2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.
மணி காலை 11:40 ஐ தாண்டி விட்டது, அடுத்து வரும் நிகழ்ச்சி , வேகத்தை பற்றியது என்று அறிவிக்கிறார் கடல் ஓசை வானிலை நிலையத்தைச் சேர்ந்த A. யஷ்வந்த். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறிப்பாக கடந்த வாரத்திலிருந்து கச்சான் காற்று (தெற்கில் இருந்து வருவது) மிகவும் தீவிரமடைந்துள்ளது. காற்றின் வேகமானது மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இருந்தது. ஆனால் இன்று, அது மீனவர்களுக்கு உதவும் விதமாக மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைந்துள்ளது.
இது தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாம்பன் தீவு மீனவர்களுக்கு மிகச்சிறந்த செய்தியாகும். "எந்த பயமும் இல்லாமல் அவர்கள் கடலுக்குச் செல்லலாம்" என்று அர்த்தம் என்று மீனவரான யஷ்வந்த் விளக்குகிறார். மேலும் அவரே கடல் ஓசையின் வானொலி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார், இது அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு சமூக வானொலி நிலையம் ஆகும்.
ரத்த தானம் குறித்த சிறப்பு ஒலிபரப்பின் முன்னோட்டமாக யஷ்வந்த் வானிலை அறிக்கையை வாசிக்கிறார்: "வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது, எனவே போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள், வெயிலில் யாரும் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்துகிறார்.
இது ஒரு தேவையான முன்னெச்சரிக்கையாக இருக்கிறது, ஏனெனில் இப்போது யஷ்வந்த் பிறந்த 1996 விட, மிக அதிக வெப்ப நாட்களை பாம்பன் காண்கிறது. அப்போது இத்தீவில் வருடத்திற்கு 162 நாட்கள் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை தொட்டோ அல்லது தாண்டியோ இருக்கும். அவருடைய தந்தை அந்தோணி சாமி, இன்னும் முழுநேர மீனவரான அவர் பிறந்த 1973இல், வருடத்திற்கு 125 வெப்பமான நாட்களே இருந்தது. ஆனால் இன்று அது வருடத்திற்கு 180 நாட்கள் ஆக அதிகரித்துள்ளது என்கிறது கடந்த ஜூலையில் வெளிவந்த நியூயார்க் டைம்ஸின் காலநிலை மற்றும் புவிவெப்பமயமாதல் பற்றிய ஊடாடும் கருவியின் கணக்கீடு.
எனவே, யஷ்வந்தும் அவரது சகாக்களும் வானிலையைப் பற்றி மட்டுமல்லாமல் பருவநிலை பற்றியும் புரிந்து கொள்ள பெரிதும் முயற்சித்து வருகின்றனர். அவரது தந்தையும் அவரைப் போன்ற சக மீனவர்களும்,- இத்தீவில் உள்ள மிக முக்கிய இரு நகரங்களான -பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தில் குறைந்தபட்சம் 83,000 பேர் இருப்பர், இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள இவர்களை நாடுகின்றனர்.


ஆர் ஜே யஷ்வந்த் அவரது தந்தையுடன் மற்றும் அவரது படகுடன் (வலது): முன்பெல்லாம் நாங்கள் காற்றையும், வானிலையையும் கணித்து கடலுக்குச் செல்வோம் ஆனால் இன்று எங்களுடைய கணிப்பு எதுவும் எங்களுக்கு துளியும் உதவுவதில்லை. (படங்கள் : யஷ்வந்த்)
"நான் பத்து வயதில் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்" என்கிறார் அந்தோணிசாமி. கடல்கள் நிச்சயமாக பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது (அன்றிலிருந்து). முன்பெல்லாம் நாங்கள் காற்றையும், வானிலையையும் கணித்து கடலுக்குச் செல்வோம் ஆனால் இன்று எங்களுடைய கணிப்பு எதுவும் எங்களுக்கு துளியும் உதவுவதில்லை. இந்த மாற்றங்கள் எல்லாம் மிகக் கடுமையாக இருப்பதால் அது எங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. முன்பை விட இப்போது மிகவும் வெப்பமாக உள்ளது. முன்பெல்லாம் கடலுக்குச் செல்லும் போதே இவ்வளவு வெப்பமாக இருந்தது இல்லை. ஆனால், இன்று அந்த வெப்பம் நமக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
அந்தோணிசாமி பேசும் அமைதியான கடல் சில நேரத்தில் உயிரை வாங்கும் கடலாகவும் அமைந்துவிடுகிறது. யஷ்வந்த், அவரால் முடியும் போதெல்லாம் கடலுக்கு மீன்பிடிக்க அவருடைய தந்தையின் படகில் சென்று விடுவார். அதேபோல அவர் ஜூலை 4 ஆம் தேதி கடலுக்கு சென்று இரவு 9 மணிக்கு திரும்புகையில் கடல் கொந்தளிப்பின் காரணமாக நான்கு மீனவர்கள் அவர்களது வழிமாறி சென்றுவிட்டனர் என்ற தகவலுடன் வந்தார். அந்த நேரத்தில் கடல் ஓசையும் மூடப்பட்டிருந்தது, ஏனெனில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கடல் ஓசை ஒலிபரப்பாகும். இருந்தபோதிலும் வானிலை தொகுப்பாளர் ஒருவர் வானொலியில் பேசி பிற மீனவர்களின் கவனத்தை வழியிழந்த மீனவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். "எங்களது வானொலி நிலையத்தில், உத்யோகபூர்வமாக அது மூடப்பட்டு இருந்தாலும்,எப்போதும் ஒரு ஆர் ஜே இருந்து கொண்டிருப்பார்" என்கிறார் வானொலி நிலையத்தின் தலைவர் காயத்ரி உஸ்மான். எங்களது பணியாளர்கள் அனைவரும் நிலையத்தை சுற்றியே இருப்பதால், தேவை ஏற்படும்போது அறிவிக்கை செய்ய எவரேனும் இருப்பார். அன்று, கடல் ஓசை ஊழியர்கள், போலீஸ் கடலோர காவல்படை, பொதுமக்கள் மற்றும் பிற மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்ய இடைவிடாத அவசரத்துடன் வேலை செய்தனர்.
உறக்கமில்லா இரண்டு இரவுகளுக்கு பிறகு 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் சேதமடைந்த வல்லத்தை (நாட்டுப்படகு) பிடித்துக்கொண்டு இருந்தனர். மற்ற இருவரும் பாதி வழியிலேயே கை வலியின் காரணமாக முயற்சியைக் கைவிட்டனர் என்கிறார் காயத்ரி. அவர்களது மற்ற இரண்டு சகாக்கள், அவர்களிடம் தங்கள் குடும்பத்தினரிடம், அவர்களின் அன்பை எடுத்துச் சொல்லி, அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாத படியால் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டனர் என்பதை கூறுமாறு தெரிவித்தனர். அவர்களது சடலம் ஜூலை 10 அன்று கரை ஒதுங்கியது
இது பழைய நாட்களைப் போலவே இல்லை என்று புலம்புகிறார் 54 வயதான கேப்டன் ராஜ் என்றழைக்கப்படும் ஏ கே சேசுராஜ், அவர் அவரது படகின் பெயராலே இப்பட்டப்பெயரை பெற்றுள்ளார். அவர் தனது 9 வயதில் இருந்து கடலுக்கு செல்கிறார், அச்சமயத்தில் எல்லாம் "கடல் மிகவும் அமைதியாக இருந்தது" என்கிறார். வானிலை எப்படி இருக்கும், என்ன பிடிபடும், அவற்றிடமிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இன்று இரண்டுமே எங்களால் கணிக்க முடியாததாக இருக்கிறது
”இப்போதெல்லாம் முன்பு போல இல்லை” என்று கவலைப்படுகிறார் ஏ.கே.சேசுராஜ் என்கிற கேப்டன் ராஜ். கடல் அப்போதெல்லாம் இன்னும் கனிவாக இருந்தது என்கிறார். “மீன்பிடி, வானிலை இரண்டிலும் என்ன எதிர்பார்க்கலாம் என்று அப்போது தெரியும். இப்போது இரண்டையுமே கணிக்க முடியவில்லை.”
இந்த மாற்றங்களினால் ராஜ் மிகவும் கலக்கம் அடைந்து காணப்படுகிறார், ஆனால் அவரிடம் இருக்கும் கேள்விகளில் சிலவற்றுக்கு பதிலாக கடல் ஓசை அமைந்துள்ளது. இந்த நிலையம், கடல், வானிலையின் மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவற்றை பற்றிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது, இது ஆகஸ்ட் ,15 ,2016 அன்று நேசக்கரங்கள் என்ற அரசு சாரா நிறுவனத்தினால் துவங்கப்பட்டு, இயக்கப்படுகிறது
"கடல் ஓசை, சமுத்திரம் பழகு என்னும் நிகழ்ச்சியை தினமும் தொகுத்து வழங்குகிறது" என்கிறார் காயத்ரி. இதன் கருத்து கடல்களை பாதுகாப்பதே. இதில் கடலிலுள்ள நீண்ட பிரச்சனைகள் யாவும் சமூகத்தை பாதிக்கக்கூடியவையே. சமுத்திரம் பழகு என்பது பருவ நிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான நமது முயற்சி. கடல்களின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய நடைமுறைகளைப் பற்றி (உதாரணத்திற்கு, பெரிய மீன்பிடி களால் மீன் பிடித்தல் அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வாறு கடல் நீரை மாசுபடுத்துகிறது) என்பதை பற்றி பேசி வருகிறோம். எங்களது நிகழ்ச்சியின் வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் தாங்கள் இழைத்த தவறுகளை பற்றி பேசுவார்கள் அவற்றை மறுபடியும் செய்யாமல் இருப்பது பற்றி வாக்குறுதியும் அளிப்பார்கள்.
"கடல் ஓசையின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர்" என்கிறார் கிறிஸ்டி லீமா, இவர், இவர்களை ஆதரிக்கும் சென்னையிலுள்ள எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MSSRF) தகவல் தொடர்பு மேலாளராவார். அவர்கள், எங்களது நிபுணர்களை அவர்களின் நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொள்வர். கடந்த மேயில் இருந்து பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை அவர்களுடன் சேர்ந்து நாங்களும் ஏற்படுத்தி வருகிறோம். கடல் ஓசை மூலம் இப்பணியை செய்வது மிகவும் சுலபமாக இருக்கிறது, ஏனெனில் இந்த சமூக வானொலி நிலையம் பாம்பன் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
'கடல் ஒரு அதிசயம் அதை காப்பது நம் அவசியம்' என்னும் தலைப்பின்கீழ் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 4 நிகழ்ச்சிகளை இந்த வானொலி நிலையம் தொகுத்து வழங்கியுள்ளது, இதில் பருவ நிலை மாற்றம் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் MSSRF இன் கடற்கரை அமைப்பு ஆராய்ச்சியின் தலைவர் வி செல்வம் பங்கேற்றுள்ளார். "பருவநிலை மாற்றம் குறித்த இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் இவற்றை பற்றி நாம் நிபுணர் மட்டத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் செல்வம். ஆனால் "இவற்றை கடை மட்டத்தில் உள்ள மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே அதனை சரி செய்வதில் தினசரி தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்".


இடது: மீன் வியாபாரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் பாம்பன் தெருவில் இருக்கும் கடல் ஓசை வானொலி நிலையம். (படம் கவிதா முரளிதரன்/ பாரி). வலது: இங்கு பணியாற்றும் பதினோரு ஊழியர்களுள் டி ரெடிமர் என்பவரும் ஒருவரே, இவர் இன்னும் கடலுக்குச் செல்கிறார். (படம்: கடல் ஓசை)
மே 10 அன்று ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பாம்பன் மக்களிடையே இத்தீவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை நன்கு புரிந்து கொள்ள உதவியது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை பாம்பனை சேர்ந்த 100 குடும்பங்கள், ராமேஸ்வரம் தீவை இந்தியாவுடன் இணைக்கும் 2065 மீட்டர் உள்ள பாம்பன் பாலம் அருகே வசித்து வந்தனர். உயர்ந்து வரும் கடல் நீர்மட்டம் அவர்கள் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு புலம்பெயர வழிவகுத்தது. இந்த நிகழ்ச்சியில் செல்வம், பருவநிலை மாற்றம் எவ்வாறு இத்தகைய புலம்பெயர்தலை அதிகப் படுத்துகிறது என்பதை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
வல்லுனர்களோ, மீனவர்களோ அல்லது வானொலி நிலைய நிருபர்களோ இப்பிரச்சனையை மிக எளிமையாக முயலவில்லை, மாறுதல்களுக்கான ஒற்றை நிகழ்வு அல்லது ஒற்றை காரணங்களை கண்டுபிடிக்கும் தூண்டுதலையும் இவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் இவர்கள் மனித செயல்பாடுகளினால் பிரச்சனை இன்னும் சூடு பிடிக்கிறது என்பதை சுட்டிக்காட்ட தவறவில்லை. கடலோசை கண்டுபிடிப்பு பயணத்தின்போது பதில்களை தேடி ஒரு சமூகத்தை வழிநடத்த முற்படுகிறது.
"பாம்பன் ஒரு தீவு சூழல் மண்டலம் ஆகும் இதன் விளைவாக இது அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் நிலையில் இருக்கிறது" என்கிறார் செல்வம். ஆனால் "தீவில் இருக்கும் மணல் திட்டுகள் மக்களை பருவநிலை மாற்றத்தின் பாதிப்பில் இருந்து ஓரளவு பாதுகாக்கிறது. மேலும் இந்த தீவினை சூறாவளியிலிருந்து இலங்கை கடலோரம் ஓரளவு பாதுகாக்கிறது" என்று அவர் விளக்குகிறார்.
மேலும் அவர் கடல் வளம் அழிந்து வருவது நிஜம் இதனை ஏற்படுத்துவது பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளும் இன்ன பிற காரணிகளும் ஆகும். ட்ராலர் மூலம் அதிகமாக மீன் படிப்பதால் பிடியில் மீன்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. கடல்கள் வெப்பமடைவதால் மண் நகர்வுகள் அதிகமாகி வருகிறது.


இடது: சேலஸ் அவரை போன்ற மீன்பிடி சமூகத்தைச் சார்ந்த பாம்பனில் உள்ள பெண்களிடம் பேட்டி காண்கிறார். (படம்: கடல் ஓசை) வலது: காயத்ரி உஸ்மான் இவ்வானொலி நிலையத்தின் முதல்வர், இவர் சமுதாயத்திற்கு தெளிவான வழிகாட்டுதலை கொண்டுவந்துள்ளார். (படம்: கவிதா முரளிதரன்/ பாரி)
"ஊரல், சிரா, வெள்ளகம்பன் ஆகிய வகை மீன்கள் முற்றிலும் அழிந்துவிட்டது" என்று மே 24 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பி மதுமிதா கூறினார், இவரும் கடல் ஓசையின் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு தொகுப்பாளர். பால் சுறா, கல்வெட்டி, கொம்பன் சுறா ஆகியவை கிடைத்தாலும், கிடைக்கும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. வினோதமாக, முன்பு கேரளா பகுதியில் அதிகமாக கிடைத்த மத்தி மீன் இப்பொழுது நம் பக்கத்தில் அதிகமாக கிடைக்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை இப்பகுதியில் டன் கணக்கில் கிடைத்த மண்டை கழுகு என்னும் மீன் வகை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது என்று அதே நிகழ்ச்சியில் கூறினார் வயதில் மூத்த பெண்மணியான லீனா (அவரது முழுப்பெயர் கிடைக்கவில்லை). மேலும், அவர் அக்காலத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு அம்மீனின் வாயை திறந்து அதில் இருக்கும் முட்டைகளை எடுத்து சாப்பிட்டனர் என்பதை நினைவு கூறுகிறார். இதே செய்திகளைத் தான் எம் சேலஸ் ( இவரும் இதே சமூகத்தைச் சேர்ந்த கடல் ஓசையின் முழுநேர தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் , இவர் M.Com படித்துள்ளார்) போன்ற இளம் பெண்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
"1980கள் வரை கட்டை சீலா, கொம்பன் சுறா ஆகிய மீன் வகைகள் டன் கணக்கில் கிடைத்தன" என்கிறார் லீனா. "இன்று அவற்றை நாம் டிஸ்கவரி சேனலில் தான் பார்க்க முடிகிறது. எங்களது தாத்தாக்கள் (விசைப்படகுகள் அல்லாத நாட்டுப்படகினை பயன்படுத்தியவர்கள்) எஞ்சின் சத்தம் மீன்களை விரட்டி விடும் என்பார்கள். மேலும் பெட்ரோல் டீசல் ஆகியவை கடல் நீரில் கலந்து நீரை விஷமாக்கி மீனின் சுவையை மாற்றிவிடும்." அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் எவ்வாறு கரை வலையில் மீன்களை பிடித்தனர் என்பதை நினைவு கூறுகிறார். ஆனால் இன்று, கரையில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதால், பெண்கள் கடலுக்கு செல்வது வெகுவாக குறைந்துவிட்டது.
மே 17 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பாரம்பரிய மீன்பிடி முறைகள் பற்றியும், சமீபத்திய தொழில்நுட்பங்களை பற்றியும் அவற்றை எவ்வாறு இணைத்து கடல் வளத்தை காக்க பயன்படுத்துவது என்பதை பற்றியும் விவாதித்தனர். "கரையோரத்தில் கூண்டுகளை வைத்து மீன்களை இனப்பெருக்கம் செய்வதற்கு மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். கடல்வளம் அழிவதை இது நிவர்த்தி செய்வதால் அரசே இந்த 'கூண்டு கலாச்சாரத்தை' ஆதரிக்கிறது" என்கிறார் காயத்ரி.

வானொலியை கேட்டுக் கொண்டிருக்கும் மீனவ சமுதாய மக்கள். (படம்: கடல் ஓசை)
பாம்பனை சேர்ந்த 28 வயதான மீனவரான அந்தோணி இனிகோ இதை முயற்சி செய்வதில் ஆர்வத்துடன் இருக்கிறார். முன்பெல்லாம் கடல் பசு எங்களது பிடியில் சிக்கிவிட்டால் அதை மீண்டும் நாங்கள் கடலில் விட்டதில்லை. ஆனால், கடல் ஓசையில் எவ்வாறு பருவநிலை மாற்றமும், மனித நடவடிக்கைகளும் கடல் பசுவினை அழிவை நோக்கி இட்டுச்சென்றது என்பதை அறிந்தபின், எங்களது விலை உயர்ந்த வலையை அறுத்து அவற்றை நாங்கள் கடலில் மீண்டும் விட்டுவிடுகிறோம். அதேபோல கடல் ஆமையையும் விட்டுவிடுவோம்" என்கிறார்
"பருவநிலை மாற்றம் மீன்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து நிபுணர்கள் பேசினால், அது எவ்வளவு உண்மையானது என்பதை மீனவர்கள் வந்து நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர்" என்கிறார் காயத்ரி.
"குறைந்து வரும் மீன் வளத்திற்கு நாம் கடவுளையும், இயற்கையையும் குற்றம்சாட்டினோம். ஆனால் நமது நிகழ்ச்சிக்கு பிறகு அது முற்றிலும் நம்முடைய தவறு என்பதை உணர்ந்துவிட்டோம்" என்கிறார் சேலஸ். அவரைப் போலவே, கடல் ஓசையில் பணியாற்றும் அனைவரும்,காயத்ரியை தவிர, மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடன் சேர்ந்த காயத்ரி, அவர்களது சமுதாயத்திற்கு தெளிவான வழிகாட்டுதலையும், நோக்கத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
கடலோசை நிலையம் பாம்பனில் சுறுசுறுப்பான மீன் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் தெருவில் இருக்கிறது. நீலநிறத்தில் இருக்கும் பெயர் பலகையில், நமது முன்னேறத்திற்கான வானொலி என்ற வாசகத்தை தாங்கியுள்ளது. Fm நிலையத்திற்குள் இருக்கும் அனைத்து கருவிகளும் நவீனமாக மேம்பட்டு இருக்கிறது. இவர்கள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், மீனவர்களுக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர், நிகழ்ச்சிகளுக்கு இடையே மீனவ சமுதாய மக்கள் கடலுக்குச் செல்கையில் பாடும் அம்பா பாடலும் ஒலிபரப்பப்படுகிறது. நிலையத்தில் இருக்கும் 11 ஊழியர்களில் யஷ்வந்தும், டி ரெடிமரும் மட்டுமே இன்னும் கடலுக்கு செல்கின்றனர்.
யஷ்வந்தின் குடும்பம் பல வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து பாம்பனுக்கு குடிபெயர்ந்தது. "மீன்பிடித்தல் அங்கு லாபகரமாக இல்லை" என்கிறார். "எனது அப்பா அங்கு நல்ல மீன் பிடித்தலுக்கு மிகவும் சிரமப்பட்டார்". ராமேஸ்வரம் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது, ஆனால் இங்கும் சில ஆண்டுகளில் மீன் பிடித்தல் வளம் சீர்குலைந்து விட்டது." கடலுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் யாவும் மற்றவர்களின் சூனியத்தின் விளைவு அல்ல, இந்தச் சூழலுக்கு நாம் செய்த சூனியத்தின் விளைவு என்பதை கடல் ஓசை அவருக்கு உணர்த்தியது.
லாபத்தை பற்றி அவர் கவலை கொள்கிறார். "வயதானவர்கள் சிலர் அவர்கள் மீன்பிடித்தம் அதிகமாக இல்லாததைப் பற்றி ஏதும் செய்யாததாலேயே ஏழைகளாக இருப்பதாக நம்புகின்றனர். லாபத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் கடல் வளத்தை அழித்து விட்டனர். எங்களைப் போன்ற இளைஞர்கள் சிலர் இந்த ஆபத்தை உணர்ந்து இந்த சூனியத்தை மாற்ற முயற்சிக்கிறோம்."
லாபம் பற்றி அவர்களுக்கு இருக்கும் அழுத்தமான ஆசைகள் அவருக்கு கவலையளிக்கிறது. “தாங்கள் இன்னமும் ஏழையாக இருப்பதற்கு காரணம் தங்களது முன்னோர்கள் நிறைய மீன் பிடிக்கவில்லை என்பதுதுதான் என்று பலர் நினைக்கிறார்கள். நிறைய மீன் பிடித்து பணம் ஈட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அது கடல் வளத்தை சுரண்டுவதில் முடிகிறது.”
இந்த பெரிய சமூகத்தின் பாரம்பரிய அறிவு, கல்விக்கான வளமான ஆதாரமாகவே விளங்குகிறது. நமது நிபுணர்கள் இந்த பாரம்பரிய அறிவை செல்லுபடியானதாக ஆக்குகிறார்கள், மேலும் அதை ஏன் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நமக்கு கூறுகிறார்கள் என்கிறார் மதுமிதா. நமது வானொலி நிலையம் பாரம்பரிய அறிவை மதித்து முக்கியமான தளத்தை வழங்குகிறது. இதற்குப் பிரதியுபகாரமாக நமது ஒலிபரப்புகளில் வழங்கப்படும் நிபுணத்துவத்தை நமது மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ் பி இராயப்பன் இதை ஆமோதிக்கிறார். "கடல் வளத்தை சுரண்டுவதையும் அதன் ஆபத்தையும் பற்றி எப்பொழுதுமே நாங்கள் பேசிவருகிறோம். கடல் ஓசை நமது மீனவர்கள் இடையே ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் தாக்கமாக, சில நேரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வலைகளைக் கூட கடல்பசுக்களுக்காகவும், கடலாமைகளுக்காகவும் தியாகம் செய்கின்றனர் மீனவர்கள். இது ஒருவேளை, ஒரு நாள் மண்டைகழுகுகள் மீண்டும் இந்த தீவின் கடற்பகுதிக்கு வர உதவும் என்று சேலஸும், மதுமிதாவும் நம்புகின்றனர்.
பெரும்பாலான சமூக வானொலி நிலையங்களை போல இதன் ஒலிபரப்பும் பதினைந்து கிலோமீட்டருக்கு உள்ளாகவே இருக்கிறது. "ஆனாலும் பாம்பன் மக்கள் கடல் ஓசையினை வரவேற்கின்றனர், தினந்தோறும் 10 கடிதங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு வருகிறது" என்கிறார் காயத்ரி. நாங்கள் இதை ஆரம்பித்த போது நாங்கள் யார், என்ன வளர்ச்சியைப் பற்றி நாங்கள் பேசுகிறோம் என்று வியந்த மக்கள், இன்று எங்களை நம்புகின்றனர்".
இந்த மக்கள் பருவநிலையின் மீது மட்டுமே நம்பிக்கை இழந்துள்ளனர்
கவர் படம்: ஜூன் 8 அன்று நடந்த ஐ.நா உலக சமுத்திரங்கள் தின கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் கடல் ஓசை மற்றும் கடல் தினம் என்று பதாகையை வைத்திருக்கின்றனர். ( படம்: கடல் ஓசை)
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? namita@ruralindiaonline.org என்ற முகவரிக்கு CCயுடன் zahra@ruralindiaonline.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
தமிழில்: சோனியா போஸ்