“பாபா இங்கு என்னுடன் இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார் பிரியங்கா மொண்டல். நினைவுகளின் வலி தாங்காமல் வருத்தத்தில் இருந்தார். இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிற உடையில், ரஜத் ஜூப்ளி கிராமத்தில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு செல்ல பிங்க் மற்றும் நீல நிற பல்லக்கில் தனது மடியில் மலர்களுடன் அமர்ந்திருந்தார்.
கொல்கத்தாவில் உள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜத் ஜூப்ளி கிராமத்தில் வசித்து வருபவர் 23 வயதான பிரியங்கா, இவர் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி 27 வயதான ஹிரன்மே மொண்டலை திருமணம் செய்து கொண்டார். ஹிரன்மே இவருக்கு பக்கத்தில் வீட்டில் வசிப்பவர், அவர் கொல்கத்தாவில் உள்ள சில்லறை ஜவுளி விற்பனை கடையில் தள நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், 2019-ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், சுந்தர்பன்னில் உள்ள லஹிரிபூர் கிராம பஞ்சாயத்தில் நடைபெறவிருந்த இவர்களது திருமணம் பிரியங்காவின் 45 வயது தந்தை அர்ஜூன் மொண்டல் 2019-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி ஒரு புலியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. அர்ஜூன் ஒரு மீனவர். இவர் சுந்தர்பன் புலிகள் காப்பகத்தின் நடுவில் உள்ள பிர்காலி காசி வனப் பகுதிக்கு நண்டுகளை வேட்டையாட அடிக்கடி சென்று வருவது வழக்கம். இவரது உடல் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் அர்ஜூன் ஆபத்தான அந்த வனப்பகுதிக்கு நண்டுகள் வேட்டையாடச் செல்லும் போது, அவர் பாதுகாப்புடன் திரும்பி வர வேண்டும் என்கிற அச்சத்திலேயே குடும்பத்தினர் இருப்பார்கள். கடைசியாக வேட்டையாடுவதற்காக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்ற போது அவருக்கு மகளின் திருமணம்தான் மனதில் இருந்தது.
“பிரியங்காவின் திருமணத்துக்கு எங்களுக்கு பணம் தேவை. அர்ஜூன் காட்டுக்குப் போவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், ஏதோ மோசமான சம்பவம் நடக்கப் போகிறது என்பது போல ஒரு உணர்வு அவருக்கு முன்னதாக இருந்தது” என்கிறார் அவரது மனைவி புஷ்பா.

திருமண விழாவுக்கு முன்னதாக தனது மறைந்த தந்தையின் புகைப்படத்துக்கு மாலை அணிவிக்கிறார் பிரியங்கா மொண்டல்
அர்ஜூனின் திடீர் மரணம் காரணமாக, குடும்பத்துக்கு தேவையானவற்றையும் தனது மகள் பிரியங்கா மற்றும் மகன் ராகுல் ஆகியோரது தேவைகளையும் புஷ்பா தனியாளாக சுமக்க வேண்டியிருந்தது. “பிரியங்காவின் திருமணம் அவரது தந்தையின் கனவு. எனக்கு தெரியும், அதை எந்த விலை கொடுத்தேனும் நிறைவேற்றுவேன். பிரியங்காவை எத்தனை காலத்துக்கு காத்திருக்க வைக்க முடியும்?’ என்கிறார் புஷ்பா. திருமணத்துக்கு தோராயமாக ரூ.1.70 லட்சம் செலவாகும், 30களின் இறுதியில் இருக்கும் புஷ்பாவுக்கு இது மிகப்பெரிய தொகை தான்.
அர்ஜூன் மறைவு ஏற்படுத்தி அதிர்ச்சி, மோசமான குடும்ப பொருளாதாரம் மற்றும் தனது குழந்தைகளுக்கு ஒரே பெற்றோராக இருப்பது ஆகியவை புஷ்பாவின் உடல்நலத்தை பெரிதும் பாதித்தது. அவர் நாள்பட்ட மன அழுத்தத்தையும் மற்றும் மனச்சோர்வையும் உணரத் தொடங்கினார். 2020-ம் ஆண்டு மே 20-ம் தேதி வீசிய ஆம்பன் புயல் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. கோவிட் -19 நோய் பரவல் அவரது பதற்றம் மற்றும் கவலையை மேலும் அதிகப்படுத்தின. அவரது ரத்த அழுத்தம் நிலையில்லாமல் இருந்தது மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவு குறைபாட்டால் அவருக்கு ரத்த சோகை அதிகரித்தது. “ ஊரடங்கு காலக்கட்டங்களில் பல நாட்கள் நாங்கள் சரியான உணவை உட்கொள்ளவே இல்லை,” என்கிறார் புஷ்பா.
ராகுல் 20 வயதே நிரம்பியவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது குடும்பத்துக்காக கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு ஏற்பட்டது. அவர் தினக் கூலித் தொழிலாளியாக வயல்வெளிகளிலும், கட்டுமானம் நடைபெறும் இடங்களிலும் வேலை பார்க்கத் தொடங்கினார். தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கும் தாயின் உடல்நிலையே அவரை மேலும் கடினமாக உழைக்க வைத்தது. அவர் ஊரடங்குக்கு தனது வேலையை பாதிக்கும் முன்பாக பல்வேறு வேலைகளை செய்து அதன் மூலம் ரூ.8 ஆயிரத்தை சேர்த்தார் - சேர்த்த பணத்தை திருமணத்துக்காக செலவு செய்தார்.
இரு சிறிய அறைகள் மற்றும் ஒரு சமையலறை கொண்ட தனது வீட்டை 34 சதவிகிதம் ஆண்டு வட்டியில் ரூ.50 ஆயிரத்துக்கு உள்ளூர் வட்டிக்கடைக்காரிடம் அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் புஷ்பா. குடும்பத்தினர் கடனாக வாங்கிய தொகையில் பாதித் தொகையை ஆறு மாதத்துக்குள் திரும்பச் செலுத்தினால், மீதமுள்ள தொகையை திரும்பச் செலுத்த அடுத்து ஆறு மாதம் கெடு அனுமதிக்கப்படும். “நாங்கள் அந்த தொகையை திரும்பச் செலுத்தவில்லையெனில், நாங்கள் அந்த வீட்டை வைத்திருக்க முடியாது என்கிற பயம் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் தெருவுக்கு தான் வர வேண்டும்” என்கிறார் புஷ்பா.
ஆனால் அவர் சில நல்ல விஷயங்களுக்காக நன்றியுடையவராகவே இருக்கிறார். “ஹிரன்மே (மருமகன்) நல்ல மனிதர்,” என்கிறார் புஷ்பா. “ஊரடங்கு அமலில் இருந்த போது அவர் எங்களுக்கு உதவினார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது மற்றும் வெளியில் சென்று வரக்கூடிய பணிகள் ஆகியவற்றை செய்தார். இருவரும் அந்த நேரத்தில் திருமணம் கூட செய்திருக்கவில்லை. அவரது குடும்பத்தினரும் எங்களிடம் வரதட்சிணை எதுவும் கேட்கவில்லை.”

உள்ளூரில் உள்ள நகைக்கடையில் புஷ்பா மொண்டல், பெங்காலி மணப்பெண்ணுக்கு அணிவிக்கக் கூடிய போலா மற்றும் பவள வளையல்களை வாங்குகிறார். “இவற்றை நானே செய்ய வேண்டும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்கிறார் அவர்
திருமண சடங்குகள் நடைபெற்ற நாளன்று, பிரியங்கா ஆடம்பரமான பச்சை, சிவப்பு மற்றும் பட்டுச் சேலையை அணிந்திருந்தார். அதற்கு ஏற்றார்போல் தங்க ஆபரணங்களையும் அணிந்து, திருமணத்துக்கான அலங்காரத்தில் இருந்தார். திருமணச் செலவுகளை செய்வதற்காக தங்களது வீட்டை அடமானம் வைத்துள்ளார்கள் என்று அவருக்கு தெரியாது.
மாலை நேர நிகழ்ச்சிக்கு மொண்டல் வீட்டில் 350 விருந்தினர்கள் வந்திருந்தனர். மஞ்சள் நிற மின்னும் விளக்குகளால் வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு கூடியிருந்தவர்களால் அது மேலும் பிரகாசமானது. வீட்டில் மீனவர்கள் மற்றும் பெண்கள், தேன் சேகரிப்பவர்கள், ஆசிரியர்கள், படகு செய்பவர்கள், நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் கூடியிருந்தனர். சுந்தர்பன்னில் உள்ள மக்களோடு நெருக்கிய தொடர்பில் இருந்தவர் அர்ஜூன். அவர் அந்த மக்களின் துயரங்கள், அவர்களது வாழ்க்கை மற்றும் நல்வாழ்வை ஆழமாக தெரிந்திருந்தவர் என்பதை அறிந்திருந்தனர்.
நிறைய பெண்கள் திருமண விழாவைக் கொண்டாடவும், சமைக்கவும், பிற ஏற்பாடுகளுக்கு உதவும் அங்கு கூடியிருந்தனர். ஒரே நேரத்தில் மிகுந்த சந்தோஷம் மற்றும் மன அழுத்தமும் கொண்டிருந்ததால், புஷ்பா திருமணத்தின் போது ஒரு முறைக்கு மேலாக மயக்கமடைந்தார், ஆனால், இறுதியாக ஹிரன்மே – பிரியங்கா திருமணம் நடைபெற்று விட்டது என அவர் நிம்மதியடைந்தார்.
திருமண விழா முடிவடைந்ததும், புஷ்பா கடன்காரர்களை சமாளிக்க வேண்டியிருந்தது – வீட்டை அலங்கரித்தவர்கள் மற்றும் எலக்ட்ரிஷியன்கள் ஆகியோருக்கு உடனடியாக ரூ.40 ஆயிரம் அளிக்க வேண்டியிருந்தது. மேலும், “ பணம் கேட்டு மக்கள் வந்தால், எனது தாயின் உடல்நிலை மேலும் மோசமடையும்” என்ற ராகுல், “நான் கூடுதலாக சம்பாதிக்க கூடுதல் கடினமாக உழைக்க வேண்டும்” என்றார்.
தனது கணவர் அர்ஜூன் இறப்புக்கு இழப்பீடு கோரிய விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரவர்க்கத்துடன் அவர் மிக கடுமையாக போராட வேண்டும். புலி தாக்கி இறந்தவர் குடும்பங்கள் மேற்குவங்க அரசின் வனத்துறை, மீன்வளத்துறை மற்றும் மாநில அரசின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் ஏறத்தாழ ரூ.4-5 லட்சம் இழப்பீட்டுத் தொகை பெற தகுதியானவர்கள் ஆவர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடமிருந்து புஷ்பாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அர்ஜூன் இறப்புக்கு இழப்பீடு கோரியிருந்தது தொடர்பாக கொல்கத்தாவில் நடைபெறும் அடுத்த வாய்தாவில் புஷ்பா ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் அதிகாரத்துவ குழப்பங்கள் மற்றும் சட்டச் செலவுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விண்ணப்பிக்க விடாமல் தடுத்து விடுகின்றன. 2017-ம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளின்படி 2016-ம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து பாரி (PARI) மேற்கொண்ட விசாரணையில் அதற்கு முந்தைய ஆறு ஆண்டுகளில் ஐந்து பெண்கள் மட்டுமே இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளது தெரியவந்தது. இவர்களில் மூன்று பேர் மட்டுமே இழப்பீடு பெற்றுள்ளனர், அதுவும் முழுமையான தொகை இல்லை.
நண்டுகளை பிடிப்பதற்காக அர்ஜூன் சுந்தர்பன் காப்புக் காடுகளுக்கு பல முறை சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் காடுகளின் உள்பகுதிக்கு சென்று இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நண்டுகளை பிடிப்பார். ஒவ்வொரு முறையும் நண்டுகளின் அளவுகளுக்குத் தக்கவாறு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிராமத்தில் உள்ள இடைத்தரகரிடம் விற்பனை செய்து விடுவார்.
சுந்தர்பன் வனப்பகுதி 1,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அறிவிக்கை செய்யப்பட்ட முக்கிய புலிகள் வாழிடப் பகுதியாகும், இதைத் தொடர்ந்து 885 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடையகப் பகுதியையும் கொண்டது. இந்த இடையகப் பகுதியில் சில வாழ்வாதாரத்துக்கான செயல்பாடுகளான மீன் பிடித்தல், நண்டு பிடித்தல், தேன் சேகரித்தல் மற்றும் மரங்கள் சேகரித்தல் ஆகியவற்றுக்கு வனத்துறை அனுமதியும் மற்றும் படகுக்கு உரிமமும் வழங்குகிறது. ஆனால், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைபவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து புலியால் தாக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுபவரது குடும்பம் இழப்பீடு கோரும் சட்டப்பூர்வமான உரிமையை இழக்கிறது.
அர்ஜூன் மொண்டல் சுந்தர்பன் கிராம மேம்பாட்டு சங்கத்தின் செயலாளராக இருந்ததால், அவருக்கு இந்த ஆபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகம் உண்டு. புலி தாக்குதலால் விதவையான பெண்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர பல போராட்டங்Kளில் அவர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். 30 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3000 அல்லது ஆண்டுக்கு 100 பேர் (உள்ளூர், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிறரால் மதிப்பிடப்பட்டவை).
காப்புக் காடுகளின் தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அர்ஜூன் இறந்ததால், இழப்பீட்டுத் தொகையை பெற புஷ்பாவுக்கு அதிக வாய்ப்பில்லை. இழப்பீட்டுத் தொகையை பெற ஒரு வழக்கறிஞரை நியமிக்கவும், கொல்கத்தாவுக்கு சென்று வரவும், ஆவணங்களை சேகரிக்கவும் புஷ்பாவுக்கு சக்தியோ, உடல்நலமோ அல்லது பணமோ இல்லை, குறிப்பாக திருமணத்துக்கு பெற்ற கடன்கள் இருக்கும் போது இந்த செலவுகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
இந்த கடன்களை எப்படி திரும்பச் செலுத்தப் போகிறோம் என்பது ராகுலுக்கு உறுதியாக தெரியவில்லை. “நாங்கள் வீட்டில் உள்ள பொருட்களை விற்க வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர். அல்லது அதை விட மோசமாக, தனது தந்தையை போல தானும் காடுகளுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும் என அவரது தாய் அஞ்சுகிறார்.

தனது தந்தையின் இறப்புக்கு பிறகு குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் தனது 20 வயதான ராகுல் மொண்டலுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம், ஆனால் ஒருநாள் அனைத்தையும் மாற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்

பிரியங்காவின் திருமணத்துக்காக அருகிலுள்ள கோசபா நகரத்தில் வாங்கிய பிரோவை சரக்கு ஏற்றும் படகில் ஏற்றி 5 மணிநேரப் பயணத்துக்கு பின்னர் ரஜத் ஜூப்ளி கிராமத்தில் உள்ளூர்வாசிகள் இருவரது உதவியோடு இறக்கும் பணியில் ஈடுபட்ட ராகுல் (வலது) மற்றும் உறவினர் மிதுன்

திருமண விழா தொடங்குவதற்கு முன்னதாக விழாவுக்காக செய்யப்பட்டுள்ள அலங்காரங்களை பார்வையிடுகிறார் பிரியங்கா

திருமண நாளன்று தனது மகளை ஆசிர்வதிக்கும் நிகழ்வில் பங்கேற்ற புஷ்பா

கயே ஹோலத் விழாவில் பிரியங்காவின் மீது தண்ணீரை ஊற்றும் உறவினர்கள், திருமண நாளன்று காலையில் மஞ்சள் விழுதை மணமகள் மீது ஊற்றி குளிக்க வைக்கும் சடங்கு

திருமணத்துக்கு முந்தைய விழாவில் பிற்பகலில் பிரியங்கா மற்றும் அவரது உறவினர்கள்

ஹரின்மே (நடுவில்) பார்வை மாற்றுத்திறனாளி மருமகள் ஜூம்பா (அவருக்கு வலதுபுறம்), மற்றும் குடும்ப உறுப்பினர்கள் திருமணம் நடைபெறும் இடத்துக்கு புறப்படுகின்றனர்

ஹிரன்மேயின் திருமண ஊர்வலத்தில் பேண்ட் இசை வழங்கிய நாட்டுப்புற கலைஞர் நித்யானந்த சர்க்கார் (இடமிருந்து 2-வது) மற்றும் அவரது குழுவினர்

அர்ஜூன் மொண்டலின் உறவினர்கள் மறைந்த ஆத்மாவுக்கு கண்ணீர் மல்க உணவு படையல் செய்தனர்

புஷ்பா நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால் அவதியுற்றார். அவர், திருமண விழாவில் ஒரு முறைக்கு மேலாக மயக்கமடைந்தார்

பிரியங்காவை உறவினர்கள் ஒரு மரப்பலகையில் வைத்து திருமண மேடைக்கு தூக்கிச் சென்றனர். மணமகனை பார்ப்பதற்கு முன்பாக தனது முகத்தை மறைத்துக் கொள்ள கையில் வெற்றிலையை அவர் வைத்திருந்தார்

திருமண மேடைக்கு மணமகன் வரும் போது இருவரும் நேருக்கு நேராக பார்க்கும் மங்களகரமான பார்வையில் பிரியங்கா

ஹிரன்மே – பிரியங்கா இறுதியாக திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கொண்டாட்டத்தில் மின்னும் காட்சி

பிரியங்காவின் மூத்த உறவினர் ஹிரன்மேயிடம் நகைச்சுவை ஒன்றை சொல்கிறார். வயதில் மூத்த பெண்கள் மணமகனை விளையாட்டாக கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

புதிதாக திருமணம் செய்து கொண்ட தனது மகளை முத்தமிட்டு வாழ்த்துகிறார் புஷ்பா

திருமண விழாவை தனது நிகழ்ச்சிகளால் மகிழ்விக்கிறார் நித்தியானந்த சர்க்கார். அவர் ஒரு விவசாயி மட்டுமல்ல ஜூமுர் பாடல்கள், மா போன்பி நாடகங்கள் மற்றும் பாலா கான் போன்ற பல்வேறு நாட்டுப்புற கலைகளை நிகழ்த்தும் கலைஞர்

இரவை தனது வீட்டில் கழித்த பிரியங்கா, ஹிரன்மேயின் இல்லத்துக்குப் புறப்படத் தயாராகிறார்

மகள் வீட்டிலிருந்து வெளியேறுவதால் உடைந்து போய் சமையல் அறையில் அழுகிறார் புஷ்பா, ‘அவள் எனக்கு ஒரு தூண் போல் இருந்தாள். தற்போது அவள் போகிறாள், அவள் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்?’ என அழுகிறார்

திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு புறப்பட்ட தனது சகோதரி மற்றும் மைத்துனன் ஆகியோரை கட்டியணைத்து கலங்குகிறார் ராகுல் மொண்டல்

தனது புதிய வீட்டுக்கு புறப்படும் பல்லக்கில் அமர்ந்து கண்கலங்குகிறார் பிரியங்கா
தமிழில் : ஜீவரத்தினம்