சிறு கட்டி கெட்டியாகிவிட்டது என்கிறார் ப்ரீத்தி யாதவ்.
வலது மார்பகத்தில் இருந்த வீக்கம் ஜூலை 2020ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாட்னாவில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு பயாப்ஸி என்கிற திசுச் சோதனையும் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டுமென்றும் சொல்லி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் ப்ரீத்தி மீண்டும் மருத்துவமனைக்கு செல்லவே இல்லை.
“விரைவில் அதை செய்து விடுவோம்,” என்கிறார் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர். முற்றமும் மூலிகைச் செடிகளும் கொண்ட பெரிய வீட்டின் தாழ்வாரத்தில் அவர் அமர்ந்திருக்கிறார்.
அவரின் வார்த்தைகள் மென்மையாக சோர்வுடன் வெளிப்பட்டது. சமீப வருடங்களில் அவரின் குடும்பத்திலிருந்து குறைந்தபட்சம் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருக்கிறார்கள். மார்ச் 2020ல் கோவிட் தொற்று தொடங்குவதற்கு முன், பிகாரின் சரன் மாவட்டத்தில் இருக்கும் சோனெப்பூர் ஒன்றியத்தில் அமைந்திருக்கும் அவரின் ஊரில் பலவகை புற்றுநோய் பாதிப்புகள் சில வருடங்களில் பதிவாகியிருந்தன. (அவரின் வேண்டுகோளின்படி ஊரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவரின் உண்மையான பெயரும் பயன்படுத்தப்படவில்லை.)
கட்டியை அறுவை சிகிச்சை மூலம் எப்போது அகற்றுவது என 24 வயது ப்ரீத்தி தனியாக முடிவெடுக்க முடியாது. அவரின் குடும்பம் அவரை மணம் முடித்துக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறது. ராணுவத்தில் பணிபுரியும் பக்கத்து ஊர் இளைஞனுக்கு அநேகமாக மணம் முடித்து வைப்பார்கள். “திருமணம் முடிந்த பிறகு கூட அறுவை சிகிச்சை செய்யலாம் இல்லையா? குழந்தை பிறந்தால் அந்த கட்டி மறைந்து போகும் வாய்ப்பும் இருப்பதாக மருத்துவர் கூறினார்,” என்கிறார் அவர்.
ஆனால் அவர்கள் மணமகனின் குடும்பத்திடம் கட்டியை பற்றியோ அறுவை சிகிச்சை பற்றியோ குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் இருக்கும் தகவல் பற்றியோ சொல்வார்களா? “அதை பற்றி எனக்கு புரியவில்லை,” என்கிறார். அவரின் அறுவை சிகிச்சை இச்சிக்கலை சார்ந்தே இருக்கிறது..
2019ம் ஆண்டில் நிலவியல் பட்டப்படிப்பு முடித்த ப்ரீத்திக்கு, கட்டி கண்டுபிடிக்கப்பட்டதும் அதற்கு பின்னான வருடங்களும் தனிமையுணர்வை அதிகரித்திருக்கிறது. அவரின் தந்தை, சிறுநீரக புற்றுநோய் பாதித்து 2016ம் ஆண்டின் நவம்பர் மாதம் இறந்தார். அதற்கு முந்தைய வருட ஜனவரி மாதத்தில் அவரின் தாய் மாரடைப்பால் காலமானார். 2013ம் ஆண்டிலிருந்து இருதய சிகிச்சைக்காக, சிறப்புப் பிரிவுகள் கொண்ட மருத்துவமனைகளை தேடி பலனின்றி அவர் உயிரிழந்தார். இருவரும் 50 வயதுகளில் இருந்தனர். “அப்போதிலிருந்து நான் தனிமையில்தான் இருக்கிறேன்,” என்கிறார் ப்ரீத்தி. “என் தாய் இருந்திருந்தால், என் பிரச்சினையை புரிந்து கொண்டிருந்திருப்பார்.”
தாய் இறப்பதற்கு சற்று முன்னாடிதான், குடும்பத்தில் இருந்த புற்றுநோய்களுக்கு குடிநீர் காரணமாக இருக்கலாம் eன்கிற உண்மை, தில்லியின் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் குடும்பத்துக்கு தெரிய வந்தது. “அம்மாவின் மனப் பதற்றங்களை பற்றி அங்கிருந்த மருத்துவர்கள் கேட்டனர். குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்களை பற்றி சொன்னதும், எங்களின் குடிநீர் பற்றி பல கேள்விகள் கேட்டனர். சில வருடங்களாகவே அடிகுழாயில் நாங்கள் எடுத்து வரும் குடிநீர் அரை மணி நேரத்தில் மஞ்சள் நிறமாகி விடுகிறது,” என்கிறார் ப்ரீத்தி.
நிலத்தடி நீரில் ஆபத்தான அளவில் ஆர்சினிக் தனிமம் கலந்திருக்கும் ஏழு மாநிலங்களில் (அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மணிப்பூர், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவையோடு) பிகாரும் ஒன்று. பிகாரின் 18 மாவட்டங்களில் இருக்கும் 57 ஒன்றியங்களின் - அவற்றில் ப்ரீத்தியின் சரன் கிராமமும் ஒன்று - நிலத்தடி நீரில் அதிகபட்ச ஆர்சினிக் கலப்பு ( 2010ம் ஆண்டில் வெளியான இரு அறிக்கைகளின்படி ) இருப்பது மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு லிட்டருக்கு 0.05 மில்லிகிராம் தாண்டிய அளவுக்கு கலப்பு இருக்கிறது. 10 மைக்ரோகிராம்தான் இருக்க வேண்டும்.
*****
அக்கா இறந்தபோது ப்ரீத்திக்கு 2 அல்லது 3 வயதுதான் இருக்கும். “அவளுக்கு கடுமையான வயிற்று வலிகள் எப்போதுமே இருக்கும். பல மருத்துவ மையங்களுக்கு அப்பா கொண்டு சென்றும் அவளை காப்பாற்ற முடியவில்லை,” என்கிறார் அவர். அப்போதிருந்து அவரின் தாய் கடுமையான அழுத்தத்தில் இருந்தார்.
பிறகு அவரது சித்தப்பா (தந்தையின் தம்பி) 2009ம் ஆண்டு இறந்தார். சித்தி 2012ம் ஆண்டில் இறந்தார். அவர்கள் அனைவரும் பண்ணை சூழந்த வீட்டில்தான் வசித்தனர். இருவருக்கும் வந்தது ரத்தப் புற்றுநோய். இருவரும் மிக தாமதமாக சிகிச்சைக்கு வந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
2013ம் ஆண்டில் அதே சித்தப்பாவின் 36 வயது மகன், ஹஜிப்பூர் டவினில் சிகிச்சைக்கு முயற்சித்து பலனின்றி இறந்து போனார். அவருக்கும் ரத்த புற்றுநோய் இருந்தது.
பல வருட காலமாக நோயும் மரணங்களும் குடும்பத்தை பீடித்ததால், ப்ரீத்தி குடும்பப் பொறுப்புகளை சுமக்க வேண்டியிருந்தது. “பத்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பாவும் அம்மாவும் நோயுற்ற பிறகு நான்தான் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு வருடமும் யாரேனும் இறந்து கொண்டிருந்தார்கள். அல்லது யாரேனும் ஒருவரின் உடல்நலம் குன்றியது.”
மணமகனின் குடும்பத்திடம் கட்டியை பற்றியோ அறுவை சிகிச்சை பற்றியோ குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் இருக்கும் தகவல் பற்றியோ சொல்வார்களா? “அதை பற்றி எனக்கு புரியவில்லை,” என்கிறார். அவரின் அறுவை சிகிச்சை இச்சிக்கலை சார்ந்தே இருக்கிறது
பெரிய கூட்டு குடும்பத்தின் சமையலை அவர் கவனிக்கத் தொடங்கிய பிறகு கல்வி இரண்டாம்பட்சமாகியது. அவரின் இரு சகோதரர்களில் ஒருவருக்கு திருமணமானது. அவரின் மனைவி வந்தபிறகு சமையல், சுத்தப்படுத்துதல், நோயுற்றோரை கவனித்துக் கொள்ளுதல் முதலிய வேலைகளின் சுமை சற்று குறைந்தது. குடும்பத்தின் அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக ஓர் உறவினரின் மனைவியை பாம்பு கடித்துவிட்டது. கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பினார். 2019ம் ஆண்டில் ப்ரீத்தியின் சகோதரர்களில் ஒருவருக்கு கண்ணில் காயம் பட்டுவிட்டது. சில மாதங்களுக்கு தொடர் பராமரிப்பு அவருக்கு தேவைப்பட்டது.
பெற்றோர் இறந்தவுடன் ப்ரீத்தி நம்பிக்கையிழந்து விட்டார். “விரக்தி இருந்தது. மிகுந்த பதற்றமும் இருந்தது.” கட்டி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர் மனதளவில் பெரும் பின்னடைவை அடைந்துவிட்டார்.
கிராமத்தில் இருக்கும் அனைவரையும் போலவே அவர்களும் அடிகுழாயில் பிடிக்கும் குடிநீரை வடிகட்டாமலும் காய்ச்சாமலும்தான் குடிக்கின்றனர். இருபது வருடங்களாக இருக்கும் 120-150 ஆழக் கிணறுதான் குளியல், கழுவுதல், குடிநீர் மற்றும் சமைத்தல் ஆகிய அவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. “தந்தையின் இறப்புக்கு பிறகு நாங்கள் RO வடிகட்டிய நீரைதான் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் ப்ரீத்தி. நிலத்தடி நீரிலுள்ள ஆர்சினிக் கலப்பை பற்றி பல ஆய்வுகள் பேசியிருப்பதால் மாவட்டத்தின் மக்களும் கலப்பை பற்றி தெரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். RO சுத்திகரிப்பு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டால், குடிநீரில் இருந்து ஆர்சினிக்கை வடிகட்டுவதில் ஓரளவுக்கு வெற்றியை தருகிறது.
1958ம் ஆண்டிலிருந்தே உலக சுகாதார நிறுவனம், ஆர்சினிக் கலப்பு நீரை குடித்தால் தோல், சிறுநீரகம், நுரையீரல் முதலிய உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்லி வருகிறது. தோலின் நிறம் மாறுதல், உள்ளங்கையில் தடிப்புகள் தோன்றுதல் முதலிய நோய்களும் ஏற்படுவதாக சொல்கிறது. சர்க்கரை வியாதி, தீவிர பதற்றம், இனவிருத்தி குறைபாடு ஆகியவற்றுக்கும் அசுத்தமான குடிநீருக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
பாட்னாவை சேர்ந்த மகாவீர் கேன்சர் சன்ஸ்தான் என்கிற தனியார் தொண்டு நிறுவனம் 2017லிருந்து 2019ம் ஆண்டு வரை புறநோயாளிகள் பிரிவுக்கு வருவோரிடமிருந்து 2000 ரத்த மாதிரிகளை சேகரித்தது. அவற்றை ஆராய்ந்ததில் புற்றுநோய் பாதித்தவர்களின் ரத்தத்தில் ஆர்சினிக் அளவு அதிகமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
“அதிக ஆர்சினிக்கை ரத்தத்தில் கொண்டிருக்கும் புற்றுநோயாளிகளில் பெரும்பாலானோர் கங்கை நதியின் அருகே உள்ள மாவட்டங்களை (சரனும் கூட) சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் ஆர்சினிக்குக்கும் அவர்களது புற்றுநோய்க்கும் நேரடி தொடர்பு இருக்கிறது,” என்கிறார் அந்த நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் அருண் குமார். பல ஆய்வுகளையும் இதை சார்ந்து அவர் செய்திருக்கிறார்.
‘நான் கிளம்பினால் கூட இங்கிருப்போருக்கு தெரிந்துவிடும். பாட்னாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய நான் சென்றால் அனைவரும் கண்டுபிடித்து விடுவார்கள்’
“2019ம் ஆண்டில் எங்களின் நிறுவனம் 15000 புற்றுநோய் பாதிப்புகளை பதிவு செய்தது,” என ஜனவரி 2021ம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது. “தொற்றுநோயியல் தரவுகளின்படி, புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் பதிவான நகரங்கள் கங்கா நதியின் அருகேதான் அமைந்திருக்கின்றன. அதிகபட்ச புற்றுநோய் பாதிப்புகள் புக்சார், போஜ்பூர், சரன், பாட்னா, வைஷாலி, சமஸ்டிப்பூர், முங்கெர், பெகுசராய் பகல்பூர் முதலிய மாவட்டங்களில்தான் பதிவாகி இருக்கின்றன.”
ப்ரீத்தியின் குடும்பமும் அவர் வசிக்கும் கிராமமும் பல ஆண்களையும் பெண்களையும் புற்றுநோய்க்கு இழந்திருக்கும் நிலையில், புற்றுநோய் மருத்துவர்களை சந்திப்பதில் இளம்பெண்களுக்கு பெரிய சவால்கள் இருக்கின்றன. புற்றுநோயைச் சுற்றி பெரும் அவமதிப்பு நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாக இளம்பெண்கள் பெரும் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ப்ரீத்தியின் சகோதரர்கள் சொல்கையில், “கிராமத்தில் இருக்கும் மக்கள் தவறாக பேசுவார்கள்… குடும்பம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்கின்றனர்.
‘நான் சில நாட்களுக்கு வெளியே சென்றால் கூட இங்கிருப்போருக்கு தெரிந்துவிடும். இது சிறிய கிராமம். பாட்னாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய நான் சென்றால் அனைவரும் கண்டுபிடித்து விடுவார்கள்” என்கிறார் ப்ரீத்தி. “குடிநீரில் புற்றுநோய் இருப்பது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.”
அன்பான கணவர் கிடைப்பாரென அவர் நம்புகிறார். அதே நேரத்தில் கட்டி அவரின் சந்தோஷத்தை குலைத்துவிடுமோ என்கிற பயமும் இருக்கிறது.
*****
“அவளால் தாய்ப்பால் கொடுக்க முடியுமா?”
ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணை பார்க்கையில் ரமுனி தேவி யாதவ்வின் மனதில் தோன்றும் கேள்வி அதுதான். அது 2015ம் ஆண்டின் கோடை காலம். “குறைந்தபட்சம், எனக்கான மார்பக அறுவை சிகிச்சை என்னுடைய முதிர்ந்த வயதில் நடந்தது. என்னுடைய நான்கு மகன்களும் வளர்ந்த பிறகுதான் எனக்கு மார்பக புற்றுநோய் வந்தது. இளம்பெண்களின் கதி என்ன?” எனக் கேட்கிறார் 58 வயது ரமுனி தேவி.
அவரின் குடும்பத்துக்கு சொந்தமாக 50 பிகா நிலம் (கிட்டத்தட்ட 17 ஏக்கர்) புக்சார் மாவட்டத்தின் பத்கா ராஜ்பூர் கிராமத்தில் இருக்கிறது. அந்த ஊர் ப்ரீத்தியின் கிராமத்திலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. உள்ளூர் அரசியலில் செல்வாக்கு பெற்ற குடும்பம். ஆறு வருடங்களாக மார்பக புற்றுநோயுடன் போராடி வெற்றியடைந்திருக்கிற ரமுனி தேவி, உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறார்.
ரமுனி போஜ்புரி பேசுகிறார். ஆனால் அவரது மகன்களும் கணவர் உமாஷங்கர் யாதவ்வும் உடனே மொழிபெயர்த்து கூறுகின்றனர். பத்கா ராஜ்பூரில் பல புற்றுநோய் பாதிப்புகள் இருப்பதாக சொல்கிறார் உமாஷங்கர். நிலத்தடி நீரில் ஆர்சினிக் கலப்பு அதிகமாக இருக்கும் 18 மாவட்டங்களில் புக்சார் மாவட்டமும் ஒன்று.
தன்னுடைய உடல்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை கடைசி அறுவை சிகிச்சை முடியும் வரை குடும்பம் தெரிவிக்கவில்லை என அன்னாசிப்பழங்களும் மாம்பழங்களும் அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலத்தில் நடந்தபடி கூறுகிறார் ரமுனி. கதிர்வீச்சு சிகிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளார்.
“ஆரம்பத்தில் அது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களின் அறியாமை நிறைய பிரச்சினைகளை கொடுத்தது,” என முதலில் பெனாரஸ் நகரில் நடந்த அரைகுறை அறுவை சிகிச்சையை விவரிக்கிறார் அவர். கட்டி அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் உருவாகி வளர்ந்து கடும் வலியை கொடுக்கத் தொடங்கியது. அதே 2014ம் வருடத்தில் அவர்கள் பெனாரஸ்ஸின் மருத்துவ மையத்துக்கு மீண்டும் சென்றனர். அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்படும் அதே முறை மீண்டும் நடந்தது.
“உள்ளூர் மருத்துவ மையத்தில் கட்டை மாற்ற சென்றபோது, காயம் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்,” என்கிறார் உமாஷங்கர். அதற்கு பிறகும் இரண்டு மருத்துவமனைகளுக்கு சென்று பார்த்தனர் குடும்பத்தினர். பிறகுதான் ஒருவரின் வழிகாட்டுதலின்படி பாட்னாவின் மகாவீர் கேன்சர் சன்ஸ்தானுக்கு 2015ம் ஆண்டின் நடுவில் சென்றனர்.
மாதக்கணக்கில் மருத்துவமனைகளுக்கு அலைந்ததும் ஊரை விட்டு பல முறை பயணிக்க வேண்டியிருந்ததும் இயல்பான குடும்ப வாழ்க்கையை பாதித்ததாக கூறுகிறார் ரமுனி. “ஒரு தாய்க்கு புற்றுநோய் வந்தால், அவர் மட்டுமின்றி, அவரின் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறது,” என்கிறார் அவர். “அச்சமயத்தில் ஒரு மருமகள்தான் இருந்தார். மிச்ச மூன்று மகன்களுக்கு அதற்கு பிறகுதான் திருமணம் முடிந்தது. அவர் ஒருவரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள சிரமமாக இருந்தது.”
அவரின் மகன்களுக்கும் தோல் வியாதிகள் இருக்கின்றன. 25 வருட பழமையான 100-150 ஆழ்துளைக் கிணற்றின் அடிகுழாய் தண்ணீரைதான் அவர்கள் குற்றம் சொல்கின்றனர். ரமுனிக்கு கீமோ சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது வீட்டில் குழப்பம் நிலவியது. ஒரு மகன் எல்லை பாதுகாப்பு படை வேலைக்கு திரும்பி விட்டதால் புக்சாருக்கு வருவதும் போவதுமாக இருந்தார். பக்கத்து கிராமத்தில் ஆசிரியராக இருந்த இன்னொரு மகன் நாள் முழுவதும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம். இவையன்றி பார்த்துக் கொள்ளவென ஒரு விவசாய நிலமும் இருந்தது.
“கடைசி அறுவை சிகிச்சையின்போது, புதிதாக திருமணமான ஒரு பெண்ணை மருத்துவமனை வார்டில் பார்த்தேன். அவரிடம் சென்று என்னுடைய தழும்பை காட்டி கவலைப்பட ஒன்றுமில்லை என்றேன். அவருக்கும் மார்பக புற்றுநோய்தான். திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்தபோதும் அவரின் கணவர் அவரை நன்றாக கவனித்துக் கொண்டது எனக்கு சந்தோஷத்தை அளித்தது. அவரால் தாய்ப்பால் நிச்சயம் கொடுக்க முடியுமென பிறகு மருத்துவர் தெரிவித்தார். அதைக் கேட்டதும் நான் மிகவும் சந்தோஷமடைந்தேன்,” என்கிறார் ரமுனி.
பத்கா ராஜ்பூரின் நிலத்தடி நீர் அசுத்தமாகிவிட்டதாக சொல்கிறார் அவரின் மகன் ஷிவாஜித். “குடிநீருக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு எங்களின் தாய் நோய்வாய்ப்படும் வரை எங்களுக்கு தெரியவில்லை. இங்கு இருக்கும் குடிநீர் ஒரு வித்தியாசமான நிறத்தில் இருக்கிறது. 2007ம் ஆண்டு வரை எல்லாமும் சரியாக இருந்தது. அதற்கு பிறகு குடிநீர் மஞ்சளாக மாறத் தொடங்கியது. இப்போது நிலத்தடி நீரை நாங்கள் குளிக்கவும் கழுவவும் மட்டுமே பயன்படுத்துகிறோம்,” என்கிறார் அவர்.
சமையலுக்கும் குடிநீருக்கும் சில நிறுவனங்களால் தானமளிக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலையின் நீரை பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் அந்நீரை பயன்படுத்துகின்றனர். ரமுனியின் நிலத்தில் 2020ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அது நிறுவப்பட்டது. பல ஆய்வறிக்கைகள் இங்கிருக்கும் நிலத்தடி நீர் 1999ம் ஆண்டிலிருந்து அசுத்தமாக தொடங்கியதாக தெரிவிக்கின்றன.
சுத்திகரிப்பு ஆலை பெரிதாக வெற்றி அடையவில்லை. கோடைகாலத்தில் அதன் நீர் மிகவும் சூடாக இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். 20-30 ரூபாய்க்கு விற்கப்படும் 20 லிட்டர் RO சுத்திகரிப்பு நீரின் விற்பனையும் அருகாமை கிராமங்களில் அதிகரித்து விட்டதாக சொல்கிறார் ஷிவாஜித். அந்த நீரில் உண்மையாக ஆர்சினிக் இல்லையா என்பது எவருக்கும் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் ஆர்சினிக் பாதிப்பு கொண்ட ஆற்றுப்படுகைகளில் அதிகமானவை இமயத்திலிருந்து வரும் ஆறுகளை சுற்றியே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கங்கை படுகையில் கலக்கும் நச்சு தனிமத்துக்கு நிலவியல் ரீதியான காரணம் உண்டு. ஆழமற்ற நீர்நிலைகளில் இருக்கும் ஆர்சினோபைரைட்ஸ் முதலிய கனிமங்களிலிருந்தே ஆர்சினிக் தனிமம் வெளியாகிறது. விவசாயத்துக்காக அதிகமாக உறிஞ்சப்பட்டு குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டமும் நீரில் கலப்பு ஏற்பட காரணமாவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை இன்னும் சில காரணங்களையும் வெளிப்படுத்துகின்றன:
“வண்டலில் இருக்கும் ஆர்சினிக் தனிமம் போல பல விஷயங்கள் இருக்கக் கூடும் என நாங்கள் சொல்கிறோம். ராஜ்மகால் படுகையில் காணப்படும் கோண்ட்வானா நிலக்கரி அடுக்குகளில் ஆர்சினிக் இருக்கிறது. இமயமலையின் டார்ஜிலிங் பகுதியில் 0.8 சதவிகிதம் ஆர்சினிக் கொண்ட சல்ஃபைடுகள் காணப்படுகின்றன. இன்னும் ஆர்சினிக் கொண்டிருக்கும் பல மூலங்கள் கங்கை நதிப் படுகையின் மேற்புறத்தில் இருக்கலாம்,” என இந்திய நிலவியல் கணக்கெடுப்பில் பணிபுரிந்த எஸ்.கே.ஆச்சார்யாவும் பிறரும் இணைந்து 1999ம் ஆண்டில் நேச்சர் பத்திரிகையில் வெளியிட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆழமற்ற மற்றும் ஆழம் நிறைந்த கிணறுகளில் ஆர்சினிக் கலப்பு குறைவாக இருக்குமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கலப்பு ஏற்பட்ட கிணறுகளின் ஆழம் 80லிருந்து 200 அடி வரை இருக்கிறது. மக்களின் வாழ்க்கைகளுடனும் இணைந்ததாக இது இருப்பதாக சொல்கிறார் டாக்டர் குமார். அவரின் நிறுவனம் கிராமங்களின் நீர் மாதிரிகளை பரந்துபட்ட ஆய்வுக்காக சேகரிக்கிறது. மழைநீரும் ஆழம் குறைந்த கிணறுகளின் நீரும் குறைவான ஆர்சினிக் கலப்பு கொண்டிருக்கின்றன. ஆழ்துளைக் கிணற்றின் நீரோ கோடை மாதங்களில் நிறம் மாறிவிடுகிறது.
*****
பத்கா ராஜ்பூரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் திலக் ராய் கா ஹட்டா கிராமம் இருக்கிறது. 340 குடும்பங்கள் இருக்கும் அந்த ஊர் புக்சார் மாவட்டத்தில் இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் நிலமற்றவர்கள். இங்கு வீடுகளுக்கு வெளியே இருக்கும் அடிகுழாயில் வெளிவரும் நீர் கரிய நிறத்தில் இருக்கிறது.
2013-14ம் ஆண்டு இக்கிராமத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிலத்தடி நீரில் ஆர்சினிக்கின் கலப்பு அதிகமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் தலைமை ஆய்வாளரான டாக்டர் குமார். ஆர்சினிக் பாதிப்பு கொண்ட கிராமவாசிகளுக்கு தோன்றிய பொதுவான அறிகுறிகள்: 28 சதவிகித பேருக்கு உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் புண் இருக்கிறது. 31 சதவிதம் பேருக்கு தோலின் நிறம் மாறியிருக்கிறது. 57 சதவிகிதம் பேருக்கு கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் இருக்கின்றன. 86 சதவிதம் பேருக்கு இரைப்பை அழற்சி நோய் இருக்கிறது. 9 சதவித பெண்களுக்கு சரியான கால இடைவெளியில் மாதவிடாய் வராத பிரச்சினை இருக்கிறது.
கிரண் தேவியின் கணவர் சற்று தள்ளியிருக்கும் பகுதியில் வாழ்ந்து வந்தார். “பல மாதங்களுக்கு தொடர்ந்த வயிற்று வலியால் 2016ம் ஆண்டில் அவர் இறந்தார்,” என்கிறார் அவர். குடும்பம் அவரை சிம்ரி மற்றும் புக்சார் டவுன்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. “காசநோய் என்றார்கள். அல்லது கல்லீரல் புற்றுநோய் என்றார்கள்,” என்கிறார் 50 வயதுகளில் இருக்கும் கிரண். அவர்களுக்கென சிறு அளவில் ஒரு நிலம் இருக்கிறது. கணவர் தினக்கூலியாக வேலை பார்த்து பணம் சம்பாதித்தார்.
2018ம் ஆண்டிலிருந்து கிரண் தேவிக்கு நிறமற்ற தடிப்புப் பகுதிகள் உள்ளங்கையில் தோன்றத் தொடங்கின. ஆர்சினிக் நஞ்சின் அடையாளங்கள் அவை. “குடிநீர்தான் காரணமென எனக்கு தெரியும். ஆனால் அடிகுழாயை பயன்படுத்தாமல் குடிநீர் எடுக்க வேறெங்கு நான் போவது?” அடிகுழாய் அவரின் வீட்டுக்கு வெளியேவே இருக்கிறது.
நவம்பரிலிருந்து மே மாதம் வரை நீரின் தன்மை மோசமாக இருப்பதாக சொல்கிறார் அவர். “சோற்றுக்கே நாங்கள் கஷ்டப்படுகிறோம். மருத்துவத்துக்கென பாட்னா வரை நான் எப்படி பயணிக்க முடியும்?” எனக் கேட்கிறார். அவரின் உள்ளங்கைகளில் கடுமையாக அரிப்பு எடுக்கிறது. சோப்புக் கட்டியை தொடும்போதும் தொழுவத்திலிருந்து மாட்டுச்சாணத்தை அள்ளும்போதும் அவரின் கை எரிகிறது.
“பெண்களுக்கும் நீருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு,” என்கிறார் ரமுனி. “ஏனெனில் குடும்பத்தில் பெண்ணுக்கும் நீருக்கும் முக்கிய பங்கு உண்டு. எனவே நீர் நன்றாக இல்லையென்றால், பெண்கள் மோசமாக பாதிக்கப்படுவதுதான் இயல்பு.” மேலும் புற்றுநோய் பற்றி நிலவும் களங்கமும் பெண்கள் சிகிச்சை பெறத் தயங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
ரமுனிக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டதும் நீரின் தரம் பற்றிய விழிப்புணர்வு முகாமை அங்கன்வாடி நடத்தியதாக கூறுகின்றனர். ஊரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பல விஷயங்களை செய்ய திட்டமிட்டிருக்கிறார் ரமுனி. “எல்லாராலும் RO இயந்திரம் வாங்க முடியாது,” என்கிறார் அவர். “எல்லா பெண்களாலும் மருத்துவமனைக்கும் சுலபமாக சென்றுவிட முடியாது. இதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்போம்.”
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்