2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.
மிகக் குறுகிய காலத்திற்குள் உங்கள் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம் அதீதமாக மறைந்ததற்கான காரணம் என்ன? ”இந்த பருவநிலை வரும்பொழுது முதன்முறையாக கிராமத்திற்கு வெளியே போகவேண்டிய சூழல் ஏற்பட்டது, இந்த இரண்டு ஆண்டுகளில் இதுதான் முதல்முறை. இந்த நேரத்திற்குள் இவை அத்தனையையும் விழுங்கியிருக்கின்றன” என்று கூறுகிறார் ஆனந்த சல்வி. அவை என்று குறிப்பிடுவது ’கெளர் எருதுகள்’ கூட்டத்தைத்தான். (bos gauras - இந்தியக் காட்டெருதுகள் என்று அழைக்கப்படுகின்றன) இவைதாம் உலகில் வாழும் எருதுகளிலேயே அளவில் பெரியதாகவும் கருதப்படுகின்றன. ஆறு அடி உயரமும், 500 முதல் 1000 கிலோ வரையிலான எடையும் கொண்டவை இவை.
மஹாராஷ்ட்ராவின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ரதனகிரி வனவிலங்கு சரணாலயத்தின் குடியிருப்புகளில் இருக்கும் மக்களின் பயிர் நிலங்களில் வந்து மேய்வதும், நெடுஞ்சாலைகளுக்கு வருவதும் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது.
”எனது நிலத்தை அவற்றிடமிருந்து காப்பாற்ற அப்போது யாருமில்லை” என்கிறார் ரக்ஷி கிராமத்தைச் சேர்ந்த சல்வி. ”அதிர்ஷ்டவசமாக என்னுடைய ஒரு ஏக்கர் கரும்பைக் காப்பாற்ற முடிந்தது (80 டன் கரும்பு)].” 1000 கிலோ எடைகொண்ட எருதுகளிடமிருந்து எப்படிக் காப்பாற்றினீர்கள்? பட்டாசுகளின் துணையோடு.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக, தினமும் இரவுகளில் சல்வி தனது பயிர்நிலத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். ”தினமும் இரவு 8 மணிக்கு இங்கு வந்து, எருதுகள் அனைத்தும் சென்ற பிறகு அடுத்த நாள் காலை 4 மணிக்கு வீட்டுக்குச் செல்வோம்” என்று சொல்வதோடு “இரவுகளில் பயிர் நிலங்களில் பட்டாசு வெடிப்போம்” என்கிறார். அவருடைய ஐந்து ஏக்கர் பயிர்நிலத்தில் நுழைவதிலிருந்து இப்படித்தான் எருதுகளைத் தடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார். அவருடைய அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களும் கூட அப்படித்தான் இருப்பதாகத் தெரிவிக்கிறார். குறைந்தது இரண்டு வருடங்களாக, பன்ஹாலா தாலுகாவில் உள்ள ரக்ஷி கிராமத்தில் எருதுகளிடம் பயிர்களை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார் அவர்.
”பட்டாசுகள் வாங்குவதற்காகவே இந்த நேரத்தில் தினமும் 50 ரூபாய் செலவழிக்கிறோம்” என்று சல்வியின் மனைவி சுனிதா கூறுகிறார். இது பயிருக்காக செலவிடப்படும் தொகையில் கூடுதலாக சேர்ந்துகொள்கிறது. ”விவசாயிகள் இரவு நேரத்தில் பயிர் நிலத்தில் தூங்குவது இன்னும் ஆபத்தானது” என்று கூறுகிறார். இரவில் பாம்புகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என்கிறார் சுனிதா.
பட்டாசுகளால் தங்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது என எருதுகள் உணர்ந்துவிடும் என்று அம்மக்கள் நம்புகிறார்கள். அதனால் ரதனகிரி தாலுகாவில் இருக்கும் சில விவசாயிகள் மின்சார வேலிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ”ஆனால், அதற்கும் அவை பழக்கப்படத் தொடங்கிவிட்டன” எனக் கூறுகிறார் ரதனகிரியை அடிப்படையாகக் கொண்ட வனவிலங்கு என்.ஜி.ஓவான எருது இயற்கைக் குழுவின் இணை இயக்குநர் சம்ரத் கேர்கர். "எருதுகள் தங்கள் கால்களை மெதுவாக அந்த மின்வேலிகளின் மீது வைத்து மின் அதிர்ச்சி வருகிறதா என சோதிப்பதைப் பார்த்திருக்கிறோம். முன்பெல்லாம் அது மனிதர்களைப் பார்த்துப் பயந்தன. இப்போது அப்படி பயப்படுவதில்லை” என்கிறார்.
”நாங்கள் எருதுகளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. இது வனத்துறையின் தவறு. வனங்கள் சரியாக பராமரிக்கப்பட்டால், இந்த விலங்குகள் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை” என்கிறார் சுனிதா.
உணவையும் தண்ணீரையும் தேடி கெளர் எருதுகள் அதிகளவில் வனவிலங்கு சரணாலயத்தை விட்டு வெளியில் வருகின்றன. உலரும் வனங்களில் உதிரும் கார்வி குறிஞ்சி (strobilanthes callosa) இலைகளையும் அவைத் தேடி வருகின்றன. சரணாலயத்தின் நீர்நிலைகள் சுருங்கி வருவதால், நீரைத் தேடியும் அவை வருகின்றன. மேலும், சரணாலயத்தின் மேய்ச்சல் நிலங்கள் சுருங்குவதால் எருதுகள் வெளியில் வருவதாக வன அலுவலர்களும், ஆய்வாளர்களும் தெரிவிக்கிறார்கள்.
2004-இல், ரதனகிரி தாலுகா 3510 மிமீ மழையும், 2008-இல் 3,684 மிமீ மழையும், 2012-இல் 3,072 மிமீ மழையும் இருந்ததாக மத்திய நிலத்தடி நீர் மையத்தின் தரவு காட்டுகிறது. ஆனால், 2018-இல் 2120மிமீ ஆக குறைந்திருக்கிறது. மஹாராஷ்ட்ராவின் மற்ற பகுதிகளைப் போல, மொத்த கோல்ஹாப்பூர் மாவட்டத்திலும் அதிகளவில் ஒழுங்கற்றதாக மாறியிருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்பாக, தேவ்கட்-நிபானி மாநில நெடுஞ்சாலையில் 12 எருதுகள் சேர்ந்த கூட்டத்தை, 50 வயது மேய்ப்பரான ராஜு பாட்டில் பார்த்தார். அவரது கிராமமான ரதனகிரிக்கு வெளியில் வனவிலங்கு சரணாலயத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், அப்போது அவர் கவா கூட்டத்தைப் பார்த்ததில்லை.
”இந்த பத்து வருடங்களில்தான் அவை வெளியில் வருவதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். அப்போதிலிருந்து, நெடுஞ்சாலையில் எருதுகள் வெளிவருவது ரதனகிரியின் கிராமத்தின் மக்களுக்கு பொதுவான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. கிராமட மக்கள் இந்தக் காட்சியை செல்ஃபோனில் படமெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். சோளம், அரிசி, கரும்பு, ஷாலு ஆகியவற்றை உண்பதற்காக கோல்ஹாப்பூர் மாவட்டத்திலுள்ள ரதனகிரி, ஷாஹுவாடி, கர்விர் மற்றும் பன்ஹாலா தாலுக்காக்களில் கெளர் பயிர்நிலங்களில் நுழைகின்றன.
தண்ணீர் குடிப்பதற்காகவும் - இந்தக் காட்டுக்குள் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ரதனகிரி தாலுகாவில், 10 முதல் 15 ஆண்டுகளாகத்தான் கவாக்கள் அதிகளவில் உள்ளே நுழையத் தொடங்கியிருக்கின்றன என கிராமவாசிகள் உறுதியாகக் கூறுகிறார்கள். பன்ஹாலா தாலுகாவில் இது இன்னும் சமீபமாக நடக்கும் விஷயமாக இருக்கிறது. காட்டுக்கு அருகில் இருக்கும் ரக்ஷி கிராமத்தின் 42 வயதான யுவராஜ் நிருகே, “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே கவாவை பார்க்கிறோம். முன்பெல்லாம் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தும்” என்கிறார். ஜனவரி மாதத்திலிருந்து, அவருடைய 0.75 ஏக்கர் நிலத்தில் 12 எருதுகள் அடங்கிய கூட்டம் மூன்று முறை சேதப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார். “4 க்விண்டால் சோளத்தை இழந்திருக்கிறேம். மழைக் காலத்தில் பயிரிடுவதற்கு இப்போது பயமாக இருக்கிறது” என்று கூறுகிறார்.
ரதனகிரி தாலுகாவைச் சேர்ந்த மக்களிடம், சரணாலயத்தில் இருந்து வெளிவந்து சாலைகளில் திரியும் கெளரின் வீடியோக்களை தங்கள் செல்ஃபோனில் படம்பிடித்து வைத்திருக்கிறார்கள்
“பருவநிலை சுழற்சி முற்றிலுமாக மாறிவிட்டது” என்று கூறுகிறார் ரதனகிரியின் வன வரம்பு அதிகாரி ப்ரஷாந்த் டெண்டுல்கர். “முன்பெல்லாம், குளங்களில் நீர்வளம் இருக்குமளவு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்யும். இயற்கைக்கு மாறாக நாம் செல்லும்போது, நாம் யாரைக் குறை கூற முடியும்? 50-60 வருடங்களுக்கு முன்பாக காடுகளும் இருந்தன, புல்வெளி தளங்களும், பயிர்நிலங்களும், கிராமங்களும் இருந்தன. இப்போது காடுகளின் நிலத்தைக் குறி வைத்து, இங்கு கட்டமைப்புகள் வரத் தொடங்கிவிட்டன. கிராமத்திற்கும், வனத்துக்கும் இடையில் இருக்கும் நிலமும் ஆக்கிரமிக்கப்படுகிறது.”
பாக்சைட் சுரங்கம் எடுக்கும் மோசமான வேலைக்காக ஆக்கிரமிப்பு நடக்கிறது. சில பத்தாண்டுகளாக இடைவெளிவிட்டாலும் இது நடந்து கொண்டேதான் இருக்கிறது.
“பல வருடங்களாக ரதனகிரியை அழித்து வருகிறது பாக்சைட் சுரங்கம்” என்கிறார் சாங்ச்வரி ஆசியாவின் நிறுவனரான பிட்டு சாகல். “இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. INDAL (HINDALCO என்று பிறகு அழைக்கப்பட்டது) போன்ற சுரங்க நிறுவனங்கள் அதிகாரத்தின் துணையோடு எதிர்ப்புகளைச் சமாளிக்கிறது. அரசு அலுவலகங்களில் அந்த நிறுவனங்கள்தான் கொள்கைகள் வரையறுக்கிறது. இந்த பாக்சைட் சுரங்கப் பணிகளால் புல்வெளித் தளங்களும், நீர்நிலைகளும் பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன” என்கிறார்.
1998-இல் இருந்து, மும்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இந்த செயல்பாட்டிற்கு ஒருமுறைக்கும் மேலாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் 2018-க்குப் பிறகு, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாத காரணத்திற்காக, அதை கவனிப்பதற்காக மஹாராஷ்ட்ராவின் தலைமைச் செயலரை நியமித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
கோல்ஹாப்பூரின் சிவாஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட 2012 ஆய்வு, பாக்சைட் சுரங்கத்தால் நடக்கும் நீண்ட கால சேதத்தை குறிக்கிறது. கோல்ஹாப்பூர் மாவட்டத்தின் சூழலில் பாக்சைட் சுரங்க செயல்பாடுகளின் தாக்கத்தின் மீதான ஆய்வு, “அந்த மண்டலத்தின் மோசமான சூழல் கேட்டை தொடங்கி வைத்தது, சட்டப்பூர்வமாகவும் சட்டத்துக்கு எதிராகவும் நடந்த சுரங்க செயல்பாடுகள்தான். அங்கிருக்கும் சில கிராமவாசிகளுக்கு தொடக்க காலத்தில் வேலைவாய்ப்பு கிடைத்திருந்தாலும், அரசுக்கு வருமானம் கிடைத்திருந்தாலும், அது மிகவும் குறுகிய காலப் பயன்தான். சுற்றுச்சூழலுக்கு இந்த செயல்பாடுகள் விளைவித்த கேடு நிரந்தரமானது” என்கிறார்.
ரதனகிரியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மற்றொரு வனவிலங்கு சரணாலயம் தஜிப்பூர். 1980களில் இரண்டும் ஒன்றாக இருந்தது. பிரிந்தபோது, 351.16 சதுர கிலோமீட்டர்களைக் கொண்டதாக இருந்தது. தஜிப்பூரின் செம்மண் சமவெளியான சவ்ரை சடாவில் ஒரு ஏரி உள்ளது. அந்தப் பகுதியின் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவுக்கும் தண்ணீருக்குமான முதன்மையான வழிகள் அவைதான். ஏரியின் பெரும்பாலான பகுதி இந்த வருடத்தில் வற்றிவிட்டது.
மேலும், “கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய அளவில் வனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இது பருவநிலை சுழற்சிகளை பாதித்திருக்கிறது” என்கிறார் வனவிலங்கு ஆய்வாளரும், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான அமித் சய்யத்.
சவ்ரை சடாவில், வனத்துறை செயற்கையான ’சால்ட் லிக்’ என்னும் ஊட்டச்சத்து உணவுகள் இருக்குமிடத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இங்குதான் விலங்குகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உட்கொள்கின்றன. உப்பு மற்றும் பிண்ணாக்கு தஜிப்பூரின் சில இடங்களிலும், ரதனகிரியின் சில இடங்களிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
சால்ட் லிக்குகளுக்கு அப்பால் இருக்கும் மற்றொரு மனிதனால் உருவாக்கப்பட்ட குறுக்கீடு கரும்புப் பெருக்கம். முன்பு மழை அதிகம் செழித்த கோல்ஹாப்பூரில் பல பத்தாண்டுகளாக கரும்புப் பயிர்களுக்கு ஏதுவான இடமாக இருந்தது. அதன் பெருக்கம் இன்னும் அதிகரித்திருக்கிறது. சர்க்கரை ஆலை மற்றும் ஜெசெட்டீர்களின் தரவுப்படி, 1971-72-இல் கோல்ஹாப்பூரில் 40000 ஹெக்டேர்கள் கரும்பு பயிரிடப்பட்டது. கடந்த ஆண்டு, 2018-19-இல் 287 சதவிகித அதிகரிப்பாக, 155,000 ஹெக்டேர்கள் அளவுக்கு கரும்பு பயிரிடப்பட்டன. (கரும்பு உற்பத்திக்காக,18 முதல் 20 மில்லியன் லிட்டர் நீர் ஒரு ஏக்கருக்கு செலவாகிறது).
இந்தப் பகுதியில் நிலம், தண்ணீர், தாவரங்கள், விலங்கினங்கள், பருவநிலை மற்றும் வெப்பநிலை ஆகிய அனைத்தும் இங்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சரணாலயத்தின் காட்டு வகைகள் தெற்கில் பாதியளவு பசுமையானதாகவும், தென் ஈரப்பத நிலமாகவும், தெற்கு அடர்த்திக் காடுகளாகவும் உள்ளன. இந்த தாக்கங்கள் அனைத்தும் சரணாலயத்தைத் தாண்டியும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மனித செயல்பாடுகள் வளர்கிறது. எனினும் கெளர் மந்தைகளில் மாற்றமில்லை.
கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பாக, 1000 விலங்குகள் வரை இருந்த நிலையில், ரதனகிரி வனவிலங்கு சரணாலயத்தின் தற்போதைய எண்ணிக்கை 500 என்று தெரிவிக்கிறது மஹாராஷ்ட்ர வனத்துறை. வன வரம்பு அதிகாரி ப்ரஷாந்த் டெண்டுல்கரின் தனிப்பட்ட மதிப்பீடு 700. இந்தியாவில், மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் ஷெட்யூல் 1-இல் கெளர் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த விலங்குகளுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களுக்கு மிக அதிகமான அபராதம் விதிக்கப்படும். பாதுகாக்கப்பட வேண்டியவை என்று பட்டியலிட்டிருக்கும் இயற்கை பாதுகாப்பின் சர்வதேச ஒன்றியத்தின் சிகப்புப் பட்டியலில் கெளரும் ஒரு வகை விலங்குதான்.
கெளர் இடம்மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. “வனத்துறையிடம் கெளர் இடம்பெயர்ந்ததைக் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை” என்கிறார் அமித் சய்யத். “அவை எங்கு செல்கின்றன? எந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன? எந்த வகைக் குழுக்கள் அவை? குழுவில் எத்தனை விலங்குகள் இருக்கும்? இவற்றை அவர்கள் கண்காணித்து வந்தால், இதைப்போன்ற விஷயங்கள் எதுவும் நடக்காது. வழிப்பாதையில் நீர் நிலைகள் அமைக்கப்பட வேண்டும்” என்கிறார்.
அந்த மாதத்தின் சராசரி மழைக்கு கோல்ஹாப்பூரில் 64 சதவிகிதம் குறைவாக இருந்ததாக, ஜுன் 2014-இல் இந்திய வானிலைத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016-இல், மைனஸ் 39 சதவிகிதமாக இருந்தது. 2018-இல், சராசரியை விட ஒரு சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஜூலை 2014-இல், அந்த மாதத்தில் சராசரியை விட 5 சதவிகிதம் அதிகம். ஜூலையில், அடுத்த வருடம் மைனஸ் 76 சதவிகிதம். இந்த வருடத்தில், ஜூன் 1 முதல் ஜூலை 10 வரை, சராசரியை விட 21 சதவிகிதம் அதிகமானது. ஆனால் பலரும் சொல்வதைப்போல பருவமழைக்கு முன்பாக ஏப்ரல், மே மாதத்தில் மழை இல்லை. “கடந்த பத்தாண்டுக்கு மேலாக மழைபொழிவு மிகவும் கணிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது” என்கிறார் கெர்கர். இந்த காடுகளில், குறைந்துவரும் நீர்நிலைகள் இந்தப் பிரச்சனையின் அளவைக் கூட்டியிருக்கிறது.
2017 ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், தண்ணீர் டேங்கர்களால் முதல்முறையாக தஜிப்பூர் மற்றும் ரதனகிரி குளங்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிறது. கேர்கரின் எருமை இயற்கைக் குழுவினால், இரண்டு காடுகளிலும் மூன்று இடங்களில் இப்படியான அமைப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று நீர்நிலைகளில் மொத்தமாக 20000 லிட்டர் நீர் ஊற்றப்பட்டிருக்கிறது. 2018-இல், அது 24000 லிட்டர்களாக அதிகரித்திருக்கிறது. (வனத்துறையால் பராமரிக்கப்படும் பல குட்டைகளும் வனத்துக்குள் இருக்கின்றன)
எனினும், :இந்த வருடம், அறியப்படாத பல காரணங்களுக்காக ரதனகிரி வரம்பில் ஒரு குட்டையில் மட்டுமே தண்ணீர் தருவதற்கு வனத்துறை அனுமதி அளித்திருக்கிறது” என்கிறார் கேர்கர். இந்த வருடம் 54000 லிட்டர் நீரை அளித்திருக்கிறது இந்த என்.ஜி.ஓ. “ஜூனில் இரண்டு பருவமழை பொழிவுக்குப் பிறகு, நாங்கள் தண்ணீர் வழங்குவதை நிறுத்திவிட்டோம்” என்கிறார் கேர்கர்.
காடுகள் அழிப்பு, சுரங்கப் பணிகள், பயிர் நிலை மாற்றங்கள், வறட்சி, வறண்ட சூழ்நிலை, நீர் தரம் குறைவு, நிலத்தடி நீர் சுரண்டல் என இவையனைத்தும் ரதனகிரி காடுகளின் மீதும், பயிர் தோட்டம், மண், பருவநிலை மற்றும் வானிலை மீதும் தாக்கம் செலுத்துகிறது.
இயற்கைப் பருவநிலை மட்டும் எதிர்மறை விளைவைச் சந்திக்கவில்லை. வேறு சில காரணங்களும் உள்ளன.
கெளர் மற்றும் அப்பகுதி மக்களிடையே தோன்றும் பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றன. “அரை ஏக்கரில் (20 குந்தா) நான் விளைவித்திருந்த யானைப் புல் அனைத்தையும் கெளர் மேய்ந்துவிட்டது” என்கிறார் 40 வயதான மாருதி நிகம். பன்ஹாலா தாலுக்காவில் நிகம்வாடி கிராமத்தில் ஆறு ஏக்கருக்கு உரிமையாளர் அவர். “இந்த வருடம் ஜனவரி-ஏப்ரலில் 30 குந்தாவில் விளைந்த சோளத்தையும் சேதப்படுத்திவிட்டது” என்கிறார்.
“மழைக் காலத்தில், காட்டில் மிக அதிகளவில் தண்ணீர் இருக்கும். உணவு கிடைக்கவில்லையென்றால் அவை பயிர் நிலங்களுக்கு திரும்பிவிடும்” என்கிறார்."
அட்டைப் படம்: ரோஹன் பாதே. புகைப்படங்களைப் பயன்படுத்த உதவியதற்காக Sanctuary ஆசியாவுக்கும் ரோஹன் பாதேவுக்கும் நன்றி.
பருவநிலை மாற்றத்தைக் குறித்த நாடு முழுவதுமான செய்திப்பணியிலிருக்கும் PARI, UNDP முயற்சியின் ஒரு பகுதி. சாமான்ய மக்களின் வாழ்வனுபவம் வழியாகவும், அவர்களின் குரல்களின் மூலமாகவும் ஆவணப்படுத்தும் முயற்சி.
இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? zahra@ruralindiaonline.org , namita@ruralindiaonline.org இருவருக்கும் தெரிவிக்கவும்.
தமிழில்: குணவதி.