தனுஷ்கோடி ஒரு வெறுமையான நகரம். வெள்ளை நிற கடல் மண்ணால் சூழப்பட்ட,தொலை தூரமாக ஒதுங்கியிருக்கிற பகுதி. இந்தியாவின் தென்கோடி முனையான அதன் கரையோரங்களாக வங்காள விரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின்போது அது 1914இல் சிறு துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. அதன் தொட்ர்ச்சியாக புனித யாத்ரிகர்கள், பயணிகள், மீனவத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கான நகரமாக மாறியது.
அரை நூற்றாண்டுக்குப் பிறகு 1964இல், ஒரு மாபெரும் சூறாவளி டிசம்பர் 22 அன்று நடுஇரவில் தாக்கியது. டிசம்பர் 25 காலை வரை அது நீடித்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள துறைமுக நகரமான தனுஷ்கோடியை நான்கு நாட்கள் அடித்த அந்த சூறாவளி தரைமட்டமாக ஆக்கியது. சூறாவளியால் எழுந்த மாபெரும் அலைகள் ஒட்டு மொத்த நகரத்தையும் சூறையாடின. 1800க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்கும் அந்த அலைகள் காரணம் ஆகின. முப்பது கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள, பாம்பன் நகரிலிருந்து 100 பேரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஒரு ரயிலும் அப்படியே கடலில் மூழ்கிவிட்டது.
அந்த சூறாவளிக்குப் பிறகு அந்த இடம் பேய் நகரம், வாழ்வதற்கு தகுதி இல்லாத இடம் என்று பலவகையாக அழைக்கப்பட்டது. முழுமையாக அந்த இடம் கைவிடப்பட்டது. ஆனாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் ஒருவரின் குத்துமதிப்பான எண்ணிக்கையின்படி, 400 மீனவத் தொழிலாளர் குடும்பங்கள் தனுஷ்கோடியில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன. இந்த வெறுமையான பகுதியை தங்களின் வீடாக நினைத்து அவை வாழ்ந்தன. அவற்றில் சில அந்த சூறைக்காற்று ஏற்படுத்திய அழிவுக்குத் தப்பி வாழ்பவை. அங்கே மின்சாரம் கிடையாது. கழிப்பறைகள் கிடையாது. குடி தண்ணீர்கூட கிடையாது.

ஒட்டுமொத்த ரயிலும் கடலுக்குள்ளே போய்விட்டது. ரயில்வே தண்டவாளத்தின் மிச்சங்கள் இன்னமும் துருப்பிடித்துப்போய் கிடக்கின்றன. அவையும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுத்துக்கொண்டிருக்கின்றன.

தனுஷ்கோடி ராமேஸ்வரத்திலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் புனிதப் பயணம் வருவோரும் வேன்களில் இங்கே வருகின்றனர். அரசாங்கம் நல்ல சாலைகளையும் மற்ற வசதிகளையும் ஏற்படுத்தி மேலும் அதிகமானோரை வரவழைக்கலாம் என்று எதிர்பார்க்கிறது.

கழிப்பறைகளும் குளியறைகளும் இங்கே ஓலைக்கீற்றுகளால் அமைக்கப்பட்டவைதான். மக்கள் கடல் மணலிலும் புதர்களுக்குப் பின்புறமும் மலம் கழிக்கிறார்கள். பூச்சிகள், ஊர்வன, கடல் அலைகள் கொண்டுவந்து போட்ட கூர்மைகயான பவளப் பாறைத் துண்டுகள் பற்றிய பயம் இங்கிருப்பவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. கலையரசியும் மற்ற பெண்களும் குடிநீருக்காகவும் மற்ற உபயோகங்களுக்கான தண்ணீருக்காகவும் மூன்று அல்லது நான்கடி ஆழ கிணறுகளை வெறும் கைகளால் ஒவ்வொரு வாரமும் தோண்டுகின்றனர். கொஞ்சம் ஆழம் தோண்டியதுமே கடலின் உப்பு நீர் வந்துவிடுகிறது என்கிறார் கலையரசி.

சரியான சுகாதார வசதிகள் இல்லை என்பதால் இந்தப் பகுதியின் பெண்கள் சாலையோரம் இருக்கிற திறந்தவெளியிலேயே குளித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். “எங்களை கைவிட்டுவிட்டார்கள். யாரும் இங்கே வருவதும் இல்லை. எப்படி இங்கே வாழ்கிறீர்கள் என்று கேட்பதும் இல்லை” என்கிறார்கள் அவர்கள்.

சூறாவளியில் தனது கணவரை இழந்தவர் 78 வயதான சய்யாத். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் இங்கேயே வாழ்கிறார். ஒன்றுமே இல்லை என்ற நிலையிலிருநது அவர் அவரது வீட்டை அவரே கட்டிக்கொண்டார். ஒரு டீக்கடையையும் கட்டினார். உடைந்து போன ரயில்வே தண்டவாளங்கள், நொறுங்கிப்போன தேவாலயம் உள்ளிட்ட அழிவுகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு அவர் டீ விற்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பாக, அவருக்கும் அவரைப்போன்ற மற்றவர்களுக்கும் அரசாங்கம் நோட்டீஸ் அளித்திருக்கிறது. அவர்களின் வீடுகளிலிருந்து அவர்கள் எந்தவொரு மாற்று ஏற்பாடுகளும் இல்லாமல் வெளியேற வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டிருக்கிறது.அரசாங்கம் சுற்றுலாவுக்காக தனுஷ்கோடியை முன்னேற்றப் போவதாகச் சொல்கிறது.

34 வயதான ஏ.ஜெபியம்மாள் உயிர் வாழ்வதற்காக கருவாடு விற்கிறார்.அவரது கணவரும் ஒரு மீனவர்தான். அவருக்கும் வீட்டை விட்டு காலி செய்யுமாறு நோட்டீஸ் வந்திருக்கிறது. இங்கே இருக்கிற மீனவ சமூகம் பாரம்பரியமான வழிகளில் மட்டுமே மீன் பிடிக்கத் தெரிந்திருக்கிறது. காற்று, நட்சத்திரங்கள், கடல் அலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான புரிதல்களின் அடிப்படையில்தான் அவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலை வைத்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெபியம்மாளுக்கும் மற்றவர்களுக்கும் அவர்களின் வாழுமிடத்திலிருந்து போவதும் புதிய இடங்களில் மீன்பிடித்தலின் புதிய முறைகளை கற்றுக்கொள்வதும் சிரமம்.

50 வயதான எம். முனியசாமி இந்த வெறுமையான இடத்தில் 35 வருடங்களாக வாழ்கிறார். சூரிய சக்தி அடிப்படையிலான மின்சாரத்தை அவர் கடந்த வருடம்தான் வாங்கியிருக்கிறார். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அது கட்டணமில்லாமல் கிடைத்திருக்கிறது. ஆனால், உள்ளூர் அமைப்பு ஒன்று அதற்காக அவரிடம் இரண்டாயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறது. இடைத்தரகர் ஒருவர் முனியசாமியையும் மற்றவர்களையும் ஏமாற்றியிருக்கிறார். பெரும்பாலான மற்றவர்கள் சூரிய சக்தி விளக்குகளுக்காகக் காத்திருக்கின்றனர். அதுவரையிலும் அவர்கள் எண்ணை விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். ராமேஸ்வரம் போய் லிட்டர் அறுபது ரூபாய் என்ற விலைக்கு மண்ணெண்ணை வாங்கிவருகின்றனர்..

இந்தக் கடற்கரையிலிருந்து வெறும் 33 கிலோ மீட்டர்கள் தொலைவில் (18 கடல்மைல்கள்) இலங்கையின் கடல் எல்லை இருக்கிறது. இலங்கைக் கடற்படை கடலின் மீது சுற்றி சுற்றி வருவது என்பது இப்போதெல்லாம் அதிகமாக இருக்கிறது. இந்த எல்லைக்கு அருகில் நடமாடினால் இலங்கைக் கடற்படை தங்களைப் பிடித்துவிடுமோ என்ற நிரந்தரமான பயத்தில் மீனவர்கள் இருக்கிறார்கள். கடல் எல்லைகளை சரியாக தெரிந்துகொள்வதற்கான நவீன ஜிபிஎஸ் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு இல்லை. அதனால் அவர்களுக்கு சரியான கடல் எல்லையைத் தெரிந்துகொள்ள இயலாது. கடற்படையில் மாட்டிக்கொண்டால் படகுகளும் வலைகளும் போய்விடும். அவைதான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமே. ஆனால், படகுகளும் வலைகளும் பறிக்கப்படுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அரசால் நடத்தப்படுகிற ஒரே பள்ளிதான் தனுஷ்கோடியில் இருக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவேண்டும் என்றால் 20 கிலோமீட்டர் தூரம் குழந்தைகள் பயணம் செய்யவேண்டும். பள்ளிக்கூடத்துக்கான செலவும் அதற்கு பயணம் செய்வதற்கான செலவும் பெரும்பாலான பெற்றோர்களால் செலவு செய்யக்கூடிய அளவில் இல்லை.

கொஞ்சம் கூடுதல் சம்பாதிப்பதற்காக பெண்களும் குழந்தைகளும் பொம்மைகள், சிப்பிகளை விற்கிற சின்னக் கடைகளை வைத்திருக்கின்றனர். பின்னால் தெரிவது புனித அந்தோணியின் சர்ச்சின் இடிபாடுகள்.

இந்துக்களுக்கு தனுஷ்கோடி மதரீதியாக முக்கியமான இடம். ராமன் கட்டிய சேது பாலம் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று நம்பப்படுகிறது. கடவுள் ராவணனின் இலங்கைக்குள் நுழைவதற்கான பாலத்தைக் கட்டுவதற்காக தனது வில்லின் முனையில் இங்கே கடவுள் ராமர் ஒரு அடையாளத்தை இட்டார் என்று புராணக் கதைகள் சொல்கின்றன. அதனால்தான் இந்த இடத்துக்கு தனுஷ்கோடி (வில்லின் முனை) என்று பெயர் வந்தது என்கிறார்கள். மாநில அரசாங்கம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இழுப்பதற்காக கடலுக்குள்ளே இரண்டு கற்பாலங்களை கட்ட முயல்கிறது. ஆனால், மிக நீண்டகாலம் இங்கே வாழ்கிற உள்ளூர் மீனவர்களை வெளியேற்றிவிட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்போவதாகத் தெரிகிறது..

சூறாவளியால் இறந்தவர்களுக்கான இந்த நினைவுச் சின்னம் நன்கொடைகளின் மூலமாக கட்டப்பட்டது.
தமிழில் : த. நீதிராஜன்