ஷாந்தி தேவி கோவிட் தொற்றால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் இறப்புச் சான்றிதழோ வேறு எதுவுமோ இல்லை. ஆனால் அவரது மரணம் நேர்ந்த சூழல் வேறெந்த முடிவுக்கும் இட்டுச் செல்லவும் இல்லை.

40 வயதுகளின் மத்தியில் இருந்த ஷாந்தி தேவி ஏப்ரல் 2021-ல் கோவிட் தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுக்க அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் நோய்வாய்ப்பட்டார். நோய்க்கான அறிகுறிகள் வரிசையாக தென்பட்டன. முதலில் இருமல், பிறகு சளி, அடுத்த நாள் காய்ச்சல். “கிராமத்தில் இருந்த அனைவருமே அச்சமயத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தனர்,” என்கிறார் அவரின் 65 வயது மாமியாரான கலாவதி தேவி. “அவரை முதலில் நாங்கள் உள்ளூர் பயிற்சி மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம்.”

உள்ளூர் பயிற்சி மருத்துவர்கள் உத்தரப்பிரதேசத்தின் எல்லா கிராமங்களிலும் காணக் கிடைப்பார்கள். சுகாதார சேவைகள் அளிப்பவர்கள். பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மோசமாக இருப்பதாலும் எளிதாக அணுக முடிவதாலும் தொற்றுக் காலத்தில் கிராமப்பகுதிகளில் இருந்த பெரும்பாலானோர் இவர்களின் உதவிகளைத்தான் நாடினர். “அனைவருக்கும் பயம் இருந்ததால், யாருமே மருத்துவமனைக்குச் செல்லவில்லை,” என்கிறார் தல்லிப்பூர் கிராமத்தில் வசிக்கும் கலாவதி. “நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என அஞ்சினோம். அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. படுக்கைக் கிடைக்கவில்லை. எனவே உள்ளூர் பயற்சி மருத்துவரிடம்தான் நாங்கள் செல்ல முடிந்தது.”

ஆனால் இந்த மருத்துவர்கள் பயிற்சியோ தகுதியோ பெறாதவர்கள். தீவிர நோய் கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதவர்கள்.

பயிற்சி மருத்துவரிடம் சென்று வந்த மூன்று நாட்களில் ஷாந்திக்கு மூச்சுத் திணறல் தொடங்கியது. இச்சமயத்தில்தான் கலாவதி, ஷாந்தியின் கணவர் முனிர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் பீதிக்குள்ளாகினர். கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுச் சென்றனர். “மருத்துவமனை ஊழியர்கள் அவரின் நிலையைப் பார்த்து கைவிரித்து விட்டனர். நாங்கள் வீட்டுக்கு வந்து பேயோட்டும் சடங்குகளைச் செய்யத் தொடங்கினோம்,” என்கிறார் கலாவதி.

சடங்கு வேலை செய்யவில்லை. அன்றிரவே ஷாந்தி இறந்தார்.

Kalavati with her great-grandchildren at home in Dallipur. Her daughter-in-law Shanti died of Covid-like symptoms in April 2021
PHOTO • Parth M.N.

தல்லிப்பூர் வீட்டில் பேரக் குழந்தைகளுடன் கலாவதி. அவரின் மருமகளான ஷாந்தி கோவிட் தொற்று போன்ற அறிகுறிகள் கொண்டு ஏப்ரல் 2021-ல் இறந்து போனார்

அக்டோபர் 2021-ல் உத்தரப்பிரதேச அரசு, கோவிட் தொற்றில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்தது. அத்தகைய குடும்பங்களுக்கு பொருளாதார உதவி வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டிய நான்கு மாதங்களுக்கு பிறகு அறிவிப்பு வெளியானது. 50,000 ரூபாய் இழப்பீடு பெறவென மாநில அரசு சில விதிமுறைகளையும் பிரசுரித்தது. கலாவதி தேவி விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பிக்கும் திட்டத்திலும் அவர் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டுமெனில் ஷாந்தியின் குடும்பம், அவரது மரணத்துக்குக் காரணம் கோவிட் தொற்று எனக் குறிப்பிடும் இறப்புச் சான்றிதழை அளிக்க வேண்டும். தொற்று உறுதியான 30 நாட்களில் நபர் இறந்திருக்க வேண்டுமென்றும் விதிமுறை இருக்கிறது. பிறகு அதை மாநில அரசு தளர்த்தி , மருத்துவமனையில் 30 நாட்கள் அனுமதிக்கப்பட்டு அதற்குப் பிறகு இறந்தாலும் கணக்கில் கொள்ளப்படும் என்றது. இறப்புச் சான்றிதழில் கோவிட் காரணம் இடம்பெறவில்லை எனில், தொற்றுப் பரிசோதனை அல்லது பரிசோதனை அறிக்கைகள் இருந்தால் கூட போதும். ஆனால் ஷாந்தியின் குடும்பத்துக்கு இது எதுவும் உதவவில்லை.

இறப்புச் சான்றிதழ் இல்லாமல், தொற்று உறுதியான பரிசோதனை முடிவு இல்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சான்று இல்லாமல் ஷாந்தியின் மரணம், விதிமுறைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.

ஏப்ரல் மாதம் தல்லிப்பூர் ஆற்றின் படித்துறையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. “உடலை எரிப்பதற்கு போதுமான விறகுகள் இல்லை,” என்கிறார் ஷாந்தியின் மாமனாரான 70 வயடு லுல்லூர். “உடல்களை எரிக்க நீண்ட வரிசை காத்திருந்தது. எங்களின் வேளைக்காக காத்திருந்தோம். பிறகு திரும்பினோம்.”

Lullur, Shanti's father-in-law, pumping water at the hand pump outside their home
PHOTO • Parth M.N.

ஷாந்தியின் மாமனார் லுல்லூர், அடிகுழாயில் நீர் பிடித்துக் கொண்டிருக்கிறார்

மார்ச் 2020-ல் தொற்று தொடங்கியதிலிருந்து நேர்ந்த மரண எண்ணிக்கையில் இரண்டாம் அலையின்போதுதான் (ஏப்ரலிலிருந்து ஜூலை 2021 வரை) அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நேர்ந்தன. ஒரு கணக்கெடுப்பின்படி, ஜூன் 2020 தொடங்கி ஜூலை 2021 வரை நேர்ந்த 32 லட்ச கோவிட் மரணங்களில் 27 லட்ச மரணங்கள் ஏப்ரல்-ஜூலை 2021-ல் நேர்ந்திருக்கிறது. Science (ஜனவரி 2022) இதழில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு , இந்தியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவால் நடத்தப்பட்ட ஆய்வு ஆகும். ஆய்வுகளின்படி செப்டம்பர் 2021-ல் இந்தியாவின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டதைக் காட்டிலும் 6-7 மடங்குகள் அதிகம்.

ஆய்வாளர்கள் ”இந்தியாவின் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை குறைத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்திய அரசு அதை மறுத்திருக்கிறது .

பிப்ரவரி 7, 2022-ல் கூட கோவிட் மரணங்களைப் பற்றிய இந்தியாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 504,062 வாகதான் இருக்கிறது. நாட்டின் எல்லா மாநிலங்களிலும் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அறிவிப்பது நடந்திருந்தாலும், உத்தரப்பிரதேசத்தில் அது குறிப்பிடத்தகுந்த அளவில் நடந்திருக்கிறது.

Article 14 இணையதளத்தில் வெளியான அறிக்கையின்படி , உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் 25 மாவட்டங்களின் மொத்த கோவிட் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 43 மடங்கு அதிகமாம். ஜூலை 1, 2020லிருந்து மார்ச் 31, 2021 வரை பதிவான மரணங்களின் அடிப்படையில்தான் அறிக்கை உருவாக்கப்பட்டது. வழக்கத்துக்கு அதிகமாய் நேர்ந்த மரணங்கள் அனைத்தையும் கோவிட் மரணங்கள் என வரையறுக்க முடியாதென்றாலும் சராசரி மரணங்களைக் காட்டிலும் பெருமளவுக்கு அதிகமான மரணங்கள் கோவிட் தொடர்பாக நேர்ந்திருப்பதால், மார்ச் 2021 வரை உத்தரப்பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ கோவிட் மரண எண்ணிக்கையான 4.537-ஐ கேள்விக்குட்படுத்த முடியாமல் இருக்க முடியாது என்கிறது அறிக்கை. மே மாதத்தில் வெளியான புதை குழிகளின் படங்களும் கங்கையில் மிதக்கும் உடல்கள் பற்றிய அறிக்கைகளும் பல மரணங்கள் கணக்கிலெடுக்கப்படாததையே சுட்டுகின்றன.

எனினும் இழப்பீட்டுக்கான விதிமுறைகளை மாநில அரசு அறிவித்தபோது, உத்தரப்பிரதேச கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 22,899 என அது குறிப்பிட்டது. இழப்பீடு அவசியமாகத் தேவைப்படும் ஷாந்தியின் குடும்பங்கள் போன்றவை தவறவிடப்பட்டன.

Shailesh Chaube (left) and his mother Asha. His father Shivpratap died of Covid-19 last April, and the cause of death was determined from his CT scans
PHOTO • Parth M.N.
Shailesh Chaube (left) and his mother Asha. His father Shivpratap died of Covid-19 last April, and the cause of death was determined from his CT scans
PHOTO • Parth M.N.

ஷைலேஷ் சவுபே (இடது) மற்றும் அவரின் தாய் ஆஷா. அவரின் தந்தை ஷிவ்பிரதாப் கடந்த ஏப்ரலில் கோவிட்டால் இறந்துவிட்டார். இறப்புக்கான காரணம் ஸ்கேன் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டது

உத்தரப்பிரதேச தகவல்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான நவ்நீத் சேகல் சொல்கையில், ஆவணங்களின்றி எந்த குடும்பத்துக்கும் இழப்பீடு கிடைக்காது என்கிறார். “இயலபாகவும் மரணங்கள் நேர்வதுண்டு,” என்கிறார் அவர். எனவே கோவிட்டா இல்லையா எனத் தெரியாத குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்காது என்கிறார் அவர். மேலும் கிராமப்புறங்களிலும் பரிசோதனைகள் நடப்பதாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் உண்மையில் பரிசோதனை நடக்கவில்லை. இரண்டாம் அலையின்போது பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதமாகிறது என்கிற புகார்கள் உத்தரப்பிரதேச கிராமப்புறங்களில் எழுந்தன. மே 2021-ல் பரிசோதனைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்திருந்தது. இரண்டாம் அலையை மோசமாகக் கையாண்டததற்கும் மாநில அரசை அது கண்டித்தது. பரிசோதனை உபகரணங்களுக்கான பற்றாக்குறையே குறைவானப் பரிசோதனைக்குக் காரணமென சொல்லப்பட்டாலும், நிர்வாகம் பரிசோதனை நிலையங்களிடம் பரிசோதனைகளை குறைக்கும்படி அறிவுறுத்திய தகவலும் வெளியானது.

நகரப் பகுதிகளில் கூட பரிசோதனை வசதிகளை மக்கள் எட்ட முடியவில்லை. வாரணாசி நகரத்தைச் சேர்ந்தவரான 63 வயது ஷிவ்பிரதாப் சவுபேவுக்கு ஏப்ரல் 15, 2021-ல் தொற்று உறுதியானது. அவருக்கு அறிகுறி தென்பட்டிருந்தது. 11 நாட்களுக்குப் பிறகு பதிலளித்த பரிசோதனை நிலையம் மீண்டும் அவர் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றது.

ஒரு பிரச்சினை இருந்தது. ஷிவ்பிரதாப் இறந்துவிட்டார். ஏப்ரல் 19ம் தேதியே அவர் இறந்து விட்டார்.

உடல்நிலை குன்றியதும் ஷிவ்பிரதாப் முதலில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். “அங்கு படுக்கை எதுவும் கிடைக்கவில்லை,” என்கிறார் 32 வயது மகனான ஷைலேஷ் சவுபே. “படுக்கை கிடைக்க ஒன்பது மணி நேரம் நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலை. ஆனால் உடனடியாக எங்களுக்கு ஒரு ஆக்சிஜன் படுக்கை தேவைப்பட்டது.”

சில செல்பேசி அழைப்புகளுக்குப் பிறகு, 24 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாபாத்பூர் கிராமத்துத் தனியார் மருத்துவமனையில் ஷைலேஷ் ஒரு படுக்கைக் கண்டுபிடித்தார். “ஆனால் அங்கு இரண்டு நாட்களில் ஷிவ்பிரதாப் இறந்து விடார்,” என்கிறார் ஷைலேஷ்.

மருத்துவமனைச் சான்றிதழில் ஷிவ்பிரதாப்பின் சிடி ஸ்கேன் அறிக்கைகளின் அடிப்படையில் கோவிட்டே மரணத்துக்கானக் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது அக்குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்க உதவும். ஷைலேஷ் விண்ணப்பத்தை டிசம்பர் 2021-ன் கடைசி வாரத்தில் சமர்ப்பித்தார். தந்தையின் சிகிச்சைக்காக வாங்கியப் கடனை அடைக்க அப்பணம் அவருக்கு உதவும். “கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் ஊசியை  நாங்கள் 25,000 ரூபாய்க்கு வாங்க வேண்டியிருந்தது,” என்கிறார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரியும் ஷைலேஷ். “மேலும் பரிசோதனைகளுக்கும் படுக்கைக்கும் மருந்துகளுக்கும் கிட்டத்தட்ட 70,000 ரூபாய் ஆகிவிட்டது. நாங்கள் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 50,000 ரூபாய் என்பது எங்களுக்கு கணிசமான தொகை.”

Left: Lullur says his son gets  work only once a week these days.
PHOTO • Parth M.N.
Right: It would cost them to get Shanti's death certificate, explains Kalavati
PHOTO • Parth M.N.

இடது: மகனுக்கு வாரம் ஒருநாள்தான் வேலை கிடைப்பதாக சொல்கிறார் லுல்லூர். வலது: ஷாந்திக்கான இறப்புச் சான்றிதழைப் பெற பணம் தேவைப்படும் என்கிறார் கலாவதி

முசாகர் சமூகத்தைச் சேர்ந்த ஷாந்தியின் குடும்பத்துக்கு அந்தத் தொகை ரொம்பவே அதிகம். ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் இருக்கும் முசாகர்கள் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியினர். சொந்தமாக நிலம் கிடையாது. வருமானத்துக்கு தினக்கூலி உழைப்புதான் வழி.

ஷாந்தியின் கணவரான 50 வயது முனிர் தினக்கூலியாக கட்டுமான தளங்களில் பணிபுரிந்து நாளொன்றுக்கு 300 ரூபாய் ஈட்டுகிறார். அவர் 50,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டுமெனில், 166 நாட்களுக்கு (அல்லது 23 வாரங்களுக்கு) போராடி உழைக்க வேண்டும். தொற்றுக்காலத்தில் வாரத்துக்கொரு முறைதான் முனிருக்கு வேலை கிடைத்ததாக சொல்கிறார் அவரின் தந்தை லுல்லூர். அந்தக் கணக்கில் பார்த்தால் இந்தத் தொகையை ஈட்ட மூன்று வருடங்களுக்கு மேலாகும்.

முனிர் போன்ற தினக்கூலிகளுக்கு நூறு நாள் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் போதுமான வேலை கிடைப்பதில்லை. பிப்ரவரி 9 வரை, உத்தரப்பிரதேசத்தின் 87.5 லட்சக் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் (2021-22) வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். 75.4 லட்ச குடும்பங்களுக்கு இது வரை வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வெறும் ஐந்து சதவிகித, 384,153 குடும்பங்கள்தான் 100 நாட்கள் முடித்திருக்கின்றன.

வேலை தொடர்ந்து கிடைப்பதில்லை என்கிறார் வாரணாசியின் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த 42 வயது செயற்பாட்டாளர் மங்க்ளா ராஜ்பர். “வேலையில் தொடர்ச்சி கிடையாது. திடீர் வேலைகளாக வரும். அதையும் பகுதி பகுதியாக செய்யத் தொழிலாளர்கள் பணிக்கப்படுவர்.” அத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான வேலைகள் கொடுக்கும் திட்டமிடல் எதுவும் அரசிடம் இல்லை என்கிறார் ராஜ்பர்.

ஒவ்வொரு நாள் காலையும், ஷாந்தி மற்றும் முனிரின் நான்கு மகன்களும் வேலை தேடிக் கிளம்பிச் செல்கிறார்கள். இருபது வயதுகளில் இருப்பவர்கள் அவர்கள். பெரும்பாலும் வேலை கிடைக்காமல்தான அவர்கள் திரும்புவதாகச் சொல்கிறார் கலாவதி. “யாருக்கும் வேலை கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். கோவிட் தொற்று தொடங்கிய பிறகு, பல முறை குடும்பமாக அவர்கள் பட்டினி கிடக்க நேர்ந்திருக்கிறது. “அரசு தந்த இலவச உணவுப் பொருட்களை வைத்து நாங்கள் பிழைத்தோம்,” என்கிறார் கலாவதி. “ஆனால் அதுவும் ஒரு மாதத்துக்கு மேல் தாண்டவில்லை.”

”ஷாந்தியின் இறப்புச் சான்றிதழுக்கு 200 அல்லது 300 ரூபாய் ஆகியிருக்கும். பல பேரைச் சந்தித்து எங்கள் நிலையை விளக்க வேண்டியிருக்கும். பிற மக்களும் எங்களுடன் ஒழுங்காகப் பேச மாட்டார்கள்,” என்கிறார் இருக்கும் தடைகளை விவரித்துக் கலாவதி. “ஆனால் இழப்பீடை நாங்கள் பயன்படுத்தியிருக்கலாம்”

தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீனப் பத்திரிகை மானியம் மூலம் பொதுச் சுகாதாரம் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய செய்திகளை பார்த் எம்.என்.  சேகரிக்கிறார். தாகூர் குடும்ப அறக்கட்டளை இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan