22 பேரும், ஏற்கனவே மூன்று அல்லது நான்கு வருடங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் சோர்வடைந்துள்ளனர். 2021-ம் ஆண்டின் கோடையில் தண்ணீர் எடுக்க மீனு சர்தார் வெளியேறியபோது, மோசமான நிலை வரப்போகிறது என அவளை எச்சரித்திருக்க முடியாது. தயாபூர் கிராமத்தில் குளத்துக்கு செல்லும் படித்துறை ஆங்காங்கே உடைந்திருந்தது. மீனு வழுக்கிப் படிக்கட்டில் இருந்து கீழே தலை குப்புற விழுந்தார்.
"எனக்கு மார்பு மற்றும் வயிற்றில் கடுமையான வலி இருந்தது," என்று அவர் பெங்காலியில் கூறுகிறார். “எனக்கு யோனியில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. நான் குளியலறைக்கு சென்றபோது, என்னிடமிருந்து ஏதோ நழுவி தரையில் விழுந்தது. உள்ளே இருந்து சதை போன்ற பொருள் வெளிவருவதைக் கவனித்தேன். நான் அதை வெளியே எடுக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் முழுமையாகப் பிரித்தெடுக்க முடியவில்லை.”
அருகில் உள்ள கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது கருச்சிதைவு உறுதி செய்யப்பட்டது. உயரமாக, ஒல்லியாக இருக்கும் மீனு, கவலைகள் இருந்தபோதிலும் புன்னகைத்தார். சமபவம் நடந்த அன்றிலிருந்து கடுமையான உடல் வலி மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றுடன் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் இருக்கின்றன.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கோசாபா தொகுதியில் உள்ள அவரது கிராமத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். பரந்து விரிந்த நெல் வயல்கள் மற்றும் சுந்தரவனத்தின் சதுப்புநிலக் காடுகளால் சூழப்பட்ட கோசாபாவின் உள் கிராமங்களில் அது மட்டும்தான் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
மீனு விழுந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நிற்காமல் ரத்தம் கசிந்தது. அவரின் தவிப்பு அதோடு முடிந்துவிடவில்லை. "உடலுறவு மிகவும் வேதனையானது," என்று அவர் கூறுகிறார். "நான் கிழிக்கப்படுவது போல் உணர்கிறேன். நான் மலம் கழிக்கும்போதும் அழுத்தம் கொடுக்கும்போதும் கனமான பொருட்களை தூக்கும்போதும், என் கருப்பை கீழே வருவதை உணர முடியும்.”
சூழ்நிலைகளும் நிபந்தனைகளும் அவருடையத் துயரத்தை ஆழமாக்கியது. விழுந்த பிறகு பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், 10-ம் வகுப்புக்கு மேல் படிக்காத மீனு, தயாபூரில் உள்ள சுகாதார செயற்பாட்டுப் பணியாளரை கலந்தாலோசிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். “அவருக்குத் தெரிய நான் விரும்பவில்லை, ஏனென்றால் என்னுடைய கருச்சிதைவு பற்றி என் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். மேலும், அவருக்கு என்ன செய்வது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை,” என்கிறார் அவர்..
அவரும் அவரது கணவர் பாப்பா சர்தாரும் குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் எந்த கருத்தடை முறையும் பயன்படுத்தவில்லை. “திருமணமானபோது குடும்பக் கட்டுப்பாடு முறைகள் பற்றி எனக்குத் தெரியாது. யாரும் என்னிடம் சொல்லவில்லை. கருச்சிதைவுக்குப் பிறகுதான் அவற்றைப் பற்றி அறிந்தேன்.”
தயாபூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோசபா கிராமப்புற மருத்துவமனையில் பணிபுரியும் ஒரே பெண் மகப்பேறு மருத்துவர் மீனுவுக்குத் தெரியும். ஆனால் அவர் இருப்பதில்லை. அவரது கிராமத்தில் இரண்டு கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர்கள் (RMPகள்), உரிமம் பெறாத சுகாதார வழங்குநர்கள் உள்ளனர்.
தயாபூரின் இரு மருத்துவப் பயிற்சியாளர்களுமே ஆண்கள்.
“எனது பிரச்சினையை ஓர் ஆணிடம் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. மேலும், அவர்களுக்கு நிபுணத்துவம் இல்லை, ”என்று அவர் கூறுகிறார்.
மீனுவும் பாப்பாவும் மாவட்டத்தில் உள்ள பல தனியார் மருத்துவர்களை சந்தித்தனர். கொல்கத்தாவில் இருக்கும் ஒரு மருத்துவரையும் சந்தித்தனர். 10,000 ரூபாய்க்கு மேல் செலவானது. எந்த முன்னேற்றமும் இல்லை. இருவரில் பாப்பா மட்டும்தான் சம்பாதிப்பவர். சிறிய மளிகைக் கடையில் வேலை பார்க்கிறார். ரூ.5,000 ஊதியம் மருத்துவத்துக்காக நண்பர்களிடம் கடன் வாங்கினார்.
தயாபூரில் உள்ள ஒரு ஹோமியோபதி மருத்துவரின் மாத்திரைகள் இறுதியில் அவரது மாதவிடாய் சுழற்சியை மீட்டெடுத்தன. தனது கருச்சிதைவு பற்றி பேசுவதற்கு வசதியாக இருந்த ஒரே ஆண் மருத்துவர் அவர்தான் என்கிறார் அவர். வயிற்றில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து, பிறப்புறுப்பு வெளியேற்றம் மற்றும் கடுமையான அசௌகரியம் ஆகியவற்றைக் கண்டறிய, போதுமான பணத்தைச் சேமிக்கும் வரை மீனு காத்திருக்க வேண்டும்.
அதுவரை, அவர் கனமான பொருட்களை தூக்க முடியாது. அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டும்.
சுகாதார சேவையை அணுக மீனு சுற்றிச் செல்லும் பாதை என்பது கிராமத்துப் பெண்களிடையே வழங்கப்படும் பொதுவான கதையாகும். 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய சுந்தரவனக் காடுகளில் உள்ள சுகாதார அமைப்பு பற்றிய ஆய்வு , இங்கு வசிப்பவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பில் விருப்பங்கள் இல்லை என்று கூறுகிறது. பொது நிதியுதவி பெறும் வசதிகள் "இருப்பதில்லை அல்லது செயல்படுவதில்லை" என்றும்செயல்பாட்டு வசதிகள் நிலப்பரப்பு காரணமாக அணுக முடியாததாக இருக்கலாம் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த இடைவெளியை நிரப்புவது முறைசாரா சுகாதார வழங்குநர்களின் படை. "காலநிலை நெருக்கடி நேரங்களைப் போலவே சாதாரண நேரங்களிலும் அவர்கள்தான் வழி" என மருத்துவப் பயிற்சியாளர்களின் சமூக வலைப்பின்னலை ஆய்வு குறிப்பிடுகிறது.
*****
இது ஒன்றும் மீனுவின் முதல் மோசமான உடல்நலப் பிரச்சனை அல்ல. 2018-ம் ஆண்டில், அவர் உடல் முழுவதும் அரிப்பால் அவதிப்பட்டார். சிவந்த கொப்பளங்கள் அவரது கைகள், கால்கள், மார்பு மற்றும் முகம் ஆகிய இடங்களில் தோன்றியது. கைகளும் கால்களும் வீங்குவதை அவர் உணர முடிந்தது. வெப்பம் அரிப்பை அதிகப்படுத்தியது. குடும்பம் கிட்டத்தட்ட 20,000 ரூபாயை மருத்துவம் மற்றும் மருந்துகளுக்கு செலவழித்தது.
"ஒரு வருடத்திற்கும் மேலாக, மருத்துவமனைகளுக்குச் செல்வது மட்டுமே என் வாழ்க்கையாக இருந்தது" என்று அவர் கூறுகிறார். குணமாகுதல் மெதுவாக நடந்தது. தோல் பிரச்சினை மீண்டும் வரலாம் என்ற ஒரு நிலையான பயம் அவரைப் பீடித்தது.
மீனு வசிக்கும் இடத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில், ரஜத் ஜூபிலி கிராமத்தில் உள்ள 51 வயது அலாபி மொண்டல் இதே போன்ற ஒரு கதையை விவரிக்கிறார். "மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் தோல் முழுவதிலும் கடுமையான அரிப்புகளை அனுபவித்தேன். சில நேரங்களில் சீழ் கூட வரும். இதேப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பல பெண்களை நான் அறிவேன். ஒரு கட்டத்தில், எங்கள் கிராமத்திலும் பக்கத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கேனும் தோலில் தொற்று இருந்தது. இது ஒரு வகையான வைரஸ் என்று மருத்துவர் என்னிடம் கூறினார்.”
மீனவப் பெண்ணான அலாபி, ஏறக்குறைய ஒரு வருடமாக மருந்து சாப்பிட்டு வந்த நிலையில், இப்போது தேறியிருக்கிறார். சோனார்பூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தில் வெறும் 2 ரூபாய் கட்டணத்துக்கு அவர் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்கிறார். ஆனால் மருந்துகள் விலை உயர்ந்தவை. அவரது குடும்பம் 13,000 ரூபாய் சிகிச்சைக்கு செலவழித்தார். மருத்துவ மையத்துக்கு போக 4-5 மணி நேரம் ஆகும். அவருடைய சொந்த கிராமத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சிறிய மருத்துவ மையம் உள்ளது. ஆனால் அதன் இருப்பு பற்றி அவருக்கு அப்போது தெரியாது.
"என் தோல் பிரச்சினைகள் மோசமடைந்த பிறகு, நான் மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டேன்," என்று அவர் கூறுகிறார். முன்பு, அவர் ஆற்றங்கரையில் சுற்றுவார். கழுத்து வரையான நீரில் மணிக்கணக்கில் நின்று வரி இறால் குஞ்சுகளை வலையில் பிடித்து இழுத்திருக்கிறாள். பிறகு அவர் வேலை செய்ய செல்லவில்லை.
ரஜத் ஜூபிலியில் உள்ள பல பெண்கள், சுந்தரவனக் காடுகளின் அதிக உப்புத்தன்மை கொண்ட நீரைக் குற்றம் சாட்டுகின்றனர்.
இது மீனுவின் முதல் மோசமான உடல்நலப் பிரச்சனை அல்ல. 2018 -ம் ஆண்டில், அவர் உடல் முழுவதிலும் அரிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். சிவப்புக் கொப்பளங்கள் அவரது கைகள், கால்கள், மார்பு மற்றும் முகம் ஆகியவற்றில் வந்தன. கைகள் மற்றும் கால்கள் வீங்குவதை உணர்ந்தார்
உள்ளூர் நீரின் தரத்தின் தாக்கம் பற்றிய இந்திய சுந்தரவனத்தின் குளம் சுற்றுச்சூழல் என்ற புத்தகத்தில், உப்புக் குளத்து நீரை சமைக்கவும் குளிப்பதற்கும் மற்றும் துவைக்கவும் பெண்கள் பயன்படுத்துவதால் தோல் நோய்களுக்கு அவர்கள் ஆளாகிறார்கள் என்று எழுதுகிறார் எழுத்தாளர் சௌரவ் தாஸ். இறால் விவசாயிகள் ஒரு நாளைக்கு 4-6 மணி நேரம் உப்பு நீரில் நேரம் செலவிடுகிறார்கள். "உப்பு நீரைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் இனப்பெருக்கப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுகிறது," என்று அவர் குறிப்பிடுகிறார்.
சுந்தரவனக் காட்டு நீரின் அசாதாரணமான அதிக உப்புத்தன்மை, காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருக்கும் கடல் மட்டம், புயல்கள் ஆகியவற்றால் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடிநீர் உட்பட அனைத்து நீர் ஆதாரங்களிலும் உப்பு நீர் கலப்பு என்பது ஆசியாவின் பெரிய நதி டெல்டா பகுதிகளுக்கு பொதுவானது .
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஷியமோல் சக்ரவர்த்தி கூறுகையில், "சுந்தரவனக் காடுகளில், நீரின் அதிக உப்புத்தன்மை மகளிர் நோய்ப் பிரச்சனைகளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். குறிப்பாக இடுப்பு அழற்சி நோய்களின் அதிக விகிதத்துக்கு உப்பு நீர் காரணமாக இருக்கிறது" என்கிறார் அவர். கர் மருத்துவமனை சுந்தரவனக் காடுகளில் பல மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கிறது. “ஆனால் உப்பு நீர் மட்டுமே காரணம் அல்ல. சமூகப் பொருளாதார நிலை, சூழலியல், பிளாஸ்டிக் பயன்பாடு, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விநியோக அமைப்புகள் எல்லாமும் கூட முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பான இன்டர்நியூஸின் மூத்த சுகாதார ஊடக ஆலோசகர் டாக்டர் ஜெ ஸ்ரீதரின் கருத்துப்படி, இந்தப் பகுதியிலுள்ள பெண்கள் - குறிப்பாக இறால் விவசாயிகள் - ஒரு நாளைக்கு 4-7 மணி நேரம் உப்புநீரை உட்கொள்கின்றனர். வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், இருதய நோய்கள், வயிற்று வலி மற்றும் இரைப்பை புண்கள் உள்ளிட்ட பல துன்பங்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உப்பு நீர் உயர் ரத்த அழுத்தத்தைக் கொடுக்கலாம் வழிவகுக்கலாம், குறிப்பாக பெண்களுக்கு. கர்ப்பத்தை பாதிக்கும். சில சமயங்களில் கருச்சிதைவுகளை ஏற்படுத்தும்.
*****
சுந்தரவனக் காடுகளில் உள்ள 15-59 வயதுக்குட்பட்டவர்களில், ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக நோய்வாய்ப்படுவதாக 2010ம் ஆண்டின் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
தொலைதூரப் பகுதிகளில் மருத்துவச் சேவைகளை வழங்கும் சவுத் 24 பர்கானாஸில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான சதர்ன் ஹெல்த் இம்ப்ரூவ்மென்ட் சமிட்டியால் நடத்தப்படும் நடமாடும் மருத்துவப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்வருல் ஆலம், சுந்தரவனக் காடுகளில் தங்கள் பயண மருத்துவப் பிரிவுக்கு வாரத்தில் 400-450 நோயாளிகளிகள் வருவதாகச் சொல்கிறார். சுமார் 60 சதவிகிதம் பேர் பெண்கள். பலர் தோல் நோய்கள், லுகோரியா (யோனி வெளியேற்றம்), ரத்த சோகை மற்றும் அமினோரியா (மாதவிடாய் இன்மை அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய்) ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக ஆலம் கூறுகிறார். "பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் படகு மூலம் தீவுகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. அவை உள்நாட்டில் விளைவிக்கப்படுவதில்லை. எல்லோராலும் அவற்றை வாங்க முடியாது. கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் இளநீர் தட்டுப்பாடு ஆகியவையும் நோய்களுக்கு முக்கியக் காரணம்,” என்கிறார்.
மீனுவும் அலபியும் பெரும்பாலான நாட்களில் அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் மீன் சாப்பிடுவார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அவர்கள் வளர்க்காததால் கொஞ்சம்தான் சாப்பிடுகிறார்கள். மீனுவைப் போலவே, அலபிக்கும் பல நோய்கள் உள்ளன.
சுந்தரவனக் காட்டு நீரின் அசாதாரணமான அதிக உப்புத்தன்மை, காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருக்கும் கடல் மட்டம், புயல்கள் ஆகியவற்றால் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அலபிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. "சோனோகிராஃபியில் ஒரு கட்டி இருப்பது தெரிந்தபிறகு, எனது கருப்பையை அகற்ற மூன்று அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. என் குடும்பம் 50,000 ரூபாய்க்கு மேல் செலவழித்திருக்கும்,” என்கிறார். முதல் அறுவைசிகிச்சை குடல்வால் அகற்ற செய்யப்பட்டது. மற்ற இரண்டும் கருப்பை நீக்க செய்யப்பட்டன.
அலபியின் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய, பக்கத்து தொகுதியின் சோனகாலி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ரஜத் ஜூபிலியிலிருந்து கோசாபாவில் உள்ள படகுப் பாதைக்கு அவர் ஒரு படகில் செல்ல வேண்டும். மற்றொருப் படகில் கத்காலி கிராமத்தில் உள்ள படகுப் பாதைக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து ஒரு பேருந்து அல்லது ஷேர் வேனில் சோனகாலிக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லவே 2-3 மணி நேரம் ஆகும்.
ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள அலபிக்கு, ரஜத் ஜூபிலியில் கருப்பை நீக்கம் செய்யப்பட்ட நான்கு அல்லது ஐந்து பெண்களையாவது தெரியும்.
அவர்களில் ஒருவர் 40 வயது மீனவப் பெண்மணி பசந்தி மொண்டல். “என் கருப்பையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். முன்பு, மீன்பிடிக்கச் செல்ல எனக்கு அதிக ஆற்றல் இருந்தது. என்னால் மிகவும் கடினமாக உழைக்க முடிந்தது,” என்கிறார் மூன்று பிள்ளைகளின் தாயான அவர். "ஆனால் என் கருப்பை அகற்றப்பட்ட பிறகு நான் ஆற்றல் மிக்கவளாக உணரவில்லை." அவர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள 40,000 ரூபாய் செலவழித்தார்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-4 (2015-16) மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 2.1 சதவீதம் பேர் கருப்பை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. நகர்ப்புற மேற்கு வங்க விகிதமான 1.9 சதவீதத்தை விட இது சற்று அதிக விகிதமாகும். (அகில இந்திய விகிதம் 3.2.)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெங்காலி நாளிதழான ஆனந்தபஜார் பத்ரிகாவில் வெளியிடப்பட்ட கட்டுரையில், சுந்தரவனத்தின் 26-36 வயது பெண்கள், பிறப்புறுப்பு தொற்று, அதிகமான அல்லது ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, வலிமிகுந்த உடலுறவு அல்லது இடுப்பு வீக்கம் போன்ற பிரச்சினைகளால் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை செய்வதாக குறிப்பிடுறார் பத்திரிகையாளர் ஸ்வாதி பட்டாச்சார்ஜி.
தகுதியற்ற மருத்துவ நிபுணர்கள், இப்பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் சொல்லி பயமுறுத்துகிறார்கள். பட்டாச்சார்ஜியின் கூற்றுப்படி, லாபம் ஈட்டும் தனியார் மையங்கள், பயனாளிக் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான காப்பீடு அளிக்கும் மாநில அரசின் ஸ்வஸ்த்ய சதி காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
மீனு, அலபி, பசந்தி மற்றும் சுந்தரவனக் காடுகளில் உள்ள லட்சக்கணக்கான பெண்களுக்கு, பாலியல் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த உடல்நலப் பிரச்சனைகள், சுகாதாரப் பாதுகாப்பை அணுகுவதில் உள்ள சிரமங்களால் பன்மடங்காக்கப்பட்டுள்ளது.
பாசந்தி தனது கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக கோசாபா ஒன்றியத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து ஐந்து மணிநேரம் பயணம் செய்தார். “அரசாங்கம் ஏன் அதிக மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அமைக்கவில்லை? அதிகமான மகப்பேறு மருத்துவர்களை ஏன் அது பணியமர்த்தவில்லை?” என அவர் கேட்கிறார். "நாங்கள் ஏழைகளாக இருந்தாலும், நாங்கள் இறக்க விரும்பவில்லை."
மீனு மற்றும் பாப்பா சர்தாரின் பெயர்கள் மற்றும் அவர்களின் அவர்களின் இருப்பிடம் ஆகியவை அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன.
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்