மகாத்மா ஜோதிராவ் புலேவால் தொடங்கப்பட்ட பள்ளியில் படித்த முக்தா சால்வே என்னும் தலித் மாணவர் பிப்ரவரி 15, 1885 அன்று ’மாங்க் மற்றும் மகர்களின் துயரைப் பற்றி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். தியானோதய் என்கிற மராத்தி மொழி பத்திரிகையில் அக்கட்டுரை பிரசுரமானது. அவர் மதக் காவலர்களுக்கு பொறி பறக்கும் இக்கட்டுரையில் சவால் விடுத்தார்: “ஒருவரை மட்டும் உயர்ந்தவராக்கி, மற்றவரை ஒடுக்கும் மதம் பூமியை விட்டு மறையட்டும். வேறுபாட்டை தூண்டும் அத்தகைய மதத்தை ஊக்குவிக்கும் எண்ணம் நம் மனங்களில் நுழையாதிருக்கட்டும்.”

சொந்த மாங் மக்களை பற்றி எழுதியபோது முக்தா சால்வேவுக்கு வயது 15. உணர்வை தட்டியெழுப்பும் அவரது கட்டுரை பிராமண ஆட்சியாளர்களாலும் சமூகத்தாலும் தலித்கள் வதைபடும் விதத்தை நமக்கு சொல்கிறது. அவரை போலவே கடுபாய் காரத்தும் ஆலந்தியில் மதவாதிகளுக்கு சவால் விட்டு, ஆன்மிகம் மற்றும் மதம் குறித்த விவாதத்தில் அவர்களை தோற்கடித்தார். சாமானிய மக்களின் போராட்டங்கள் மற்றும் துயரங்கள் குறித்து கடுபாய் பாடுகிறார். அவரது பாடல்கள் ஆழமான அர்த்தங்களையும் தத்துவங்களையும் வெளிப்படுத்துகின்றன. சமத்துவத்தின் மதிப்பை அவை விளக்கி, பாபாசாகெப் அம்பேத்கரின்பால் அவர் கொண்டிருக்கும் நன்றியையும் அப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

*****

काखेत पोरगं हातात झाडनं डोईवर शेणाची पाटी
कपडा न लत्ता, आरे, खरकटं भत्ता
फजिती होती माय मोठी

माया भीमानं, भीमानं माय सोन्यानं भरली ओटी
मुडक्या झोपडीले होती माय मुडकी ताटी
फाटक्या लुगड्याले होत्या माय सतरा गाठी
पोरगं झालं सायब अन सुना झाल्या सायबीनी
सांगतात ज्ञानाच्या गोष्टी

सांगू सांगू मी केले, केले माय भलते कष्ट
नव्हतं मिळत वं खरकटं आणि उष्टं
असाच घास दिला भीमानं
झकास वाटी ताटी होता

तवा सारंग चा मुळीच पत्ता नव्हता
पूर्वीच्या काळात असंच होतं
बात मायी नाय वं खोटी
माया भीमानं, मया बापानं,
माया भीमानं माय, सोन्यानं भरली ओटी

தோளில் குழந்தை, கையில் துடைப்பம்
சாணிக்கூடை என் தலையில்
என் ஆபரணங்களை மறைக்க, மிச்சமீதி எனது ஊதியமாக
நம்புங்கள், வாழ்க்கை ஒரு பெரும் அவமானம்

என் பீம், ஆம், என் பீம் என் வாழ்க்கையை தங்கத்தால் நிரப்பினார்
என் உடைந்த குடிசைக்கு உடைந்த கதவு இருந்தது
கிழிந்த புடவையில் எண்ண முடியாதளவு முடிச்சுகள் இருந்தன
இப்போது என் குழந்தை ஓர் அதிகாரி, என் மருமகள்களும் அதிகாரிகள்தாம்
அவர்கள் ஞான வார்த்தைகள் எனக்கு கூறுகின்றனர்

நிறைய கஷ்டங்கள் பட்டேன் கடினமாக உழைத்தேன்
மிச்ச மீதி உணவு கூட கிடையாது
ஆனால் பீம் வந்து எங்களுக்கு உணவளித்தார்
ஒரு அற்புத தட்டு மற்றும் கிண்ணத்துடன் உணவளித்தார்

கவிஞர் சாரங் அந்த இடத்தில் இல்லை
இப்படித்தான் அக்காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம்
நான் பொய்கள் சொல்லவில்லை, அன்பே
என் பீம், என் தந்தை, என் வாழ்க்கையை தங்கம் கொண்டு நிரப்பினார்

PHOTO • Courtesy: TISS Tuljapur
PHOTO • Courtesy: TISS Tuljapur

சில ஆண்டுகளுக்கு முன் துல்ஜாபூரின் சமுக அறிவியல்களுக்கான டாடா நிறுவனத்தில் நடந்த டாக்டர் அம்பேத்கர் நினைவுரையில் கடுபாய் காரத்தும் அவரது ஏக்தாரியும்

டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கருக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பல பாடல்கள் எழுதப்பட்டும் பாடப்பட்டும் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் சிலதான் இதயப்பூர்வமானவை. நம் கூட்டுமனதின் அங்கமானதால் அவை புகழ் பெறுகின்றன. கடுபாய் காரத்தின் இப்பாடலும் அத்தகுதியை பெற்றிருக்கிறது. மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல் இது. அவர்களின் வீடுகளிலும் இதயங்களிலும் நுழைந்து எங்கும் ஒலிக்கும் பிரபலமான அம்பேத்கர் பாடலாக மாறியிருக்கிறது.

பாடலின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்தும் சரியான வார்த்தைகள், தெளிவான குரல், தனித்துவமான ஒலிகள், இசைக்கருவிகள் மற்றும் கடுபாய் காரத்தின் பிரத்யேகமான அடித்தொண்டை குரல் ஆகியவை முக்கியமானவை. சாமானியரான கடுபாய் கலர்ஸ் தொலைக்காட்சியின் ஜல்சா மகாராஷ்ட்ரச்சா நிகழ்ச்சி மற்றும் ஜீ தொலைக்காட்சி போன்றவற்றால் பிரபலமடைந்தார். ஆனால் அந்த இடத்துக்கு வர அவர் பயணித்த கடும்பயணத்தை பற்றி கொஞ்சம்தான் நமக்கு தெரியும். கடுபாயின் வாழ்க்கை முழுவதும் அவரின் பெயரை ஒத்த அனுபவங்களே அதிகம். (கடு என்ற மராத்தி வார்த்தைக்கு கசப்பு என அர்த்தம். மராத்வடாவில் பெண் குழந்தைகளுக்கு அதிகமாக இப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கெட்ட திருஷ்டியை இப்பெயர் போக்குமென ஒரு நம்பிக்கை).

கடுபாயின் தந்தை துகாராம் காம்ப்ளே…

பால்யத்திலிருந்தே வறுமையில் வாழ்ந்த கடுபாய், 16 வயதில் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே மாரடைப்புக்கு கணவனை பறிகொடுத்தார். வாழ்க்கை மற்றும் இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோரின் பொறுப்பும் அவர் மீது விழுந்தது. அப்பாவின் ஏக்தாரியுடன் அவர் வீடு வீடாக சென்று பஜனை பாடல்கள் பாடினார். வேத காலத்தில் கார்கியும் மைத்ரேயியும் விதூஷியும் (கற்றறிந்த பெண்) மதவாதிகளுடன் விவாதம் செய்திருக்கின்றனர். அதே போன்று கடுபாய் ஒருமுறை ஆன்மிகத்தை காப்பவர்களுடன் ஆலந்தி கோவில் முற்றத்தில் விவாதம் செய்திருக்கிறார். அவர் பல்லாண்டுகளாக பலவித பக்தி பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் ஒருநாளுக்கு இருவேளை உணவுக்குக் கூட அவை உதவவில்லை. எனவே அவர் ஜல்னா மாவட்டத்தின் அவரது கிராமத்தை விட்டு அவுரங்காபாத்துக்கு சென்றார்.

PHOTO • Imaad ul Hasan
PHOTO • Imaad ul Hasan

அவுரங்காபாத் - பீட் பைபாஸ் சாலை அருகே உள்ள நிலத்தில் கடுபாய் ஒரு சிறு தகரக் கூரை குடிசை கட்டினார். பவுத்தராக இருக்கும் அவர் சொல்கையில், உலகை அன்பு, பரிவு, ஊக்கம் மற்றும் பாபாசாகெபின் ஆற்றல் ஆகியவற்றுடன் எதிர்கொள்வதாக சொல்கிறார்

ஆனால் அவர் அவுரங்காபாத்தில் எங்கு வாழ முடியும்? அவுரங்காபாத் - பீட் பைபாஸ் சாலைக்கு அருகே இருந்த அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் நிலத்தில் ஒரு குடிசையைக் கட்டி நீர், மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதியுமின்றி அவர் வாழத் தொடங்கினார். அங்குதான் அவர் இன்றும் வசிக்கிறார். தொடக்கத்தில் மீரா உமாப் கடுபாயை தன் குழுவில் இணைத்துக் கொண்டார். ஆனால் அதில் கிடைத்த வருமானம் மூன்று குழந்தைகளை பராமரிக்க போதுமானதாக இல்லை. “அது மழைக்காலம். ஒரு வாரமாக சூரியனை நாங்கள் பார்க்கவே இல்லை. வேலைக்கு வீட்டைவிட்டு வெளியே நான் செல்லவில்லை. மூன்று குழந்தைகளும் பசியில் போராடிக் கொண்டிருந்தனர். வீடு வீடாக சென்று பஜனை பாடினேன். ஒரு பெண் சொன்னார், ‘டாக்டர் அம்பேத்கர் பற்றிய பாடல்களை பாடு’ என. நான் ஒரு பாடல் பாடினேன். என் குழந்தைகளின் பசியை பற்றியும் கூறினேன். சமையலறைக்குள் அவர் சென்று, குடும்பத்துக்கென வாங்கியிருந்த மளிகைகளை கொண்டு வந்து கொடுத்தார். ஒரு மாதத்துக்கு தாக்குபிடிக்கும் அளவுக்கான மளிகை. என் குழந்தைகளின் பசியை அவர் புரிந்து கொண்டார்,” என்கிறார் கடுபாய்

“அம்பேத்கரின் பாடல்தான் எங்களின் வயிறுகளுக்கு சோறிட்டது. என் மொத்த வாழ்க்கையும் மாறியது. பஜனை பாடுவதை நிறுத்திவிட்டு டாக்டர் அம்பேத்கர் காட்டிய பாதையில் நடந்தேன். 2016ம் ஆண்டில் இந்து மதத்திலிருந்தும் மடாங் சாதியிலிருந்தும் வெளியேறி புத்த தம்மத்துக்கு மாறினேன்!”

கணவரையும் தந்தையையும் இழந்தவர் கடுபாய். ஆனால் அவரின் எல்லா போராட்டங்களிலும் ஏக்தாரியையும் அவரின் மெல்லிசை குரலையும் துணை கொண்டிருக்கிறார். அப்பாவும் கணவரும் இறந்த பிறகு அவர் உடைந்துவிடவில்லை.

உயிர்த்திருப்பதற்கான கடுபாயின் போராட்டத்தில் இரண்டு விஷயங்கள் அவருக்கு உடனிருந்தன: ஏக்தாரி மற்றும் அவரது குரல்.  அவர் உலகை பாபாசாகெபின் அன்பு, பரிவு மற்றும் ஆற்றல் ஆகியவற்றுடன் எதிர்கொண்டார்.

வீடு வீடாக சென்று பாடி வருமானம் பெற்றுக் கொண்டிருந்த அவர், மகாராஷ்டிராவின் பிரபலமாக இன்று மாறியிருக்கும் பயணம் குறிப்பிடத்தகுந்த பயணம் ஆகும். ஏக்தாரி அவருடன் 30 வருடங்களாக இருக்கிறது.

காணொளி: ‘பாபாசாகெபை பற்றி பாடுவது என் குழந்தைகளை வளர்க்க உதவியது’

*****

அஜந்தா (அவுரங்காபாத்திலுள்ள) குகைகளில் 17ம் எண் குகையில் ஏக்தாரி பற்றிய ஆரம்பகால குறிப்பை காணலாம். இசைக்கருவியின் ஓவியம் குகை சுவர்களில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு சாதிக் குழுவுக்குமென ஒரு விருப்பத்துக்குரிய இசைக்கருவி இருக்கிறது. இக்கருவிகள் சடங்கு மற்றும் பண்பாட்டுக் காரணங்களுக்காக வாசிக்கப்படுகின்றன. மங்க் மக்கள் ஹல்கி கருவியை இசைக்கின்றனர். தக்கல்வார் மக்கள் கிங்க்ரி கருவியை இசைக்கின்றனர். தங்கர் மக்கள் கஜி தோல் இசைக்கின்றனர். யல்லம்மா தெய்வத்தை பின்பற்றுவர்கள் சவுந்தக் கருவி இசைக்கின்றனர். கொசாவி மக்கள் தவ்ரு மற்றும் தோல்கி கருவிகளையும் மகர் சமூக மக்கள் துன்துனே கருவியையும் இசைக்கின்றனர்.

மும்பை பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியரான டாக்டர் நாராயண் போசலே சொல்கையில் கொசாவி சமூகம் த்வ்ரு கோஸ்வாமி என அறியப்படக் காரணம், தவ்ரு இசைக்கும் அவர்களின் பாரம்பரியம்தான் என்கிறார். தாய்வழி சமூகம் குறித்த பஜனைகள் பாடும் பட் சமூகத்தினர் புலவர்களாக இருக்கின்றனர். அவர்கள் துன்துனே மற்றும் சம்பல் கருவிகளை இசைக்கின்றனர்.

ஏக்தாரியும் துன்துனேவும் ஒரே வடிவத்தை கொண்டவை. ஆனால் அவற்றின் ஒலி வாசிக்கப்படும் விதத்திலும் கருவி செய்யப்படும் விதத்திலும் வித்தியாசப்படுகிறது. ஏக்தாரி கொண்டு மகர்களும் மாங்குகளும் பஜனை பாடும் பாரம்பரியத்தை உயர்சாதியில் பார்க்க முடியாது. அல்லது அரிதாக மட்டுமே பார்க்க முடியும். இச்சமூகங்களின் பண்பாட்டு வாழ்க்கையில் இசைக்கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்றாட வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளிலும் சமூக மற்றும் மத விழாக்களிலும் இவை வாசிக்கப்படுகின்றன.

ஏக்தாரியை பற்றி பிரபல சம்பாஜி பகத் சொல்கையில்: “அதன் ஒலியும் இசைக்குறிப்புகளும் துயரத்துக்கு மிக நெருங்கியவை. ‘டிங், நக், டிங் நக்…’ என்கிற ஒலி வலியை பிரதிபலிக்கிறது. சோகத்தை வெளிப்படுத்தும் பைரவி ராகத்தின் ஒலி அது. ஏக்தாரி இசையை கேட்கும்போது பைரவி ராகம் முழுவதையும் நீங்கள் கேட்க முடியும். ஏக்தாரி கொண்டு பாடப்படும் எல்லா பாடல்களும் பைரவி ராகத்தை சேர்ந்தவைதாம். அவை பைரவியில் தொடங்கி பைரவியில் முடியும்.

பக்தி பாரம்பரியத்தில் சற்குணம் (கடவுளுக்கு வடிவம் இருக்கும்) நிர்குணம் (கடவுளுக்கு வடிவம் இருக்காது) என்கிற இரு கிளைகள் உண்டு. கடவுள் சிலையும் கோவிலும் சற்குண பாரம்பரியத்தில் மையம். நிர்குணத்தில் கோவிலும் கிடையாது, சிலையும் கிடையாது. அதை பின்பற்றுவோர் பஜனை பாடுவர். அவர்களை பொறுத்தவரை இசைதான் கடவுள். அதை அவர்கள் மக்களிடம் கொண்டு சென்று கடவுளாகவும் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். புத்த மதத்துக்கு மாறுவதற்கு முன்பு மகாராஷ்டிராவின் மகர்கள் கபீர் மற்றும் தகோஜி-மெகோஜி ஆகியோரை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

आकाश पांघरुनी
जग शांत झोपलेले
घेऊन एकतारी
गातो कबीर दोहे

வானுக்குக் கீழ்
உலகம் தூங்குகிறது
ஏக்தாரி துணையுடன்
கபீர் கவிதை பாடுகிறார்

கபீரின் எல்லா பஜனைகளையும் ஏக்தாரியில் வாசிக்க முடியும். அவரின் உழைப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்கள், தத்துவம் மற்றும் உலகப் பார்வை போன்றவற்றை இப்பாடல்களில் பார்க்க முடியும்.

காணொளி: ‘ஏக்தாரி கொண்டு எந்த பாடலையும் பாட முடியும்’

ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கான இசை மற்றும் ஆன்மிக ஊக்கமாக கபீர் இருக்கிறார். மேய்ச்சல் சமுகத்தினரும் நாடோடி பாடகர்களும் ஏக்தாரியை கையில் வைத்துக் கொண்டு அவரின் சேதியை நாடு முழுக்க பரப்புகின்றனர். கபீர் அறிஞரான புருஷோத்தம் அக்ரவால் சொல்கையில், கபீரின் தாக்கம் பஞ்சாப் போன்ற இந்தி மாநிலங்களோடு முடிந்துவிடுவதில்லை என்றும் அவர் ஒடியா, தெலுகு பேசும் பகுதிகளையும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவையும் சென்றடைந்திருப்பதாகவும் சொல்கிறார்.

1956ம் ஆண்டுக்கு முன் மகர் மற்றும் ‘தீண்டதகாதோர்’ எனக் கருதப்பட்ட எல்லை கடந்து ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களை சேர்ந்த  பிற சாதியினரும் கபீரை பின்பற்றினர். அவர்கள் கபீர்பந்தி என்றழைக்கப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த துறவி துகாராமும் கூட கபீரின் தாக்கம் கொண்டவர்தான். கபீரின் தாக்கமும் மற்றும் கபீர்பந்தி பாரம்பரியமும்தான் இச்சமூகங்களுக்கு ஏக்தாரியை கொண்டு வந்து தந்தது என நம்பப்படுகிறது.

தலித் குடும்பங்கள், குறிப்பாக மகர் மற்றும் வரலாற்றுப்பூர்வமாக தீண்டத்தகாத சமூகங்களாக கருதப்பட்டவை யாவும் ஏக்தாரி கொண்டு பாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. அக்கருவி இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது. குடும்பத்தில் மரணம் நேர்ந்தால் அவர்கள் ஏக்தாரியுடன் பஜனைகள் பாடுகின்றனர். மகர் சமூகம், கபீரின் கவிதை கொண்ட தத்துவத்தை விளக்கும் பஜனைகள் பாடினர். வாழ்க்கையின் பலன், அதன் வெளிப்பாடு, நற்செயல்களின் முக்கியத்துவம் மரணத்தின் நிச்சயம் ஆகியவை கபீரின் உலகப் பார்வைக்கு அடிப்படையாக விளங்குகின்றன. கவிதைகள் மற்றும் பஜனைகள் மூலம் அவர் விளக்கியது அவற்றைதான். கடுபாய்க்கு கபீர், நாத் மற்றும் வர்காரி (பக்தி கால) பிரிவுகளின் நூற்றுக்கணக்கான பாடல்கள் தெரியும்.

கடுபாய் கபீரின் ‘தீவிரமான தீ வானத்தில் வெடித்தது’ என்கிற பாடலை பாடுகிறார்.
துகாராம் பாடிய பஜனை ஒன்று:

विठ्ठला तुझे धन अपार
करीन नामाचा या गजर
धन चोरला दिसत नाही

डोळे असून ही शोधत राही

ஓ வித்தால், உன் பெயரளிக்கும் செல்வத்துக்கு அளவில்லை
நான் உன் பெயரை ஜெபிப்பேன்!
திருடனால் அதை பார்க்க முடியாது
பார்வையிருந்தாலும் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

கடுபாய் போன்ற பலரும் இத்தகைய பாடல்களை பாடினாலும் டாக்டர் அம்பேத்கரின் சமூகநீதி இயக்கத்துக்கு வளர்ந்து கொண்டிருந்த செல்வாக்கினால் பிற பாடல்கள் பாடுவதை நோக்கி அவர்கள் நகர்ந்தனர்.

கபீரின் பஜனைகளை ஏக்தாரியுடன் பல இடங்களுக்குக் கொண்டு சென்ற மத்தியப்பிரதேசத்தின் பிரபல பாடகரான பிரகலாத் சிங் திபானியா, பலாய் சாதியை சேர்ந்தவர். மகாராஷ்டிராவின் மகர் சாதி போல் பலாய் சாதி. மத்தியப்பிரதேசத்தின் பர்ஹான்பூர், மல்வா மற்றும் கண்ட்வா பகுதிகளிலும் மகாராஷ்டிராவின் எல்லைப் பகுதியிலும் பலாய்கள் வசிக்கின்றனர். டாக்டர் அம்பேத்கர் தலித்கள் எதிர்கொண்ட சாதிய ஒடுக்குமுறைகளை பற்றி பேசுகையில் பலாய் சமூக உதாரணங்கள் பல்வற்றை சொல்லியிருக்கிறார். கிராமத்தின் வருவாய் ஆவணங்களை ஆராய்ந்தால், நூறு ஆண்டுகளுக்கு முன் கிராமவாசிகளை காக்கவும் நிலத்தை அளக்கவும் உறவினர்களுக்கு மரணச் செய்திகள் கொண்டு போய் சேர்க்கவும் கிராமங்களால் மகர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். சமூகத்தில் இதுதான் அவர்களின் பங்கு. மத்தியப்பிரதேசத்தில் இதே வேலைகள் பலாய் சமூகத்துக்கு அளிக்கப்பட்டன. கிராமக் காவலர் பலாய் என அழைக்கப்பட்டார். அதே சமூகத்துக்கு பிரிட்டிஷ் காலத்தில் மகர் என்ற பெயர் சூட்டப்பட்டது. எப்படி இந்த மாற்றம் நேர்ந்தது? காந்த்வா மற்றும் புர்ஹான்பூர் ஆகிய பகுதிகளில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகம் மத்தியப்பிரதேச பலாயும் மகராஷ்டிராவின் மகரும் ஒன்றுபோல் இருப்பதை அவதானித்திருக்கிறது. அவர்களின் வாழ்க்கை, பழக்கங்கள், சடங்குகள், பணி எல்லாமும் ஒன்றாக இருந்திருக்கிறது. எனவே மகர் சாதியை சேர்ந்தவர்கள் மத்தியப்பிரதேசத்தில் பலாய் என அறிவிக்கப்பட்டனர். அவர்களின் சாதி மகர் என மீண்டும் 1942-43-ல் ஆவணப்படுத்தப்பட்டது. பலாய்களின் கதை இதுதான்.

*****

PHOTO • Imaad ul Hasan

கடுபாய் மகாராஷ்டிராவின் பிரபலமாகி விட்டார். 30 வருடத்துக்கும் மேலாக ஏக்தாரி அவருக்கு துணையாக நீடிக்கிறது

பிரகலாத் சிங் திபானியா மற்றும் ஷப்னம் விர்மானி ( கபீர் பணி யை சேர்ந்தவர்கள்) கபீர் பஜனைகளை ஏக்தாரியுடன் பாடுகின்றனர்.

நாட்டின் பல இடங்களில், பஜனை பாடகர்கள், நாடோடிக் கலைஞர்கள் போன்றோருடன் ஏக்தாரி கருவி காணப்படுகிறது. 100-120 செமீ நீளம் கொண்ட ஏக்தாரிக்கு பல பெயர்கள் உண்டு. கர்நாடகாவில் ஏக்நாத்; பஞ்சாபில் டும்பி; வங்காளத்தில் பவுல்; நாகாலாந்தில் டட்டி. தெலெங்கானாவிலும் ஆந்திராவிலும் புர்ரா வீணா என அழைக்கப்படுகிறது. சட்டீஸ்கரின் பழங்குடிகள் ஏக்தாரியை அவர்களின் இசைக்கும் நடனத்துக்கும் பயன்படுத்துகின்றனர்.

காய்ந்த பூசணியின் தட்டையாக்கப்பட்டு வெட்டப்பட்ட பகுதிதான் ஏக்தாரியில் எதிரொலிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு தோல் துண்டு, எதிரொலிப்பானின் வாயை மூடியிருக்கிறது. ஒரு குழிவான மூங்கில் கம்பு எதிரொலிப்பானுக்குள் செருகப்பட்டிருக்கிறது. எதிரொலிக்கும் பகுதியின் கீழ்ப்பகுதியில் கம்பி இணைக்கப்படுகிறது. அக்கம்பியின் மேலெழுப்பப்பட்டு மூங்கில் கம்பின் மறுமுனையில் கட்டப்பட்டிருக்கிறது. நடுவிரலாலோ ஆட்காட்டி விரலாலோ கம்பி மீட்டப்படுகிறது.

பிற கம்பி வாத்தியங்களை காட்டிலும் ஏக்தாரியின் வடிவமைப்பும் உருவாக்கமும் எளிமையானது. பூசணி, கட்டை, மூங்கில் மற்றும் கம்பி ஆகியவையும் எளிதாகக் கிடைக்கும். பூசணி நல்ல எதிரொலியை வழங்குவதாக கருதப்படுகிறது. ஆப்பிரிக்க இசைக்கருவிகளிலும் அது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஏக்தாரி அடிப்படையான ஒரு தாளத்தையும் இசையையும் கொடுக்கிறது. பாடகர் அவரது குரலையும் பாடலின் வேகத்தையும் ஒலிப்புக்கேற்ப சரிபடுத்திக் கொள்ளலாம். இது பழமையான பழங்குடி கருவி ஆகும். தொடக்கத்தில் கம்பியும் கூட தோலில் செய்யப்பட்டது. விலங்கின் அடித்தோல் பயன்படுத்தப்பட்டது. கர்நாடகாவில் தோல் கம்பிகளாலான ஏக்தாரி இன்னும் யல்லம்மா வழிபாட்டில் வாசிக்கப்படுகிறது. அது சும்புருக் என அழைக்கப்படுகிறது. எனவே முதல் இசையும் முதல் ராகமும், தோல் கம்பி ஒரு தோல் தட்டில் பட்டு எதிரொலித்து உருவானதென சொல்லிக் கொள்ளலாம். அங்கு அதுதான் முதல் இசைக்கருவி. விவசாய சமூகத்தில் உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உலோகக் கம்பி பயன்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் பல ஒற்றை கம்பி வாத்தியங்கள் கண்டுபிடிக்கபட்டு வாசிக்கப்பட்டன. தெரு இசைஞர்களும் நாடோடிகளும் உருவாக்கி வாசித்த கருவிகள் அவர்களின் வாழ்க்கை முறையுடன் நெருக்கமான பிணைப்பை கொண்டது.

இந்தியாவின் பக்தி இயக்கத்தின்போது ஏக்தாரி, துறவிகளாலும் கவிஞர்களாலும் பரவலாக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் வரலாற்றின்படி பார்த்தால் இதில் முழு உண்மை இல்லை. கபீர், மிராபாய் மற்றும் சில சூஃபி துறவிகள் பாடுகையில் ஏக்தாரி பயன்படுத்தியதை பார்க்க முடிகிறது. ஆனால மகராஷ்டிராவில் நம்தேவ் தொடங்கி துகாராம் வரையிலான பல கவிபாடும் துறவிகள் தாள் (தட்டு போன்ற கருவி), சிப்லி (கட்டைகளில் உலோக தட்டுகள் கொண்டு தட்டும் இசைக்கருவி) மற்றும் மிருதங்கம் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர். பல ஓவியங்களிலும் படங்களிலும் துறவிகள் வீணைகள் வைத்திருப்பதையும் பார்க்கலாம்.

மராத்தி விஸ்வகோஷின்படி, “இந்திய இசையில் பயன்படுத்தப்பட்ட புராதன கருவி வீணை. வேத மந்திரங்களை உச்சாடனம் செய்யும்போது எண்ணுவதற்கு அது பயன்பட்டது.” நம்தேவ் மற்றும் துகாராம் போன்ற துறவிகளின் படங்களில் அவற்றை நாம் பார்த்தாலும் துகாராம் எழுதிய பஜனையில் அதைப் பற்றி ஒரு குறிப்பும் தென்படவில்லை. ஆனால் தாள், சிப்லி, மிருதங்கம் போன்ற பிற கருவிகள் பலவற்றின் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

வீணை வைத்திருக்கும் துகாராம் படத்தை பிராமணமயமாக்கலின் விளைவு என குறிப்பிடலாம்.

காணொளி: ‘வாமன்தாதாவின் திறமையை யாராலும் மிஞ்ச முடியாது’

மக்களின் அன்றாட வாழ்க்கைகளில் அங்கம் வகிக்கும் எல்லாமும் பிராமணியத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. தெய்வங்கள், பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் வெகுஜன மக்களின் பிற உணர்வுகள் எல்லாவற்றையும் பூர்வ தன்மை மற்றும் இயல்பிலிருந்து மாற்றி பிராமணிய பண்பாடாக அறிவித்துக் கொள்கின்றனர். பிரிட்டிஷ் இந்திய துணைக்கண்டத்தை வென்று ஆட்சி செலுத்தியபோது பிராமணியம் அதன் அதிகாரத்தை பெஷாவாக்களுக்கு பிறகு இழந்தது. சமூகத்தில் இழந்த இடத்தை பிடிப்பதற்காக பிராமணர்கள் அவர்களின் அதிகாரத்தை பண்பாட்டு வெளியில் நிர்மாணித்தனர். உழைக்கும் வர்க்கங்களின் பல கலை வடிவங்களும் இசைக் கருவிகளும், உருவாகிக் கொண்டிருந்த பண்பாட்டு அதிகார மையங்களால் உட்செரிக்கப்பட்டன.

இக்கலை மற்றும் கருவிகள் மீதான தங்களின் உரிமையையும் நியாயமான கட்டுப்பாட்டையும் உழைக்கும் வர்க்கம் இழந்தது. இறுதியில் அவற்றை உருவாக்கிய மக்களே கலை மற்றும் இசை புழங்கும் வெளிகளிலிருந்து பிரிக்கப்பட்டனர்.

வர்காரி பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படும் கை மேளமான மிருதங்கம் திராவிட இசைக்கருவி ஆகும். தென்னிந்தியாவில் தலித்களால் தோல் கொண்டு செய்யப்படும் கருவி. மறுபக்கத்தில் வீணை என்பது இன்னுமே வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் பாகவத பாரம்பரியத்தை சேர்ந்தது. இக்குழுக்கள் வீணையை வர்காரி பிரிவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏக்தாரி, சம்பல், திம்கி, துன்துனே மற்றும் கிங்க்ரி ஆகியவை இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களால் உருவாக்கப்படுபவை. வீணை, சந்தூர் மற்றும் சாரங்கி போன்ற கர்நாடக இசைக்கருவிகள் பாரசீகத்தில் தொடங்கி இந்தியாவுக்கு பட்டு பாதை வழியாக வந்து சேர்ந்தவை. பிரபலமான வீணைக் கலைஞர்கள் பாகிஸ்தானில் இருக்கின்றனர். இந்திய பாரம்பரிய இசை அங்கே பாதுகாப்பாக இருக்கிறது. பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில், பிராமணிய இசையில் பயன்படுத்தப்படும் வீணை மற்றும் சந்தூர் போன்ற கருவிகளை உருவககும் பல கலைஞர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் கான்பூர், அஜ்ம மற்றும் மீரஜ் ஆகியப் பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியக் கலைஞர்கள் அவற்றை உருவாக்குகின்றனர்.

நாட்டின் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகங்கள் தொடக்கத்தில் தோல் கருவிகளையும் பல கம்பி கருவிகளையும் தயாரித்தன. பிராமணிய இசை மற்றும் கலை பாரம்பரியங்களுக்கு மாற்றாக அவர்கள் முன்வைத்த பண்பாடு இவை. பிராமணர்கள் கர்நாடக இசையையும் நடனத்தையும் பயன்படுத்தி பண்பாட்டு வாழ்க்கையில் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.

*****

ஏக்தாரியுடன் கடுபாய் பாடிய பாடல்கள் அற்புதமாக இருந்தன. அவரின் பாடலுக்கு இசைக்கருவி தெளிவையும் உணர்வுப்பூர்வமான ஆழத்தையும் வழங்கியது.

’வாருங்கள், இக்கதையைக் கேளுங்கள்’ என்றுதான் விலாஸ் கோகரே, பிரகலாத் ஷிண்டே, விஷ்ணு ஷிண்டே மற்றும் கடுபாய் காரத் போன்ற அம்பேத்கரிய பாடகர்கள்  தெருக்கள்தோறும் பயணித்து, வீடு வீடாக சென்று அவர்களின் ஏக்தாரி கொண்டு அம்பேத்கரிய பாடல்களை பாடினர். உலகளவில் நாடோடிகளின் இசைக்கருவியாக இருக்கும் ஏக்தாரி எப்போதும் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது.

காணொளி: ‘மூடநம்பிக்கைகளிலிருந்து வெளியேறிவிட்டேன்’

தீண்டப்படாதவர்களின் இசை உலகில் முக்கிய அங்கம் வகிக்கும் ஏக்தாரி, அவர்களின் ஆன்ம வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. அறிவியல் மேம்பட்டு புது கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் நாட்டுப்புற வழக்கங்களும் நாட்டுப்புறக் கருவிகளும் மாற்றப்பட்டன. ஏக்தாரியும் மாற்றப்பட்டது. ஏக்தாரியை கையில் கொண்டு பாடும் கடைசிக் கலைஞராக கடுபாய் இருக்கலாம். சமீபகாலமாக பிராமணிய இசை மற்றும் நவீன இசை ஆகியவற்றின் பயன்பாடு அம்பேத்கரிய பாடகர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஏக்தாரி கைவிடப்படுகிறது.

அம்பேத்கர் பற்றிய புதிய பாடல்களுக்கு இசை, ‘வாட் மாஜி பக்தாய் ரிக்‌ஷாவாலா’ என்கிற பிரபல மராத்தி பாடல் போன்ற பாடல்களின் ராகத்தில் அமைக்கப்படுகிறது. நவீன இசையோ கருவிகளோ பயன்படுத்தப்படக் கூடாது என்பதல்ல, ஆனால் இந்த இசைபாணி, கருவிக்கு பொருந்துகிறதா? செய்தி கடத்தப்படுகிறதா? மக்களை அது சென்றடைகிறதா? என்ன பாடப்படுகிறது என்பதன் அர்த்தம் சென்றடைகிறதா? இவைதான் பிரதான கேள்விகள். நவீனக் கருவிகள் மனிதச் சமூகத்தில் உருவாக்கப்படுகின்றன. அவை நம் இசை மேம்பட பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அம்பேத்கரிய பாடல்கள் திரைப்பட இசையில் பாடப்படுகின்றன. சத்தம் மிகுந்து இரைச்சலாக அவை உருவாக்கப்படுகின்றன. கரகரப்பாகி விட்டது. ரசிகத்தன்மையும் அடையாளத்தை உறுதிபடுத்துவது மட்டுமே நடக்கிறது. அம்பேத்கரின் ஆழமான தத்துவம் அப்பாடல்களில் வெளிப்படவில்லை. தத்துவம் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் இல்லாமல் பாடலாக்கப்படுபோது, மக்கள் வெறுமனே ஆட மட்டுமே அது பயன்படும். அவை நீடிக்காது. மக்களை சென்றடையாது. மக்களின் கூட்டு மனதில் அவை இடம்பிடிக்காது.

கடுபாயின் குரல், ஆயிரக்கணக்கான வருட அடிமைத்தனத்துக்கு எதிரான குரல். அவர் தீவிர வறுமையிலிருந்தும் துயரத்திலிருந்தும் மேலெழுந்து வந்த மக்கள் பாடகர். அவரின் பாடல்கள் சாதி மற்றும் மதம் ஆகியவற்றை பற்றிய புரிதலை நமக்குக் கொடுக்கும். தீண்டாமையின் குரூரம், மனிதமற்றதன்மை மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றை உணர்த்தும். ஏக்தாரியில் அவர் குடும்பம் மற்றும் சமூகத்தின் செறிவான பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார். அவரின் ஏக்தாரி பாடல்கள் நம் இதயங்களை தொடுகின்றன.

मह्या भिमाने माय सोन्याने भरली ओटी
किंवा
माझ्या भीमाच्या नावाचं
कुंकू लावील रमाने
अशी मधुर, मंजुळ वाणी
माझ्या रमाईची कहाणी

என் பீம் என் வாழ்க்கையை தங்கம் கொண்டு நிரப்பினார்
அல்லது
என் பீமின் பெயரால்
ரமா குங்குமம் இட்டார்
இனிய அற்புதமான குரல்
இதுவே ரமாயின் கதை

இப்பாடலின் வழியாக ஒரு சாமானியர் அம்பேத்கரின் தத்துவத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். அது அம்பேத்கருக்கு நன்றி தெரிவிக்கிறது. அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களையும் ஆழமான ஆன்மிகத்தையும் வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதலையும் அளிக்கிறது. சிலர் மட்டும்தான் அங்கிங்கென சுற்றி குரலை கொண்டு அமைப்புக்கு எதிராக போராடியிருக்கின்றனர். ஒரு பக்கத்தில் நம் சமூக ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் எதிர்ப்பார்கள். மறுபக்கத்தில் அவர்களின் குரல்கள் மற்றும் கருவிகள் போன்றவற்றால் நம் வரலாற்றின் நினைவை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். கடுபாய் அவர்களில் ஒருவர்.

இக்கட்டுரை முதலில் மராத்தி மொழியில் எழுதப்பட்டது.

இந்தியக் கலைகளின் அறக்கட்டளை, அதன் பெட்டகம் மற்றும் அருங்காட்சியகத் திட்டத்துக்காக PARI-யுடன் இணைந்து செயல்படுத்திய ’இன்ஃப்ளுயன்சியல் ஷாஹிர்ஸ், நரேட்டிவ்ஸ் ஃப்ரம் மராத்வடா’ என்கிற திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பல்லூடகக் கட்டுரை ஆகும். புது தில்லியின் கோத்தே இன்ஸ்டிட்யூட்/மேக்ஸ் முல்லர் பவன் ஆகியவற்றின் ஆதரவாலும் இக்கட்டுரை சாத்தியமாகி இருக்கிறது.

தமிழில்: ராஜசங்கீதன்

Keshav Waghmare
keshavwaghmare14@gmail.com

Keshav Waghmare is a writer and researcher based in Pune, Maharashtra. He is a founder member of the Dalit Adivasi Adhikar Andolan (DAAA), formed in 2012, and has been documenting the Marathwada communities for several years.

Other stories by Keshav Waghmare
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Editor : Vinutha Mallya

Vinutha Mallya is Consulting Editor at People’s Archive of Rural India. She was formerly Editorial Chief and Senior Editor at PARI.

Other stories by Vinutha Mallya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan