அவர் எழுபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் ஒரு ஸ்ட்ராபெரி விவசாயி. பழைய மஹாபலேஷ்வரில் உள்ள அவரது மூன்று ஏக்கர் நிலத்தில் தோண்டப்பட்ட கிணறு தூர்ந்துவிட்டது. அவரது மனைவியும் அவரும் பண்ணையை தொடர்ந்து நடத்த போராடி வருகின்றனர். அவர்களது ஆழ்துளைக் கிணறில் இன்னமும் தண்ணீர் இருப்பதால் அதை வைத்து சமாளித்து வருகின்றனர். ஆனால் அவர் அந்தக் கொஞ்சத்தையும் இலவசமாக அவரது நிலத்திற்கு அருகில் இருக்கும் கோயிலுடன் பகிர்ந்து கொள்கிறார். தீவிர வறட்சி அவரது விளைச்சலை பாதித்துள்ளது, அவரது தாராள குணத்தை அல்ல. அவரது பெயர் யூனுஸ் இஸ்மாயில் நலாபந்து - அவர் அந்த நீரை சதாரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நதியின் மூலத்தில் இருக்கும் மிகப்பழமையான அடையாளமான கிருஷ்ணம்மை கோவிலுடன் ஆனந்தமாக பகிர்ந்து கொள்கிறார்.

"இது உண்மையில் என்னுடைய தண்ணீரா?" என்று அவர் கேட்கிறார். "இது எல்லாமே மேலே இருப்பவனுக்கு (இறைவனுக்கு) சொந்தமானது இல்லையா?". 70-களில் இருக்கும் அவரது மனைவி ரோஷன் நலாபந்தும் அதனை ஆமோதித்து தலை அசைக்கிறார். அவர்கள் இருவரும் ஸ்ட்ராபெரி பழங்களை சிறிய டப்பாக்களில் அடைத்து கொண்டிருந்தனர். "வர்த்தகர்கள் அதனை எடுத்துச் செல்வதற்கு வருவார்கள்", என்று கூறினார் ரோஷன். பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு விலை அதிகமாக இருக்கிறது ஆனால் மோசமான மகசூல் மற்றும் பயிரின் தரம் குறைவாக இருப்பதால் அதனை அது ஈடு செய்துவிடுகிறது. அவர்களது வேலையை நிறுத்தாமலே தண்ணீர் பற்றாக்குறை அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் பேசினர். ரோஷன் மட்டுமே ஒரு நிமிடம் வேலையை நிறுத்தி எங்களுக்கு தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கினார்.

நலாபந்துக்களின் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் வரும் போது தவிர மற்ற நேரங்களில் கிருஷ்ணம்மையின் குந்தா (கோவில் குளம்) காலியாகவே உள்ளது. இந்த வருடம் குளம் வறண்டுவிட்டது. அதிகமாக பார்வையிடப்படுகின்ற பஞ்சகங்கா கோவிலிருந்து சில நிமிட நடை பயண தூரத்திலேயே கிருஷ்ணம்மை இருக்கிறது, பஞ்சகங்கா என்பது கிருஷ்ணா, கொய்னா, வீணா, சாவித்திரி மற்றும் காயத்ரி ஆகிய நதிகளின் மூலத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அவற்றின் உண்மையான மூலமும் இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. கிருஷ்ணமையே வை - மஹாபலேஷ்வர் பகுதியில் உள்ள மிகப் பழமையான கோவிலாகும். அழகான, சிறிய நதிக்கான தெய்வத்தின் கோவிலாக இது உள்ளூர் மக்களால் பார்க்கப்படுகிறது.

Old couple selling strawberries
PHOTO • P. Sainath
Dry well
PHOTO • P. Sainath

யூனுஸ் நலாபந்து மற்றும் அவரது மனைவி ரோஷன் நலாபந்து ஆகியோர் சிறு விவசாயிகள், அவர்களது மூன்று ஏக்கர் நிலத்தில் ஸ்ட்ராபெரி பழங்களை பயிர் செய்து வருகின்றனர். கீழே: முழுமையாக தூர்ந்து போன அவர்களது கிணறு

நானும், எனது நண்பரும், சகாவுமான ஜெய்தீப் ஹர்தீக்கரும், நாங்கள் சென்ற மாவட்டத்தில் உள்ள மற்ற பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து மே மாதம் முழுவதும் மகாராஷ்டிராவில் உள்ள பல நதிகளின் மூலங்களுக்கு - உண்மையான அல்லது அடையாள - மூலங்களுக்குச் சென்றோம். ஒவ்வொரு நதியின் கீழ் நீரோட்ட திசையில் பயணித்து இந்த வழித்தடங்களில் வாழும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இங்கு வாழும் மக்களுடன் பேச வேண்டும் என்பதே எங்களது எண்ணமாக இருந்தது. வானிலை வறட்சியை விட மிகப் பெரியதான ஒரு பெரிய நீர் நெருக்கடி - எவ்வாறு அவர்களது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் பேசுவதைக் கேட்பதே எண்ணம்.

நதிகளின் சில பகுதிகள் கோடை காலத்தில் வறண்டு போவது இயல்பானது தான் என்றாலும், இப்போது ஒரு போதும் வறண்டு போகாத மூலத்திலேயே அது நடக்கிறது. "மகாராஷ்டிராவில் ஒருகாலத்தில் வற்றாத ஜீவ நதிகளாக இருந்தவை இப்போது பருவகால நதிகளாக மாற்றப்பட்டுள்ளன", என்று மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் நிபுணர் குழுவின் தலைவரான பேராசிரியர் மாதவ் கேட்கில் கூறுகிறார். இதற்கான காரணங்களில் நதியின் பாதை மற்றும் படுகையில் பெரிய அளவிலான அணைகளைக் கட்டுதலும் அடங்கும் என்று முன்னணி சூழலியல் நிபுணர் மற்றும் எழுத்தாளர் கூறுகிறார்.

கடந்த 60 ஆண்டுகளில் கிருஷ்ணம்மையின் குந்தா வறண்டோ அல்லது காய்ந்துபோயோ நான் கண்டதில்லை என்று கூறுகிறார் நாராயண் ஸேடே. இப்பகுதியில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 2000 மில்லி மீட்டர் அளவு மழை பெய்யும். ஒரு ஓய்வுபெற்ற சுற்றுலா வழிகாட்டி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளரான ஸேடே இக்கோயிலைச் சுற்றி அமர்ந்து கொண்டு தனது பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். வறட்சி என்பது மழைப்பொழிவை மட்டுமே சார்ந்தது அல்ல என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியாட்களிடம் - "உங்களைப் போன்றவர்களிடம்" - இதற்கு பதில் கூற நிறைய இருக்கிறது, என்று கூறுகிறார்.

"நிச்சயமாக, இங்கு ஒரு பெரிய காடழிப்பு செய்யப்பட்டிருக்கிறது, ஆனால் அது உள்ளூர் வாசிகளால் செய்யப்படவில்லை, என்று அவர் கூறுகிறார். இங்கே எங்களில் ஒருவர் இரண்டு கிளைகளை வெட்டினால் கூட சிறைக்குச் செல்ல நேரும். ஆனால் வெளியிலிருந்து வரும் மக்கள் மரத்தை வெட்டி லாரிகளில் கட்டைகளை ஏற்றி தப்பிச் சென்று விடுகின்றனர்", என்று கூறுகிறார். ஸேடே ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி இருந்தாலும், கட்டுப்பாடற்ற சுற்றுலா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்: "இப்போது புதிய இடங்கள் முளைத்து இந்த ரெசார்ட்கள் எல்லாம் வந்துவிட்டன, இதுவும் பசுமை அழிவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது". சுற்றுலா பயணிகளால் கலகலத்து கொண்டிருக்கும் பஞ்சகங்கை கோவிலை விட அமைதியாக இருக்கும் கிருஷ்ணம்மை கோவிலையே அவர் இப்போது விரும்புகிறார்.

PHOTO • P. Sainath

பழைய மகாபலேஷ்வரில் உள்ள கிருஷ்ணம்மை கோவில்: அதற்கு முன்னால் உள்ள சிறிய 'குந்தா' மனித நினைவுகளில் முதல்முறையாக வறண்டு கிடக்கிறது

கோவிலின் முன் முற்றத்தில் இருந்து பார்த்தால் தோம் பால்கவாடி அணை மிக அற்புதமாக தெரியும். அதில் இன்னமும் சிறிது தண்ணீர் இருக்கிறது ஆனால் வழக்கமாக ஆண்டின் இந்த நேரத்தில் இருக்க வேண்டியதை விட மிகக் குறைவான அளவே இருக்கிறது. பல ஆண்டுகளாக அணை வைத்து தடுத்ததும், ஆற்றின் குறுக்கே நீரைத் திருப்பியதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபோதும் முடிக்கப்படாத மேல் ஏற்றம் செய்யும் பாசன திட்டங்களில் குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. இதுதான் மாநிலத்தில் "நீர்ப்பாசன ஊழலின்" மையம்.

மிகவும் விலை உயர்ந்த இந்தத் திட்டத்திலிருந்து பயன்பெறக்கூடிய, ஆனால் ஒருபோதும் பலன் கிடைக்காத சில கிராமங்கள் சதாராவின் கட்டவ் மற்றும் மான் தாலுகாவில் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள நேர் அணை மற்றும் ஏரி ஆகியவை குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அதிக எண்ணிக்கையிலான கிராமங்களுக்கு நீர் வழங்குவதற்காகவே உள்ளது, ஆனால் நீர் பெரும்பாலும் அருகில் உள்ள 19 கிராமங்களில் இருக்கும் கரும்பு விவசாயிகளால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நேர், கிருஷ்ணம்மையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் கீழ் நீரோட்ட திசையில் இருக்கிறது.

மான் மற்றும் கட்டவ் தாலுகாக்களைத் தவிர இங்கு மிகவும் வறண்ட 11 தாலுகாக்கள் சதாரா, சங்கிலி மற்றும் சோலாப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவிக் கிடக்கிறது. இந்த தாலுகாக்களில் இருந்து மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக்கான சபை ஒன்றை கூட்டுகின்றனர். "இந்தப் 13 தாலுகாக்களை உள்ளடக்கிய ஒரு 'தனி வறட்சி மாவட்டம்' ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை", என்று மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் மாருதி இராமகிருஷ்ணா கட்கர் கூறுகிறார்.

"அவர்களின் தற்போதைய மாவட்டங்களில் அவர்களுடைய கோரிக்கையை கேட்பது என்பது குறைவாகத்தான் நடைபெறுகிறது", என்கிறார் கட்கர். ஆனால் ஒரு தனி மாவட்டமாக 'பிரித்து உருவாக்குதல்' என்பது அவர்களுக்கு எவ்வாறு உதவும்? பழைய மாவட்டங்கள் அவர்கள் பிரிந்து செல்வதைத் தான் விரும்புகின்றது ஆனால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இன்னும் நிச்சயமாக குறைந்துவிடும்? புதிய வறட்சி மாவட்ட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் கிருஷ்ணா இங்கோலை அவர் எங்களுடன் தொலைபேசியில் பேசச் செய்தார். இப்பகுதியில் இருக்கும் மக்களின் ஒரே மாதிரியான கோரிக்கை அவர்களை ஒன்றிணைக்கிறது, மேலும் ஒரே மாவட்டத்தில் இருக்கும் போது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்வதற்கு அது உந்து சக்தியாக இருக்கும் என்று இங்கோல் கூறுகிறார்.

இந்த தாலுகாக்கள் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திலும், மழை மறை மண்டலத்திலும் இருக்கின்றது என்று கட்கர் கூறுகிறார். "எங்களுக்கு ஆண்டொன்றுக்கு 30க்கும் குறைவான மழை நாட்களே இருக்கின்றது. எங்களது பகுதிகள் அனைத்தும் பெரும் புலம்பெயர்தலைக் கண்டிருக்கிறது. புலம்பெயர்ந்தவர்களிடையே தங்கம் மற்றும் நகை தொழிலாளர்கள் உள்ளனர், அவர்கள் திருப்பி அனுப்பும் பணத்தை வைத்துத் தான் உள்ளூர் பொருளாதாரம் நடந்து கொண்டிருக்கிறது", என்று கூறுகிறார்.

Man sitting outside the temple
PHOTO • P. Sainath

கிருஷ்ணம்மை கோவிலில் நாராயண் ஸேடே. காடழிப்பு, கூட்ட நெரிசல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகரிக்கும் பிற நடவடிக்கைகளுக்கு, அவர் வெளியிலிருந்து வரும் மக்களையே குற்றம் சாட்டுகிறார்

தண்ணீர் பற்றாக்குறை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்சனை அல்ல. ஒரு பெரிய வறட்சியும் ஏற்படுத்தவில்லை. இது பல தசாப்தங்களாக பெரும்பாலும் மனிதர்களின் செயல்பாட்டால் உருவாக்கப்பட்டது. ஏன் இதைச் சமாளிக்க நீண்ட கால நடவடிக்கைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை? என்று நீர்ப்பாசன பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற சரத் மாண்டே கேட்கிறார். அவரே அவரது கேள்விக்கான பதிலையும் கூறுகிறார்: ஒரு அணையின்  ஆயுள் என்பது 80 முதல் 90 ஆண்டுகள். குழாயின் ஆயுள் 35 முதல் 40 ஆண்டுகள். நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் ஆயுள் சுமார் 25 முதல் 30 ஆண்டுகள். பம்பிங் இயந்திரங்களின் ஆயுள் 15 ஆண்டுகள். ஆனால் ஒரு முதல்வரின் ஆயுள் வெறும் ஐந்து ஆண்டுகளே. அதனால் நீண்டகால நடவடிக்கைகளால் அவருக்கு பலன் இல்லை. உடனுக்குடன் எதை செய்கிறீரார்களோ அதற்கான பலன் மட்டுமே கிடைக்கும்", என்று கூறுகிறார்.

2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையில் மாநிலத்தின் நீர்பாசனத் திறன் வெறும் 0.1சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது. அதாவது அதே தசாப்தத்தில் நீர்ப்பாசனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 70,000 கோடி ரூபாய்.  நீர்ப்பாசன ஊழலை ஆராய்ந்த சிட்டாலே கமிட்டியின் கண்டுபிடிப்புகளின் படி, அதில் பாதிக்கும் மேல் பயனற்ற திட்டங்களில் செலவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் படி ஒரு அணைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னர் ஒரு மாதத்திற்குள் அதன் விலை 500 சதவீதம் அதிகரித்திருக்கிறது அல்லது ஆறு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 1000% வரை அதிகரித்திருக்கிறது. 77 க்கும் மேற்பட்ட திட்டங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக "செயல்படுத்தப்பட்டு வருகின்றன". சில சிறிய இந்திய மாநிலங்களின் வரவு செலவுத் திட்டங்களை விட இந்த செலவு அதிகமானதாகும்.

PHOTO • P. Sainath

சதாரா மாவட்டத்தில் உள்ள நேர் ஏரி மற்றும் அணை: குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட நீரைக் கூட 19 கிராமங்களில் இருக்கும் கரும்பு விவசாயிகல் ஏக போகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்

மகாராஷ்டிராவில் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே வருகிறது நிகர நீர்ப்பாசனத்தின் 65% இந்த நிலத்தடி நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது. 200 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறுகளை அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடை, மூன்று தசாப்தங்கள் தாமதமாக  கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதியின் போக்கில் உள்ள பகுதிகளில் சாதாரணமாக இருக்க வேண்டியதை விட குடிநீர் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. கட்டுமான நடவடிக்கைகளுக்காக நிறைய நீர் திருப்பி விடப்படுகிறது. கிராமப்புறத்தில் இருந்து நகரத்திற்கு நீரை திருப்பி விடுதல் மற்றும் விவசாயத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு நீரை திருப்பி விடுதல் ஆகியவையும் நடைபெறுகின்றன.

விவசாயத்தில், பெரும்பாலான நீர் கரும்பு விவசாயிகளால் ஏகபோகமாக சுரண்டப்படுகிறது. குடிநீருக்கு என்று ஒதுக்கப்பட்ட நேர் ஏரி நீர் கூட இப்பயிருக்காக திருப்பிவிடப்படுகிறது. மகாராஷ்டிராவில் விளைவிக்கப்படும் மூன்றில் இரண்டு பங்கு கரும்பு, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியில் விளைவிக்கப்படுகிறது. சக்கரை ஆலைகளைப் பொருத்தவரை, "தயவு செய்து அவற்றை அப்படி அழைக்க வேண்டாம்", என்று மண்டே முணுமுணுக்கிறார். "அவை அனைத்தும் சட்டமன்ற உறுப்பினரின் ஆலைகள் - அவர்கள் தான் அவற்றை உற்பத்தி செய்கின்றனர்", என்று கூறுகிறார்.

ஒவ்வொரு ஏக்கர் கரும்பு தோட்டமும் ஒரு வருடத்திற்கு 180 ஏக்கர் அங்குல நீரை பயன்படுத்துகின்றன, சாதாரண மழைநீர் போக, அதாவது கிட்டத்தட்ட 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் 10% பாசன வசதி மட்டுமே ஒரு ஏக்கர்  கொண்ட கலப்பின சோளத்திற்கு தேவைப்படுகிறது. கரும்பு என்பதற்காகவே பெரும்பாலான மக்கள்  அதனை சாடுவதில்லை. அதனை அதற்கான தண்ணீர் உள்ள இடங்களில் வளர்க்கும்படி தான், அவர்கள் கூறுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையான இடங்களில் வளர்க்க வேண்டாம் என்று கூறுகின்றனர். மகாராஷ்டிராவில் கரும்பு வெறும் 4% நிலத்திலேயே பயிரிடப்படுகிறது ஆனால் 70% நீர்ப்பாசனத்தைப் பெறுகிறது.

"மஹாபலேஷ்வரில் இருக்கும் யூனுஸ் நலாபந்து, எங்களுடைய இந்த தோண்டப்பட்ட கிணறு கடந்த ஆறு தசாப்தங்கள் ஒருபோதும் வறண்டதில்லை", என்று கூறுகிறார். அவரும் அவரது மனைவி ரோஷனும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை தொடர்ந்து அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் ஸ்ட்ராபெரி பழ உற்பத்தியில் மஹாபலேஷ்வர் மட்டுமே 80 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. அவர்கள் இருவரும் எங்களுக்கு ஒரு சில ஸ்டிராபெரி பழங்களையும் மற்றும் சில மல்பெரி பழங்களையும் பரிசாக வழங்கினார்.

எங்களுக்கு முன்னால் 100 கெஜம் தொலைவில் அவர்கள் இலவசமாக தண்ணீர் வழங்கும் கிருஷ்ணம்மை கோயில் உள்ளது. எங்களுக்கு பின்னால் அவர்கள் இன்னமும் பயிரிட்டு கொண்டிருக்கும் 3 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் தண்ணீர் வற்றி கொண்டே வருவதால், பழைய கால பீட்டிலின் பாடலில் வரும் 'ஸ்டிராபெரி பீல்ட் பார்எவர்' என்னும் வரிகளைப் போல் அல்லாமல் போகக்கூடும்.

PHOTO • P. Sainath

யூனுஸும், ரோஷனும் வறட்சி காலத்தில் பயிரிட போராடி வருகின்றனர், ஆனால் அவர்கள் ஆள்துளை கிணறில் இருந்து கிடைக்கும் சிறிதளவு தண்ணீரையும் கிருஷ்ணம்மை கோயிலுடன் பகிர்ந்து கொள்கின்றனர்

தமிழில்: சோனியா போஸ்

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose