பன்வாரி தேவியின் 13 வயது மகள் பஜ்ரா வயல்களில் உயர்சாதியினரால் வல்லுறவு செய்யப்பட்டபோது, அவர் ஒரு லத்தியை எடுத்துக்கொண்டு வல்லுறவு செய்தவனை பின் தொடர்ந்து சென்றார். அவருக்கு காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர் அஹிரான் கா ராம்புராவின் ஆதிக்க சாதியினரிடமிருந்து எந்தவித நிவாரணமும் கேட்க  முடியாமல் தடுக்கப்பட்டார். “கிராம சாதி பஞ்சாயத்து எனக்கு நீதி வழங்குவதாக வாக்குறுதி அளித்தது” என்கிறார். “ஆனால் அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் ராம்புராவிலிருந்து வெளியேற்றினர்.” வல்லுறவு சம்பவம் நடைபெற்று சுமார் பத்தாண்டுகள் கழித்தும், அஜ்மர் கிராமத்திலிருந்து ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

ராஜஸ்தானிலும் இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இம்மாநிலத்தில் சராசரியாக 60 மணி நேரத்திற்கும் ஒரு தலித் பெண் வல்லுறவுக்கு ஆளாகிறார்.

பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையத்தின் ஆய்வு முடிவுகளின் படி 1991 முதல் 1996 வரை பட்டியல் சாதி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக சுமார் 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது வருடத்திற்கு 150 வழக்குகள் – அல்லது ஒவ்வொரு அறுபது மணி நேரத்திற்கும் ஒரு வழக்கு. (ஜனாதிபதி ஆட்சியில் இருந்த ஒரு சில மாதங்களை தவிர்த்து, பாரதீய ஜனதா கட்சியே அம்மாநிலத்தை முழுவதும் ஆட்சி செய்தது.) எண்ணிக்கைகள் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை. இத்தகைய குற்றச் சம்பவங்களை குறைவாக பதிவாவது நாட்டிலேயே இம்மாநிலத்தில்தான் மிகவும் மோசமாக உள்ளது.

தொல்பூர் மாவட்டத்தில் உள்ள நக்சோடாவில், மிக மோசமான ஒரு அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிராமத்தை விட்டே  வெளியே சென்றுவிட்டார். 1998 ஏப்ரலில், ராமேஸ்வர் ஜாதவ் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்தவர், குஜ்ஜர் என்ற உயர் சாதியினரிடம் தான் கடனாக வழங்கிய 150 ரூபாய் பணத்தை திரும்பக் கேட்டார். பிரச்சினை உருவானது. அவருடைய ஆணவத்தால் ஆத்திரமடைந்த சில குஜ்ஜர்கள் அவரது மூக்கை துளையிட்டு அதில் இரண்டு கயிற்று வளையங்களை மாட்டியதோடு, ஒரு மீட்டர் நீளம் மற்றும் 2 மிமீ கனமுடைய அதை  மூக்கில் மாட்டி விட்டனர். பிறகு  கிராமத்தை சுற்றி அவரை கூட்டிச் சென்றனர்.

இச்சம்பவம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றதோடு தேசிய அளவில் சீற்றம் பெற்றது. வெளிநாடுகளிலும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பரவலாக அறிவிக்கப்பட்டது. அனைத்து செய்திகளும் நீதியை உறுதிபடுத்துவதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கிராமத்திற்குள்ளிருந்த அச்சமும் களத்தில் இருந்த அதிகாரத்துவமும் அதை அப்படியிருக்கும் வகையில் பார்த்துக் கொண்டன. பரபரப்பும் கவர்ச்சியும் இல்லாமல் போகவே, ஊடகமும் வழக்கின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தது. அதே போலவே மனித உரிமை அமைப்புகளும் ஆர்வத்தை இழந்தன. பாதிப்புக்குள்ளானவர்கள் பிந்தைய இசையை எதிர்கொண்டனர். ராமேஷ்வர் தனது நீதிமன்ற வாதத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டார். ஆம், அராஜகம் நடந்தது. எனினும், புகாரில் கொடுக்கப்பட்டுள்ள அந்த ஆறு பேர் குற்றத்தை செய்யவில்லை. அவரால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியவில்லை.

காயங்களை பதிவு செய்த மூத்த மருத்துவ அலுவலர் தற்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டதாக கூறினார். ஆம், ராமேஷ்வர் அவரை காயங்களுடன் அணுகினார். அவரால் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை, பாதிக்கப்பட்டவர் அந்த அசாதாரண காயங்களை எவ்வாறு கடந்து வந்தார் என்று கூறிய போதும் கூட.

Mangi Lai Jatav and his wife in Naksoda village in Dholupur district. A man and a woman standing outside a hut
PHOTO • P. Sainath

ராமேஷ்வர் ஜாதவ்வின் பெற்றோர்கள் நக்சோடா கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டில் உள்ளனர். அங்கு தான் ஜாதவ்வின் மூக்கில் சணல் வளையத்துடன்  கொண்டு செல்லப்பட்டார்: ‘நாங்கள் இங்கு திகிலுடன் வாழ்கிறோம்.’

ராமேஷ்வரின் தந்தை, மங்கி லால், அவரே கொடுத்த சாட்சிக்கு விரோதமாக மாறிவிட்டார். “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்”, என்று நக்சோடாவில் என்னிடம் கேட்டார். “நாங்கள் இங்கு திகிலுடன் வாழ்கிறோம். அதிகாரிகள் எங்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள். குஜ்ஜர்கள் எங்களை எந்நேரத்திலும் தீர்த்துக் கட்டலாம். பல்வேறு சக்தி வாய்ந்த மனிதர்கள்ளும் காவல்துறையில் சிலரும் இதை எங்கள் மீது திணிக்கிறார்கள்.” ராமேஷ்வர் கிராமத்தை விட்டு வெளியேறினார். மங்கி லால் தன் குடும்பத்திற்கு சொந்தமான மூன்று பிகா நிலத்தில் ஒன்றை விற்றுதான் வழக்குகளுக்கு செலவு செய்திருக்கிறார்.

உலகத்தைப் பொறுத்தவரை அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான ‘இதர ஐபிசி’ (இந்திய தண்டனை சட்டம்) வழக்குகளில் ஒன்றாகும். அதாவது கொலை, வல்லுறவு, கொளுத்துதல் அல்லது கடுமையான காயம் உண்டாக்குதல் போன்றவை. 1991 முதல் 1996 வரை, ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் இத்தகைய ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள சைந்திரி குடியிருப்புவாசிகள், கடந்த ஏழு வருடங்களாக எந்த ஒரு திருமணமும் நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். குறைந்தபட்சம், ஆண்களுக்கு நடக்கவில்லை. வெறிப்பிடித்த உயர்சாதி கும்பலால் சைந்திரி தாக்கப்பட்ட ஜுன் 1992 முதல் இப்படிதான் இருந்து வருகிறது. ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர் மற்றும் பல வீடுகள் அழிக்கப்பட்டன. கொலை செய்யப்பட்டவர்களில் சிலர் உயிரோடு எரிக்கப்பட்டனர். அவர்கள் சாணம் மற்றும் விறகுக் கட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒளிந்திருந்தபோது வேண்டுமென்றே கொளுத்தப்பட்டனர்.

A pile of dung cakes
PHOTO • P. Sainath
A pile of dung cakes
PHOTO • P. Sainath

சைந்திரி கிராமத்தில்,  இதே போல் சாணம் மற்றும் விறகுக் கட்டைகள் இருந்த கொட்டாரம் வெறிப்பிடித்த உயர்சாதி கும்பலால் தாக்கப்பட்டு ஆறு பேர் கொல்லப்பட்டனர்

“சைந்திரி கிராமத்து பெண்களால் திருமணம் செய்துகொள்ள முடிகிறது. அவ்வாறு செய்யும் போது அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர்.” என்கிறார் பகவான் தேவி. “ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. சில ஆண்கள் திருமணம் செய்துகொள்வதற்காக இந்த கிராமத்தை விட்டு வெளியே சென்றனர். மகள்களை இங்கு அனுப்ப எவரும் விரும்புவதில்லை. மீண்டும் ஒருமுறை நாங்கள் தாக்கப்பட்டால் காவல்துறையும் நீதிமன்றமும் எங்களை காப்பாற்றாது என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.”

அவரது எதிர்மறைத்தன்மையில் யதார்த்தம் இருக்கிறது. கொலைகள் நடந்து ஏழு வருடங்கள் கழித்தும், இச்சம்பவம் குறித்து எந்த ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

அது கூட பெரிய விஷயமில்லை. ஒன்பது நாட்களுக்கு ஒரு முறை ஒரு தலித் கொலை செய்யப்படுகிறார்.

அதே கிராமத்தில் வசிப்பவர் தான் தன் சிங். நெருப்பு சம்பவத்தில் (முகப்புப் படத்தை பார்க்கவும்) உயிர் பிழைத்தவர். மருத்துவப்பதிவுகளின் படி அச்சம்பவத்தின் போது அவரது உடம்பில் 35 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரது காதுகள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன. அவருக்கு கிடைத்தது சிறிய இழப்பீடு – காரணம் அவரது சகோதரர் கொல்லப்பட்டவர்களில் ஒருவராவார் – பல நாட்களுக்கு முன்பே மருத்துவ செலவுகளில் தீர்ந்துவிட்டது. “நான் எனது சிறிய நிலத்தை விற்று செலவுகளை பார்த்துக்கொள்கிறேன்.” என நம்பிக்கையிழந்த அந்த மனிதர் சொல்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் ஜெய்ப்பூர் செல்லும் போதும் பயணத்திற்காக மட்டுமே பல நூறு ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருந்தது.

தன் சிங் வெறும் ஒரு புள்ளிவிவரமாகிப் போனார். ஒவ்வொரு 60 மணி நேரத்திற்கும் ஒரு தலித் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்.

டாங்க் மாவட்டத்தின் ரஹோலியில் உள்ள  தலித்கள் மீது உள்ளூர் ஆசிரியர்களின் தூண்டுதலில் பல தீ விபத்து சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. “இந்த இழப்புகள் மிகவும் மோசமானது”, என்கிறார் அஞ்சு புல்வாரியா. அவர்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட - தலித் –  தலையாரி. ஆனால், “அந்த பதவியில் இருந்து பொய்யான குற்றச்சாட்டுகளால் இடைநீக்கம் செய்யப்பட்டேன்”, என்கிறார். அந்த செயலுக்காக எவரும் தண்டிக்கப்படவில்லை என்பது அவருக்கு ஆச்சரியமூட்டவில்லை.

சராசரியாக, ஒரு தலித் வீடு அல்லது உடைமை ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும், குற்றமுடையவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவே.

ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளரான அருண் குமார், தலித்களுக்கு எதிராக திட்டமிட்டு பாரபட்சம் காட்டப்படுகிறது என்கிற கருத்தை ஏற்கவில்லை. எச்சரிக்கும் அளவில் எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம் இத்தகைய குற்றங்களை பதிவு செய்வதில் அரசு காட்டும் ஒழுங்குதான் என அவர் நம்புகிறார். “பதிவு செய்யப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழாத சில மாநிலங்களில் இதுவும் ஒன்று. ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து முயலுவதால்தான் நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்ற எண்ணிக்கையும் அதிகமாக தெரிகிறது.” அதே போல் விசாரணை முடியும் விகிதமும் நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் சிறப்பாக இருப்பதாக அவர் நம்புகிறார்.

Anju Phulwaria, the persecuted sarpanch
PHOTO • P. Sainath

அஞ்சு புல்வாரியா என்பவர் தான் ரஹோலியின் தலித் தலையாரி. ஆனால், ‘நான் எனது பதவியில் இருந்து பொய்யான குற்றங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டேன்,’ என்கிறார் அவர்

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? பாராளுமன்றத்தின் முன்னாள் ஜனதா தள கட்சி உறுப்பினரான தன் சிங் என்பவர் தலித்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் குழுவில் 90-களின் ஆரம்பத்தில் இருந்தார். “குற்றம் நிரூபிக்கப்படுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே,” என்று அவர் தனது ஜெய்ப்பூர் வீட்டில் கூறினார்.

தொல்பூர் மாவட்டத்தில், நான் பார்வையிட்ட நீதிமன்றங்களில், அந்த விகிதம் இன்னும் குறைவாகவே இருப்பதை கண்டேன். மொத்தமாக, அவ்வகையில் 1996 முதல் 1998 வரை 359 வழக்குகள் அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், இங்கு குற்றம் விசாரிக்கப்படுவது 2.5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

தொல்பூரில் உள்ள ஒரு காவல்துறை உயர் அதிகாரி சொன்னது: “என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால், நீதிமன்றங்கள் பல பொய்யான குற்றங்களை கையாளுகின்றன. மேலும் 50 சதவிகிதத்திற்கும் மேலான தலித் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பொய்யாக இருக்கின்றன. அத்தகைய பொய்யான வழக்குகள் மூலம் தேவையற்ற துன்புறுத்தலுக்கு மக்கள்  ஆளாகின்றனர்.”

அவருடைய பார்வை என்பது ராஜஸ்தானின் பெரும்பாலான உயர்சாதி காவல்துறை அதிகாரிகளுடைய பார்வையாக இருக்கிறது. (ஒரு மூத்த அரசு அலுவலர் சி.ஆர்.பி காவல் படையை – சாரங்-ராஜ்புத் காவலர்” என்று குறிப்பிடுகிறார். இவ்விரண்டு சக்தி வாய்ந்த சாதிகள், இப்படையில் 90-கள் வரை ஆதிக்கம் செலுத்தினர். )

சாதாரண மக்கள், குறிப்பாக ஏழை மற்றும் பலவீனமானவர்கள், பொய்யர்கள் என்ற கருத்து காவல்துறையினரிடையே ஆழமாக இருக்கிறது. அனைத்து சமூகத்தினரிடையே இருக்கும் வல்லுறவு வழக்குகளை எடுத்துக்கொள்வோம். இத்தகைய வழக்குகளில் விசாரணைக்கு பின் பொய்யென கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளின் தேசிய சராசரி 5 சதவிகிதம். ராஜஸ்தானிலோ பொய்யென அறிவிக்கப்படும் வல்லுறவு வழக்குகளின் சதவிகிதம் 27 ஆக இருக்கிறது.

இத்தகைய கூற்று, இம்மாநிலத்தில் உள்ள பெண்கள், மொத்த நாட்டிலுள்ள பெண்களைவிட ஐந்து மடங்கு அதிகமாக பொய் சொல்கிறார்கள் என சொல்வதற்கு ஒப்பானது ஆகும். இதற்கு என்ன விளக்கம் இருக்க முடியும்? பெண்களுக்கு எதிரான பெரிய பாரபட்சம் அமைப்புக்குள் இருக்கிறது. ‘பொய் வல்லுறவு’ என்கிற தரவுகள் எல்லா சமூகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. விரிவான ஓர் ஆய்வு நடத்தப்பட்டால் அத்தகைய பாரபட்சத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது பட்டியல் சாதி மற்றும் பழங்குடி இனங்கள்தான் என்பதை கண்டுபிடிக்க முடியும். எளிமையாக சொல்வதெனில், பிற சமூகங்கள் அனுபவிக்கும் கொடுமைகளின் அளவை காட்டிலும் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளின் அளவு அதிகம்.

நான் ராஜஸ்தான் சென்றபோது, அங்குள்ள எல்லா இடங்களிலும் என்னிடம் உறுதியாக கூறப்பட்டது என்னவென்றால், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளை தலித் சமூகத்தினர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதாகும். அனைத்துக்கும் மேலாக பெரிதும் அஞ்சப்படும் அச்சட்டத்தின் 3ம் பிரிவு, தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக சாதிய ஒடுக்குமுறை குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐந்து வருடங்கள் வரை அபராதத்துடன் சிறையில் தள்ள முடியும்.

யதார்த்தத்தில், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக ஒரு வழக்கை கூட நான் இதுவரை கண்டதில்லை.

தொல்பூரிலேயே, தலித்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான வழக்குகளில் பொதுவாக வழங்கப்பட்டிருக்கும் சில தண்டனைகளும் கூட குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் வகையில் இல்லை. ரூ.100 அல்லது ரூ.250 அல்லது ரூ.500 அபராதம் முதல் ஒரு மாத கால சிறைவாசம் வரையான எளிய தண்டனைகளே வழங்கப்படுகிறது. நான் கடந்து வந்த கடுமையான தண்டனை என்பது ஆறு மாத கால சிறை வாசம் ஆகும். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சோதனைக் காலமாக ஆறு மாதப் பிணையில் இருந்தார். சோதனை காலம் என்ற கருத்துருவாக்கத்தை இந்த செய்தியாளர் இது போன்ற வழக்குகளில் வேறெங்கும் இதுவரை கண்டதில்லை.

தொல்பூர்  நிலை ஒரு தனித்த நிலை அல்ல. டாங்க் மாவட்ட தலைமையகத்தில் இருக்கும் தலித் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு  நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்படும் விகிதம் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. எனினும் நீதிமன்றத்திற்கு செல்லும் ஒரு தலித் சந்திக்கும் படிகள் மற்றும் தடைகள்,  நடைமுறைகள் மற்றும் ஆபத்துகள் என்னென்ன? அது மற்றொரு கதை.

இந்த இரு பாக கட்டுரை முதலில் தி இந்துவில் ஜூன் 13, 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  பன்னாட்டு மன்னிப்பு சபையின் மனித உரிமைகளுக்கான முதல் சர்வதேச விருதை இக்கட்டுரை வென்றது. அப்பரிசு 2000-ம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan