பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள தன் 2.5 ஏக்கர் நிலத்துக்கு பானுபென் பர்வாட் சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவரும் அவரது கணவரும் அங்கு ஒவ்வொரு நாளும் சென்றிருக்கின்றனர். கம்பு, சோளம் போல அவர்களின் குடும்பத்துக்கு தேவையான பயிரை அங்கு அவர்கள் விளைவித்துக் கொண்டிருந்தனர். 2017ம் ஆண்டில் குஜராத்தில் நேர்ந்த பெருவெள்ளம் வரை அந்த நிலம்தான் அவரகளுக்கான பிரதான வாழ்வாதாரமாக இருந்தது. வெள்ளம் அவர்களின் நிலத்தை அழித்துவிட்டது. “எங்களின் உணவு அதற்குப் பிறகு மாறிவிட்டது,” என்கிறார் 35 வயது பானுபென். “எங்களின் நிலத்தில் நாங்கள் விளைவித்த பயிரை பிறகு விலை கொடுத்து வாங்க வேண்டியதானது.”

அவரது நிலத்தில் அரை ஏக்கரில் கம்பு விளைவித்தால் நான்கு குவிண்டால் அறுவடை கிடைக்கும். அதே அளவை இப்போது அவர் வாங்க மண்டிக்கு ரூ.10,000 கொடுக்க வேண்டியிருக்கும். “பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அரை ஏக்கரில் கம்பு விளைவிக்க எங்களுக்கு ஆகும் செலவு சந்தை விலையில் பாதியாகத்தான் இருக்கும்,” என்கிறார் அவர். “பிற பயிர்களுக்கும் அதே நிலைதான். நாங்கள் விளைவித்த பயிர் ஒவ்வொன்றும் இரட்டிப்பு விலை இப்போது.”

பானுபென், அவரது 38 வயது கணவர் போஜாபாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பனஸ்கந்தாவின் கங்க்ரெஜ் தாலுகாவிலுள்ள டொடானா கிராமத்தில் வசிக்கின்றனர். நிலத்தை உழும் வேலை ஒரு பக்கம் நடக்கையில், போஜாபாய் வருமானமீட்ட விவசாயத் தொழிலாளராக பணிபுரிவார். ஆனால் 2017ம் ஆண்டிலிருந்து விவசாய நிலங்களிலும் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பதானிலுள்ள கட்டுமானத் தளங்களிலும் என அவர் முழு நேர விவசாயத் தொழிலாளராக பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. “இப்போது கூட அவர் வேலை தேடிதான் சென்றிருக்கிறார். வேலை கிடைத்தால் நாளொன்றுக்கு 200 ரூபாய் அவருக்கு வருமானம் கிடைக்கும்,” என்கிறார் பானுபென்.

அவர்களின் இளைய மகளான சுகானா, வெள்ளம் நேர்ந்த அதே வருடத்தில்தான் பிறந்தார். அவரின் நெற்றியைத் தடவியபடி, ஐந்து வருட காலம் ஓடிவிட்டதென்பதை நம்ப முடியவில்லை என்கிறார் பானுபென்.

பனஸ்கந்தா, பதான், சுரேந்திரநகர், ஆரவல்லி, மோர்பி போன்ற குஜராத்தின் பல மாவட்டங்களில் 2017ம் ஆண்டு தீவிர கனமழை பெய்தது. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் ஒரே நேரத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் இணைந்து அப்பேரழிவை உருவாக்கின. அது மிகவும் அரிதான நிகழ்வு. தேசியப் பேரிடர் ஆணையத்தின் அறிக்கை யின்படி, 112 வருடங்களில் அப்பகுதி பெற்ற மழைகளிலேயே அதிக மழை அதுதான்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: பானுபென் பர்வாட் நான்கு வயது மகள் சுகானாவுடன் டொடானா கிராமத்திலுள்ள தம் வீட்டுக்கு வெளியே. வலது: 2017ம் ஆண்டு வெள்ளத்தில் அவர்களின் விவசாய நிலம் எப்படி மூழ்கியது என்பதை உருளைக்கிழங்கு வெட்டியபடி விவரிக்கிறார் பானுபென்

பனஸ்கந்தாவின் வருடாந்திர மழைப்பொழிவை விட 163 சதவிகிதம் அதிகமாக அந்த வருடத்தின் ஜூலை 24ம் தேதியிலிருந்து 27ம் தேதிக்குள் பெய்துவிட்டது. இதனால் நீர் தேங்கியது. அணைகள் திறந்துவிடப்பட்டன. வெள்ளங்கள் நேர்ந்தன. டொடானா கிராமத்துக்கு அருகே இருந்த கரியா கிராமத்தின் நர்மதா கால்வாய் கரைபுரண்டதும் பிரச்சினைகள் தீவிரம் கண்டன.

வெள்ளத்தால் மாநிலம் முழுக்க 213 பேர் உயிரிழந்தனர். 11 லட்ச ஹெக்டேர் விவசாய நிலங்களும் 17,000 ஹெக்டேர் தோட்டக்கலை நிலங்களும் பாதிக்கப்பட்டன.

“எங்களின் மொத்த நிலமும் நீருக்கடியில் இருந்தது,” என நினைவுகூரும் பானுபென் வீட்டுக்கு வெளியே உருளைக்கிழங்கை வெட்டிக் கொண்டிருக்கிறார். “வெள்ள நீர் நிறைய மணலையும் கொண்டு வந்தது. நீர் சில நாட்களில் வடிந்தாலும் மணல் அப்படியே தங்கிவிட்டது.”

மண்ணை நிலத்திலிருந்து பிரிப்பது இயலாத காரியமானது. “வெள்ளம் எங்களின் நிலத்தை வளமற்றதாக்கி விட்டது,” என்கிறார் அவர்.

தினக்கூலி மட்டும்தான் சாப்பாட்டுக்கான ஒரே வழி என்றான நிலையில், பானுபெனின் குடும்பம் மாவுச்சத்து, புரதச்சத்து, காய்கறிகள் கலந்த சத்தான உணவை எடுக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. சுகானா பிறந்ததிலிருந்து அத்தகைய சத்தான உணவு எடுத்ததே இல்லை. “காய்கறிகள் அல்லது பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றை நாங்கள் முன்பு வாங்குவோம். ஏனெனில் எங்களிடம் தானியங்கள் இருந்தன,” என அவர் விவரிக்கிறார். “ஆனால் இப்போது அவற்றை எல்லாம் நாங்கள் நிறுத்தி விட்டோம்.”

“கடைசியாக எப்போது ஆப்பிள் வாங்கினோம்,” என நினைவில்லை. “இப்போது ஒன்று வாங்கினாலும் கூட நாளை வேலை கிடைக்குமா என உறுதியாகத் தெரியாது. எனவே உபரியாக இருக்கும் பணத்தை சேமிக்கிறோம். எங்களின் உணவு பெரும்பாலும் பருப்பு, சோறு மற்றும் ரொட்டி ஆகியவை மட்டும்தான். முன்பெல்லாம் கிச்சடி செய்தால் ஒரு கிலோ அரிசிக்கு அரை கிலோ பருப்பு கலப்போம். இப்போது வெறும் 200 கிராம்தான் கலக்கிறோம். எப்படியோ எங்களின் வயிறுகளை நிரப்ப வேண்டியிருக்கிறது.”

ஆனால், நல்ல உணவு எடுத்துக் கொள்ளாதது சத்துகுறைபாடு போன்ற பல பிரச்சினைகள் உருவாக்கும் விளைவுகளை கொடுக்கிறது.

சுகானா சீக்கிரமே சோர்வடைந்து விடுகிறார். அவருக்கு பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது, என்கிறார் அவரின் தாய். “அவளைச் சுற்றியுள்ள குழந்தைகள் அளவுக்கு அவளால் விளையாட முடிவதில்லை. சீக்கிரமே சோர்வடைந்து விடுகிறாள். அடிக்கடி உடல்நிலையும் குன்றிவிடுகிறது.”

PHOTO • Parth M.N.

சுகானா அவரின் தோழி மெஹ்தி கானுடன் (நடுவே) பேசிக் கொண்டிருக்கிறார். 2021ம் ஆண்டில் அந்த கிராமத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஐந்து வயதுக்குள் இருக்கும் சத்துகுறைபாடு கொண்ட 37 குழந்தைகளில் அவர்களும் அடக்கம்

ஜூன் 2021-ல் டோடானா கிராமத்துக் குழந்தைகளிடம் ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் சுகானாவுக்கு சத்துகுறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. 320 குழந்தைகளிடம் - அனைவரும் ஐந்து வயதுக்கு உட்பட்டோர் - நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சத்துக்குறைபாடு கண்டறியப்பட்ட 37 குழந்தைகளில் அவரும் ஒருவர். “குழந்தைகளின் உயரம், எடை, வயது போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டன,” என்கிறார் மோகன் பர்மர். பனஸ்கந்தா மாவட்டம் முழுக்க கணக்கெடுப்பு நடத்திய குஜராத்தின் மனித உரிமை அமைப்பான நவ்சர்ஜன் அறக்கட்டளையைச் சேர்ந்த செயற்பாட்டாளர் அவர்.

போஷான் அபியான் தயாரித்த குஜராத்தின் ஊட்டச்சத்து அமைவில் இடம்பெற்ற தரவுக்குறிப்பின் படி, 2019-20ம் ஆண்டுக்கான பொதுச் சுகாதாரச் சுட்டிகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் ‘அதிக அழுத்தம் கொண்ட மாவட்டங்கள்’ பட்டியலில் அகமதாபாத், வடோதரா, சூரத் போன்றவற்றுடன் பனஸ்கந்தா மாவட்டமும் முன்னணி வகிக்கிறது.

குஜராத்தில் எடை குறைபாட்டுடன் இருக்கும் 23 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 17 லட்சம் குழந்தைகள் பனஸ்கந்தாவைச் சேர்ந்தவர்களேன குறிப்பிடுகிறது, தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு 2019-21-ன் ( NFHS-5 ) தரவுகளை அடிப்படையாகக் கொண்ட குறிப்பு. வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 15 லட்சம் பேர் அந்த மாவட்டத்தில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் குழந்தைகள் உயரத்துக்கு ஒப்பாத குறைந்த எடை கொண்டுள்ளனர். இந்த அளவு, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் முறையே 6.5 சதவிகிதம் மற்றும் 6.6 சதவிகிதம் ஆகும்.

சத்துகுறைபாட்டின் ஒரு விளைவு ரத்தசோகை. இந்தியாவின் எல்லா மாநிலங்களை விடவும் குஜராத்தில்தான் ரத்தசோகை அதிகமாக 80 சதவிகிதத்தில் இருக்கிறது. பனஸ்கந்தாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 2.8 லட்சம் குழந்தைகள் ரத்தசோகை கொண்டிருக்கின்றனர்.

போதுமான அளவுக்கான உணவு கிடைக்காமல், சுகானா போன்ற குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்கிறது. மேலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர காலநிலை நிகழ்வுகள் இன்னும் நிலைமையை மோசமாக்குகிறது.

தட்பவெப்பம், மழை மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றின் தீவிர நிலைகள்,”முக்கிய காலநிலை மாற்ற ஆபத்துகள்” என ’ காலநிலை மாற்றத்துக்கான குஜராத் மாநில செயல்திட்டம் ’ அடையாளப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் பஞ்சங்கள் மற்றும் வெள்ளங்கள் பற்றி ஆராயும் ஆண்ட்டிசிப்பேட் ஆய்வுத்திட்டத்தின்படி , ஒழுங்கற்ற மழை பாணிகளும் வெள்ளங்களும் உள்ளூர் மக்களுக்கு புதிய சவால்களை கடந்த பத்தாண்டுகளில் விடுத்துள்ளது. பனஸ்கந்தாவின் விவசாயிகளும் பிறரும் “தொடர்ந்து நேரும் பஞ்சங்கள் மற்றும் வெள்ளங்கள் ஆகியவற்றின் மாறுபட்ட தாக்கங்களினூடாக வாழப் போராடிக் கொண்டிருக்கின்றனர்,” என்கின்றனர் ஆய்வாளர்கள்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: அலபாய் பர்மர் மூன்று வயது பேரன் யுவராஜுடன் சுத்ரொசன் கிராமத்திலுள்ள வீட்டில். வலது: டொடானாவின் விவசாய நிலத்தில் படிந்துள்ள மணல்

60 வயது அலபாய் பர்மர் இந்த வருட மழையில் நான்கு பயிர்களை இழந்துவிட்டார். “பயிர்கள் விதைத்தேன். கனமழை அவற்றை அழித்து விட்டது,” என்கிறார் அவர், பனஸ்கந்தா மாவட்ட சுத்ரொசன் கிராமத்திலுள்ள தன் வீட்டில் அமர்ந்தபடி. “கோதுமை, கம்பு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டிருந்தோம். நடவுச்செலவில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக இழந்தேன்.”

“வானிலையை இப்போதெல்லாம் கணிக்க முடியவில்லை,” என்கிறார் அலபாய். உற்பத்தியில் விவசாயிகள் சரிவை சந்திக்கின்றனர் என்றும் கூறுகிறார். அதனால் விவசாயத் தொழிலாளர்களாக அவர்கள் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுவதாகக் கூறுகிறார். “சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருந்தாலும் என் மகன் வேறொருவரின் நிலத்திலோ கட்டுமான தளத்திலோ தொழிலாளியாக வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.”

15-20 வருடங்களுக்கு முன்பு கூட இத்தனை அழுத்தம் நிறைந்ததாக விவசாயம் இருக்கவில்லை என்கிறார் அலபாய். “எங்களுக்கு பிரச்சினைகள் இருந்தன,” என்கிறார் அவர். “ஆனால் அதிக மழை இந்தளவுக்கு இருக்கவில்லை. குறைந்த மழை என்ற ஒன்றே இப்போது இல்லை. இந்தச் சூழலில் எப்படி நல்ல அறுவடையைப் பெற முடியும்?”

200-11 தொடங்கி 2020-21ம் வருடத்துக்கு இடையில் குஜராத்தின் மொத்த தானிய விளைநிலப்பரப்பு 49 லட்சம் ஹேக்டேர்களிலிருந்து 46 லட்சம் ஹெக்டேர்களாக குறைந்துள்ளது. நெல் விளைச்சலுக்கான பரப்பு 1 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்த போதும் கோதுமை, கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றுக்கான நிலம் இந்த காலத்தில் காணாமல் போய்விட்டது. பனஸ்கந்தா மாவட்டத்தில் அதிகமாக வளர்க்கப்படும் கம்புக்கான விளைநிலப்பரப்பு  30,000 ஹெக்டேர்களாக குறைந்துவிட்டது.

மொத்தத்தில் கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் 11 சதவிகிதத்துக்கு குஜராத்தில் சரிந்துள்ளது. ஆனால் பருப்பு வகைகளின் உற்பத்தி 173 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

அலபாய் மற்றும் பானுபென்னின் குடும்பங்கள் ஏன் சோற்றுடன் பருப்பை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர் என்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது.

உணவுரிமைக்காக அகமதாபாத்தில் இயங்கும் தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளரான பங்க்தி ஜாக், பணப்பயிருக்கு (புகையிலை, கரும்பு) விவசாயிகள் மாறுவதாகக் கூறுகிறார். “இதனால் குடும்பம் உட்கொள்ளும் உணவின் அளவும் உணவு பாதுகாப்பும் பாதிப்படைகிறது,” என்கிறார் அவர்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: எடை குறைவாகவும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்ட யுவராஜ்ஜை பற்றி அலபாய் கவலைப்படுகிறார். வலது: தந்தையுடன் வீட்டில் யுவராஜ்

தானியங்களையும் காய்கறிகளையும் அலபாய் வாங்குவதிலிருந்து பணவீக்க உயர்வு தடுக்கிறது. “விவசாயம் தொடர்ந்து நடக்கும்போது கால்நடைகளுக்கும் தீவனம் கிடைக்கும்,” என்கிறார் அவர். “பயிர் விளைச்சல் தோற்றால் தீவனம் கிடைக்காது. அதையும் நாங்கள் எங்களுக்கான உணவைப் போல சந்தையில் வாங்க வேண்டும். எங்களால் முடிந்த தீவனத்தை வாங்குகிறோம்.”

அலபாயின் மூன்று வயது பேரன் யுவ்ராஜ் குறைந்த எடை கொண்டுள்ளார். “அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எனக்கு கவலையாக இருக்கிறது,” என்கிறார் அவர். “பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையே 50 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. இவனுக்கு அவசர மருத்துவம் தேவைப்பட்டால் நாங்கள் என்ன செய்வது?”

ஜாக் சொல்கையில், “சத்துகுறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு நோய் தாக்கும் சாத்தியம் அதிகம்,” என்கிறார். மாநிலத்தில் இருக்கும் மோசமான சுகாதாரக் கட்டமைப்பால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதாகக் கூறுகிறார் அவர். “மருத்துவச் செலவுகள் குடும்பங்களின் சுமையைக் கூட்டுகின்றன்,” என்கிறார் அவர். “(பனஸ்கந்தா போன்ற) பழங்குடி பகுதிகளில், கடன்களுக்கு பின் இருக்கும் முக்கியக் காரணம் இதுதான்.”

மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்  உணவுத் திட்டங்கள் உள்ளூர் உணவுப் பழக்கங்களை பொருட்படுத்துவதில்லை என்கிறார் ஜாக். “எல்லாருக்குமான ஒரு தீர்வு இருக்க முடியாது. உணவு முறைகள் பகுதிக்கு பகுதி, சமூகத்துக்கு சமூகம் மாறும்,” என்கிறார் அவர். “அசைவ உணவை நிராகரிப்பதற்கான பிரசாரமும் குஜராத்தில் நடக்கிறது. அசைவ உணவும் முட்டையும் தொடர்ந்து சாப்பிடும் மக்கள் நிறைந்த பகுதிகளிலும் அப்பிரசாரம் ஊடுருவியிருக்கிறது. அவர்கள் அதை இப்போது நிந்தனையாக கருதுகின்றனர்.”

2016-18ல் எடுக்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து பற்றிய விரிவான கணக்கெடுப்பில் குஜராத்தை சேர்ந்த 69.1 சதவிகித தாய்கள்/பராமரிப்பாளர்கள் சைவ உணவை எடுத்துக் கொள்கின்றனர். இது தேசிய சைவ உணவு சராசரியான 43.8 சதவிகிதத்தையும் மிஞ்சிய அளவு. 2-4 வயதுள்ள குழந்தைகளில் 7.5 சதவிகிதம் பேருக்கு மட்டும்தான் புரதச்சத்து நிறைந்த முட்டை சாப்பிடும் வாய்ப்பு இருக்கிறது. 5-9 வயதுகளில் இருக்கும் குழந்தைகளில் 17 சதவிகிதம் பேர் முட்டைகள் எடுத்துக் கொண்டாலும் மாநில அளவில் அது குறைவே ஆகும்.

சுகானி, தன் வாழ்வின் முதல் இரண்டு வருடங்களில் நல்ல உணவு பெற முடியவில்லை என்பதை பானுபென் உணர்ந்திருக்கிறார். “அவளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்கும்படி மக்கள் சொல்லிக் கொண்டே இருந்தனர்,” என்கிறார் அவர். “அதற்கான விலை எங்களால் கொடுக்க முடியாதளவுக்கு இருந்தால் நாங்கள் என்ன செய்வது? ஆரோக்கியமான உணவு நாங்கள் பெறும் வாய்ப்பிருந்த காலம் ஒன்று இருந்தது. சுகானிக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கின்றனர். எங்களின் நிலம் வறளுவதற்கு முன் பிறந்தவர்கள் அவர்கள். சத்துகுறைபாடு அவர்களிடம் இல்லை.”

பார்த் எம்.என், தாகூர் குடும்ப அறக்கட்டளையில் பெறும் சுயாதீன இதழியலுக்கான மானியத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றிய செய்திகளை எழுதுகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை.

தமிழில்: ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Vinutha Mallya

Vinutha Mallya is Consulting Editor at People’s Archive of Rural India. She was formerly Editorial Chief and Senior Editor at PARI.

Other stories by Vinutha Mallya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan