ராணி மஹ்தோ ஊசலாட்டத்தில் இருந்தார். சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்த சந்தோஷம் ஒரு பக்கம். பிறந்திருப்பது மீண்டும் ஒரு பெண்குழந்தை என கணவனிடம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கம் மறுபக்கம்.
“மகனைதான் இம்முறை அவர் எதிர்பார்த்தார்,” என்கிறார் பதட்டத்துடன். “வீட்டுக்கு திரும்புகையில் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தைதான் என்பதை அவரிடம் எப்படி சொல்வதென கவலையாக இருக்கிறது,” என்கிறார் 20 வயதாகும் அவர். பிகாரின் பட்னா மாவட்டத்தில் இருக்கும் தனப்பூர் மருத்துவமனையின் படுக்கையில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார்.
2017ம் ஆண்டில் திருமணமானபோது அவருக்கு வயது 16. முதல் மகளை திருமணம் ஆனதுமே பெற்றெடுத்தார் ராணி. அச்சமயத்தில் அவரின் கணவர் பிரகாஷ் குமார் மஹ்தோவுக்கு வயது 20. பிரகாஷ் மற்றும் மாமியாருடன் கிராமத்தில் வாழ்கிறார் அவர். கிராமத்தின் பெயரை அவர் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.
”எங்களின் கிராமத்தில் பெரும்பாலான பெண்களுக்கு 16 வயதிலேயே திருமணம் முடிந்துவிடும்,” என்கிறார் இளவயதிலேயே திருமணம் முடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அறியாத ராணி. “எனக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். என் பெற்றோர் அவளை சீக்கிரமே மணம் முடித்துக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்,” என்கிறார். அவரின் மாமியாரான கங்கா மஹ்தோவும் அவரருகே வந்து அமர்ந்தார். வெளியேறுவதற்கான சான்றிதழ் பெற காத்திருந்தார்.
ராணியும் அவரின் தங்கையும் விதிவிலக்குகள் இல்லை. நாட்டில் நிகழும் குழந்தை மற்றும் இளவயது திருமணங்களில் 55 சதவிகித திருமணங்களுக்கு பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களே காரணமாக இருப்பதாக ஓர் ஆய்வில் குழந்தைகள் உரிமைகளுக்கான தொண்டு நிறுவனம் CRY குறிப்பிடுகிறது.
“வெளியேறுவதற்கான அனுமதி ரசீது கிடைத்ததும் ஊருக்கு செல்ல ஓர் ஆட்டோவை பிடிப்போம்,” என்கிறார் ராணி. “தேவைக்கும் இரண்டு நாட்கள் அதிகமாகவே அவர் மருத்துவமனையில் இருந்துவிட்டார். அவருக்கு வேறு பிரச்சினைகளும் இருந்தன. “எனக்கு ரத்த சோகை குறைபாடு இருக்கிறது,” என்கிறார் ராணி.
இந்தியாவின் பெண்கள், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இருக்கும் முக்கியமான சுகாதார பிரச்சினை ரத்தசோகை. இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு உணவு பாதுகாப்பின்றி சத்துகுறைபாடும் ரத்தசோகையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் குழந்தை திருமணம் என்பது குறைந்த வருமானம் மற்றும் கல்வி ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட விஷயம். உணவுக்கு உத்தரவாதம் இல்லாத ஏழைக் குடும்பங்களில் பொருளாதார சுமையை குறைக்கும் வழிகளாக இளம்வயது திருமணங்கள் பார்க்கப்படுகின்றன.
இளவயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் சத்து முதலிய விஷயங்களை பற்றிய முடிவுகளில் பங்களிக்கும் வாய்ப்புகள் இருப்பதில்லை. விளைவாக ஆரோக்கியமின்மை, சத்து குறைபாடு, ரத்தசோகை, பிறக்கும் குழந்தைகளில் எடை குறைவு ஆகியவை நேர்கின்றன. இவற்றுக்கு காரணமாக இருக்கும் குழந்தை திருமணமே இவற்றின் விளைவாகவும் மாறுகிறது. இது தொடர்பாக கொள்கை வகுப்பதில் சிரமம் கொடுக்கும் ஒரு விஷயமும் இருக்கிறது: இந்தியாவை பொறுத்தவரை குழந்தை என்பவர் யார்?
குழந்தைகளுக்கான உரிமை பற்றி 1989ம் ஆண்டில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில், 18 வயது நிரம்பாத அனைவரும் குழந்தைகள்தான் என வரையறுக்கப்பட்டது. இந்தியாவின் சட்டங்களோ குழந்தை தொழிலாளர், திருமணம், கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கான நீதி முதலிய விஷயங்களில் குறைந்த வயது பற்றி வேறுபட்ட விளக்கங்களை கொடுக்கிறது. குழந்தை தொழிலாளர் பற்றிய சட்டத்தில் வரையறுக்கப்படும் வயது 14. திருமணம் தொடர்பான சட்டத்தில் திருமணமாவதற்கான வயதாக பெண்ணுக்கு 18 வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல சட்டங்கள் குழந்தைக்கும் மைனருக்கும் இடையே உள்ள வித்தியாசங்களையும் குறிப்பிட்டிருக்கிறது. விளைவாக, 15-18 வயதில் இருக்கும் இளையோர் நிர்வாக நடவடிக்கைகளின் பார்வையில் படாமல் போய்விடுகிறார்கள்.
ராணி மஹ்தோவின் வாழ்க்கையில் சமூக சடங்குகளும் பாலின பாரபட்சமும்தான் எந்த சட்டத்தையும் காட்டிலும் அதிகாரம் படைத்தவை.
“ராக்கி (அவரின் மூத்த மகள்) பிறந்தபோது என் கணவர் பல வாரங்களாக என்னுடன் பேசவில்லை. வாரத்தில் இரண்டு, மூன்று முறை நண்பர்களின் வீடுகளில் தங்கி விட்டு, வீட்டுக்கு மது போதையில் வருவார்.” பிரகாஷ் மஹ்தோ தொழிலாளராக இருக்கிறார். மாதத்தின் பாதிக்கும் குறைவான நாட்களே வேலை செய்வார். “என் மகன் வேலைக்கு செல்ல முயலுவதே இல்லை,” என்கிறார் அவரின் தாய் கங்கா சோகமாக. “15 நாட்களுக்கு வேலை பார்த்து சம்பாதித்தால், மீத 15 நாட்களை அதை செலவழிப்பதிலேயே கழிப்பான். மது அவன் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது. எங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறது.”
ராணியின் கிராமத்தில் இருக்கும் சுகாதார ஊழியர் இரண்டாவது பிரசவத்துக்கு பிறகு கருத்தடை செய்து கொள்ள ராணியை அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் கணவர் ஒப்புக் கொள்ளவில்லை. “இரண்டு குழந்தைகளுக்கு மேல் நான் பெற்றுக் கொள்ள முடியாது என்றார் சுகாதார ஊழியர். ரத்தசோகையால் என் உடல் பலவீனமாக இருப்பதாக சொன்னார். நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது கருத்தடை பற்றி பிரகாஷ்ஷிடம் பேச முயன்றேன். ஆனால் அது ஒரு பிரச்சினையாக வெடித்தது. நான் வீட்டில் இருக்க வேண்டுமெனில் ஆண் குழந்தையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார். எத்தனை தடவை கர்ப்பமானாலும் அவருக்கு கவலையில்லை என்றார். கருத்தடை சாதனங்களை பயன்படுத்தவும் மறுப்பார். நான் வலியுறுத்தினால் என்னை அடிப்பார். கருத்தடை செய்யாமல் ஆண் குழந்தை பெற்றெடுக்க முயல வேண்டும் என்கிற அவரின் கருத்துக்கு என் மாமியாரும் உடன்படுகிறார்.”
மாமியாரின் முன்பே இந்த விஷயங்களை அவர் பேசுவது அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு மோசமாக இல்லையென்பதை காட்டியது. ராணியின் மீது கங்கா பரிவு கொண்டிருந்தாலும் சமூகத்தின் ஆணாதிக்க தளையை அறுத்துக் கொண்டு வெளியே வர அவரால் முடியவில்லை.
பட்னாவின் கிராமப்புற மக்களில் 34.9 சதவிகித பேர்தான் குடும்ப கட்டுப்பாடு முறையை கடைப்பிடிப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. அதிலும் ஆண் கருத்தடை செய்து கொள்வது என்பது கிராமப்புறத்தில் பூஜ்ய சதவிகிதமாகவே இருக்கிறது. மேலும் அந்த கணக்கெடுப்பு, 15-49 வயதுகளில் இருக்கும் பிகார் பெண்களில் 58 சதவிகித கர்ப்பிணி பெண்கள் ரத்தசோகை குறைபாடு கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறது.
“20 வயதில் இரண்டாம் பிரசவமானதும் நான் ஒரு விஷயத்தை முடிவு செய்து கொண்டேன்,” என்கிறார் ராணி. “என் மகள்களுக்கு குறைந்தபட்சம் 20 வயதேனும் ஆவதற்கு முன்பாக அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என முடிவெடுத்து விட்டேன். ஆனால் நானோ ஆண் குழந்தை பெறும் வரை குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.”
பெருமூச்சுவிடும் அவர் நிதானமாக சொல்கிறார்: “எங்களை போன்ற பெண்களுக்கு கணவர் சொல்வதை கேட்டாக வேண்டியது கட்டாயம். இங்கிருந்து மூன்றாவது படுக்கையில் இருக்கும் பெண்ணை பார்த்தீர்களா? அவரின் பெயர் நக்மா. நேற்று நான்காவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவருடைய வீட்டிலும் கூட கருப்பை அகற்றுவதை பற்றி பேசுவதையே நிராகரிக்கிறார்கள். இப்போது அவருடன் இங்கு இருப்பது அவருடைய பெற்றோர்கள்தான். கணவன் வீட்டார் இல்லை. இரண்டு நாட்களில் அவரே கருப்பையை அகற்றிவிடுவார். மிகவும் துணிச்சல்காரர். அவரின் கணவரை எப்படி சமாளிப்பது என தெரியுமென அவர் சொல்கிறார்,” என்கிறார் ராணி புன்னகையுடன்.
யுனிசெஃப் அறிக்கை, ராணியை போன்ற குழந்தை மணமகள்களின் பெரும்பான்மை, பதின்வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்வதாக குறிப்பிடுகிறது. அவர்களுக்கு பின் திருமணம் செய்த பெண்களின் குடும்பங்களை விட அவர்களின் குடும்பங்கள் பெரிதாகவும் இருக்கிறது. இச்சூழலை தொற்றுநோய் இன்னும் மோசமாக்கியிருக்கிறது.
“2030க்குள் குழந்தை திருமணத்தை ஒழிக்க வேண்டும் என்கிற இலக்கு சவாலாக மாறிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் கனிகா சராஃப். “நாட்டின் எந்த மாநிலத்தின் கிராமப்புறங்களில் பார்த்தாலும் நீங்கள் அதை புரிந்து கொள்ள முடியும்.” குழந்தை பாதுகாப்புக்காக பிகாரில் இயங்கும் ஆங்கான் அறக்கட்டளையில் குழந்தை பாதுகாப்பு முறைகளின் தலைவராக இருக்கிறார் கனிகா சராஃப். “இப்பிரச்சினைக்கு தொற்றுநோய் இன்னும் பல படிமங்களை வழங்கியிருக்கிறது,” என்கிறார் அவர். “இந்த காலகட்டத்தில் மட்டும் 200 குழந்தை திருமணங்களை பட்னாவில் நிறுத்தியிருக்கிறோம். பிற மாவட்டங்களிலும் கிராமங்களிலும் என்ன நிலையென நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.”
நிதி அயோக்கின்படி , பிகாரின் பாலின விகிதம் 2013-15-ல் 1000 ஆண்களுக்கு 916 பெண்களாக இருந்தது. 2005-07ல் இருந்த 909 என்ற அளவை காட்டிலும் இது முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை. ஏனெனில் ஐந்து வயதுக்கு முன் இறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகள் அதிகமாக இருப்பதால் பாலின விகிதம் சரிந்து கொண்டுதான் இருக்கிறது. ஐந்து வயதுக்குள் இறக்கும் விகிதம் (ஒவ்வொரு 1000 குழந்தைகளின் பிறப்புகளுக்கும் இணையாக நேரும் இறப்புகள்) பெண் குழந்தைகளில் 43 ஆகவும் ஆண் குழந்தைகளில் 39 ஆகவும் பிகாரில் இருக்கிறது. ஐநா கணக்கின்படி , இந்திய விகிதம் 2019ம் ஆண்டுபடி 35 பெண் குழந்தைகள,. 34 ஆண் குழந்தைகள்.
ஒரு பேரன் வந்தால் குடும்பத்தில் சந்தோஷம் வந்துவிடுமென கங்கா நம்புகிறார். அவருடைய சொந்த மகனால் சந்தோஷமில்லை என ஒப்புக் கொள்கிறார். “பிரகாஷால் பயனில்லை. ஐந்தாம் வகுப்புக்கு பிறகு அவன் படிக்கவில்லை. அதனால்தான் ஒரு பேரனுக்கு நான் ஆசைப்படுகிறேன். அவன் குடும்பத்தையும் அவனுடைய தாயையும் பார்த்துக் கொள்வான். கர்ப்பிணி பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு, ராணிக்கு கிடைக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களாக பலவீனத்தில் அவளால் பேசக் கூட முடியவில்லை. அதனால்தான் மருத்துவமனையில் நான் தங்கினேன். என் மகனை போகச் சொல்லிவிட்டேன்.
“அவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகையில் என் மருமகள் கேள்வி கேட்டால், அவளை அவன் அடிக்கிறான். கைக்கு அகப்பட்டதை தூக்கிப் போட்டு உடைக்கிறான்.” ஆனால் இது வறட்சி மிகுந்த மாநிலம் இல்லையா? அப்படி அறிவிக்கப்பட்டபோதும் பிகாரின் 29 சதவிகித ஆண்கள் மது குடிப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு சொல்கிறது. கிராமப்புற ஆண்களில் அது 30 சதவிகிதமாக இருக்கிறது.
ராணி கர்ப்பமாக இருந்தபோது கிராமத்துக்கு வெளியே வீட்டுப் பணியாளர் வேலைக்கு முயற்சித்து பார்த்தார் கங்கா. ஆனால் கிடைக்கவில்லை. “என்னுடைய நிலையை பார்த்து, என் மாமியார் ஒரு உறவினரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி எனக்கு அவ்வப்போது பழங்களும் பாலும் வாங்கிக் கொடுத்தார்,” என்கிறார் ராணி.
“என்னை தொடர்ச்சியாக குழந்தை பெற வைத்துக் கொண்டிருந்தால், வரும் நாட்களில் எனக்கு என்ன நேருமென தெரியவில்லை,” என்கிறார் ராணி, தன்னுடைய உடல் மீதும் வாழ்க்கை மீதும் அதிகாரமில்லாத துயரத்தில்.
“என்னுடைய மகள்களும் என்னை போல் ஆகிவிடக் கூடாதென விரும்புகிறேன்.”
இக்கட்டுரையில் இடம்பெறும் சிலரின் பெயர்களும் சில இடங்களின் பெயர்களும் கட்டுரையில் இடம்பெற்றிருப்பவர்களின் பாதுகாப்புக்காக மாற்றப்பட்டிருக்கிறது.
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
ஜிக்யாசா மிஷ்ரா, பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகளை பற்றிய செய்திகளை சுயாதீன பத்திரிகையாளராக தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியத்தின் கீழ் வழங்கி வருகிறார். இக்கட்டுரையின் உள்ளடக்கம் எதிலும் தாகூர் குடும்ப அறக்கட்டளை தலையிடவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்