சமூக இயக்கமாக சைக்கிள் பயணமா? கொஞ்சம் மிகைப்படுத்துவதாகத் தோன்றுகிறதா? இருக்கலாம். ஆனால் மிகையில்லை. தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் முதல் தலைமுறைக் கல்வி கற்ற பல ஆயிரம் பெண்களுக்கு இது புதிய விஷயமாக இல்லை.  தங்களது பின்தங்கிய நிலைக்கு எதிராக, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த, தங்களைப் பிணைத்திருக்கும் தளைகளிலிருந்து விடுபட மக்கள் வழிகளைத் தேடி கண்டடைகிறார்கள்.

இதில், இந்தியாவின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றில், கிராமப்புற பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதை தங்களின் வழியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கடந்த 18 மாதங்களாக, 100,000-க்கும் அதிகமான கிராமப்புற பெண்கள் - பெரும்பாலானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் - சுதந்திரத்தின், விடுதலையின், இயங்குதலின் சின்னமாக சைக்கிள் ஓட்டுவதை நினைக்கிறார்கள். 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளை மட்டும் விடுத்துப்பார்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கும் நான்கில் ஒரு பகுதிப்  பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டவர்கள். 70,000-க்கும் அதிகமான பெண்கள் பொது ‘பொருட்காட்சி-போட்டிகளில்’ கலந்துகொண்டு பெருமையுடன் தங்களின் புதிய திறன்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும், பயிற்சி முகாம்களும் கற்றுக்கொள்வதற்கான விருப்பமும் தொடர்கிறது.

புதுக்கோட்டை கிராமப்புறப்பகுதியின் மையத்தில், மிகவும் பின்தங்கிய பழமைவாதம் நிரம்பிய குடும்பப்பின்னணி கொண்ட இஸ்லாமியப் பெண்கள் சாலைகளில் சைக்கிள் மிதித்துச் செல்கிறார்கள். சைக்கிளில் பயணிக்கும் சிலர் முகத்தின் மறைத்து அணியும் துணியையும் கூட அணிவதில்லை. சைக்கிளில் பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இளம் இஸ்லாமியப் பெண்ணான ஜமீலா பீபி, “இது என்னுடைய உரிமை. நாங்கள் எங்கும் செல்லலாம். நான் இப்போது பேருந்துக்காக காத்திருக்கத் தேவையில்லை. முதலில் நான் சைக்கிள் ஓட்டத் தொடங்கியபோது பலர் தகாத முறையில் என்னைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் நான் அதில் கவனம் செலுத்தவில்லை’’ என்கிறார்.

ஃபாத்திமா ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியை. ஒவ்வொரு நாள் மாலையிலும் அரைமணி நேரத்துக்கு மிதிவண்டியை வாடகைக்கு வாங்கி ஓட்டுவதை தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். (அவருக்கு ஒரு மிதிவண்டி வாங்குவதற்கான பொருளாதார வசதியில்லை – ஒரு மிதிவண்டிக்கு 1200 ரூபாய்க்கும் அதிகமான பணம் தேவை) “சைக்கிள் ஓட்டுவதில் ஒரு விடுதலை இருக்கிறது. இப்போது நாங்கள் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. இதை என்னால் விடமுடியாது’’ என்கிறார்கள் ஜமீலா, ஃபாத்திமா மற்றும் அவர்களின் தோழியான அவகன்னி. 20 வயதுகளில் இருக்கும் இந்தப் பெண்கள் அந்த பகுதியில் இருக்கும் இன்னும் நிறைய இளம்பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சியளிக்கிறார்கள்.

அறிவொளி ‘சைக்கிள் பயிற்சி முகாமில்’ கற்பவர்கள் அனைவரும் அவர்களின் ஞாயிற்றுக்கிழமைகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பயிற்றுவித்த ஆசிரியர்களும் நன்கு தயாராகி வந்து கற்றுக்கொடுத்தார்கள். புகைப்படம்: பி.சாய்நாத்

இந்த மாவட்டம் முழுவதும் சைக்கிளில் பயணிப்பது என்பது பரவலாக இருக்கிறது. விவசாயப் பெண் தொழிலாளர்கள், குவாரி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதாரப் பெண் பணியாளர்கள் எனப் பலரும் சைக்கிளில் பயணமாகிறார்கள். பால்வாடி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், நகை செய்யும் பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் கூட சைக்கிள் பயணிகளாக மாறுகிறார்கள். கிராம சேவகர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்களும் சைக்கிளில் பயணிக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் சமீபமாக எழுத்தறிவு பெற்றவர்கள். இம்மாவட்டத்தில் மிக வீரியமாக செயல்பட்ட அறிவொளி இயக்கத்தின் மூலமாக எழுத்தறிவு பரவலாகியுள்ளது. இவ்வியக்கம் மக்களின் ஆற்றலை சரியாக முறைப்படுத்தியுள்ளது. நாங்கள் சந்தித்த புதிதாக எழுத்தறிவு பெற்ற, புதிதாக சைக்கிளில் பயணிக்கத் தொடங்கிய பெண்கள் அனைவரும் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். சைக்கிளில் பயணிப்பதற்கும், தனிப்பட்ட விடுதலை உணர்வுக்கும் இடையில் ஒரு இணைப்பை உணர்வதாக அவர்கள் அனைவருமே கூறுகிறார்கள்.

அறிவொளியின் மைய ஒருங்கிணைப்பாளரும், சைக்கிள் இயக்கத்தின் முன்னோடியுமான என். கண்ணம்மாள், “இதன் முக்கியமான பலன், இது பெண்களுக்குக் கொடுத்திருக்கும் தன்னம்பிக்கைதான். மிக முக்கியமாக, ஆண்களை நம்பியிருக்க வேண்டிய தேவையை இது குறைத்திருக்கிறது. இப்போதெல்லாம் குழந்தைகளைக் கூட தன்னுடன் அழைத்துக்கொண்டு நான்கு கிலோமீட்டர் பயணித்து தண்ணீரைக் கொண்டுவரும் பெண்களைப் பார்க்கிறோம். அவர்களாகவே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்துவிடுகிறார்கள். ஆனால் இது தொடங்கிய போது தங்களின் நடத்தை மீது வைக்கப்பட்ட உளவியல் தாக்குதல்களையும் அதிகமாக எதிர்கொண்டார்கள். பலரும் மிக மோசமான வார்த்தைகளால் அவர்களைத் தாக்கிப் பேசினார்கள். ஆனால் அறிவொளி இயக்கம் இதற்கு ஒரு சமூக அங்கீகாரத்தை வழங்கியது. பெண்கள் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்’’. என்றார்.

கண்ணம்மாள் இவ்வியக்கத்தின் தொடக்கநிலைப் பயனாளிகளில் ஒருவர். அறிவியல் பட்டதாரியாக இருந்தாலும், சைக்கிள் ஓட்டுவதற்கு அவருக்கு துணிச்சல் இல்லாமல் இருந்துள்ளது. அறிவொளி இயக்கத்தின் சைக்கிள் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதே  அவருக்கு ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. கீழக்குறிச்சி கிராமத்தில் சைக்கிள் கற்றுக் கொள்ள வந்தவர்கள் எல்லோருமே மிக அழகாக ஆடையணிந்திருந்தார்கள். சைக்கிள் இயக்கத்தின் மீதிருந்த பேரார்வம் அவ்வளவு வியப்பானது. எப்படியாவது சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். அது தினசரி வேலைகளை எளிமையாக்கி, ஆண்களால் வேண்டுமென்றே திணிக்கப்படும் தடைகளையும் தகர்க்கிறது. இந்த சைக்கிள் இயக்கப் பெண்களுக்கு உற்சாகம் அளிப்பதற்கு, அறிவொளி இயக்கத்தால் எழுதப்பட்ட ஒரு பாடல் கூட இருக்கிறது. அந்த வரிகள் இதுதான். ‘’சகோதரி சைக்கிள் மிதிக்கக் கற்றுக்கொள், காலச் சக்கரத்தோடு முன்னேறு’’ என்னும் வரிகள்தான் அவை.

புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்கனவே சைக்கிளை நன்றாகக் கற்றுக்கொண்ட நிறைய பேர் உதவுகிறார்கள். அறிவொளி இயக்கத்துக்காக இலவசமாக பணியாற்றுகிறார்கள். சைக்கிள் கற்றுக்கொள்வது பற்றி மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பொதுப்பார்வையும் ஏற்படுகிறது. இதன் விளைவாக, இந்த அனுபவம் எழுத்தறிவு இயக்கத்தையும் ஊக்கப்படுத்துகிறது. அறிவொளி இயக்கத்தில் சேர முன்பு இருந்ததை விட சைக்கிள் கற்ற பிறகு மேலும் ஊக்கத்துடன் இருக்கிறார்கள் பெண்கள்.

முன்னாள் மாவட்ட ஆட்சியராக பிரபலமாக இருந்த ஷீலா ராணி சுங்கத்தின் யோசனையில் உதித்ததுதான் இந்த சைக்கிள் இயக்கம். 1991-இல் பெண் செயற்பாட்டாளர்களை பயிற்றுவித்து அதன் மூலமாக கிராமப்புற பெண்களுக்கு எழுத்தறிவு அளிக்க நினைத்தார். எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக தானாக பயணிக்கும் திறனையும் அவர் சேர்த்தார். பெண்கள் நடமாட்டமில்லாமல் இருப்பது அவர்களின் தன்னம்பிக்கையை பெரிதளவில் குறைக்கும் என்னும் உண்மையிலிருந்துதான் அவருக்கு இப்படியான யோசனைகள் வந்திருக்கின்றன. பெண்களுக்கு மிதிவண்டிக்கான நிதியுதவியைச் செய்யுமாறு வங்கிகளிடமும் வலியுறுத்தியிருக்கிறார் அவர். இந்த இயக்கத்தை பிரபலப்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் சிலருக்கு குறிப்பிட்ட சில கடமைகளை வகுத்துக்கொடுத்திருக்கிறார். மாவட்டத்தின் உயர் பதவியில் இருந்த அவர், இந்த விஷயத்தில் சிறப்புக் கவனத்தைத் தொடர்ச்சியாக அளித்திருக்கிறார்.

முதலில், செயற்பாட்டாளர்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகு எழுத்தறிவு பெற்றவர்களும் கற்றுக்கொள்ள நினைத்திருக்கிறார்கள். பின், அனைத்துப் பெண்களும் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.   பெண்களுக்கான மிதிவண்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது ஒன்றும் அவ்வளவு ஆச்சரியமான விஷயமெல்லாம் இல்லை. அதற்கும் தயங்காமல் ’ஆண்கள்’ மிதிவண்டிகளையே ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சில பெண்களுக்கு ஆண்கள் சைக்கிள்தான் வசதியானதாக இருந்திருக்கிறது. குழந்தைகளை அதில் உட்கார வைத்து அழைத்துச் செல்லலாம் என்பதால் அதுதான் அவர்களுக்கு வசதியானதாக இருந்திருக்கிறது. இந்த நாள் வரை, பல்லாயிரம் பெண்கள் இங்கு ஆண்களுக்கான சைக்கிள்களைத்தான் ஓட்டுகிறார்கள். பல ஆயிரம் பேர் மிதிவண்டி வாங்கும் பொருளாதார நிலையை அடைய கனவு காண்கிறார்கள்.

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினத்துக்குப் பிறகு, இந்த மாவட்டம் முன்பிருந்த நிலையில் இல்லை. கைப்பிடியில் கொடிகளோடு, மணிச்சத்தம் கேட்க, புதுக்கோட்டை முழுவதும் மிதிவண்டியில் பேரணியாகச் சென்றனர் 1500 பெண்கள். நகரவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்த சைக்கிள் பேரணி.

ஆண்கள் இதைப் பற்றி என்ன நினைத்தார்கள்? சொல்ல வேண்டியவராக இருந்தவர் ராம் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். கனகராஜன். ஒரு வருடத்தில், பெண்கள் மிதிவண்டி 350 சதவிகிதம் விற்பனையில் அவருக்கு மட்டுமே அதிகமானதை பார்த்தார். இரண்டு காரணங்களுக்காக இந்த எண்ணிக்கை கூட குறைவாகத் தோன்றுகிறது. பெண்கள் மிதிவண்டிகள் தட்டுப்பாட்டால் ஆண்கள் மிதிவண்டிகளை வாங்கியவர்கள் இருந்தது முதற் காரணம். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கையை கனகராஜன் தெரிவித்தார் என்பது இரண்டாவது காரணம். அவரைப் பொருத்தவரை, விற்பனை வரித்துறையின் ஒற்றனாக அவர் என்னை நினைத்தார்.

அனைத்து ஆண்களும் தடை போடுபவர்களாக, பிணைத்து வைப்பவர்களாக இருக்கவில்லை. சிலர் ஊக்கம் அளிப்பவர்களாக இருந்தார்கள். முத்து பாஸ்கரன் என்னும் அறிவொளி செயற்பாட்டாளர் ஒரு எடுத்துக்காட்டு. சைக்கிள் இயக்கத்தின் கீதமாகவே மாறிவிட்ட பிரபலமான சைக்கிள் பாடலை அவர்தான் இயற்றினார்.

குடுமியான்மலையின் கல் குவாரிகளின் வெப்பத்தில், 22 வயது கே. மனோன்மணி பிறருக்கு பயிற்சி கொடுக்கிறார், நல்ல உழைப்பாளி. குவாரி பணியாளரும், அறிவொளி தன்னார்வலருமான அவர், உடன் பணியாற்றுபவர்கள் சைக்கிள் கற்றுக்கொள்வதும் மிகவும் அவசியம் என நினைக்கிறார். “இந்த பகுதி மிகவும் துண்டான பகுதி” என்று கூறினார். சைக்கிள் தெரிந்தவர்களுக்கு இங்கிருந்து பயணிப்பது சுலபமாக இருக்கும் என்றார்.

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

1992 – 93 ஆண்டுகளில் 100,000க்கும் அதிகமான பெண்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள். அதனால் சாதகமான பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் பெண்களைப் பொருத்தவரை அது வெறும் பொருளாதாரத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. அது அவர்களின் விடுதலைக் குறியீடு. புகைப்படங்கள்: பி.சாய்நாத்

1992 ஆம் ஆண்டு, ஒரே வாரத்தில், 70,000 அதிகமாக பெண்கள் தங்களின் சைக்கிள் ஓட்டும் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அறிவொளியால் நிகழ்த்தப்படும் ‘காட்சிப் போட்டிகளில்’ இச்சாதனையை அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இதனால் மகிழ்ந்த யுனிசெஃப், அறிவொளியைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்களுக்கு 50 மொப்பெட்டுகளை அளித்தது.

மிதிவண்டி பயன்பாட்டைப் பொறுத்தவரை, இதற்கு பொருளாதார தாக்கங்கள் உள்ளன. இது வருவாயை அதிகப்படுத்தியது. சில கிராமங்களுக்குள் பல குழுக்களில் பெண்கள் விவசாயப் பொருட்களையும், இன்னும் பிற தயாரிப்புகளையும் விற்றார்கள். மிகுந்த சிக்கலான முறையில் இணைக்கப்பட்ட வழிகளில் மிதிவண்டிகள் முக்கியமானது. இரண்டாவதாக, பொருட்களை விற்பதில் அதிகக் கவனம் கொடுப்பதற்கு மிதிவண்டிகள் உதவுகிறது. மூன்றாவதாக, அதிக இடங்களில் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு இது உதவியது. இறுதியாக, இது அவர்களின் ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்தியது.

பஸ் நிறுத்தத்தை அடைவதற்குக் கூட கணவர், சகோதரர்கள், தந்தை, மகன்களை நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் அவர்களால் தயாரிப்புகளை குறுகிய இடங்களில் மட்டுமே விற்கப்பட்டது. சிலர் நடந்து சென்றார்கள். மிதிவண்டி வாங்க முடியாதவர்கள் இப்போதும் கூட நடந்து சென்று விற்கிறார்கள். வேகமாக வீடு திரும்பி குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணியும், தண்ணீர் எடுத்து வரும் பணியும் அந்த பெண்களுக்கு இருந்தது. இப்போது மிதிவண்டி வைத்திருப்பவர்களுக்கு இந்த வேலைகளை செய்வது சுலபமாகிவிட்டது. இதனால், புறநகர் பகுதியில், இளம் தாய் ஒருவர் குழந்தையை வைத்துக்கொண்டு தன் தயாரிப்புகளை விற்பதைப் பார்க்கலாம். இரண்டு, மூன்று தண்ணீர் குடங்களை மிதிவண்டியின் பக்கவாட்டுகளில் கட்டிக்கொண்டு வேலைப்பகுதியை நோக்கியோ, வீட்டை நோக்கியோ செல்வதைப் பார்க்கலாம்.

எனினும், பொருளாதார பரிமாணத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதும் தவறுதான். சைக்கிள் ஓட்டுவதைக் கற்றுக்கொள்வது அளிக்கும் சுய மரியாதையைப் பார்க்கவேண்டும். “இது பொருளாதார ரீதியிலானது மட்டுமல்ல” என்றார் ஃபாத்திமா. “நான் சைக்கிள் ஓட்டுவதில் இருந்து என்ன பணத்தை சம்பாதிக்கப் போகிறேன்? பணம் செலவாகத்தான் போகிறது. எனக்கு மிதிவண்டி வாங்குமளவுக்கு வசதியில்லை. ஆனால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது, அதன்மூலமாக கிடைக்கும் சுதந்திர உணர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே’’ என்கிறார். புதுக்கோட்டைக்கு வருவதற்கு முன்பு வரையில் இந்த எளிய வாகனம் சுதந்திரத்துக்கான குறியீடாக இருக்கும் என்ர்று நான் நினைத்துக் கூட பார்த்தில்லை.

“இது கிராமப்புறப் பெண்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வது கடினம்’’ என்றார் கண்ணம்மாள். “இது ஒரு இமாலயச் சாதனை,  அவர்களைப் பொறுத்தவரையில் விமான ஓட்டுவதைப்போல. பிறர் இதைக்கேட்டுச் சிரிக்கலாம். ஆனால் இந்தப் பெண்களுக்குத்தான் இது எவ்வளவு முக்கியமென்று தெரியும்” என்றார் அவர்.

இந்த இடத்தில் சைக்கிள் இயக்கத்தை எதிர்க்கும் ஆண்களிடம் இருந்து சில ”வாக்கியங்களை” பெற்று எழுதுவதுதான் முறையான ஊடகவியல் கடமையாக இருக்கும். ஆனால் போகட்டும்! 100,000 எழுத்தறிவு பெற்ற பெண்கள் மிதிவண்டி ஓட்டுகிறார்கள். அதுதான் இப்போது முக்கியமான செய்தி.

இதை எதிர்க்கும் ஆண்கள் நடந்து செல்லலாம். ஏனெனில் இந்த மிதிவண்டி ஓட்டும் விஷயத்தில், பெண்களைப் போல அவர்கள் இல்லை.

பின்குறிப்பு: ஏப்ரல் 1995-இல் மீண்டும் நான் புதுக்கோட்டைக்குத் திரும்பியபோது, மிதிவண்டிக்கான அந்த உற்சாகம் அப்படியே இருந்தது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு மிதிவண்டி வாங்கும் பொருளாதாரச் சூழல் இல்லை. விலை இப்போது 1400 ரூபாயாக இருக்கிறது. முதல் சுற்றிலிருந்து பயன் பெற முடியாத அளவுக்கு மிகவும் குறைந்த வயதுடையவர்களாக அடுத்து வந்த தலைமுறையினர் இருந்தனர்.   ஆனால் இப்போதும், இந்திய மாவட்டங்கள் பலவற்றிலும் புதுக்கோட்டை மிதிவண்டி பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையில் உயர்ந்து நிற்கிறது. மற்றவர்களை விடவும் ஒரு திறனைக் கற்றுக்கொள்ளும் ஊக்கத்தில் தனித்து நிற்கிறது.

இந்த கட்டுரை 1996ல் வெளியான பி சாய்நாத்தின் புத்தகமான Everybody Loves a Good Drought ல் (எல்லோரும் ஒரு நல்ல வறட்சியை விரும்புகிறார்கள்)  முதலில் பிரசுரிக்கப்பட்டது.

தமிழில்: குணவதி

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Gunavathi

Gunavathi is a Chennai based journalist with special interest in women empowerment, rural issues and caste.

Other stories by Gunavathi