு சென்ற முதல் நாள், துர்நாற்றம் வீசும் சாக்கடையில் நான் வேலைப் பார்த்தேன். எனக்கு அது துளியும் பிடிக்கவில்லை. எனினும், பிற தொழிலாளர்கள் நல்லவர்கள். ஆயினும், தினமும் சென்றுவருவது கடினமானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ரயிலில் அந்தளவுக்கு கூட்டமில்லை. ஆனால், பொதுவாக  ‘பொதுவாக ரயில் பெட்டிக்குள் இடம்கிடைக்காது,எல்லோரும் கதவுகளுக்கு வெளியே தான் தொங்கிக்கொண்டு வருவார்கள்,’ என்றார் பிரதீப் சாகு.

அவர் ஈட்டிய பணத்தை எவ்வாறு பயன்படுத்துவார்? என்பது குறித்து கூறிய பிரதீப், முதலில் தன் தாய்க்கு ஒரு புடவை வாங்கப்போவதாகக் கூறினார். அடுத்து தனக்கு ஒரு அலைபேசியும், சில உடைகளும் கூட வாங்கலாம் என சிந்தித்து உள்ளதாகக் கூறினார். தற்போது பயன்படுத்திக் கொண்டிருந்த அலைபேசி குறித்து கூறுகையில், “இந்த அலைபேசி எனது தந்தைக்குச் சொந்தமானது, இந்த பயணத்தின் போது தொடர்புகொள்ளவதற்காக  என்னிடம் கொடுத்துள்ளார். சிலசமயம், இரவு நேரத்தில் வேலை இருக்கும் போது, நான் அன்றைய இரவு வீட்டிற்கு வரமாட்டேன் என்று இந்த தொலைபேசி வாயிலாக உறுதிபடுத்துவேன்.” உங்கள் அலைபேசிக்கு இணைய வசதி பெறுவீரா என்று நான் கேட்டதற்கு,”ஆம், இப்போது இணைய வசதி பெறுவது என்பது அத்தியவசியமானது. பாடல் முதல் செய்தி வரை, எதை வேண்டுமானாலும் பார்க்க முடியும் அல்லது பதிவிறக்க முடியும்” என்றார்.

கிட்டதட்ட 9 மணியளவில், இந்த ரயில் குருத் ரயில் சந்திப்பை அடைந்தது. அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி, வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி, தனியே பயணித்துக் கொண்டிருந்தார். அவரிடம் எவ்வளவு நாட்களாக இந்த ரயிலில் பயணித்து வருகிறீர்கள் என்று கேட்டேன். “ பதினெட்டு வருடங்களாக பயணித்து வருகிறேன். நான் அபான்பூர் பகுதிக்கு(ராய்ப்பூரில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) தினந்தோறும் சென்று வருகிறேன். அங்கு தான் காய்கறி விற்று வருகிறேன்.” என்றார்.

இன்று எவ்வளவு சம்பாதித்தீர்கள்? “ நான் சில புளிப்பு மிகுந்த காய்கறிகளை 250 ரூபாய்க்கு விற்றேன். அதன் மூலமாக 100 ரூபாய்(லாபம்) கிடைத்தது. இன்று வியாபாரம் நன்றாக நடக்கவில்லை. பொதுவாக, நான்  250-300 ரூபாய் வரை சம்பாதிப்பேன்.” எனக் கூறினார்.

அவரது பெயரை வெளியிடக்கூடாதென என்னிடம் கேட்டுக்கொண்டார். “நான் படிக்கவில்லை, ஆனால் என் உறவினர்கள் மாத ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளனர். ஒருவேளை என் பெயர் எங்காவது வெளியாகி, அதை இந்தியவில் எங்காவது உள்ள அவர்கள் படித்துவிட்டால். இது என் கௌரவம் சார்ந்த விசியம்.” என்றார்.

Kendri to Dhamtari train
PHOTO • Purusottam Thakur

கடந்த ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு, ராய்ப்பூரில் முன்மொழியப்பட்ட விரைவு வழித்தடத்தின் காரணமாக, அரசானது  இந்த ரயில்வே வழித்தடத்தை 52 கிலோமீட்டராக குறைத்துள்ளது

நான் அவரது பெயரை வெளியிட மாட்டேன் என்று கூறினேன். மேற்கொண்டு பேசிய அவர், “காய்கறியை எவ்வாறு விற்பனை செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். எல்லோராலும் அதை செய்து விட முடியாது. உதாரணமாக, உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது. அதை இந்த தொழிலாளர்களால் செய்து விட முடியுமா?” நான் என் தலையை அசைத்து அவரது பேச்சை ஆமோதித்தேன்.

அவர் பள்ளிக்கு சென்றிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கு அவர்  “நான் பள்ளிக்கு சென்றதே இல்லை. எங்களுக்கு சாப்பாடே போதுமானதாக இல்லை. என் உடன் பிறந்தவர்கள் சிறியவர்களாக இருக்கையில், அவர்களை நான்  கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது, எனது பெற்றோர்கள் தினக்கூலியாகப் பணிபுரிந்து வந்தனர். அப்போது நூறு ரூபாய் நோட்டையே நான் பார்த்தது இல்லை!” என்றார்.

அவரின் மூத்தமகனுக்கு திருமணம் ஆகியுள்ளது, அவரும் இதே ரயிலில் தான் வேலைக்குச் சென்று வருகிறார். ஆனால், அவர் கூறுகையில்,”தற்போது, எங்கள் கிராமத்தில் விவசாய வேலைகள் கிடைக்கிறன்றன. எனவே,அவன் அங்கு வேலைப் பார்க்கிறான். சமீபத்தில், எனது இளைய மகன் எதோ ஆறு மாதகால கணினி பயிற்சிக்காக மாதத்திற்கு  200 முதல் 300  ரூபாய் வரை  செலவு செய்தான். தற்போது, அதே பயிற்சி நிலையத்தில்,மாதத்திற்கு 3,000-3,500  ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறான். அவன் எந்த பணமும் கொடுப்பதில்லை, ஆனால், அவனது சகோதரிக்கு 1000 ரூபாய் கொடுக்கிறான். அவள் வணிகவியல் நான்காம் ஆண்டு படிக்கிறாள்.”, என்று கூறிய அவர், மேற்கொண்டு கூறுகையில்,”எனக்கு கையெழுத்து கூட போட தெரியாது. எனவே,வங்கியில் எனது பணத்தை வரவு வைக்க உதவும் நபரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்.” என்றார்.

குருத் பகுதிக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாக, மின்விளக்குகள் உள்ள ஒரு வீட்டை சுட்டிக்காட்டி, அது அவரது வீடு என்று கூறினார். ரயில் மெதுவாக செல்லத் தொடங்கியதுமே அவரது காய்கறி பையை எடுத்துக் கொண்டு இறங்கினார்.

பின்குறிப்பு: கடந்த ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு, ராய்ப்பூர் பகுதியில் முன்மொழியப்பட்ட விரைவு ரயில் வழிதடத்தின் ஒருபகுதியாக, அரசானது இந்த ரயில் தடத்தை 52 கிலோமீட்டராகக் குறைத்தது. தற்போது இந்த ரயிலின் கடைசி ரயில் நிலையம் தெலிபந்தா இல்லை, கேந்திரி ரயில் நிலையம் ஆகும். இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு - ருச்சி வர்ஷநேயா

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Purusottam Thakur
purusottam25@gmail.com

Purusottam Thakur is a 2015 PARI Fellow. He is a journalist and documentary filmmaker. At present, he is working with the Azim Premji Foundation and writing stories for social change.

Other stories by Purusottam Thakur
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan