“இருவர் மட்டுமே பணிபுரிகிறார்கள்” என அவரது ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரமான போர்வெல்லில் பணிபுரிபவர்கள் குறித்து ரோஷன்கான் பகுதியைச் சார்ந்த  பத்ரி காரத் தெரிவித்தார். அவரைப் போன்று  லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து 36 பேரை பணியில் அமர்த்தி ஆழ்துளைக் கிணறு தோண்டுவது என்பது கடினமானது.  பத்ரி காரத் பெரும் நிலக்கிழார், உள்ளூர் அரசியல் பிரமுகராக உள்ளார். எனவே,  அவர் ஜல்னா கிராமத்தில் உள்ள அவரது சுற்றத்தார்களிடம்  தாரளமாகவே இருந்து வருகிறார். அவர் சிறிது தூரத்திற்கு அப்பால் உள்ள கிணற்றில் இருந்து குழாய்களின் வழியாக ரோஷன்கான் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார். இந்த குழாயின் வழியாக அப்பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு மணிநேரம்  இலவசமாகக் குடிநீரைப் பெற்று வருகின்றனர்

இதேவேளையில், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதற்கு ஆகும் அதிகளவிலானச்  செலவுக்கு மத்தியில், அவரது கிணறுகள் தோல்வி அடைந்து அவருக்கு பேரிடராக மாறியுள்ளது. இதுகுறித்து கூறிய அரசு நிர்வாகி ஒருவர்,  “தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் இது பெருமளவில் வளர்ந்து வரும் துறை” என்று குறிப்பிட்டார். மேற்கொண்டு கூறுகையில், “ஆழ்துளையிடும் கருவி உருவாக்குபவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும், டிரில்லர்களுக்கும், இது நல்ல காலம்.  ஒருவேளை அவர்கள் தோண்டிய ஆழ்துளைக் கிணறுகள் நீரைக் கொடுத்தாலும் அல்லது கொடுக்காவிட்டாலும் கூட விவசாயிகள் அதற்கான பணத்தைச் செலுத்தி விடுகின்றனர்” என்றார். ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனங்கள்  (போர்வெல்) நீர் சார் பொருளாதாரத்திற்கு மிக மிக முக்கியமானதும்,  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பும்  கொண்டதாகும்.

மகாராஷ்டிராப் பகுதிகளில் மிகக் குறைந்த இடங்களிலேயே முறைப்படுத்தாத அதிகளவிலான நிலத்தடி நீர் சுரண்டல் உள்ளது என்றாலும், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. வெகு ஆழத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் தொல்-வரலாற்று  நீர் அடுக்குகள் அதாவது பல கோடி ஆண்டுகள் பழமையான நீரினைக் கொண்ட நீர் அடுக்குகள்  மிகுந்த தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

தற்போது ஆழ்துளைக் கிணறுகள் தோல்வியடையும் விகிதம் மிக அதிகரித்துள்ளது. சில கிராமங்களில் 90 விழுக்காடு அல்லது அதைவிட மிக மோசமாக தோல்வியடைந்திருக்கிறது. “பொதுவாக, என்னிடம் 35-40 தொழிலாளர்கள் பணிபுரிந்தார்கள். தற்போது யாருமே பணிபுரியவில்லை. என் பணியிடங்கள் வேலையின்றி அமைதியாகியுள்ளது. எங்கள் கிராமத்தில் போடப்பட்ட அனைத்து புதிய ஆழ்துளைக் கிணறுகளும் தோல்வியடைந்துள்ளது” என்று காரத் கூறினார். மேலும்,  பல பழைய ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டு வருகிறது.

ஆழ்துளைக் கிணறுகள் தோல்வியடையும்  நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் நீர் சிக்கல்களைக் சந்தித்து வருகிற மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான புதிய ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன. அதேவேளையில்,  ஆழ்துளைக் கிணறுகளின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க,கடன் தொகையும் அதிகரித்துள்ளது. “பாசனத்திற்காக தோண்டப்படும் எந்த ஆழ்துளைக் கிணறும் தற்போது 500 அடிக்கும் குறைவாகத் தோண்டப்படுவதில்லை” என்று ஒஸ்மானாபாத் மாவட்டம் தக்விகி பகுதியைச் சேர்ந்த பாரத் ராவத் தெரிவித்தார்.  அவரது கிராமத்தில் உள்ள 1,500 ஆழ்துளைக் கிணறுகளில்,”பாதிக்கும் மேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் தோண்டப்பட்டது.இந்தாண்டு ஜனவரி முதல்  மார்ச் மாதத்திற்கு இடைப்பட்டக் காலத்தில் 300 புதிய ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலான புதிய ஆழ்துளைக் கிணறுகள் தோல்வியில் தான் முடிந்துள்ளது. ஆயினும், வயல்களில் பயிர்கள் அழிவதை சரிசெய்ய மக்கள் எதையும் செய்வதற்கு தயாராக உள்ளனர்” என்றார் அவர்.

PHOTO • P. Sainath

தக்விகி பகுதியில் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் முதல் நாளிலேயே தோல்வியடைந்த நிலையில் , பழைய ஆழ்துளைக் கிணறுகளும் வற்றத் தொடங்கியுள்ளன அல்லது முன்னைவிட குறைவான நீரையே தந்துள்ளன

அங்குள்ள சாலைகளில் பெரும்பாலும் தண்ணீர் லாரிகளே தென்படுகின்றன. அதே போன்று, வயல்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் இயந்திரங்களே  தென்படுகின்றன. இது ஒருவேளை உள்ளூர்  மாவட்டச் சேர்ந்தவர்களால் இயக்கப்படக்கூடியதாகவும், சிலசமயம் சொந்தமாகக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரங்கள் பெரும்பாலும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராபிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவையே. 500 அடி ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு விவசாயிகள் 1,50,000 ரூபாய் செலவிடுகின்றனர், இதில் 70 விழுக்காடு தொகை என்பது இரும்புக்குழாய், நீர்மூழ்கி மோட்டார்,மின்னணுக் கம்பிகள்,பொருத்துதல் மற்றும் டிரான்ஸ்பிரேஷன் ஆகியவற்றிற்காகச் செலவிடப்படுகிறது.  இது போக எஞ்சிய தொகையை  ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும் போர்வெல்  கருவிகளை இயக்குபவர்கள் பெறுகின்றனர். ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணிக்காக: முதல் 300 அடி வரை ஒரு அடிக்கு 60 ரூபாயும், அடுத்த, ஒவ்வொரு 100 அடிக்கும் ஒரு அடிக்கு 10 ரூபாய்க்கு அதிகமாகவும், ஆழ்துளைக் கிணறினைக் காக்க பாதுகாப்பு(casing pipe)குழாய் அமைக்க ஒரு அடிக்கு 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இது 60 அடி ஆழம் வரை போடப்படுகிறது.

ஒர் ஆய்வு முடிவின் படி, இந்தாண்டின் முதல் மூன்று மாதத்தில்  குறைந்தபட்சம் 20,000 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதை மாநில அரசு கண்டறிந்துள்ளது. அதிகாரிகள் சிலர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும்  அச்சம் கொண்டுள்ளனர். தக்விகி கிராமத்தில் உள்ள புதிய ஆழ்துளைக் கிணறுகளுக்கு மூன்றில் ஒரு பங்கு பம்ப்களும், இரும்புக் குழாய்களும் வாங்கப்பட்டாலும் கூட      “தக்விகி போன்ற ஆயிரக்கணக்கான கிராமங்களில் கிட்டத்தட்ட 30,௦௦௦ ஆழ்துளைக் கிணறுகளைக் கொண்டிருக்கக்கூடும்” என சுட்டிக்காட்டியுள்ளனர் . இதன் அர்த்தம் என்னவென்றால் இந்த ஒரு கிராமம் குறைந்தபட்சம் 2.5 கோடியை ஜனவரி முதல் மார்ச் வரையுள்ள 90 நாட்கள் கால இடைவெளியில் இதற்காக செலவழித்துள்ளது என்பதாகும். இதேவேளையில்,  நீர் பிரச்சனைக் கொண்ட  கிராமங்களில் உள்ள  30,000 போர்வெல்களும் 500 அடி ஆழத்திற்கும் அதிகமாகச் செல்ல நேர்ந்தால், இது 250 கோடி மதிப்புக் கொண்ட பொருளாதாரமாக உருப்பெறக்கூடும்.

“ஆழ்துளைக் கிணறு தோண்டுபவர்கள் ஒரு நாளைக்கு 3 கிணறுகள் வரை தோண்டக்கூடும். குறைந்தபட்சம் இரண்டாவது தோண்டுகிறார்கள்” என தக்விகி கிராமத்தைச் சேர்ந்த ராவத் கூறினார்.  ரோஷன்கான் பகுதியைச் சேர்ந்த காரத். “ஒரே கிராமத்தில் பணி நடந்தால் அவர்கள் மூன்று கிணறு  தோண்டிவிடுவார்” என்று நாங்கள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் வழியில் சந்தித்த புதிய ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரத்தின் உரிமையாளர் சஞ்சய் ஷங்கர் ஷேல்கே கூறினார். மேற்கொண்டு எங்களிடம் பேசுகையில், “நான் இதற்காக 1.4 கோடி ருபாய் செலவு செய்துள்ளேன்” என பெருமைபடக் கூறினார். இது சிறிய தொகை அல்ல. ஆனால்,ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் தோண்டினாலும், ஆறே மாதங்களில் இதை அவர் திரும்ப ஈட்டி விட முடியும். அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு வேலைக்கு எந்த பஞ்சமும் இல்லை. நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது தொலைபேசியில் மணி ஒலிக்கத்தொடங்கியது.

இந்நிலையில், அதிகரித்து வந்தக்  கடன்கள் மட்டுமே அங்கு நடந்தேறிவந்த  இதுபோன்ற நிகழ்வுகளைச் சற்று குறைத்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள  கடன் கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 60 முதல் 120 சதவீதம் வரை வட்டிவிகிதம்  விதிக்கின்ற நிலையில், மக்கள் வாங்கிய கடன்களை  எவ்வாறு திரும்பி செலுத்தப் போகிறார்கள்?  இதுகுறித்து கூறிய ராவத், “விவசாயத்தை எடுத்துக் கொண்டால், நாங்கள் பெற்ற வழக்கமான கடன்களைத் திரும்பச் செலுத்தக் கோரி வங்கி நோட்டீஸ் வழங்கும் நடைமுறை  இந்த மாதம் தொடங்கும். அதேவேளையில்,ஆழ்துளைக் கிணறுகளுக்காக தனியார்களிடம் வாங்கிய கடன்களை நல்ல பயிர் விளைச்சல் காணக்கூடியவர்கள்   மட்டுமே திரும்பச் செலுத்துகிறார்கள்.” என்றார். எனினும்,  இங்கு முக்கியப் பயிராக உள்ள கரும்பு விளைய ஒரு ஏக்கருக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. இது இந்த சிக்கலில் முதலிடம் பிடித்து மேலும் துன்பகரமான  சுழற்சியாக முடிவடைகிறது. இதையே இந்த கிராமத்து மக்கள் “இரட்டை நுக்சான்” (இரட்டை இழப்பு) என்று குறிப்பிடுகின்றனர்.

மகாராஷ்டிராவில் உள்ள பாறைகளில் 90 விழுக்காடு கடினப் பாறைகள் என மாநில நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (GSDA) கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டால் இந்த பிரச்னை இன்னும் பெரியதாகும். இந்த கடினப் பாறைகளில் அமைந்துள்ள பாரம்பரிய  கிணறுகளின்(DUG WELL) சராசரி ஆழம்  32-40 அடியாகும். அதிகபட்ச ஆழம் ஏறத்தாழ  80 அடியாகும்.  “புவியியல் ரீதியிலான உண்மை என்னவெனில் 200 அடிக்கும் கீழ் நீரினைக் கண்டுபிடிப்பதற்கு  வாய்ப்பில்லை. மேலும், தரைப் பரப்பிலிருந்து  200 லிருந்து 650 அடி வரை நீரைக் காண்பதற்கு வாய்ப்பே இல்லை”. என்று இந்திய  ஒன்றிய அரசின்  நீர் வளத்துறை முன்னாள் செயலர் மாதவ் சித்தலே கூறினார். இந்நிலையில், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அந்த வரம்பினை விட அதிக ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளது சில சமயம் அதைவிடவும் ஆழமாகத் தோண்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மகாராஷ்டிராவில்  பாசனத்திற்காக எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது என்பது யாருமே அறியாதது.  கடந்த 2008-09 ஆம் ஆண்டு மாநில நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி,அந்த ஆண்டு 1,91,396 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளதாகத் தெரியவந்தது. “என் மாவட்டத்தில் இதைவிடவும் அதிகமாக இருக்கக் கூடும்” என மூத்த அதிகாரிவொருவர் நகைச்சுவையாகக் கூறினார். இது போன்ற  முட்டாள்தனமான  புள்ளிவிவரங்களில்  நாம் எவ்வாறு சிக்கிக்கொண்டோம்? என்று கேட்டதற்கு  “எந்தவிதமானக் கட்டாயமும் இல்லை” என்பதே என விளக்கிக் கூறிய ஜி.எஸ்.டி.ஏயின் மூத்த அதிகாரி, ”எந்தவொரு உரிமையாளர்களும் ஆழ்துளைக் கிணறுகளைக் குறித்த விவரங்களைப்  பதியவேண்டும். ஆனால், விந்தை என்னவென்றால், பாரம்பரியக் கிணறுகளின் உரிமையாளர்கள் நீருக்கான வரியைக் கட்டாயமாகச்  செலுத்த வேண்டி உள்ள நிலையில், ஆனால்,  போர்வெல் உரிமையாளர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை”.  இதுகுறித்து மாநில அரசு கொண்டு வந்த சட்டமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சில காலமாகவே கிடப்பில் உள்ளது.

மேலும் , இதுகுறித்து தெரிவித்த சித்தலே,” 1974லிருந்து 1985 வரை, தாலதி(வருவாய்த்துறை அதிகாரி) பணியில் இருந்த போது அனைத்து வகையான கிணறுகளையும் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்தார். எனவே, அந்தக் காலக்கட்டத்தில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் இருந்தது என்பதை அறிவது கடினம். 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகே, கிணறுகள்  தனித்தனியே அட்டவணைப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், ஆழ்துளைக் கிணறுகளைப்  பதியவேண்டுமென  அதன் உரிமையாளர்களுக்கு எவ்விதக் கட்டாயமும் இருக்கவில்லை”  என்றார்.

கடந்த 2008-09 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி.ஏ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 1,91,396 ஆழ்துளைக் கிணறுகள் என்பது அதன் அபாயத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மேலும்,  அப்போதிருந்து இவ்வாறு தவறாக மதிப்பீடு செய்வதென்பது,அம்மாநிலத்தின் நிலத்தடி நீர் மட்ட நிலைக் குறித்த தவறான படத்தையே தருவதாக உள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் “மாநிலம் முழுதும் பாசனத்திற்கான முக்கிய ஆதாரமாக இருப்பது என்பதும், இந்த அதிகளவிலான ஆழ்துளைக் கிணறுகள் மின்வாரிய இணைப்புக்காகக் கூட முறையாக பதியவில்லை என்பதும்” இதன் எண்ணிக்கை அளவுக்கதிகமாக இருக்கக்கூடும் என்பதைக் தெளிவாக்குகிறது. ஒருவேளை அதன் எண்ணிகையை முழுமையாகக்  கணக்கிட்டால்: “மாநிலத்தின் நீர்நிலை என்பது நிச்சயம்  அபாயகரமானதாக இருக்கும்.”

எனவே, இதனால் ஏற்படும் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், மாநிலம் முழுவதும் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் உள்ளது என்பதை கண்டறிவது அவசியமாகும். இதுகுறித்து கூறிய மாநில அரசின் அதிகாரி,  “குடியரசுத் தலைவர் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் தான் நாங்கள் அதை தொடங்க இயலும்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளையில், சஞ்சய் செல்கேவின் ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம் பெட்ரோல் பம்பில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தது. நாளையும் அவர்களுக்கு மற்றுமொரு நாளாக இருக்கும்- ஒருவேளை நாளை மேலும்  மூன்று ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படக்கூடும்.

இந்தக் கட்டுரை முதன்முதலாக ஏப்ரல் 19,2013 ஆம் ஆண்டு தி இந்துவில் வெளியானது.

மேலும் வாசிக்க: ஆழ் நீர் நெருக்கடி

இந்தக்  கட்டுரை ஒரு தொடரின் ஒரு பகுதியாகும். இந்தக் கட்டுரைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு பி. சாய்நாத் உலக ஊடக உச்சி மாநாட்டில்  உலகளாவிய சிறப்பு  விருதினைப் பெற்றார்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன் .

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan