லடாக்கில் உள்ள சோ மோரிரி ஏரிக்குச் செல்லும் வழியில், மேய்ச்சல் நிலங்களில் கம்பளியால் ஆன கூடாரங்கள் தட்டுப்படுகின்றன. இவை சாங்தாங்கி (பஷ்மினா) ஆடுகளை மேய்க்கும் சாங்பாஸின் வீடுகள். மிகச் சிறந்தத் தரமான உண்மையான காஷ்மீர் கம்பளிகள் கிடைக்கும் இடங்களில் அவையும் ஒன்றாகும்.
சாங்பாக்கள் மேய்ச்சல் பழங்குடிகள். அவர்கள் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் திபெத்திலிருந்து குடிபெயர்ந்து, இமயமலையின் குறுக்கே திபெத்திய பீடபூமியின் மேற்குப் பகுதியான சாங்தாங் பகுதிக்கு வந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்குள் வெளிநாட்டினர் நுழைய முடியாது. இந்தியர்கள் நுழையக் கூட லேயில் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இந்த புகைப்படக் கட்டுரை கிழக்கு லடாக்கில் உள்ள ஹான்லே பள்ளத்தாக்கின் சாங்பாஸை ஆவணப்படுத்துகிறது. அவர்களின் சொந்த மதிப்பீடுகளின்படி, இங்கு சுமார் 40-50 சங்பா குடும்பங்கள் வாழ்கின்றனர்.
ஹான்லே பள்ளத்தாக்கு ஒரு பரந்த, கரடுமுரடான பகுதி. நீண்ட குளிர்காலமும் மிக குறைந்த கோடை காலமும் கொண்ட பகுதி. இப்பகுதி மண்ணின் கடினத்தன்மையால் தாவரங்கள் குறைவாகவே இருக்கின்றன. கோடைக்காலத்தில் தங்கள் சமூகத் தலைவர்களால் ஒதுக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மேய்ச்சல் நிலங்களில் பசுமையான மேய்ச்சல் நிலம் தேடி சாங்க்பாக்கள் நகர்கின்றனர்.
பிப்ரவரி 2015-ன் குளிர்காலத்தில், ஹான்லே பள்ளத்தாக்குக்குச் சென்றேன். நீண்ட தேடலுக்குப் பிறகு, கிராமவாசிகளின் உதவியுடன், சாங்பா கர்மா ரிஞ்சன் எனக்கு அறிமுகமானார். குளிர்காலத்தில், சாங்பாங்கள் ஒப்பீட்டளவில் அசையா வாழ்க்கை வாழ்கிறார்கள். 2016ம் ஆண்டின் கோடையில் நான் மீண்டும் சென்றேன். அந்த வருடத்தின் ஆகஸ்டு மாதத்தில், இரண்டு நாள் காத்திருப்புக்குப் பிறகு, கர்மா ரிஞ்சன் இறுதியாக தோன்றினார். அடுத்த நாள், ஹான்லே கிராமத்திலிருந்து மூன்று மணிநேர பயண தூரத்தில் உள்ள கோடை மேய்ச்சல் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
4,941 மீட்டர் உயரத்தில் கர்மாவின் கோடைகால இல்லம் இருந்தது. கோடைகாலத்திலும் சில நேரங்களில் இங்கு பனிப்பொழிவு இருக்கும். அடுத்த ஏழு நாட்களை அவருடனும் அவர் குடும்பத்துடனும் கழித்தேன். கர்மாவுக்கு சுமாராக 50 வயது இருக்கலாம். அவரது சமூகத்தில் மூத்தவர்.சாங்பா குடும்பங்களின் நான்கு பிரிவுகள் அவரைச் சார்ந்து இயங்குகின்றன. சமூகத்தின் பெரியவர் என்பவர் புத்திசாலியாகவும், ஆன்ம நிலை கொண்டவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும். கர்மாவிடம் இந்த குணங்கள் எல்லாமும் இருக்கின்றன. "நாடோடி வாழ்க்கையை நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் அது சுதந்திரமானது," என்று அவர் திபெத்திய மற்றும் லடாக்கி மொழிகளின் கலவையில் கூறுகிறார்.
சாங்பாக்கள் பவுத்தர்கள் ஆவர். தலாய் லாமாவைப் பின்பற்றுபவர்கள். ஆடுகளைத் தவிர, அவர்கள் செம்மறி ஆடுகளையும் வளர்க்கிறார்கள். மேலும் பலர் இன்னும் பழைய பண்டமாற்று முறையைப் பின்பற்றுகிறார்கள். பல்வேறு சமூகங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் சில பொருட்களை தங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொள்கின்றன.
ஆனால் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. வழியில், இந்திய இராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையின் சுமூகமான போக்குவரத்தை உறுதிசெய்ய சாலை கட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அச்சாலை நிலப்பரப்பை மாற்றும். மேலும், 2016 நன்றாக இருக்கவில்லை என்கிறார் கர்மா. “...ஏனென்றால் லேவில் இருந்து கூட்டுறவு சங்கம் இன்னும் கம்பளி சேகரிக்க வரவில்லை. சீனாவில் இருந்து குறைந்த தரம் மற்றும் மலிவான காஷ்மீர் கம்பளி சந்தைக்கு வருவது இதற்குக் காரணமாக இருக்கலாம்."

சாங்பாக்கள் ரெபோஸ் எனப்படும் கூடாரங்களில் வாழ்கின்றனர். ஒரு ரெபோவை உருவாக்க, மலைமாட்டின் கம்பளி நூலாக சுழற்றப்படுகிறது. பின்னர் நெய்யப்பட்டு ஒன்றாக தைக்கப்படுகிறது. இந்த பொருள் நாடோடிகளை கடுமையான குளிர் மற்றும் பனிக்கட்டி காற்றிலிருந்து பாதுகாக்கிறது. ரெபோ சுமார் இரண்டடி ஆழமுள்ள குழியின் மேல் அமைக்கப்பட்டு, மரத்தடிகளால் தாங்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு ரெபோவிலும் ஒரு தனிக்குடும்பம் வசிக்கிறது

சாங்பா குடும்பம் ஒரு கோடை நாளில் தங்கள் ரெபோவின் வெளியே மலைமாட்டுக் கம்பளியை தைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் பெரும்பாலான நேரம் மேய்த்தல், பால் கறத்தல் மற்றும் வெட்டுதல் ஆகிய தினசரி நடவடிக்கைகளில் கழிந்து விடுகிறது: நடுவில் சம்துப், என்ற சங்பா சிறுவன் நிற்கிறான்

யமாவும் பேமாவும் கம்பளி தயாரிப்பதில் மும்முரமாக உள்ளனர். சாங்பா பெண்கள் அனுபவம் வாய்ந்த மேய்ப்பர்கள்; இளம் பெண்கள் பொதுவாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதே சமயம் வயதான பெண்கள் பால் கறத்தல் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பதில் பங்கேற்கின்றனர். சமூகத்தில் உள்ள ஆண்களும் விலங்குகளை மேய்க்கின்றனர். அவற்றை வெட்டி, விலங்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

கடந்த காலத்தில், சாங்பாக்கள் பல கணவர் மண - பல சகோதரர்கள் ஒரே பெண்ணை மணக்கும் - முறையைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த நடைமுறை தற்போது மறைந்துவிட்டது

கோடை நாட்கள் எப்போதும் வேலைகள் கொண்டிருப்பதால் சில சமயங்களில் மதிய உணவு இடைவேளைக்கு வாய்ப்பு இருக்காது. எனவே சாங்பாங்கள் பழங்கள் அல்லது உலர்ந்த மலை மாட்டு இறைச்சி மற்றும் ஜவ்வரிசியில் செய்யப்பட்ட சில உணவு வகைகளைச் சாப்பிடுகிறார்கள்

டென்சின், ஒரு சங்பா குழந்தை. தனது தந்தையிடம் இருந்து பொறி வாங்குகிறது. முற்காலத்தில் சிறு பிள்ளைகள் மந்தைகளை எண்ணுவதற்கு அவர்களது குடும்பத்தாரால் கற்பிக்கப்பட்டனர். ஆனால் இந்த வாழ்க்கை முறை வேகமாக மாறி வருகிறது. பெரும்பாலான சங்பா குழந்தைகள் இப்போது கிழக்கு லடாக்கில் பள்ளிக்குச் செல்கிறார்கள்

சாங்பா மேய்ப்பரான தோம்கே, அன்றைய தினத்திற்குத் தயாராகிறார். ஒவ்வொரு மேய்ப்பரும் ஒவ்வொரு நாளும் சுமார் 5-6 மணி நேரம் மேய்ச்சலில் செலவிடுகிறார். சாங்பாக்கள் தங்கள் விலங்குகளுடன் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றைப் பாதுகாக்க அவர்கள் அதிக முயற்சி செய்கிறார்கள்

கர்மா ரிஞ்சன் சமூகத்தில் மூத்தவர் ஆவார். ஒரு சமூகப் பெரியவர் புத்திசாலியாகவும் ஆன்மீகம் மற்றும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த குணங்கள் அனைத்தும் அவரிடம் உள்ளன

பஷ்மினா ஆடுகள் அதிக உயரத்தில் மேய்கின்றன. ஆண்டின் பெரும்பகுதி முழுவதும், விலங்குகள் 4,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள மேய்ச்சல் நிலங்களில் மேய்கின்றன

ஒருநாள் முழுவதும் மேய்ச்சலுக்குப் பிறகு மந்தைகள் திரும்பும்போது, அவற்றை எண்ணி பெண் ஆடுகளைப் பிரிப்பது அவசியம். இது முடிந்ததும், பால் கறத்தல் தொடங்குகிறது

தோக்மேயின் குடும்பம் போன்ற சில குடும்பங்கள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஆகியவற்றில் பால் கறக்கின்றன. பாலாடைக்கட்டி போன்ற பால் மற்றும் பால் பொருட்கள் சாங்பா குடும்பங்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய முக்கிய வழி

பாஷ்மினா அல்லது சாங்தாங்கி ஆட்டின் மென்மையான அடித்தோலில் இருந்து வரும் காஷ்மீர் கம்பளி அளிப்பவர்களில் முக்கியமானோர் சாங்பாக்கள். இந்த அடித்தோல் குளிர்காலத்தில் அதிகபட்ச நீளத்தை அடைகிறது

எரிபொருளுக்காக ஆர்ட்டெமிசியா போன்ற புதர்களைச் சேகரித்துவிட்டு வசிப்பிடத்துக்குத் திரும்பும் இரண்டு சாங்பா பெண்கள்

கடல் மட்டத்திலிருந்து
4,940 மீட்டர் உயரத்தில், கோடை காலம் சூடாக இருக்காது. ஹான்லே பள்ளத்தாக்கில், பகல்
அல்லது இரவின் எந்த நேரத்திலும் பனி அல்லது மழை பெய்யும்
தமிழில்: ராஜசங்கீதன்