“தலைமுடிப் பூச்சு இன்னும் முடியை வெள்ளையாக்கும்,” என்கிறார் புஷ்பவேணி பிள்ளை. “இது போல,” என அவர் வெள்ளை நீலம் கலந்த ஓடுகள் பதித்த தரையைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார். 60களின் பிற்பட்ட வயதுகளில் இருந்தாலும் சில நரைமுடிகள்தான் அவருக்கு இருந்தன. “தேங்காய் எண்ணெயும் லைஃப்பாய் சோப்பும் மட்டும்தான்,” என்கிறார் அவர், ‘மட்டும்’ என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து.
ஓடு பதிக்கப்பட்ட அந்தத் தரையில் ஒரு மதியவேளை அமர்ந்து கடந்து போன வருடங்களைப் பற்றியும் நிகழ்காலத்தைப் பற்றியும் பேசினார். “என் தாயின் காலத்தில், அவரின் மாமியார் ஒரு தேங்காய்த் துண்டை அவருக்குக் கொடுப்பார். அதை அவர் குளிக்கும்போது மென்று பின் தலையில் தேய்த்துக் கொள்வார். அதுதான் அவருக்கு தேங்காய் எண்ணெய்,” என்கிறார் அவர்.
அவருக்கு அருகே அமர்ந்திருக்கும் வசந்திப் பிள்ளையும் ஆமோதிக்கிறார். இரு பெண்களும் (தூரத்து உறவு) 50 வருடங்கள் தாராவியில் ஒரே தெருவில் தனி ஓரறைகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இருவரும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி திருப்தியுடன் பேசுகின்றனர். பல்லாண்டு கால நட்பால் இருவரும் இணைக்கப்பட்டிருக்கின்றனர். மாறியிருக்கும் உலகைப் பற்றி ஏகப்பட்ட நினைவுகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
புஷ்பவேணி 14-15 வயதில் தாராவிக்கு இளம் மணமகளாக வந்தார். அதே தெருவில் இருந்த மைதானத்தின் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகனும் தாராவிக்காரர்தான். “அவருக்கு 40 வயது,” என்கிறார் அவர். அவ்வளவு வயதானவரா? “ஆமாம், அவர் குட்டையானவர் (எனவே எங்களுக்குத் தெரியவில்லை). மேலும் அந்தக் காலக்கட்டத்தில் இந்த விஷயங்களைப் பற்றி யாரும் யோசிக்க மாட்டார்கள். திருமணம் முடிந்த பிறகு, சாம்பார் சாதம் போட்டு விருந்து நடந்தது,” என அவர் நினைவுகூர்ந்து, “சைவம் மட்டும்தான்,” என்கிறார்.
கணவர் சின்னசாமி வாங்கியிருந்த ஓரறைக்குள் அவர் குடிபுகுந்தார். அந்த அறையின் விலை ரூ.500. அந்தக் காலக்கட்டத்தில் அது பெரிய தொகை. அறுவை சிகிச்சைக்கான நூல்களும் ஒயர்களும் தயாரிக்கும் ஒரு பட்டறையில் அவர் பணிபுரிந்தார். தொடக்க ஊதியம் ரூ.60. 1990களின் நடுவே அவர் ஓய்வுபெறும்போது 25,000 ரூபாய் மாத வருமானம் பெற்றுக் கொண்டிருந்தார்.
200 சதுர அடி அறைதான் (குடும்பம் விரிவடையத் தொடங்கியதும் இடைமட்டத்தில் ஒரு தடுப்பு போடப்பட்டது - “ஒரு சமயத்தில் நாங்கள் ஒன்பது பேர் இங்கு இருந்தோம்”) 50 வருடங்களுக்கு அவரின் வீடாகிப் போனது. டெம்போக்களும் ஆட்டோக்களும் அடர்ந்திருக்கும் முனையிலிருந்து தாராவிக்கு செல்லும் சந்தில் அறை அமைந்திருக்கிறது. ”என்னுடைய மூன்று குழந்தைகளும் அங்கு நான் வசித்தபோது பிறந்தவர்கள். அங்கிருக்கும்போதே அவர்களுக்கு திருமணமும் முடிந்தது. அதே அறையில்தான் அவர்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் பெற்றார்கள்,”
60 வயதுகளின் நடுவே தற்போது இருக்கும் வசந்தியும் அதே சந்துக்குள் 20 வயதில் திருமணமானதும் குடிபுகுந்தார். அவரின் மாமியாரும் புஷ்பவேணியின் கணவரும் உடன்பிறந்தவர்கள். எனவே வசந்தி தாராவிக்கு வந்தபோது அவருக்கு இங்கு குடும்பம் இருந்தது. “அப்போதிருந்து இந்த சந்திலிருந்து நான் எங்குமே சென்றதில்லை,” என்கிறார் அவர்.
1970களில் இரு பெண்களும் வந்தபோது தாராவி வித்தியாசமாக இருந்தது. "அறைகள் சிறியவையாக இருந்தன," என்னும் புஷ்பவேணி, "ஆனால் அவை பரந்த அளவில் இருந்தன. வீடுகளுக்கு இடையில் இடைவெளி இருந்தது," என்கிறார்.
"இப்பகுதி ஓர் ஓடையாகவும் காடாகவும் இருந்தது," என நினைவுகூர்கிறார் வசந்தி. “மகிம் ஓடையின் நீர் தெருச் சந்திப்பு வரை வரும். பிறகு அவர்கள் மண்ணைப் போட்டு, நிலம் உண்டாக்கி, அறைகள் கட்டினர்.” உயரத்தில் தற்போது அமைந்திருக்கும் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், முன்பு யாருமற்ற சதுப்பு நிலமாக இருந்ததாக நினைவுகூர்கிறார். “அருகே செல்லவே நாங்கள் பயப்படுவோம். இப்போது கலா நகர் பேருந்து நிறுத்தம் இருக்கும் இடம் வரைதான் அப்போது பெண்களான நாங்கள் செல்வோம். ஒரு குழாய் அப்போது இருந்தது. அங்குதான் துணிகள் துவைப்போம். இப்போது அதெல்லாம் மூடப்பட்டுவிட்டது.”
அவர்களது ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையுமே வெறும் பைசாக்களிலேயே வாங்க முடிந்திருக்கிறது. புனேவில் தான் கழித்த பால்ய பருவத்தை நினைவுகூருகிறார் புஷ்பவேணி. அங்கு ஒரு போர்த் தளவாடத் தொழிற்சாலையில் அவரின் தந்தை பணிபுரிந்தார். (அவரின் தாய் தற்போது 80 வயதுகளில் இருக்கிறார். புனேவில் வசிக்கிறார்.) “1 பைசாவுக்கு கை நிறைய பட்டாணிகள் கிடைக்கும்,” என்கிறார் அவர். விலை கூட சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலத்தின் ஓட்டம் அவருக்கு தெரிந்தே இருந்தது. “தங்கம் 50 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனாலும் வாங்குமளவுக்கு எங்களிடம் பணம் இருக்காது. நல்ல பருத்தி சேலையின் விலை 10 ரூபாய். என்னுடைய தந்தையின் முதல் ஊதியம் 11 ரூபாய். அதிலேயே அவர் ஒரு குதிரை வண்டி அளவுக்கு மளிகைப் பொருட்கள் கொண்டு வருவார்.”
“எங்களின் வாழ்க்கையை நாளொன்றுக்கு ஒரு ரூபாய் என்கிற மிகக் குறைந்த வருமானத்திலேயே சமாளித்தோம். 20 பைசாவுக்கு காய்கறிகள், கோதுமை 10 பைசாவுக்கு, அரிசி 5 ரூபாய்க்குக் இடைத்தன,” என வசந்தி நினைவுகூருகிறார். “அன்றாடச் செலவிலிருந்து 10 பைசாவையேனும் சேர்த்து வைக்கும்படி என் கணவரின் வீட்டார் சொல்வார்கள்.”
தாராவிக்கு வந்தபோது லைஃப்பாயின் சோப் 30 பைசா விலைக்குக் கிடைத்தது. “அது மிகப் பெரியதாக இருக்கும். உங்கள் கையில் அதைப் பிடிக்க முடியாது. சில நேரங்களில் அதில் பாதியை மட்டும் 15 பைசாவுக்கு வாங்கியிருக்கிறோம்,” என்கிறார் வசந்தி.
1980களின் நடுவே கட்டுமானத் தொழிலாளராக அவரின் வருமானம் நாளொன்றுக்கு 15 ரூபாயாக இருந்தது. “எங்கு வேலை கிடைத்தாலும் அங்கு நான் சென்றுவிடுவேன்,” என்கிறார் அவர். சேலத்திலிருந்து மும்பைக்கு 17 வயதில் உறவினருடன் வசிக்க வந்த முதல் சில வருடங்களில், சூரி மற்றும் சகலா பகுதிகளின் சோப்பு ஆலைகளில் வசந்தி பணிபுரிந்தார். “சோப்புகளை நாங்கள் பாக்கெட்டில் கட்டுவோம். ப்யூரிட்டி என ஒரு சோப் இருந்தது,” என்கிறார் அவர். பிறகு மீன் பாக்கெட் கட்டும் வேலையில் அவர் சேர்ந்தார். பிறகு அரை டஜன் வீடுகளில் வீட்டுவேலையைப் பல வருடங்களுக்குச் செய்தார்.
தமிழ்நாட்டில் அவரது தந்தை போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தார். வசந்திக்கு மூன்று வயது இருக்கும்போதே தாய் இறந்துவிட்டார். 10ம் வகுப்பு வரை படித்த அவருக்குக் கூர்மையான நினைவுத் திறன் இருக்கிறது. அதைக் குறிப்பிடுகையில் கடந்த காலத்தின் ‘அசல் சரக்கு’ என சொல்கிறார். “எங்கள் வீட்டின் அருகே இருக்கும் நிலங்களிலிருந்து நேரடியாக வரும் கரும்புகள், பட்டாணி, நெல்லிக்காய், தக்காளி ஆகியவற்றை நாங்கள் உண்போம். ஒரு கயிறைப் போட்டு புளியங்காய் பறித்து உண்போம்.” நல்ல நினைவாற்றலுக்கு அதுதான் மருந்து என, கருப்பு முடிக்கு தேங்காய் எண்ணெய் சோப்தான் தீர்வு என புஷ்பவேணி சொன்னதைப் போல் சொல்கிறார்.
சகலா சோப் ஆலையில்தான் கணவராகப் போகிறவரை வசந்தி சந்தித்தார். “காதலித்து குடும்பங்கள் ஏற்று திருமணம் செய்து கொண்டோம்,” என்கிறார் அவர். மெல்லியப் புன்னகை அவர் முகத்தில் படர்கிறது. “இளமையில் யார் காதலிக்காமல் இருப்பார்? என் உறவினர் நன்றாக விசாரித்து, மூன்று வருடங்களில் அதை குடும்பங்கள் ஏற்ற திருமணமாக ஆக்கித் தந்தார்.”
கணவரின் பெயரை அவர் உச்சரிக்கவில்லை. புஷ்பவேணியை சத்தமாக சொல்லச் சொல்கிறார். பிறகு அவரே சொல்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லும் வழி: ஆசைத்தம்பி. "அவர் மிகவும் நல்லவர்," என மென்மையாகச் சொல்கிறார் அவர். காதல் இன்னும் உள்ளே இருக்கிறது. "நாங்கள் மிக சந்தோஷமாக வாழ்ந்தோம்." மேலும் அவர், “சென்னையில் கூட எனக்கு எதுவும் இல்லாமல் இருந்ததில்லை. என்னுடைய கணவர் மட்டுமல்ல, என் மாமியாரும் நல்லவர்தான். எனக்குத் தேவையான எல்லாமும் எனக்கு இருந்தது,” என்கிறார்.
2009ம் ஆண்டில் ஆசைத்தம்பி இறந்துபோனார். “அவர் மது அருந்துவார். சுவாசக் கோளாறு இருந்தது,” என வசந்தி கூறுகிறார். “ஆனால் எங்களின் வாழ்க்கை நிம்மதியுடனும் திருப்தியுடனும் இருந்தது… கிட்டத்தட்ட 35 வருடங்கள் அவருடன் வாழ்ந்தேன். இப்போது அவரைப் பற்றி யோசித்தாலும் அழுகை வருகிறது.” கண்ணீரைக் கட்டுப்படுத்தும் அவரின் கண்கள் ஈரமாகின்றன.
அவரது ஒரே மகனும் பிறந்தவுடன் இறந்துவிட்டார். “மருத்துவமனையிலிருந்து திரும்பி வருவதற்குள் இறந்துவிட்டான்,” என்கிறார் அவர். “இதைப் பற்றி நான் அதிகம் பேசுவதில்லை. புஷ்பவேணியின் குழந்தைகளும் என் குழந்தைகளும் போலதான். அவர்களை விட்டுத் தள்ளிச் சென்றால் கூட என் மனம் படபடவென அடித்துக் கொள்கிறது.”
இந்த வருட அக்டோபர் மாதத்தில் தாராவி அறையை வசந்தி விற்றுவிட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன், மே மாதத்தில், புஷ்பவேணி அவரின் அறையை விற்றுவிட்டார். நிலத்துக்கும் வீடுகளுக்கும் அதிக விலை மும்பையில் கிடைப்பதால், அவர்களுக்கு சில லட்சங்கள் கிடைத்தன. ஆனால் அதிகச் செலவுகள் இருக்கும் நகரத்தில் அந்தப் பணம் ஒரு துளி போலத்தான்.
இரு பெண்களும் துணிக்கு ஒரு விலை என்கிற அடிப்படையில் தாராவியின் துணிக்கடைகளிலிருந்து துணி வாங்கி வேலை பார்க்கின்றனர். கறுப்பு ஜீன்ஸ் பேண்ட்டின் இடுப்பிலும் கால் பகுதியிலும் உள்ள நூலை வெட்டிக் கொடுத்தால் 1.50 ரூபாய் ஒரு பேண்ட்டுக்குக் கிடைக்கும். 2-3 மணி நேரம் வேலை பார்த்து ஒரு நாளில் 50-60 ரூபாய் அவர்கள் வருமானம் ஈட்டுகின்றனர். அல்லது ஷெர்வானி குர்தா ஆடைகளுக்கு ஊக்குகள் தைக்கும் வேலை போன்றவற்றை பார்க்கின்றனர். நீலவெள்ளைத் தரையில் அவர்கள் வேலை பார்க்கும் துணிகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இரு பெண்களும் துணிக்கு ஒரு விலை என்கிற அடிப்படையில் தாராவியின் துணிக்கடைகளிலிருந்து துணி வாங்கி வேலை பார்க்கின்றனர். கறுப்பு ஜீன்ஸ் பேண்ட்டின் இடுப்பிலும் கால் பகுதியிலும் உள்ள நூலை வெட்டிக் கொடுத்தால் 1.50 ரூபாய் ஒரு பேண்ட்டுக்குக் கிடைக்கும்
அறையை விற்றப் பணத்தில் இரு அறைகளை தாராவியில் வாங்கினார். அவரது இரு மகன்களுக்கும் ஒவ்வொன்று. மூத்த மகனுடன் அவர் வசிக்கிறார். மூத்த மகனின் வயது 47. ஆட்டோ ஓட்டுகிறார். மனைவியும் மூன்று குழந்தைகளும் உடன் இருக்கின்றனர். (புஷ்பவேணியின் கணவர் 1999-ம் ஆண்டில் இறந்தவிட்டார்). இந்த தரைதள அறையில் ஒரு சிறிய சமையலறையும் சிறிய கழிவறையும் இருக்கிறது. அக்குடும்பம் ஒரு படி உயர்ந்திருக்கிறது.
அவரின் இன்னொரு மகனுக்கு வயது 42. தாராவியின் இன்னொருப் பகுதியில் அவர் வசிக்கிறார். அவர் ஏற்றுமதி வேலையில் இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் அவருக்கு வேலை பறிபோனது. மூளையின் ரத்தப்போக்குக்கைப் போக்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டிருக்கிறார். தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். புஷ்பவேணியின் மகளுக்கு வயது 51. நான்கு பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். “நான் இப்போது பெரும்பாட்டி,” என்கிறார் அவர்.
“என் இரண்டு மகன்களும் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர்,” என்கிறார். “என்னுடைய மருமகள்களும் என்னிடம் நல்லபடியாக இருக்கிறார்கள். எனக்கு புகார்களோ பிரச்சினைகளோ இல்லை. என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். நிம்மதியான வாழ்க்கை இப்போது எனக்கு.”
தாராவி அறையை விற்றப் பணத்தில் கொஞ்சத்தைக் கொண்டு 60 கிலோமீட்டர் தொலைவில் நலசோபராவில் ஓரறை வாங்கியிருக்கிறார் வசந்தி. அந்த இடம் கட்டப்படும் வரை, அங்கு அவர் ஒரு வாடகை வீட்டில் வசிப்பார். அல்லது அவ்வப்போது தாராவிக்கு வந்து புஷ்பவேணிக் குடும்பத்துடன் வசிப்பார். “என்னுடைய அறை தயாராகிக் கொண்டிருக்கிறது. அருகேயே இருக்க நான் விரும்புகிறேன்,” என்கிறார் அவர். “அப்போதுதான் எந்த மாதிரியான அலங்காரம் வேண்டும் என்பதையும் என்ன மாதிரி அலமாரி வேண்டுமென்றும் நான் சொல்ல முடியும். நானில்லை எனில் அவர்கள் ஏனோதானோவென வேலை பார்த்து விடுவார்கள்.”
தரைதள அறை தயாரானதும் பிஸ்கட், சிப்ஸ், சோப் முதலியப் பொருட்கள் விற்கும் ஒரு சிறு கடையை அதில் தொடங்க வசந்தி விரும்புகிறார். அதுதான் அவரின் வருமானத்துக்கான வழியாக இருக்கும். “இனி என்னால் வீட்டு வேலை செய்ய முடியாது,” என்கிறார் அவர். “எனக்கு வயதாகிறது. ஏழையாக இருந்தாலும் என் வாழ்க்கையில் நிம்மதி இருக்கிறது. சாப்பிட உணவு இருக்கிறது. உடுத்த உடை இருக்கிறது. வாழ அறை இருக்கிறது. என்னிடம் இல்லாதது ஒன்றுமே இல்லை. எந்தக் கவலையும் இல்லை. இன்னும் வேண்டுமென்ற விருப்பம் ஏதுமில்லை.”
தமிழில் : ராஜசங்கீதன்