“ஒன்றும் தவறாக நடக்கவில்லை, எதுவும் அசாதாரணம் இல்லை, எல்லாம் நன்றாக இருந்தது, வாழ்க்கை எளிமையாக சென்று கொண்டிருந்தது,” என்கிறார் 33 வயதாகும் தினேஷ் சந்திரா சுதார். நினைத்து பார்க்க முடியாத அச்சம்பவத்தை நினைவுகூர்ந்தபடி தனது குடும்பத்தின் கோப்புகள், அறிக்கைகளுக்கு மத்தியில் அவர் அமர்ந்திருக்கிறார்.
ராஜஸ்தானின் பன்சி கிராமத்தில் உள்ள சுதார் வீட்டுச் சுவரில், இறந்துபோன அவரது மனைவியின் புகைப்படங்கள் தொங்குகின்றன. தினேஷின் கோப்புகளில் உள்ள அதே புகைப்படங்கள் தான். 2015ஆம் ஆண்டு திருமணமாகி சில மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம். அரசுத் திட்டமொன்றுக்கான விண்ணப்பப்படிவத்திலும் இப்புகைப்படமே இடம்பெறுகிறது.
குறுகிய காலமே நீடித்த தனது திருமண வாழ்விற்கான இக்காகித அடையாளங்களை, புகைப்படங்களை தினேஷ் ஐந்தாண்டுகளாக வைத்திருக்கிறார். அவர் மூன்று வயதாகும் சிராக், தேவான்ஷ் ஆகிய இரு குழந்தைகளின் தந்தை. தேவான்ஷ் பிறந்து வெறும் 29 நாட்களே ஆகியிருந்த நிலையில், பாவ்னாவிற்கு பாரி சத்ரி நகராட்சியில் உள்ள 50 படுக்கை வசதி கொண்ட சமுதாய சுகாதார மையத்தில் (சிஹெச்சி) குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபோது குடல் கிழிந்து உயிரிழந்தார்.
பி.எட் பட்டதாரியான தினேஷ் பன்சியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்வாலில் தனியார் பள்ளி ஆசிரியராக ரூ.15,000 சம்பளம் பெறுகிறார். சம்பவங்களை கோர்வையாக சொல்வதற்கு முயற்சிக்கிறார், சிறிய தவறு அவர்களின் வாழ்வையே புரட்டிவிட்டது. தவறுகளை அவர் தன்மீது சுமத்திக் கொள்கிறார்.
“எல்லாம் சரியாக நடக்கும் என மருத்துவர் அளித்த உறுதியை நம்பி அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டது நான்தானே? நான் இன்னும் தகவல்களை கேட்டிருக்க வேண்டும். அந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டிருக்க கூடாது. யாரையும் நம்பியிருக்கக் கூடாது. அது என் தவறு,” என்கிறார் தினேஷ். 2019ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அவரது மனைவி இறந்தது முதல் எண்ணற்ற கொல்லும் நினைவுகளை அசைபோட்டபடி இருக்கிறார்.
25 வயதான பாவ்னா 2019, ஜூன் 25ஆம் தேதி இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு தனது இரண்டாவது பிரசவத்தில் தேவன்ஷ் எனும் ஆண் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்தார். முதல் பிரசவத்தை போன்று இரண்டாவதும் எளிதாக அமைந்தது. தங்கள் கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தார்கார் மாவட்டம் பாரி சத்ரி வட்டாரத்தில் உள்ள சமுதாய சுகாதார மையத்தில் நடைபெற்ற பிரசவம், அவரது அறிக்கைகள், பரிசோதனைகள் யாவும் இயல்பாகவே இருந்துள்ளன.
பிரசவித்த 20 நாட்களில் பாவ்னா பன்சியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். 3,883 மக்கள் தொகை கொண்ட இக்கிராமத்தின் பொது சுகாதார மையத்தில் முறையாக பரிசோதனைகள், இரத்த பரிசோதனைகள் செய்யுமாறு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர் (ஆஷா) கூறியுள்ளார். அவருக்கு உடலில் எந்த தொந்தரவும் இல்லை, இருந்தும் அவர்களுடன் பாவ்னா சென்றுள்ளார். அவருடன் தாயும் சென்றிருக்கிறார். “எங்கள் வீட்டிற்கு வந்தபோது அறுவை சிகிச்சை குறித்து ஆஷா பணியாளர் எதுவும் குறிப்பிடவில்லை,” என்று தினேஷிடம் பாவ்னாவின் தாயார் கூறியிருந்தார்.
பரிசோதனைகளுக்கு பிறகு ஆஷா பணியாளரும், பணியில் இருந்த மருத்துவரும் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தினர்.
“ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன, அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு அல்லது கருத்தடைக்கான எந்த முறையையும் கையாளவில்லை, எனவே அறுவை சிகிச்சை செய்வதே சிறந்தது. சிக்கல் தீர்ந்துவிடும்,” என பாவ்னாவின் தாயார் முன் மருத்துவரும், ஆஷா பணியாளரும் கூறியுள்ளனர்.
10ஆம் வகுப்பு வரை படித்துள்ள பாவ்னா, கருத்தடை சிகிச்சை குறித்து வீட்டிற்கு சென்று கணவருடன் ஆலோசித்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். உடனே சிகிச்சை செய்வதுதான் சிறந்தது என அவரிடம் கூறியுள்ளனர். “அன்று சுகாதார மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றுள்ளது. அதனால் அன்றே செய்ய வேண்டும் என அவர்கள் நிர்பந்தித்துள்ளனர். பிரசவத்திற்கு பிறகு நலமடைந்து வரும் நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சையும் சேர்த்து செய்துவிட்டால் தொந்தரவு இருக்காது,” என மருத்துவர் சொன்னதை தினேஷ் நினைவுகூர்கிறார். மனைவியிடமிருந்து அழைப்பு வந்தவுடன் அவர் பள்ளியிலிருந்து சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார்.
“அது தவறாகப்பட்டது. உண்மையை சொன்னால், கருத்தடை அறுவை சிகிச்சைப் பற்றி நாங்கள் நினைத்துகூட பார்க்கவில்லை. ஏற்கனவே கேள்விப்பட்டதும் இல்லை. ஆனால், குறுகிய நேரத்திற்குள் ஒப்புதல் கொடுத்துவிட்டேன்,” என்கிறார் தினேஷ்.
“அதன்பிறகு எதுவும் சரியாக இல்லை,” என்கிறார் அவர்.
2019 ஜூலை மாதம் பாரிசத்ரி சுகாதார மையத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஐந்து பெண்களில் பாவ்னாவும் ஒருவர். கருமுட்டை குழாய்க்கு செல்லும் பாதையை அடைக்கும் முறையை எம்பிபிஎஸ் மருத்துவர் செய்துள்ளார். சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்தில் மற்ற நான்கு பெண்களும் வெளியே சென்றுவிட்டனர். மூன்று மணி நேரம் கழித்து பாவ்னா சுயநினைவிற்கு திரும்பியபோது அடிவயிற்றில் கடுமையான வலி இருந்துள்ளது. அவரது இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதால் ஊசி கொடுத்து இரவு முழுவதும் சுகாதார மையத்தில் தங்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். அடுத்த நாளும் அவரது அடிவயிற்றில் வலி தொடர்ந்தது. இருப்பினும் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
“அந்த மருத்துவர், அறுவை சிகிச்சை செய்தால் வலி ஏற்படுவது இயல்புதான் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், என்று கோபமாக கூறினார்” என தினேஷ் நினைவுகூர்கிறார்.
இரவு ஆக, பாவ்னாவின் வயிறு வீங்கி, வலி தீவிரமானது. காலையில் தம்பதியினர் மீண்டும் சுகாதார மையத்திற்கு வந்தனர். எக்ஸ்ரே, சோனோகிராபி செய்யப்பட்டு, பாவ்னா மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். என்ன தவறு நடந்தது என அவர்களுக்குத் தெரியவில்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு அவருக்கு ஒரு நாளுக்கு ஆறு பாட்டில்கள் IV திரவங்கள் வழங்கப்பட்டன. இரண்டு நாட்களுக்கு அவருக்கு உணவு எதுவும் அனுமதிக்கப்பவில்லை. வயிற்றில் வீக்கம் குறைந்து, மீண்டும் அதிகரித்தது.
அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாவது நாள் இரவு சுமார் 10 மணியளவில், தினேஷை மருத்துவர் அழைத்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உதய்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். “அவர் ஏற்பாடு செய்த தனியார் போக்குவரத்திற்கு நான் பணம் (ரூ.1500) செலுத்தினேன், சுகாதார மையத்திலிருந்து மருந்தாளுநர் ஒருவரையும் என்னுடன் அவர் அனுப்பி வைத்தார். பிரச்னை என்ன? எனக்கு அப்போதும் தெரியவில்லை. அறுவை சிகிச்சை தொடர்பாக ஏதோ நடந்திருக்கிறது. அவ்வளவு தான்.”
உதய்பூர் அரசு மருத்துவமனைக்கு அதிகாலை 2 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு சென்றபோது மீண்டும் எக்ஸ்ரேஸ் எடுக்கப்பட்டு ஆராயப்பட்டது. மற்றொரு கிளையாக உள்ள மகளிர், குழந்தைகள் நலப் பிரிவிற்கு செல்லுமாறு அவர்கள் கூறினார்கள். அங்கு பாவ்னாவிற்கு மீண்டும் அனுமதிக்கான நடைமுறைகள் செய்யப்பட்டன.
பாவ்னாவிற்கு பணியில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததுடன், “பிற மருத்துவமனைகளின் தவறுகளுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்க முடியாது” என்றதும், ஏதோ விபரீதம் நிகழ்ந்ததை முதல்முறையாக தினேஷ் உணர்ந்தார்.
ஜூலை 22ஆம் தேதி இறுதியாக அவர் அனுமதிக்கப்பட்டபோது சோனோகிராபி செய்யப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சைகளை உடனடியாக செய்ய வேண்டும் என தினேஷிடம் கூறியுள்ளனர்- அவரது பெருங்குடலை சுத்தப்படுத்த குழாய் செருக வேண்டும், இரண்டாவது உடைந்து போன அவரது சிறுகுடலை சரிசெய்ய வேண்டும். அடுத்த 48 மணி நேரம் மிகவும் சிக்கலானது என தினேஷிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
பாரிசத்ரி சுகாதார மையத்தில் அவரது மனைவிக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவரின் கத்தி முனையால் சிறுகுடல் கிழிக்கப்பட்டு, அதிலிருந்து மலம் வெளியேறி, அடிவயிற்றில் பரவி, உடல் முழுவதும் தொற்றை ஏற்படுத்திவிட்டதாக, அறுவை சிகிச்சைக்கு பிறகு தினேஷிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு பாவ்னா கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவரது குழந்தைகள் தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டனர். நீரும், தேநீரும் மட்டும் அருந்தியபடி மனைவியின் உடல் முன்னேற்றத்திற்காக கணவர் காத்திருந்தார். பாவ்னாவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. ஜூலை 24ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு அவர் காலமானார்.
சித்தார்காரைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான பிரயாஸ் மனித உரிமைகள் சட்ட குழுமத்துடன் இணைந்து 2019 டிசம்பர் மாதம் உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியது. பாவ்னாவுக்கு செய்யப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையில், இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் குறிப்பிடும் ஆண், பெண் கருத்தடை சேவைகளுக்கான (2006) தரநிலை மீறப்பட்டுள்ளது தெளிவானது.
முதற்கட்ட தகவல் அல்லது ஆலோசனைகள் ஏதுமின்றி நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள, சமூக மையத்தால் பாவ்னா ஏமாற்றப்பட்டு இருக்கிறார் என்று அவர்களுடைய அறிக்கை சொல்கிறது. அலட்சியத்தால் ஏற்பட்ட பிரச்சனை குறித்துகூட சுகாதார மையத்தின் மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. சேதத்தை சரிசெய்ய எந்த அறுவை சிகிச்சைக்கும் முன்வரவில்லை. குடும்பக் கட்டுப்பாடு இழப்பீடு திட்டம் 2013ன் கீழ் கருப்பை குழாய் அடைப்பு சிகிச்சை செய்தவுடன் மரணம் நிகழ்ந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு பெறலாம் என்பது பற்றி சுகாதார மையத்திலோ, உதய்பூர் மருத்துவமனையிலோ குடும்பத்தினருக்கு யாரும் தெரிவிக்கவில்லை.
அரசின் வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் இலக்கு நோக்கி கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் எப்படி செயல்படுகின்றன, பெண்களின் உரிமைகள், ஆரோக்கியம் பற்றி எவ்வாறு அக்கறையின்றி உள்ளன என்று பிரயாஸ் இயக்குநர் சாயா பச்சோலி குறிப்பிடுகிறார்.
“தம்பதிகள் அறுவை சிகிச்சைக்கு தயாராக உள்ளனரா, இதுபற்றி சிந்திக்க ஒரு பெண்ணுக்கு அதிக நேரம் கொடுக்கப்பட வேண்டும்,” என வழிகாட்டுதல்களை குறிப்பிடுகிறார் பச்சோலி. “முகாம் நடக்கிறது என்பதற்காக அறுவை சிகிச்சைக்கு எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது, அதிக பெண்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தமே இதற்கு காரணம். அரசு இலக்கு நிர்ணயிக்கக் கூடாது, பெண்களை கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகாள்ளுமாறு சுகாதாரப் பணியாளர்கள் அழுத்தம் கொடுப்பதும் நமக்கு தெரியும். கருத்தடை அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டம் [நிர்வாகங்கள்] தீர்மானிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் அறுவை சிகிச்சை செய்யும் மாவட்டங்களுக்கு அரசு விருது கொடுக்கிறது. இந்த முறையை முதலில் நிறுத்த வேண்டும்.”
“முகாமின் அணுகுமுறை என்பது ஆத்மார்த்தமானதாக இருக்க வேண்டும், பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள் மட்டுமின்றி முன்னும், பின்னும் சிறந்த பராமரிப்பு தேவை, சிக்கல் இருந்தால் அதில் கவனம் செலுத்த வேண்டும்,” என தொடர்கிறார் பச்சோலி. “கருத்தடை என்பது ஆரம்ப சுகாதாரத் துறையில் ஒரு வழக்கமான நடவடிக்கையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். சுகாதார செயல்பாட்டாளர்கள் ஆலோசனை திறன்களைக் கொண்டிருக்க வேண்டும், பராமரிப்பின் முக்கிய அங்கமாக உயர்த்தப்பட வேண்டும்.”
ராஜஸ்தானின் பல இடங்களில் இதுபோன்ற தோல்வியடைந்த கருத்தடை அறுவை சிகிச்சை சம்பவங்கள் தொடர்பாக பிரயாஸ் கவனம் செலுத்துகிறது. ஆனால் இழப்பீட்டிற்கான தகுதி குறித்து அவர்கள் அறியாததால், யாரும் அதை கோருவதில்லை.
“குடும்பத்தினர் / கணவர் ஆகியோருக்கு போதிய தகவல்களை அளிக்காமல் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அரிதாக நடக்கும் சிக்கல்கள் பற்றி யாரும் ஆலோசிப்பதில்லை, பெண்களும் இதற்கு தயாராவதில்லை. கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியுற்றால் என்ன செய்வது அல்லது உடல் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து அவர்களுக்கு ஒருபோதும் ஆலோசனை வழங்குவதில்லை. அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால், மரணம் நிகழ்ந்தால், சிக்கல் ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்பது பற்றி அரிதாகவே அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது,” என்கிறார் பச்சோலி.
விதிகள் மீறப்பட்ட நிலையிலும், தினேஷ் வலிமையுடன் குடும்பத்தின் இழப்பை ஏற்கிறார், பள்ளிக்கு மதிய உணவு கொண்டு செல்வது பற்றி முரண் நகையுடன் சொல்கிறார். “ஒரு நாள் மதியஉணவு டப்பாவை காலியாக எடுத்துச் சென்றுவிட்டேன்,” என சிரிக்கிறார்.
சுதார் குடும்பத்தின் இழப்பு ஈடுஇணையற்றது என்றாலும் புதிதாக தொடங்கவே அவர் விரும்புகிறார். அவரது வீட்டில் சில கட்டமைப்பு பணிகளை தொடர்கிறார். ஒருபுறம் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது, மறுபுறம் அம்மிக்கல் சத்தம் எழுகிறது, அக்கம்பக்கத்து பெண்கள் தேவான்ஷை கவனித்துக் கொள்கின்றனர்.
பாவ்னாவின் மரணம் வரை அவர்களின் குடும்பம் மருத்துவம், போக்குவரத்து என ரூ.25,000 வரை செலவிட்டுள்ளது. இந்த பெருந்துயரிலும் நீதி கிடைக்கும் என தினேஷ் காத்திருக்கிறார். ரூ.2 லட்சம் இழப்பீடு கோரிய அவரது விண்ணப்பம் சித்தார்கார் முதன்மை மருத்துவ அலுவலரிடம் நிலுவையில் உள்ளது. “என்னிடம் இருந்த அனைத்தையும் செலவு செய்துவிட்டேன்,” என்கிறார் அவர். “அவள் உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.”
முகப்புச் சித்திரம்: லபானி ஜாங்கி மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் உள்ள ஆய்வு மையத்தில் வங்காள தொழிலாளர்களின் புலம்பெயர்வு குறித்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் உள்ளார். அவர் சுயமாக ஓவியம் கற்றவர், பயணத்தை நேசிப்பவர்.
கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் பதின்பருவப் பெண்கள், இளம்பெண்கள் குறித்து தேசிய அளவில் செய்தி சேகரிக்கும் திட்டத்தை பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து பாரியும் கெளன்டர் மீடியா டிரஸ்டும் செய்கின்றன. இதன் மூலம் விளிம்புநிலை மக்களின் குரல்களையும் அவர்களின் வாழ்வனுபவங்களையும் வெளிக்கொணர்கின்றன.
இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா?
zahra@ruralindiaonline.org
என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள்.
namita@ruralindiaonline.org
என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா