”எனக்கு வாய்ப்பிருந்தால் மருத்துவமனைக்கு நான் செல்லவே மாட்டேன்.” தெளிவாகப் பேசுகிறார் அவர். “விலங்குகள் போல் அங்கு நாங்கள் நடத்தப்படுகிறோம். மருத்துவர்கள் எங்களை வந்து பார்க்கவே மாட்டார்கள். செவிலியர்களோ, ‘இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்! நாற்றம் பிடித்த இந்த மக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?” என்பார்கள்,” என்கிறார் வாரணாசி மாவட்டத்தின் அனேய் கிராமத்தில் வசிக்கும் சுடாமா பழங்குடி. ஐந்து குழந்தைகளை வீட்டிலேயே ஏன் பெற்றெடுத்தார் என்பதை விளக்கும் போதுதான் மேற்குறிப்பிட்டவாறு அவர் சொன்னார்.
கடந்த 19 வருடங்களில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் சுடாமா. 49 வயதாகும் அவர் இன்னும் மெனோபாஸ் கட்டத்தை எட்டவில்லை.
அவர் முசாகர் சேரியில் வசிக்கிறார். 57 குடும்பங்கள் அங்கு இருக்கின்றன. தாகூர்கள், பிராமணர்கள், குப்தாக்கள் முதலிய ஆதிக்க சாதிகளின் வீடுகள் இருக்கும் பராகவோன் ஒன்றியத்தின் கிராமத்தின் மறுமுனையில் அச்சேரி இருக்கிறது. சில இஸ்லாமியர் வீடுகளும் சமார், தர்கார், பசி போன்ற பட்டியல் சாதி வீடுகளும் கூட இருக்கின்றன. அச்சமூகத்தைப் பற்றி சொல்லப்படும் கற்பிதங்கள் உண்மை என்பது போன்ற தோற்றத்தில்தான் சேரி இருக்கிறது. அரைகுறை ஆடை, அழுக்குக் குழந்தைகள், ஈக்கள் பறக்கும் ஒல்லியான, உணவு ஒட்டிய முகங்கள், சுகாதாரமின்மை முதலியவைதான் அங்கு இருந்தது. ஆனால் சற்றே நெருங்கிப் பார்த்தால் யதார்த்தம் வேறாக இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியாக இருக்கும் முசாகர்கள் பூர்விகமாக விவசாயத்தைப் பாழாக்கும் எலிகளைப் பிடிக்கும் வேலை செய்திருந்தனர். காலவோட்டத்தில் அவர்களின் வேலை அவமதிக்கப்படும் வேலையாக மாறியது. அவர்கள் ‘எலி உண்ணுபவர்கள்’ என அறியப்பட்டனர். முசாகர் என்றால் அதுவே அர்த்தமும் கூட. பிற சமூகங்களால் புறக்கணிப்பையும் அவமதிப்பையும் அச்சமூகம் சந்தித்திருக்கிறது. அரசுகளும் முற்றிலும் அவர்களை புறக்கணித்துவிட்டது. முற்றான நிராகரிப்பில் அவர்கள் வாழ்கின்றனர். அருகாமையிலுள்ள பிகார் மாநிலத்தில் அவர்கள் மகாதலித் என சுட்டப்படுகின்றனர். மிகவும் ஏழ்மையானவர்கள், பட்டியல் சாதிகளாலேயே பேதம் பார்க்கப்படுபவர்கள்.
அனேய் கிராமத்தின் ஆரோக்கியகுறைபாடு நிறைந்த சேரியின் மத்தியில் கூரை வேயப்பட்ட ஒரு குடிசை வீட்டுக்கு வெளியே ஒரு கட்டிலில் சுடாமா அமர்ந்திருந்தார். “எங்கள் சமூகத்தினர் இத்தகைய கட்டில்கள் வைத்திருக்கக் கூடாது என சொல்லப்பட்ட காலத்தையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என அவர் அமர்ந்திருக்கும் கட்டிலைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறார். “ஆதிக்க சாதியினர் மட்டும்தான் கட்டில்கள் கொண்டிருக்க முடியும். இதுபோன்ற கட்டிலில் நாங்கள் உட்கார்ந்திருப்பதை கிராமத்தில் நடந்து செல்லும் ஒரு தாகூர் பார்த்துவிட்டால், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்!” கொடிய வசவுகளைத்தான் அவர் சொல்கிறார்.
சாதி மீதான நம்பிக்கை மக்களிடம் சமீப நாட்களில் குறைவதாக தெரிந்தாலும் அவர்களின் வாழ்க்கைகளின் மீதான சாதிய ஆதிக்கம் இன்னும் தொடர்வதாக அவர் சொல்கிறார். “இப்போது இங்குள்ள எல்லா வீடுகளிலும் கட்டில்கள் இருக்கின்றன. மக்கள் அவற்றின் மீது உட்காரவும் செய்கின்றனர்.” ஆனால் பெண்களுக்கு இன்னும் கட்டுப்பாடு நீடிக்கிறது. “பெண்கள் உட்காரமுடியாது. குறிப்பாக மூத்தவர்கள் (கணவன் வீட்டார்) இருக்கும்போது அமரக் கூடாது. என் மாமியார் ஒருமுறை நான் கட்டிலில் அமர்ந்ததால் அண்டைவீட்டார் முன் வைத்து என்னைக் கத்தினார்.”
அவரின் கையில் ஒரு குழந்தை இருக்க, மூன்று குழந்தைகள் கட்டிலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கையைக் கேட்டபோது அவர் சற்று குழப்பமடைந்தார். முதலில் ஏழு என்றார். பிறகு திருமணமாகி மாப்பிள்ளை வீட்டாருடன் இருக்கும் மகள் அஞ்சல் நினைவுக்கு வந்து எண்ணிக்கையை சரி செய்தார். பிறகு கடந்த வருடத்தில் இறந்துபோன ஒருவரை நினைவுகூர்ந்து மீண்டும் சரி செய்தார். இறுதியில் விரல் விட்டு எண்ணி ஏழு பேர் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார். “19 வயது ராம் பலக், 17 வயது சத்னா, 13 வயது பிகாஸ், 9 வயது ஷிவ் பலக், 3 வயது அர்பிதா, 4 வயது ஆதித்யா மற்றும் ஒன்றரை வயது அனுஜ்.”
“போய் பக்கத்து வீட்டுக்காரங்கள கூட்டிட்டு வா.” ஒரு கை அசைவில் அப்பகுதியின் பிற பெண்கள் எங்களிடம் அழைத்து வரும்படி மகளைச் சொல்கிறார் அவர். “திருமணம் ஆகும்போது எனக்கு 20 வயது இருந்திருக்கலாம்,” என்கிறார் சுடாமா. “ஆனால் மூன்று, நான்கு குழந்தைகள் பெறும் வரை, ஆணுறைகள் பற்றியோ கருத்தடை அறுவை சிகிச்சை பற்ற்றியோ எனக்குத் தெரியாது. எனக்கு அவற்றைப் பற்றி தெரிய வந்தபோது அதைச் செய்வதற்கான தைரியத்தை என்னுள் திரட்ட முடியவில்லை. அறுவை சிகிச்சையில் இருக்கும் வலிக்கு நான் அஞ்சினேன்.” அறுவை சிகிச்சை செய்ய அவர் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பராகவோன் ஒன்றியத்திலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்குச் செல்ல வேண்டும். உள்ளூரிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லை.
சுடாமா எங்கும் வேலைக்கு செல்லவில்லை. அவரின் 57 வயது கணவர் ராம்பகதூர், “நெல் வயலில் இருக்கிறார். இது விதைக்கும் காலம்,” என்கிறார் அவர். அறுவடைக்கு பிறகு பிறரைப் போல் அவரது கணவரும் அருகாமை நகரங்களுக்கு இடம்பெயர்ந்து கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்ப்பார்.
முசாகர் சமூகத்தின் பெரும்பாலான ஆண்கள் நிலமற்ற தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். சில குடும்பங்கள் மட்டும் விவசாயத் தொழிலாளர் வேலை பார்க்கின்றன. சுடாமாவின் கணவர் மூன்றில் ஒன்று என்கிற அடிப்படையில் விவசாயக் கூலியாக வேலை பார்க்கிறார். வீட்டுக்கு கொண்டு வரும் பயிரை விற்று குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வார்.
இன்று மதியத்துக்கு சுடாமா சோறு சமைத்துள்ளார். குடிசையில் இருக்கும் மண் அடுப்பு சோற்றுப் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கிக் கொண்டிருந்தது. குடும்பத்தின் பெரும்பாலான உணவுகள் உப்பு அல்லது எண்ணெயுடன் கூடிய சோறாகத்தான் இருக்கும். நல்ல நாட்களில் பருப்பு, காய்கறி அல்லது சிக்கன் கலந்திருக்கும். வாரத்துக்கு ஒரு முறை ரொட்டி உணவு.
“சோற்றை மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிடுவோம்,” என்கிறார் அவரின் மகள் சாத்னா. அவரின் சகோதர சகோதரிகளுக்கு தட்டுகளில் உணவு பரிமாறுகிறார். இளையவன் அனுஜ் சத்னாவின் தட்டிலிருந்து சாப்பிடுகிறான். ராம் பலக்கும் பிகாஸ்ஸும் ஒரு தட்டை பகிர்ந்து கொள்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களும் எங்களுடன் இணைந்தனர். மன்வதிகார் ஜன் நிக்ரானி சமிதி என்கிற மனித உரிமை அமைப்பில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக இச்சேரியிலிருந்து பணிபுரியும் 32 வயது சந்தியாவும் அவர்களில் ஒருவர். பரவலாக இருக்கும் ரத்தச்சோகை நோய் பற்றி பேசுவதிலிருந்து தொடங்குகிறார் சந்தியா. 2015-16 தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு - 4 ( NFHS - 4 ) உத்தரப்பிரதேசத்தின் 52 சதவிகித பெண்கள் ரத்தசோகை கொண்டிருப்பார்கள் என குறிப்பிட்டாலும் கூட, அனேயில் 100 சதவிகித பெண்களும் மிதமான அல்லது தீவிர ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார் அவர்.
“சமீபத்தில் இக்கிராமத்தின் பெண்கள் அனைவருக்கும் போஷாக்கு பரிசோதனை நடத்தினோம்,” என்கிறார் சந்தியா. “ஹீமோகுளோபின் அளவு 1 டெசிலிட்டரில் 10 கிராமுக்கு மேல் ஒருவருக்குக் கூட இல்லை. ஒவ்வொருவருக்கும் ரத்தசோகை இருக்கிறது. இதைத் தாண்டி வெள்ளைப்படுதல் மற்றும் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் பெண்களிடம் இருக்கின்றன.”
இந்த சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு பொது சுகாதார அமைப்பின் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கை காரணமாக இருக்கிறது. அங்கு அவர்களுக்கு போதுமான கவனம் கிடைப்பதில்லை. அவமதிக்கவும்படுகிறார்கள். எனவே நெருக்கடி நிலையில்லாமல் பெண்கள் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. “என்னுடைய முதல் ஐந்து பிரசவங்கள் வீட்டிலேயே நடந்தன. பிறகு சமூக் சுகாதார செயற்பாட்டாளர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார்,” என சுடாமா மருத்துவ மையங்களின் மீது அவருக்கு இருக்கும் அச்சத்தை விளக்குகிறார்.
“மருத்துவர்கள் எங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் அது ஒன்றும் புதிதில்லை. உண்மையான சவால் வீட்டில்தான் இருக்கிறது,” என்கிறார் பக்கத்து வீட்டுக்காரரான 47 வயது துர்காமதி ஆதிவாசி. “அரசாங்கத்தாலும் மருத்துவர்களாலும் எங்கள் வீட்டு ஆண்களாலும் ஒன்றுபோல நாங்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறோம். அவர்களுக்கு (ஆண்கள்) காமத்தில் ஈடுபட மட்டும் தெரிகிறது. அதற்குப் பின் விளைவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. குடும்பத்துக்கு சம்பாதிப்பது மட்டுமே அவர்களது பொறுப்பாக நினைக்கின்றனர். மற்ற எல்லாமும் எங்கள் தலைகளில் விடிகிறது,” என்னும் துர்காமதியின் குரலில் எதிர்ப்புணர்வு தென்படுகிறது.
சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு பொது சுகாதார அமைப்பின் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கை காரணமாக இருக்கிறது. அங்கு அவர்களுக்கு போதுமான கவனம் கிடைப்பதில்லை. அவமதிக்கவும்படுகிறார்கள். எனவே நெருக்கடி நிலையில்லாமல் பெண்கள் மருத்துவமனைக்குச் செல்வதில்லை
“ஒவ்வொரு சமூகத்திலும் பெண்கள்தான் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்,” என்கிறார் 45 வயது மனோரமா சிங். சமூக சுகாதார செயற்பாட்டாளராக அனேயில் பணிபுரியும் அவர் இரும்புச்சத்து மாத்திரைகளை விநியோகிக்கிறார். “கிராமம் முழுக்க சென்று பாருங்கள். குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆண் கூட இருக்க மாட்டார். குழந்தைப் பெறுவதையும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் ஏன் பெண் மட்டுமே செய்ய வேண்டும் என அந்தக் கடவுளுக்குதான் தெரியும்,” என்கிறார் அவர். 2019-21 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி ( NFHS-5 ) வாரணாசியின் 0.1 சதவிகித ஆண்கள் மட்டும்தான் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை எடுத்திருக்கின்றனர். பெண்களின் விகிதமோ 23.9 சதவிகிதம்.
மேலும் அந்த கணக்கெடுப்பு, உத்தரப்பிரதேசத்தில் 15-49 வயதில் இருக்கும் ஐந்தில் இரண்டு பகுதி (38 சதவிகித) ஆண்கள், குடும்பக் கட்டுப்பாடு பெண்களின் வேலை என ஒப்புக் கொள்வதையும் ஆண் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என நினைப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
கிராமத்தில் செய்த பணியின் அடிப்படையில் சந்தியாவும் அதே போன்ற பார்வையை முன் வைக்கிறார். “நாங்கள் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தைப் பற்றி தொடர்ந்து அவர்களிடம் (ஆண்களிடம்) சொல்கிறோம். ஆணுறைகளையும் விநியோகிக்கிறோம். பெரும்பாலான இடங்களில், பெண்கள் கேட்டுக் கொண்டாலும் அவர்களின் ஆண் இணையர்கள் ஆணுறைகள் பயன்படுத்த ஒப்புக் கொள்வதில்லை. அதே போல, கணவரும் அவரின் குடும்பமும் விரும்பினால் மட்டுமே கர்ப்பம் தரித்தல் நிற்கிறது.”
உத்தரப்பிரதேசத்தின் மணமான 15-49 வயது பெண்களுக்கு மத்தியில் கருத்தடை சாதன பயன்பாடு 46 சதவிகிதம் என்கிறது தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு - 4. முந்தைய கணக்கெடுப்பில் அது 44 சதவிகிதமாக இருந்தது. ஆண் குழந்தை இருந்தால், உத்தரப்பிரதேச பெண்கள் கருத்தடை பயன்படுத்தும் சாத்தியம் அதிகம் என்கிறது கணக்கெடுப்பு. “யாருக்கும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி அக்கறை இல்லை, குறிப்பாக ஆண்கள்,” என்கிறார் சமூக சுகாதார செயற்பாட்டாளரான தாரா. அருகாமை கிராமத்தில் அவர் பணிபுரிகிறார். “இங்குள்ள குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை ஆறு. பெரும்பாலான நேரங்களில் வயதின் காரணமாக நிறுத்தப்படுகிறது. கருத்தடை சிகிச்சை கொடுக்கும் வலியையும் சிக்கல்களையும் தாங்க முடியவில்லை என்கின்றனர் ஆண்கள்.”
“அவர் சம்பாதிக்க வேண்டும். குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் சுடாமா. “அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமென நான் எப்படி நினைப்பேன்.? அதற்கு வாய்ப்பே இல்லை.”
கிராமப்புற பதின்வயது மற்றும் இளம்பெண்கள் பற்றிய செய்திகளளிக்கும் PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய திட்டம், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் ஒரு பகுதி ஆகும். இத்தகைய விளிம்புநிலை குழுக்களின் சூழலை சாதாரண மக்களின் வாழ்வனுபவங்களை கொண்டு ஆராய்வதற்கான முன்னெடுப்பு.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய வேண்டுமா? zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
ஜிக்யாசா மிஷ்ரா பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றியச் செய்திகளை தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீன இதழியல் மானியத்தின் வழியாக அளிக்கிறார். இந்தக் கட்டுரையின் உள்ளட்டக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை தன்னுடைய அதிகாரத்தை செலுத்தவில்லை.
முகப்புப் படம் படசித்ரா ஓவியப் பாரம்பரியத்தின் ஈர்ப்பில் ஜிக்யாசா மிஷ்ராவால் உருவாக்கப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்