"எங்கள் குழந்தை கருப்பையில் இறந்துவிட்டதாக அவர்கள் கூறினார்கள். நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். பின்னர் அவர்கள் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி, எங்கு வேண்டுமானாலும் போக சொன்னார்கள். எனவே, எனது மருமகளை நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்,”என்கிறார் சுகியா தேவி. பீகாரில் உள்ள வைஷாலி மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் (பி.எச்.சி) அவரும் அவரது மருமகள் குசுமும் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
பிறந்து ஒரு நாளே ஆன தனது உயிருள்ள பேத்தியை தனது கைகளில் வைத்திருக்கிறார் 62 வயதான விவசாயத் தொழிலாளி. அவர் ஆரம்ப சுகாதார மையத்தில் காலை 10 மணியளவில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக ஒரு வரிசையில் காத்திருக்கிறார்.
அவரது 28 வயதான மருமகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, சுகியா அவரை வைஷாலி ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் குழந்தை இறந்துவிட்டதாக ஓர் உதவியாளர் அவர்களிடம் சொன்னார். பீதியடைந்த அவரும், குசுமும் ஓர் ஆட்டோவில், சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் (கிராமத்தின் பெயர் வெளியிட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்) உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பினர். "நாங்கள் எங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றோம், ஒரு மஹிலா மருத்துவரிடம் [மகப்பேறு மருத்துவர்] செல்ல ஒரு தனியார் வாகனமான, பொலிரோவை வாடகைக்கு எடுத்தோம். வாடகை கட்டணங்கள் குறித்து விசாரிப்பது பற்றிகூட நான் நினைக்கவில்லை. பிரசவம் குறித்து நான் மிகவும் கவலையுற்று இருந்தேன். அருகில் இருப்பவர்களின் உதவியுடன், எனது மருமகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன். நாங்கள் கிளினிக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்."
அவர்கள் மருத்துவரை நோக்கி செல்லும் வழியில், ‘கருப்பையில் இறந்த’ குழந்தை காரில் உயிருடன் வந்தது.
"அவள் அங்கேயே வாகனத்தில் பிறந்தாள்", என்று சுகியா கூறுகிறார். ”அது மிகவும் சுமூகமாக நடந்தது,”, என்று அவர் கூறுகிறார். அவர்கள் ஏற்கனவே ஒரு சேலையை வைத்திருந்தனர், அவர்கள் அதை போர்வையாக பயன்படுத்தினர், உள்ளூர் மருத்துவ கடை உரிமையாளர் (அவர்களுடன் வந்தவர்) வாகனத்தில் சிறிது தண்ணீரை வைத்திருந்தார். சுகியா மேலும் கூறுகிறார், “ஆனால் இதற்கெல்லாம் இவ்வளவு நேரம் பிடித்தது…”.
அதற்கு பணம் செலவானது. ஒப்பீட்டளவில் குறுகிய தூரம் இருந்தபோதிலும், கார் உரிமையாளர் அந்த பயணத்திற்கு ரூ.3000 கட்டணமாகப் பெற்றார். மேலும் வாகனத்தை ஒருவர் சுத்தம் செய்ய ரூ.1000 வாங்கினார்.
ஆனால் உண்மையில் ஆரம்ப சுகாதார மையத்தில் என்ன மாற்றப்பட்டது? அல்ட்ராசவுண்ட் இயந்திரமோ அல்லது வேறு எந்த இயந்திரமோ வேலை செய்யவில்லை என்பதை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டப்போதே தெரிந்துக்கொண்டோம். அப்படியானால், எந்த அடிப்படையில் குழந்தை கருப்பையில் இறந்துவிட்டது என்று அவர்களிடம் கூறப்பட்டது? இது ஒரு மேம்போக்காக சொல்லப்பட்ட விஷயமாகத் தெரிகிறது.
சுகியா கூறுகிறார்: “நாங்கள் மருத்துவமனைக்கு [பி.எச்.சி] வந்தபோது, அது இரவு தாமதமாகிவிட்டது. அவர்கள் அவரை பிரசவம் பார்க்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர், ஐந்து நிமிடங்களில், அவர்களில் ஒருவர் திரும்பி வந்து, இது மிகவும் நெருக்கடியான நிலை என்று என்னிடம் கூறினார். நாங்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது, என்று அவர் கூறினார். பின்னர், ஒரு உதவியாளர் என்று நினைக்கிறேன். அவர் வெளியே வந்து கருப்பையில் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினார். அது இரவு 11 மணியாக இருந்ததால், நாங்கள் எங்கள் உள்ளூர் ’ஆஷா’ ஊழியருடன் வரவில்லை. எனவே நான் வீட்டிற்கு திரும்பி என் பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் உதவியுடன் பொலிரோவை வாடகைக்கு எடுத்தோம். இந்த வாகனம் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது என்பதால், நாங்கள் அதை 15 நிமிடங்களுக்குள் பெற முடிந்தது. இல்லையெனில் என்ன நடந்திருக்கும் என்று கடவுளுக்குத்தான் தெரியும். "
ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்தால் (மற்றும் அதை சுத்தம் செய்வதற்கு) ரூ. 4,000 ஆகும் என்று சுகியா ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். “நாங்கள் வாகனம் கிடைத்ததும், எங்கள் கிராமத்திற்கு அருகில் வசிக்கும் ஒரு மருந்தகக் கடை உரிமையாளரை அழைத்துச் சென்றோம். அவர் குசுமுக்கு ‘ஒரு பாட்டில்’ [ஒரு ஊசி மற்றும் சொட்டு] கொடுத்தார், என் மருமகள் அங்கேயே [வாகனத்தில்] குழந்தை பிறந்தது. பின்னர் நாங்கள் அனைவரும் வீடு திரும்பினோம். ” அதற்குள் அது நள்ளிரவை தாண்டி இருந்தது.
நான் மறுநாள் ஆரம்ப சுகாதார மையத்தில் சுகியாவை சந்தித்தேன். குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கும், அவருக்காக பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும் அவர் அங்கு வந்திருந்தார். "இந்த மக்கள் இவர்கள் பணம் பெறாவிட்டால், இவர்கள் சான்றிதழை உருவாக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்," என்று அவர் கூறினார்.
இதன் சாராம்சத்தில், பி.எச்.சி ஊழியர்கள் முந்தைய நாள் கருப்பையில் இறந்ததாக அறிவித்த ஒரு குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை வழங்க பணம் கேட்கின்றனர்.
"இது மிகவும் நெருக்கடியான நிலை என்று கூறினார். ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது என்ற்ர்"
“எல்லோரும் பணம் கேட்கின்றனர். எவ்வளவு தோன்றுகிறதோ அவ்வளவு கேட்கிறார்கள். நான் ஒரு நபருக்கு 100 ரூபாயையும், பின்னர் 300 ரூபாய் இன்னொருவருக்கும் பிறப்புச் சான்றிதழை தயாரிக்க கொடுத்தேன். நான் மேலும் 350 ரூபாயை வேறொரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டியிருந்தது, ”என்று அவர் கூறுகிறார். "முன்னதாக, சிவப்பு சேலை அணிந்திருக்கும் இந்த சகோதரி, அருகில் நிற்கும் துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம்) நோக்கி சுட்டிக்காட்டுகிறார்,". அவர் 500 ரூபாய் கேட்டார், இல்லையெனில் நான் சான்றிதழ் பெறமாட்டேன் என்று கூறினார்.", என்கிறார் சுகியா, இருந்தாலும் இறுதியாக, மற்றவர்களுக்கு பணத்தை செலுத்தினார்.
“பாருங்கள், இந்த ஆவணங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், ஆனால் அவர்களில் எவருக்கும் இதை நான் பெறவில்லை. ஆனால், இப்போதெல்லாம் அவர்கள் இது முக்கியம் என்று என்னிடம் கூறுகின்றனர்",என்கிறார் சுகியா.
“எனக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்தவர் இந்த குழந்தையின் தந்தை. எனது இளைய மகனின் திருமணமும் இறுதி செய்யப்பட்டுள்ளது, என் மகள் எல்லாரைவிடவும் இளையவள். அவள் திருமணமாகாதவள், அவள் என்னுடன் இருக்கிறாள். இவர்கள் அனைவரும் சிறு குழந்தைகளாக இருந்தபோது, இவர்களின் தந்தை [விவசாயத் தொழிலாளி] இறந்துவிட்டார்”, கணவர் இறந்தபோது குழந்தைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தனர் என்பதை எனக்குக் காண்பிப்பதற்காக சுகியா கீழே குனிந்து, முழங்கால்களை நோக்கி கைகளைத் தாழ்த்திக் காட்டுகிறார்.
"என் குழந்தைகளை வளர்ப்பதற்கும் உணவளிப்பதற்கும் நான் பல ஆண்டுகளாக மற்றவர்களின் வயல்களில் பணியாற்றினேன்", என்று சுகியா கூறுகிறார். இப்போது அவரது மகன்கள் பணத்தை வீட்டிற்கு அனுப்புகிறார்கள். மேலும் அவர் இரண்டு பேரக்குழந்தைகளையும் (சமீபத்திய வருகை உட்பட), ஒரு தாயாக இருக்கும் அக்குழந்தைகளின் அம்மா குசும் மற்றும் அவரது சொந்த மகளை கவனித்து வருகிறார்.
“எனது மகன்கள் இருவரும் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்காக ஒரு‘ நிறுவனத்தில் ’வேலை செய்கின்றனர். இளையவர் மும்பையில் வசிக்கிறார் மற்றும் மின் பலகைகளை உருவாக்குகிறார். இந்த குழந்தையின் தந்தை [34 வயது] பஞ்சாப்பில் கட்டடங்களில் உட்புறங்களை கட்டியெழுப்ப பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வேலைகளை செய்யும் கைவினைஞராக பணிபுரிகிறார். ஊரடங்கின்போது எனது இரு மகன்களும் வீட்டிற்கு வரமுடியாத நிலை, ”சுகியாவின் குரல் கனமாகிறது. அவர் இடையில் நிறுத்துக்கிறார்.
“எனது மூத்த மகனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தேன். இது அவர்களின் இரண்டாவது குழந்தை. என் மூத்த பேரனுக்கு இப்போது மூன்றரை வயது”, என்று அவர் கூறுகிறார். அதே பி.எச்.சியில் பிறந்த குசுமின் முதல் குழந்தை பிரபாத்தை குறிப்பிடுகிறார். குசும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு அறையில் படுத்திருந்தபோது சுகியா பி.எச்.சி வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். குசுமின் இடதுபுறத்தில் ஒரு வெள்ளைச் சுவர் உள்ளது - பல ஆண்டுகளாக மக்கள் அதன்மேல் புகையிலை துப்பி அரை சிவப்பு நிறமாக மாறியிருந்தது. வார்டில் புகைப்படம் எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. குசுமின் வெற்று படுக்கையின் வலது பக்கத்தில் ஒரு அல்ட்ராசவுண்ட் இயந்திரம் உள்ளது, அது இப்போது சிலந்திகளுக்கு வீடாக மாறியிருந்தது. "இது கடந்த வாரத்தில் இருந்து வேலை செய்யவில்லை, துப்புரவாளர் அதை சுத்தம் செய்யவில்லை" என்று வேலையிலுள்ள துணை செவிலியர் மருத்துவச்சி கூறுகிறார்.
கர்ப்பத்தின் கடைசி மாதத்தில், குசும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு பி.எச்.சி ஊழியர்களின் ஆலோசனையின் பேரில் அல்ட்ராசவுண்ட் சோதனைக்காகச் சென்றிருந்தார். ஆனால் “பின்னர், நாங்கள் பிரசவத்திற்காக இங்கு வந்தபோது, அவர்கள் எங்களை திருப்பி அனுப்பினார்கள், இதனால் எங்களுக்கு மிகுந்த கடினமான நிலை ஏற்பட்டது”, என்று சுகியா கூறுகிறார். எங்கள் உரையாடல்களில் எந்தக் கட்டத்திலும் அதிர்ச்சியிலும் மயக்கத்திலும் இருந்த குசும், எங்களுடன் பேசும் நிலையில் இல்லை.
ஃபைலேரியாசிஸால் அவதிப்படும் சுகியா (அவரது கால்களில் ஒன்று மற்றொன்றின் அளவை விட இரு மடங்கு வீங்கியிருக்கிறது) கூறுகிறார்: “இது எப்போதும் அப்படியே இருக்கும். நீண்ட நேரம் நிற்பது எனக்கு ஒரு சவால். என்னால் அதிகம் நடக்க முடியாது. நான் மருந்து எடுக்கும் வரை மட்டுமே வலி போகும். ஆனால் நான் இந்த கால்களுடன் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இப்போது நான் இங்கே இருக்கிறேன், எனக்காக சில மருந்துகளையும் பெற வேண்டும். எனக்கு மருத்து காலியாகிக்கொண்டு இருக்கிறது."
தனது மூத்த பேரக்குழந்தையுடன், அவர் பி.எச்.சியின் மருந்து விநியோக மையத்தை நோக்கிச் செல்கிறார்.
அட்டைப்பட விளக்கம்: பிரியங்கா போரர் டிஜிட்டல் ஊடக கலைஞர், புதிய வடிவங்கள் மற்றும் வெளிப்பாட்டைக் கண்டறிய தொழில்நுட்பத்துடன் பரிசோதனை செய்கிறார். அவர் கற்றல் மற்றும் விளையாடுவதற்கான அனுபவங்களை வடிவமைக்கிறார், ஊடாடும் ஊடகங்களில் ஈடுபட்டுள்ளார், மேலும் பாரம்பரிய பேனா மற்றும் காகிதமும் அவர் மனதுக்கு பிடித்தவை.
பாரி மற்றும் கெளண்டர்மீடியா அறக்கட்டளையின் கிராமப்புற இந்தியாவில் பதின்வயது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் குறித்த நாடு தழுவிய செய்தி சேகரிப்பு திட்டம், ‘பாபுலேஷன் ஃபோண்டேஷன் ஆஃப் இந்தியா’வின் ஒரு பகுதியாகும். இது சாதாரண மக்களின் குரல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் முக்கியமான இன்னும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிலைமையை ஆராய்வதற்கான முயற்சி ஆகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய வேண்டுமா? namita@ruralindiaonline.org என்ற முகவரிக்கும் CCயுடன் zahra@ruralindiaonline.org என்ற முகவரிக்கும் எழுதுங்கள்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்