“என் கணவர் சனிக்கிழமைகளில் இவ்வளவுப் பெரிய மது பாட்டில்கள் மூன்றை வாங்கி வருகிறார்” என்று தனது கையில் முழம் போட்டு காட்டுகிறார் கனகா. “அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அது தீரும் வரை குடிப்பார். மது புட்டிகள் காலியான பிறகு தான் வேலைக்குப் போவார். சாப்பாட்டுக்குத் தேவையான பணம் ஒருபோதும் கிடைத்ததில்லை. என்னையும், என் குழந்தையையுமே என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை. இதில் என் கணவர் இன்னொரு குழந்தை வேறு கேட்கிறார். எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம்” என்று வெறுமையுடன் சொல்கிறார் அவர்.
கூடலூர் பழங்குடியினர் மருத்துவமனையில் மருத்துவரைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கும் 24 வயது தாயான கனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெட்ட குறும்பர் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். உதகமண்டலத்தில் (ஊட்டி) இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கூடலூர் நகர பழங்குடியினர் மருத்துவமனை. 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்ட பந்தலூர் தாலுக்கா, கூடலூரைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
வெளுத்துப் போன சிந்தடிக் புடவை கட்டியிருக்கும் கனகா, தனது ஒரே பெண் குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளார். கடந்த மாதம் அவர் வசிக்கும் கிராமத்தில் அவரது மகளுக்கு, நீலகிரி சுகாதார நலப் பணியாளர் கூட்டமைப்பின் (அஷ்வினி) பணியாளரால் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கனகாவின் இரண்டு வயது குழந்தை வெறும் 7.2 கிலோ எடையுடன் இருந்தது கண்டறியப்பட்டது (வழக்கமாக இரண்டு வயது குழந்தை 10-12 கிலோ இருக்கும்). எடை குறைவு காரணமாக தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டு வரிசையில் அக்குழந்தையை வைத்துள்ளனர். குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி சுகாதாரப் பணியாளர்கள் கனகாவிடம் கூறியுள்ளனர்.
இந்த ஊட்டச்சத்து குறைபாடு ஒன்றும் ஆச்சரியத்துக்குரியது அல்ல. கனகாவைப் போன்றவர்கள், தங்களுடைய வருமானத்தை தாங்களே பெருக்கிக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். கனகாவின் கணவருக்கு இருபது, இருபத்தைந்து வயது இருக்கும். அவர் அருகிலுள்ள தேயிலை, காபி, வாழை, மிளகு எஸ்டேட்டுகளில் தினக்கூலியாக வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதிக்கிறார். “அவர் உணவுக்காக மாதம் ரூ.500 தான் தருகிறார், இதை வைத்துக் கொண்டு நான் முழு குடும்பத்திற்கும் சமைக்க வேண்டும்” என்கிறார் கனகா.
தினக்கூலிகளாக வேலை செய்யும் 50 வயதுக்கு மேற்பட்ட கணவரின் அத்தை, மாமாவுடன் கனகா ஒன்றாக வசிக்கிறார். இரண்டு குடும்பங்களுக்கும் தனித்தனி ரேஷன் அட்டை உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் 70 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் 2 கிலோ பருப்பு, இரண்டு கிலோ சர்க்கரை, 2 லிட்டர் எண்ணெய் கிடைக்கின்றன. “என் கணவர் சில சமயம் குடிப்பதற்காக எங்கள் ரேஷன் அரிசியைக் கூட விற்றுவிடுவார். சில நாட்கள் சாப்பிடக் கூட எதுவும் இருக்காது“ என்கிறார் கனகா.
கனகா அவளது குழந்தை போன்றோருக்கான மாநில ஊட்டச்சத்து திட்டங்களும் போதிய அளவிற்கு ஊட்டமளிப்பதாக இல்லை. கூடலூர் அருகே உள்ள பால்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் (ICDS) கனகா மற்றும் பிற கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு வாரத்திற்கு ஒரு முட்டையும், மாதத்திற்கு இரண்டு கிலோ சத்துமாவு (கோதுமை, பாசிப்பருப்பு, நிலக்கடலை, பருப்பு, சோயா கலந்த கஞ்சி) பாக்கெட்டும் தரப்படுகின்றன. மூன்று வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கும் அதே சத்துமாவு பாக்கெட் கொடுக்கப்படுகிறது. மூன்று வயதை கடந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு காலை உணவு, மதிய உணவுகளுடன் மாலை சிற்றுண்டியாக கைப்பிடி அளவு கடலை, வெல்லம் தரப்படுகிறது. தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தினமும் கூடுதலாக நிலக்கடலை, வெல்லம் கொடுக்கப்படுகிறது.
2019 ஜூலை மாதம் முதல் அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் எனும் திட்டத்தை அரசு தொடங்கி புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டமளிக்கும் ஆயுர்வேத ஊட்டப் பொருட்கள், 250 கிராம் நெய், 250 கிராம் புரத பவுடர் போன்றவற்றை கொடுத்து வருகிறது. “இந்த பொட்டலங்களை அவர்கள் வீட்டு அலமாரிகளில் வைத்து விடுவார்கள். பழங்குடியின மக்கள் தங்களது உணவில் பால், நெய் பயன்படுத்துவதில்லை என்பதால் இந்த நெய் பொட்டலத்தை அவர்கள் தொடக் கூட மாட்டார்கள். பச்சை ஆயுர்வேத பொடிகள், புரத பொடிகளை எப்படி பயன்படுத்தவது என்பதும் அவர்களுக்கு தெரியாது“ என்கிறார் அஷ்வினியில் சமூக சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளரான இருக்கும் 32 வயதாகும் ஜிஜி எலமனா.
ஒரு காலத்தில் நீலகிரியில் பழங்குடியின சமூகத்தினருக்கு காடுகளில் இருந்து எளிதாக உணவுகள் கிடைத்தன. “காடுகளில் கிடைக்கும் பச்சிலைகள், காளான்கள், சிறு பழ வகைகள், கிழங்குகள் போன்றவை குறித்த ஆழமான புரிதல் அவர்களுக்கு உண்டு. அவர்கள் ஆண்டு முழுவதும் உணவிற்காக சிறு விலங்குகளை பிடிக்கவும், வேட்டையாடவும் செய்தனர். மழைக் காலங்களில் பெரும்பாலான குடும்பங்களின் அடுப்பிற்கு மேல் இறைச்சிகள் உலர வைக்கப்பட்டு இருக்கும். வனப்பகுதிகளுக்குள் அவர்கள் நுழைவதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்தபிறகு அவர்கள் முற்றிலுமாக காடுகளுக்குள் செல்வதை நிறுத்திக் கொண்டார்கள்” என்கிறார் நாற்பதாண்டுகளாக கூடலூர் பழங்குடியின சமூகத்துடன் பணியாற்றி வரும் மாரி மார்செல் தேக்கேகாரா.
வனஉரிமைச் சட்டம் 2006ன் கீழ் பழங்குடியினருக்கு பொது சொத்துக்களின் வளங்கள் மீது சமூக உரிமைக்கான இழப்பீடு என்று அளிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை கொண்டு அவர்கள் முன்பு போல உணவுப் பொருட்களைப் பெற முடிவதில்லை.
கிராமங்களில் ஏற்பட்ட வருவாயிழப்பும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதற்கு காரணமாகிறது. முதுமலை வன உயிரின சரணாலயத்தின் கீழ் வனங்கள் பாதுகாக்கப்படுவதால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினருக்கான கூலி வேலைகளும் குறைந்துவிட்டன. சரணாலயத்திற்குள் உள்ள சிறு தோட்டங்கள், எஸ்டேட்டுகளில் அவர்கள் வேலைசெய்து வந்தனர். அவை விற்கப்பட்டது, இடமாற்றம் செய்யப்பட்டது போன்ற காரணங்களால் பெரிய தேயிலைத் தோட்டங்கள் அல்லது பண்ணைகளில் தற்காலிக வேலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு பழங்குடியினர் தள்ளப்பட்டனர் என்கிறார் ஆதிவாசி முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் கே.டி சுப்ரமணியன்.
கூடலூர் பழங்குடியினர் மருத்துவமனையில் கனகாவுடன் 26 வயதாகும் சுமாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காத்திருக்கிறார். பந்தலூர் தாலுக்காவைச் சேர்ந்த அவர் பனியர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில்தான் மூன்றாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு 2 வயது, 11 வயது என ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சுமா இந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை, இருந்தும் பேறு கால பின் கவனிப்பு தேவைகளுக்காகவும், கருத்தடை சிகிச்சைக்காகவும் வந்துள்ளார்.
பிரசவத்திற்கு சில நாட்கள்தான் இருந்தன. இங்கு வருவதற்கு எங்களிடம் பணமில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து ஜீப்பில் வந்தால் ஒரு மணி நேரம் ஆகும். ”பயண செலவிற்கும், உணவிற்கும் கீதா சேச்சி (அஷ்வினியில் உள்ள சுகாதார பணியாளர்) ரூ. 500 கொடுத்தார். ஆனால் என் கணவர் அந்தப் பணத்தை குடித்து செலவழித்துவிட்டார். இதனால் நான் வீட்டிலேயே இருந்துவிட்டேன். மூன்று நாட்களில் பிரசவ வலி அதிகமானது. ஆனால் மருத்துவமனைக்குப் போக முடியவில்லை. வீட்டின் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பிரசவம் பார்த்து கொண்டேன்”. அடுத்த நாள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் 108க்கு (ஆம்புலன்ஸ் சேவை) அழைத்து சொன்னதால் கூடலூர் பழங்குடியின மருத்துவமனைக்கு வந்தோம்” என்கிறார் அவர்.
கருப்பையக வளர்ச்சி கட்டுப்பாடு எனப்படும் சிசுவின் குறை வளர்ச்சி (IUGR) காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுமாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தாயின் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, ஃபோலேட் தட்டுப்பாடு போன்றவற்றால் இந்த நிலை ஏற்படும். சிசு வளர்ச்சி குறைபாடு என்பது சுமாவின் இரண்டாவது கர்ப்பத்திலும் தாக்கம் செலுத்தியது. அவரது இரண்டாவது பெண் குழந்தை (சிசு பிறக்கும்போது 1.3 கிலோ முதல் 2 கிலோ வரை இருக்க வேண்டும்) மிகவும் குறைந்த எடையுடன் பிறந்தது. அரசாங்க அட்டவணையில் காட்டப்படும் குழந்தையின் குறை எடை சதவீதத்தை காட்டிலும் இக்குழந்தை எடை குறைவாக இருந்துள்ளது. இதனால் அட்டையில் ‘தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறை‘ என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தாய்க்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை இருந்தால் குழந்தையும் அப்படிதான் பிறக்கும். சுமாவின் ஊட்டச்சத்து பற்றாக்குறை அவரது குழந்தையின் மீதும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இதனால் அக்குழந்தையின் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி போன்றவை அதே வயதுடைய பிற குழந்தைகளைவிட மெதுவாக இருக்கும்“ என்கிறார் கூடலூர் பழங்குடியின மருத்துவமனையின் குடும்பநல மருத்துவரான 43 வயதாகும் டாக்டர் மிருதுலா ராவ்.
சுமா தனது மூன்றாவது குழந்தையைப் பெறும்போது ஐந்து கிலோ மட்டுமே எடை கூடி இருந்ததாக அவரது மருத்துவ பதிவேடு காட்டுகிறது. கருவுற்ற பெண்களின் எடையில் இது பாதிக்கும் குறைவு. அவர் ஒன்பதாவது மாதத்தில் வெறும் 38 கிலோ எடையுடன் தான் இருந்துள்ளார்.
வனஉரிமை சட்டம் 2006ன் கீழ் பழங்குடியினருக்கு பொது சொத்துக்களின் வளங்கள் மீது சமூக உரிமைக்கான இழப்பீடு என்று அளிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை கொண்டு அவர்கள் முன்பு போல உணவைப் பெற முடிவதில்லை
“நான் வாரத்திற்கு பலமுறை சென்று, கருவுற்ற தாயையும், அவரது குழந்தைகளையும் பரிசோதித்திருக்கிறேன். அந்தக் குழந்தை வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு, பாட்டியின் மடியில் அமர்ந்திருக்கும். வீட்டில் உணவு எதுவும் சமைக்க மாட்டார்கள். அக்கம்பக்கத்தினர் தான் அக்குழந்தைக்கு ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள். சுமா தரையில் பரிதாபமாக படுத்துக் கிடப்பார். சுமாவிற்கு நான் அஷ்வினி சத்துமாவைக் (கேழ்வரகு, தானியங்கள் கலந்த மாவு) கொடுப்பேன். குழந்தைக்கு பால் தருவதால், உடல் நலத்தில் அக்கறை செலுத்துமாறு சொல்வேன். சுமாவின் கணவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவிட்டுவிடுகிரார்” என்று கூறும் கூடலூர் பழங்குடியினர் மருத்துவமனையின் சுகாதார பணியாளரான 40 வயதாகும் கீதா, சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “இப்போது சுமாவும் குடிக்க ஆரம்பித்துவிட்டார்“ என்றார்.
கூடலூரில் உள்ள பல குடும்பங்களுக்கு இதைப்போன்ற பல கதைகள் சொல்வதற்கு உள்ளது. இந்த வட்டாரத்தில் இப்போது சுகாதார அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டின் மருத்துவமனை பதிவின்படி 10.7 இருந்த (MMR) பிரசவ கால இறப்பு விகிதம் (1,00,000 குழந்தை பிறப்பிற்கு ஒன்று) 2018-19 ஆம் ஆண்டின்படி 3.2 என குறைந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதமும் (IMR) இதேகாலத்தில் 48 சதவீதத்திலிருந்து (1000 பிறப்பிற்கு ஒன்று) 20 எனக் குறைந்ததுள்ளது. மாநில திட்ட ஆணையத்தின் மாவட்ட
மனித வளர்ச்சி அறிக்கை 2017
பதிவேட்டின்படி (DHDR 2017) நீலகிரி மாவட்டத்தின் IMR 10.7 ஆக உள்ளது. இது மாநில சராசரியான 21 என்பதை விட குறைவு. அதிலும் கூடலூர் தாலுக்காக மிக குறைவாக 4.0 என உள்ளது.
இதுபோன்ற புள்ளிவிவரங்கள் முழு கதையையும் சொல்வதில்லை. “பிரசவ கால இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவை குறைந்திருக்கலாம். ஆனால் நோயுறுவது அதிகரித்துள்ளது. நோயுறும் தன்மைக்கும், இறப்பு விகிதாச்சாரத்திற்கு இடையே வேறுபாட்டை நாம் அறிய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய் பெற்றெடுக்கும் குழந்தையும் ஊட்டமின்றி இருப்பதால் எளிதில் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. பேதி போன்ற ஏதாவது வந்து எளிதில் மூன்று வயது குழந்தைகள் இறந்துவிடுகின்றனர். அவர்களின் அறிவுக்கூர்மையும் குறைவாக உள்ளது. இவர்கள் தான் பழங்குடியினரின் அடுத்த தலைமுறையினர்” என்று விளக்குகிறார் 30 ஆண்டுகளாக கூடலூரில் உள்ள பழங்குடியின பெண்களுடன் பணியாற்றும் டாக்டர் பி. ஷைலஜா தேவி.
இப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்தினரிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருவது இறப்பு விகிதத்தை மேலும் கூட்டுகிறது. பழங்குடியின மக்களிடையே அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. (குடிப்பழக்கத்திற்கும், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் இடையேயான தொடர்பு பற்றி கூடலூர் பழங்குடியின மருத்துவமனை ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளது. எனினும் அவை பொதுவில் கிடைக்கவில்லை.) DHDR 2017 அறிக்கையின்படி, “இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தினாலும் ஊட்டச்சத்து நிலை என்பது முன்னேறப் போவதில்லை“.
“டயரியா, பேதி போன்றவற்றால் ஏற்படும் மரணங்களை நாங்கள் கட்டுப்படுத்தினாலும், அனைத்து பிரசவங்களையும் மருத்துவமனையில் செய்தாலும், இச்சமூகத்தில் நிலவும் மதுபழக்கம் என்பது அனைத்தையும் வீணாக்கி விடுகிறது. இளம் பெண்கள், அவர்களின் குழந்தைகளிடையே துணை சஹாரன் அளவிலான ஊட்டச்சத்து குறைபாட்டை பார்க்கிறோம்“. “50 சதவீத குழந்தைகள் இப்போது மிக தீவிரமான அல்லது ஓரளவு ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு (2011-12) ஓரளவு ஊட்டச்சத்து குறைபாடு என்பது 29 சதவீதமாகவும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு என்பது 6 சதவீதமாகவும் இருந்தது. இந்த போக்கு மிகவும் வருத்தமளிக்கிறது“ என்கிறார் 60 வயதாகும் மகப்பேற்றியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் ஷைலஜா. இவர் கூடலூர் பழங்குடியின மருத்துவமனையில் 2020 ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றவர். இருப்பினும் அவர் தினமும் காலையில் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை சந்திப்பதுடன், சக ஊழியர்களுடன் உரையாடுகிறார்.
“முன்பெல்லாம் புறநோயாளிகள் பிரிவுக்கு தாய்மார்கள் பரிசோதனைக்கு வந்தால் தங்களது குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போதெல்லாம் பரிதாபமான முகபாவத்துடன் உட்கார்ந்திருக்கின்றனர். குழந்தைகளும் சோர்வாகவே உள்ளனர். இந்த வேறுபாடு என்பது தங்களின் குழந்தைகளின் மீதான கவனிப்பின்மை, ஊட்டச்சத்து நலனில் அக்கறை செலுத்தாமை போன்றவற்றைக் காட்டுகிறது“ என்கிறார் ஊட்டசத்து குறைபாட்டிற்கான ஆதாரத்திற்கு வலு சேர்க்கும் டாக்டர் ராவ்.
நீலகிரி கிராமப்புற பகுதிகளில் 6 முதல் 23 மாதங்கள் வரையிலான 63 சதவீத குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. அதேபோன்று 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் 50.4 சதவீதம் பேர் இரத்த சோகையில் (ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராமிற்கு குறைவாக ஹீமோகிளோபின் இருப்பது- குறைந்தது 12 இருக்க வேண்டும்) உள்ளனர். கிராமப்புறங்களில் கிட்டதட்ட பாதி (45.5 சதவீத) தாய்மார்கள் இரத்தசோகையில் உள்ளதால், அவர்களின் கருவும் மோசமாக பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது
தேசிய குடும்பநல கணக்கெடுப்பு-4
(NFHS-4, 2015-16).
“ஒரு டெசிலிட்டருக்கு 2 கிராம் ஹீமோகிளோபின் என்ற அளவில் இரத்தமின்றி வரும் பழங்குடியின பெண்கள் இப்போதும் உள்ளனர்! இரத்த சோகையை பரிசோதிக்க ஹைட்ரோகிளோரிக் அமிலத்தையும், இரத்தத்தையும் கலந்தால் குறைந்த அளவான ஒரு டெசிலிட்டருக்கு 2 கிராம் என்று காட்டுகிறது. இதைவிட குறைவாகவும் இருக்கலாம். நம்மால் அதை அளக்க முடியாது“ என்கிறார் டாக்டர் ஷைலஜா.
“இரத்த சோகைக்கும், பிரசவகால மரணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இரத்த சோகையால் பிரசவ நேர ரத்தக் கசிவு, இதய செயலிழப்பு, மரணம் போன்றவற்றுக்கு வாய்ப்புண்டு. சிசுவின் வளர்ச்சி பாதிப்பு, எடை குறைவால் இறந்து போவது போன்றவையும் ஏற்படும். நீண்ட நாட்களாக ஊட்டச்சத்து பற்றாக்குறை இருந்தால் குழந்தையால் தாக்குப்பிடிக்க முடியாது“ என்கிறார் 31 வயதாகும் மகப்பேற்றியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் நம்ரிதா மேரி ஜார்ஜ்.
இள வயது திருமணம், இள வயதில் கருவுறுதல் ஆகியவை குழந்தையின் நலனை மேலும் பாதிக்கிறது. நீலகிரி கிராமப்புற பகுதிகளில் 18 வயதிற்கு முன் திருமணமாகும் பெண்கள் வெறும் 21 சதவீதம் தான் என்கிறது NFHS-4. ஆனால் பழங்குடியின பெண்கள்15 வயதில் அல்லது பூப்பெய்திய உடனே திருமணம் செய்து வைக்கப்படுவதாக சொல்கின்றனர் சுகாதாரப் பணியாளர்கள். முதல் குழந்தையை பெற்றெடுப்பது, திருமண வயதை தள்ளிப்போடுவது என இரண்டிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். “முதிர்ச்சி அடைவதற்கு முன்பே 15 அல்லது 16 வயதில் ஒரு பெண் கருவுற்றால், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்“ என்கிறார் டாக்டர் ஷைலஜா.
“குடும்ப நலம் என்பது ஊட்டச்சத்துடன் தொடர்புடையது, போதிய ஊட்டச்சத்து இல்லாத கருவுற்ற பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் அதிக ஆபத்தில் உள்ளனர். கூலி உயர்ந்தாலும், அந்த பணம் குடும்பத்தை சென்றடைவது கிடையாது. ரேஷன் கடைகளில் 35 கிலோ அரிசியை வாங்கும் ஆண்கள் அதை அப்படியே அடுத்த கடையில் விற்று மதுபானம் வாங்கி கொள்கின்றனர். பிறகு எப்படி அவர்களின் குழந்தைகள் ஊட்டமாக இருக்க முடியும்?” என்கிறார் பழங்குடியின மகளிரின் பிரச்சனைகள் அனைத்தையும் அத்துப்படியாக அறிந்து வைத்துள்ள ஷைலா சேச்சி (பெரிய அக்கா). ஷைலா சேச்சி என்றுதான் நோயாளிகளும், சக ஊழியர்களும் அவரை அழைக்கின்றனர்.
”இந்த மக்களுடன் எந்த தலைப்பில் கூட்டம் நடத்தினாலும், குடும்பங்களில் அதிகரித்துள்ள குடிப்பழக்கம் குறித்த சர்ச்சையுடன்தான் முடியும்” என்கிறார் அஷ்வினியில் மனநல ஆலோசகராக உள்ள 53 வயதாகும் வீணா சுனில்.
இப்பகுதி பழங்குடியின சமூகங்களில் காட்டுநாயக்கன், பனியர் பிரிவினர் மிகவும் ஆதரவற்ற பழங்குடியினர். அவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேளாண் கூலித் தொழிலாளர்களாக பண்ணைகள், எஸ்டேட்டுகளில் வேலை செய்வதாக உதகமண்டலத்தில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருளர், பெட்ட குறும்பர், முள்ளு குறும்பர் போன்ற பிற சமூகத்தினரும் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் வருகின்றனர்.
“1980களில் முதன்முதலில் இங்கு வந்தோம், கொத்தடிமை ஒழிப்பு சட்டம் 1976 இருந்தபோதும் பனியர்கள் நெல், தானியம், வாழை, மிளகு, மரவள்ளிக் கிழங்கு தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்தனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் சிறு தோட்டங்கள் அமைக்கும் பணியில் இருந்தனர். அந்த நிலங்களில் அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதுகூட அவர்களுக்கு தெரியாது“ என்கிறார் மாரி தேக்கேகாரா.
பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்காக 1985ஆம் ஆண்டு அக்கார்ட் (சமூக நிறுவனம், மறுவாழ்வு, வளர்ச்சிக்கான செயல்திட்டம்) எனும் அமைப்பை மாரியும், அவரது கணவர் ஸ்டேன் தேக்கேகாராவும் தொடங்கினர். நன்கொடைகள் மூலம் இயங்கும் தொண்டு நிறுவனமான இந்த அமைப்பு, பல்வேறு சங்கங்களின் குடையாக செயல்படும் ஆதிவாசி முன்னேற்ற சங்கத்தின் மூலம் பழங்குடியினரால் நடத்தப்படுகிறது. பழங்குடியின நிலத்தை மீட்பது, தேயிலை தோட்டத்தை அமைப்பது, பழங்குடியின குழந்தைகளுக்கு பள்ளிகளை அமைப்பது ஆகியவற்றை சங்கம் நிர்வகித்து வருகிறது. நீலகிரியில் (அஷ்வினி) சுகாதார நல கூட்டமைப்பையும் அக்கார்ட் தொடங்கியுள்ளது. 1998ஆம் ஆண்டில் கூடலூர் பழங்குடியின மருத்துவமனை நிர்மானிக்கப்பட்டது. இப்போது ஆறு மருத்துவர்கள், ஆய்வுக்கூடம், எக்ஸ்ரே அறை, மருந்தகம், இரத்த வங்கி என இயங்கி வருகிறது.
80களில் இங்கு அரசு மருத்துவமனையில் பழங்குடியினர் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் மருத்துவமனையை கண்டால் ஓடினார்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் இறப்பது, குழந்தைகள் மரணம், வயிற்றுப்போக்கு என சுகாதார நிலைமை மோசமானது. நோயுற்றவர்கள் அல்லது கருவுற்றவர்களின் வீடுகளுக்கு செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. நிறையப் பேசி, சமாதானம் செய்து, உறுதி அளித்த பிறகுதான் இச்சமூகத்தினர் எங்களை நம்ப தொடங்கினர் என நினைவுக்கூர்கிறார் ரூபா தேவதாசன். அவரும், அவரது கணவர் டாக்டர் என். தேவதாசனும் அஷ்வினி மருத்துவர்களில் முன்னோடிகள்.
அஷ்வினி செயல்பாட்டின் இதய துடிப்பாக இருப்பது சமூக மருத்துவம் தான். இங்கு 17 சுகாதாரப் பணியாளர்கள், 312 சுகாதார தன்னார்வலர்கள் என அனைவரும் பழங்குடியினர். அவர்கள் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பயணம் செய்து பல்வேறு வீடுகளில் ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த அறிவுரையை அளிக்கின்றனர்.
அஷ்வினியில் பயிற்சி பெற்ற முதல் சுகாதார பணியாளர் முள்ளு குறும்பர் சமூகத்தைச் சேர்ந்த, தற்போது 50 வயதுக்கு மேலாகிவிட்டவர் டி.ஆர். ஜானு. பந்தலூர் தாலுக்காவில் செரங்கோடு பஞ்சாயத்தின் அய்யங்கோலி கிராமத்தில் அவருக்கு அலுவலகம் உள்ளது. இவர் பழங்குடியின குடும்பங்களிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், டிபி உள்ளிட்ட தொடர் பரிசோதனைகளையும், முதலுதவிகளையும், ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த ஆலோசனைகளையும் அளிக்கிறார். அவர் கருவுற்ற மகளிர், பாலூட்டும் தாய்மார்கள் குறித்து கண்டறிந்துவிடுகிறார். “குழந்தைப் பேறு தொடர்பான ஆலோசனைக்குத் தான் கிராமப் பெண்கள் எங்களை அணுகுவார்கள். கருவின் வளர்ச்சி குறைபாட்டை தடுப்பதற்காக ஃபோலேட் பற்றாக்குறையை போக்கும் மாத்திரைகளை கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு அளிக்கிறோம். இல்லாவிட்டால் இது வேலைக்கு ஆகாது“ என்கிறார் அவர்.
சுமா போன்ற இளம் வயது பெண்களிடம்கூட கரு வளர்ச்சி குறைபாட்டைத் தடுக்க முடியவில்லை. அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டிற்குப் புறப்பட்டனர். மருத்துவர்களும், செவிலியர்களும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த ஆலோசனைகளை அளித்தனர். வீட்டிற்கு செல்வதற்கும், அடுத்த ஒரு வாரத்திற்கு உணவு வாங்குவதற்கும் நாங்கள் அவரிடம் பணம் கொடுத்துள்ளோம். அவர்கள் புறப்படும்போது “இம்முறை அந்த பணம் முறையாக செலவாகும் என நம்புகிறேன்“ என்கிறார் ஜிஜி எலமனா.
முகப்பு ஓவியம்:
ப்ரியங்கா போரர்
தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.
இந்தியாவின் கிராமப்புற பருவப் பெண்கள், இளம் பெண்கள் குறித்த செய்தி சேகரிக்கும் திட்டத்தை பாரி மற்றும் கவுன்டர் மீடியா டிரஸ்ட் தேசிய அளவில் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் அங்கமாக செய்து வருகிறது. பின்தங்கிய பிரிவினர், எளிய மக்களின் சூழல், வாழ்க்கை அனுபவத்தை அவர்களின் குரல் வழியாக வெளிக் கொணர்கிறது.
இக்கட்டுரையை மீண்டும் பிரசுரிக்க வேண்டுமா?
zahra@ruralindiaonline.org
என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் நகலை (கார்பன் காப்பி)
namita@ruralindiaonline.org
என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதி அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா