ஓவியங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை அலங்கரிக்க உருவாக்கப்படுவதில்லை. எதிரியைத் தாக்கவும் தற்காத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அவை.
- பாப்லோ பிக்காசோ

“பிராமணரின் வீட்டில் எழுத்து இருக்கும், குன்பியின் வீட்டில் நெல் இருக்கும், மங் மஹர் வீடுகளில் இசை இருக்கும்” என ஒரு மராத்திப் பழமொழி உண்டு. பாரம்பரியமான கிராமப்புற முறையில், மங் சமூகம் ஹல்கி மேளத்தை இசைப்பார்கள். கொந்தாலி சமூகத்தினர் சம்பல் வாத்தியம் இசைப்பர். தங்கர் சமூகத்தினர் தோலக்கையும் மஹர்கள் எக்தாரியையும் இசைப்பார்கள். அறிவு, விவசாயம், கலை மற்றும் இசை ஆகிய கலைகள் சாதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ‘தீண்டத்தகாதவர்கள்’ என ஒதுக்கப்பட்ட பல சாதிகளுக்கு பாடுதலும் இசைத்தலும் ஜீவித்திருத்தலுக்கான அடிப்படைத் தேவைகள். பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறையையும் அடக்குமுறையையும் எதிர்கொண்ட தலித்கள் அவர்களின் வரலாறு, வீரம், வலி, சந்தோஷம் மற்றும் தத்துவம் ஆகியவற்றை பாடல்களாகவும் கவிதைகளாகவும் வாய்மொழிக் கதைகளாகவும் நாட்டுப்புற இசையாகவும் பாதுகாத்து வருகின்றனர். தேசிய அளவில் டாக்டர் அம்பேத்கர் உயர்வதற்கு முன், மஹர் சமூக மக்கள் கபீரின் கடவுளர் பாடல்களுக்கும் வித்தாலின் பக்தி பாடல்களுக்கும் கடவுள் பஜனைகளுக்கும் எக்தாரி வாசித்துக் கொண்டிருந்தனர்.

தலித் அரசியல் வானின் விடிவெள்ளியாக டாக்டர் அம்பேத்கர் உதித்த 1920களுக்குப் பிறகு, இந்த இசை வடிவங்கள் அதன் கலைஞர்களால் அவரின் இயக்கத்தை முன்னிழுத்துச் செல்வதற்கும் பிரபலமாக்கவும் பயன்படுத்தப்பட்டன. டாக்டர் அம்பேத்கரின் இயக்கம் வளர்த்தெடுத்த சமூக மாற்றங்கள், அதன் அன்றாட நிகழ்வுகள், டாக்டர் அம்பேத்கரின் பங்கு, அவரின் செய்தி, வாழ்வு மற்றும் போராட்டங்கள் யாவற்றையும் அவர்கள் பாமர மொழியில் விளக்கினர். ஒருமுறை பீம்ராவ் கர்தாக் கும் அவரின் குழுவும் நிகழ்த்திய ஜல்சாவை (பாடல்களின் வழியிலான கலாச்சார எதிர்ப்பு நடவடிக்கை) டாக்டர் அம்பேத்கர், மும்பையின் நைகாவோன் பகுதியிலுள்ள வெல்ஃபேர் மைதானத்தில் காண நேர்ந்தது. அப்போது அவர், “என்னுடைய பத்து சந்திப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் நிகரானது கர்தாக் மற்றும் அவரது குழுவின் ஒரு ஜல்சா,” எனக் கூறினார்.

டாக்டர் அம்பேத்கரின் முன்னிலையில் ஷாஹிர் பெக்தே இப்படிச் சொன்னார்:

இளம் மஹர் சிறுவன் (அம்பேத்கர்) அறிவு நிறைந்தவன்
உண்மையில் பெரும் அறிவு கொண்டவன்
மொத்த உலகிலும் இது நடக்க முடியாது
இருளிலிருந்து வெளிவரும் வழியை அவர் நமக்குக் காட்டினார்
அறியாமையிலிருந்தோரை அவர் விழிப்படைய வைத்தார்

PHOTO • Keshav Waghmare
PHOTO • Keshav Waghmare

இடது: பீட் வீடு ஒன்றில் பாபாசாகெப்பின் ஓவியம் பிரதானமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆத்மராம் சால்வே போன்ற, அம்பேத்கர் காலத்துக்குப் பிந்தைய ஷாஹிர்கள் டாக்டர் அம்பேத்கரின் இயக்கத்துக்கு புத்தகங்களின் மூலம் அறிமுகமாயினர். வலது: ஆத்மராம் சால்வேவின் அரிதான புகைப்படம்

டாக்டர் அம்பேத்கரின் இயக்கம் தலித்துகளின் மத்தியில் பெரும் விழிப்புணர்வு அலையை உருவாக்கியது. அந்த இயக்கத்தின் முக்கியக் காரணியாக ஜல்சா இருந்தது. ஷாஹிரி (நிகழ்த்துக் கவிதை) அதன் ஊடகமாக இருந்தது. ஆயிரக்கணக்கான முகமறியாக் கலைஞர்கள் பங்குகொண்டனர்.

அம்பேத்கரிய இயக்கம் கிராமங்களை அடையும்போது, பாதி தகரக் கூரைகளும் பாதி ஓலைக் கூரைகளும் இருக்கும் தலித் வசிப்பிடங்களில் ஒரு காட்சி தென்படுவது வழக்கம். வசிப்பிடத்தின் நடுவே ஒரு மேடை இருக்கும். அங்கு ஒரு நீலக் கொடி ஏற்றப்பட்டிருக்கும். நீலக்கொடிக்குக் கீழே குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் முதியவர்களும் கூடுவார்கள். கூட்டங்கள் நடத்தப்படும். இந்தக் கூட்டங்களில் புத்த பீம பாடல்கள் பாடப்படும். சிறிய பெரிய கவிஞர்கள் எழுதிய பாடல்களின் புத்தகங்கள் மும்பையின் சைத்யபூமியிலிருந்தும் நாக்பூரின் தீக்‌ஷபூமியிலிருந்தும் இன்னும் பல நகரங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டன. தலித் வசிப்பிடங்களின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் படிக்க தெரியாதபோதும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அப்பாடல்கள் வாசிக்கச் செய்வார்கள். அவற்றைப் பின்னர் பாடுவதற்காக மனப்பாடம் செய்து கொள்வார்கள். அல்லது ஒரு ஷாஹிர் நிகழ்த்தியப் பாடலை அவர்கள் மனப்பாடம் செய்து கொள்வார்கள். வசிப்பிடத்தில் அதை நிகழ்த்திக் காட்டுவார்கள். நீண்ட, களைப்புக் கொடுத்த நாளின் முடிவில் திரும்பும் சில பெண் விவசாயத் தொழிலாளர்கள் “பீம் ராஜாவுக்கு ஜே! புத்த பகவானுக்கு ஜே!” என கோஷம் போட்டு பாடல் பாடத் தொடங்குவார்கள். வசிப்பிடத்தை சந்தோஷமும் தாளமும் உற்சாகமும் நம்பிக்கையும் நிறைக்கும். கிராமங்களில் வசிக்கும் தலித்துகளுக்கு இந்தப் பாடல்கள் மட்டுமே பல்கலைக்கழகம். அவற்றின் மூலமாகத்தான் அடுத்தத் தலைமுறை புத்தரையும் அம்பேத்கரையும் அடைந்தது. எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அந்த பாடகர்கள் மற்றும் ஷாஹிர்களின் கரடுமுரடான மொழியின் வழியாக, புத்தர், புலே மற்றும் அம்பேத்கர் ஆகியோரை இளம் தலைமுறை தம் மனங்களில் பதிய வைத்துக் கொண்டது. அதற்குப் பிறகு அவர்களை அவர்களால் மறக்க முடியாது. ஷாஹிர்கள்தான் ஒரு முழுத் தலைமுறையின் சமூகக் கலாச்சார உணர்வு நிலையைக் கட்டமைத்தவர்கள். ஆத்மராம் சால்வேவும் அத்தகையவொரு ஷாஹிர்தான். மராத்வடாவின் சமூகக் கலாச்சார விழிப்பை வடிவமைக்கக் காரணமாக இருந்தார் அவர்.

பீட் மாவட்டத்தில் மஜல்காவோன் ஒன்றியத்திலுள்ள பட்வட்காவோன் கிராமத்தில் 1953ம் ஆண்டின் ஜூன் 9ம் தேதி அவர் பிறந்தார். 1970களில் அவுரங்காபாத்துக்கு மாணவராக அவர் நுழைந்தார்.

மராத்வடா நிஜாமின் ஆட்சியில் (`1948க்கு முன்) இருந்தது. அப்பகுதியின் வளர்ச்சி, கல்வி முதலான பல துறைகளில் பாதிப்பு கொண்டிருந்தது. அத்தகையப் பின்னணியில் டாக்டர் அம்பேத்கர், மக்கள் கல்விக் கூடத்தின் ஆதரவில் 1942ம் ஆண்டு, மிலிந்த் மகாவித்யாலயாவை அவுரங்காபாத்தின் நக்சென்வான் பகுதியில் தொடங்கினார். நக்சென்வான் வளாகம், தலித் மாணவர்களுக்கான உயர்கல்வி மையமாக வளர்ந்து கொண்டிருந்தது. மிலிந்த் கல்லூரிக்கு முன்னதாக, மொத்த மராத்வடாவிலும் ஒரே ஒரு அரசுக் கல்லூரி மட்டும்தான் அவரங்காபாத்தில் இருந்தது. அதுவும் ‘இண்டெர்’ நிலைதான்! (இண்டெர் என்பது இடைநிலை பட்டத்தைக் குறிக்கிறது. பட்டப்படிப்புக்கு முந்தையப் படிப்பு). மராத்வடாவின் முதல் இளங்கலைக் கல்விக்கான கல்லூரி மிலிந்த் மட்டும்தான். அப்பகுதியில் அறிவுப்பூர்வமான சூழலை உருவாக்குவதில் அக்கல்லூரி முக்கியப் பங்கு வகித்தது. அதே நேரம், அங்கிருந்த அரசியல், சமூகக் கலாச்சாரச் சூழலை மாற்றும் வேலையையும் அது செய்தது. மரித்துக் கொண்டிருந்த ஒரு சமூகத்துக்கும் பகுதிக்கும் அது உயிரைக் கொடுத்தது. அடையாளம் மற்றும் சுயமரியாதை பற்றிய விழிப்புணர்வையும் அளித்தது. மகாராஷ்டிராவின் பல இடங்களிலிருந்து மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் முதலிய பிற மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் மிலிந்துக்கு வரத் தொடங்கினர். அச்சமயத்தில்தான் ஆத்மராம் சால்வேயும் மாணவராக மிலிந்தில் நுழைந்தார். (அவுரங்காபாத்தின்) மராத்வடா பல்கலைக்கழகப் பெயரை மாற்றக் கோரும் போராட்ட இயக்கம் அக்கல்லூரியில் தொடங்கி, அவரின் ஒளிமிகுந்த கவிதைகளால் இருபது ஆண்டுகளாக  இயங்கியது. ஒருவகையில், நமந்தர் (’பெயர் மாற்றம்) மற்றும் தலித் சிறுத்தை இயக்கங்களின் கலாச்சார செயல்பாட்டுக்கு அவர் மட்டுமே காரணமாக இருந்தார்.

PHOTO • Labani Jangi

ஆத்மராம் சால்வே அவரின் பாடல், அவரின் குரல் மற்றும் அவரின் வார்த்தைகள் அனைத்தையும் தலித்துகளுக்கு எதிராக தொடக்கப்பட்ட சாதியப் போரை எதிர்கொள்ள பயன்படுத்தினார்

1970க்கு பின் வந்த பத்தாண்டுகள் கொந்தளிப்பான காலக்கட்டம். சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் ஆண்களும் பெண்களும் கொண்ட காலம் அது. பல இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்து வெளியே வந்திருந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கு (1947) பின் நிலவிய நிலையில் அதிருப்தி கொண்டிருந்தனர். பல நிகழ்வுகள் அவர்களின் மீது தாக்கம் செலுத்தின. நெருக்கடி நிலை, மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி, தெலெங்கானா மாநில இயக்கம், பிகாரில் நடந்த ஜெயப்பிரகாஷ் நாராயணின் நவநிர்மாண் இயக்கம், பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடுக்காக குஜராத் மற்றும் பிகாரில் நடந்த இயக்கம், சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கம், மும்பையின் ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள், ஷகாதா இயக்கம், பசுமைப் புரட்சி, மராத்வடாவின் முக்தி போராட்டம் மற்றும் மராத்வடா பஞ்சம் போன்ற நிகழ்வுகளே அவை. இளைஞர்களையும் நாட்டையும் பெரும் குழப்பம் பிடித்தாட்டியது. வளர்ச்சிக்கும் அடையாளத்துக்குமான போராட்டம் தீவிரமடைந்தது.

டாக்டர் மச்சிந்திர மொகோல் தலைமை தாங்கிய மராத்வடா குடியரசு மாணவர் கூட்டமைப்பின் தலைமையில், நக்சென்வான் வளாகத்துக்கு வந்து விழிப்புணர்வு அடைந்த மாணவர்கள் மகாராஷ்டிர முதலமைச்சருக்கு ஜுன் 26, 1974 அன்று ஒரு கடிதம் எழுதினர். மராத்வடாவின் இரு பல்கலைக்கழகங்களில் ஒன்றுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட வேண்டுமெனக் கோரினர். ஆனால் பெயர் மாற்றுவதற்கான (நமந்தர்) கோரிக்கை, பாரதிய தலித் சிறுத்தைகள் அமைப்பு பங்கெடுத்தபிறகுதான் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்தை அடைந்தது. நம்தியோ தசல் மற்றும் ராஜா தாலே ஆகியோருக்கு இடையிலான மோதலினால், தலித் சிறுத்தைகள் அமைப்பைக் கலைப்பதாக தாலே அறிவித்தார். ஆனால் ‘பாரதிய தலித் சிறுத்தைகள்’ என்கிற பெயரில் ஒரு குழு, பேராசிரியர் அருண் காம்ப்ளே, ராம்தாஸ் அதாவலே, கங்காதார் காடே மற்றும் எஸ்.எம்.பிரதான் ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்டு, மகாராஷ்டிராவின் தலித் சிறுத்தைகளுக்காக பணிகளைத் தொடர்ந்தது.

புதிய அமைப்பாக உருவான பாரதிய தலித் சிறுத்தைகளைப் பற்றி ஆத்மராம் சால்வே இப்படி எழுதினார்:

நான் ஒரு சிறுத்தை வீரன்
காம்ப்ளே அருண் தலைவர்
நாங்கள் அனைவரும் ஜெய் பீம் படையினர்
நீதிக்காகப் போராடுகிறோம்
வீரர்கள் பயப்படுவதில்லை
நாங்கள் எவருக்கும் பயப்படவில்லை
அநீதியை நாங்கள் அழிப்போம்
முன்னேறிச் செல்வோம்
தலித்துகளே, விவசாயிகளே, தொழிலாளரே எழுச்சி பெறுங்கள்
அனைவரும் ஒன்றிணைந்து முஷ்டிகளை உயர்த்துவோம்

புதுச் சிறுத்தைகளை இந்தப் பாடலின் மூலம் சால்வே வரவேற்றார். மராத்வடாவின் துணைத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். 1977ம் ஆண்டின் ஜூலை 7ம் தேதி, புதிய பாரதிய தலித் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளரான கங்காதர் காடே முதன்முதலாக மராத்வடா பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பொதுவெளியில் வைத்தார்.

PHOTO • Keshav Waghmare
PHOTO • Keshav Waghmare

இடது: நந்தெட் மாவட்டத்தின் முகெடைச் சேர்ந்த தெஜெராவ் பாத்ரே ஷாகிர் ஆத்மராம் சால்வே குழுவின் உறுப்பினராக 10 வருடங்களுக்கும் மேலாக இருந்தவர். ஹார்மோனியமும் தோல்கியும் வாசிப்பவர். வலது: அம்பேத்கரிய இயக்கத்துக்கான பாத்ரேயின் கலாச்சார பங்களிப்புக்கான அங்கீகாரம்

1977ம் ஆண்டின் ஜூலை 18ம் தேதி, எல்லா கல்லூரிகளும் மூடப்பட்டன. அனைத்துக் கட்சி மாணவர் கூட்டமைப்பு, மராத்வடா பல்கலைக்கழகப் பெயர் மாற்றப்படக் கோரி பெரும் பேரணி ஒன்றை நடத்தியது. பிறகு ஜூலை 21, 1977 அன்று. அவுரங்காபாத்தின் அரசு பொறியியல் கல்லூரி, சரஸ்வதி பவன் கல்லூரி, தியோகிரி கல்லூரி மற்றும் விவேகானந்த் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த சாதி இந்து மாணவர்கள் பெயர் மாற்றக் கோரிக்கைக்கு எதிரான முதல் போராட்டத்தை நடத்தினர். போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பேரணிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. அடுத்த இருபது வருடங்களுக்கு மராத்வடா, தலித்கள் மற்றும் தலித் அல்லோதோருக்கு இடையிலான போர்க்களமாக இருந்தது. அப்போர்க்களத்தில் ஆத்மராம் சால்வே, அவரின் பாடல், குரல் மற்றும் வார்த்தைகள் ஆகியவற்றை, தலித்துகளின் மீது தொடுக்கப்பட்ட சாதியப் போரை எதிர்க்க பயன்படுத்தினார்.

அம்பேத்கரின் இயக்கத்தை நேரில் கண்டு பங்கேற்ற ஷாஹிர் அன்னாபாவ் சாதே, பீம்ராவ் கர்தாக், ஷாஹிர் கெக்டே, பாவ் பாக்கட், ராஜானந்த் கத்பயலே மற்றும் வாமன் கர்தாக் ஆகிய ஷாஹிர்கள் இல்லாத சமூகக் கலாசாரச் சூழலில் ஆத்மராம் சால்வே தோன்றினார்.

அம்பேத்கரின் காலத்துக்குப் பிறகு வந்த விலாஸ் கோகரே, தலிதானந்த் மோகனாஜி ஹட்கர் மற்றும் விஜயானந்த் ஜாதவ் போன்ற ஷாகிர்கள் அம்பேத்கரின் இயக்கத்தை நேரில் கண்டதில்லை. மதமாற்றக் காலத்தையும் பார்த்ததில்லை. ஒருவகையில் அவர்கள் எழுதப்படாத பலகைகளாக இருந்தனர். கிராமப்புறத்தைச் சேர்ந்த இந்த ஷாஹிர்களுக்கு பாபாசாகெப்பும் (டாக்டர் அம்பேத்கர்) அவரின் இயக்கமும் புத்தகங்களின் மூலமே அறிமுகம். எனவே அவர்களின் பாடல்கள் பெரும் தீவிரத்துடன் இருந்தன. ஆத்மராம் சால்வேவின் பாடல்கள் இன்னும் தீவிரத்துடன் இருந்தன.

நமந்தர் இயக்கம் பெயர் மாற்றம் பற்றிய இயக்கம் மட்டும் அல்ல. புதிதாக கண்டறியப்பட்ட அடையாளம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மனிதத்தன்மைக்கான உணர்வு நிலை ஆகியவற்றுக்கான இயக்கமும் கூட.

முதல்வர் வசந்த்தாதா பாட்டில் நமந்தர் இயக்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதும் ஆத்மராம் சால்வே எழுதினார்:

வசந்த்தாதா, எங்களுடன் சண்டை போடாதே
உன் நாற்காலியை மட்டுமே நீ இழப்பாய்
இந்த தலித்துகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள்
நீ அழுக்கு மூலையில் கிடப்பாய்
நீ அதிகார போதையில் இருக்கிறாய்
இங்கே பார், உன் சர்வாதிகாரத்தை நிறுத்து
உன்னுடைய அடக்குமுறை ஆட்சி நீடிக்காது

’ஏய் வசந்த்தாதா எங்களுடன் சண்டைப் போடாதே’ என
கேசரபாய் பாடும் பாடலைக் காணுங்கள்

சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாகச் சொல்லி காவல்துறை அவரின் நிகழ்ச்சிகளை முடக்கும். எனினும் ஆத்மராம் ஓயவில்லை

இப்பாடலை ஆத்மராம் சால்வே எழுதியதோடு நின்றுவிடவில்லை. வசந்த்தாதா பாட்டில்  நந்தெடுக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார். அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. பல அரசியல் குற்றங்கள் அவர் மீது அதற்குப் பிறகு வாழ்க்கை முழுக்கப் போடப்பட்டன 1978ம் ஆண்டு தொடங்கி 1991ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை, மகாராஷ்டிரா முழுவதிலும் பல காவல்நிலையங்களில் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. சண்டை போடுதல், அரசுப்பணிக்கு இடையூறு செய்தல், கலவரம் செய்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைத்தல் ஆகியவை அக்குற்றப்பிரிவுகள். அவரை கொல்ல முயற்சித்து பல தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. சால்வேவின் நண்பரும் தெக்லூரைச் சேர்ந்தவருமான சந்திரகாந்த் தனெகார் நினைவுகூர்கையில்: “1980-ல் தெக்லூர் ஒன்றியத்தின் (நந்தெட் மாவட்டம்) மார்க்கெல் கிராமத்தில் அவர் தாக்கப்பட்டார். பென்னால் கிராமத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளரான காலேவின் கொலைச் சம்பவத்தில் போலி இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் டாக்டர் நவலைக் கேள்வி கேட்டதற்காக, கொலை முயற்சி வழக்கு சால்வே மீது பதியப்பட்டது. அவரும் ராமா கார்கேயும் நானும் இரண்டு வருட கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றோம். 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பிறகு உயர்நீதிமன்றம் எங்களை விடுவித்தது,” என்கிறார்.

அதே மார்க்கெல் கிராமத்தில், 70 வயது முதியப் பெண்ணான நாகர்பாய் சோபான் வசார்கர் என்னிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்தார். அதில், ஆத்மராம் சால்வே கைப்பட எழுதியிருந்த பாடல்கள் இருந்தன. அதை அவர் ஒரு மண்பானையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். அங்குதான் அது 40 வருடங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. மார்க்கெல்லில் ஆத்மராம் தாக்கப்பட்டபோது அவரைக் காப்பாற்றி பாதுகாத்து வைத்திருந்தது நாகர்பாய்தான்.ஒருமுறை, சிறுத்தைகள் அழைப்பு விடுத்திருந்த வேலை நிறுத்தத்திலிருந்து ஆத்மராம் சால்வேயை வெளியேற்றக் கோரி மஜல்காவோன் பகுதி வணிகர்கள் போராட்டம் நடத்தினர். அதற்குப் பிறகு பீட் மாவட்டத்துக்குள் அவர் நுழைவது தடை செய்யப்பட்டது. ஆத்மராம் நிகழ்ச்சிகளில் ஹார்மோனியம் வாசித்த தெஜெராவ் பாத்ரே சொல்கையில், “ஆத்மராம் உணர்வுப்பூர்வமாக பேசுவார். அவரே பாடத் தொடங்கி விடுவார். தலித்துகள் அவர் பேசுவதைக் கேட்க விரும்புவார்கள். ஆனால் சாதி இந்துக்களுக்கு மட்டும் பிடிக்காது. அவர்கள் அவர் மீது கற்கள் கூட எரிந்தனர். ஆத்மராம் பாடுகையில், முன்வரிசையில் அமர்ந்திருந்த மக்கள் நாணயங்களை மேடையை நோக்கி எறிவார்கள். அவர் மீது கோபம் கொண்டவர்கள் கற்கள் எறிவார்கள். ஒரு ஷாஹிராக அவர் நேசிக்கவும் பட்டார். வெறுக்கவும் பட்டார். அது அவருக்கு இயல்புதான். ஆனால் கல்லெறியால் ஆத்மராம் பாடுவதை நிறுத்த முடியவில்லை. அவரின் கோபம் மொத்தத்தையும் பாடல்களில் வெளிப்படுத்தி, சுயமரியாதைக்காக மக்களை போராடும்படி கோருவார். அவர்கள் அநீதிக்கு எதிராக போராட வேண்டுமென அவர் விரும்பினார்,” என்கிறார்.

சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதாகச் சொல்லி அவரின் நிகழ்ச்சிகளை காவல்துறை தடை செய்துவிடும். ஆனால் ஆத்மராம் ஓய்ந்ததில்லை. நிகழ்ச்சிகளின் போது ஆத்மராமுடன் இருந்த புலே பிம்பால்காவோனைச் சேர்ந்த ஷாஹிர் பீம்சேன் சால்வே நினைவுகூர்கிறார்: “பீட் மாவட்டத்துக்குள் ஆத்மராம் சால்வே நுழையத் தடை இருந்தது. ஆனால் ஓரிரவு, மாவட்டத்தின் எல்லைக்குள் அவர் நிகழ்ச்சி நடத்த வேண்டியிருந்தது. யாரோ காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் வந்து ஆத்மராமின் நிகழ்ச்சியை நிறுத்தச் சொன்னார்கள். ஆத்மராம் கிராமத்து ஆற்றைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அப்பகுதி மாவட்ட எல்லைக்கு அப்புறம் இடம்பெற்றிருந்தது. அங்கிருந்து ஆத்மராம் பாடத் துவங்கினார். மக்கள் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். இருட்டில் அவர் பாடுவதைக் கேட்டனர். பாடுபவர் மாவட்டத்துக்கு வெளியே இருந்தார். கேட்பவர்கள் மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தனர். காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நகைச்சுவையாக இருந்தது.” இதே போல் பல சூழ்நிலைகளை ஆத்மராம் கையாண்டிருக்கிறார். ஆனால் பாடுவதை அவர் நிறுத்தியதில்லை. பாடுதல்தான் அவரது வாழ்க்கைக்கான உந்து விசை.

மராத்வடா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்துக்கான இருபது வருட போராட்டத்தில் ஆத்மராம் சால்வேயின் ஒளிமிகு கவிதை முக்கியப் பங்காற்றியது

ஷாஹிர் அஷோக் நாராயன் சவுரே ‘நமந்தருக்கான போராட்டத்தை நடத்துங்கள் தோழர்களே’ எனப் பாடுவதைக் காணுங்கள்

பீட் மாவட்டத்தின் மனவி ஹக்கா அபியான் அமைப்பின் நிறுவனத் தலைவரான வழக்குரைஞர் ஏக்னாத் ஆவாத், ஆத்மராம் சால்வே குறித்த ஒரு சம்பவத்தை ஜக் பாதல் கலுனி கவ் (ஜெரி பிண்டோவால் ஸ்ட்ரைக் எ ப்ளோ டு சேஞ்ச் தெ வோர்ல்ட் என்கிற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது) என்ற தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்: “சமூக நல்லிணக்கத்தை குலைத்ததாகவும் பாடல் கொண்டு கோபவெறியை மக்களுக்கு ஊட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஆத்மராம் பீடிலிருந்து வெளியேற்றப்பட்டார். எனவே அவர் நந்தெடில் இருந்தார். சிறுத்தைகள் அமைப்புக்கான மாவட்டக் கிளை ஒன்றை அமைத்து அவரின் ‘ ஜல்சா’ நிகழ்ச்சி ஒருங்கிணைத்தோம். அம்பாஜொகாயின் பராலி வெஸில் பெரியளவில் தலித் மக்கள்தொகை இருந்தது. எனவே ஜல்சா நிகழ்ச்சியை அங்கு நடத்தத் திட்டமிட்டோம். பீடுக்குள் ஆத்மராம் நுழையத் தடை இருந்தது. எனவே காவல்துறை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது. உதவி ஆய்வாளர் கடம் என்பவருக்கு ஆத்மராமைக் கைது செய்யும் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. நாங்கள் சென்று அவரைச் சந்தித்தோம். ‘நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆத்மராமை கைது செய்யக்’ கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டார். முழுத் திறமையை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார் ஆத்மராம். ‘பெயர் மாற்றத்’துக்கான தேவையை அவரின் பாடல்கள் வலியுறுத்தின. உதவி ஆய்வாளர் கடம் அப்பாடல்களை ரசித்தார். ‘மிகத் தீவிரமான ஷாஹிராக’ இருப்பதாக அவரைப் பாராட்டினார். ஆனாலும் அவரைக் கைது செய்யத் தயாராக இருந்தார். ஆத்மராம் அதை உணர்ந்து கொண்டு, வேறொருவரை மேடையில் அவரிருந்த இடத்தில் அமர வைத்துவிட்டு, தப்பியோடி விட்டார். உதவி ஆய்வாளர் கடம், ஆத்மராமைக் கைது செய்ய மேடைக்குள் நுழைந்தார். ஆனால் அங்கு அவர் இல்லை.”

ஜூலை 27, 1978 அன்று, மராத்வடா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட வேண்டுமென்ற தீர்மானம் மகாராஷ்டிர சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதும், மொத்த மராத்வடா பகுதியில் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது. எல்லாப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. தலித்துகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன. சில இடங்களில் குடிசைகளுடன் பெண்களும் குழந்தைகளும் கூட சேர்த்துக் கொளுத்தப்பட்டனர். நந்தெட் மாவட்டத்தின் சுகாவோன் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்தன் மெவாடேவும் தெம்புமி கிராமத்தின் துணைத் தலைவர் பொச்சிரம் காம்ப்ளேவும் கொல்லப்பட்டனர். பர்பானி மாவட்டத்தின் தமாங்காவோன் கிராமத்தைச் சேர்ந்த தலித் காவல்துறை அதிகாரிகள் சம்பாஜி சொமாஜியும் கோவிந்த் புரேவாரும் கூட கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தலித்துகள் காயமடைந்தனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. விளைந்து நின்ற பயிர்களும் விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டன. பல கிராமங்களில் தலித்துகள் எதிர்க்கப்பட்டு உணவும் நீரும் மறுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். சேதமாக்கப்பட்ட பொது மற்றும் தனியார் சொத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாய். டாக்டர் அம்பேத்கரின் சிலைகள் பல இடங்களில் உடைக்கப்பட்டன. சாதியப் போரின் களமாக மராத்வடா மாற்றப்பட்டிருந்தது.

மராத்வடாவில் நடந்த சாதிய வன்முறையின் ஆழத்தையும் அதன் குரூரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஆத்மராம் ஒரு பாடல் எழுதினார்:

குக்கிராமங்களிலும் கிராமங்களிலும் நெருப்பு கொழுந்து விட்டெரிந்தது
நல்கிரில் ஒரு குழந்தை எரிக்கப்பட்டது
உயிர்களைக் காத்துக்கொள்ள காடுகளுக்குள் புகுந்த
தலித்துகள் தாக்கப்பட்டு அவசரவசரமாக ஓடினர்
சாதியவாதிகள் அவர்களை ஒடுக்கி சித்திரவதை செய்தனர்
தலித்துகளுக்கு வேலை இல்லை, அவர்களின் அடுப்புகள் குளிர்ந்துவிட்டன
எழுக மக்களே, எழுக, எழ மாட்டீரா
வீடுகளைப் பற்றியெரியும் நெருப்பை அணையுங்கள், அணைக்க மாட்டீரா
ரத்த ஆறுகள் ஓடினாலும் கவலை வேண்டாம்
இந்த ரத்தத்தில் என்னைக் குளிக்க விடுங்கள்
இந்த இறுதிப்போரில் என்னுடன் சேர்ந்து போராடுங்கள், போராட மாட்டீரா
புரட்சிக்கான விதைகளை விதையுங்கள், விதைக்க மாட்டீரா

தலித் விரோதச் சூழல் ஒருநாளில் உருவாக்கப்படவில்லை. இதற்கான ஆரம்பங்கள் நிஜாம் ஆட்சியில் இருக்கின்றன. நிஜாம்களுக்கு எதிரான சண்டையில் சுவாமி ராமானந்த் தீர்த் முன்னணியில் நின்றார். அவர் ஆர்ய சமாஜை சேர்ந்தவர். பிராமண ஒடுக்குமுறையை எதிர்த்து ஆர்ய சமாஜம் உருவாக்கப்பட்டிருந்தபோதிலும் அதன் தலைமையில் இருந்தவர்கள் அனைவருமே பிராமணர்களாகவே இருந்தனர். ரசாக்கர்களுக்கு எதிரான போராட்டத்தில், இந்தத் தலைமை தலித்துகளிடம் பல பாரபட்சங்களைக் காட்டியது. ‘தலித்துகள் நிஜாமை ஆதரிக்கிறார்கள்’, ‘தலித் வசிப்பிடங்கள் ரசாக்கர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது’ போன்ற வதந்திகள், அம்பேத்கரியவாதிகளுக்கு எதிரான சாதி இந்துக்களை கோபமூட்டியது. அவர்களின் மனங்களில் அந்த வதந்திகள் ஆழமாகப் பதிந்தன. எனவே ரசாக்கர்களை பிடிக்கக் காவல்துறை முயன்றபோது பல அடக்குமுறைகளை தலித்துகள் சந்திக்க வேண்டியிருந்தது. தலித்துகளுக்கு எதிராக அப்போது நடத்தப்பட்ட அடக்குமுறைகள் பற்றிய அறிக்கையை, மராத்வடாவின் பட்டியல் சாதி கூட்டமைப்புத் தலைவராக இருந்த பாவ்சாகெப் மொரே தயாரித்து, டாக்டர் அம்பேத்கருக்கும் இந்திய அரசுக்கும் அனுப்பினார்.

PHOTO • Keshav Waghmare
PHOTO • Keshav Waghmare

பாரதிய தலித் சிறுத்தைகள் அமைப்பின் பெண்கள் கிளையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற, நந்தெடைச் சேர்ந்த கேசரபாய் கோத்முகே. ‘எங்களின் எல்லாப் போராட்டங்களிலும் ஆத்மராம் சால்வே எங்களுடன் இருந்தார். வேகமாக பாடல்கள் எழுதுவார். அவருடன் கோரஸில் நாங்கள் பாடுவோம்’. வலது: கல்வியறிவு பெற்ற தலித் இளைஞர்கள் பலரை நமந்தர் இயக்கம் பாதித்ததாக ஷாஹிர் அஷோக் நயாரன் சவுரே கூறுகிறார். ‘எங்களின் மொத்தத் தலைமுறையும் துயருற்றோம்’

டாக்டர் அம்பேத்கருக்குப் பிறகு நிலவுரிமைக்கான போராட்டம் தாதாசாகெப் கெயிக்வாடின் தலைமையில் ‘உழைப்பவருக்கே நிலமென்றால், நிலமற்றவருக்கு என்ன?’ என்கிற கோஷத்துடன் நடந்தது. மராத்வடாவின் தலித்துகள் இப்போராட்டத்தின் முன்னணியில் நின்றனர். லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறை சென்றனர். லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்தை வாழ்வதற்காக தலித்துகள் பயன்படுத்தினர். பொதுவான மேய்ச்சல் நிலங்களில் தலித்துகள் வசிப்பதை சாதி இந்துக்கள் ரசிக்கவில்லை. அவர்களின் மனங்களில் கோபம் மூண்டது. வசந்த்தாதா பாடிலுக்கும் சரத் பவாருக்கும் இடையே நடந்த மோதலும் கூட இப்பிரச்சினையில் முக்கியப் பங்காற்றியது. ஒவ்வொரு கிராமத்திலும் சாதி இந்துக்களின் கோபம் வெறுப்பாகவும் வன்முறையாகவும் வெளிப்பட்டது. “பல்கலைக்கழகத்துக்கு நீலப்பூச்சு அடிக்கப்படும்”, “பட்டப்படிப்புச் சான்றிதழில் டாக்டர் அம்பேத்கரின் புகைப்படம் இருக்கும்”, “சாதி மறுப்புத் திருமணங்களை டாக்டர் அம்பேத்கர் ஊக்குவிப்பதால், கல்வியறிவு பெற்ற தலித் இளைஞர்கள் நம் மகள்களைக் கொண்டு சென்று விடுவார்கள்” போன்ற வதந்திகள் நமந்தர் போராட்டத்தைக் குறித்துப் பரப்பப்பட்டன.”

“மராத்வடா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றக் கோரிக்கை நவபவுத்த இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இடம்பெற்றது. சுதந்திரமாக தலித்துகள் வாழ்வதற்காக பவுத்த நாடுகளின் உதவிகளைக் கோரும் பிரிவினைவாத இயக்கம் அது. இந்தியக் குடியுரிமையை உதறும் நிலைப்பாட்டையும் அவர்கள் கொண்டிருந்தனர். எனவே நாம் தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை விரைவில் எடுக்க வேண்டும்.” நமந்தர் விரோதி க்ருதி சமதி அமைப்பு இந்தத் தீர்மானத்தை லதூரில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றி தலித்துகளை அவர்களின் பூர்விக நிலத்திலிருந்து விலக்க முயற்சித்தது. நமந்தர் இயக்கம் இந்துக்களுக்கும் பவத்தர்களுக்கும் இடையிலான போராக சித்தரிக்கப்பட்டது. இத்தகைய பாரபட்சங்கள் இயல்பாக நடந்தன. எனவே நமந்தர் போராட்டம் தொடங்கும் வரை மராத்வடா தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகும் தொடர் பதற்றம் அங்கு நீடித்தது. இருபத்தேழு தலித்துகள் நமந்தர் இயக்கத்தின்போது உயிர்த்தியாகம் செய்தனர்.

இருத்தல் மற்றும் அடையாளம் ஆகியவற்றை மட்டும் முக்கியப் பிரச்சினைகளாக அவ்வியக்கம் கொள்ளவில்லை. சமூகக் கலாச்சார உறவுகளுக்குள்ளும் நமந்தர் இயக்கம் ஊடாடி செயல்பட்டது. அதன் பாதிப்புகளை பிறப்பு, திருமணம் மற்றும் மரணம் ஆகிய நிகழ்வுகளுக்கானச் சடங்குகளில் காண முடியும். திருமணங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் மக்கள், ‘டாக்டர் அம்பேத்கருக்கே வெற்றி’ என்றும் ‘மராத்வடா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்றும் கோஷங்கள் எழுப்பத் தொடங்கியிருந்தனர். நமந்தர் இயக்கத்தைக் குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைவதிலும் சமூகக்கலாச்சார சிந்தனையை வடிவமைப்பதிலும் ஷாகிர் ஆத்மராம் சால்வே முக்கியமான பங்கை வகித்திருந்தார்.

PHOTO • Keshav Waghmare

பீடைச் சேர்ந்த மாணவரான சுமித் சால்வே ஆத்மராம் சால்வே பாடல்கள் பலவற்றை பாடுபவர். ‘ஷாஹிரின் பாடல்கள் இளம் தலைமுறையை ஈர்க்கின்றன’

ஆத்மராம் சால்வேவின் வாழ்க்கை, அம்பேத்கராலும் நமந்தர் போராட்டத்தாலும் நிறைந்திருந்தது. “பல்கலைக்கழகத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும்போது என் வீட்டையும் நிலத்தையும் விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு தங்க எழுத்துகளில் பல்கலைக்கழகத்தின் முகப்பில் அம்பேத்கரின் பெயரைப் பொறிப்பேன்,” என அவர் கூறுவதுண்டு. அவரின் குரல், வார்த்தைகள் மற்றும் பாடல் ஆகியவற்றைக் கொண்டு அவர் ஒடுக்குமுறைக்கு எதிரான பகுத்தறிவை ஏந்தினார். நமந்தர் இயக்கத்தின் இலக்கை அடைய, மகாராஷ்டிராவின் கிராமங்கள் எல்லாவற்றுக்கும் இருபது வருடங்களாக வெறுங்கால்களில் அவர் பயணித்தார். அவரை நினைவுகூரும் டாக்டர் அஷோக் கெயிக்வாட் சொல்கையில், “நந்தெட் மாவட்டத்தில் நான் வசிக்கும் கிராமமான போந்த்கவ்ஹனில் இன்று கூட சரியான சாலை இல்லை. எந்த வாகனங்களும் அங்கு வர முடியாது. ஆத்மராம் எங்களின் கிராமத்துக்கு 1979ம் ஆண்டில் வந்தார். ஷாகிரி ஜல்சா கலை நிகழ்த்தினார். அவரின் பாடலால் எங்களின் வாழ்க்கைகளில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தார். அவரின் பாடல்கள் தலித்துகளுக்கு போராட்டங்களில் வலுவூட்டின. அவர் சாதிவெறியர்களை வெளிப்படையாக விமர்சித்தார். அவரின் சக்தி வாய்ந்தக் குரலில் அவர் பாடத் தொடங்கியதும் மக்கள் தேனீக்களைப் போல் அவரை மொய்க்கத் தொடங்கி விடுவார்கள். அவரின் பாடல்களே செவிகளுக்கு உயிரூட்டின. செத்துப் போன மனதை அவரின் வார்த்தைகள் தட்டியெழுப்பி வெறுப்புக்கு எதிராக போராட வைத்தன.”

நந்தெட் மாவட்டத்தின் கின்வாத்தைச் சேர்ந்த தாதாராவ் கயாபக் சால்வேவைப் பற்றி விரும்பத்தக்க பல நினைவுகளைக் கொண்டுள்ளார். “1978ம் ஆண்டில் கோகுல் கோண்டேகோவானைச் சேர்ந்த தலித்துகள் விலக்கி வைக்கப்பட்டனர். அதை எதிர்த்துப் போராட எஸ்.எம்.பிரதான், சுரேஷ் கெயிக்வாட், மனோகர் பகத், வழக்குரைஞர் மிலிந்த் சார்பே மற்றும் நான் ஆகியோர் பேரணி சென்றோம். காவல்துறை ஊரடங்கு உத்தரவு போட்டிருந்தது. ஆத்மராம் சால்வேனின் ஜல்சா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்ததால் நிலவரம் பதற்றமாக இருந்தது. ஷாஹிர் சால்வேவும் சிறுத்தை அமைப்பினரும் கைது செய்யப்பட வேண்டுமென சாதி இந்துக்கள் கேட்டனர். காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்ருங்கர்வேல் மற்றும் துணை கண்காணிப்பாளர் எஸ்.பி.கான் ஆகியோரை அவர்கள் சுற்றி வளைத்து, காவலருக்கான விருந்தினர் மாளிகை வளாகத்துக்கு தீ வைத்தனர். காவல்துறை களத்தில் இறங்கியது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை பிரதிநிதி உத்தம்ராவ் ரதோடின் நண்பரும் தலித் காவல் குழு ஊழியருமான ஜெ.நாகராவ் கொல்லப்பட்டார்.

ஷாகிர் ஆத்மராம் சால்வேவின் பாடல்கள் மனிதநேயம், சமத்துவம், விடுதலை, சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியக் கருத்துகளால் நிரம்பியவை. லடாய் (சண்டை), திங்கி (பொறி), க்ரந்தி (புரட்சி), ஆக் (நெருப்பு), ரேன் (போர்க்களம்), ஷாஸ்த்ரா (ஆயுதம்), டோஃப் (பீரங்கி), யுத்தா (போர்), நவ இதிகாஸ் (புதிய வரலாறு) போன்ற வார்த்தைகள் அவரது பாடல்களில் இடம்பெறும். அந்த வார்த்தைகள் அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை குறித்தன. அவரின் ஒவ்வொரு பாடலும் போருக்கான அறைகூவல்தான்.

மநுவின் மகனைக் கொன்று புதைக்க
பீரங்கி கொண்டு வந்தான், பற்ற வைத்தான்
புரட்சிக் கன்றை நட்டு
நாம் புதிய வரலாறு படைப்போம்
துப்பாக்கியின் ஒரு தோட்டா இன்று ஹோலிப் பண்டிகையை உருவாக்கும்
மநுவின் கோட்டையை தரைமட்டமாக்கும்

தேஜேராவ் பத்ரே ‘எனது தலித் சகோதரர்களே, உங்களுக்குள் இருக்கும் நெருப்பை மூட்டுங்கள்’ எனக் கூறுவதைப் பாருங்கள்

பொழுதுபோக்குக்காகவோ பணத்துக்காகவோ புகழுக்காகவோ பெயருக்காகவோ ஆத்மராம் கலை நிகழ்த்துவதில்லை. கலை நடுநிலையானது என  அவர் நம்பவில்லை. மாற்றத்துக்கான சண்டையின் முக்கியமான ஆயுதமாக அதைக் கருதுகிறார்

ஒரு கலைஞராகவும் ஷாஹிராகவும் ஆத்மராம் நடுநிலையானவர் கிடையாது. பிராந்தியப்பார்வையோ குறுகிய மனப்பான்மையோ கொண்டவரும் கிடையாது. 1977ம் ஆண்டில் பிகாரின் பெல்ச்சியில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர் பெல்ச்சிக்கு சென்று அங்கு ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அதற்காக 10 நாட்கள் அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவர் அந்தப் படுகொலை பற்றி எழுதியிருக்கிறார்:

இந்த இந்து நாட்டில், பெல்ச்சியில்
என்னுடைய சகோதரர்கள் எரிக்கப்பட்டனர், நான் அதைப் பார்த்தேன்
தாய்களும் சகோதரிகளும் குழந்தைகளும் கூட
உயிர் காத்துக் கொள்ள ஓடினர், நான் அதைப் பார்த்தேன்

சித்தாந்தரீதியாக மழுங்கிப்போய், சுயநல அரசியல் செய்து கொண்டிருந்த தலித் தலைவர்களை அதே பாடலில் அவர் தாக்கினார்:

சிலர் காங்கிரஸின் கைப்பாவைகளாகி விட்டனர்
சிலர் அவர்தம் மனதையும் உடலையும் ஜனதா தளத்துக்கு ஒப்புவித்து விட்டனர்
முக்கியமானத் தருணத்தில் போலியான கவாய் போல
எதிரியுடன் அவர்கள் கைகோர்ப்பதை நான் கண்டேன்

1981ம் ஆண்டில், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு குழு, மாணவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, குஜராத்தில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு முதுகலைப் படிப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. எரிப்புச் சம்பவங்கள், சூறையாடல், கத்தித் தாக்குதல், கண்ணீர் புகைக்குண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு எல்லாமும் நேர்ந்தது. பெரும்பாலான தாக்குதல்கள் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டன. அகமதாபாத்தில், தலித்துகளின் தொழிலாளர் காலனிகளில் தீ வைக்கப்பட்டது. சவுராஷ்டிரா மற்றும் வடக்குக் குஜராத்தின் கிராமப்புறப் பகுதிகளில் உயர்சாதி கிராமவாசிகள் தலித் வசிப்பிடங்களைத் தாக்கினர். எண்ணற்ற தலித்துகள் கிராமங்களிலிருந்து தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதைப் பற்றி எழுதுகையில் ஆத்மராம் இப்படிச் சொல்கிறார்:

இன்று, இட ஒதுக்கீடு பெறுவதற்காக
ஏன் பலவீனமானவர்களை நீ துன்புறுத்துகிறாய்
ஜனநாயகத்தை அனுபவிப்பவர்கள் நீங்கள்
ஏன் வெறுப்பூட்டும் வகையில் நடந்து கொள்கிறாய்
இன்று குஜராத் எரிகிறது
நாளை மொத்த நாடும் எரியும்
இது கொழுந்து விட்டுப் பரவக் கூடிய நெருப்பு
நீ ஏன் அதில் எரிகிறாய்

பொழுதுபோக்குக்காகவோ பணத்துக்காகவோ புகழுக்காகவோ பெயருக்காகவோ ஆத்மராம் சால்வே கலை நிகழ்த்தவில்லை. அவரைப் பொறுத்தவரை கலை நடுநிலையாக இருக்க முடியாது.பொழுதுபோக்காகவும் இருக்க முடியாது. சமூகக் கலாச்சார, அரசியல் மாற்றத்துக்கான போராட்டத்தில் பயன்படும் முக்கியமான ஆயுதமே அது என்பவர் அவர். 300க்கும் மேற்பட்டப் பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். அவற்றில் 200 எழுத்து வடிவத்தில் இன்று நம்மிடம் இருக்கிறது.

போகரின் லஷ்மண் ஹைர், மார்கெல்லின் நாகர்பாய் வஜர்கர், முகெடின் தெஜெராவ் பாத்ரே (நந்தெட் மாவட்டத்தைச் சேர்ந்தவை) மற்றும் புலே பிம்பல்காவோனின் (பீட் மாவட்டம்) ஷாகிர் மகேந்திர சால்வே ஆகியோரிடம் அவரின் பாடல்களின் தொகுப்பு இருக்கிறது. பல முடிக்கப்படாத பாடல்கள் மக்களின் நினைவுகளில் இருக்கிறது. யார் இந்தப் பாடல்களை எழுதியது? யாருக்கும் தெரியாது. ஆனால் மக்கள் அவற்றை முணுமுணுக்கின்றனர்.

நாங்கள் அனைவரும் ஜெய்பீம் படையினர்
ராஜா தாலேதான் எங்களின் தலைவர்

அக்காலக்கட்டத்தில் தலித் சிறுத்தை அமைப்பு உறுப்பினர் ஒவ்வொருவரின் உதடுகளிலும் முணுமுணுக்கப்பட்ட இந்த ’தலித் சிறுத்தைத் தலைவரின் பாடல்’ எழுதப்பட்டது ஆத்மராம் சால்வேவால். மராத்வடா மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இப்பாடல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

புரட்சிக்கான இப்பொறிகளை விதைத்து
இந்த நெருப்பை எரிய வைப்போம்
எத்தனைக் காலத்துக்குதான் புறக்கணிப்பை சகித்துக் கொள்வது
இதயத்துக்குள் நெருப்பு மூளுகிறது
குழந்தை தாயைக்
கருப்பையில் உதைக்கிறது
எதிர்காலத்தை அவதானிக்கிறது
பீம்பாவின் வீரமிகு சிப்பாயே
விழிப்படைக

PHOTO • Labani Jangi

ஆத்மராமின் நிகழ்ச்சி நடக்கையில் எல்லாம் அக்கம் பக்கம் மட்டுமின்று தூரத்து இடங்களிலிருந்தும் கூட தலித்துகள் வந்து கலந்து கொள்வதுண்டு

மேற்குறிப்பிட்ட பிரபலமான பாடலை எழுதியவர் ஆத்மராம். மராத்வடா நமந்தருக்கான புகழ்பாடலையும் அவர் எழுதியிருக்கிறார். அவரது தொகுப்புப் பிரதியின் முகப்பில் அச்செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அப்பாடலின் எழுத்துப் பிரதி நம்மிடம் இல்லை. புனேவின் இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் ரோகிதாஸ் கெயிக்வாட் மற்றும் அம்பேத்கரிய இயக்கத்தின் மூத்தத் தலைவரான வசந்த் சால்வே ஆகியோர் அதன் சில வரிகளை எனக்காகப் பாடிக் காட்டினர். இந்தப்பூர் தாலுகாவின் பாவ்தா கிராமத்தில் தலித்துகளுக்கு எதிர்ப்பு (உயர்சாதி கிராமவாசிகளால்) நேர்ந்தபோது, ஆத்மராம் சால்வே புனேவுக்கு வந்து பல குப்பங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினார். கூட்டுணர்வைச் சுற்றிதான் அவருடைய பாடல்கள் அமைந்தன. ஆத்மராம் நிகழ்ச்சி நடக்கும்போதெல்லாம் அருகாமை கிராமங்களிலிருந்தும் மக்கள் ரொட்டிகளை கட்டிக் கொண்டு பல கிலோமீட்டர்கள் நடந்து  வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். சிறுத்தை அமைப்பின் செயற்பாட்டாளர்கள் அவர் பாடி முடித்த பிறகே தங்களின் உரைகளைத் தொடங்குவார்கள். சிறுத்தைகள் மற்றும் நமந்தர் போராட்டத்துக்கானக் கூட்டத்தை ஈர்ப்பவராக அவர் இருந்தார். தலித் சிறுத்தைகள் காலத்தில் நம்தியோ தாசல் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கவிஞரக இருந்தது போல், சிறுத்தைகளின் காலத்தையப் பிரதிநிதிப் பாடகராக ஆத்மராம் சால்வே இருந்தார். புரட்சிகரமான கவிதைகளை நம்தியோ இயற்றியதுபோல், அம்பேத்கருக்குப் பிந்தைய கால இயக்கத்தில் பாடல்களைப் பாடினார் ஆத்மராம். சிறுத்தைகளின் காலத்தை நம்தியோவின் கவிதைகள் விளக்குவதைப் போல, ஆத்மராமின் பாடல்கள் அக்காலக்கட்டத்தை விவரிக்கின்றன. நம்தியோவின் கவிதைகள் சாதியையும் வர்க்கத்தையும் ஒருங்கே விமர்சிப்பது போல், ஆத்மராமின் பாடல்களும் சாதி, வர்க்கம் மற்றும் பாலின ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒருங்கே விமர்சிக்கின்றன. சிறுத்தைகள் அமைப்பு அவர் மீது தாக்கம் செலுத்தியது. அவர் சிறுத்தைகள் அமைப்பின் மீதும் மக்களின் மீதும் தாக்கம் செலுத்தினார். இந்தத் தாக்கத்தில்தான் உயர்கல்வி, வேலை, வீடு என எல்லாவற்றையும் அவர் உதறி வந்தார். தன்னலம் கருதாமல் தைரியமாக அவர் தேர்ந்தெடுத்தப் பாதையில் நடந்தார்.

நம்தியோ தாசல் தலித் சிறுத்தை காலத்தின் பிரதிநிதிக் கவிஞராக இருந்ததைப் போல ஆத்மராம் சால்வே சிறுத்தைக் காலத்தின் பிரதிநிதி பாடகராக இருந்தார்

சுமித் சால்வே ‘வயதான போர்வையை எவ்வளவு நேரம் சுற்றிக் கொண்டிருப்பீர்கள்?’ எனப் பாடுவதைப் பாருங்கள்

வசாயின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விவேக் பண்டிட் இருபதாண்டுகள் ஆத்மராம் சால்வேவின் நண்பராக இருந்தவர். “அச்சம் மற்றும் தன்னலம் - இந்த இரண்டு வார்த்தைகளும் ஆத்மராமின் அகராதியிலேயே கிடையாது,” என்கிறார் அவர். “குரல் மற்றும் வார்த்தைகள் கையாள்வதில் சால்வே சிறப்பானத் திறன் பெற்றிருந்தார். அவருக்குத் தெரிந்த விஷயங்களிலும் தெளிவு கொண்டிருந்தார். மராத்தி மொழியைத் தாண்டி அவர் இந்தி, உருது மற்றும் ஆங்கில மொழிகளையும் பேசினார். இந்தியிலும் உருதுவிலும் சில பாடல்களை அவர் இயற்றியிருக்கிறார். சில கவ்வாலி பாடல்களைக் கூட அவர் இந்தியில் எழுதிப் பாடியிருக்கிறார். ஆனால் எப்போதும் அவரது கலையை அவர் வணிகமாக்கியதில்லை. எப்போதும் அதை அவர் சந்தைப்படுத்தியதில்லை. அவரது கலையையும் வார்த்தைகளையும் சக்தி வாய்ந்த குரலையும் ஆயுதங்களாகக் கொண்டு, சாதி-வர்க்க-பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரிடும் ஒரு போர் வீரனாக அவர் இயங்கினார். மரணம் வரை அவர் தொடர்ந்து தனியாக இயங்கிக் கொண்டிருந்தார்.

குடும்பம், இயக்கம் மற்றும் தொழில் ஆகியவைதான் ஒரு செயற்பாட்டாளருக்கு தேவையான அகரீதியான ஆதரவுகள். அவற்றை ஒருங்கிணைக்கும்போது ஒரு மக்கள் இயக்கம், செயற்பாட்டாளர்களும் மக்கள் கலைஞர்களும் ஜீவித்து நீடிக்கக் கூடிய மாற்றுச் சூழலை உருவாக்க வேண்டும். அவர்கள் தனியாகி தனிமையில் உழலக் கூடாது.

மனஉளைச்சலுக்குள் கலைஞர்கள் வீழ்வதைத் தடுக்கவோ மன அழுத்தமடைகையில் அவர்களுக்கு உதவவோ ஆக்கப்பூர்வமான அமைப்புரீதியான நடவடிக்கைகள் எதுவும் அம்பேத்கரிய இயக்கங்களில் உருவாக்கப்படவில்லை. அதன் விளைவாக கலைஞர்களுக்கு என்ன நேருமோ அதுவே ஆத்மராம் சால்வேவுக்கும் நேர்ந்தது.

வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் மூன்று நிலைகளில் ஏமாற்றமடைந்தார். அவரின் குடும்பம் இயக்கத்தால் பிரிந்து போனது. அவரின் மதுப்பழக்கம் மோசமானது. இறுதிக்கட்டத்தில் அவர் மனத்தடுமாற்றம் கொண்டு பல கற்பனைகளுக்குள் தொலையத் தொடங்கிவிட்டார். இன்ன இடமெனப் பாராமல் ஒரு கலை நிகழ்த்துபவர் போல் நின்று அவர் எங்கும் பாடத் துவங்கி விடுவார். நமந்தர் போராட்டத்தில் பங்குபெற்ற இந்த ஷாஹிர் 1991ம் ஆண்டு மதுப்பழக்கத்தின் விளைவாக, பல்கலைக்கழக முகப்பில் தங்க எழுத்துகளால் பெயரைப் பொறிக்காமலேயே இறந்து போனார்.

இக்கட்டுரை முதலில் மராத்தி மொழியில் எழுதப்பட்டது.

புகழ் பாடல்கள் மொழிபெயர்ப்பு: நமிதா வைக்கர்

இக்கட்டுரை உருவாக்கத்தில் உதவிய போக்கரின் லஷ்மன் ஹைர், நந்தெடின் ராகுல் பிரதான் மற்றும் புனேவின் தயானந்த் கனக்தாண்டே ஆகியோருக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்

இந்தியக் கலைகளின் அறக்கட்டளை, அதன் பெட்டகம் மற்றும் அருங்காட்சியகத் திட்டத்துக்காக PARI-யுடன் இணைந்து செயல்படுத்திய ’இன்ஃப்ளுயன்சியல் ஷாஹிர்ஸ், நரேட்டிவ்ஸ் ஃப்ரம் மராத்வடா’ என்கிற திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பல்லூடகக் கட்டுரை ஆகும். புது தில்லியின் கோத்தே இன்ஸ்டிட்யூட்/மேக்ஸ் முல்லர் பவன் ஆகியவற்றின் ஆதரவாலும் இக்கட்டுரை சாத்தியமாகி இருக்கிறது.

தமிழில் : ராஜசங்கீதன்

Keshav Waghmare
keshavwaghmare14@gmail.com

Keshav Waghmare is a writer and researcher based in Pune, Maharashtra. He is a founder member of the Dalit Adivasi Adhikar Andolan (DAAA), formed in 2012, and has been documenting the Marathwada communities for several years.

Other stories by Keshav Waghmare
Illustrations : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan