“விழாவுக்கான சிறந்த நாள் இது. வானிலையும் நன்றாக இருக்கிறது,” என்கிறார் லெ மாவட்டத்தின் சாலை கட்டுமான வேலைகள் செய்யும் தினக்கூலி தொழிலாளர் பெமா ரிஞ்சென்
லடாக்கின் ஹன்லே கிராமத்தை சேர்ந்த 42 வயது ரிஞ்சென், திபெத்திய நாட்காட்டியின் முக்கிய விழாவென சகா தவா விழாவை குறிப்பிடுகிறார். லடாக், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச பவுத்தர்களால் அந்த விழா கொண்டாடப்படுகிறது.
“முன்பு, ஒவ்வொரு கிராமமும் சகா தவா விழாவை அவரவர் பகுதிகளில் கொண்டாடினர். ஆனால் இந்த வருடம் (2022) ஆறு குக்கிராமங்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றன,” என்கிறார் 44 வயது சோனம் டோர்ஜே. ஹன்லேவின் இந்திய வானியல் மையத்தில் பணிபுரியும் அவர் நாகா கிராமத்தை சேர்ந்தவர். கோவிட் ஊரடங்கால் இரண்டு வருடங்கள் சிறு அளவில் மட்டுமே கொண்டாட முடிந்த புங்குக், குல்தோ, நாகா, ஷாதோ, போக் மற்றும் ஜிங்சோமா போன்ற கிராமங்கள் தற்போது ஒன்றாக கொண்டாடவிருக்கின்றன. குறைவான மக்கள்தொகை கொண்ட இந்த குக்கிராமங்கள்1,879 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் ஹன்லே கிராமத்தில் இருக்கின்றன.
மஹாயானா பிரிவு பவுத்தர்களால் கொண்டாடப்படும் சகா தவா, திபெத்திய சந்திர நாட்காட்டியின் நான்காவது மாதத்தின் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது. 2022ம் ஆண்டில் இந்த நாள் ஜூன் மாதத்தில் வருகிறது. திபெத்திய மொழியில் ’சகா’ என்றால் நான்கு, ‘தவா’ என்றால் மாதம் எனப் பொருள். சகா தவா மாதத்தை ‘நல்ல செயல்களுக்கான மாதம்’ எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த மாதத்தில் செய்யப்படும் நற்செயல்களுக்கான பலன்கள் பல முறை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.புத்தரை நினைவுகூரும் இவ்விழா, அவரின் பிறப்பு, ஞானமடைதல், முற்றும் துறத்தல் ஆகியவற்றை குறிக்கிறது.

17ம் நூற்றாண்டின் ஹன்லே மடம் மலை உச்சியில் இடம்பெற்றிருக்கிறது. திபெத்திய பவுத்தர்களின் திபெத்திய த்ருக்பா காக்யூ பிரிவுக்கு சொந்தமான மடம் இது

திபெத்திய பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் சங்தங் இருக்கிறது. ஹன்லே ஆற்றுப் பள்ளத்தாக்கில் நடுநடுவே ஆறுகளும் சதுப்பு நிலங்களும் ஆற்றுப்படுகைகளும் இருக்கின்றன
மக்கள்தொகையின் பெரும்பகுதி பவுத்தர்கள்தாம். லெ மாவட்டத்தில் கிட்டத்தட்ட 66 சதவிகிதம் பேர் பவுத்தர்கள் (கணக்கெடுப்பு 2011). அக்டோபர் 2019ம் ஆண்டில் லடாக் யூனியன் பிரதேசமானது. லடாக்கின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழும் மக்கள்தொகையின் பெரும்பகுதியினர் திபெத்தை பூர்விகமாக கொண்டவர்கள். பல விழாக்கள் இப்பகுதியின் புத்த மடங்களில் கொண்டாடப்படுகின்றன.
சகா தவாவின் போது திபெத்திய பவுத்தர்கள் அந்த நாளை புத்த மடங்கள் மற்றும் கோவில்கள் செல்வதிலும் ஏழைகளுக்கு தானமளித்தும் மந்திரங்கள் ஜெபித்தும் கழிக்கின்றனர்.
கிழக்கு லடாக்கின் ஹன்லே ஆற்று பள்ளத்தாக்கை சேர்ந்த சங்க்பாஸ் போன்ற பவுத்த மேய்ச்சல் பழங்குடி சமூகங்கள் சகா தவாவுக்கு பெரியளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். லெ மாவட்ட தலைநகருக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹன்லே ஆற்று பள்ளத்தாக்கில் இவ்விழா கொண்டாட்டத்தை காண கட்டுரையாளர் சென்றிருந்தார். இந்தோசீனா எல்லைக்கருகே கண்கவர் காட்சிகள் கொண்ட ஹன்லே ஆற்று பள்ளத்தாக்கில் பெருமளவு வெற்று நிலமும் ஆறுகளும் உயர்மலைகளுமே நிறைந்திருக்கும். சங்க்தங் வன உயிர் காப்பகத்தின் ஒரு பகுதி அது.
விழா நாள் காலை 8 மணி. ஹன்லே கிராமத்தின் உள்ளூர் புத்த மடாலயத்தில் ஊர்வலம் தொடங்கவிருக்கிறது. விழா கமிட்டித் தலைவரான டோர்ஜே புத்தர் சிலையை சுமந்து செல்லும் ஊர்வலத்துக்கு தலைமை தாங்குகிறார். 8.30 மணிக்கெல்லாம் அப்பகுதி சுற்றுபுற கிராமங்களின் பக்தர்களும் வந்து சேர்ந்து நிரம்பி வழிகிறது. பெண்கள் சுல்மா எனப்படும் பாரம்பரிய நீள பாவாடைகளையும் நெலென் என்கிற தொப்பிகளையும் அணிந்திருக்கின்றனர்.
சோனம் டோர்ஜேவும் அவரது நண்பர்களும் மடத்திலிருந்து புத்தரை தூக்கி ஒரு வேன் மீது வைக்கின்றனர். வாகனத்தை விழா பிரார்த்தனைக் கொடிகள் மூடியிருக்கிறது. ஒரு தேரைப் போல் வாகனம் காட்சியளிக்கிறது. 50 பேர் கார்களிலும் வேன்களிலும் பாதுகாத்து வர, சிலை ஹன்லே மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. திபெத்திய பவுத்தத்தின் த்ருக்ப கக்யூ வரிசையைச் சேர்ந்த 17ம் நூற்றாண்டு தளம் அது.

சோனம் டோர்ஜே (இடது) மற்றும் சக கிராமவாசிகள் புத்தர் சிலையை கல்தா கிராமத்தின் மெனா கங் மடத்திலிருந்து சுமந்து வருகிறார்கள்

திபெத்திய பிரார்த்தனைக் கொடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வேனின் மீது சிலை வைக்கப்படுகிறது. கொடியின் ஒவ்வொரு நிறமும் ஒரு தன்மையைக் குறிக்கிறது. அக்கொடிகள் இணைந்து சமநிலையை குறிக்கின்றன
ஹன்லே மடத்தில் பவுத்த ஆசிரியர்கள் அல்லது லாமாக்கள் சிவப்பு தொப்பிகளை அணிந்து வரவேற்கின்றனர். பக்தர்கள் வளாகத்துக்குள் நுழைந்ததும் அவர்களது குரல்கள் எதிரொலிக்கின்றன. “நிறைய பக்தர்கள் வருவார்களென எதிர்பார்த்தோம்,” என்கிறார் ஹன்லேவில் வசிக்கும் பெமா டோல்மா. 40 வயதுகளின் நடுவே இருக்கிறார் அவர்.
கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மேளதாள சத்தமும் நாயனங்களின் இசையும் ஊர்வலம் கிளம்பி விட்டதை அறிவித்தன. சிலர் பவுத்த வேதங்களை மஞ்சள் துணி போர்த்தி வைத்திருந்தனர்.
லாமாக்கள் முன்னணி வகிக்க ஊர்வலம் சரிவில் இறங்கிக் கொண்டிருந்தது. மடத்துக்குள் இருக்கும் காப்பகத்தை அவர்கள் சுற்றி வருகின்றனர். கூட்டம், லாமாக்கள் குழுக்களாகவும் பக்தர்கள் குழுக்களாகவும் பிரிந்து இரண்டு வாகனங்களில் ஏறுகிறது. அவர்கள் இனி கல்தோ, ஷதோ, புங்குக், போக் ஊர்களின் வழியாக சென்று நாகா கிராமத்தை அடைவார்கள்.
கல்தோவில் பக்தர்கள் ரொட்டிகள், குளிர்பானங்கள் மற்றும் உப்பு தேநீர் ஆகியவற்றால் வரவேற்கப்படுகின்றனர். புங்குக்கில் லாமாக்களும் பக்தர்களும் ஒரு மலையை சுற்றுகின்றனர். வெளிர்நீல நிற வானத்துக்குக் கீழ், ஓடைகள் மற்றும் புல்வெளிகள் அருகே நடக்கின்றனர்.
நாகாவை அடைந்ததும் லாமா ஜிக்மெட் டோஷல் எங்களை வரவேற்று, “இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கிறது? அற்புதமாக இருக்கிறது, அல்லவா? இதை நற்செயல்களின் மாதம் என்றும் சொல்வார்கள். புனித நூல்களுக்குள் ஒளிந்திருக்கும் தத்துவங்கள் புரிய நாம் ஆழமாக படிக்க வேண்டும்,” என்கிறார்.

44 வயது அன்மோங் சிரிங் விழாவுக்கு தயாராகிறார். கம்பளி, பட்டு, வெல்வெட் ஆகியவற்றால் செய்யப்பட்ட சுல்மா எனப்பகும் நீண்ட கவுனை அணிந்திருக்கிறார். இணையாக பருத்தி, நைலான் அல்லது பட்டால் ஆன மேற்சட்டை அணியப்படும்

புத்தர் சிலையுடனான ஊர்வலம் ஹன்லே மடத்தை அடைகிறது. ஹன்லே பள்ளத்தாக்கில் இடம்பெற்றிருக்கும் அந்த மடம்தான் அப்பகுதியிலேயே பிரதான மடம்

ஆறு கிராமங்களை சேர்ந்த பக்தர்களின் ஊர்வலம் மடத்துக்குள் செல்கிறது

ஹன்லே மடத்தின் பிக்குகள் பெரிய குடையைத் தயாரிக்கிறார்கள். சகா தவா விழாவுக்கு பயன்படுத்தப்படும் அக்குடையின் பெயர் ‘உதுக்’

மடத்துக்குள் நடக்கும் பிரார்த்தனை பணிகளை ரங்கொல் (இடது) மற்றும் கெசாங் ஏஞ்சல் (வலது) பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

ஹன்லே மடத்தின் முன்னணி பிக்குகளில் ஒருவர் சகா தவா சடங்குகளை செய்கிறார்

ஹன்லே மடத்தை சேர்ந்த பிக்குவான ஜிக்மெத் தோஷல் சொல்கையில், 'நற்செயல்களின் மாதமென இது கருதப்படுகிறது. புனித நூல்களுக்கு பின் ஒளிந்திருக்கும் தத்துவங்கள் புரிய ஆழ்ந்து படிக்க வேண்டும்,' என்கிறார்

இளம் லாமாவான டோர்ஜே டெஸ்ரிங், அங்க் எனப்படும் பாரம்பரிய இசைக்கருவியை பிடித்திருக்கிறார்

சகா தவா விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சோனம் டோர்ஜே ஹன்லே மடத்தின் புனித சுருள்களை கொண்டிருக்கிறார். இச்சுருள்கள், அப்பகுதியின் கிராமங்களினூடாக பயணிக்கும் புத்தர் சிலையுடன் சேர்ந்து பயணிப்பது

ஹன்லே பள்ளத்தாக்கின் பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் புனித சுருள்களை சுமந்து வருகின்றனர்

லாமாக்கள் இவ்விழாவின்போது பாரம்பரிய இசைக்கருவிகள் வாசிக்கின்றனர். காற்றால் வாசிக்கப்படும் சிறு வாத்தியம் (இடது) கெல்லிங் என அழைக்கப்படுகிறது. நீளமான வாத்தியம் (நடுவே) துங் என அழைக்கப்படுகிறது

ஊர்வலம் தொடர்கையில் லாமாக்கள் ஹன்லே பள்ளத்தாக்கின் சரிவுகளில் இறங்குகின்றனர்

ஊர்வலத்தை நடத்தும் லாமா ஹன்லே ஆற்றின் வழியாக ஹன்லே மடத்தை சுற்றுவார்

ஷதோ கிராமத்துக்கு செல்லும் வழியில் ஊர்வலம் இடைவெளி எடுத்துக் கொள்கிறது. கல்தோ கிராம மக்கள் தயாரித்த ரொட்டிகள், குளிர்பானங்கள், உப்பு தேநீர் ஆகியவற்றை உட்கொள்கின்றனர். ஊர்வலத்தில் பங்கேற்பவருக்கு சிற்றுண்டி வழங்குவதும் இவ்விழாவின் சடங்குகளாகும்

புனித வேதங்களை கொண்டு வரும் லாமாக்களை வரவேற்க ஷதோ கிராமவாசிகள் கொம்பாவில் கூடுகின்றனர்

ஹன்லே மடத்தின் லாமாக்கள் பிரார்த்தனைமுடித்துவிட்டு ஷதோ கிராமத்தின் கொம்பாவிலிருந்து வெளியே வருகின்றனர்

ஷதோ கிராமத்துக்கு பிறகு ஊர்வலம் ஹன்லே பள்ளத்தாக்கின் இன்னொரு கிராமமான புங்குக்கை அடைகிறது. ஊர்வலத்தின் வரவை ஆர்வத்துடன் எதிர்பார்த்து கிராமவாசிகள் காத்திருக்கின்றனர்

புங்குக் கிராமத்தின் கொம்பாவில் வெள்ளை துண்டுகளுடன் வரவேற்க காத்திருக்கும் கிராமவாசிகளை நோக்கி ஊர்வலம் செல்கிறது

கல்தோ கிராமங்களிலிருந்து நண்பர்கள் வரவென புங்குக் கொம்பாவுக்குள் பாரம்பரிய உடைகளில் காத்திருக்கும் பெண்கள்

தங்க்சோக் டோர்ஜேவும் அவரது நண்பர்களும் புங்குக் கொம்பாவின் கூடத்தில் உப்புத் தேநீர் குடித்து மதிய உணவு உண்டு கொண்டிருக்கின்றனர்

உணவுக்கு பின் ஊர்வலம் புங்குக் கிராமத்தை சுற்றி வரும். கடுமையான பரப்பாகவும் அதிக காற்றும் இருந்தும் கூட, கிராமத்தின் எந்தப் பகுதியும் விடப்படுவதில்லை

ஊர்வலத்தின் பெண்கள் தோள்களில் புனித சுருள்களை சுமந்து நடக்கின்றனர்

நாகா கிராமத்துக்கு செல்லும் வழியில் புக் கிராமவாசிகள் ஹன்லே மட லாமாக்களிடமிருந்து ஆசி பெறும் பொருட்டு ஊர்வலம் அங்கே நிற்கிறது. ஊர்வலத்துக்கென அவர்கள் உணவு வகைகள் தயாரித்திருக்கின்றனர்

புக் கிராமவாசிகள் புனித சுருள்களிடமிருந்து ஆசி பெறுகின்றனர்

எல்லா ஊர்களையும் சுற்றி வந்த பிறகு, நாகாக்கு அருகே இருக்கும் அழகான புல்வெளியில் இறுதியாக ஊர்வலம் நிற்கிறது. இக்கிராமத்தில் வசிப்பவர்கள் திபெத்திய பூர்விகத்தை கொண்டவர்கள். மேளதாளம் இசைக்க, பயணம் முடிந்ததென லாமாக்கள் அறிவிக்கின்றனர்
தமிழில் : ராஜசங்கீதன்