தெய்வம் எந்த நிமிடமும் பூமிக்கு வரலாம். அவருக்கு உடை மாற்ற முதலில் அவகாசம் கொடுக்க வேண்டும். “ஏற்கனவே ஏழு மணி ஆகிவிட்டது. ரஜத் ஜூபிலி கிராமத்து மக்களே, படுக்கைகளையும் துணிகளையும் புடவைகளையும் தயவுசெய்து கொண்டு வாருங்கள். நாம் ஒரு உடை மாற்றும் அறையை உருவாக்க வேண்டும். கடவுளின் பூமி வருகை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.” இசை நிகழ்ச்சிக்குக்கு முந்தைய அறிவிப்புகள் காற்றில் எதிரொலித்து கிராமத்தின் தெருக்களில் பரவின. இரவு நிச்சயம் விழாக்கோலம் பூணவிருக்கிறது.
ஒரு மணி நேரத்தில், உடை மாற்றும் அறை ஒன்று தயாரானது. கலைஞர்கள் பளீர் உடைகளில் ஒப்பனை போட்டு, அணிகலன்கள் அணிந்து கொண்டு எழுதப்படாத திரைக்கதையின் வசனங்களை ஒப்பித்து பார்த்துக் கொண்டனர். குழுவின் தலைவரான நித்தியானந்தா சர்கார் சோகமான பாவனையைக் கொண்டிருந்தார். ஹிரான்மாய் மற்றும் பிரியங்கா திருமணத்தில் அவரை துடிப்புமிக்க நடனக்கலைஞராக நான் சந்தித்திருக்கிறேன். இன்று அவர் பாம்புப் பெண் தெய்வமான மனசாவாக நடிக்கவிருக்கிறார். மாலையில் நடக்கவிருக்கும் நாடகத்தில் பங்குபெறவிருக்கும் பிற கலைஞர்களை எனக்கு அறிமுகப்படுத்துகிறார்.
மங்கள் காவ்யா என்கிற வகையில் ஒரு புகழ் வாய்ந்த பெண் கடவுளையோ தெய்வத்தையோ புகழ்ந்து பாடும் இசை நாடகமே பலகான நாடகம். இத்தகைய கதைப்பாடல்கள் வழக்கமாக இந்தியா முழுமைக்கும் கடவுளாக இருக்கும் சிவனின் புகழ் பாடுவதாக இருக்கும். உள்ளூர் தெய்வங்களான தர்மா தாகூர், பாம்பு தெய்வம் மா மனசா, அம்மை நோய்த் தெய்வமான ஷிதாலா, காட்டுதெய்வமான போன் பிபி முதலிய தெய்வங்களைப் பற்றியும் பாடப்படுகிறது. பல தரப்பு மக்களுக்காக இந்த இசை நாடகங்களை நிகழ்த்த, கலைஞர்களின் குழுக்கள் சுந்தரவனங்களின் பல பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் பயணிக்கின்றன.
மேற்கு வங்கம், அசாம், பிகார் முதலிய மாநிலங்களில் நிகழ்த்தப்படும் மனசா பல கான இசை நாடகம், மனசா மங்கள காவ்யா என்கிற முக்கியமான கதைப்பாடலை அடிப்படையாகக் கொண்டது. அந்த கதைப்பாடலின் காலம் 13ம் நூற்றாண்டு எனக் குறிக்கிறது ஓர் ஆய்வு. பல நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பாடல் அது. வங்கத்தின் பல மாவட்டங்களில் வசிக்கும் தலித்களின் கடவுளாக மனசா பெண் தெய்வம் வணங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தின் விஸ்வகர்மா பூஜையின்போதும் (இந்த வருடம் செப்டம்பர் 17), சுந்தரவனத்தின் பல கிராமங்களை சேர்ந்த குடும்பங்கள் பாம்பு தெய்வத்தை வணங்கி பல கான நாடகத்தை நடத்துகின்றனர்.


இடது: வங்கத்தின் பல மாவட்டங்களில் வசிக்கும் தலித்களின் கடவுளாக மனசா பெண் தெய்வம் வணங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தின் விஸ்வகர்மா பூஜையின்போதும் (இந்த வருடம் செப்டம்பர் 17), சுந்தரவனத்தின் பல கிராமங்களை சேர்ந்த குடும்பங்கள் பாம்பு தெய்வத்தை வணங்கி பல கான நாடகத்தை நடத்துகின்றனர். வலது: ரஜத் ஜுபிலி கிராமத்தைச் சேர்ந்த வயோதிக பெண்கள் மக்களை பூஜைக்கு வரவேற்கின்றனர்
மனசாவின் வீரம் பற்றியக் கதைகளை கோர்த்து நடத்தப்படும் இசைநிகழ்ச்சி, சுந்தரவனத்தின் விஷம் நிறைந்த பாம்புகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் வைக்கும் வேண்டுதல். 30 வகை பாம்புகள் இங்கு இருக்கின்றன. அவற்றில் ராஜநாகம் போன்ற கொடும் விஷம் கொண்ட பாம்புகளும் அடக்கம். இப்பகுதியில் நேரும் பதிவுப்படாத பல மரணங்களுக்கு பாம்புக் கடியே காரணமாக இருக்கிறது.
இன்றைய நாடகம் பணக்கார சிவபக்தரான சந்த் சதாகரின் கதையையும் மனசாவை உச்சபட்ச தெய்வமாக அவர் ஏற்க மறுப்பதையும் பற்றி இருக்கப் போகிறது. எதிர்ப்புச் செயல்கள் பலவற்றின் ஒரு கட்டமாக சந்த் சாகரின் சரக்குகளை கடலில் அழிக்கிறார் மனசா. அவரின் ஏழு மகன்களை பாம்புக் கடியால் கொல்லவும் வைக்கிறார் மனசா. இன்னொரு மகனை அவனது திருமண நாள் இரவிலேயே கொல்கிறது தெய்வம். துயரம் கொடுத்த கோபத்தில் கணவனின் உயிரை மீட்க அவனது உடலோடு மேலுகத்துக்கு செல்கிறார் பெகுலா. அங்கு, மனசா பெண் தெய்வத்தை சந்த் சதாகர் வழிபட அறிவுறுத்துமாறு சொல்லி அனுப்புகிறான் இந்திரன். அதற்குப் பதிலாக சில நிபந்தனைகளை விதிக்கிறான் சந்த் சதாகர். இடது கையால்தான் மனசாவுக்கு பூக்களை படைக்க முடியும் என்கிறான். அவனது புனிதமான வலது கையைக் சிவனை வழிபட பயன்படுத்த வேண்டுமென்கிறான். மனசா தெய்வம் இந்த வேண்டுதலை ஏற்கிறார். லகிந்தரின் உயிரை சந்த் சதாகர் இழந்த செல்வங்களுடன் சேர்ந்து அவருக்கு திருப்பி அளிக்கிறார்.
மனசா பாத்திரத்தை நடிக்கும் நித்யானந்தா 53 வயது விவசாயி ஆவார். 25 வருடங்களாக இக்கலையைச் செய்து வரும் பழம்பெரும் பல கானக் கலைஞரும் ஆவார்.வெவ்வேறு பல கான நாடகங்களுக்கு அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களுடன் பணியாற்றுகிறார். “2019ம் ஆண்டிலிருந்து நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் அவர். “இந்த வருடமும் தொற்றுநோயால் மோசமாகி விட்டது. நிகழ்ச்சிக்கான சில அழைப்புகள் மட்டுமே கிடைத்தன. எங்களுக்கு வந்த அழைப்புகளிலேயே குறைவான அழைப்புகள் வந்தது இந்த வருடத்தில்தான். மாதத்துக்கு 4 அல்லது 5 அழைப்புகள் வரும். ஆனால் இந்த மொத்த வருடமும் இதுவரை இரண்டு அழைப்புகள்தான் வந்திருக்கின்றன. வருமானமும் குறைவு. “முன்பெல்லாம் ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து 800-900 ரூபாய் வரை வருமானம் ஈட்டினோம். தற்போது அதுவும் குறைந்து 400லிருந்து 500 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. “
உடை மாற்றும் அறை, சரியான மேடை, சரியான ஒலி-ஒளி அமைப்பு, கழிவறை வசதிகள் முதலியவை இல்லாமல் கிராமப்புற நாடகக்கலை எந்தளவுக்கு சிரமம் வாய்ந்தது என்பதை நித்யாந்தாவுக்கு அருகே அமர்ந்திருக்கும் பெனாமலி பியாபாரி சொல்லத் தொடங்குகிறார். “நிகழ்ச்சிகள் 4-5 மணி நேரங்கள் நீடிக்கும். மிகவும் கடினமான வேலை. எங்களின் ஆர்வத்துக்குதான் இதைச் செய்கிறோம். வருமானம் ஈட்டவல்ல,” என்கிறார். நாடகத்தில் அவருக்கு இரு பாத்திரங்கள்: லகிந்தரைக் கொல்லும் கல்நாகினி பாம்பு ஒன்று. நகைச்சுவை பாத்திரமான பர் இன்னொன்று. அழுத்தம் நிறைந்த நாடகத்தில் சிரிப்புக்கு பயன்படும் பாத்திரம் அது.

மனசா பாத்திரத்தை நடிக்கும் நித்யானந்தா 53 வயது விவசாயி ஆவார். 25 வருடங்களாக இக்கலையை நிகழ்த்தி வருகிறார். கோவிட் தொடங்கியபின் தற்போது நிகழ்ச்சிக்கான அழைப்புகள் மிகக் குறைவாக உள்ளது. ‘முன்பெல்லாம் ஒவ்வொருவரும் 800-900 ரூபாய் வரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து வருமானம் ஈட்டினோம். தற்போது அது 400லிருந்து 500 ரூபாயாக குறைந்துவிட்டது,’ என்கிறார் அவர்
இசைக்கலைஞர்கள் இசைக்கத் தொடங்கி நிகழ்ச்சியின் தொடக்கத்தை அறிவிக்கின்றனர். அற்புதமான உடையலங்காரங்களில் இருக்கும் நித்யானந்தாவும் பிற குழுவினரும் மேடையை நோக்கிச் செல்கின்றனர். மனசா தெய்வம் மற்றும் கிராமத்து பெரியவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டி நிகழ்ச்சி தொடங்குகிறது. தங்களுக்கு பரிச்சயமானவர்களாக இருந்தாலும் பரிச்சயமான பாத்திரங்களாக இருந்தாலும் செம்மையாக நாடகம் நிகழ்த்தப்படுவதை மெய்மறந்து எந்த சத்தமும் இன்றி கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தது. எந்த நடிகரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அவர்கள் அனைவருமே விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் புலம்பெயர் தொழிலாளர்களும்தான்.
ஆறு பேர் கொண்ட குடும்பம் நித்யானந்தாவுக்கு இருக்கிறது. “இந்த வருடத்தின் யாஸ் புயலால் என்னுடைய விவசாயத்திலிருந்து ஒரு வருமானமும் இல்லை,” என்கிறார் அவர். “என்னுடைய நிலத்தை உப்பு நீர் மூழ்கடித்துவிட்டது. இப்போது இன்னும் அதிகமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. என்னுடைய குழு உறுப்பினர்களும் இத்தகைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். நல்லவேளையாக எனக்கு மாதந்தோறும் அரசிடமிருந்து 1000 ரூபாய் (லோக்பிரசார் பிரகல்பா என்கிற மாநிலத் திட்டத்தின்கீழ் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கிடைக்கும் தொகை) கிடைக்கிறது.”
நித்யானந்தாவின் மகனைப் போன்ற இளையத் தலைமுறையினர் பல கான நாடகம் நிகழ்த்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. லகிரிப்பூர் பஞ்சாயத்தின் கிராமங்களிலிருந்து பிற மாநிலங்களுக்குச் சென்று கட்டுமானத் தொழிலாளர்களாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர். “பண்பாடு மாறிக் கொண்டிருக்கிறது. 3-5 வருடங்களில் இந்த கலை வடிவம் அழிந்து போய்விடலாம்,” என்கிறார் நித்யானந்தா.
“பார்வையாளர்களின் விருப்பங்களும் மாறிவிட்டது. செல்பேசி பொழுதுபோக்கு, பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளின் இடங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது,” என்கிறார் பிஸ்வாதிஜ் மண்டல். அவரும் நாடகக்குழுவைச் சேர்ந்தவர்தான். நாற்பது வயதுகளில் இருப்பவர்.
பல மணி நேரங்களாக நாடகத்தைப் பார்த்து கலைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்த நான், விடைபெறும் நேரம் வந்துவிட்டது. நான் கிளம்பும்போது, நித்யானந்தா அழைக்கிறார்: “குளிர்காலத்தில் மீண்டும் வாருங்கள். நாங்கள் மா போன் பீபி பல கான நாடகம் அரங்கேற்றுவோம். அதையும் நீங்கள் ஆவணப்படுத்த விரும்பலாம். எதிர்காலத்தில் இக்கலையை பற்றி வரலாற்று புத்தகங்களில்தான் மக்கள் தெரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.”

மனசா பல கான கலைக்குழுவின் ஒரு கலைஞரான பிஸ்வாதிஜ் மண்டல், தன்னுடைய உடையையும் ஒப்பனையையும் உடை மாற்றும் அறையில் சரி பார்த்துக் கொள்கிறார்

ஒரு கலைஞர் மேடைக்கு செல்வதற்கு முன் சலங்கைகள் கட்டுகிறார்

பனாமலி பியாபாரிக்கு நாடகத்தில் இரண்டு பாத்திரங்கள்: கல்நாகினி பாம்பு பாத்திரம் மற்றும் பர் எனும் நகைச்சுவைப் பாத்திரம். 4-5 மணி நேரங்களுக்கு நாடகம் தொடரும். கிராமப்புற நாடகக்கலையில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்றாலும் “நாங்கள் எங்களின் ஆர்வத்துக்காக செய்கிறோம், பொருளாதார ஆதாயத்துக்கல்ல,” என்கிறார் அவர்

தன்னுடைய வசனங்களை ஒத்திகை பார்க்கிறார் ஸ்வபண் மண்டல். எழுதப்பட்ட வசனங்கள் இல்லாததால் பல கானக் கலைஞர்கள் ஞாபகத்தை சார்ந்தே இயங்குகிறார்கள்

ஸ்ரீபதா மிருதா, மனசா தெய்வம் வெல்ல விரும்பும் செல்வந்தனும் சிவபக்தனுமான சந்த் சதாகர் என்கிற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்

ஓர் இசைக்கலைஞர் தன்னுடைய நாக்கால் இசைக்கருவியை நிகழ்ச்சிக்கு முன் வாசிக்கிறார்

ஓர் இசைக்கலைஞர் ஜால்ரா வாசிக்கிறார்

நித்தியானந்தாவும் பிற கலைஞர்களும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தெய்வத்தை வணங்குகின்றனர்

கலைஞர்களாக நாங்கள் மேடையை மதிக்கிறோம். அதுதான் எங்கள் கோவில். அதன் ஆசிர்வாதத்தை நாங்கள் பெறுகிறோம்,” என்கிறார் நித்யானந்தா

இடதிலிருந்து:: ஸ்வபண் மண்டல் (சந்த் சதாகரின் மனைவி பாத்திரத்தில் நடிப்பவர்), நித்யாந்தா சர்கார் (மனசா தெய்வத்தின் பாத்திரத்தில் நடிப்பவர்), மற்றும் பிஸ்வாஜித் மண்டல் (சந்த் சதாகரின் மகள் பாத்திரத்தில் நடிப்பவர்) ஆகியோர் கிராம தெய்வங்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்குகிறார்கள்

மனசா தெய்வமாக நடிக்கும் நித்யானந்தாவின் நடிப்பை மெய்மறந்து பார்க்கும் மக்கள்

இந்த இசை நாடகம், மனசா மங்கள காவ்யா என்கிற முக்கியமான கதைப்பாடலை அடிப்படையாகக் கொண்டது. அந்த கதைப்பாடலின் காலம் 13ம் நூற்றாண்டு எனக் குறிக்கிறது ஓர் ஆய்வு. பல நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பாடல் அது

தங்களுக்கு பரிச்சயமான மக்கள் நாடகத்தின் அற்புதமான பாத்திரங்களை ஏற்று நடிப்பதை ஆச்சரியத்துடன் இந்த வயோதிகப் பெண் பார்ப்பது போல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்

சந்த் சதாகரின் மகன் லகீந்தரை மனசாவின் சார்பில் கொல்வதற்காக, விஷம் கொண்ட கல்நாகினியாய் மேடைக்குள் நுழைகிறார் பனாமலி பியாபாரி

ஒரு முக்கியமான காட்சியில் மனசாவாக நித்யானந்தாவும் கல்நாகினி பாம்பாக பனாமலி பியாபாரியும்

சவால் மிகுந்த ஒரு காட்சியை நடித்த அயர்ச்சியில் மேடைக்கு பின் சென்ற பனாமலி நீர்க்குறைபாட்டால் மயங்கி விழுந்திருக்கிறார். இங்கிருக்கும் நடிகர்களில் எவரும் முழு நேரத் தொழில்முறைக் கலைஞர்கள் அல்ல. விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களில் அடக்கம்

சந்த் சதாகரின் மனைவி சனகா பாத்திரத்தில் ஸ்வபன் மண்டல் (இடது)

சந்த் சதாகர் பாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீபதா மிருதா அவரின் கப்பல் உடைபட்டு, சரக்கு புயலால் அழிக்கப்பட்ட நிலையில் கடலில் மிதக்க முயற்சிக்கும் காட்சியில் நடிக்கிறார்

குழுவின் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நடிப்பையும் நித்யானந்தா கவனமாக பார்க்கிறார்

நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டும் நள்ளிரவுப் பொழுதில் ஓர் ஊதுபத்தியிலிருந்து எழும் புகை. பார்வையாளரகளில் இருக்கும் குழந்தைகள் ஏற்கனவே தூங்கி விட்டனர்
தமிழில்: ராஜசங்கீதன்